Home | 12 ஆம் வகுப்பு | 12வது தமிழ் | செய்யுள்: தன்னேர் இலாத தமிழ்

தண்டியலங்கார உரை மேற்கோள் பாடல் | இயல் 1 | 12 ஆம் வகுப்பு தமிழ் - செய்யுள்: தன்னேர் இலாத தமிழ் | 12th Tamil : Chapter 1 : Uyirinum ompap patum

   Posted On :  31.07.2022 10:24 pm

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : உயிரினும் ஓம்பப் படும்

செய்யுள்: தன்னேர் இலாத தமிழ்

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : உயிரினும் ஓம்பப் படும் : செய்யுள்: தன்னேர் இலாத தமிழ் - தண்டியலங்கார உரை மேற்கோள் பாடல் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

கவிதைப்பேழை

மொழி – க 

தன்னேர் இலாத தமிழ்

தண்டியலங்கார உரை மேற்கோள் பாடல்



நுழையும்முன்

வானம் அளந்தது அனைத்தையும் அளக்கும் வலிமை மிக்கது தமிழ். நிலத்தினும் பெரிது, வானினும் உயர்ந்தன்று, கடலினும் ஆழமானது என்றெல்லாம் தமிழின் பரப்பையும் விரிவையும் ஆழத்தையும் புலவர் போற்றுவர். நிகரற்ற ஆற்றல்கொண்ட கதிரவனுக்கு ஒப்பவும் அதற்கு மேலாகவும் தமிழைப் போற்றும் புலவரின் பாடல் ஒன்று பாடமாக...

ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி

ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும் - ஆங்கவற்றுள்

மின்னேர் தனியாழி வெங்கதிரொன்(று) ஏனையது

தன்னேர் இலாத தமிழ்!*


பாவகை : நேரிசை வெண்பா

பாடலின் பொருள்:

மக்களால் போற்றப்பட்டு, உயர்ந்த மலைகளுக்கு இடையே தோன்றி, கடலால் சூழப்பட்ட உலகத்தின் புற இருளை அகற்றுவது ஒன்று. பொதிகை மலையில் தோன்றி, சான்றோரால் தொழப்பட்டு. மக்களின் அறியாமை என்னும் அக இருளைப் போக்குவதோடு ஒப்புவமை இல்லாததுமாக இருப்பது இன்னொன்று. இருளைப் போக்கும் இவ்விரண்டில் ஒன்று ஒளிர்கின்ற கதிரவன்; இன்னொன்று தனக்கு நிகரில்லாத தமிழ்.

அணி : பொருள் வேற்றுமை அணி

விளக்கம் :

இருவேறு பொருள்களுக்கிடையே  ஒற்றுமையை முதலில் கூறிப் பின் மலைகளுக்கு இடையே தோன்றி, கடலால் வேறுபடுத்திக் காட்டுவது பொருள் வேற்றுமை அணி எனப்படும்.

தமிழுக்கும் கதிரவனுக்கும் இடையே உள்ள பயன் சார்ந்த ஒற்றுமையை முதலில் கூறி அவற்றுள் தமிழ் தன்னேரிலாதது என்ற தன்மையைப் பின்னர் வேறுபடுத்திக் காட்டுவதால் இது பொருள் வேற்றுமை அணி ஆயிற்று. இது வேற்றுமை அணியின் ஒரு பிரிவாகும்.


இலக்கணக் குறிப்பு 

உயர்ந்தோர் - வினையாலணையும் பெயர்

வெங்கதிர் - பண்புத்தொகை

இலாத - இடைக்குறை


உறுப்பிலக்கணம்

(i) வந்து = வா(வ) + த்(ந்) + த் + உ 

வா (வ) - பகுதி 'வ' எனக் குறுகியது விகாரம்

த்(ந்)    - சந்தி, ('ந்' ஆனது விகாரம்) 

த்      - இறந்தகால இடைநிலை

உ      - வினையெச்ச விகுதி 

(ii) விளங்கி = விளங்கு + இ 

விளங்கு - பகுதி 

இ - வினையெச்ச விகுதி

(iii) உயர்ந்தோர் = உயர் + த்(ந்) + த் + ஓர் 

உயர் - பகுதி

த் - சந்தி (ந் ஆனது விகாரம்) 

த் - இறந்தகால இடைநிலை

ஓர் - பலர்பால் வினைமுற்று விகுதி 

ஆர் என்பதன் ஈற்றயலெழுத்தான “ஆ” “ஓ” ஆகத் திரியும் (நன் 353)


புணர்ச்சி விதி

(i) ஆங்கவற்றுள் = ஆங்கு + அவற்றுள் 

விதி : உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும் - ஆங்க் + அவற்றுள் 

விதி : உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே - ஆங்கவற்றுள்.

(ii) தனியாழி = தனி + ஆழி 

விதி : இ ஈ ஐ வழி யவ்வும் - தனி + ய் + ஆழி 

விதி : உடல் மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே - தனியாழி. 

(iii) வெங்கதிர் = வெம்மை + கதிர் 

விதி : ஈறு போதல் - வெம் + கதிர் 

விதி : முன்னின்ற மெய் திரிதல் - வெங்கதிர்.

தெரியுமா?

அணியிலக்கணத்தை மட்டுமே கூறும் இலக்கண நூல்கள் 

தண்டியலங்காரம், மாறனலங்காரம், குவலயானந்தம்.

அணியிலக்கணத்தையும் கூறும் இலக்கண நூல்கள் 

தொல்காப்பியம், வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம்.


நூல்வெளி

தண்டியலங்காரம், அணி இலக்கணத்தைக் கூறும் சிறப்பான நூல்களுள் ஒன்று. பாடப்பகுதி பொருளணியியல் பகுதியில் இடம்பெற்றுள்ளது. காவியதர்சம் என்னும் வடமொழி இலக்கண நூலைத் தழுவி எழுதப்பட்ட இந்நூலின் ஆசிரியர் தண்டி ஆவார். இவர் கி.பி. (பொ.ஆ.) 12ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர். இந்நூல் பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல் என மூன்று பெரும் பிரிவுகளை உடையது; இலக்கண நூலார், உரையாசிரியர்கள் பலரால் எடுத்தாளப்பட்ட பெருமை பெற்றது.


Tags : by Thandeyalankara urai mercol padal | Chapter 1 | 12th Tamil தண்டியலங்கார உரை மேற்கோள் பாடல் | இயல் 1 | 12 ஆம் வகுப்பு தமிழ்.
12th Tamil : Chapter 1 : Uyirinum ompap patum : Poem: Thannear illatha Tamil by Thandeyalankara urai mercol padal | Chapter 1 | 12th Tamil in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : உயிரினும் ஓம்பப் படும் : செய்யுள்: தன்னேர் இலாத தமிழ் - தண்டியலங்கார உரை மேற்கோள் பாடல் | இயல் 1 | 12 ஆம் வகுப்பு தமிழ் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : உயிரினும் ஓம்பப் படும்