Home | 10 ஆம் வகுப்பு | 10வது தமிழ் | கவிதைப்பேழை: தேம்பாவணி

வீரமாமுனிவர் | இயல் 9 | 10 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: தேம்பாவணி | 10th Tamil : Chapter 9 : Anbin mozhi

   Posted On :  22.07.2022 03:14 am

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : அன்பின் மொழி

கவிதைப்பேழை: தேம்பாவணி

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : அன்பின் மொழி : கவிதைப்பேழை: தேம்பாவணி - வீரமாமுனிவர் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மனிதம்

கவிதைப் பேழை

தேம்பாவணி

- வீரமாமுனிவர்



நுழையும்முன்

பசுந்தங்கம், புதுவெள்ளி, மாணிக்கம், மணிவைரம் யாவும் ஒரு தாய்க்கு ஈடில்லை என்கிறார் ஒரு கவிஞர். தாயின் அன்பை எழுத உலகின் மொழிகள் போதாது; தாயையிழந்து தனித்துறும் துயரம் பெரிது. மகிழ்ச்சியைப் பகிர்ந்தால் பெருகும்; துயரைப் பகிர்ந்தால் குறையும்; சுவரோடாயினும் சொல்லி அழு என்பார்களல்லவா? துயரத்தைத் தாங்கிக் கொள்ளும் மனங்கள் மனிதத்தின் முகவரிகள்! சாதாரண உயிரினங்களுக்கும் துயரத்தைப் பகிர்ந்து கொள்ளும் மனிதம் இருந்தால் எத்தனை ஆறுதல்!.


முன்நிகழ்வு

கிறித்துவிற்கு முன் தோன்றியவர் திருமுழுக்கு யோவான். இவரை அருளப்பன் என்றும் குறிப்பிடுவர். இவரே கிறித்துவின் வருகையை அறிவித்த முன்னோடி. வீரமாமுனிவர் தன் காப்பியத்தில் இவருக்குக் கருணையன் என்று பெயரிட்டுள்ளார். கருணையன் தன் தாயார் எலிசபெத் அம்மையாருடன் கானகத்தில் வாழ்ந்து வந்தார். அச்சூழலில் அவருடைய தாய் இறந்துவிட்ட போது கருணையன் அடையும் துன்பத்தில் இயற்கையும் பங்குகொண்டு கலங்கி ஆறுதல் அளிப்பதை இப்பாடல்கள் படம்பிடித்துக் காட்டுகின்றன.


எலிசபெத் அம்மையார் அடக்கம், கருணையன் கண்ணீர்

1. பூக்கையைக் குவித்துப் பூவே

புரிவொடு காக்கென்று அம்பூஞ்

சேக்கையைப் பரப்பி இங்கண்

திருந்திய அறத்தை யாவும்

யாக்கையைப் பிணித்தென்று ஆக

இனிதிலுள் அடக்கி வாய்ந்த

ஆக்கையை அடக்கிப் பூவோடு

அழுங்கணீர் பொழிந்தான் மீதே. 2388

சொல்லும் பொருளும்

சேக்கை - படுக்கை

யாக்கை - உடல்

பிணித்து - கட்டி

வாய்ந்த - பயனுள்ள

 

2. வாய்மணி யாகக் கூறும்

வாய்மையே மழைநீ ராகித்

தாய்மணி யாக மார்பில்

தயங்கியுள் குளிர வாழ்ந்தேன்

தூய்மணி யாகத் தூவும்

துளியிலது இளங்கூழ் வாடிக்

காய்மணி யாகு முன்னர்க்

காய்ந்தெனக் காய்ந்தேன் அந்தோ. 2400

சொல்லும் பொருளும்

இளங்கூழ் - இளம்பயிர்

தயங்கி - அசைந்து

காய்ந்தேன் - வருந்தினேன்

 

3. விரிந்தன கொம்பில் கொய்த

வீயென உள்ளம் வாட

எரிந்தன நுதிநச்சு அம்புண்டு

இரும்புழைப் புண்போல் நோகப்

பிரிந்தன புள்ளின் கானில்

பெரிதழுது இரங்கித் தேம்பச்

சரிந்தன அசும்பில் செல்லும்

தடவிலா தனித்தேன் அந்தோ! 2401

சொல்லும் பொருளும்

கொம்பு - கிளை

புழை - துளை

கான் - காடு

தேம்ப - வாட

அசும்பு – நிலம்

 

4. உய்முறை அறியேன்; ஓர்ந்த

உணர்வினொத்து உறுப்பும் இல்லா

மெய்முறை அறியேன்; மெய்தான்

விரும்பிய உணவு தேடச்

செய்முறை அறியேன்; கானில்

செல்வழி அறியேன்; தாய்தன்

கைமுறை அறிந்தேன் தாயும்

கடிந்தெனைத் தனித்துப் போனாள். 2403

சொல்லும் பொருளும்

உய்முறை - வாழும் வழி

ஓர்ந்து - நினைத்து

கடிந்து – விலக்கி

 

இயற்கை கொண்ட பரிவு

5. நவமணி வடக்க யில்போல்

நல்லறப் படலைப் பூட்டும்

தவமணி மார்பன் சொன்ன

தன்னிசைக்கு இசைகள் பாடத்

துவமணி மரங்கள் தோறும்

துணர்அணிச் சுனைகள் தோறும்

உவமணி கானம்கொல் என்று

ஒலித்து அழுவ போன்றே.*  2410

சொல்லும் பொருளும்

உவமணி - மணமலர்

படலை - மாலை

துணர் – மலர்கள்

 

பாடலின் பொருள்

1. கருணையன், தன் மலர் போன்ற கையைக் குவித்து, “பூமித்தாயே! என் அன்னையின் உடலை நீ அன்போடு காப்பாயாக" என்று கூறி, குழியினுள் அழகிய மலர்ப்படுக்கையைப் பரப்பினான். இவ்வுலகில் செம்மையான அறங்களையெல்லாம் தன்னூள் பொதிந்து வைத்து, பயனுள்ள வாழ்க்கை நடத்திய தன் அன்னையின் உடலை, மண் இட்டு மூடி அடக்கம் செய்து, அதன்மேல் மலர்களையும் தன் கண்ணீரையும் ஒரு சேரப் பொழிந்தான்.

2. “என் தாய், தன் வாயாலே மணிபோலக் கூறும் உண்மையான சொற்களையே மழைநீராக உட்கொண்டு, அத்தாயின் மார்பில் ஒரு மணிமாலையென அசைந்து, அழகுற வாழ்ந்தேன். ஐயோ! இளம்பயிர் வளர்ந்து முதிர்ந்து நெல்மணிகளைக் காணும் முன்னே தூய மணிபோன்ற தூவும் மழைத்துளி இல்லாமல் வாடிக் காய்ந்து விட்டதைப் போல, நாலும் இப்போது என் தாயை இழந்து வாடுகின்றேனே!”

3. “என் மனம் பரந்து நின்ற மரக்கிளையிலிருந்து பறிக்கப்பட்ட மலரைப்போல வாடுகிறது. தீயையும் நஞ்சையும் முனையில் கொண்ட அம்பினால் துளைக்கப்பட்டதால் உண்டான, புண்ணின் வலியால் வருந்துவது போன்றது என் துயரம். துணையைப் பிரிந்த ஒரு பறவையைப் போல தான் இக்காட்டில் அழுது இரங்கி வாடுகிறேன்: சரிந்த வழுக்கு நிலத்திலே, தனியே விடப்பட்டுச் செல்லும் வழி தெரியாமல் தவிப்பவன் போல் ஆனேன்.”

4. "நான் உயிர்பிழைக்கும் வழி அறியேன்; நினைந்து கண்ட அறிவினுக்குப் பொருந்தியவாறு உறுப்புகள் இயங்குதல் இல்லாத இந்த உடலின் தன்மையை அறியேன்; உடலுக்கு வேண்டிய உணவைத் தேடிக் கொணரும் வழிவகைகளை அறியேன்; காட்டில் செல்வதற்கான வழிகளையும் அறியேன்; என் தாய் தன் கையால் காட்டிய முறைகளை மட்டுமே அறிவேன். என்னைத் தவிக்க விட்டுவிட்டு என்தாய் தான் மட்டும் தனியாகப் போய்விட்டாளே!"

5. நவமணிகள் பதித்த மணிமாலைகளைப் பிணித்தது போன்று நல்ல அறங்களை எல்லாம் ஒரு கோவையாக இணைத்த தவத்தையே அணிந்த மார்பனாகிய கருணையன், இவ்வாறு புலம்பிக் கூறினான். அது கேட்டுப் பல்வேறு இசைகளை இயக்கியது போன்று, தேன் மலர்கள் பூத்த மரங்கள் தோறும் உள்ள, மணம் வீசும் மலர்களும் மலர்ந்த சுனை தோறும் உள்ள, பறவைகளும் வண்டுகளும் அக்காட்டினிலே அழுவன போன்று கூச்சலிட்டன.

 

இலக்கணக் குறிப்பு

காக்கென்று - காக்கவென்று என்பதன் தொகுத்தல் விகாரம்

கணீர் - கண்ணீர் என்பதன் இடைக்குறை

காய்மணி உய்முறை செய்முறை - வினைத்தொகைகள்

மெய்முறை - வேற்றுமைத்தொகை

கைமுறை - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

 

பகுபத உறுப்பிலக்கணம்

அறியேன் - அறி + ய் + ஆ + ஏன்

அறி - பகுதி

ய் - சந்தி

- எதிர்மறை இடைநிலை புணர்ந்து கெட்டது

ஏன் - தன்மை ஒருமை வினைமுற்று விகுதி

ஒலித்து - ஒலி + த் + த் + உ;

ஒலி - பகுதி;

த் - சந்தி;

த் - இறந்தகால இடைநிலை;

- வினையெச்ச விகுதி

 

இஸ்மத் சன்னியாசி - தூய துறவி

வீரமாமுனிவர் திருச்சியை ஆண்ட சந்தாசாகிப் என்னும் மன்னரைச் சந்தித்து உரையாடுவதற்காக இரண்டே மாதங்களில் உருது மொழியைக் கற்றுக்கொண்டார். இவருடைய எளிமையையும், துறவையும் கண்டு வியந்த சந்தாசாகிப் இஸ்மத் சன்னியாசி என்னும் பட்டத்தை வீரமாமுனிவருக்கு அளித்தார். இந்தப் பாரசீகச் சொல்லுக்குத் தூய துறவி என்று பொருள்.

 

நூல் வெளி

தேம்பா + அணி எனப் பிரித்து வாடாதமாலை என்றும், தேன் + பா + அணி எனப் பிரித்து தேன் போன்ற இனிய பாடல்களின் தொகுப்பு என்றும் இந்நூலுக்குப் பொருள் கொள்ளப்படுகின்றது. கிறித்துவின் வளர்ப்புத் தந்தையாகிய சூசையப்பர் என்னும் யோசேப்பினைப் (வளனை) பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட நூல் இது. இப்பெருங்காப்பியம் 3 காண்டங்களையும் 36 படலங்களையும் உள்ளடக்கி, 3615 பாடல்களைக் கொண்டுள்ளது.


17 ஆம் நூற்றாண்டில் படைக்கப்பட்டது தேம்பாவணி. இக்காப்பியத்தை இயற்றியவர் வீரமாமுனிவர். இவரது இயற்பெயர் கான்சுடான்சு சோசப் பெசுகி. தமிழின் முதல் அகராதியான சதுரகராதி, தொன்னூல் விளக்கம் (இலக்கண நூல்), சிற்றிலக்கியங்கள், உரைநடை நூல்கள், பரமார்த்தக் குருகதைகள், மொழிபெயர்ப்பு நூல்கள் ஆகியவற்றை இவர் படைத்துள்ளார்.

 

கற்பவை கற்றபின்...

1. வீரமாமுனிவர் தமிழகத்தில் தங்கிப் பணிசெய்த இடங்களைப்பற்றியும் அங்கு அவர் ஆற்றிய தமிழ்ப்பணிகளைப் பற்றியும் நூலகத்திற்குச் சென்று செய்திகளைத் திரட்டுக.

2. கண்ணதாசனின் இயேசு காவியத்தில் மலைப்பொழிவுப் பகுதியைப் படித்து அதில் வரும் அறக்கருத்துகளை எழுதுக.

 

Tags : by Veeramamunivar | Chapter 9 | 10th Tamil வீரமாமுனிவர் | இயல் 9 | 10 ஆம் வகுப்பு தமிழ்.
10th Tamil : Chapter 9 : Anbin mozhi : Poem: Thembavani by Veeramamunivar | Chapter 9 | 10th Tamil in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : அன்பின் மொழி : கவிதைப்பேழை: தேம்பாவணி - வீரமாமுனிவர் | இயல் 9 | 10 ஆம் வகுப்பு தமிழ் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : அன்பின் மொழி