முதல் பருவம் அலகு 2 | குடிமையியல் | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - அரசியல் கட்சிகள் | 7th Social Science : Civics : Term 1 Unit 2 : Political Parties

   Posted On :  26.04.2022 03:50 am

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : முதல் பருவம் அலகு 2 : அரசியல் கட்சிகள்

அரசியல் கட்சிகள்

கற்றலின் நோக்கங்கள் * அரசியல் கட்சி என்பதை வரையறை செய்தல் மற்றும் அதன் முக்கியத்துவத்தை அறிதல் * அரசியல் கட்சியின் பங்கு மற்றும் செயல்பாட்டினை தெரிந்துகொள்ளல் * இந்தியாவில் கட்சி முறையையும் எதிர்க்கட்சியின் பங்கினையும் அறிந்துகொள்ளுதல்

அலகு – 2

அரசியல் கட்சிகள்



கற்றலின்  நோக்கங்கள்

* அரசியல் கட்சி என்பதை வரையறை செய்தல் மற்றும் அதன் முக்கியத்துவத்தை அறிதல் 

* அரசியல் கட்சியின் பங்கு மற்றும் செயல்பாட்டினை தெரிந்துகொள்ளல்

* இந்தியாவில் கட்சி முறையையும் எதிர்க்கட்சியின் பங்கினையும் அறிந்துகொள்ளுதல்


மாணவன் சிவா : வணக்கம் அம்மா. நான் உள்ளே வரலாமா?

ஆசிரியை ஆதி : வணக்கம் சிவா. எப்போதும் சரியான நேரத்திற்கு வருகைதரும் நீ இன்று ஏன் தாமதம்?

சிவா : மன்னிக்க வேண்டும் அம்மா. ஒரு ஊர்வலத்தின் காரணமாக எனக்கு தாமதம் நேரிட்டது.

ஆதி : என்ன ஊர்வலம் அது? யார் ஏற்பாடு செய்தது?

சிவா : அது ஒரு அரசியல் கட்சியின் ஏற்பாடு என்று எனது மாமா சொன்னார்.

ஆதி : அப்படியா?

சிவா : அரசியல் கட்சி என்றால் என்ன அம்மா? ஏன் அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள்?

ஆதி : காத்திரு . இன்று அரசியல் கட்சிகளைப் பற்றிதான் பாடம் நடத்த உள்ளேன். அவற்றைப் பற்றி நாம் அறிந்து கொள்வோம்.

ஆரம்பக் காலங்களில் பேரரசர்களும் அரசர்களும் ஆட்சி செய்தனர். அரசர், சட்டம் இயற்றுதல், நிர்வாகம், நீதி வழங்குதல் ஆகியவற்றின் தலைமையிடமாக இருந்தார். நிர்வாகம் அவர் ஒருவரின் கையில் மட்டுமே இருந்தது. மக்களின் நலன் என்பது அரசரை பொறுத்து இருந்தது. மக்கள் அரசருக்கு எதிராக செயல்படும் உரிமையை பெற்றிருக்கவில்லை. பின்னர் அன்னிய நாடுகள் இந்தியாவை குடியேற்ற நாடாக உருவாக்கின. குடியேற்ற நாடுகள் பின்னர் சுதந்திர நாடுகளாக அறிவிக்கப்பட்டன.

இந்தியா 1950 ஆம் ஆண்டு மக்களாட்சி நாடானது. துடிப்பான ஒரு மக்களாட்சி நாட்டிற்கு ஒரு வலிமையான அரசியல் கட்சி முறை அவசியமான ஒன்றாகும். கட்சி முறை என்பது நவீனகால தோன்றல் ஆகும். மக்களாட்சியில் மக்கள் எந்த விஷயங்கள் குறித்தும் தங்களது கருத்துக்களை வெளியிடலாம்.


அரசியல் கட்சிகள் என்றால் என்ன?

அரசியல் கட்சிகள் என்பவை தன்னார்வத்தோடு ஏற்படுத்தப்பட்ட தனி மனிதர்களின் அமைப்பு ஆகும். இவை பரந்த கருத்தியல் அடையாளங்களோடு சில கொள்கைகளை ஏற்றுக்கொண்டு சமூகத்திற்கான திட்டங்களையும் நிரல்களையும் வடிவமைக்கின்றன. மேலும் அரசியல் கட்சிகள் மக்களின் ஆதரவை பெற்று தேர்தலில் வெற்றிபெறுவதன் மூலம் தமது கொள்கைகளை நடைமுறைப்படுத்துகின்றன. அவற்றின் அளவு, அமைப்பு மற்றும் கொள்கை ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபடுகின்றன.

எந்த ஒரு அரசியல் கட்சியும் பின்வரும் மூன்று அடிப்படைக் அங்கங்களைக்  கொண்டிருக்கும்.

தலைவர் 

செயல் உறுப்பினர்கள் 

தொண்டர்கள்


அரசியல் கட்சிகளின் முக்கியத்துவம்

அரசியல் கட்சிகள் மக்களாட்சியின் முதுகெலும்பு எனலாம். அரசியல் கட்சிகள் முறையாக அமைக்கப்பட்ட அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இல்லாமல் அரசாங்கத்தை அமைக்கும் முக்கிய காரணிகளாக இருக்கின்றன. அவை பொதுக்கருத்துக்களை உருவாக்குகின்றன. கட்சிகள் குடிமக்களுக்கும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் இடையே பாலமாக சேவை செய்கின்றன.


ஒரு கட்சி அங்கீகரிக்கப்படுவது எவ்வாறு எனில்

ஐந்து ஆண்டுகளாக அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்க வேண்டும்.

அக்கட்சி வேட்பாளர்கள் குறைந்தபட்சம் 6% வாக்குகளை இறுதியாக நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெற்றிருத்தல் வேண்டும்.


அரசியல் கட்சிகளின் பண்புகள்

அரசியல் கட்சிகள் என்பது 

பொதுவான குறிக்கோள் மற்றும் பகிர்ந்தளிக்கப்பட்ட மதிப்பீடுகளை கொண்ட மக்கள் குழுக்களாக இருக்கின்றன.

தனக்கென கொள்கை மற்றும் திட்டங்களை கொண்டிருக்கின்றன.

அரசியல் அமைப்பின் வழியாக மட்டுமே அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிக்கின்றன.

தேசியம் மற்றும் தேசிய நலன்களை மேம்படுத்த முயற்சிக்கின்றன .

கட்சியின் தேர்தல் அறிக்கை

தேர்தலுக்கு முன்பான பரப்புரையில் வேட்பாளர்கள் தங்களது கட்சி ஆட்சிக்கு வந்தால் மேற்கொள்ளப்படும் திட்டங்கள், கொள்கைகளை அறிவிப்பார்கள்.


கட்சி முறைகளின் வகைகள் 

மூன்று வகையான கட்சி முறைகள் நடைமுறையில் இருக்கின்றன. 

ஒரு கட்சி முறை: 

இம்முறையில் ஒரே அரசியல் கட்சி மட்டும் அரசாங்கத்தை ஏற்படுத்தும் உரிமையைக் கொண்டிருக்கும். இவ்வகையான ஒரு கட்சி முறை பொதுவுடைமை நாடுகளான சீனா, வடகொரியா மற்றும் கியூபா ஆகிய நாடுகளில் நடைமுறையில் இருக்கின்றன. 



இரு கட்சி முறை: 

இம்முறையில் இரண்டு கட்சிகள் அதிகாரத்தை பங்கு கொள்ளும் வகையில் ஏற்படுத்தப்பட்டிருக்கும். இவற்றில் ஒன்று ஆளும் கட்சியாகவும் மற்றொன்று எதிர்க்கட்சியாகவும் செயல்படும். இருகட்சி முறை பிரிட்டன் (தொழிலாளர் கட்சி மற்றும் பழமைவாதக் கட்சி அமெரிக்க ஐக்கிய நாடுகளில் (குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி) காணப்படுகின்றன. 

பல கட்சி முறை: 

அதிகாரத்திற்கான போட்டி மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கட்சிகளிடையே இருக்குமாயின் அது பல கட்சி முறை என அழைக்கப்படுகிறது. இம்முறை இந்தியா பிரான்ஸ், ஸ்வீடன், நார்வே உள்ளிட்ட நாடுகளில் காணப்படுகிறது. 

இந்தியாவில் அரசியல் கட்சி முறை 

கூட்டாட்சி அமைப்பினை பின்பற்றும் நாடுகளில் இருவகையான கட்சிகள் காணப்படுகின்றன. இந்தியாவில் கட்சி முறை பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றியது. உண்மையில் இந்தியாவில், உலகின் அதிக எண்ணிக்கையிலான கட்சிகள் காணப்படுகின்றன. இந்தியாவில் கட்சிகள் மூன்று படிநிலையில் அமைந்திருப்பதை நாம் காணலாம். அவை தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத (சுயேட்சைகள்) கட்சிகள் ஆகும். ஒவ்வொரு கட்சியும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும்.

தேர்தல் ஆணையம் – சட்டபூர்வ அமைப்பு

இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல்களை நடத்துவதற்கு அதிகாரம் கொண்ட ஒரு சுதந்திரமான சட்டப்படியான அரசியலமைப்பு ஆகும். இதன் தலைமை இடம் புதுதில்லியில் அமைந்துள்ளது.





கட்சிகள் அங்கீகரிக்கப்படுவதற்கான நிபந்தனைகள் 

இந்தியாவில் அரசியல் கட்சிகளை அங்கீகரிப்பதற்கு இந்தியத் தேர்தல் ஆணையம் சில விதிமுறைகளை வகுத்துள்ளது.

தேசியக்கட்சிகள்

மக்களவைத் தேர்தலில் அல்லது நான்கு மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலில் செல்லத்தக்க மொத்த வாக்குகளில் ஒரு கட்சி 6% வாக்குகளை பெற்றிருத்தல் வேண்டும்.

ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட மாநிலங்களில் நான்கு மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும்.

இறுதியாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் குறைந்தபட்சம் மூன்று மாநிலங்களில் 2% தொகுதிகளில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும்.

பிராந்திய/மாநிலக்கட்சிகள்

மாநில சட்டப் பேரவைக்கான தேர்தலில் செல்லத்தக்க வாக்குகளில் குறைந்த பட்சம் 6% வாக்குகளை பெற்றிருத்தல் வேண்டும்...

ஒவ்வொரு 25 தொகுதிகளுக்கும் ஒரு மக்களவைத் தொகுதி அல்லது சட்டப் பேரவைத் தேர்தலில் குறைந்தபட்சம் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும்.

சட்ட பேரவையில் மொத்த தொகுதிகளில் குறைந்தபட்சம் 3% தொகுதிகளில்  வெற்றி பெற வேண்டும்.

p

சுயேட்சை வேட்பாளர் 

சுயேட்சை வேட்பாளர் என்பவர் எந்த கட்சியிலும் சேராமல் தானாக மக்களவை அல்லது மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் நபர் ஆவார்.

அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் 

மேலே தெரிவித்த நிபந்தனைகளை பூர்த்தி செய்த கட்சிகள் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் என அழைக்கப்படும். அவற்றிற்கு தேர்தல் ஆணையத்தால் சின்னம் ஒன்றும் ஒதுக்கீடு செய்யப்படும். பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சி தாங்கள் விரும்பும் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட முடியாது. இத்தகைய கட்சி தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்படும் தேர்தல் குழுவில் (Poll Panel) உள்ள ஏதேனும் ஒரு சின்னத்தை தேர்வு செய்தல் வேண்டும்.

தேர்தல் குழு சின்னங்கள் 

1968ஆம் ஆண்டின் தேர்தல் சின்னங்கள் ஆணையின்படி, ஒதுக்கப்பட்ட சின்னங்கள் மற்றும் ஒதுக்கப்படாத சின்னங்கள் என்று இரண்டு வகை உள்ளது. 

• ஒதுக்கப்பட்ட சின்னம் என்பது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிக்கு மட்டுமானது என பொருள்படும். 

• ஒதுக்கப்படாத சின்னம் என்பது அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் சின்னம் ஆகும்.



பெரும்பான்மைக் கட்சி 

தேர்தலில் ஒரு அரசியல் கட்சியின் வேட்பாளர்கள் மற்ற கட்சிகளின் வேட்பாளர்களை விட அதிக எண்ணிக்கையில் தேர்வு பெற்று இருப்பின் அக்கட்சியானது பெரும்பான்மைக் கட்சி என அழைக்கப்படுகிறது. பெரும்பான்மை பெற்ற கட்சி, அரசாங்கத்தை அமைத்து ஆட்சி நடத்துகிறது. அக்கட்சி அரசு நிர்வாகத்தை நடத்த அமைச்சர்களை தேர்ந்தெடுத்து நியமிக்கிறது. அது நாட்டிற்கு சட்டம் இயற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.



சிறியக்கட்சி

சிறியக்கட்சி என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் எண்ணிக்கையில் குறைவான எண்ணிக்கையைக் கொண்ட கட்சி ஆகும்.


எதிர்க்கட்சி

தேர்தலில் பெரும்பான்மை பெற்ற கட்சிக்கு இரண்டாவதாக அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களை கொண்ட கட்சி எதிர்க்கட்சி என அழைக்கப்படுகிறது. மக்களாட்சி வெற்றிகரமாக செயல்படுவதற்கு ஆற்றல் வாய்ந்த எதிர்க்கட்சி மிகவும் அவசியம் ஆகும். அது ஆளும் கட்சி போன்றே முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். எதிர்க்கட்சி ஆளுங்கட்சியின் தன்னிச்சையான போக்கினை கட்டுப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது. அது அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் அறிமுகப்படுத்தப்படும் சட்ட மசோதாக்களை தீவிரமாக விமர்சிக்கும். எதிர்க்கட்சி அரசின் தவறான கொள்கைகள் மற்றும் தோல்விகளை வெளிப்படுத்தும். அரசால் செயல்படுத்தப்படாத விவகாரங்கள் குறித்து அதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும். எதிர்க்கட்சித் தலைவர் கேபினட் அமைச்சர் அந்தஸ்தைக் கொண்டிருப்பார்.


கூட்டணி அரசாங்கம்


பல கட்சி அமைப்பில் சில நேரங்களில் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை ஒரு கட்சி பெறுவதில்லை. இது போன்ற நேர்வில் சில கட்சிகள் இணைந்து அரசாங்கத்தை அமைக்கின்றன. இது கூட்டணி அரசாங்கம் என அழைக்கப்படுகிறது.


தேர்தல் சின்னங்கள் மற்றும் அவற்றின் முக்கியத்துவம்

தேர்தல் சின்னம் என்பது அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் அங்கீகரிக்கப்பட்ட சின்னம் ஆகும். அது தேர்தலில் ஒரு முக்கிய பங்கினை வகிக்கிறது. தேர்தல் சின்னங்கள் வாக்காளர்களால் எளிதில் அடையாளம் காணவும், புரிந்து கொள்ளவும், நினைவில் கொள்ளவும் மற்றும் அங்கீகரிக்கவும் உதவுகிறது. விலங்குகளின் சின்னங்களை வழங்குவதை தேர்தல் ஆணையம் நிறுத்தியுள்ளது. விதிவிலக்காக யானை மற்றும் சிங்கம் ஆகிய சின்னங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. தேசிய அளவிலான அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் சின்னம் நாடு முழுவதும் ஒன்றாக இருக்கும். இத்தகைய சின்னங்கள் வேறு எந்த கட்சிக்கும் அல்லது சுயேட்சை நபருக்கும் ஒதுக்கப்படமாட்டாது.

மாநில கட்சிகளுக்கு அந்தக் குறிப்பிட்ட மாநிலத்தில் பயன்படுத்துவதற்கு ஏதுவாக சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும். இதனை வேறு எந்த கட்சியும் அந்தக் குறிப்பிட்ட மாநிலத்தில் பயன்படுத்த இயலாது. ஆனால் பல்வேறு மாநிலங்களில் உள்ள மாநிலக்கட்சிகள் தங்களது மாநிலங்களில் இதே போன்ற சின்னத்தை பயன்படுத்தலாம். (உதாரணமாக மகாராஷ்டிராவில் சிவசேனை கட்சி , ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோட்சா ஆகிய கட்சிகள் வில் மற்றும் அம்பு சின்னத்தை பயன்படுத்துகின்றன)

தேசியக் கட்சி

தேசியக் கட்சி என்பது இந்தியா முழுவதும் நடைபெறும் தேர்தல்களில் போட்டியிடும் அரசியல் கட்சியாகும்.

தேசியக் கட்சி குறைந்த பட்சம் நான்கு மாநிலங்களில் வலிமை உடையதாக இருக்க வேண்டும்.

இது தனக்கென பிரத்தியேகமான சின்னத்தை நாடு முழுவதற்கும் கொண்டிருக்கும்.

இது மாநில, தேசிய மற்றும் சர்வதேச விவகாரங்களைத் தீர்த்து வைக்கிறது.

பிராந்திய / மாநிலக் கட்சி 

மாநிலக் கட்சிகள் என்பவை ஒரு மாநிலத்திற்குள் நடைபெறும் பல்வேறு தேர்தல்களில் போட்டியிடும் அரசியல் கட்சியாகும்.

இது ஒன்று அல்லது இரண்டு மாநிலங்களில் வலிமை கொண்டதாக இருக்க வேண்டும்.

இதற்கு அங்கீகரிக்கப்பட்ட ஒரு சின்னம்  ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும். ஆனால் இத்தகைய சின்னம் வேறு மாநிலத்தில் உள்ள கட்சிக்கும் ஒதுக்கீடு செய்யப்படலாம். 

இது பிராந்திய மற்றும் மாநில நலன்களை வலியுறுத்துகிறது.

தேசியக் கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் நாட்டின் வளர்ச்சியைத் தூண்டுகின்றன. மக்களின் நலனுக்காகப் பாடுபடுகின்றன.



சுருக்கம்:

நவீன காலம் என்பது பெரிய சமூகத்தையும் அதிக மக்கள் தொகையையும் கொண்டதாகும். கட்சி முறை என்பது நவீன காலத்தின் தோன்றல் ஆகும்.

பரந்த பொது நலனோடு உள்ள ஒரு குழு தேர்தலில் வெற்றிபெற்று அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தவும், அதன் கொள்கைகளின் மீது செல்வாக்கை செலுத்தவும் முடியும்.

பொதுவாக மூன்று வகையான கட்சி முறைகள் காணப்படுகின்றன. அவை ஒரு கட்சி முறை, இரு கட்சி முறை மற்றும் பல கட்சி முறை.

இந்தியாவில் பல கட்சி முறை நடைமுறையில் உள்ளது.

கட்சியில் உறுப்பினராக இல்லாத ஒருவரும் தேர்ந்தெடுக்கப்படலாம். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுபவர் சுயேட்சை உறுப்பினர் என அழைக்கப்படுவார்.

சுதந்திரமான நியாயமான தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் பொறுப்பு வாய்ந்தது ஆகும்.


கலைச்சொற்கள் 

1. மக்களாட்சி - Democracy - Government by the people 

2. தேர்தல் அறிக்கை - Election manifesto - a public declaration of policies and aims by political parties 

3. எதிர்க்கட்சி - Opposition party - a party opposing to the other parties 

4. கூட்டாட்சி அமைப்பு - Federal system - system of government in which several states form a unity but remain independent in internal affairs 

5. தேர்தல் ஆணையம் - Election commission - a body for implementation of election procedures 

6. தேர்தல் சின்னங்கள் - Electoral symbols - symbols allocated to a political party 

7. அமைச்சர் - Cabinet Minister - member of a parliament or legislative assembly cabinet 


1.

3 இணையச்செயல்பாடு

தேர்தல் ஆணையம்

இந்த செயல்பாடு மாணவர்களுக்கு தேர்தல்ஆணையம்குறித்து அறிவிக்கும்



படிநிலைகள்: 

படி 1: படி -1: URL அல்லது QR குறியீட்டினைப் பயன்படுத்தி இச்செயல்பாட்டிற்கான இணையப்பக்கத்திற்கு செல்க. 

படி 2: அதில் "Election India" (Eg: Parties)என்பதைதெரிவுசெய்க. அதன் மூலம் இந்திய அரசியல் கட்சிகள் குறித்து சிறிது அறிந்து கொள்ளலாம்.

படி 3: கொடுக்கப்பட்டிருக்கிற விருப்பபட்டியலில் இருந்து ஏதாவதொரு தலைப்பை தேர்ந்தெடுத்து (எ.கா. தலைவர்கள்) அதை காண்க 

படி 4: மறுபடி தாங்கு பலகைக்குச் சென்று வரப்போகும் தேர்தல் நிலையைத் தெரிந்து கொள்க


தேர்தல் ஆணையம் உரலி:

https://play.google.com/store/search?q=election

** படங்கள் அடையாளத்திற்கு மட்டுமே. 

* தேவையெனில் 'Adobe Flash' ஐ அனுமதிக்கவும்.


Tags : Term 1 Unit 2 | Civics | 7th Social Science முதல் பருவம் அலகு 2 | குடிமையியல் | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
7th Social Science : Civics : Term 1 Unit 2 : Political Parties : Political Parties Term 1 Unit 2 | Civics | 7th Social Science in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : முதல் பருவம் அலகு 2 : அரசியல் கட்சிகள் : அரசியல் கட்சிகள் - முதல் பருவம் அலகு 2 | குடிமையியல் | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : முதல் பருவம் அலகு 2 : அரசியல் கட்சிகள்