Home | 11 ஆம் வகுப்பு | 11வது வரலாறு | வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய இந்தியா

வரலாறு - வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய இந்தியா | 11th History : Chapter 1 : Early India: From the Beginnings to the Indus Civilisation

   Posted On :  13.05.2022 08:04 pm

11வது வகுப்பு வரலாறு : அலகு 1 : பண்டைய இந்தியா : தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய இந்தியா

எழுத்து முறை தோன்றுவதற்கு முந்தைய காலகட்டம், வரலாற்றுக்கு முந்தைய காலம் எனப்படுகிறது. இது கற்காலம் எனவும் குறிக்கப்படுகிறது. கற்காலத்தைக் குறித்துப் பேசும்போது இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், வங்க தேசம் ஆகியவை அடங்கிய தென்கிழக்கு ஆசியா முழுவதையும் ஒரே பகுதியாகக் குறிப்பதே பொருந்தும்.

வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய இந்தியா

எழுத்து முறை தோன்றுவதற்கு முந்தைய காலகட்டம், வரலாற்றுக்கு முந்தைய காலம் எனப்படுகிறது. இது கற்காலம் எனவும் குறிக்கப்படுகிறது. கற்காலத்தைக் குறித்துப் பேசும்போது இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், வங்க தேசம் ஆகியவை அடங்கிய தென்கிழக்கு ஆசியா முழுவதையும் ஒரே பகுதியாகக் குறிப்பதே பொருந்தும்.

மனித இனத்தின் மூதாதையர் முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றி, பின்னர் உலகத்தின் வெவ்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தனர். இவ்வாறு ஆப்பிரிக்காவை விட்டு முதன்முதலாக வெளியே இடம்பெயர்ந்த மனித இனம் ஹோமோ எரக்டஸ் (homo erectus) ஆகும். இருபதாம் நூற்றாண்டின் இறுதி வரைக்கும், இந்தியாவில் வரலாற்றுக்கு முந்தைய காலம் 10 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் நிலவியிருக்கலாம் எனக் கருதப்பட்டது. ஆனால் அண்மையில் நடைபெற்ற ஆய்வுகளின்படி, வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய மனிதர்கள் இந்தியாவில் 10 இலட்சம் முதல் 20 இலட்சம் வரையான ஆண்டுகளுக்கு முன்பே இருந்தார்கள் எனத் தெரிகிறது.

பொதுவாக, எழுத்து தோன்றுவதற்கு முந்தைய காலம் கற்காலம், வெண்கலக்காலம், இரும்புக்காலம் எனப் பிரிக்கப்படும். அம்மக்கள் பயன்படுத்திய பொருள்கள் (எடுத்துக்காட்டாக, இரும்புக்காலத்தைச் சேர்ந்த ஓவியம் தீட்டப்பட்ட சாம்பல் நிற பாண்டங்கள்) அல்லது அவர்கள் வாழ்ந்த நிலப்பகுதி (எடுத்துக்காட்டாக, சிந்து), நாகரிகம் நிலவியதாகக் கண்டறியப்பட்ட முதல் இடம் (எடுத்துக்காட்டாக, அச்சூலியன் அல்லது ஹரப்பா) ஆகியவற்றின் அடிப்படையிலேயே அப்பண்பாடுகளுக்குப் பெயர்கள் சூட்டப்படுகின்றன.

வரலாற்றில் மிகவும் தொன்மையான காலம் பழங்கற்காலம் (Palaeolithic) எனப்படுகிறது. இது மூன்றாகப் பிரிக்கப்படுகிறது.

கீழ்ப்பழங்கற்காலம் (Lower Palaeolithic)

இடைப் பழங்கற்காலம் (Middle Palaeolithic)

மேல் பழங்கற்காலம் (Upper Palaeolithic)

பழங்கற்காலத்துக்குப் பிந்தைய காலம் இடைக்கற்காலம் எனப்படும். இடைக்கற்காலத்துக்கு அடுத்த காலகட்டம் புதிய கற்காலம் ஆகும். இக்காலத்தில்தான் விலங்குகளையும் தாவரங்களையும் வளர்க்க மனிதர்கள் கற்றுக்கொண்டார்கள். அது உணவு உற்பத்திக்கு வழிவகுத்தது. பாறைப்படிவியல் (Stratigraphy) ஆய்வுகள், காலவரிசை, கற்கருவிகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இத்தகைய பண்பாடுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

காட்டு உயிரினங்களும் பழக்கப்படுத்தப்பட்ட உயிரினங்களும்: காட்டுத்தாவரங்களும் விலங்குகளும் பறவைகளும் பிற உயிரினங்களும் இயற்கையாக வளர்பவை. தாவரங்களும் விலங்கினங்களும் மனிதர்களால் பெருமளவில் பழக்கப்படுத்தப்படும் போது, அவற்றின் வாழ்க்கைமுறையும் உடலியல் கூறுகளும் மாற்றம் அடைகின்றன. அவற்றின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. இதன் விளைவாக, காட்டில் உள்ள தாவரங்களுடன் ஒப்பிடும்போது, பழக்கப்படுத்தப்பட்ட தாவரங்களின் விதைகள் அளவில் சிறியதாக மாறுகின்றன. விலங்குகளைப் பழக்கப்படுத்தும்போது அவை தங்களின் மூர்க்க குணத்தை இழக்கின்றன.

கீழ்ப்பழங்கற்காலப் பண்பாடு (Lower Palaeolithic Culture)

கற்காலத்தின் தொடக்கத்தைச் சேர்ந்த மனிதர்கள் பயன்படுத்திய பொருள்கள் இந்தியத் துணைக்கண்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கிடைத்துள்ளன. கீழ்ப்பழங் கற்கால கட்டத்தின் போது, மனித மூதாதையர்களான ஹோமோ எரக்டஸ் இந்தியாவில் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. பழங்கற்காலத்தைச் சேர்ந்த கருவிகள் முதன் முதலில், சென்னை அருகே உள்ள பல்லாவரத்தில் இராபர்ட் புரூஸ் ஃபூட் என்பவரால் 1863இல் கண்டெடுக்கப்பட்டன. தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அவர் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டபோது, வரலாற்றுக்கு முந்தைய கால நாகரிகம் நிலவிய பல இடங்களைக் கண்டறிந்தார். அதிலிருந்து கற்கால மனிதர்கள் வாழ்ந்த பல பகுதிகள் இந்தியா முழுவதும் அடையாளம் காணப்பட்டு, அகழாய்வு செய்யப்பட்டன.

கற்கருவிகள்

வரலாற்றுக்கு முந்தைய காலம் குறித்த ஆய்வுத்துறை பெரும்பாலும் கற்கருவிகளையே சார்ந்துள்ளது. கற்கால மனிதரின் வாழிடங்கள் கல்லாலான கருவிகள் கிடைப்பதை அடிப்படையாகக் கொண்டு அடையாளங் காணப்படுகின்றன. மனித மூதாதையர் கருவிகள் செய்யப் பெரிய கற்பாளங்களையும் கூழாங்கற்களையும் தேர்ந்தெடுத்தனர். அவற்றை மற்றொரு உறுதி வாய்ந்த கல்லால் சீவிக் கருவிகளை உருவாக்கினர். இவ்வாறு கற்களைச் செதுக்கிக் கோடரி, சிறுகோடரி, துண்டாக்கும் கருவி, பிளக்கும் கருவி போன்றவை உருவாக்கப்பட்டன. நன்கு சிந்தித்து உருவாக்கப்பட்ட வடிவமைப்பையும் சீரான தோற்றத்தையும் கொண்ட இக்கருவிகள் கற்கால மனிதர்களின் மேம்பட்ட அறிவாற்றலையும் திறனையும் காட்டுகின்றன. வேட்டையாடுவதற்கும் வேட்டையாடப்பட்ட விலங்குகளின் உடலிலிருந்து தோலை உரிப்பதற்கும் இறைச்சியை வெட்டுவதற்கும் எலும்பின் மஜ்ஜையை பிரித்தெடுப்பதற்கும் எலும்புகளை உடைப்பதற்கும் கிழங்குகளை அகழ்ந்தெடுப்பதற்கும் உணவை பதப்படுத்துவதற்கும் இக்கற்கருவிகளைப் பயன்படுத்தியுள்ளனர்.

அச்சூலின் மரபும் சோகனியன் மரபும்: இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் பழங்கற்கால மக்களின் தொடக்க காலப் பண்பாடு அவர்கள் பயன்படுத்திய கற்கருவிகளின் அடிப்படையில் இரு மரபுகளாகப் பிரிக்கப்படுகிறது. கைக்கோடரி வகைக் கருவிகளைக் கொண்ட மரபு அச்சூலியன் (Acheulian) என்றும் கூழாங்கல்லைச் செதுக்கி உருவாக்கப்படும் கருவிகளைக் கொண்ட மரபு சோகனியன் (Sohanian) என்றும் அழைக்கப்படுகிறது. அச்சூலியன் மரபு பெருமளவில் கோடரிகளையும் வெட்டுக்கத்திகளையும் கொண்டது. சோகனிய மரபு துண்டாக்கும் கருவிகளையும் அதைச் சார்ந்த வேலைகளுக்கான கருவிகளையும் மட்டுமே கொண்டது. இன்றைய பாகிஸ்தானில் உள்ள சோகன் ஆற்றின் வடிநீர்ப்பகுதியில் நிலவிய மரபு என்பதால், இது சோகனிய மரபு எனப்படுகிறது. அண்மையில் நடைபெற்ற ஆய்வுகளின்போது இதே பகுதியில் அச்சூலியன் மரபு சார்ந்த கருவிகளும் கிடைத்தன. எனவே தனித்தன்மை வாய்ந்த சோகனிய மரபு என்ற ஒன்று இருந்ததாகக் கூற இயலாது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

பழங்கற்காலக் கற்கருவிகளின் ஆக்கம், அதற்கான உழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அக்காலப்பண்பாடு தொடக்க கால அச்சூலியன், இடைக்கால அச்சூலியன், பிற்கால அச்சூலியன் என மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பன்முகம் கொண்ட கோளவடிவம் கொண்ட பொருள்கள், கைக்கோடாரி, வெட்டுக்கத்திகள், செதுக்கும் கருவிகள் ஆகியவை தொடக்க கால அச்சூலியன் மரபில் அடங்கும்.

மேற்குத்தொடர்ச்சிமலை, கடற்கரைப்பகுதிகள், வடகிழக்கு இந்தியா ஆகிய இடங்களில் அச்சூலிய மரபுக்கான அடையாளங்கள் காணப்படவில்லை. பெருமழை இதற்குக் காரணமாக இருக்கலாம். பொருத்தமற்ற சூழல், மூலப்பொருள்களின் பற்றாக்குறை ஆகியவை மக்களின் குடியேற்றத்தைத் தடுத்திருக்கலாம். ஒருவேளை வரலாற்றுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த மக்களுக்கு இப்பகுதிகளில் குடியேற வேண்டிய தேவை இல்லாமல் போயிருக்கலாம். இம்மக்கள் வாழ்ந்த இடங்கள் அதிக எண்ணிக்கையில் மத்திய இந்தியாவிலும் இந்தியாவின் தென்கிழக்குப் பகுதியிலும் (சென்னைக்கு அருகில்) கண்டறியப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகள் அதிகளவில் மழையைப் பெறுவதால், பசுமை மாறாமலும் அதிக வளங்களுடனும் உள்ளன.

பரவல்

பழைய கற்காலத்தின் தொடக்கத்தைச் சேர்ந்த கருவிகள் கங்கைச் சமவெளி, தமிழ்நாட்டின் தென்பகுதி, மேற்குத்தொடர்ச்சி மலையின் குன்றுப்பகுதிகள் ஆகியவற்றைத் தவிர்த்து, இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளன. சென்னைக்கு அருகில் உள்ள அதிரம்பாக்கம், பல்லாவரம், குடியம், கர்நாடகாவின் ஹன்ஸ்கி சமவெளியில் உள்ள இசம்பூர், மத்தியப்பிரதேசத்தில் உள்ள பிம்பெட்கா ஆகியவை அச்சூலிய கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ள வேறு சில இடங்களாகும்.



காலவரிசை

இந்தியாவில் கீழ்ப் பழங்கற்காலப் பண்பாடு இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாகத் தொடங்கியிருக்க வேண்டுமென அண்மைக்கால ஆய்வுகள் மதிப்பிட்டுள்ளன. இப்பண்பாடு 60,000 ஆண்டுகள் முன்பு வரை தொடர்ந்தது.

ஹோமினின் மற்றும் விலங்குகளின் புதைபடிவங்கள்

தற்கால மனிதனுக்கு நெருக்கமான தோற்றத்தைக் கொண்டிருந்த மனித மூதாதையர் ஹோமினின் (Hominin) என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் ஆப்பிரிக்காவில் அதிகளவில் காணப்படுகின்றன. ஆனால் இந்தியாவில் அவை அரிதாகவே உள்ளன. அதிரம்பாக்கத்தில் ஹோமினின் வாழ்ந்ததற்கான அடையாளமாகக் கொள்ளத்தக்க புதைபடிவத்தின் ஒரு பகுதியை இராபர்ட் புரூஸ் ஃபூட் கண்டெடுத்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அந்தப் புதைபடிவம் தற்போது எங்கு இருக்கிறது என்று அறிய முடியவில்லை. இந்தியாவில் நன்கு அறியப்பட்ட ஹோமினின் புதைபடிவம் மத்தியப்பிரதேசத்திலுள்ள ஹோசங்காபாத் அருகேயுள்ள ஹத்னோராவில் கண்டுபிடிக்கப்பட்டதாகும். அது ஒரு மண்டையோட்டின் மேல்பகுதி. இதைநர்மதை மனிதன்என்று தொல்லியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆர்க்கைக் ஹோமோ சேப்பியன்ஸ் என்னும் மனித இனம் வாழ்ந்ததற்கான அடையாளமாக இது கருதப்படுகிறது. மனித மூதாதையரின் புதைபடிவங்கள் என்ற வகையில் தற்போது இந்தியாவில் இருக்கிற ஒரே புதைபடிவம் இது மட்டுமே.

கற்காலத்தில் மக்கள் வாழ்ந்த பழமைச் சூழலை நாம் புரிந்துகொள்ள விலங்குகளின் புதைபடிவங்கள் பயன்படுகின்றன. நர்மதை சமவெளியில் மிகப்பெரிய தந்தங்களையுடைய வரலாற்றுக்கு முந்தைய காலகட்ட யானை, எலிபஸ் நமடிகஸ் (Elephus namadicus), வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த மற்றொரு மிகப் பெரிய யானை வகையான ஸ்டெகோடோன்கனேசா (stegodon ganesa), காட்டுமாடுகள் வகையான போஸ் நமடிகஸ் (Bos namadicus), குதிரை வடிவம் கொண்ட குதிரையான எக்கஸ் நமடிகஸ் (Equus namadicus) ஆகிய விலங்குகளின் புதைபடிவங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. குதிரை வகை விலங்கு (எக்கஸ்)களின் பற்கள், நீல்காவ் மற்றும் நீர் எருமைக்கான சான்றுகள், சில விலங்குகளின் குளம்புத்தடங்கள் ஆகியவை அதிரம்பாக்கத்தில் காணப்பட்டன. வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் திறந்த, ஈரப்பதம் வாய்ந்த நிலப்பரப்பு சென்னைக்கு அருகில் இருந்ததை இவை உணர்த்துகின்றன.

எக்கஸ் - குதிரை, கழுதை, வரிக்குதிரை ஆகிய விலங்குகளை உள்ளடக்கியப் பேரினம்.

வாழ்க்கைமுறை

கீழ்ப்பழங்கற்காலப் பண்பாட்டைச் சேர்ந்த மக்கள் விலங்குகளை வேட்டையாடியும் கிழங்குகள், கொட்டைகள், பழங்கள் ஆகியவற்றைச்  சேகரித்தும் வாழ்ந்தனர். வேட்டை விலங்குகளால் வேட்டையாடப்பட்ட விலங்குகளின் இறைச்சியையும் உண்டனர். திறந்த வெளியிலும் ஆற்றுச் சமவெளிகளிலும் குகைகளிலும் வசித்ததை மத்தியப்பிரதேசத்தில் உள்ள பிம்பெட்கா, சென்னைக்கு அருகில் உள்ள குடியம் ஆகிய இடங்களில் உள்ள சான்றுகளால் அறிந்துகொள்ளலாம். ஹோமோ எரக்டஸ் இனத்தைச் சேர்ந்த மனிதர்கள் தற்காலமனிதர்களான ஹோமோ சேப்பியன்ஸைப் போல மேம்பட்ட மொழியைக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் சில ஒலிகள் அல்லது சொற்கள் மூலம் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தியிருக்கலாம். சைகைகளைச் சார்ந்த மொழியையும் பயன்படுத்தியிருக்கலாம். கருவிகளைச் செய்வதற்குச் சரியான கல்லைத் தேர்வு செய்வதற்கான அறிவு அவர்களுக்கு இருந்தது. பாறைகளைச் செதுக்கவும் அவற்றைக் கருவிகளாக வடிவமைக்கவும் சுத்தியல் போன்ற கற்களைப் பயன்படுத்தியுள்ளனர்.

இடைப் பழங்கற்காலம் (Middle Palaeolithic Culture)

இன்றிலிருந்து 4,00,000 ஆண்டுகளுக்கு முன்பான காலப்பகுதியில் கற்கள் தொடர்பான தொழில்நுட்பத்தில் மாற்றங்கள் ஏற்பட்டன. மனித மூதாதையர்களிடத்தும் பிரிவுகள் தோன்றின. இக்காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள் ஹோமோ எரக்டஸ் வகையினர் ஆவர். மனிதர்கள் தற்போது கொண்டுள்ள உடலமைப்புக்கூறுகளுடன் ஏறத்தாழ மூன்று இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் இடைப்பழங் கற்காலக்கட்டத்தை நெவாசா என்னுமிடத்தில் பிரவாரா ஆற்றங்கரையில் ஹெச் டி.சங்கலியா என்ற தொல்லியலாளர் முதலில் அடையாளம் கண்டார். இதையடுத்து, இடைப்பழங் கற்காலம் நிலவிய பல இடங்களும் அடையாளம் காணப்பட்டன. இக்காலகட்ட மனிதர்கள் வாழ்ந்ததாக அறியப்படும் அதிரம்பாக்கத்தின் காலம் இன்றிலிருந்து 3,85,000–1,72000 ஆண்டுகளுக்கு இடைப்பட்டது என அண்மையில் கணிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவில் நிலவிய இடைப் பழங்கற்காலப் பண்பாட்டைப் போலவே இந்தியாவின் இடைபழங் கற்காலக்கட்டமும் பழமை வாய்ந்ததாக இருக்கலாம்.

மேல் பழங்கற்கால வழிபாட்டுத்தலம் : மேல் பழங்கற்காலத்தைச் சேர்ந்த ஒரு வழிபாட்டுத்தலமாக இருந்திருக்கலாம் என கருதத்தகுந்த ஒரு சிறு கட்டுமானம் உத்தரப்பிரதேசத்தில் உள்ள பாகோர் என்னுமிடத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளது. செதுக்கப்படாத கற்களால் வட்ட வடிவில் சூழப்பட்ட ஒரு மணற்பாறையின் பாளம் இங்கு காணப்படுகிறது. இது தற்கால வழிபாட்டுத்தலங்களை ஒத்திருக்கிறது. இந்தியாவில் வழிபாட்டுத்தலங்களுக்கான தேடலில் கிடைத்த மிகப் பழமையான சான்று இதுதான்.


 

கருவி வகைகளும் தொழிற்கூடங்களும்

கைக்கோடாரிகள், பிளக்கும் கருவிகள், துண்டாக்கும் கருவிகள், சுரண்டும் கருவிகள், துளையிடும் கருவிகள், எறிதலுக்கு உட்படும் பொருள்கள், அரம் போன்ற கருவி, செதுக்குவதற்கான கத்தி ஆகியவை இக்காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்டன. சுரண்டும் கருவி, துளையிடும் கருவி போன்றவற்றை அதிகளவில் சார்ந்திருந்ததால், இடைப்பழங் கற்கால நாகரிகம் செதுக்கும் செயல்பாட்டை அடிப்படையாகக் கொண்டிருந்தது எனலாம். மரக்கட்டை, விலங்குத் தோல் ஆகியவற்றைக் கையாளுவதற்குச் சுரண்டும் கருவிகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டன.

காலவரிசை

இந்தியாவில் இடைப்பழங்கற்காலப் பண்பாடு பொ..மு.(கி.மு) 3,85,000-40,000க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் நிலவியதாகக் கணிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவில் இடைபழங்கற்காலம் ஹோமோ சேபியன்ஸ்களோடு தொடர்புபடுத்தப்படுகிறது. ஐரோப்பாவில் இது நியாண்டர்தால் வகையினரோடு தொடர்புபடுத்தப்படுகிறது. இவ்வகையினரின் புதைபடிவ எச்சங்கள் இந்தியாவில் காணப்படவில்லை.

பரவல்

இடைப்பழங்கற்கால நாகரிகம் பரவியிருந்த இடங்கள் நர்மதை, கோதாவரி, கிருஷ்ணா, யமுனை உள்ளிட்ட ஆறுகளின் சமவெளிகளில் காணப்படுகின்றன.

வாழ்க்கை முறையும் முதன்மையான பண்புகளும்

இடைப்பழங் கற்கால மனிதர்கள் திறந்த வெளியிலும் குகையிலும் பாறைப்படுகைகளிலும் வசித்தார்கள். இவர்கள் வேட்டையாடுபவர்களாகவும் உணவைச் சேகரிப்பவர்களாகவும் இருந்தார்கள். இந்தியாவைச் சேர்ந்த இடைபழங் கற்காலப் பண்பாட்டின் முதன்மையான பண்புகள் கீழ்வருமாறு:

கருவிகள் சிறியதாயின.

ஏனைய கருவிகளோடு ஒப்பிடுகையில் கைக்கோடாரியைப் பயன்படுத்தும் பழக்கம் குறைந்தது.

கற்கருவிகள் உற்பத்தியில் மூலக்கல்லை தயார் செய்யும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது.

செர்ட், ஜாஸ்பர், கால்சிடெனி, குவார்ட்ஸ் ஆகிய கற்களை மூலப்பொருள்களாகப் பயன்படுத்துதல்

மேல்பழங்கற்காலப் பண்பாடு (Upper Palaeolithic Culture)

இடைப்பழங்கற்காலத்தைத் தொடர்ந்து வந்த பண்பாட்டுப்படிநிலை மேல்பழங்கற்காலப் பண்பாடு என்று அழைக்கப்படுகிறது. கருவிகளுக்கான தொழில்நுட்பத்தில் புதுமையையும் மனிதர்களின் அறிவாற்றல் திறன்களில் மேம்பட்ட தன்மையையும் இக்காலகட்டத்தில் காண முடிகிறது. ஏறத்தாழ 3 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் ஆப்பிரிக்காவின் சகாராபாலைவனப்பகுதிக்கு அருகே தோன்றிய நவீன மனிதர்கள் ஏறத்தாழ 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆசியாவின் பல்வேறு பகுதிகளுக்குப் பரவினர் அவர்கள் முந்தைய மக்கள் கூட்டத்தாரை விரட்டிவிட்டு அவர்கள் வசித்த இடங்களில் குடியேறியிருக்கலாம். இந்தப் புதிய குழுக்கள் இந்தியாவின் மேல்பழங்கற்காலப் பண்பாட்டுக்குக் காரணமாக இருந்திருக்க வாய்ப்பு உண்டு.

கற்கருவிகளும் தொழிற்கூடங்களும்

இக்காலகட்டத்தைச் சேர்ந்த கற்கருவிகள் கத்தி, வாள் போல வெட்டுவாய் கொண்டவையாகவும் எலும்பால் ஆனவையாகவும் அமைந்திருந்தன. மேல் பழங் கற்காலத்தில் சிறுகற்களில் செய்யப்பட்ட கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இவற்றை உருவாக்க சிலிக்கான் செறிந்த மூலப்பொருள்கள் வெவ்வேறு வகைகளில் பயன்படுத்தப்பட்டன. எலும்பினாலான கருவிகளும் விலங்குகளின் எஞ்சிய பகுதிகளும் ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள கர்நூல் குகைகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

காலவரிசை

மேல் பழங்கற்காலத்துக்கான சான்றுகள் இந்தியாவின் பல பகுதிகளில் கிடைத்துள்ளன. ஏறத்தாழ இன்றைக்கு முன் 40,000இலிருந்து 10,000 ஆண்டிற்கு உட்பட்ட காலத்தில் மேல் பழங்கற்காலப் பண்பாடு நிலவியிருக்கலாம் எனக் கணிக்கப்படுகிறது.

பரவல்

இம்மக்கள் திறந்தவெளியிலும் குகைகளிலும் வசித்தார்கள். கர்நாடகாவில் உள்ள மெரல்பாவி, ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள கர்நூல் குகைகள், தெலுங்கானாவில் உள்ள கோதாவரிக்காணி, மத்தியப்பிரதேசத்தில் உள்ள சோன் பள்ளத்தாக்கில் உள்ள பாகோர் - 1, பாகோர் - 3, மகாராஷ்டிராவில் உள்ள பாட்னே ஆகியவை இந்தியாவில் மேல்பழங்கற்காலம் நிலவிய இடங்களாகும். சிறு கற்களாலான கருவிகளும் நவீன மனிதர்களுக்கு நெருக்கமான தோற்றத்தைக் கொண்டிருந்த ஹோமினின்களின் புதைபடிவங்களும் இலங்கையில் கிடைத்துள்ளன. மெல்லிய கீறல்கள் மூலம் படங்கள் வரையப்பட்ட தீக்கோழியின் முட்டை ஓடுகளும் சங்கு கொண்டு செய்யப்பட்ட மணிகளும் ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள ஜீவாலாபுரம், மகாராஷ்டிராவில் உள்ள பாட்னே, இலங்கையில் உள்ள பாடடோம்பா - லெனா, ஃபாஹியான் குகை ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தீக்கோழி முட்டை ஓடுகள் : இந்தியாவில் வரலாற்றுக்கு முந்தைய காலப் பண்பாடு நிலவிய இடங்களில் தீக்கோழிகள் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இப்பறவையின் முட்டை ஓடு மணிகள் செய்யப் பயன்படுத்தப்பட்டுள்ளது. பாட்னேயில் கிடைத்த தீக்கோழி முட்டை ஓட்டின் காலம் இன்றைக்கு முன் 25,000 ஆண்டுகள் எனக் கணிக்கப்படுகிறது. பிம்பெட்கா, பாட்னே ஆகிய இடங்களிலும் தீக்கோழி முட்டை ஓடுகள் கிடைத்துள்ளன.



வாழ்க்கை முறைகளும் முக்கியப் பண்புகளும்

மேல் பழங்கற்கால மனிதர்கள் கலை சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபட்டதற்கான சான்றுகளாகச் சில ஓவியங்கள் கிடைத்திருக்கின்றன. மணிகளும் அணிகலன்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கல்லில் வெட்டுக்கருவிகள் செய்யும் தொழிற்கூடங்கள் இக்காலகட்டத்தில் வளர்ச்சி பெற்றன. வரையப்பட்ட விதம் தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் பிம்பெட்காவைச் சேர்ந்த சில பச்சை நிற ஓவியங்கள் மேல் பழங்கற்காலத்தைச் சேர்ந்தவையாகக் கணிக்கப்படுகின்றன.

இடைக்கற்காலப் பண்பாடு (Mesolithic Culture)

இந்தியாவில் இடைக்கற்காலப் பண்பாட்டோடு தொடர்புடைய இடங்கள் ஒரு சில பகுதிகள் நீங்கலாக இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் காணப்படுகின்றன. கடற்கரைப் பகுதி, மலை, மணற்பாங்கான இடம், வடிநீர்ப் பகுதி, வனப்பகுதி, ஏரிப்பகுதி. பாறை மறைவிடம், மலை சார்ந்த பகுதி, கழிமுகப்பகுதி என எந்த வேறுபாடும் இல்லாமல் அனைத்துச் திணைசார் மண்டலங்களிலும் அவை காணப்படுகின்றன.

இந்தியாவில் பயிஸ்ரா (பிகார்), லங்னஜ் (குஜராத்), பாகர் II, சோபனி மண்டோ, சாராய் நகர் ராய், மகாதகா, தம்தமா (இவை அனைத்தும் உத்திரப்பிரதேசத்தில் உள்ளன), சனகனகல்லு (ஆந்திரம்), கிப்பன ஹள்ளி (கர்நாடகம்) ஆகிய இடங்கள் இடைக் கற்காலப் பண்பாட்டோடு தொடர்புடையனவாகும். மேலும் ஆதம்கார், பிம் பெட்கா (மத்தியப் பிரதேசம்) ஆகிய பாறை வாழிடங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

மும்பையின் கடற்கரைப் பகுதிகள், தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தேரி மணல்மேடுகள், விசாகப்பட்டினம் (ஆந்திரப் பிரதேசம்) ஆகிய இடங்களில் நுண்கற்காலச் சான்றுகள் கிடைக்கின்றன.

 

தேரி : தேரிகள் என்பன மணற்குன்றுகளால் உருவாக்கப்படும் கடற்கரைப் பகுதிகளாகும். இம்மண் வகை புத்துயிரூழியின் இரண்டாம் கட்டத்தில் உருவாகியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

 

காலநிலை

பனியுகத்திற்குப் பின்னர், உலகம் வெப்பமடையத் துவங்கியதிலிருந்து, மனிதர்கள் அடிக்கடி இடம் பெயர்பவர்களாகி, பல்வேறு சூழல்களைக் கொண்ட பகுதிகளில் குடியேறினர். பருவகாலச் சுழற்சி முறை ஏற்கெனவே தோன்றிவிட்டது. சில பகுதிகளில் மழை மிக அதிகமாக இருந்தது. மேற்கு ராஜஸ்தானிலுள்ள தித்வானா என்னும் பகுதியில் இன்றைக்கு முன் 10,000-3500க்கு இடைப்பட்ட ஆண்டுகள் நன்னீர் ஏரிகள் இருந்ததாக அறியப்பட்டுள்ளது. இக்காலப் பகுதியைச் சேர்ந்த விலங்குகளின் எலும்புகள், இடைக் கற்காலத்தில் வறண்ட, இலையுதிர் காடுகள் இருந்ததைக் குறிக்கின்றன.

காலவரிசை

உலகளவில் இடைக்கற்காலப் பண்பாட்டின் காலம் இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. சில குறிப்பிட்ட பகுதிகளில் அது வேளாண்மை காலத்திற்கு முன்பானது என்று சொல்லப்படுகிறது. இடைக்கற்காலப் பண்பாடு கிழக்கு மத்தியத் தரைக்கடல் பகுதியான லெவண்ட்டில் பொ..மு. 20,000இலிருந்து 9,500க்குள் நிலவியதாகக் கணிக்கப்படுகிறது. இந்தியாவில் இப்பண்பாடு ஏறத்தாழ பொ..மு. 10,000 இல் தோன்றியது. கேரளாவிலும் தமிழ்நாட்டிலும் இது பொ..மு. 1,000 வரை, அதாவது இரும்புக்காலத்தின் தொடக்கம் வரைக்கும் தொடர்ந்தது. இலங்கையில் நுண் கற்கருவிகள் ஏறத்தாழ கடந்த 28,500 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றின.

பொருளாதாரம்

காட்டு விலங்குகளை வேட்டையாடல், தாவர உணவுகளைச் சேகரித்தல், மீன் பிடித்தல் ஆகியனவே இக்கால மக்களின் முக்கியத் தொழிலாக இருந்தன. இடைக்கற்காலப் பண்பாட்டின் தொடக்க நிலைகளில் வேளாண்மை செய்யப்படவில்லை. ஆனால் இப்பண்பாட்டின் இறுதிப்பகுதியில் மனிதர்கள் விலங்குகளைப் பழக்கப்படுத்தி, புதிய கற்கால வாழ்க்கை முறைக்கு வழிவகுத்தனர். மத்திய இந்தியப் பகுதியில் உள்ள பாறை ஓவியங்களில் வேட்டையாடுதல், கண்ணிவைத்து விலங்குகளைப் பிடித்தல், மீன் பிடித்தல், தாவர உணவுகளைச் சேகரித்தல் போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

கிடைக்கப்பெற்றுள்ள விலங்குகளின் எச்சங்கள், புதைவடிவச் சான்றுகள் ஆகியன மூலம் இக்காலப் பகுதியைச் சேர்ந்த மக்கள் காட்டெருது, எருமை, சதுப்புநில மான், முள்ளம்பன்றி, சாம்பார் மான், ஒருவகை அழகியமான், வராகமான், சிறுகொம்புடைய நீல்கைமான், குள்ள நரி, ஆமை, மீன், காட்டு முயல், உடும்பு ஆகியவற்றை வேட்டையாடினர் என அறிய முடிகிறது. யானை, காண்டா மிருகம் போன்ற விலங்குகளின் எலும்புகளும் கிடைத்துள்ளன. அவர்கள் ஈட்டி, வில் அம்பு, கண்ணிகள் ஆகியவற்றை பயன்படுத்தியுள்ளனர். பிம்பெட்கா என்னுமிடத்திலுள்ள ஓவியம் ஆண்களும் பெண்களும் இணைந்து இது போன்ற விலங்குகளை வேட்டையாடுவதைக் காட்சிப்படுத்துகிறது.

இக்கால மக்கள் நெருப்பைப் பயன்படுத்தினர். உணவை நெருப்பில் சுட்டும் உண்டிருக்கலாம். வெள்ளாடு, செம்மறியாடு, நாய், பன்றி ஆகியவற்றின் எலும்புகள் மத்திய பிரதேசத்திலுள்ள கானிவால், லோத்கேஸ்வர், ரத்தன்பூர், ஆதம்கார், பிம்பெட்கா ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன. கானிவாலில் ஒட்டக எலும்புகளும் கிடைத்துள்ளன.

தற்காலிக வசிப்பிடங்களும் வீடுகளும்

இடம்பெயர்ந்துகொண்டே இருப்பது இடைக்கற்கால மக்களின் முக்கியமான பண்பாக இருந்தது. அவர்கள் உணவுக்காக விலங்குகளையும் தாவரங்களையும் தேடி இடம்பெயர்ந்தார்கள். மக்கள் தற்காலிகமான குடிசைகளை உருவாக்கியதுடன், குகைகளிலும் பாறைக்குடைவுகளிலும் தங்கினார்கள். தாங்குதூணுக்கான குழியுடன் கூடிய வட்ட வடிவக் குடிசைகள், நாணல் பதிக்கப்பட்ட தடங்களுடன் கூடிய சுட்ட மண் திண்டுகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான குகைகளிலும் பாறை மறைவிடங்களிலும் ஓவியங்கள் காணப்படுகின்றன. பாறை ஓவியங்களில் வட்ட வடிவக் குடிசை வரையப்பட்டுள்ளது. தற்காலிகமான குடிசைகள் விரைவில் அழியக்கூடிய பொருள்களால் கட்டப்பட்டன. முட்டை வடிவ வீடுகள், வட்ட வடிவ வீடுகள் (சுவர்கள் பிரம்பால் வேயப்பட்டு, அவற்றின் மீது மண் பூசிய வீடுகளாக இவை இருந்திருக்க வாய்ப்பு உள்ளது) ஆகியவற்றுக்கான அடையாளங்கள் உத்தரப் பிரதேசத்தில் உள்ள சோப்பானி மண்டோ, தம்தமா, ராஜஸ்தானில் உள்ள பாகோர், தில்வாரா, ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இறந்தோரைப் புதைத்தல்

இடைக்கற்கால மக்கள் இறந்தோரைப் புதைத்தனர். இது அவர்களின் நம்பிக்கைகளையும் சக மனிதர்கள் குறித்த சிந்தனைகளையும் நமக்கு உணர்த்துகிறது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள மகாதகா, தம்தமா, சாராய் நகர் ராய் ஆகிய இடங்களில் மனித எலும்புகூடுகள் கிடைத்துள்ளன. ஓர் ஆணும் பெண்ணும் ஒன்றாகப் புதைக்கப்பட்டிருந்ததற்கான அடையாளம் மகாதகாவில் கிடைத்துள்ளது. ஒரு புதைகுழியில் தந்தத்தாலான பதக்கம் காணப்பட்டது.

கலை

கலை என்பது மனித வாழ்க்கையோடு ஒருங்கிணைந்த ஒரு பகுதி. பழங்கால மனிதரின் கலை வெளிப்பாடுகள் குறித்த சான்றுகள் ஐரோப்பாவில் பெருமளவில் கிடைத்தாலும், இந்தியாவில் மிகச் சில இடங்களில் தான் கிடைத்துள்ளன. வடிவியல் வேலைப்பாடுகளுடன் கூடிய படிகக்கல் ராஜஸ்தானில் உள்ள சந்திராவதியில் கிடைத்துள்ளது. எலும்பில் செய்யப்பட்ட பொருள்கள் பிம்பட்காவில் காணப்படுகின்றன. வடிவியல் வேலைப்பாடுகளுடன் கூடிய மனிதப்பல்லும் கிடைத்துள்ளது. மத்தியப்பிரதேசத்திலும் மத்திய இந்தியாவிலும் உள்ள பாறைக்குடைவுகளில் ஓவியங்களைக் காண முடிகிறது. மக்கள் வேட்டையாடுவதிலும் கண்ணி வைத்து விலங்குகளைச் சிக்க வைப்பதிலும் மீன் பிடிப்பதிலும் நடனமாடுவதிலும் ஈடுபடுவதை ஓவியங்கள் சித்தரிக்கின்றன. போபால் அருகேயுள்ள பிம்பட்கா, மத்தியப்பிரதேசத்தில் உள்ள ரய்சன், பச்மார்ஹி, உத்தரப்பிரதேசத்தில் உள்ள தெற்கு மிர்சாபூர் ஆகியவை இத்தகைய சான்றுகள் கிடைக்கும் இடங்களாகும். இரும்பு செறிந்த ஹேமடைட் கல் தேய்க்கப்பட்டதற்கான வழவழப்புத்தன்மையுடன் காணக்கிடைக்கிறது. மக்கள் பூக்களாலும் இலைகளாலும் தங்களை அலங்கரித்துக்கொண்டார்கள்.

Tags : History வரலாறு.
11th History : Chapter 1 : Early India: From the Beginnings to the Indus Civilisation : Pre-historic India History in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது வகுப்பு வரலாறு : அலகு 1 : பண்டைய இந்தியா : தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை : வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய இந்தியா - வரலாறு : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது வகுப்பு வரலாறு : அலகு 1 : பண்டைய இந்தியா : தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை