குடியரசுத்தலைவரின் தகுதி , தேர்தல் , பதவிப் பிரமாணம்பணிகளும் அதிகாரங்களும் - குடியரசுத்தலைவர் | 12th Political Science : Chapter 3 : Executive

   Posted On :  02.04.2022 02:03 am

12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 3 : ஆட்சித்துறை

குடியரசுத்தலைவர்

இந்தியத் தேசத்தின் தலைவராக குடியரசுத்தலைவர் இருக்கிறார். அவர் இந்தியாவின் முதல் குடிமகன் ஆவார். மேலும், தேசிய ஒற்றுமை, ஒருமைப்பாடு, மற்றும் நிலைத்தன்மை சின்னமாக அவர் திகழ்கிறார்.

குடியரசுத்தலைவர்

இந்தியத் தேசத்தின் தலைவராக குடியரசுத்தலைவர் இருக்கிறார். அவர் இந்தியாவின் முதல் குடிமகன் ஆவார். மேலும், தேசிய ஒற்றுமை, ஒருமைப்பாடு, மற்றும் நிலைத்தன்மை சின்னமாக அவர் திகழ்கிறார்.


குடியரசுத்தலைவர் தகுதி மற்றும் தேர்தல் 

உறுப்பு 58;

இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.

35 வயதை பூர்த்தி செய்தவராக இருக்க வேண்டும்.

மக்களவை உறுப்பினராவதற்கான அனைத்து தகுதிகளும் கொண்டிருத்தல் வேண்டும்.

மத்திய மாநில அல்லது உள்ளாட்சி அமைப்புகளிலோ அவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள எந்த ஒரு அமைப்பிலோ ஆதாயம் தரக்கூடிய எந்த பதவியில் இருந்தாலும், அவர் குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவராகிறார்.

மேலும் அரசமைப்பின் 52-வது உறுப்பு குடியரசுத்தலைவர் பதவிக்கான குறைந்தபட்சம் 50 தேர்வுக்குழு வாக்காளர்களால் முன்மொழிவு செய்யப்பட வேண்டும் என்றும், மேலும் வேட்பாளர் தேர்வுக் குழுவின் 50 உறுப்பினர்கள் மூலம் வழிமொழியப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது. மேலும் ஒவ்வொரு வேட்பாளரும் $.15,000/-ஐ இந்திய ரிசர்வ் வங்கியில் வைப்பு தொகையாக கட்ட வேண்டும்.

இந்திய அரசமைப்பின் 52-வது உறுப்பு இந்தியாவிற்கு ஒரு குடியரசுத்தலைவர் இருக்க வேண்டுமென்கிறது. உறுப்புரிமையின் 53-வது உறுப்பு இந்திய ஒன்றியத்தின் ஆட்சி அதிகாரத்தை அவருக்கு அளிப்பதுடன் அவற்றை நேரடியாகவோ மறைமுகமாகவோ செயல்படுத்த வகை செய்கிறது.

பதிவான வாக்குகளில் ஆறில் ஒரு பங்கை ஒரு வேட்பாளர் பெறவில்லையெனில் இந்த தொகை அவருக்கு திருப்பித்தரப்படாது.

இந்தியக் குடியரசுத்தலைவர் மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யப்படுவதில்லை. மாறாக, கீழ்கண்டவர்களை உறுப்பினர்களாக கொண்ட வாக்காளர் குழுவினால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்:

நாடாளுமன்றத்தின் ஈரவைகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள். 

மாநில சட்டசபைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள். 

டெல்லி மற்றும் பாண்டிச்சேரி யூனியன் பிரதேச சட்டமன்றங்களின். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்


செயல்பாடு

-குடியரசுத்தலைவர் தேர்தலில் வாக்களித்த மொத்த வாக்காளர்கள் 10,00,000 பேர் ஆகவும் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய வேட்பாளர்களின் எண்ணிக்கை ஒன்று என்பதாகவும் இருந்தால் தேர்தல் வாக்குகளின் ஒதுக்கீடு எப்படி இருக்கும் என்று கண்டுபிடி.

குடியரசுத்தலைவர் தேர்தல், ஒற்றை மாற்று வாக்கெடுப்பு மற்றும் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் விகிதாசார பிரதிநிதித்துவ முறையில் நடைபெறுகிறது. இந்த முறை வெற்றிகரமான வேட்பாளர் முழுமையான பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெறுகிறார் என்பதை உறுதிப்படுத்துகிறது.



விவாதம்

* நம்மிடம் எழுதப்பட்ட அரசமைப்பு உள்ளது. அதில் ஒவ்வொரு அரசமைப்பு பதவிக்கும் உரிய பொறுப்புகளும் வரையறைகளும் தெளிவாக தரப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுத்தலைவரை தேசத்தின் தலைவராக கொண்ட ஒரு குடியரசில் நாம் உள்ளோம் அதே சமயம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக்கொண்ட மக்களவைக்கு பொறுப்புடைய அமைச்சரவையைக் கொண்ட நாடாளுமன்ற மக்களாட்சியாகவும் உள்ளோம். 

* ஆசிரியர் வகுப்பை இரண்டு குழுவாக பிரிக்கவும். குடியரசுத்தலைவர் மற்றும் பிரதமர் மற்றும் அவருடைய குழுவின் தனித்துவத்தை விவாதத்திற்கு ஏற்பாடு செய்யவும்.

தேர்தல்போது ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஒரு வாக்குச்சீட்டு மட்டுமே தரப்படுகிறது. வாக்காளர், வாக்களிக்கும் வேட்பாளர்களின் பெயர்களுக்கு எதிராக 1,2,3,4 போன்றவற்றைக் குறிப்பிடுவதன் மூலம் தனது விருப்பங்களை சுட்டிக்காட்ட வேண்டும். வாக்காளர்கள், வேட்பாளர்களை தமது விருப்பத்திற்குகேற்ப 1,2,3,4 என வரிசைப்படி முன்னுரிமைகளைக் குறிக்கிறார்கள். முதல் கட்டத்தில், முதல் விருப்ப வாக்குகள் கணக்கிடப்படுகின்றன. ஒரு வேட்பாளர் இந்த கட்டத்தில் தேவையான ஒதுக்கீட்டைப் பெற்றால், அவர் தேர்ந்தெடுக்கப்படுவர். இல்லையெனில், வாக்குகளை மாற்றுவதற்கான செயல்முறை மேற்கொள்ளப்படுகிறது. வாக்கெடுப்பில் முதல் விருப்பவாக்கில் குறைந்த வாக்குகள் பெற்ற வேட்பாளரை நீக்கிவிட்டு அவர்களின் இரண்டாம் விருப்ப வாக்குகள் மற்றவர்களுக்கு மாற்றப்படுகிறது. ஒரு வேட்பாளருக்கு தேவைப்படும் வாக்குகள் கிடைக்கும் வரை இந்தச் செயல்முறை தொடர்கிறது.


குடியரசுத்தவைரின் பதவிப் பிரமாணம்

குடியரசுத்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ஒருவர் கீழ்க்கண்ட உறுதி மொழிகளைப் பதவி பிரமாணத்தின்போது அவர் ஏற்கிறார்.

பதவியில் உண்மையுடன் பணியாற்றுவது.

அரசமைப்பு மற்றும் சட்டத்தைப் பாதுகாப்பது, 

இந்தியாவின் மக்கள் சேவை மற்றும் நல்வாழ்விற்காக தன்னை அர்ப்பணிப்பது ஆகியவற்றை உறுதிமொழியாக ஏற்கிறார்.

இந்தியாவின் தலைமை நீதிபதி குடியரசுத்தலைவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். தலைமை நீதிபதி இல்லாதபோது உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி அப்பதவிப் பிரமாணத்தை செய்து வைக்கிறார்.



குடியரத்தலைவருக்கான வசதிகள் அல்லது சலுகைகள்

* அவரது அதிகாரப்பூர்வ இல்லமான குடியரசுத்தலைவர் மாளிகையை (ராஷ்டிரபதி பவன் - டெல்லி) வாடகையின்றி பயன்படுத்த அவருக்கு உரிமையுண்டு.

* நாடாளுமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்ட அனைத்து ஊதியம், படிகள், தனி உரிமைகளையும் அனுபவிக்க அவருக்கு உரிமையுண்டு. 

* குடியரசுத்தலைவருக்கு மேலும் சில சலுகைகளும் விதி விலக்குகளும் தரப்பட்டுள்ளன.அவர்தனது அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளுக்கு நீதிமன்ற நடவடிக்கைகளினின்று தனிப்பட்ட விலக்கு பெறுகிறார். அவரது பதவி காலத்தின் போது, அவருக்கு அனைத்து குற்றவியல் நடவடிக்கைகளிலிருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறது.


பதவிக்காலம், பதவி நீக்கம், பதவியை நிரப்புவது பற்றிய விதிமுறைகள்

பதவிக்காலம் 

குடியரசுத்தலைவர் தனது அலுவலகத்தில் நுழைந்த தேதி முதல் ஐந்து வருட காலத்திற்கு குடியரசுத்தலைவராக பதவி வகிப்பார் என்று இந்திய அரசமைப்பு உறுப்பு 56 கூறுகிறது. எனினும் குடியரசுத் துணைத்தலைவரிடம் பதவி விலகல் கடிதத்தை கொடுப்பதன் மூலம் எந்த நேரத்திலும் தனது பொறுப்பிலிருந்து விலக முடியும். நாடாளுமன்றத்தால் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றுவதன் மூலமும், இதைத்தவிர குற்றம் சாட்டப்படுவதன் மூலமும் அவரை பதவி நீக்கம் செய்ய முடியும். குடியரசுத்தலைவராக இருப்பவர் மீண்டும் அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட தகுதியுடையவராவார்.

தமது பதவியை குடியரசுத்தலைவர் ஐந்து வருட காலத்திற்கு அல்லது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுத்தலைவர் பதவி ஏற்கும் வரை பொறுப்பில் தொடரலாம்.

பதவி நீக்கம்

அரசமைப்பின் 61-வது உறுப்பு, குடியரசுத்தலைவர் மீது குற்றம் சாட்டி கண்டனத் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு ஒரு விரிவான நடைமுறைகளை தந்துள்ளது.

குடியரசுத்தலைவர் பதவி நீக்கம் செய்யப்படுவதற்கு முதலாவதாக, நாடாளுமன்றத்தின் எந்தவொரு அவையிலும், அதன் மொத்த உறுப்பினர்களில் நான்கில் ஒரு பகுதியினரால் கையொப்பமிடப்பட்ட தீர்மானத்தின் மூலம் ஒரு குற்றச்சாட்டை முன்வைக்க வேண்டும். குறைந்தபட்சம் 14 நாட்கள் முன்கூட்டியே அறிவிப்பு வழங்க வேண்டும். அத்தகைய தீர்மானம் ஒரு சபையால் விவாதிக்கப்படும் போது, அவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கிற்குக் குறையாத பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட வேண்டும். அது மற்ற அவையால் பின்னர் விசாரணை செய்யப்பட வேண்டும்.

விசாரணையின் பின்னர், அதன் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினரின் ஒப்புதலுடன் அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அந்த நாள் முதல் குடியரசுத்தலைவர் பதவியில் இருந்து பதவி நீக்கம் செய்யப்படுவார். 

பதவியை நிரப்புவது

குடியரசுத்தலைவரின் பதவி கீழ்க்கண்ட வழிகளில் காலியாகலாம்.

1. ஐந்து ஆண்டுகளில் பதவிக் காலம் முடிவடைந்த நிலையில்

2. அவரது பதவி விலகல் மூலம்

3. நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்படுவதன் மூலம்

4. அவரது மரணத்தின் மூலம்

5. அவர் தகுதியை இழந்தால் அல்லது அவரது தேர்தல் செல்லாது என அறிவிக்கப்பட்டால்

நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் அல்லது இறப்பு ஆகியவற்றால் குடியரசுத்தலைவர் பதவி காலியாகும்போது, ஆறு மாதங்களுக்குள் புதிய குடியரசுத்தலைவரைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தப்படவேண்டும். இடைப்பட்ட காலத்தில் குடியரசுத் துணைத்தலைவர் குடியரசுத்தலைவராக செயல்படுவார். மேலும், பதவியில் இருக்கும் குடியரசுத்தலைவர், நோய், இயலாமை அல்லது வேறு காரணங்களால் தமது பதவிக்குரிய செயல்களை செய்ய முடியாத நிலையில் குடியரசுத்தலைவர் திரும்பவும் தன் பொறுப்பினை செயல்படுத்தும் வரை குடியரசுத் துணைத்தலைவர் அவரது பணிகளை மேற்கொள்வார்.



குடியரசுத் தலைவரின் பணிகளும் அதிகாரங்களும்

குடியரசுத்தலைவரின் பணிகளும் அதிகாரங்களும் பரந்துபட்டவை நாடாளுமன்றத்தைக் கூட்டுவதும், உரையாற்றுவதும், ஒத்திவைப்பதும் அவரே. வெவ்வேறு துறைகளில் முன்னணியிலுள்ள 12 உறுப்பினர்களை மாநிலங்களவைக்கும் இரண்டு ஆங்கிலோ - இந்தியப் பிரதிநிதிகளை மக்களவைக்கும் நியமனம் செய்கிறார். நாடாளுமன்றத்திலிருந்து வரும் நிதி சாராத முன்வரைவுகளை மீண்டும் மறுபரிசீலனை செய்வதற்காக திருப்பி அனுப்பவும் ரத்து செய்யவும் அவருக்கு அதிகாரமுள்ளது. நாடாளுமன்றத்தின் முன்வரைவுக்கு ஒப்புதல் பெறும் பொருட்டு ஈரவைகளின் கூட்டுக் கூட்டத்தை அழைக்கவும் அவருக்கு உரிமை உண்டு. அவரால் ஆறு மாத காலத்து மிகாதக் அவசரச் சட்டத்தை அறிவிக்கவும் முடியும். மாநிலச் சட்டங்களை ரத்து செய்யவும் அவருக்கு அதிகாரமுள்ளது. பிரதமர் தலைமையிலான அமைச்சரவையை நியமிக்கிறார். அத்துடன் அத்தகைய அமைச்சரவை நாடாளுமன்றத்தின் ஆதரவைப் பெற்றதாக இருப்பதை உறுதி செய்கிறார் குடியரசுத்தலைவர் மட்டுமே அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். மக்களவையின் ஆதரவை இழந்து விடுகின்றபோது அமைச்சரவையை கலைக்கும் அதிகாரம் பெற்றுள்ளார். அரசமைப்பின்படியான பல்வேறு உறுப்புகளுக்கு, குறிப்பாக நீதித்துறை, ஆயுதப்படைகள், தூதரகக் குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிக்கவும் அதிகாரம் பெற்றுள்ளார். நெருக்கடி (அவசர நிலை) நிலைக் காலத்தில் குடியரசுத்தலைவர் எல்லையற்ற அதிகாரம் பெற்றுள்ளார். எந்தச் சட்டத்தையும் தற்காலிகமாக முடக்கும் அதிகாரம் பெற்றுள்ளார். குறிப்பிட்ட காலத்திற்கு அமைச்சரவைகளையும், சட்ட மன்றங்களையும் கலைத்துவிடவும், மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்திடவும் அதிகாரம் பெற்றுள்ளார்.

குடியரசுத்தலைவர் இல்லாதபோது அவரது பதவியை தற்காலிகமாக குடியரசுத் துணைத்தலைவர் அல்லது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதி வகிப்பர். அப்போது அவர்கள் நாடாளுமன்றத்தினால் தீர்மானிக்கப்பட்ட குடியரசுத்தலைவருக்கான சலுகைகள், ஊதியம் போன்ற அனைத்து சலுகைகளையும் உரிமைகளையும் குடியரசுத்தலைவரை போலவே அனுபவிப்பதற்கு அதிகாரமும் உரிமையும் படைத்தவராக இருப்பர்.

உண்மை

இந்திய அரசமைப்பின் XVIII பாகத்தில் இந்தியக் குடியரசுத்தலைவரின் நெருக்கடிகால அதிகாரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

விளக்கப்படம் தயாரித்தல்

1947-முதல் 2019 வரையிலான இந்திய பிரதமர்களை பட்டியலிடவும். ஒரு விளக்கப்படத்தில் அவர்களின் நிழற்படங்களை ஒட்டவும்.



செயல்பாடு

1. குடியரசுத்தலைவரின் மறுதலிப்பு அதிகாரத்தைப் பற்றி விவாதிக்கவும். 

2. முழுமையான மறுதலிப்பு, தற்காலிக மறுதலிப்பு, முடக்கும் (பாக்கட்) மறுதலிப்பு, தகுதிச்சார் மறுதலிப்பு ஆகியவற்றை அறிந்து கொள். 

3. இன்றுவரையிலான குடியரசுத்தலைவர்களது பெயர்கள், பதவிகாலங்களை பட்டியலிடு. அவர்களது படங்களை அட்டவணைப்படுத்து.


செயல்பாடு

கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில், தரப்பட்டுள்ள எண் வரிசைப்படி குடியரசுத்தலைவரின் அதிகாரங்களை அடையாளம் காண்க: (ஆட்சித்துறை சட்டத்துறை / நீதித்துறை /நிதித்துறை/ நெருக்கடிக்கால அதிகாரங்கள்





Tags : Qualification, Election, Functions, Powers of the President குடியரசுத்தலைவரின் தகுதி , தேர்தல் , பதவிப் பிரமாணம்பணிகளும் அதிகாரங்களும்.
12th Political Science : Chapter 3 : Executive : President Qualification, Election, Functions, Powers of the President in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 3 : ஆட்சித்துறை : குடியரசுத்தலைவர் - குடியரசுத்தலைவரின் தகுதி , தேர்தல் , பதவிப் பிரமாணம்பணிகளும் அதிகாரங்களும் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 3 : ஆட்சித்துறை