Home | 10 ஆம் வகுப்பு | 10வது தமிழ் | உரைநடை: சிற்றகல் ஒளி (தன்வரலாறு)

ம.பொ.சிவஞானம் | இயல் 7 | 10 ஆம் வகுப்பு தமிழ் - உரைநடை: சிற்றகல் ஒளி (தன்வரலாறு) | 10th Tamil : Chapter 7 : Vithai nel

   Posted On :  22.07.2022 02:34 am

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : விதைநெல்

உரைநடை: சிற்றகல் ஒளி (தன்வரலாறு)

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : விதைநெல் : உரைநடை: சிற்றகல் ஒளி (தன்வரலாறு) - ம.பொ.சிவஞானம் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

நாடு

உரைநடை உலகம்

சிற்றகல் ஒளி

- ம.பொ.சிவஞானம்



நுழையும்முன்

கதை கேட்கும் வழக்கம் சிறிய வயது முதல் அனைவருக்கும் இருக்கிறது. கேட்பது குறைந்து போய்க் கதை படிப்பது அதன் அடுத்த படிநிலை. அதுவே ஒருவரைப் படிப்பாளியாகவும் படைப்பாளியாகவும் பக்குவப்படுத்துகிறது. அப்படியான ஒரு படைப்பாளி தன்னை முன்வைத்துத் தன் நாட்டின் வரலாற்றைக் கூறும்நிலை சிலருக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது. வரலாற்றின் போக்கினை மாற்றி வடிவமைத்தவர்களின் வாழ்க்கைக் கதையைத் தன் வரலாறாகப் படிப்பது, நம்மையும் அந்த வரலாற்றுப் பாத்திரமாக உணரவைக்கும்!


இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் 1906 ஆம் ஆண்டு, மிகவும் சிறப்புடைய ஆண்டாகக் கருதப்படுகிறது. அந்த ஆண்டில்தான் காந்தியடிகள் சத்தியாக்கிரகம் என்ற அறப்போர் முறையைத் தென்னாப்பிரிக்காவில் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டைத் தனித்து நோக்கினாலும் வரலாற்றுச் சிறப்பிற்குரிய நிகழ்வுகள் பல அவ்வாண்டில் நடைபெற்றன. வ. உ. சிதம்பரனார் ஆங்கிலேயர்களுக்கு எதிராகச் சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார். இத்தகைய சிறப்புள்ள ஆண்டில் ஜூன் 26ஆம் நாள், சென்னை ஆயிரம் விளக்கு வட்டம் சால்வன்குப்பம் என்னும் பகுதியில் நான் பிறந்தேன். நான் பிறந்த வட்டத்துக்கு ஆயிரம் விளக்கு எனப் பெயர் இருப்பினும் என்னைப் பெற்றெடுத்த குடும்பம் வறுமை என்னும் இருள் சூழ்ந்ததுதான். என் தந்தை யார் பெயர் பொன்னுசாமி. அன்னையின் பெயர் சிவகாமி. பெற்றோர் எனக்கு இட்ட பெயர் ஞானப்பிரகாசம். ஆனால் சரபையர் என்ற முதியவர் ஒருவர் என்னுடைய பெயரை மாற்றி 'சிவஞானி' என்றே அழைத்தார். பின்னாளில் அவர் எனக்கிட்டு அழைத்த சிவஞானி என்னும் பெயரே சிறிது திருத்தத்துடன் சிவஞானம் என்று நிலைபெற்றது.

 

வறுமையால் இழந்த கல்வி

நான் பள்ளியில், மூன்றாம் வகுப்பில் நுழைந்த ஏழாம் நாளில், பகல் நேரத்தில் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டுத் திரும்பவும் பள்ளிக்குப் போனேன். காலையிலேயே பாடப்புத்தகங்களோடு வராததற்காக ஆசிரியர் என்னைக் கண்டித்தார். பிற்பகலில் புத்தகங்களைக் கட்டாயம் கொண்டுவர வேண்டுமென்று கட்டளையிட்டிருந்தார். கையில் புத்தகமின்றி இருந்த என்னைக் கண்ட ஆசிரியர் பள்ளியிலிருந்து விரட்டிவிட்டார். இது எனக்குப் பெருத்த அவமானமாக இருந்ததால் அழுதவண்ணம் வீட்டுக்கு வந்தேன்.

நான் அழுவதற்கான காரணத்தை அறிந்ததும், என் தந்தை என்னைக் கையோடு அழைத்துக்கொண்டு வகுப்பறைக்குள் நுழைந்தார். என்னை நல்ல வெயில் நேரத்தில் வீட்டிற்கு விரட்டியதற்காக, ஆசிரியரை என் தந்தையார் வாயார வைதார். அன்றோடு என் கல்வி முற்றுப் பெற்றது. மூன்றாம் வகுப்பிற்கு அந்த நாளில் தேவைப்பட்டவை ஆங்கிலம் - தமிழ் மொழிப் பாடப்புத்தகங்கள் தாம். இவற்றைக் கூட வாங்கிக்கொடுக்க என் குடும்பத்தின் வறுமை இடம் தரவில்லை.

 

செவிச்செல்வம் பெற்றேன்

அன்னையார் இளமையிலே எனக்குப் பயிற்றுவித்த பாக்கள் எனது இலக்கியப் பயிற்சிக்கான பாலபாடங்களாக அமைந்தன. அல்லி அரசாணி மாலை, பவளக்கொடி மாலை ஆகிய அம்மானைப் பாடல்களைப் பாடுவார். அந்த நேரத்தில் என்னையும் சிறிது நேரம் அந்த நூல்களைப் படிக்க வைப்பார். அதனால், சந்த நயத்தோடும் எதுகை மோனையோடும் உள்ள அம்மானைப் பாடல்களை அடிக்கடி பாடிப்பாடிப் பிள்ளைப் பருவத்திலேயே இலக்கிய அறிவை வளர்த்து வந்தேன். சித்தர் பாடல்களை நானாகவே விரும்பிப் படித்து மனனம் செய்வேன்.

சொற்பொழிவுகளைக் கேட்பதன் மூலமாகவும் நான் இலக்கிய அறிவு பெற்றேன். அப்போது அவர்கள் வெளியிடும் சிறந்த கருத்துகளை ஏடுகளில் குறித்து வைத்துக் கொள்வேன். ஒருவன் அறிவு விளக்கம் பெறுவதற்கு இரண்டு வழிகள் உள. ஒன்று கல்வி; மற்றொன்று கேள்வி. யான் முறையாக ஏட்டுக்கல்வி பெற இயலாமல் போனதால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யக் கேள்வி ஞானத்தைப் பெறுவதிலே மிகுந்த ஆர்வம் காட்டினேன். எனது கேள்வி ஞானத்தைப் பெருக்கிய பெருமையிலே திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகளுக்கே மிகுந்த பங்குண்டு.

 

புத்தகப்பித்தன்

எனக்கு உலகியல் அறிவு தோன்றிய நாள் தொட்டு இயன்றவரை தாய்மொழியிலேனும் நல்ல புலமை பெற்றிட வேண்டும் என்று விரும்பி, அதற்காக இடைவிடாது முயன்று வந்திருக்கிறேன். சுருங்கச்சொன்னால், என் அறியாமையுடன் கடும்போர் நடத்தியிருக்கிறேன்.

நூல் வாங்குவதற்குப் போதிய பணமில்லாத குறையால் பழைய புத்தகங்கள் விற்கும் கடைகளுக்குச் சென்று, எனக்கு விருப்பமான புத்தகங்களை, மிக மிகக் குறைந்த விலைக்கு வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். உணவுக்காக வைத்திருக்கும் பணத்தில் புத்தகங்களை வாங்கிவிட்டு, பல வேளைகளில் பட்டினி கிடந்திருக்கிறேன். குறைந்த விலைக்கு நல்ல நூலொன்று கிடைத்து விட்டால் பேரானந்தம் அடைவேன். என் வாழ்நாளில் நானாக முயன்று சேர்த்து வைத்துள்ள சொத்துகள் என்னிடமுள்ள பல்லாயிரக்கணக்கான நூல்களைத் தவிர வேறில்லை என்று உறுதியாகக் கூறுவேன்.

 

பேராயக் கட்சி (காங்கிரஸ் கட்சி)

1931இல் காந்தி - இர்வின் ஒப்பந்தக் காலத்திலே நாடு முழுவதிலுமிருந்த பேராயக் கட்சிக்காரர்கள் ஆக்கவழிப்பட்ட வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். அந்நியத் துணிக்கடை மறியல், காந்தி - இர்வின் ஒப்பந்தப்படி அனுமதிக்கப்பட வில்லை. ஆகவே தீண்டாமை விலக்கு, கதர் விற்பனை ஆகியவற்றிலே பேராயக் கட்சிக்காரர்களை ஈடுபடுத்தியது கட்சித்தலைமை. பேராயக் கட்சியால் நடத்தப்பட்ட ஊர்வலங்களிலும் கதர் விற்பனையிலும் தவறாமல் கலந்துகொள்வேன்.

 

ஆறுமாதக் கடுங்காவல்

30.09.1932இல் 'தமிழா! துள்ளி எழு' என்னும் தலைப்புடைய துண்டறிக்கை ஒன்றைக் கடற்கரையில் குழுமியிருந்த மக்களிடையே வழங்கியதற்காக, நான் சிறையிலிடப்பட்டேன். பழங்காலத்திலே பாண்டியன் ஆண்ட பெருமையைக் கூறி, சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி, சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி, நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன். அவற்றை நானும் வேறு சில தோழர்களும் சேர்ந்து நூற்றுக்கணக்கான பிரதிகளைக் கையாலேயே எழுதினோம். எதிர்பார்த்தபடியே காவலர்கள் கைது செய்தனர். வழக்குத் தொடரப்பட்டு மூன்று மாதக் கடுங்காவல் தண்டனையும் 300 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. கட்டத் தவறினால் மேலும் மூன்று மாதக் கடுங்காவல். நான் ஆறுமாதமும் கடுங்காவலை அனுபவித்தேன்.

சிறையில் வேளாவேளைக்கு எப்படியோ எனக்குச் சோறு கிடைத்து வந்தது. என்னளவில் தொடர்ந்து ஆறுமாத காலத்திற்கு வாழ்க்கைப் போராட்டத்திலிருந்து விடுதலை பெற்றுவிட்டேன். 'சி' வகுப்புச் சோறுதான் என்றாலும், அடிக்கடி பட்டினியைச் சந்தித்தவனுக்கு அதுவே அமுதந்தானே! ஆனால், என் குடும்பத்தின் அவல நிலை நினைவுக்கு வந்தபோதெல்லாம் சிறையில் தரப்பட்ட உணவை மனநிறைவோடு உண்ண முடியாதவனானேன்.

1942 ஆகஸ்டு 8ஆம் நாள், இந்திய வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கத்தக்க புனித நாளாகும். அன்றுதான் 'இந்தியாவை விட்டு வெள்ளையனே வெளியேறு' என்ற தீர்மானத்தைப் பம்பாயில் கூடிய அகில இந்திய பேராயக்கட்சி ஒரு மனதாக நிறைவேற்றியது. தேசம் முழுவதுமே அன்று புத்துயிர் பெற்றது. நாடெங்கும் தலைவர்கள் கைதான நிலையில் நானும் ஆகஸ்டு 13ஆம் நாள் வேலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டேன். காமராசர், தீரர் சத்தியமூர்த்தி, பிரகாசம் உட்பட, தென்னகத்தின் முன்னணித் தலைவர்கள் பலரை அங்கு நான் கண்டேன். சில நாள்களுக்குப் பின் அங்கிருந்து அமராவதிச் சிறைக்கு மாற்றினர். சிறைச்சாலையில் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தின் மேற்கூரை துத்தநாகத் தகடுகளால் வேயப்பட்டிருந்தது. கோடைக்காலத்தில் 120 பாகை அளவில் வெயில் காயக்கூடிய பகுதியில் மின்சார விசிறிகூட இல்லாமல் எங்களுடைய நிலை மிகவும் இரங்கத்தக்கதாக இருந்தது.

 

'தமிழகம்' பற்றிய கனவு

1947, ஆகஸ்டு பதினைந்தாம் நாளன்று சென்னை மாநகரில் விடுதலை விழாக் கொண்டாடி முடிந்ததும் மறுநாள் காலை நாங்கள் ஒரு குழுவாக வடக்கெல்லைக்குச் சென்றோம். இதுவே வடக்கெல்லை மீட்சிக்கான முதல் முயற்சியாக அமைந்தது. ஆசிரியர் மங்கலங்கிழார் என்ற சுமார் 55 வயதுடைய பெரியாரின் அழைப்பின் மீதே நாங்கள் வடக்கெல்லைக்குச் சென்றோம். அவர் சிறந்த தமிழறிஞர். இந்திய விடுதலைக்குப் பிறகு மாநிலங்களை மொழிவாரியாகப் பிரித்தனர். அப்போது, ஆந்திரத் தலைவர்கள் சித்தூர் மாவட்டம் முழுவதையும் புதிதாக அமையவிருக்கும் ஆந்திர மாநிலத்துடன் இணைக்க விரும்பினர். அச்சூழலில் வடக்கெல்லைத் தமிழ்மக்களை ஒருங்கிணைத்துத் தமிழுணர்வு கொள்ளச் செய்தவர் தமிழாசான் மங்கலங்கிழார். அவருடன் இணைந்து, தமிழரசுக் கழகம் சென்னையிலும் திருத்தணியிலும் தமிழர் மாநாடு நடத்தியது. சித்தூர், புத்தூர், திருத்தணி ஆகிய இடங்களிலும் வடக்கெல்லைப் போராட்டத்தைத் தொடங்கியது. போராட்டத்தில் ஈடுபட்ட நான், மங்கலங்கிழார், விநாயகம், ஈ.எஸ். தியாகராஜன், ரஷீத் என ஏராளமானோர் சிறைப்பட்டோம். போராட்டத்தில் ஈடுபட்டு இராஜமுந்திரி சிறையிலிருந்த திருவாலங்காடு கோவிந்தராசன், பழநி சிறையிலிருந்த மாணிக்கம் ஆகிய இருவரும் சிறையிலேயே உயிர் துறந்தனர்.

சர்தார் கே.எம். பணிக்கர் தலைமையில் மத்திய அரசால் அமைக்கப்பட்ட மொழிவாரி ஆணையம், சித்தூர் மாவட்டம் முழுவதையும் ஆந்திராவிற்குக் கொடுத்துவிட்டது. அதனை எங்களால் ஏற்க முடியவில்லை. மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும் என்று முழங்கினோம். மீண்டும் பெரும் போராட்டம் தொடங்கியது. அதன் விளைவாக படாஸ்கர் ஆணையம் அமைக்கப்பட்டு, திருத்தணி வரையுள்ள தமிழ் நிலங்கள் மீட்கப்பட்டன.

 

தெரிந்து தெளிவோம்

நான் சிலப்பதிகாரக் காப்பியத்தை மக்களிடம் கொண்டுசெல்ல விரும்பியதற்குக் காரணமுண்டு; திருக்குறளையோ, கம்பராமாயணத்தையோ விரும்பாதவனல்லன்; ஆயினும் இந்திய தேசிய ஒருமைப்பாட்டிற்குக் கேடில்லாத வகையில், தமிழினத்தை ஒன்றுபடுத்த எடுத்துக்கொண்ட முயற்சிக்குப் பயன்படக்கூடிய ஓர் இலக்கியம் தமிழில் உண்டென்றால், அது சிலப்பதிகாரத்தைத் தவிர வேறில்லையென்று உறுதியாகக் கூறுவேன். இளங்கோ தந்த சிலம்பு, தமிழினத்தின் பொதுச்சொத்து. எனவேதான் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் சிலப்பதிகார மாநாடுகள் நடத்தினோம்.

சிலம்புச் செல்வர் ம.பொ.சி

 

சென்னையை மீட்டோம்

ஆந்திர மாநிலம் பிரியும் போது சென்னைதான் அதன் தலை நகராக இருக்க வேண்டும் என்று ஆந்திரத் தலைவர்கள் கருதினர். அந்நாள் முதல்வர் இராஜாஜிக்கு நிலைமையின் தீவிரத்தை உணர்த்திய போது, தலைநகர் காக்கத் தன் முதலமைச்சர் பதவியைத் துறக்கவும் அவர் முன்வந்தார். சென்னை மாகாணத்திலிருந்து பிரித்து ஆந்திரம் அமைவதற்காக ஏற்படுத்தப்பட்டிருந்த நீதிபதி வாஞ்சு தலைமையிலான ஒரு நபர் ஆணையம், ஆந்திரத்தின் தலைநகராகச் சென்னை இருக்க வேண்டும் என்ற இடைக்கால ஏற்பாட்டினைப் பரிந்துரைத்திருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற கருத்துகள் நிலவின.

இதையொட்டி, மாநகராட்சியின் சிறப்புக் கூட்ட மொன்றை அப்போதைய மாநகரத் தந்தை செங்கல்வராயன் தலைமையில் கூட்டி, சென்னை பற்றிய தீர்மானமொன்றை முன்மொழிந்து, "தலையைக் கொடுத்தேனும் தலை நகரைக் காப்போம்" என்று முழங்கினேன். தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டமை, நடுவணரசை அசைத்தது. கடைசியாக, 25.03.1953 அன்று நாடாளுமன்றத்தில் பிரதமர் நேரு நடுவணரசின் சார்பில் அதிகாரப்பூர்வமான உறுதிமொழியொன்றை வெளியிட்டார். அதன்படி ஆந்திர அரசின் தலைநகரம் ஆந்திர நாட்டின் எல்லைக்குள்ளேயே அமையும் என்று உறுதியளிக்கப்பட்டது. சென்னை தமிழருக்கே என்பதும் உறுதியானது.

 

தெற்கெல்லைப் போராட்டம்

தாய்த்தமிழக மக்களில் பலர் தெற்கெல்லைக் கிளர்ச்சியோடு எனக்குள்ள தொடர்பை அறிய மாட்டார்கள். நான் முதன் முதலில் ஈடுபட்டது தெற்கெல்லைக் கிளர்ச்சியில்தான். 1946 அக்டோபர் 25இல் நாகர்கோயில் நகரின் ஒரு பகுதியான வடிவீசுவரத்தில் வடிவை வாலிபர் சங்கத்தின் ஆண்டு விழாவில் பேசினேன். அதுதான் தெற்கெல்லைக் கிளர்ச்சி பற்றிய எனது முதல் பேச்சு. அந்நாளில் திருவிதாங்கூர் சமஸ்தானம் தனி அரசாக இருந்தது.

1953-54ஆம் ஆண்டுகளில் தெற்கெல்லைப் பகுதிகளைக் கேரள (திருவிதாங்கூர்) முடியாட்சியிலிருந்து மீட்கவும் போராடினோம். தமிழக வடக்கு - தெற்கு எல்லைக் கிளர்ச்சிகளைத் தமிழகம் தழுவிய அளவில் தொடங்கிவைத்தது தமிழரசுக் கழகம்தான் என்றாலும் அதனை நடத்துகின்ற பொறுப்பை எல்லைப்பகுதி மக்களிடமே விட்டு வைத்திருந்தேன். அவர்களுள் பி.எஸ். மணி, ம. சங்கரலிங்கம், நாஞ்சில் மணிவர்மன், பி.ஜே. பொன்னையா ஆகியோர் முதன்மையானவர்கள். தெற்கெல்லைக் கிளர்ச்சியில் திருவிதாங்கூர் ஆட்சி நடத்திய துப்பாக்கிச் சூடு காரணமாக உயிர்நீத்த தமிழரசுக் கழகத் தோழர்களான தேவசகாயம், செல்லையா ஆகிய இருவரையும் நாம் மறந்துவிடக் கூடாது. நதானியல், தாணுலிங்கம், காந்திராமன் போன்ற முதியவர்களும் என்பால் நம்பிக்கை வைத்திருந்தனர். இயற்கையாகவே போர்க்குணம் கொண்ட நேசமணி, தென் திருவிதாங்கூரில் மிகுந்த செல்வாக்குடையவர். அவருடைய வருகைக்குப் பிறகு போராட்டம் மேலும் வலுப்பெற்றது.

மார்ஷல் ஏ. நேசமணி

இளம் வயதிலேயே சமூக விடுதலைக்காகப் போராடியவர்; வழக்கறிஞர். நாகர்கோவில் நகர்மன்றத் தலைவராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். குமரி மாவட்டப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர்; இதனால் மார்ஷல் நேசமணி என்று அழைக்கப்பட்டார். 1956 நவம்பர் 1ஆம் நாள் கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்து, தமிழகத்தின் தென் எல்லையாக மாறியது. இவருடைய நினைவைப் போற்றும் வகையில் தமிழக அரசு இவருக்கு நாகர்கோவிலில் சிலையோடு மணிமண்டபமும் அமைத்துள்ளது.

திருவிதாங்கூர் ஆட்சி அகன்று, கேரள மாநிலம் உருவானது. அப்போது தமிழர்கள் மிகுதியாக வாழக்கூடிய தேவிகுளம், பீர்மேடு, தோவாளை, அகத்தீசுவரம், கல்குளம், விளவங்கோடு, நாகர்கோவில் ஆகிய பகுதிகள் தமிழகத்தோடு சேர வேண்டும் என்று தமிழரசுக் கழகம் போராட்டத்தைத் தொடங்கியது. ஆனால் மேற்சொன்ன பகுதிகளோடு தமிழகத்திலிருந்த கோவை மாவட்டத்தின் மேற்குப்பகுதி, நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர், உதகமண்டலம் ஆகியவற்றையும் பிரித்தெடுத்துக் கேரளத்துடன் இணைக்க வேண்டுமென்று கேரளத்தவர், பசல் அலி ஆணையத்திடம் விண்ணப்பித்தனர். பசல் அலி ஆணையம் நடுவண் அரசுக்குத் தந்த பரிந்துரை 1955 அக்டோபர் 10ஆம் நாள் வெளியானது. அந்தப் பரிந்துரையில், மாநிலங்களை மொழிவாரியாகப் பிரித்து அமைக்கும் கொள்கை ஒப்புக்கொள்ளப்பட்டதோடு சென்னை மாநிலத்தில் உள்ள மலபார் மாவட்டத்தைக் கேரளத்தோடும் திருவிதாங்கூர் - கொச்சி இராஜ்யத்திலிருந்த கல்குளம், விளவங்கோடு, தோவாளை, அகத்தீசுவரம், செங்கோட்டை ஆகிய பகுதிகள் தமிழ்நாட்டோடும் இணைய வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது. தேவிகுளம், பீர்மேடு நம் கைவிட்டுப் போயின.

புறநானூற்றிலும் சிலப்பதிகாரத்திலும் தமிழகத்தின் வடக்கெல்லை வேங்கட மலையாகவும் தெற்கெல்லை குமரிமுனையாகவும் கூறப்படுவதனைப் படித்தபோது எனது நெஞ்சம் இறும்பூது எய்தியது. மலையும் கடலும் ஒரு நாட்டின் இயற்கை எல்லைகளாக அமைவதென்பது அந்த நாட்டின் தவப்பயனாகும். அந்தத் தெய்வீக எல்லைகளை ஓரளவேனும் தமிழகம் திரும்பப் பெற்றது என்பதே என் வாழ்நாள் மகிழ்ச்சியாகும்.

 

எத்திசையும் புகழ் மணக்க......

கடல் கடந்த தமிழ் வணிகம்

ஆஸ்டிரியா நாட்டுத் தலைநகரமான வியன்னாவில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தில் பேபிரஸ் தாளில் எழுதப்பட்ட அரிய கையெழுத்துச் சுவடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இச்சுவடி சேர நாட்டுத் துறைமுகமான முசிறியில் வாழ்ந்த தமிழ் வணிகருக்கும் எகிப்து நாட்டின் அலெக்ஸாண்டிரியா துறைமுகத்தில் வாழ்ந்த கிரேக்க வணிகருக்கும் இடையிலான வணிக ஒப்பந்தம். இது கி.பி. 2ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது.

 

நூல் வெளி

ம.பொ.சிவஞானத்தின் 'எனது போராட்டம்' என்னும் தன்வரலாற்று நூலில் இருந்து இக்கட்டுரை தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. சிலம்புச்செல்வர் என்று போற்றப்படும் ம.பொ.சிவஞானம் (1906 - 1995) விடுதலைப் போராட்ட வீரர்; 1952 முதல் 1954வரை சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் 1972 முதல் 1978வரை சட்டமன்ற மேலவைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்; தமிழரசுக் கழகத்தைத் தொடங்கியவர். 'வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு' என்னும் இவருடைய நூலுக்காக 1966ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றார். தமிழக அரசு திருத்தணியிலும் சென்னை தியாகராய நகரிலும் இவருக்குச் சிலை அமைத்துள்ளது.

 

கற்பவை கற்றபின்....

1. எவரேனும் ஓர் அறிஞர் வாழ்வில் நடந்த நிகழ்வுகளில் உங்களைக் கவர்ந்த ஒன்றை அவரே சொல்வதைப் போன்று தன் வரலாறாக மாற்றி எழுதுக.

2. நீங்கள் படித்துச் சுவைத்த வரலாற்றுக் கதைகள் பற்றி வகுப்பறையில் உரை நிகழ்த்துக.

 

Tags : by ma.po.Sivananam | Chapter 7 | 10th Tamil ம.பொ.சிவஞானம் | இயல் 7 | 10 ஆம் வகுப்பு தமிழ்.
10th Tamil : Chapter 7 : Vithai nel : Prose: Citrakal oli (Tanvaralaru) by ma.po.Sivananam | Chapter 7 | 10th Tamil in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : விதைநெல் : உரைநடை: சிற்றகல் ஒளி (தன்வரலாறு) - ம.பொ.சிவஞானம் | இயல் 7 | 10 ஆம் வகுப்பு தமிழ் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : விதைநெல்