Home | 12 ஆம் வகுப்பு | 12வது தமிழ் | உரைநடை: தமிழர் குடும்ப முறை

பக்தவத்சல பாரதி | இயல் 3 | 12 ஆம் வகுப்பு தமிழ் - உரைநடை: தமிழர் குடும்ப முறை | 12th Tamil : Chapter 3 : Sutrathar kanne Ula

   Posted On :  01.08.2022 04:03 am

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : சுற்றத்தார் கண்ணே உள

உரைநடை: தமிழர் குடும்ப முறை

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : சுற்றத்தார் கண்ணே உள : உரைநடை: தமிழர் குடும்ப முறை - பக்தவத்சல பாரதி | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

உரைநடை உலகம்

பண்பாடு – ங

தமிழர் குடும்ப முறை

- பக்தவத்சல பாரதி



நுழையும்முன்

குடும்பம் என்ற அமைப்பு ஏற்படப் பன்னெடுங்காலம் ஆகியிருக்கலாம். இந்த உயரமைப்பின் மூலமே உலகச்சமூகம் இயங்குகிறது. சங்க காலத்தில் குடும்ப அமைப்பு மேலோங்கிய ஒன்றாக இருந்தது. அதன் தொடர்ச்சி இன்றுவரை இருக்கிறது. தொன்மைக் காலத்திலேயே மேம்பட்ட குடும்ப அமைப்பை உருவாக்கியிருந்த தமிழ்ப் பண்பாட்டின் செழுமை, சங்க இலக்கியங்கள் வாயிலாக வெளிப்படுகிறது.


குடும்பம் எனும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் எனும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது; குடும்பம் தொடங்கிக் குலம், கூட்டம், பெருங்குழு, சமூகம் என்ற அமைப்பு வரை விரிவு பெறுகிறது. ஆதலின், குடும்பமே மனித சமூகத்தின் அடிப்படை அலகாக உள்ளது. வாழுங்காலம் முழுவதும் தொடர்ந்து வேறு எந்த நிறுவனமும் இந்த அளவுக்கு மனிதனைச் சமூகவயப்படுத்தும் பணியைச் செய்ததில்லை.

குடும்பம்

குடும்ப அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை, திருமணமே . குடும்பம், திருமணம் இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தே செயல்படுகின்றன நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல. இன்று நாம் வழங்கும் 'திருமணம்', 'குடும்பம்' ஆகிய இரண்டு சொற்களுமே தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் இடம்பெறவில்லை. குடும்பம் எனும் சொல் முதன் முதலில் திருக்குறளில்தான் (1029) பயின்று வருகிறது.

சங்க இலக்கியத்தில் 'குடம்பை', 'குடும்பு', 'கடும்பு' ஆகிய சொற்கள் குடும்ப அமைப்போடு தொடர்புடையவை. 'குடம்பை என்ற சொல், இருபது இடங்களில் பயின்று வருகிறது. 'குடும்பு' எனும் சொல் கூடி வாழுதல் என்று பொருள்படுகின்றது.

குடும்பு எனும் சொல்லுடன் 'அம்' விகுதி சேர்த்துப் பொருண்மை விரிவாக்கமாக (Semantic extension) 'குடும்பம் எனும் சொல் அமைந்தது. பண்டைத் தமிழர்கள் குடும்பம் எனும் அமைப்புடன் வாழ்ந்த இடங்கள் பற்றிப் பல குறிப்புகள் நமக்குக் கிடைக்கின்றன.

"இரவுக் குறியே இல்லகத் துள்ளும் 

மனையோர் கிளவி கேட்கும் வழியதுவே 

மனையகம் புகாஅக் காலை யான” (பொருளியல் -129)

எனும் தொல்காப்பிய நூற்பா, 'இல்', மனை ஆகிய இரண்டு வாழிடங்களைக் குறிப்பிடுகின்றது.

வாழிடம்

சங்க இலக்கியத்தில் மேலும் பல சொற்கள் உள்ளன. இல், மனை, குரம்பை, புலப்பில், முன்றில், குடில், கூரை, வரைப்பு, முற்றம், நகர், மாடம் முதலிய சொற்கள் குடும்பங்களின் வாழ் விடங்களில் உள்ள வேறுபாடுகளைச் சுட்டுகின்றன. மருதத்திணைப் பாடல் ஒன்றில் மகளிர் 'தம்மனை', 'நும்மனை ' (அகம். 346: 16-17) என மனைவியின் இல்லத்தையும் கணவனின் இல்லத்தையும் பிரித்துப் பேசும் போக்கினைக் காண முடிகிறது. இன்னும் சில இடங்களில் தற்காலிகத் தங்குமிடம் 'புக்கில்' (புறம் 221-6) எனவும், திருமணத்திற்குப்பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து, தனியாக வாழுமிடம் 'தன்மனை' (neolocal) எனவும் வழங்கப்பெற்றுள்ளன.

'மனை' எனும் சொல் 'நம்மனை', 'தம்மனை', 'எம்மனை', 'இம்மனை', 'உம்மனை', 'நின்மனை', 'நுந்தைமனை', 'நன்மனை', 'வறுமனை', 'வளமனை', 'கடிமனை', 'தாய்மனை' எனச் சங்க இலக்கியங்களில் பல இடங்களில் பயின்று வருகின்றது. மனையோள்' எனும் சொல்லும் சங்கப்பாடல்களில் பயின்று வரும் சொல்லாகும். இதன்மூலம் மனை என்பது வாழிடத்தைக் குறிக்கும் முதன்மைச் சொல்லாக உள்ளதை அறியலாம்.

மணந்தகம்

உயிரிகளைப் போன்றே குடும்பமும் தோன்றுகிறது; வளர்கிறது; பல கட்டங்களைக் கடக்கிறது. அதன் வாழ்க்கைச்சுழற்சியில் பல வடிவங்களில் நிலைமாற்றம் பெறுகிறது. இத்தகைய நீண்ட பாதையில் குடும்பத்தின் தொடக்கம் திருமணமே. மணம் புரிந்த கணவனும் மனைவியும் சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடிய தொடக்கக் கட்டமே 'மணந்தகம்' (Family of procreation) எனப்படுகிறது. முதல் குழந்தை பிறக்கும்வரை உள்ள காலகட்டத்தை இந்நிலை குறிக்கிறது. தனிக்குடும்ப உருவாக்கத்தின் தொடக்க நிலையாக இது அமைகிறது.

இளந்தம்பதியினருக்கு ஏற்ற அறிவுரை கூறி நெறிப்படுத்தும் பணி செவிலிக்குரியது என்று கூறும் தொல்காப்பிய அடிகள் மூலம் (தொல். பொருள். 151) மணந்தகம் எனும் குடும்ப அமைப்பு முதன்மை பெற்றிருந்ததை அறிய முடிகிறது.



தாய்வழிக் குடும்பம்

சங்ககாலத்தில் கண சமூகத்துக்குத் தாயே தலைமை ஏற்றிருந்தாள். தாய் வழியாகவே குலத்தொடர்ச்சி குறிக்கப்பட்டது. பதிற்றுப்பத்து கூறும் சேரநாட்டு மருமக்கள் தாய முறை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

சிறுவர்தாயே பேரிற் பெண்டே (புறம். 270)

செம்முது பெண்டின் காதலஞ்சிறா அன் (புறம். 276)

வானரைக் கூந்தல் முதியோள் சிறுவன் (புறம். 277)

முளரிமருங்கின் முதியோள் சிறுவன் (புறம். 278)

என்மகள் ஒருத்தியும் பிறள் மகன் ஒருவனும் (கலி. பாலை . 8)

முதலான தொடர்களில் 'இவளது மகன்' என்றே கூறப்பட்டது. இவனது மகன் எனக் கூறப்படவில்லை என்பது நோக்கத்தக்கது. இவை அனைத்தும் சங்ககாலத்தில் காணப்பட்ட தாய்வழிச் சமூகத்தின் நிலையைக் காட்டுகின்றன.

சங்ககாலத்தில் பெண் திருமணம் செய்த பின்னரும் தன் இல்லத்திலேயே தொடர்ந்து வாழ்க்கை நடத்தும் தாய முறை (Matrilocal) இருந்துள்ளது. திருமணத்திற்குப் பின் மனைவியின் இல்லத்துக்குச் சென்று கணவன் வாழ்வதே நடைமுறையாக இருந்துள்ளது (அகம் 24:10, 274:14, 284:13).

தாய்வழிக் குடும்பங்களில் பெண்களே குலத்தொடர்ச்சிக்கு உரியவர்களாக இருப்பதால் பெண் குழந்தைகளின் பேறு முதன்மையாக விரும்பப்பட்டது. தாய்வழி முறையில் குடும்பத்தின் சொத்தும் வளங்களும் செல்வங்களும் பெண்களுக்குச் சென்று சேர்ந்தன. தாய்வழிச் சொத்துகள் பெண்டிருக்கே போய்ச் சேர்ந்தன என்பதை ஒரு மருதத்திணைப் பாடல் (குறுந். 295) தெளிவாகவும் விளக்கமாகவும் கூறுகிறது.



தந்தைவழிக் குடும்பம்

மனித குலத்தில் ஆதியில் தோன்றி வளர்ந்த தாய்வழி முறையானது தமிழர்களிடம் இருந்ததைச் சங்க இலக்கியங்களின்வழி அறிய முடிந்தாலும், சங்க காலத்திலேயே ஆண் மையச் சமூக முறை வலுவாக வேர் ஊன்றிப் பரவலாகிவிட்டதையும் காணமுடிகிறது.

ஆண் மையச் சமூகத்தில் பெண் திருமணத்திற்குப் பின் தன் கணவனுடைய தந்தையகத்தில் (patrilocal) வாழ வேண்டும். மணமான பின் தலைவன் தலைவியை அவனுடைய இல்லத்திற்கு அழைத்து வந்தபோது அவனுடைய தாய் அவளுக்குச் சிலம்புகழி நோன்பு செய்திருக்கிறாள்.

நும்மனைச் சிலம்பு கழீஇ அயரினும்

எம்மனை வதுவை நல்மணம் கழிக (ஐங்குறு. 399:1-2)

இதன்வழி மணமக்களின் வாழ்விடம் கணவன் அகம் என்பதை உறுதிப்படுத்தலாம். மேலும், "மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே" (குறுந். 135) என்னும் குறுந்தொகைப் பாடல் மூலம் பெண் தன் கணவனையே முழுவதும் சார்ந்திருந்த நிலையை அறிய முடிகிறது. சங்ககாலத்தில் தந்தைவழிக் குடும்பமுறை மிகவும் வலுவான, ஒரு பரவலான முறையாக இருந்துள்ளதைப் பொருள் வயிற் பிரிவு, போர், வாழ்வியல் சடங்குகள், குடும்பம், திருமணம் எனப் பல்வேறு சமூகக் களங்களில் காண இயலும்.


தனிக்குடும்பம்

தனிக்குடும்பம் (nuclear family) தோன்றுவதற்கான தொடக்க நிலைக் குடும்பங்கள் பற்றிச் சங்க இலக்கியங்கள் மிகுதியாகப் பேசியிருக்கின்றன. இளமகவுநிலைக் குடும்பங்களின் காட்சிகளை ஐங்குறு நூறு தெளிவு படுத்துகிறது (408). "மறியிடைப் படுத்த மான்பிணை போல்" மகனை நடுவணாகக்கொண்டு தலைவனும் தலைவியும் வாழ்ந்திருக்கின்றனர் (ஐங்குறுநூறு 401).

தாய், தந்தை, குழந்தை மூவருமுள்ள தனிக்குடும்பம் மிகவும் நெருக்கமானது என்பதால் இது தொடக்கநிலை / எளிய / நெருக்கமான குடும்பம் (Elementary / Simple / Immediate family) எனப்படும்.

தனிக்குடும்ப வகை, சமூகப் படிமலர்ச்சியில் இறுதியாக ஏற்பட்ட ஒன்று. இஃது இன்றைய தொழிற்சமூகத்தில் பெரும்பான்மையாகக் காணப்படுகிறது என்பது ஒரு வாதம். ஆனால் பல ஆதிக்குடிகளிடம் தனிக்குடும்ப முறை முக்கியமான குடும்ப முறையாக இருப்பதையும் இனவரைவியல் ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. இஃது ஒரு தொல்வடிவமாகவே இருந்து வருகிறது என்பது இன்னொரு வாதமாகும்.


விரிந்த குடும்பம்

சங்க காலத்தில் தனிக்குடும்ப அமைப்பு விரிவு பெற்று இவர்களுடன் பெற்றோர் ஒருவரின் தந்தையும் உடன் வாழும் "விரிந்த குடும்ப" (extended family) முறையையும் காண முடிகிறது. கணவன், மனைவி, மகன் ஆகியோருடன் தந்தை சேர்ந்து வாழ்ந்த நேர்வழி விரிந்த குடும்ப (lineally extended family) முறையை ஒக்கூர் மாசாத்தியாரின் புறநானூற்றுப் பாடல் (279) கூறுகிறது.

சங்ககாலக் குடும்ப அமைப்பில் முதல்நிலை உறவினர்களை மட்டும் ஓரளவு இனம் காண முடிகிறது. நற்றாய் (பெற்ற தாய்) ஒருபுறம் இருந்தாலும் செவிலித்தாயும் அவளது மகளாகிய தோழியும் குடும்ப அமைப்பில் முதன்மைப் பங்கு பெறுகின்றனர். சமூகத் தாயாக விளங்கிய செவிலித்தாய் முறை பண்டைய இனக்குழு மரபின் மாறுபட்ட தொடர்ச்சியாகச் சங்ககாலத்தில் வருவதை அறிய முடிகிறது. சங்க காலத்தில் ஒவ்வொரு ஆயத்துக்கும் செவிலித்தாயே பொறுப்பேற்றிருந்தாள்.

இல்லற வாழ்வின் இறுதிக் காலத்தில் பெருமைகள் நிறைந்த மக்களுடன் நிறைந்து, அறத்தினை விரும்பிய சுற்றத்தோடு சேர்ந்து, தலைவனும் தலைவியும் மனையறம் காத்தலே இல்வாழ்வின் பயனாகும் எனச் சங்ககால மக்கள் எண்ணினார்கள். விரிந்த குடும்பம் பற்றிய இக்கருத்தினைத் தொல்காப்பியமும் பதிவு செய்கிறது.

சங்கச் சமூகம் குடும்பம் என்ற அமைப்பை அடிப்படை அலகாகக் கொண்டிருந்த நிலையைச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. அதன் தொடர்ச்சியாகவே இன்றைய சமூக அமைப்பும் கூட்டுக்குடும்பம், தனிக்குடும்பம் என்ற அலகுகளைக் கொண்டதாகவும் தந்தை வழிக் குடும்ப அமைப்பைக் கொண்டதாகவும் இருக்கிறது. தொன்மைமிக்க இக்குடும்ப அமைப்பு முறை தமிழ்ச் சமூகத்தின் அடையாளப் பெருமிதமாகும்.

தெரிந்து தெளிவோம்



நூல்வெளி

இப்பாடப்பகுதி, பனுவல் (தொகுதி II, 2010) காலாண்டிதழில் வெளிவந்த கட்டுரையின் சுருக்கம். இதை எழுதியவர் பக்தவத்சல பாரதி. தமிழ்ச்சமூகம், பண்பாடு சார்ந்த மானிடவியல் ஆய்வுகளை இவர் முன்னெடுத்து வருகிறார். பழங்குடிகள், நாடோடிகள் உள்ளிட்ட விளிம்புநிலைச் சமூகங்கள் பற்றிய ஆய்வில் இவருடைய : பங்களிப்பு முக்கியமானது. இலக்கிய மானிடவியல், பண்பாட்டு மானிடவியல், தமிழர் மானிடவியல், தமிழகப்: பழங்குடிகள், பாணர் இனவரைவியல், தமிழர் உணவு உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.


Tags : by Bhakthavachala Bharathi | Chapter 3 | 12th Tamil பக்தவத்சல பாரதி | இயல் 3 | 12 ஆம் வகுப்பு தமிழ்.
12th Tamil : Chapter 3 : Sutrathar kanne Ula : Prose: Tamilar kudumba murai by Bhakthavachala Bharathi | Chapter 3 | 12th Tamil in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : சுற்றத்தார் கண்ணே உள : உரைநடை: தமிழர் குடும்ப முறை - பக்தவத்சல பாரதி | இயல் 3 | 12 ஆம் வகுப்பு தமிழ் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : சுற்றத்தார் கண்ணே உள