Home | 12 ஆம் வகுப்பு | 12வது தமிழ் | உரைநடை: திரைமொழி

இயல் 6 | 12 ஆம் வகுப்பு தமிழ் - உரைநடை: திரைமொழி | 12th Tamil : Chapter 6 : Sirugai alaviya cool

   Posted On :  02.08.2022 01:59 am

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : சிறுகை அளாவிய கூழ்

உரைநடை: திரைமொழி

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : சிறுகை அளாவிய கூழ் : உரைநடை: திரைமொழி | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

உரைநடை உலகம்

கலை – சு

திரைமொழி



நுழையும்முன்

கனவு கண்டு கொண்டே கனவுக்குள் இருப்பது போல நம்மைச் சூழ்ந்த  பெருங்கனவே திரைப்படம். இதன் அழகியலும் அனுபவமும் ஈர்ப்பும் இயல்பும் எழிலும் ஏற்றமும் காட்சி மொழியாக கவினுறு கலையாக எப்படி உருவாகின்றன? கதை எழுதி, திரைக்கதை எழுதி, வசனம் எழுதி, இயக்கி, ஒளிப்பதிவு செய்து, இசை சேர்த்து, பெரும் முதலீட்டில் உருவாகும் திட்டமிட்ட கூட்டுமுயற்சியே திரைப்படம். மொழிக்கு இருப்பது போல் நிறுத்தக்குறிகள், அசைகள், அமைப்புகள், உத்திகள் என எல்லாமும் இதன் காட்சி மொழிக்கும் உண்டு. அம் மொழியைப் புரிந்துகொள்வதும் உள்வாங்குவதும் சுவைப்பதும் ஒன்றுவதும் ஒரே நேரத்தில் நிகழ வேண்டும்தானே!


1895ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் நாள் மாலை 5 மணி, பிரான்சின் தலைநகரான பாரீசில் கிராண்ட் கபே விடுதி முன் பெருங்கூட்டம், கொட்டும் மழையிலும் குடை பிடித்துக் காத்துக்கொண்டிருந்தது. அதற்குக் காரணம் அன்று காலை நாளிதழில் வந்த ஒரு சிறிய விளம்பரம். 'அதிசயம் பிறக்கிறது' என்ற தலைப்போடு வந்திருந்தது அந்த விளம்பரம். புதிய கலையான திரைப்படத்தை அப்படிச் சொல்லித்தான் அவ்விளம்பரம் அனைவரையும் அங்கு வரச்சொல்லிற்று. லூமியர் சகோதரர்கள் மூலம் அன்று அந்த அரங்கத்தில் பிறந்த திரைப்படம் எனும் கலை, இன்று உலகையே ஆள்கிறது என்றால் மிகையில்லை. நாம் அணியும் உடை, உணவு, அரசியல் என எல்லாவற்றையுமே இன்று திரைப்படம் தான் தீர்மானிக்கிறது.

அன்று 'கிராண்ட் கபே' விடுதியில் லூமியர் சகோதரர்கள் திரையிட்ட சில துண்டுப் படங்களில் ஒன்று ரயிலின் வருகை திரையில் ரயில் முன்னோக்கி வேகமாக வருவதைப் பார்த்து, ரயில் நம்மீது ஏறிக் கொல்லப்போகிறது என்ற அச்சத்தில் பலரும் அரங்கத்தை விட்டு அலறியடித்துக்கொண்டு வெளியில் ஓடினர். அப்படி மக்களை அச்சப்பட வைத்த காட்சிப்பதிவாக இருந்த திரைப்படம் பிற்பாடு உலகையே கட்டிப்போடும் பேராற்றலாக வளர்ந்திருக்கிறதென்றால் தொடக்கத்திலேயே அக்கலைக்குப் பெருமை சேர்த்த சில முக்கியமான கலைஞர்கள் தான் அதற்கு முதன்மைக் காரணம். அவர்களில் தாமஸ் ஆல்வா எடிசன் முதலாமவர். அவர்தான் அசையும் உருவங்களைப் படம்பிடிக்கும் கருவியைக் கண்டுபிடித்தார். அதன் பிறகுதான் பிரான்சின் லூமியர் சகோதரர்கள் படப்பிடிப்புக் கருவியோடு திரையிடும் கருவியையும் (Projector) சேர்த்துத் திரைப்படம் என்னும் விந்தையை இவ்வுலகுக்கு அளித்தனர். அடுத்தநிலையில் திரைப்படத்தில் கதையும் சொல்லலாம் எனக் கண்டுபிடித்தவர் ஜார்ஜ் மிலி என்பவர். 

திரைக்கதை

ஒரு படத்தின் வெற்றிக்குக் காரணம், கதையும் அந்தக் கதை எப்படிச் சொல்லப்படுகிறது என்பதையும் பொறுத்தது. புகழ்வாய்ந்த நடிகர்களின் படங்கள் தோல்வி அடைவதையும் புதுமுக நடிகர்களின் படங்கள் வெற்றி பெறுவதையும் நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

உலகின் சிறந்த முக்கியப் படங்களும் வணிக வெற்றிப்படங்களும் பார்வையாளர்களைத் திரையுடன் ஒன்றவைக்கும் வகையில் திரைக்கதைகளைக் கொண்டவை; திரைக்கதைகள் பலமுறை எழுதி, பலமுறை படித்துப் பார்த்துத் திருத்தியும் உருவாக்கப்படுபவை. இத்தகைய உழைப்பு உள்ள படங்கள் மட்டுமே பார்வையாளர் உள்ளத்தில் நிலைக்கின்றன.

காட்சியின் ஆற்றல்

காட்சி என்பது கதை நகர்வுக்கு உதவுவது. திரைப்படத்தில் காட்சிகள் சிறப்பாக அமைந்தால் வசனத்திற்குக்கூட இரண்டாம் இடம்தான். நாடகத்தில் விளக்கை அணைத்தும் திரையை இறக்கியும் காட்சிமாற்றத்தைக் காண்பிப்பார்கள். ஆனால் திரைப்படத்தில் வசனம் இன்றி, காட்சிகளை அடுத்தடுத்து வைப்பதன்மூலம் கதை சொல்வார்கள்.

முதல் காட்சியில் தோழி ஒருத்தி கதாநாயகியிடம் தொடர்வண்டிப் பயணச்சீட்டைக் கொடுப்பாள்; அடுத்த காட்சியில் கதாநாயகி தொடர்வண்டியில் இருப்பாள்! "எண் 7, வீரையா தெரு..." என்று ஒருவர் முகவரியைச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அந்த முகவரியில் சென்று காட்சி நிற்கும்.

அடுத்த காட்சி விளையாட்டு அரங்கம் எனில், அங்கு எழும் ஒலிகள் முதல் காட்சி முடிவதற்கு முன் தொடங்கிவிடும். காட்சிகள் மாறுவதை உணர்த்த ஒரு காட்சியைச் சிறிது சிறிதாக மங்கலாகக் காட்டி இருள் ஆக்கிக் காட்டுவர். இதைக் காட்சி மறைவு (Fade out) என்பார்கள். அடுத்த காட்சி தொடங்கும்போது இருட்டாக இருந்த பகுதி சிறிது சிறிதாக வெளிச்சமாகமாறிமுழுக்காட்சியும் வெளிப்படும். இதனைக் காட்சி உதயம் (Fade in) என்பார்கள். ஒரு காட்சி மறையும்போதே அடுத்த காட்சி தெரியத் தொடங்கும். இதனைக் கலவை/கூட்டு (Mix) என்பார்கள். பழைய காட்சியை அழித்துக் கொண்டே அடுத்த காட்சி தோன்றுவதை அழிப்பு (Wipe) என்பார்கள். இப்படிப் பல்வேறு உத்திகள் இயக்குநராலும் தொகுப்பாளராலும் காட்சி நகர்வுக்கெனப் பயன்படுத்தப்படுகின்றன.

திரைப்படம் இரசிக்கத்தக்க ஊடகம். பல நாடுகளில் நல்ல படங்கள் உருவாகின்றன. அவற்றைப் பார்க்கும் வாய்ப்பும் இருக்கிறது. ஓவியம் போல, படமும் இரசனைக்குரிய கலை. கலையும் அறிவியலும் கைகோர்த்திருக்கும் அக்கலையை இரசிக்கக் கற்போம்.

திரையில் காட்சி

திரைப்படத்தில், நடிப்பவரை முன் பின் மேல் என்று பல கோணங்களில் படப்பிடிப்புக்கருவியால் இடம் மாற்றி மாற்றிப் படம்பிடித்துத் திரையில் காட்ட முடியும். இதனால் திரைப்படத்தை முப்பரிமாணக் கலை (Three Dimensional Ari) என வகைப்படுத்துகிறோம். ஒருவன் ஓடிவருவதைக் காட்டிவிட்டு அதைப் பார்ப்பவன் ஏன் இப்படி ஓடி வருகிறீர்கள் என்று கேட்கவேண்டியதில்லை. 'என்னாச்சு?' என்று கேட்டால் போதும். இது காட்சிமொழியின் தன்மை. உணர்ச்சிகளைக் காண்பிக்க முகத்தை மட்டுமே காண்பித்தால் போதும். அதுபோலக் கட்டுப்படுத்த முடியாத கோபம் என்றால் நடிகர் கத்திக் கூச்சல் போடுவதைக் காட்ட வேண்டிய அவசியமில்லை . கையில் பிடித்திருக்கும் கண்ணாடிக் குவளையை இறுகப்பிடித்து உடைப்பதைக் காட்டினால் போதும்.

தெரியுமா?

திரைப்படம் என்பது ஒருவகையில் பார்த்தால் நாடகத்தின் குழந்தை எனலாம். தொடக்க காலங்களில் நாடகங்களை அப்படியே திரைப்படமாக எடுப்பது வழக்கம். நாடகம் என்பது ஒரு காட்சியை ஒற்றைக் கோணத்தில் மட்டும் நேரிடையாகக் காண்பது. இதனால்தான் நாடகத்தை ஒற்றைக் கோணக்கலை (single dimension art) எனக் கூறுவர். நாடகங்களின் காலத்தில் ஒலிபரப்புக் கருவிகள் இல்லாததால் வசனங்களை உரக்கப் பேச வேண்டிய தேவையிருந்தது. அதே போலத் தொலைவிலிருப்பவர்களும் நடிகர்களின் நடிப்பைப் பார்க்க வேண்டும் என்பதால் அதிக ஒப்பனை செய்துகொண்டு கை - கால்கள், கண்களின் அசைவுகள் நன்றாகத் தெரியும் வகையில் அசைத்து உரக்கப்பேசி இயல்பில் நாம் செய்வதைவிடச் சற்றுக் கூடுதலாகச் செய்து நடித்தார்கள். திரையரங்கில் மவுனப்படங்கள் ஓடிக்கொண்டிருக்க, திரைக்கு அருகே ஒருவர் ஒலிவாங்கியைப் பிடித்து, கதை சொல்லும் காலமும் இருந்தது. அவருக்கு ஆங்கிலத்தில் நேரேட்டர் (Narrator- கதைசொல்லி) என்று பெயர். ஒரு கதாநாயகன் போல மிடுக்காக உடை அணிந்து 'நேரேட்டர்' எனும் அக் கதைச்சொல்லி வந்து நின்றாலே அனைவரும் கைதட்டத் தொடங்கினர்.


யார் இவர்? -


சார்லி சாப்ளின் வாழ்க்கை

இலண்டனில் பிறந்த சாப்ளின் வறுமையின் மடியில் வளர்ந்தவர்; சாப்ளினின் தாய், வறுமை வலியை மறக்கடிக்கக் கதைகள் சொன்னார்; அதன்மூலம் ஒரு கலைஞனாக அவர் செதுக்கப்பட்டார். மேடையில் பாடிப் பிழைத்த அம்மாவின் குரல் கெட்டுவிட, சிறுவனான சாப்ளின் மேடையேறி ஆடிப்பாடி அசத்தினார். நடிகனாகிக் குடும்பத்தைக் காக்கக் கனவு கண்ட சாப்ளின் நாடக நடிகராகி, குழுவுடன் அமெரிக்கா சென்று திரை வாய்ப்பைப் பெற்றார். தொள தொள கால்சட்டையும் இறுக்கமான கோட்டும் துண்டு மீசையும் புதுவிதமான சேட்டையும் கொண்ட லிட்டில் டிராம்ப் (Little Trump) என்று அவர் உருவாக்கிக் கொண்ட தோற்றம் அவரைப் பேசாப்பட நாயகனாக்கியது. அவரது ஊதியம் போல், புகழும் உயர்ந்தது. வறுமைமிக்க தன் இளமை வாழ்வை ‘தி கிட்’ என்ற வெற்றிப் படமாக்கினார். யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ் என்ற பட நிறுவனத்தைத் தொடங்கிப் பெரும் வளர்ச்சி கண்டார். அவரது மேதைமையும் திறமையும் 'தி கோல்டு ரஷ்' (The Gold Rush), 'தி சர்க்கஸ்' (The Circus) போன்ற காவியப் படங்களை உருவாக்கின. மரபான கருத்துருவாக்கங்களைத் தன் படங்களில் சாப்ளின் உடைத்து நொறுக்கினார்; பேசாப்படங்களில் சேட்டைகள் மூலம் புகழ்பெற்ற அவர் பேசும்படங்கள் உருவான காலத்தில், தோற்பார் என எதிர்பார்த்தனர்; எதிர்பார்ப்புகளை முறியடித்து 'சிட்டி லைட்ஸ்' (City Lights) என்ற படத்தை எடுத்ததன் வாயிலாக எதிரிகளின் வாய்களை அடைத்தார்; மூன்று ஆண்டு உழைப்பில் 'மாடர்ன் டைம்ஸ்' (Modern Times) படத்தை வெளியிட்டார். இதில் அன்றைய தொழில்மய உலகின் கேடுகளை விமரிசனம் செய்தார்; சாப்ளினுக்குப் பொதுவுடைமையாளர் என்ற முத்திரை விழுந்தது. பல முதலாளிய நாடுகளில் படம் தடை செய்யப்பட்டது. இருந்தாலும் படம் வெற்றி பெற்றது. அவரது சாதனைப்படமான 'தி கிரேட் டிக்டேட்டர்' (The Great Dictator) 1940இல் வெளியானது. ஹிட்லர் புகழேணியில் ஏறிக் கொண்டிருந்த காலத்தில் அவரை விமரிசித்து வந்த முதல்படம் அது. மனித குலத்திற்குத் தேவை போரல்ல; நல்லுணர்வும் அன்பும்தான் என்பதைப் படம் உணர்த்தியது.

1952இல் அவர் இலண்டன் சென்று கொண்டிருந்தபோது பொதுவுடைமையாளரான அவரை நாடு கடத்தியதாக அமெரிக்கா அறிவித்தது. பின் சாப்ளின் சுவிட்சர்லாந்தில் குடியேறினார். தன் தவற்றை உணர்ந்த அமெரிக்கா, மீண்டும் அங்கு வந்துவிடுமாறு சாப்ளினை வேண்ட, சாப்ளினும் ஒத்துக்கொண்டு சென்றார். அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் என்னும் வகையில் ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. இன்றும் உலகின் பல பகுதிகளில் சாப்ளினின் டிராம்ப் உருவம், குழந்தைமை, மனிதமை ஆகியவற்றின் குறியீடாக இடம் பெற்றிருப்பதே அவரது வெற்றியின் அடையாளம்.

இப்படிப் படப்பிடிப்புக் கருவி மூலம் பல்வேறு கோணங்களில் நாம் பார்க்கும் காட்சியை, திரையரங்கில் ஒரே இடத்தில் நாம் அமர்ந்து பார்ப்பதற்கு ஏற்ப, படத்தொகுப்புச் செய்து மனதிற்குள் கதை உலகத்தைத் தோற்றுவிப்பதைத்தான் நாம் திரைக்கலை என்று கூறுகிறோம். 


கண்களும் மூளையும் காட்சிமொழியும்

இயற்கையாகவே நம் கண்கள் படப்பிடிப்புக் கருவி செய்யும் பல வேலைகளைத்தான் செய்கின்றன. காட்சிகேற்றவாறு நாம் வில்லைகளை (Lens) மாற்றிப் படம் பிடிப்பதைப் போல, நம் கண்களும் நாம் காணும் காட்சி அல்லது பொருளுக்கு ஏற்ப மாற, மூளைக்குள் இருந்து கட்டளைகள் வருகின்றன.

நாம் கடற்கரையில் நின்று கடலைப் பார்க்கிறோம் என வைத்துக்கொள்வோம். நம் கண்கள் தாமாகவே அகண்ட கோணத்தைத் தேர்வு செய்து கொள்கின்றன. இதைத் திரைப்படத்தில் மீ சேய்மைக் காட்சித்துணிப்பு (EXTREME LONG SHOT) என அழைக்கிறோம்.

பேருந்தைப் பிடிக்க, சாலையைக் கடக்கும்போது சாலைகளின் இரு பக்கங்களிலும் பார்க்கிறோம். அப்போது நம் கண்கள் இன்னும் கொஞ்சம் சுருங்கி, பொருள்கள் அசைவதைத் தொலைவிலிருந்து பார்த்துப் பதிவு செய்கின்றன. திரைப்படத்தில் இதனைச் சேய்மைக் காட்சித்துணிப்பு (LONG SHOT) எனலாம். 


பேருந்தை விட்டு இறங்கி நாம் தெருவுக்குள் நடந்து வரும்போது எதிர்ப்படும் ஆட்களை நாம் இடுப்பு அளவில் மட்டுமே கவனப்படுத்துகிறோம், இங்குக் கண் ஆளை முழுதாகப் பார்த்தாலும் நம் கவனம், இடுப்புவரை மட்டுமே எடுத்துக்கொள்கிறது. இதை நடுக் காட்சித்துணிப்பு (MID SHOT) என்கிறோம்.

வீட்டிற்குள் நுழைந்து அம்மாவின் முகத்தைப் பார்க்கிறோம் , அம்மாவின் முகம் மட்டுமே நமக்குள் பதிவாகிறது. இது அண்மைக் காட்சித்துணிப்பு (CLOSE UP SHOT).

காலிலிருந்து செருப்பைக் கழற்றி வாசலில் விடும்போது, கண் கீழே குனிந்து செருப்பை மட்டும் பார்க்கிறது, இது மீ அண்மைக் காட்சித்துணிப்பு (EXTREME CLOSE UP SHOT).

ஓர் இடத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பும் ஒருமணி நேரப் பயணத்தை ஐந்தே காட்சித்துணிப்புகளாக இருபது நொடிகளில் நம்மால் பார்வையாளர்களிடம் உணர்த்த முடிகிறது. இதைத்தான் திரைப்படத்தின் காட்சிமொழி என்கிறோம்.

தெரியுமா?

படங்காட்டுதல் (Exhibition) மூலம்தான் முதன்முதலாகத் தென்னிந்திய சினிமாத் தொழில் தோன்றியது. மனைவியின் வைரமாலையை விற்று சாமிக்கண்ணு வின்சென்ட், பிரெஞ்சுக்கார் டுபான் (Dupont) என்பவரிடமிருந்து 2500 ரூபாய்க்கு ஒரு புரொஜக்டரையும் சில துண்டுப்படங்களையும் வாங்கினார். திருச்சியில் ஒரு கூடாரத்தில் படங்காட்ட ஆரம்பித்த அவர், பின்னர் திருவனந்தபுரம், மதுரை நகர்களில் முகாமிட்டு, மதராசுக்கு வந்து காட்சிகள் நடத்தினார். அங்கிருந்து வடக்கே சென்று பெஷாவர், லாகூர் பின்னர் லக்னோ நகரங்களில் படக்காட்சிகள் நடத்திவிட்டு 1909 இல் மதராஸ் திரும்பினார். அங்கே எஸ்பிளனேட்டில் (இன்றைய பாரிஸ் அருகே) கூடாரம் போட்டுச் சலனப்படங்களைத் திரையிட்டார்.

சென்னையிலிருக்கும்போது சினிமாத்தொழிலை இங்கு நிறுவ ஒரு முக்கியமான அடியெடுத்து வைத்தார். புரொஜக்டர்களை இறக்குமதி செய்து விற்க ஆரம்பித்தார். இதனால் புதிய திரையரங்குகள் வர ஏதுவாயிற்று.

சு. தியோடர் பாஸ்கரன் 

சினிமா கொட்டகை 2018


யாராவது நம்மிடம் கதையையோ, அல்லது நிகழ்வையோ விவரிக்கும்போது நம் மூளை அதுவாகவே அந்த விவரிப்பை வெட்டியும் ஒட்டியும் நமக்குச் சொல்கிறது. இவ்வாறு, தேவையான கோணங்களைப் பயன்படுத்திக் காட்சிகளைப் படம் பிடித்து அவற்றை வெட்டி ஒட்டி, படத்தொகுப்புச் செய்து வெள்ளித்திரையில் ஒரு நல்ல கதையைச் சொல்வதே திரைப்படக்கலை ஆகும்.

படத்தொகுப்பு

தேவையற்ற காட்சிகளை நீக்கி, தேவையான காட்சிகளைப் பொருத்தமான வகையில் சேர்ப்பதே படத்தொகுப்பு. ஒரு திரைப்படத்தில் தொடர்வண்டி ஒன்று குறிப்பிட்ட ஊரை அடைய ஒரு பாலத்தை இடமிருந்து வலமாகக் கடப்பதாகக் காட்டிவிட்டு, அதே தொடர்வண்டி வலமிருந்து இடமாக வருவதாகக் காட்டு கையில் வெளியே தெரியும் காட்சிகளையும் நிலையங்களையும் பாலத்தையும் கவனமாக இணைக்கவேண்டியது தொகுப்பாளர் பணி.

'மாடர்ன் டைம்ஸ்' (1936) திரைப்படத்தில் ஒரு காட்சியில் செம்மறியாடுகள் முண்டியடித்துச் செல்கின்றன. அடுத்த காட்சியில் மனிதர்கள் ஒரு தொழிற்சாலைக்குள் முண்டியடித்துக் கொண்டு நுழைகின்றனர். தொழில்மயப்பட்ட சமூகத்தில் மனிதர்கள், மந்தைகள் ஆவதை இக்காட்சிகளின் இணைப்பு உணர்த்துகிறது. காட்சிகளை மாற்றி மாற்றி வைப்பதன் மூலம் வெவ்வேறு காட்சிகளை உருவாக்கிக் காட்ட முடியும். இவ்வாறு காட்டுவதைக் 'குலஷோவ் விளைவு' (KULESH OV EFFECT) என்பார்கள். மூன்று காட்சிகளை (புன்னகைக்கிற மனிதன், நீட்டப்பட்ட கைத்துப்பாக்கி, பதற்றமாகும் மனிதன்) வேறு வேறு விதமாக மாற்றிவைப்பதன் மூலம் வெவ்வேறு பொருளை உணர்த்துவதை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். 

அ) புன்னகைக்கிற மனிதன் – நீட்டப்பட்ட கைத்துப்பாக்கி – பதற்றமாகும் மனிதன் = கோழை என்ற பிம்பம் உருவாதல் 

ஆ) பதற்றமாகும் மனிதன் – நீட்டப்பட்ட கைத்துப்பாக்கி – புன்னகைக்கிற மனிதன் = வீரன் என்ற பிம்பம் உருவாதல் 

படத்தொகுப்பால் எல்லாமே தலைகீழாக மாறிவிடுகிறது. படம் எடுக்கும் போது 16 மணிநேரம் ஓடும்படி எடுத்துவிட்டாலும் அதை 2 மணி நேரம் ஓடும்படி தொகுப்பது படத்தொகுப்பாளரின் பணி.

இப்படித் தொகுக்கும் ஆற்றல் மூலம் கதைசொல்லலுக்கு உயிரூட்டமுடியும்.

ஒலிக்குறிப்பு

பின்னணி இசை, திரைப்படத்தின் உணர்வுகளை வெளிக்கொணர உதவும் மற்றொரு கலை. பின்னணி இசைச் சேர்ப்பும், சில வேளைகளில் மவுனமும் திரையில் உணர்வுகளை வெளிக்கொணர உதவுகின்றன. எடுத்துக்காட்டாக, கதை நாயகி சன்னல் வழியாகத் தலையை நீட்டி வெளியே தெரியும் ஒரு காட்சியை வெறித்துப் பார்க்கிறாள் எனில் தெரு காட்டப்படுவதில்லை. அவள் தெருவைப் பார்ப்பது மட்டுமே காட்டப்படுகிறது. அக்காட்சியில் ஒரு மகிழுந்து புறப்பட்டுச் செல்லும் ஒலி இணைக்கப்படுகிறது. இதில் அவளைப் பார்க்க வந்தவர், அவள் விருப்பத்திற்கு மாறாக அங்கிருந்து புறப்பட்டுச் செல்கிறார் என்ற கதை, அப்பெண்ணின் முகபாவனை மூலமே சொல்லப்படுகிறது. இசை பாத்திரங்களின் மனக்கவலைகள், அலைக்கழிப்புகள் ஆகியவற்றை எதிரொலிப்பதாகவும் எடுத்துக்காட்டுவதாகவும் இருக்கவேண்டும். அது, நமக்குப் பாத்திரங்களின் உணர்வுகளுக்கு விரிவுரை வழங்குவதாக இருக்கவேண்டும். அதே போல மவுனம், உரையாடலைவிட அதிகம் பேசுவதாக இருக்கும். 


நல்ல திரைப்படம்

முறையான காட்சிமொழியுடன் நல்ல கலையாக உருவாக்கும் படத்தில் பொய்களும் இருக்க முடியாது; நம் மூளையை மழுங்கச் செய்யும் கவர்ச்சிகளும் இடம்பெறாது; இந்தக் கலைப்படைப்புகள் உண்மையைப் பேசும்; அதன்மூலம் காண்பிக்கப்படும் வாழ்வியல், நம் அனுபவத்தை மேம்படுத்தி வாழ்க்கையை வளமாக்கும். அத்தகைய திரைப்படங்களைத்தான் கலைப்படங்கள் என்கிறோம்.

கர்நாடக மாநிலத்தில் ஹெக்கோடு என்னும் சிற்றூர் மக்கள் திரைப்படம் பார்த்ததே இல்லை . 1977இல் ஒரு முயற்சியாக உலகின் முக்கிய விருதுபெற்ற திரைப்படங்கள் அங்கு ஆறுநாள் திரையிடப்பட்டன.

அம்மக்கள் தங்களுக்குள் படங்களைப் பற்றிப் பலவாறாகக் கலந்துரையாடிக் கொண்டார்கள். படிப்பறிவு இல்லாத அந்த எளிய மக்களின் கருத்துக்கள், திரைப்பட வல்லுநர்களின் கருத்துகளுக்கு ஈடாக இருந்தன. இது எவ்வாறு சாத்தியமானது? வெளிஉலகம் அறியாத சிற்றூர்வாசிகளால் உலகம் கொண்டாடும் கலைப்படங்களை எப்படிச் சுவைக்கமுடிந்தது? அறிவியலும், தொழில்நுட்ப அறிவும் கொண்ட மற்றவர்களால் இதற்கு மேம்பட்டும் சுவைக்க முடியும்தானே?

நல்ல திரைப்படங்கள் என்றால் என்ன என்பதை அறிந்துகொள்ள முயலாதவரை திணிக்கப்படும் வணிகத் திரைப்படங்களையே நல்ல படங்கள் என்று சமூகம் நம்பும்.

தெரிந்து தெளிவோம்

தி கிரேட் டிக்டேட்டர்

சாப்ளினுக்கு நல்ல வசனங்களுடன் படம் எடுக்கத் தெரியாது என்று கூறிவந்த விமரிசகர்களின் கூற்றைப் பொய்யாக்கும் வகையில் 1940இல் அவர் ஒரு படம் எடுத்தார். அதுதான் 'தி கிரேட் டிக்டேட்டர்'

இக்கதையில் ஹிட்லரை உருவகப்படுத்தி ஹென்கோல் என்னும் கதைப்பாத்திரத்தை, சாப்ளின் உருவாக்கினார். அதே உருவம் கொண்ட இன்னொரு பாத்திரத்தைக் கடை நடத்தி வரும் யூத இனத்தைச் சார்ந்தவராக அறிமுகப்படுத்தினார். சர்வாதிகாரி ஹென்கோல், யூதர்களைக் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிடுகிறார். காவலர்களும் யூதரான கடைக்காரரைக் கைதுசெய்து சிறைக்கு அழைத்துச் செல்கின்றனர். சிறையிலிருந்து தப்பிக்கும் கடைக்காரர், வழியில் ஹென்கோலின் உடையைத் திருடி அணிந்து கொள்கிறார். அப்போது வழியில் வரும் ஹென்கோலின் படைவீரர்கள் இவர்தான் ஹென்கோல் எனத் தவறாக நினைத்து மரியாதை செய்கின்றனர். அதேசமயம் தப்பித்த கைதியைத் தேடி வந்த காவலர்கள் சாதாரண உடையில் வந்த ஹென்கோலை, தப்பித்த குற்றவாளி என நினைத்துக் கைது செய்கின்றனர். ஹென்கோல் சிறைக் கைதியாகிறார். ஒரேநாளில் இருவர் வாழ்க்கையும் தலைகீழாக மாறுகிறது. அதன் பிறகு நடக்கும் காட்சிகள் எல்லாம் கடுமையான அரசியல் விமரிசனங்கள். இறுதிக்காட்சியில் சர்வாதிகாரி வேடத்தில் இருக்கும் யூதர் கைது செய்யப்பட்டிருந்த அனைவரையும் விடுதலை செய்யச் சொல்லி ஆணையிடுகிறார். மாநாட்டில் மனிதகுல விடுதலை குறித்துப் பேருரை ஆற்றுகிறார். அந்தப் பேருரைதான் இன்றுவரை திரைப்படங்களின் மிகச் சிறந்த வசனமாகப் போற்றப்படுகிறது. வாழும் காலத்திலேயே ஹிட்லரைக் கடுமையாக விமரிசித்து எடுத்த ஒரேபடம் என்ற பெருமையும் இப்படத்திற்கு உண்டு. அதுபோல இரட்டை வேடப் படங்கள் எவ்வளவோ வந்தாலும் அதில் மிகச் சிறந்த திரைப்படம் என்ற பெயரும் இதற்கு உண்டு.


நூல்வெளி

திரைமொழி குறித்த இப்பாடம் திரு. அஜயன் பாலாவின் கட்டுரையை அடிப்படைச் சட்டமாகக் கொண்டு சுஜாதா, செழியன், அம்ஷன்குமார் முதலானோரின் திரைப்பார்வைகளை ஊடும்பாவுமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. கலையும் வணிகமுமான திரைப்படத்தை அணுகுவதற்கான எளிய சூத்திரத்தைக் கற்பிப்பதாக இப்பாடம், பாடக்குழுவினரால் உருவாக்கப்பட்டுள்ளது. உடல்மொழி, குறியீடுகள், கதை நகர்த்தல், திரை உரையாடல் என்று பல கூறுகளில் மரபுக் கலைகளிலிருந்து வேறுபட்ட தொழில்நுட்பம் சார்ந்த திரைக்கலையின் மொழியைப் புரிந்துகொள்ளும் முயற்சியின் தொடக்கம்தான் இப்பாடம்.


Tags : Chapter 6 | 12th Tamil இயல் 6 | 12 ஆம் வகுப்பு தமிழ்.
12th Tamil : Chapter 6 : Sirugai alaviya cool : Prose: Tirai mozhi Chapter 6 | 12th Tamil in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : சிறுகை அளாவிய கூழ் : உரைநடை: திரைமொழி - இயல் 6 | 12 ஆம் வகுப்பு தமிழ் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : சிறுகை அளாவிய கூழ்