பொருள், வரைவிலக்கணம், வகைப்பாடு, காரணங்கள் - நிதிப் பொருளியல் - பொதுச் செலவு | 12th Economics : Chapter 9 : Fiscal Economics

   Posted On :  13.05.2022 02:28 pm

12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 9 : நிதிப் பொருளியல்

பொதுச் செலவு

மக்களின் சமூகத் தேவையை நிறைவேற்றுவதற்காக மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மேற்காள்ளும் செலவினமே பொதுச் செலவாகும்.

பொதுச் செலவு

1. பொருள்

மக்களின் சமூகத் தேவையை நிறைவேற்றுவதற்காக மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மேற்காள்ளும் செலவினமே பொதுச் செலவாகும்.



2. வரைவிலக்கணம்

"பொது அமைப்புகளான மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், சமூகத்தின் பொதுவான விருப்பங்களை நிறைவு செய்வதற்காக மேற்கொள்ளக் கூடிய செலவுகள் பொதுச் செலவாகும்" - என வரையறை செய்யப்படுகிறது.



3. பொதுச் செலவின் வகைப்பாடு பின்வருவனவாகும் 

1. நன்மை அடிப்படையிலான பாகுபாடு 

கான் மற்றும் பிளின் ஆகியயோர் பொதுச் செலவை நன்மை அடிப்படையில் நான்கு வகைகளாக வகைப்படுத்துகிறார்கள். அவை:

அ) அனைத்து சமூகத்திற்கும் பலன் அளிக்கிற பொதுச்செலவு உதாரணமாக, பொது நிர்வாகம், இராணுவம், கல்வி, பொதுச் சுகாதாரம் மற்றும் போக்குவரத்து போன்றவற்றிற்கான செலவுகள்.

ஆ) சில மக்களுக்கான சிறப்பு நன்மை தரக்கூடிய மற்றும் முழு சமுதாயத்திற்கும் பொது நன்மை தரக்கூடிய செலவுகள். உதாரணமாக, நீதி நிர்வாகம். 

இ) ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு நேரடியாக நன்மை தரக்கூடிய மற்றும் சமுதாயத்திற்கு மறைமுகமாக நன்மை தரக்கூடிய செலவுகள். உதாரணமாக சமூக பாதுகாப்பு, பொது நலன் ,ஓய்வூதியம் மற்றும் வேலையின்மைக்கான நிவாரணம் ஆகியவற்றிற்கான செலவுகள். 

ஈ) சில நபர்களுக்கு சிறப்பு நன்மை பயக்கும் வகையிலான செலவு உதாரணமாக ஒரு குறிப்பிட்ட தொழிலுக்கான மானியம் வழங்குதல்.

2. பணி அடிப்படையிலான வகைப்பாடு 

ஆடம்ஸ்மித் பொதுச் செலவினை அரசின் பணிகள் அடிப்படையில் பின்வருமாறு வகைப்படுத்தியுள்ளார்.

அ) பாதுகாத்தல் பணிகள்

இது நாட்டின் குடிமக்களை அந்நிய ஆக்கிரமிப்பு மற்றும் உள்நாட்டுச் சீரழிவு ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பதற்கான செலவை உள்ளடக்கியுள்ளது. உதாரணமாக பாதுகாப்பு, காவல்துறை, நீதிமன்றங்கள் போன்றவற்றிற்கான செலவுகள்.

ஆ) வணிக பணிகள்

வணிகம் மற்றும் வியாபார வளர்ச்சிக்காக மேற்கொள்ளக் கூடிய பொதுச் செலவை உள்ளடக்கியது. உதாரணமாக போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு மேம்படுத்துவதற்கான செலவுகள்.

இ) வளர்ச்சி பணிகள்

இது கட்டமைப்பு மற்றும் தொழில் மேம்பாட்டிற்கான பொதுச் செலவை உள்ளடக்கியுள்ளது.



4. பொதுச் செலவு அதிகரிப்பதற்கான காரணங்கள் 

தற்கால அரசு என்பது நலம் பேணும் அரசாகும். இதில் அரசானது சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சார்ந்த பணிகளை செய்துதர வேண்டியுள்ளது. இவைகள் பொதுச் செலவு அதிகரிப்பதற்கான காரணங்களாக உள்ளது.

1. மக்கள் தொகை வளர்ச்சி

67 ஆண்டு கால திட்டங்களில், இந்தியாவின் மக்கள்தொகை 1951 -ல் 36.1 கோடியிலிருந்து 2011-ல் 121 கோடியாக உயர்ந்துள்ளது. மக்கள் தொகை வளர்ச்சியினால் உடல் நலம், கல்வி, சட்டம் ஒழுங்கு போன்றவற்றிற்காக பேரளவு முதலீடு செய்ய வேண்டியிருக்கிறது. இளைஞர்களுக்கான கல்வி மற்றும் சேவைகளுக்காகவும், முதியோர்களுக்கான ஓய்வூதியம், சமூக பாதுகாப்பு மற்றும் உடல் நலத்திற்கான வசதிகள் ஏற்படுத்தவும் பொதுச்செலவு அதிகமாகிறது.

2. பாதுகாப்புச் செலவு

இந்தியாவில் பாதுகாப்பிற்கான செலவு அதிகரித்தவண்ணம் உள்ளது. இராணுவ தளவாடங்களை நவீனமயமாக்குவதால் இராணுவ செலவு பலமடங்கு அதிகரித்துள்ளது. 1990 - 91-ல் 10,874 கோடியாக இருந்த அரசின் பாதுகாப்புச் செலவு 2018-19-ல் 2,95,511 கோடியாக அதிகரித்துள்ளது.

3. அரசு மானியங்கள்

இந்திய அரசானது, உணவு, உரங்கள், முன்னுரிமை துறைக்கான கடன் வழங்கல், ஏற்றுமதி மற்றும் கல்வி போன்ற பல இனங்களுக்கு மானியங்களை வழங்குகிறது. மானியங்களுக்கான தொகை மிக அதிகமாக இருப்பதால் பொதுச் செலவு பலமடங்கு அதிகரித்துள்ளது. 1991-ம் ஆண்டில் மத்திய அரசின் மான்யத்திற்கான செலவு 9581 கோடியிலிருந்து 2,29,715.67 கோடியாக 2018 – 19ல் அதிகரித்துள்ளது. மற்றொருபுறம் பெரும் நிறுவனங்களுக்கு மானியமாக (ஊக்கத் தொகை) 5 - இலட்சம் கோடிக்கு மேல் வழங்கியுள்ளது.

4. கடன் சேவைகள்

அரசானது அதிகமான அளவில் உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு ஆதாரங்கள் மூலம் கடன் பெற்றுள்ளன. அதன் விளைவாக அரசு கடனை திருப்பி செலுத்துவதற்காக அதிக பணம் தேவைப்படுகிறது...  மத்திய அரசின் வட்டி செலுத்தல்களுக்கான தொகை 1990 - 91-ல் 21500 கோடியிலிருந்து 2018 - 19ல் 5,75,794 கோடியாக அதிகரித்துள்ளது.

5. வளர்ச்சித் திட்டங்கள்

அரசு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்கிறது. அவையாவன நீர்ப்பாசனம், இரும்பு மற்றும் எஃகு, கனரக எந்திரங்கள், எரிசக்தி, தொலை தொடர்பு போன்றவையாகும். இந்த வளர்ச்சித் திட்டங்கங்களுக்கு அதிகளவு முதலீடு தேவைப்படுகிறது.

6. நகரமயமாக்கல்

நகரங்களில் மக்கள் தொகை விரைவாக அதிகரித்து வருகிறது. 1950 - 51-ல் மொத்த மக்கள் தொகையில் 17 சதவீதம் பேர் நகர்புறத்தில் வாழ்ந்தனர். தற்போது நகர மக்கள் தொகை 43% அளவிற்கு அதிகரித்துள்ளது. தற்போது 1 மில்லியன் மக்கள் தொகைக்கு மேல் சுமார் 54 நகரங்கள் உள்ளது. இதனால் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதற்கு, கல்வி மற்றும் குடிமை வசதிகைளை மேற்கொள்ள அதிக அளவில் செலவுகள் ஏற்படுகின்றது.

7. தொழில் மயமாக்கல்

அடிப்படை மற்றும் கனரக தொழில்களுக்கு அதிக அளவு மூலதனம் தேவைப்படுகிறது. மேலும் இது உற்பத்திக்கு நீண்ட காலத்தையும் எடுத்துக்கொள்ளும். அரசானது இத்தகைய தொழிற்சாலைகளை திட்டமிட்ட பொருளாதராத்தில் துவங்க வேண்டியுள்ளது. மேலும் வளர்ச்சி குன்றிய நாடுகளில் போக்குவரத்து, தகவல்தொடர்பு, எரிசக்தி, எரிபொருள் போன்ற அடிப்படை வசதிகள் தேவைப்படுகிறது.

8. மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான மானியங்கள் அதிகரிப்பு 

இயற்கை பேரழிவுகளை எதிர்கொள்வதற்கு மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான வழங்கப்படும் மானியங்கள் உதவித்தொகை பெருமளவில் அதிகரித்துள்ளது.


Tags : Meaning, Definition, Classification, Causes - Fiscal Economics பொருள், வரைவிலக்கணம், வகைப்பாடு, காரணங்கள் - நிதிப் பொருளியல்.
12th Economics : Chapter 9 : Fiscal Economics : Public Expenditure Meaning, Definition, Classification, Causes - Fiscal Economics in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 9 : நிதிப் பொருளியல் : பொதுச் செலவு - பொருள், வரைவிலக்கணம், வகைப்பாடு, காரணங்கள் - நிதிப் பொருளியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 9 : நிதிப் பொருளியல்