Home | 12 ஆம் வகுப்பு | 12வது வரலாறு | காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு

வரலாறு - காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு | 12th History : Chapter 8 : Reconstruction of Post-colonial India

   Posted On :  12.07.2022 09:18 pm

12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 8 : காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு

காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு

காலனித்துவ ஆட்சியிலிருந்து கிடைத்த விடுதலைக்கு ஒரு விலை கொடுக்க வேண்டியிருந்தது. இந்தியப் பிரிவினை வங்காளம் மற்றும் பஞ்சாபின் மாகாணங்களை இரண்டாகப் பிரித்தது.



கற்றலின் நோக்கங்கள்

கீழ்க்காணும் அம்சங்களோடு அறிமுகமாதல்

 

• பிரிவினையின் அறைகூவல்கள் (சவால்கள்)

 

• அரசமைப்பு உருவாக்கம்: செயல்முறையும் உணர்வும்

 

• இந்திய ஒன்றியத்தில் சுதேச அரசுகளை ஒருங்கிணைத்தல்

 

• மொழி அடிப்படையில் மாநிலங்களை மறுசீரமைத்தல்


• அண்டை நாடுகளுடனான இந்தியாவின் உறவுகளும் உலக நிகழ்வுகளில் அதன் பங்கும்.


அறிமுகம்

காலனித்துவ ஆட்சியிலிருந்து கிடைத்த விடுதலைக்கு ஒரு விலை கொடுக்க வேண்டியிருந்தது. இந்தியப் பிரிவினை வங்காளம் மற்றும் பஞ்சாபின் மாகாணங்களை இரண்டாகப் பிரித்தது. பிரிவினையின் போது திட்டமிடப்படவில்லை என்றாலும், இந்துக்கள் கிழக்கு வங்காளத்திலிருந்து மேற்கு வங்காளத்திற்கும் இஸ்லாமியர்கள் பீகார் மற்றும் மேற்கு வங்காளத்தில் இருந்து கிழக்கு வங்காளத்திற்கும் இடம் பெயர் ஆரம்பித்தனர். இதேபோல், மேற்கு பஞ்சாபில் இருந்த இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் கிழக்கு பஞ்சாபிற்கும் கிழக்கு பஞ்சாபில் இருந்த முஸ்லிம்கள் மேற்கு பஞ்சாபிற்கும் குடிபெயர்ந்தனர். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் அமைந்த கிராமங்கள் அவற்றில் வாழ்ந்த பெரும்பான்மை மதத்தினரைப் பொருத்துப் பிரிக்கப்பட்டன. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்த கிராமங்கள் பாகிஸ்தானுக்கு எனப் பிரிக்கப்பட்டன; இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்த கிராமங்கள் இந்தியாவோடு இணைக்கப்பட்டன. அந்த கிராமங்களில் வாழ்ந்த சிறுபான்மையினரைப் பொருத்தமட்டில் அதாவது பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்ட கிராமங்களில் வாழ்ந்த இந்துக்களும் இந்தியாவிற்கு ஒதுக்கப்பட்ட கிராமங்களில் வாழ்ந்த முஸ்லிம்களும் சிறுபான்மையினராகவே வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆறுகள் சாலைகள் மற்றும் மலைகள் ஆகியன எல்லை வகுப்பதில் முக்கிய அடையாளமாக கொள்ளப்பட்ட வேறு சில காரணிகள் ஆகும்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஆனால், பாகிஸ்தான் நிலப் பகுதியோடு தொடர்ச்சியாக அமையாத கிராமங்களும், இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்த, ஆனால் இந்தியாவோடு நிலத்தொடர்ச்சியாக அமையாத கிராமங்களும் எந்த நாட்டோடு நிலத்தொடர்ச்சி உள்ளதோ அந்த நாட்டின் பகுதியாக இருந்து கொள்ள அனுமதிக்கப்பட்டன. இந்த நேரத்தில் ஒரு புதிய சிக்கல் எழுந்தது. இது பஞ்சாபில் தனி மத அடையாளம் கொண்டிருந்த சீக்கியர் தொடர்பானது. பாகிஸ்தானின் பகுதியாக அமையவுள்ள கிராமங்களில் சீக்கிய மக்கள் வசித்த போதிலும் அகாலி தளம் இந்தியாவோடு இணைந்திருக்க விரும்புவதாக அறிவித்தது

இந்தியாவிற்கு சுதந்திரம் அளிப்பதற்கு பிரிட்டன் எடுத்த விரைவான நடவடிக்கைகளின் போது இந்தியப் பிரிவினை சிக்கலான சூழ்நிலையை ஏற்படுத்தியது. இங்கிலாந்து பிரதமர் கிளமண்ட் அட்லி, 1947 பிப்ரவரி 20இல் லண்டனில் வெளியிட்ட அறிவிப்பில் பிரிட்டிஷ் அரசாங்கம் 1948 ஜூன் 30க்குள் இந்தியாவிற்குச் சுதந்திரம் அளித்துவிட்டு இந்தியாவை விட்டு வெளியேறும் என்று தெரிவித்தார். 1947 மார்ச் 22இல் வேவல் பிரபுவுக்குப் பதிலாக அரச பிரதிநிதியாக பதவிக்கு வந்த மௌண்ட்பேட்டன் பிரபுவின் நடவடிக்கைகள் இந்தியாவுக்கு அதிகாரம் மாற்றப்படுவதைத் துரிதப்படுத்தின. இந்த நிலையில், முஸ்லிம் லீக் கட்சியின் தலைமை பெரும்பகுதி முஸ்லிம் சமூகத்தின் ஆதரவைத் தன்கீழ் திரட்டியதன் மூலம், காங்கிரஸ் கட்சி அனைத்து இந்தியர்களையும் தான் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கோரியதைத் தகர்க்க முயன்றது. 1947 ஜூன் 3இல் மௌண்ட்பேட்டன் பிரபு, அட்லி அறிவித்த தினத்திற்கு முன்னதாகவே 1947 ஆகஸ்ட் 15 அன்று இந்தியாவிற்குச் சுதந்திரம் வழங்கப்படும் என்று அறிவித்தார். வகுப்புவாதப் பிரச்சனை, இருநாடு கோரிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் பிரிட்டிஷ் இந்தியாவின் அதிகாரத்தை இந்தியா - பாகிஸ்தான் என இரண்டு டொமினியன் அரசாங்கங்களிடம் பகிர்ந்து ஒப்படைப்பதே மௌண்ட்பேட்டன் திட்டமாகும். முன்மொழியப்பட்டபடி, வங்காளம் மற்றும் பஞ்சாபை பிரிவினை செய்து பாகிஸ்தானை உருவாக்கும் இந்தியப் பிரிவினையை இறுதியாக காங்கிரஸ் சமரசத்துடன் ஏற்றுக்கொண்டது. 1947 ஜூன் 14இல் மீரட்டில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் இந்தியப் பிரிவினையுடன் கூடிய சுதந்திரத்திற்கான மௌண்ட்பேட்டன் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தொடக்கத்தில் பிரிவினையை மிகத் தீவிரமாக எதிர்த்த காந்தியடிகள் அது தவிர்க்க முடியாததாகிவிட்டதை ஏற்றுக்கொண்டார். காந்தியடிகள் இந்த மாற்றத்தை விளக்கினார். பஞ்சாபிலும் வங்காளத்திலும் ஏற்பட்ட வன்முறைகளும் அதில் மக்களின் பங்கேற்பும் தன்னையும் காங்கிரசையும் பிரிவினையைத் தடுப்பதற்கான ஆற்றலற்றவர்களாக ஆக்கிவிட்டதாகத் தெரிவித்தார். துரதிர்ஷ்ட வசமாக, காலனியக் கூட்டாளிகள் உருவாக்கிய வகுப்புவாதமும் பிரிவினையும் புதிதாகப் பிறந்த குழந்தையான இந்திய தேசத்தைப் பெரிதும் பாதித்தது. 1948 ஜனவரி 30இல் நிகழ்ந்த மகாத்மா காந்தியடிகளின் படுகொலை இதன் தொடக்கமாகும். புதிதாகப் பிறந்த குழந்தை நாடான நவீன இந்திய தேசம் இதன் சவால்களை தொடர்ந்து வந்த ஆண்டுகளில் எவ்வாறு எதிர்கொண்டது என்பதை இந்தப் பாடத்தில் நாம் அறியலாம்.

ஜவகர்லால் நேரு 1947 ஆகஸ்டு 14-15 இடைப்பட்ட நாளன்று நள்ளிரவில் அரசமைப்பு நிர்ணய சபை உறுப்பினர்களிடம் உரையாற்றினார். அதில் அவர் சுதந்திர இந்தியாவிற்கான திட்டத்தையும் அதன் லட்சியங்களையும் குறிப்பிட்டதோடு அத்தகைய பாதையை தேர்ந்தெடுத்ததற்கான தவிர்க்க முடியாத காரணங்களையும் பொருத்தமாக விளக்கினார். “நீண்ட காலத்திற்கு முன்னர் நாம் விதியோடு ஓர் ஒப்பந்தம் செய்தோம். இப்போது அந்த வாக்குறுதிகளை முழுமையாக அல்லது முழு அளவில் ஆனால் மிகவும் கணிசமாக மீட்கும் நேரம் வந்துவிட்டது.” ஆசிரியர்கள் ஜவகர்லால் நேருவின் முழு உரையையும் மாணவர்களைக் கேட்கச் செய்யலாம். அதற்கான இணைப்பு https:// www.youtube.com/watch?v=Uj4TfCELODM

Tags : History வரலாறு.
12th History : Chapter 8 : Reconstruction of Post-colonial India : Reconstruction of Post-colonial India History in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 8 : காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு : காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு - வரலாறு : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 8 : காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு