ஒளிவிலகல்
ஒளிக்கதிரொன்று ஓர் ஒளி புகும்
ஊடகத்தில் இருந்து மற்றோர் ஒளிபுகும் ஊடகத்திற்குச் சாய்வாகச் செல்லும்போது, ஒளிக்கதிர் தன்
பாதையில் இருந்து விலகிச் செல்கிறது. ஒளிக்கதிரின் பாதையில் ஏற்படும் இந்த விலகல் ‘ஒளிவிலகல்’ எனப்படுகிறது. ஒளியானது வெவ்வேறு
ஊடகத்தில், வெவ்வேறு திசைவேகத்தில் செல்வதால் ஒளிவிலகல்
ஏற்படுகிறது. ஒளியின் திசை வேகம், அடர்வு குறைந்த ஊடகத்தில்
அதிகமாகவும், அடர்வு மிகுந்த ஊடகத்தில் குறைவாகவும்
இருக்கும்.
ஒளிவிலகலானது, இரு ஒளிவிலகல்
விதிகளுக்கு உட்பட்டு அமைகிறது.
1. ஒளிவிலகலின் முதல்
விதி
ஒளிக்கதிர் ஓர் ஊடகத்திலிருந்து, மற்றோர்
ஊடகத்திற்குச் செல்லும் போது, படுகதிர், விலகுகதிர், படுபுள்ளியில் விலகல் அடையும்
பரப்புக்குச் செங்குத்தாக வரையப்படும் கோடு ஆகியவை ஒரே தளத்தில் அமைகின்றன.
2. இரண்டாம் விதி
ஒளிக்கதிர் ஓர் ஊடகத்திலிருந்து, மற்றோர்
ஊடகத்திற்குச் செல்லும்போது, படுகோணத்தின் சைன்
மதிப்பிற்கும், விலகு கோணத்தின் சைன்மதிப்பிற்கும் இடையே
உள்ள தகவானது அவ்விரு ஊடகங்களின் ஒளிவிலகல் எண்களின் தகவிற்கு சமம். இவ்விதி 'ஸ்நெல் விதி' என்றும் அழைக்கப்படுகிறது.
· ஒளிவிலகல் எண்ணானது ஓர் ஊடகத்தில் ஒளிக்கதிரின்
திசைவேகம் எவ்வாறு இருக்கும் என்பதைத் தெரிவிக்கின்றது. காற்றில் அல்லது
வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகத்திற்கும் (c), மற்றோர்
ஊடகத்தில் ஒளியின் திசைவேகத்திற்கும் (v) இடையே உள்ள தகவு
ஒளிவிலகல் எண் (µ) என்றும் வரையறுக்கப்படுகிறது.
µ
= c/v
· ஒளியின்
திசைவேகமானது ஒளிவிலகல் எண் அதிகம் உள்ள ஊடகத்தில் குறைவாகவும், ஒளிவிலகல் எண்
குறைவாக உள்ள ஊடகத்தில் அதிகமாகவும் அமையும்.
· ஓர்
ஒளிக்கதிரானது அடர்வு மிகு ஊடகத்திலிருந்து அடர்வு குறைந்த ஊடகத்திற்குச்
செல்லும்போது விலகு கதிர் செங்குத்து கோட்டை விட்டு விலகிச்செல்லும்
· ஒளிக்கதிர்
அடர்வு குறைந்த ஊடகத்திலிருந்து,
அடர்வு மிகு ஊடகத்திற்குச் செல்லும் போது செங்குத்து கோட்டை நோக்கி
விலகிச் செல்லும்.