Home | 12 ஆம் வகுப்பு | 12வது வரலாறு | இத்தாலியில் ஏற்பட்ட மறுமலர்ச்சியும் மேற்கு ஐரோப்பியாவில் அதன் பரவலும்

நவீன உலகம்: பகுத்தறிவின் காலம் - வரலாறு - இத்தாலியில் ஏற்பட்ட மறுமலர்ச்சியும் மேற்கு ஐரோப்பியாவில் அதன் பரவலும் | 12th History : Chapter 10 : Modern World: The Age of Reason

   Posted On :  10.07.2022 01:21 am

12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 10 : நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

இத்தாலியில் ஏற்பட்ட மறுமலர்ச்சியும் மேற்கு ஐரோப்பியாவில் அதன் பரவலும்

லத்தீன் மூலத்தில் இருந்து உருவான மறுமலர்ச்சி (Renaissance) என்ற வார்த்தையின் பொருள் மறுபிறப்பு அல்லது புத்துயிர்ப்பு என்பதாகும். இது கிரேக்க மற்றும் ரோமானிய பகுதிகளில் செம்மொழிகளைக் கற்றல் தொடர்பாக திடீரென எழுந்த ஆர்வத்தை குறிப்பதாக அமைகிறது.

இத்தாலியில் ஏற்பட்ட மறுமலர்ச்சியும் மேற்கு ஐரோப்பியாவில் அதன் பரவலும்

மறுமலர்ச்சியின் முக்கியத்துவம்

லத்தீன் மூலத்தில் இருந்து உருவான மறுமலர்ச்சி (Renaissance) என்ற வார்த்தையின் பொருள் மறுபிறப்பு அல்லது புத்துயிர்ப்பு என்பதாகும். இது கிரேக்க மற்றும் ரோமானிய பகுதிகளில் செம்மொழிகளைக் கற்றல் தொடர்பாக திடீரென எழுந்த ஆர்வத்தை குறிப்பதாக அமைகிறது. எனினும் இந்த வளர்ச்சியின் போக்கில் மறுமலர்ச்சி என்பது பண்டைய கிரேக்க மற்றும் ரோமானிய செவ்வியல் இலக்கியங்களைக் கற்றல் என்பது மட்டுமல்லாமல் அதனை புத்துயிர்ப்பு பெறச்செய்வதாகவும் இருந்தது. அது கலை, இலக்கியம், அறிவியல், தத்துவம், கல்வி, சமயம் மற்றும் அரசியல் ஆகிய துறைகளில் புதிய சாதனைகளை உள்ளடக்கியதாக அமைந்தது. மறுமலர்ச்சி பல்வேறு கொள்கைகளை உள்ளடக்கியதாக இருந்தது. மனித நேயம், ஐயுறவுவாதம், தனித்துவம் மற்றும் சமயச்சார்பின்மை ஆகியன அவற்றில் குறிப்பிடத்தக்கவையாக இருந்தன. சமயத்துறவிகள் மற்றும் பிரபுக்களின் பங்களிப்பாக இல்லாமல் சாதாரண மனிதர்களின் பங்களிப்பாக மறுமலர்ச்சி இருந்தது அதன் சிறப்பம்சமாகும்.

மறுமலர்ச்சிக்கான காரணங்கள்

(i) சிலுவைப் போர்களின் போது (முஸ்லிம் ஆட்சியில் இருந்து புனித நிலத்தை மீட்பதை குறிக்கோளாகக் கொண்ட சமயப்போர்கள் ) ஏற்பட்ட புதிய அனுபவங்கள் வாயிலாக வெனிஸ், பிளாரன்ஸ், ஜெனோவா, லிஸ்பன், பாரிஸ், இலண்டன், ஆன்ட்வெர்ப், ஹாம்பர்க் மற்றும் நூரெம்பர்க் ஆகிய சுதந்திரமான, வர்த்தக நகரங்கள் உருவானதும் அங்கே பல பயணிகள் வந்து சென்றதும் பிரான்ஸின் பாரிஸிலும், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டிலும் இத்தாலியின் போலோக்னோவிலும் பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டதும் மறுமலர்ச்சியின் பிறப்புக்குத் தேவையான தொடக்க நிலைமைகளை உருவாக்கின.

(ii) தத்துவார்த்த விவாதங்கள் பதினோறாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தொடங்கி, பல அறிவார்ந்த மக்களை உருவாக்கியது. பதின்மூன்றாம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க அறிவார்ந்த நபர்களில் முதன்மையானவர் ரோஜர் பேக்கன் (1214-1294) என்பவர் ஆவார். ஆக்ஸ்ஃபோர்டில் வசித்த ஆங்கிலப் பேராசிரியரான ரோஜர் பேக்கன் 'நவீன நடைமுறைச் சோதனை அறிவியலின் தந்தை என அழைக்கப்படுபவர். அவர் மனிதகுலமானது சமயமரபு மற்றும் அதிகாரத்தினால் ஆட்சி செய்யப்படாமல் காரண காரியங்களால் ஆட்சி செய்யப்பட வேண்டும் என்று விரும்பினார்.


(iii) துருக்கியர்களுக்கு எதிரான போரில் மேற்கத்திய நாடுகளின் உதவியை நாடி பைசாண்டியப் பேரரசரிடம் இருந்து ஒரு கோரிக்கையுடன் 1393ஆம் ஆண்டில் கான்ஸ்டான்டிநோபிளைச் சேர்ந்த பிரபல அறிஞர் மானுவேல் கிரைசாலோரஸ் வெனிஸ் நகரத்துக்கு சென்று சேர்ந்தார். பிளாரன்ஸ் பல்கலைக்கழகத்தில் கிரேக்க இலக்கியத்தை பயிற்றுவிக்கும் பேராசிரியராக சேருமாறு கிரைசாலோரசுக்கு பணிவாய்ப்பு வழங்கப்பட்டது. பதினைந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பைசாண்டியத்தைச் சேர்ந்த இதர அறிஞர்களும் இத்தாலிக்கு குடிபெயர்ந்தனர். இந்த அறிஞர்களால் ஈர்க்கப்பட்ட இத்தாலிய அறிஞர்கள் பைசாண்டியத்தைச் சேர்ந்த கான்ஸ்டான்டிநோபிள் மற்றும் இதர நகரங்களுக்கு கையெழுத்துப்பிரதிகளைத் தேடி பயணம் மேற்கொண்டனர். 1413க்கும் 1423க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் ஜியோவனி அவுரிஸ்பா என்ற அறிஞர் மட்டும், சோபோகில்ஸ், யூரிபைட்ஸ், தூசிடைட்ஸ் ஆகியோரின் படைப்புகள் உள்பட 250 கையெழுத்துப்பிரதி நூல்களை இத்தாலிக்கு கொண்டு வந்தார். 1453ஆம் ஆண்டு கான்ஸ்டான்டிநோபிளின் வீழ்ச்சிக்குப் பிறகு அங்கிருந்து வெளியேறிய செவ்வியல் அறிஞர்கள் மேற்கத்திய ஐரோப்பாவிற்கு சென்றதால் செவ்வியல் படைப்புகளை கற்கும் நடவடிக்கைகள் ஊக்கம் பெற்றன.

(iv) கிறித்தவ உலகத்துக்கு பைசாண்டிய உலகம் அறிஞர்களையும் தத்துவஞானிகளையும் மட்டும் கொடுக்கவில்லை , காகிதத்தையும் அது கொடுத்தது. உண்மையில் கி.மு. (பொ.ஆ.மு.) இரண்டாம் நூற்றாண்டில் சீனாவில் காகிதம் தோன்றியிருந்தாலும், ஜெர்மனிக்கு காகிதம் பதினான்காம் நூற்றாண்டில்தான் அறிமுகமானது. அதன்பிறகுதான் ஜோஹன்னஸ் குட்டன்பெர்க் என்பவரால் நகரும் தட்டச்சு மற்றும் அச்சகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அச்சுப்பணிக்குப் பிறகே உலகின் அறிவுசார்ந்த வாழ்க்கை மேலும் உத்வேகம் பெற்று அறிவு விரைவாகப் பரவியது.

மறுமலர்ச்சியின் தாயகமாக இத்தாலி

இத்தாலிய நகரங்களில் தொடங்கிய மறுமலர்ச்சி மேற்கத்திய ஐரோப்பாவின் இதர நகரங்களுக்கு பின்னர் பரவியது. இத்தாலியர்கள் தாங்கள் ரோமானிய மூதாதையர்களின் வழித்தோன்றல்கள் என்ற நம்பிக்கையைப் பாதுகாத்து வந்தனர். தங்கள் பாரம்பரியம் குறித்து அவர்கள் பெருமை கொண்டார்கள். லத்தீன் கிறித்தவ உலகத்தின் இதர பகுதிகளைக் காட்டிலும் இத்தாலியில் பெருமளவுக்கு சமயச்சார்பின்மை கலாச்சாரம் நடைமுறையில் இருந்தது. பழைய தேவாலயங்கள் மற்றும் ஓவியங்கள் இருண்டதாகவும் பழைய பாரம்பரியங்கள் தொல்லை தருவதாகவும் அவர்களுக்கு விளங்கின. தங்களுக்குப் பிடித்தமானவற்றைத் தேடும் முயற்சியில் அவர்கள் லத்தீன் மொழியில் எழுதப்பட்ட புத்தகங்களைக் கண்டுபிடித்தனர். லத்தீன் மொழியை ரோமானிய மூதாதையர்கள் எழுதியது போன்று அவர்கள் எழுதக் கற்றுக்கொண்டனர். மேலும் கிரேக்க மொழியையும் கற்ற அவர்கள் ஏதென்ஸ் நகர மக்களின் அருமையான, பெரிகிளிஸ் காலத்து படைப்புகளையும், கிரேக்க மற்றும் ரோமானிய கலாச்சாரங்களின் கடந்த காலப் படைப்புகளையும் கண்டுபிடித்தனர். சட்டம் மற்றும் தத்துவயியல் படிப்புகளுக்காகவே முதன்மையாக இத்தாலிய பல்கலைக்கழகங்கள் தோற்றுவிக்கப்பட்டன.

மெடிசி குடும்பம்: இத்தாலிய நகரங்களில் ஒன்றான பிளாரன்ஸ் சக்திவாய்ந்த வர்த்தகக் குடும்பமான மெடிசி குடும்பம் மூலமாக ஆளுமை செய்யப்பட்ட காசிமோ டி மெடிசி என்பவர் இத்தாலி முழுவதும் வங்கிக்கிளைகளை நடத்தி வங்கித்துறையில் கொடிகட்டிப்பறந்ததோடு 1434 முதல் 1464ஆம் ஆண்டு வரை அரசு நிர்வாகத்தை மறைமுகமாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அவரது மறைவுக்குப் பிறகு அவரது பெயரன் லாரன்சோ அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு அரசைக் கட்டுப்படுத்தினார். லாரென்சோ அனைவராலும் "லாரென்சோ அற்புதமான மனிதர்" என்று அழைக்கப்பட்டார். இந்த காலகட்டத்தில் மைக்கேல் ஆஞ்சிலோ , லியானர்டோ டாவின்சி உள்ளிட்ட பல ஓவியக் கலைஞர்களுக்கு மெடிசி குடும்பம் ஆதரவு அளித்தது.

இத்தாலி மத்திய தரைக்கடல் பகுதியின் மையத்தில் அமைந்திருந்ததால் கிழக்கத்திய நாடுகளுடனான வர்த்தகத்தை புத்துயிர் பெறச் செய்ததில் இத்தாலிய நகரங்கள் பெரும்பயன் பெற்றன. பதினான்காம் நூற்றாண்டில் கடல் வழி வாணிகத்தில் ஈடுபட்ட இத்தாலிய நகரங்கள் அதிக செல்வம் ஈட்டின. பிளாரன்ஸில் மெடிசி குடும்பமும் மிலானில் ஸ்ஃபோர்ஸா குடும்பமும் மறுமலர்ச்சி காலத்தில் செல்வந்த குடும்பங்களாக உருவாகின.

இத்தாலிய மறுமலர்ச்சி காலத்தில் மிகச்சிறந்த ஓவியக்கலைஞர்களை ஆதரித்த பெருமை ஐந்தாம் நிக்கோலஸ், இரண்டாம் பயஸ், இரண்டாம் ஜூலியஸ் மற்றும் பத்தாம் லியோ ஆகிய போப்பாண்டவர்களையே சாரும்.

மறுமலர்ச்சியின் தாயகமாக பிளாரன்ஸ்

இலக்கியத்தில் மறுமலர்ச்சி

பதின்மூன்று மற்றும் பதினான்காம் நூற்றாண்டுகளிலேயே தாந்தே (1265-1321), பெட்ரார்க் என்ற இரண்டு பெரும் இத்தாலிய மொழி கவிஞர்களை பிளாரன்ஸ் உருவாக்கியிருந்தது. இடைக்கால கலாச்சாரத்தின் சுருக்கமாக தாந்தேயின் தெய்வீக இன்பியல் (Divine Comedy) திகழ்கிறது. காரணங்கள் மற்றும் இறை அருள் மூலமாக மனித குலம் இரட்சிப்பு பெறமுடியும் என்பது அதன் மேலான கருப்பொருளாகும். மனிதர்களின் அன்பு, நாட்டுப்பற்று, இயற்கை மீதான ஆர்வம் மேலும் சுதந்திரமான ஒன்றுபட்ட இத்தாலி நாடு என பல கருப்பொருட்களையும் அது உள்ளடக்கியிருந்தது.

 

பெட்ரார்க் (1304-1374) லத்தீன் மற்றும் இத்தாலிய மொழிகள் இரண்டிலும் படைப்புகளை உருவாக்கினார். மனிதநேயவாதிகளுள் முன்னோடியான இவர் 'இத்தாலிய மறுமலர்ச்சி இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுகிறார். பெட்ரார்க்கின் ஆராயும் மனமும் செவ்வியல் (கிரேக்க மற்றும் லத்தீன் மொழி) நூலாசிரியர்கள் மீதான ஈர்ப்பும், அவரை பயணிக்க வைத்தன. அவர் கிரேக்க மற்றும் ரோமானிய கையெழுத்துப்பிரதிகளைத் தேடி, சமயத்துறவிகள் நடத்திய நூலகங்களுக்கு சென்றார். சிசரோவின் கடிதங்களை அவர் மறுபடியும் கண்டுபிடித்தது பதினான்காம் நூற்றாண்டின் இத்தாலிய மறுமலர்ச்சியில் முக்கிய தருணமாக கருதப்படுகிறது.


பிளாரன்ஸ் நகரை சேர்ந்தவரான ஜியோவனி பொக்காசியோ (1313-1375), பிளேக் என்ற கருங்கொள்ளை நோயிலிருந்து தப்பிக்கும் பொருட்டு, பிளாரன்ஸ் நகருக்கு வெளியே ஒரு குடியிருப்பில், ஏழு இளம் பெண்களும் மூன்று இளைஞர்களும் தங்கியிருந்த போது கூறியதாக எழுதப்பட்ட 100 கதைகளின் தொகுப்பை டெக்கமரான் என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டார்.

நிக்கோலோ மாக்கியவல்லி (1469-1527)

நிக்கோலோ மாக்கியவல்லியின் 'தி பிரின்ஸ்' என்ற படைப்பு ஆட்சியாளர்களுக்கு அரசியல் வழிகாட்டியாக அமைந்தது. தாம் ஆளும் நாட்டின் அதிகாரம் மற்றும் பாதுகாப்பை பராமரிப்பது ஒரு ஆட்சியாளரின் தலையாய கடமை என்று அவர் கருத்துகொண்டிருந்தார். நீதி அல்லது கருணை அல்லது ஒப்பந்தங்களை பின்பற்றுவது ஆகியன இவரின் தலையாய கடமைக்கு குறுக்கே வரக்கூடாது. ஒவ்வொரு மனிதரும் சுயநலம் சார்ந்த நோக்கங்களைக் கொண்டிருப்பது இயல்பு மற்றும் நாட்டின் ஆட்சியாளர் குடிமக்களின் விசுவாசமும் பாசமும் எப்போதும் இருக்கும் என்று கருதி விடக்கூடாது என்பதிலும் மாக்கியவல்லி உறுதியாக இருந்தார்.


'தி பிரின்ஸ்' என்ற நூலில் ஒரே நேரத்தில் மனிதனாக, மிருகமாக, சிங்கமாக, நரியாக மாறத் தெரிந்திருக்க வேண்டும் என்று மாக்கியவல்லி கூறுகிறார். எப்போது தமது செயல்பாடு தமக்கு எதிராக மாறக்கூடும் என்று தெரியாததால் தமது வாக்கை ஒருவர் காப்பாற்றமுடியாது; அதனால் சொல்லவும் கூடாது. எப்போதும் நேர்மையாக இருப்பது என்பது மிகவும் அனுகூலமற்றது; ஆனால் பக்திமானாக, உண்மையாக மனிதநேயத்துடன் பக்தியுடனும் இருப்பது போல் தோற்றமளிப்பது பலனளிக்கும், நல்லொழுக்க குணம் இருப்பது மிகவும் பலனளிக்கும் என்று அவர் கூறுகிறார்.

கலையில் மறுமலர்ச்சி

லியானர்டோ டாவின்சி (1452-1519)

பிளாரன்ஸில் தாம் தீட்டிய அனைத்து ஓவியங்கள் பற்றியும் அவை எவ்வாறு ஒன்றுடன் ஒன்று தொடர்புடையன என்பது பற்றிய புரிதலையும் அறிய பண்ணையில் வேலை பார்த்த ஒரு பணிப்பெண்ணின் மகனான லியானர்டோ டாவின்சி ஆவார். எனவே லத்தீன் மற்றும் கணிதத்தை அவர் சுயமாக கற்றுத் தேர்ந்தார். அவர் ஒரு சிற்பி, பெரிய சிந்தனையாளர் மற்றும் விஞ்ஞானி. கல்லறைகளில் இருந்து சடலங்களை எடுத்து அறுத்துப்பார்த்து மனித உடற்கூறுகளை பற்றி அறிந்து அவற்றை தமது ஓவியங்களில் சரியாக எடுத்துரைக்க முனைந்தார். மனித உடலில் இரத்த ஓட்டம் குறித்து முதன் முதலில் கண்டுபிடித்தவர் அவர். பலதரப்பட்ட திறமைகளைக் கொண்ட டாவின்சி மறுமலர்ச்சிகால மனிதர்' என்று அழைக்கப்பட அனைத்துத் தகுதிகளையும் கொண்டு திகழ்ந்தார்.


வர்ஜின் ஆஃப் தி ராக்ஸ், இறுதி விருந்து (Last Supper), மோனலிசா ஆகியன டாவின்சியின் மிகச் சிறப்பான படைப்புகளில் ஒன்றாகும். வர்ஜின் ஆஃப் தி ராக்ஸ் என்ற ஓவியப்படைப்பில் கன்னி மேரி இருட்டில் இருந்து வெளியே வருவார், இளையவரான ஜானை பிராட்டஸ்டன்ட் கிறித்தவக் குழந்தையாகக் கொண்டிருப்பார். மிலானில் உள்ள டொமினிகன் துறவிகள் மடத்துக்காக இயேசு சிலுவையில் அறையப்படும் முன் அவரது சீடர்களுடன் உண்ட இறுதி விருந்தை (Last Supper) அவர் ஓவியமாகத் தீட்டினார். புகழ்பெற்ற மோனலிசா ஓவியம் பிளாரன்ஸைச் சேர்ந்த செல்வந்த வணிகரான பிரான்ஸிஸ்கோ டெல் ஜியோகோன்டோவின் மனைவி லிஸா கெரார்டினியின் உருவமாக கருதப்படுகிறது. ஜியோகோன்டோ இதனை வெளியிட்டார்.



மைக்கேல் ஆஞ்சிலோ (1475-1564)

1460களில் பைபிளின் நாயகரான டேவிட்டின் உண்மையான தோற்றத்தை வெளிப்படுத்தும் சிறப்பான ஓவியத்தை முதன்முதலில் வரைந்த ஓவியர்களில் டொனடெல்லோவும் ஒருவராவார். மறுமலர்ச்சி காலத்தின் மிகப்பெரிய சிற்பியான மைக்கேல் ஆஞ்சிலோ டி லொடோவிகோ ப்யூனரோட்டி சைமோனியை அவரின் ஆளுமை பெரும்தாக்கத்தை ஏற்படுத்தியது. போப்புகளால் கட்டப்பட்ட ரோமில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயம் மைக்கேல் ஆஞ் சிலோவால் நவீனமயமானது. இந்த செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் உள்ள குவிமாடம், டேவிட்டின் உண்மைத் தோற்றத்தை வெளிப்படுத்தும் சிலை. சிஸ்டைன் தேவாலயம் (சிறிய பிரார்த்தனை அரங்கு) சுவர்களில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் ஆகியன மறுமலர்ச்சி கால ஓவியத்தின் மிகச் சிறப்பான உதாரணங்கள். புகழ்பெற்ற பியட்டா என்ற கன்னி மரியாளின் சிலையையும் அவர் வடித்துள்ளார். கிறிஸ்து உயிரிழந்ததை அடுத்து கன்னி மரியாள் அவரது உடலுக்கு அருகே சோகமே வடிவாக இந்த சிலை வடிக்கப்பட்டிருக்கும். மத்திய இத்தாலியின் கெர்ரெராவில் இருந்து கொண்டுவரப்பட்ட ஒரே பளிங்குக்கல்லில் இந்த சிலை வடிக்கப்பட்டது.


ரபேல் (1483-1520)

ரபேலின் மிகச்சிறந்த படைப்பான மடோனாவும் குழந்தையும் என்ற பெயரிடப்பட்ட ஓவியமானது கன்னி மரியாளும் குழந்தை இயேசுவும் இருப்பதை சித்தரிப்பதாக உள்ளது. போப் இரண்டாவது ஜூலியஸின் நூலகச் சுவர்களில் பல சமயக் கருப்பொருள்களில் ரபேல் அவர்கள் வரைந்த ஓவியங்கள் அலங்கரித்தன. மறுமலர்ச்சி கால கலையின் சிறப்பை வெளிப்படுத்தும் வகையில் ஏதென்ஸ் பள்ளி குறித்த கருப்பொருள் அவற்றில் ஒன்றாகும். லியானர்டோ மற்றும் மைக்கேல் ஆஞ்சிலோ ஆகியோரின் ஓவியங்களுடன் அவர் தனது ஓவியங்களை வரைந்தார்.


அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்   

பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து பதினேழாம் நூற்றாண்டு வரையிலான காலத்தின் போது அறிவியல் அதிவேக வளர்ச்சி பெற்று அறிவியல் புரட்சிக்கு வித்திட்டது. தேவாலய நிர்வாகம் கடவுளைக் கேள்வி கேட்பது, சிந்திப்பது மற்றும் நடைமுறைச் சோதனைகளில் மக்கள் ஈடுபடுவதை விரும்பாததால் விஞ்ஞானிகள் தேவாலய நிர்வாகத்தை எதிர்த்துக்கொள்ள வேண்டியிருந்தது.


போலந்து நாட்டு விஞ்ஞானியான நிக்கோலஸ் கோபர்நிகஸ் (1473-1543), சூரியக் குடும்பத்தில் சூரியன் மையத்தில் உள்ளது; பூமியும் இதரக் கோள்களும் சூரியனை சுற்றிவருகின்றன என்ற சூரியமையக் கோட்பாட்டை (heliocentric) கண்டறிந்து வெளியிட்டார். இந்தக் கொள்கைக்கு மாறாக பூமியை மையமாகக் (geocentric) கொண்டு கோள்கள் செயல்பட்டதாக தேவாலய நிர்வாகம் கருத்து கொண்டிருந்தது. தேவாலயக் கருத்துக்கு  எதிரான அனைத்தும் கிறித்தவக் கோட்பாடுகளுக்கு எதிரானதாகக் கருதப்பட்டன. தனது வாழ்நாளின் இறுதி வரை வான்வெளி வட்டங்களின் புரட்சி குறித்த ஆய்வுகளை வெளியிடுவதைத் தள்ளிப்போட்டுக் கொண்டே இருந்தார். பூமி சூரியனைச் சுற்றி வருவதாக வலியுறுத்திய ஜியார்டனோ புரூனோ என்ற இத்தாலியர் 1600இல் ரோமில், தேவாலய நிர்வாகத்தால் எரிக்கப்பட்டார்.


சூரியனை மையமாகக்கொண்டு கோள்கள் சுற்றும் சூரியமையக் கோட்பாட்டுக்கு மிக முக்கியமான வானியல் ஆதாரத்தை பிரபல வானியல் நிபுணர் கலிலியோ கலிலி (1564 -1642) வெளியிட்டார். ஒரு தொலைநோக்கி கொண்டு வியாழன் கிரகத்தின் செயற்கைக்கோள்கள், சனிகிரகத்தின் சுற்றுவட்டங்கள், சூரியனின் புள்ளிகள் ஆகியவற்றை அவர் கண்டுபிடித்தார். பாதுவா பல்கலைக்கழகத்தில் (University of Padua) (வெனிஸ் குடியரசுப் பல்கலைக்கழகத்தில்) மருத்துவம் மற்றும் கணிதத்துக்கான பேராசிரியராக மெடிசி குடும்பத்தால் நியமிக்கப்பட்டார். அறிவியலை சமயத்தில் இருந்து பிரித்து வைக்கும் முயற்சிகளை அவர் மேற்கொண்டார். சூரியமையக் கோட்பாட்டின்படி, சூரியனை மையமாகக் கொண்டு கோள்கள் இயங்கும் கொள்கையை வெளியிட்ட கோபர்நிகஸின் கருத்துக்களை அவர் ஏற்றார். தேவாலய நிர்வாகத்துக்கு எதிரான கருத்துகளைக் கூறியதாக வழக்கு தொடரப்பட்டு அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.


பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த அறிவியல் அறிஞர்களில் முக்கியமான மனிதராக வில்லியம் ஹார்வி (1578 -1657) திகழ்ந்தார். அவர் மனித உடலில் இரத்த ஓட்டம் குறித்து இறுதியில் நிரூபித்தார்.

மேற்கு ஐரோப்பாவில் மறுமலர்ச்சியின் பரவல்    

இங்கிலாந்தில் மறுமலர்ச்சி

இத்தாலியில் மட்டுமல்லாமல் பிரான்ஸ், ஜெர்மனி உட்பட ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் மறுமலர்ச்சி தனது தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இங்கிலாந்தில் அது ஆழமான அடையாளத்தை ஏற்படுத்தியது. முதலாம் எலிசபெத் (1558-1603) அவர்களின் ஆட்சி 'எலிசபெத் காலம்' என்று அழைக்கப்பட்டது. ஆங்கில மறுமலர்ச்சியில் எலிசபெத் காலம் பல அறிஞர்களை உருவாக்கியது வில்லியம் ஷேக்ஸ்பியர், கிறிஸ்டோபர் மர்லோவ். பிரான்ஸிஸ் பேக்கன் ஆகியோர் அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். ஆங்கில நாடக ஆசிரியரான கிறிஸ்டோபர் மார்லோவ், டிடோ, தி குயீன் ஆஃப் கார்தேஜ், டம்பர்லெய்ன் தி கிரேட் ஆகிய முக்கிய படைப்புகளை உருவாக்கியுள்ளார்.

ஆங்கில இலக்கியத்தின் முடிசூடா மன்னர் வில்லியம் ஷேக்ஸ்பியர் ஸ்டிராட்போர்டு அபான் ஏவன் என்ற நகரத்தில் பிறந்த அவர் 38 நாடகங்களையும், அன்பு, கோபம், சோகமான நிகழ்வு, பொறாமை மற்றும் ஏமாற்றுதல் ஆகிய மனிதர்களின் பல்வேறு உணர்வுகள் குறித்த பல கவிதைகளையும் எழுதியுள்ளார். ஏஸ் யூ லைக் இட், தி டேமிங் ஆஃப் தி ஷ்ரூ மற்றும் மிட் சம்மர் நைட்ஸ் டிரீம் ஆகியன அவரது நகைச்சுவை நாடகங்களாகும். ஒத்தெல்லோ , ஹாம்லெட், கிங் லியர், ரோமியோவும் ஜூலியட்டும் ஆகியன சோகமயமான நாடகங்களுக்கு உதாரணங்களாகும். லண்டனில் குளோப் அரங்கில் அரங்கேற்றப்பட்ட அவரது நாடகங்கள் பிரசித்தி பெற்றவையாகும். ஆங்கில மொழியின் மிகப்பெரிய தாக்கம் பெற்ற அவரது நாடகங்கள் தொழிற்புரட்சிக்குப் பிறகு பிரிட்டன் ஒரு அரசாங்கமாக உருவெடுத்த நிலையில் உலகம் முழுவதிலும் பரவின.


பிரான்ஸிஸ் பேக்கன் அவர்கள் அனுபவவாதத்தின் தந்தை' என்று கருதப்படுகிறார். தூண்டல் பகுத்தறிவு என்பதே (கொணர்முறை பகுத்தறிவுக்கு எதிர்ப்பதமாக, குறிப்பிட்ட விவரங்கள் அடிப்படையிலான பொதுக்கருத்து உருவாக்கம் மூலமான தர்க்க சிந்தனை வழியான அணுகுமுறை) விஞ்ஞான அறிவின் அடிப்படை என்று அவர் வாதிட்டார். லத்தீன் மொழியில் அவரால் எழுதப்பட்ட நோவும் ஆர்கனும் முக்கிய தத்துவப்படைப்பாக விளங்குகிறது. இயற்கையான கொள்கைகளை விவரித்து கற்கும் வழிமுறைகளை முறையான கவனிப்பில் நேரில் ஆய்வது பற்றி இந்த படைப்பு விளக்குகிறது.

Tags : Modern World: The Age of Reason | History நவீன உலகம்: பகுத்தறிவின் காலம் - வரலாறு.
12th History : Chapter 10 : Modern World: The Age of Reason : Renaissance in Italy and its Spread in Western Europe Modern World: The Age of Reason | History in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 10 : நவீன உலகம்: பகுத்தறிவின் காலம் : இத்தாலியில் ஏற்பட்ட மறுமலர்ச்சியும் மேற்கு ஐரோப்பியாவில் அதன் பரவலும் - நவீன உலகம்: பகுத்தறிவின் காலம் - வரலாறு : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 10 : நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்