Home | 11 ஆம் வகுப்பு | 11வது வரலாறு | ஹரியங்கா வம்சத்தின் கீழ் மகதத்தின் எழுச்சி

வரலாறு - ஹரியங்கா வம்சத்தின் கீழ் மகதத்தின் எழுச்சி | 11th History : Chapter 4 : Emergence of State and Empire

   Posted On :  18.05.2022 05:03 am

11 வது வகுப்பு வரலாறு : அலகு 4 : அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

ஹரியங்கா வம்சத்தின் கீழ் மகதத்தின் எழுச்சி

16 மகாஜனபதங்களில் தொடக்ககாலத்தில் காசி சக்தி வாய்ந்ததாக இருந்தது.

ஹரியங்கா வம்சத்தின் கீழ் மகதத்தின் எழுச்சி

16 மகாஜனபதங்களில் தொடக்ககாலத்தில் காசி சக்தி வாய்ந்ததாக இருந்தது. எனினும் பின்னர் கோசலம் ஆதிக்கம் செலுத்தியது. மகதம், கோசலம், வஜ்ஜி, அவந்தி ஆகியவற்றிற்கிடையே ஒரு அதிகாரப் போராட்டம் தொடங்கி, இறுதியில் மகதம் ஆதிக்கம் செலுத்தும் மகாஜனபதமாக உருவாகி, முதல் இந்தியப் பேரரசை அமைத்தது. ஹரியங்கா வம்சத்தின் பிம்பிசாரர் மகதத்தின் முதல் அரசராக அறியப்படுகிறார். அவர் திருமண உறவுகள் மற்றும், போர்கள் மூலம் மகதப் பேரரசின் எல்லைகளை விரிவுபடுத்தினார். கோசல அரசர் பிரசேனஜித்திற்குத் தனது சகோதரியை மணம் செய்து தந்ததன் மூலம், காசியை வரதட்சணையாகப் பெற்றார். லிச்சாவி மற்றும் மாத்ரா இளவரசிகளை அவர் மணந்தார். அவந்தி அரசரோடு நட்பான உறவைப் பேணினார். ஆனால் அங்கத்தை ராணுவ பலத்தால் இணைத்துக் கொண்டார். இவ்வாறாக, மகதம் ஒரு சக்தி வாய்ந்த, முக்கியமான பேரரசானது. தனது ஆட்சியில், பல்வேறு மதப் பிரிவுகளையும், அவற்றின் தலைவர்களையும் பிம்பிசாரர் ஆதரித்தார். அவர் புத்தரையும் சந்தித்திருக்கிறார்.


அஜாதசத்ரு, தந்தை பிம்பிசாரரைக் கொன்றுவிட்டு ஆட்சிக்கு வந்தார். உடனடியாக, பிம்பிசாரருக்கு வரதட்சணையாகத் தந்திருந்த காசியை அரசர் பிரசேனஜித் திரும்ப எடுத்துக்கொண்டார். இதனால் மகத நாட்டிற்கும் கோசல நாட்டிற்கும் மோதல் உருவானது. பிரசேனஜித் தனது நாட்டிலிருந்து விரட்டப்பட்டு, மகதத்தின் தலைநகரான இராஜகிருகத்தின் கோட்டை வாசலில் இறந்து போகும் வரை போர் தொடர்ந்தது. பின்னர் மகத நாட்டுடன் கோசல நாடு இணைந்தது. அஜாதசத்ரு லிச்சாவியினருடன் போரிட்டு வென்றார். அஜாதசத்ரு லிச்சாவியரையும் மல்லர்களையும் வென்றார். அஜாதசத்ருவும் புத்தரைச் சந்தித்திருப்பதாக நம்பப்படுகிறது. பொ..மு. 461இல் அஜாதசத்ரு மறைந்த போது மகதம் அசைக்கமுடியாத வலுவான அரசாகிவிட்டது.

ஹரியங்காவம்சத்தைத் தொடர்ந்து சிசுநாக வம்சம் வந்தது. வாரணாசியின் அரசப்பிரதிநிதி சிசுநாகர் என்பவர் ஹரியங்கா அரசரைக் கொன்று அரியணை ஏறினார். சிசுநாகர்கள் ஐம்பதாண்டுக் காலம் ஆட்சி செய்தனர். பிறகு அரியணையை அவர்களிடமிருந்து மஹாபத்ம நந்தர் கைப்பற்றினார்.

பரந்து பட்ட, அதிகார வர்க்கத்தை உருவாக்கவும், நிர்வாகத்தையும் ராணுவத்தையும் நடத்த நிதி ஆதாரத்தையும் ஆட்களையும் திரட்டவும் ஒரு புதிய நிர்வாக அமைப்பு ஒரு மையப்படுத்தப்பட்ட அரசிற்கு தேவைப்பட்டது. வரிவிதிப்பின் மூலம் அரசின் செலவுகளுக்குத் தேவையான நிதியைத் திரட்ட ஒரு வருவாய் நிர்வாக அமைப்பை ஏற்படுத்த வேண்டியதாக - இருந்தது. இத்தகைய ஒரு அரசியல் உருவாக்கம் நிர்வாக மையங்களாக, நகரங்களை மாற்றுவதற்கு இட்டுச் சென்றது. இவை கிராமங்கள், ஊரகப் பகுதிகளிலிருந்து மாறுபட்டவை. பேரரசை விரிவுபடுத்தவும் பாதுகாக்கவும் ஒரு பெரிய நிலையான ராணுவம் தேவைப்பட்டது.

Tags : History வரலாறு.
11th History : Chapter 4 : Emergence of State and Empire : Rise of Magadha under the Haryanka Dynasty History in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வகுப்பு வரலாறு : அலகு 4 : அரசு மற்றும் பேரரசு உருவாக்கம் : ஹரியங்கா வம்சத்தின் கீழ் மகதத்தின் எழுச்சி - வரலாறு : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வகுப்பு வரலாறு : அலகு 4 : அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்