Home | 7 ஆம் வகுப்பு | 7வது சமூக அறிவியல் | மராத்தியரின் எழுச்சிக்கான காரணங்கள்

இரண்டாம் பருவம் அலகு -3 | வரலாறு | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - மராத்தியரின் எழுச்சிக்கான காரணங்கள் | 7th Social Science : History : Term 2 Unit 3 : Rise of Marathas and Peshwas

   Posted On :  18.04.2022 07:25 pm

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : இரண்டாம் பருவம் அலகு -3 : மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி

மராத்தியரின் எழுச்சிக்கான காரணங்கள்

மராத்திய நாட்டின் புவியியல் கூறுகள் மராத்தியர்களிடையே சில தனித்தன்மை வாய்ந்த பண்புகளை வளர்த்திருந்தன. அவை, மராத்திய மக்களை இந்தியாவின் ஏனைய மக்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டின.

மராத்தியரின் எழுச்சிக்கான காரணங்கள்

புவியியல் கூறுகள்

மராத்திய நாட்டின் புவியியல் கூறுகள் மராத்தியர்களிடையே சில தனித்தன்மை வாய்ந்த பண்புகளை வளர்த்திருந்தன. அவை, மராத்திய மக்களை இந்தியாவின் ஏனைய மக்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டின. பதினாராம் நூற்றாண்டில் பீஜப்பூர், அகமதுநகர் சுல்தான்கள் மராத்தியர்களைத் தங்கள் குதிரைப் படையில் பணியமர்த்தினர். இச்சுல்தான்களின் படைகளில் மராத்தியர்களைப் பணியமர்த்தியசெயல், இஸ்லாமிய வீரர்களின் அதிகாரத்தைப் பெற வேண்டும் என்ற ஆசையைச் சமன் செய்ய உதவியது. பாறைகளும், குன்றுகளும் அடங்கிய நிலப்பகுதி, அந்நிய படையெடுப்பாளர்களிடமிருந்து மராத்தியருக்குப் பாதுகாப்பளித்தது. மேலும், கொரில்லாப் போர் (மறைந்திருந்து தாக்குதல்) முறைக்கு உகந்ததாய் விளங்கியது.


பக்தி இயக்கமும் மராத்தியரும்

மகாராஷ்டிராவில் பரவிய பக்தி இயக்கம், மராத்திய மக்களிடையே விழிப்புணர்வும் இணக்கமும் ஏற்பட உதவியது. மேலும், மராத்திய மக்களிடையே ஒற்றுமையைக் குறிப்பாகச் சமூகச் சமத்துவத்தை மேம்படுத்தியது. மராத்தியப் பகுதியைச் சேர்ந்த சமயத் தலைவர்கள் பல்வேறு சமூகக் குழுக்களிலிருந்து வந்தவராவர். பக்தி இயக்கத்தைச் சேர்ந்த பெரியோர்களில் ஏக்நாத், துக்காராம், ராம்தாஸ் ஆகியோர் குறிப்பிடத்தக்கோர் ஆவர். துக்காராம், ராம்தாஸ் ஆகியோர் சிவாஜியின் வாழ்வின் மீது கணிசமான செல்வாக்கு செலுத்தினர்.



மராத்தியரின் மொழியும், இலக்கியமும்

மராத்தியரிடையே ஒற்றுமையை வளர்ப்பதில் மராத்திய மொழியும் இலக்கியமும் உதவி செய்தன. பக்தி இயக்கப் பெரியோர்கள், மராத்திய மொழியில் இயற்றிய பாடல்களைத் தொகுத்தனர். அப்பாடல்கள் அனைத்துச் சாதிகளையும், வர்க்கங்களையும் சேர்ந்த மக்களால் பாடப்பட்டிருந்தன.


சிவாஜி

1627 இல் பிறந்த சிவாஜி, தன் தாயார் ஜீஜாபாயின் பாதுகாப்பில் வளர்ந்தார். இராமாயணம், மகாபாரதக் கதைகளைக் கூறி, சிவாஜிக்கு அவற்றின்மீது தாக்கத்தை ஏற்படுத்தினார். சிவாஜியின் ஆசிரியரும் குருவுமான தாதாஜி கொண்டதேவ் குதிரையேற்றம், போர்க்கலை, அரசு நிர்வாகம் ஆகியவற்றில் சிவாஜிக்குப் பயிற்சியளித்தார். தனது பதினெட்டாவது வயதில் (1645) இராணுவப் பணியில் முதலடி எடுத்து வைத்த நேரத்தில், புனேக்கு அருகேயிருந்த கோண்டுவானா கோட்டையைக் கைப்பற்றுவதில் சிவாஜி வெற்றி பெற்றார். அடுத்த ஆண்டில் தோர்னா கோட்டையைக் கைப்பற்றினார். தொடர்ந்து ரெய்கார் கோட்டையைக் கைப்பற்றி அதனைப் புனரமைத்தார்.



பீஜப்பூர் சுல்தானோடு போரிடுதல்

சிவாஜியின் பாதுகாவலரான தாதாஜி கொண்டதேவ் 1649 இல் இயற்கை எய்தியதால் சிவாஜி முழுமையான சுதந்திரம் பெற்றவரானார். தம் தந்தையாருக்குச் சொந்தமான கொண்டதேவால் நிர்வகிக்கப்பட்ட ஜாகீரையும் சிவாஜி பெற்றார். மாவலி காலாட்படை வீரர்களே, அவருடைய படையின் வலிமையாகத் திகழ்ந்தனர். அவர்களின் உதவியுடன் சிவாஜி புனேவுக்கு அருகேயிருந்த பல கோட்டைகளைக் கைப்பற்றினார். முகலாயர் வசமிருந்த புரந்தர் கோட்டையையும் சிவாஜி கைப்பற்றினார். சிவாஜியின் இராணுவ நடவடிக்கைகள், பீஜப்பூர் சுல்தானைச் சினங்கொள்ளச் செய்தன. அவர் சிவாஜியின் தந்தையைச் சிறை வைத்தார். தமது இராணுவ நடவடிக்கைகளைச் சிவாஜி கைவிடுவதாக உறுதியளித்த பின்னரே அவர் விடுவிக்கப்பட்டார். தானளித்த வாக்குறுதியைக் காப்பாற்றும் விதமாக தந்தையார் ஷாஜி போன்ஸ்லே இயற்கை எய்தும்வரை சிவாஜி பீஜப்பூருடன் அமைதியை மேற்கொண்டார். இக்காலக் கட்டத்தில், அவர் தமது நிர்வாகத்தை மேம்படுத்தினார்.



மராத்தியர் ஆதிக்கத்தை நிலைநாட்டுதல்

தந்தையாரின் மறைவுக்குப் பின்னர், தமது இராணுவத் திடீர் தாக்குதல்களை மீண்டும் தொடங்கிய சிவாஜி, மராத்தியத்தலைவர் சந்திர ராவ் மோர் என்பாரிடமிருந்து ஜாவலியைக் (1656) கைப்பற்றினார். பூனேவைச் சுற்றியிருந்த சிறிய அளவிலான மராத்தியத் தலைவர்களை அடக்கித் தமக்குக் கீழ்ப்பணியச் செய்தார். தான் கைப்பற்றிய மலைக் கோட்டைகளிலிருந்த பீஜப்பூர் வீரர்களைத் துரத்தியடித்த சிவாஜி அவர்களுக்குப் பதிலாகத் தம் தளபதிகளை அங்கே நியமித்தார். சிவாஜியின் இந்நடவடிக்கைகளும், அவரைத் தண்டிப்பதற்காக அனுப்பட்ட பீஜப்பூர் படைகளை அவர் தோற்கடித்ததும் முகலாய அதிகாரிகளை எச்சரிக்கை அடையச் செய்தது. அவரைத் தண்டிக்கும் நோக்கத்தோடு மேற்கொள்ளப்பட்ட முகலாயப் படையெடுப்பையும் அவர் தைரியத்துடன் எதிர்கொண்டார். 1659இல் பீஜப்பூரின் குறிப்பிடத்தகுந்த தளபதியான அப்சல்கானைக் கொன்றார். 1663இல் ஔரங்கசீப்பின் மாமனாரும் முகலாயத் தளபதியுமான ஷெஸ்டகானை சிவாஜி காயப்படுத்தித் துரத்தியடித்தார். இதற்கும் மேலாக அவர் 1664 இல், அரபிக் கடற்கரையில் அமைந்திருந்த முகலாயரின் முக்கியத் துறைமுகமான சூரத் நகரைச் சூறையாடத் தமது படைகளை அனுப்பி வைத்தார்.



சிவாஜியும் ஔரங்கசீப்பும்

சிவாஜி சூரத்தைக் கொள்ளையடித்த பின்னர், ஔரங்கசீப் எதிர் நடவடிக்கைகளில் இறங்கினார். சிவாஜியை அழித்தொழிக்கவும், பீஜப்பூரை இணைக்கவும் ராஜா ஜெய்சிங் எனும் ராஜபுத்திரத் தளபதியின் தலைமையின் கீழ் முகலாயப் படையொன்று அனுப்பிவைக்கப்பட்டது. இறுதியில், சிவாஜி அமைதியை நாடினார். தாம் கைப்பற்றிய கோட்டைகளைக் கொடுத்துவிடவும், முகலாய அரசின் மான்சப்தாராகப் பொறுப்பேற்றுப் பீஜப்பூரைக் கைப்பற்றவும் சம்மதித்தார். ராஜா ஜெய்சிங்கின் வழிகாட்டுதலின்படி ஆக்ராவின் முகலாய அரசவைக்குச் செல்லவும் ஒத்துக் கொண்டார். அவ்வாறு சென்றபோது அவமானப்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது, அங்கிருந்து பழக்கூடையில் ஒளிந்து தப்பித்தார்.

சத்ர (குடை) பதி (தலைவன் அல்லது பிரபு) எனும் சமஸ்கிருதச் சொல் அரசன் அல்லது பேரரசன் என்பதற்கு இணையானது. இச்சொல்லை மராத்தியர்கள் குறிப்பாக சிவாஜி பயன்படுத்தினார்.

தக்காண அரசுகளுக்கு எதிரான தமது படையெடுப்புகளில் மராத்தியர்கள் தலையிடுவதைத் தவிர்ப்பதில் ஔரங்கசீப் உறுதியாய் இருந்தார். சிவாஜியுடன் உறவைச் சரிசெய்துகொள்ள முயற்சிகள் மேற்கொண்டார். அம்முயற்சிகள் தோல்வியுற்றன. 1670இல் சிவாஜி இரண்டாவது முறையாகச் சூரத் நகரைக் கொள்ளையடித்தபோது முகலாயப் படைகளால் தடுக்க இயலவில்லை . 1674இல் சிவாஜி சத்ரபதி என்னும் பட்டத்துடன் மணிமுடி சூடிக்கொண்டார். சிவாசியின் முடிசூட்டுவிழா ரெய்கார் கோட்டையில் சீரும் சிறப்புமாக நடைபெற்றது.தம்மகனின் முடிசூட்டுவிழாவைக் காண்பதற்காக உயிருடனிருந்த சிவாஜியின் வயது முதிர்ந்த தாயார் ஜீஜாபாய், தம் வாழ்க்கை நிறைவுற்றதால் முடிசூட்டுவிழா முடிந்த சில நாட்களில் இயற்கை எய்தினார். சிவாஜி தமது வாழ்நாளின் இறுதி ஆண்டுகளைத் தம் மகன் சாம்பாஜியிடம் செலவிட்டார். தம்மைப்போலவே ஆட்சிபுரிய அவருக்கு உதவினார். இறுதியில் நோய்வாய்ப்பட்டு வயிற்றுப் போக்கினாலும், காய்ச்சலினாலும் பாதிப்புற்று 1680 இல் இயற்கை எய்தினார்.


சிவாஜியின் கீழ் மராத்தியர் நிர்வாகம்

சிவாஜியின் அரசியல் முறை மூன்று வட்டங்களைக் கொண்டிருந்தது. சிவாஜி அவற்றின் மையமாக விளங்கினார். முதல்  வட்டத்தில் மக்களின் மீது அக்கறை கொண்ட அவர் எந்த வகையிலும் மக்கள் துன்புறுத்தப்படுவதை அனுமதிக்கவில்லை. இரண்டாவது வட்டத்தில் அவர் மேலாதிக்கம் செலுத்தினாலும் நேரடி நிர்வாகத்தை மேற்கொள்ளவில்லை. கொள்ளையடிக்கப்படுவதிலிருந்தும் , சூறையாடப்படுவதிலிருந்தும் மக்களைக் காப்பாற்றினார். அதற்காக அம்மக்கள் சௌத் (மொத்த வருமானத்தில் நான்கில் ஒரு பங்கு (1/4), பாதுகாப்புக் கட்டணமாக) சர்தேஷ்முகி (பத்தில் ஒரு பங்கு (1/10) அரசருக்கான கட்டணமாக) ஆகிய வரிகளைச் செலுத்த வேண்டும். மூன்றாவது வட்டத்தில் கொள்ளையடிப்பது மட்டுமே சிவாஜியின் நோக்கமாக இருந்தது.

கிராமங்கள் தேஷ்முக் என்பவர்களால் நிர்வகிக்கப்பட்டது. இருபது முதல் நூறு எண்ணிக்கை வரையிலான கிராமங்கள் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழிருந்தன. ஒவ்வொரு கிராமத்திலும் அதிகாரம் மிக்க ஒரு கிராமத் தலைவர் (பட்டீல்) இருந்தார். அவருக்கு உதவியாக ஒரு கணக்கரும் குல்கர்னி என்ற பெயரில் ஆவணக் காப்பாளர் ஒருவரும் பணியாற்றினர். மைய அரசு என்ற ஒன்று இல்லாத நேரத்தில் உள்ளூர் சமுதாய அளவிலான இந்த அதிகாரிகளே உண்மையான அரசாகச் செயல்பட்டனர்.


இராணுவம்

இராணுவம் மீதும், இராணுவ வீரர்களுக்குப் பயிற்சியளிப்பதிலும் சிவாஜி மிகப்பெரும் கவனம் செலுத்தினார். தொடக்கத்தில் காலாட்படையே அவரது இராணுவத்தின் முதுகெலும்பாகத் திகழ்ந்தது. ஆனால் சிவாஜியின் படையெடுப்புகள் சமவெளிகளை நோக்கி நீட்சி பெற்றபோது குதிரைப் படைகள் எண்ணிக்கையில் பெருகி முக்கியத்துவமும் பெற்றன. ஒவ்வொரு படைவீரனும் சிவாஜியால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்கள் ஏற்கெனவே படையில் பணியாற்றும் ஒரு வீரனின் பிணையில் பணியமர்த்தப்பட்டனர். தம்முடைய கோட்டைகளின் பராமரிப்பிலும் பாதுகாப்பிலும் சிவாஜி மிக முக்கிய கவனம் செலுத்தினார். பணிநிறைவு பெற்ற மிகவும் போற்றப்பட்ட படைத்தளபதிகளின் பொறுப்பில் கோட்டைகள் விடப்பட்டன.


அஷ்டபிரதான்

சிவாஜி எட்டு அமைச்சர்களைக் கொண்ட குழுவிற்கு அஷ்டபிரதான் எனப் பெயரிட்டார். ஒவ்வொருவரும் ஒரு முக்கிய துறையைக் கொண்டிருந்தனர். மராத்தியப் பேரரசில் பேஷ்வா என்பவர் நவீனகால பிரதமருக்கு இணையானவர். உண்மையில் இவர்கள் சத்திரபதிகளுக்குத் துணையதிகாரிகளாய் இருந்தவர்களாவர். ஆனால் காலப்போக்கில், குறிப்பாக, ஷாகு மகாராஜாவின் காலத்திலிருந்து பேஷ்வாக்கள் உண்மையான மராத்திய அரசர்களாயினர் சத்திரபதிகள் பெயரளவிற்கான அரசர்கள் என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

முகலாயரின் நிர்வாகமுறை சிவாஜியின் மீது செல்வாக்குச் செலுத்தியிருந்தது. நிலவரியானது உண்மையான விளைச்சலின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டது.

ஐந்தில் மூன்று பங்கு (3/5) விவசாயிகளுக்கு ஒதுக்கப்பட்டு ஐந்தில் இரண்டு பங்கு (2/5) அரசால் எடுத்துக் கொள்ளப்பட்டது. நீதித்துறையில் சிவில் வழக்குகள் பஞ்சாயத்து எனப்படும் கிராமக் குழுக்களால் தீர்த்து வைக்கப்பட்டன. குற்றவியல் வழுக்குகள் சாஸ்திரங்கள் எனப்பட்ட இந்து சட்ட நூல்களின் அடிப்படையில் விசாரிக்கப்பட்டன.


அஷ்டபிரதானின் பொறுப்புகள்


பந்த்பீரதான் / பேஷ்வா - பிரதம அமைச்சர் 

அமத்தியா / மஜீம்தார் – நிதியமைச்சர் 

சுர்நாவிஸ் / சச்சீவ் – செயலர்

வாக்கிய-நாவிஸ் – உள்துறை அமைச்சர்

சர்-இ –நௌபத் சேனாபதி – தலைமைத் தளபதி 

சுமந்த் / துபிர் – வெளியுறவுத்துறை அமைச்சர் 

நியாயதிஸ் – தலைமை நீதிபதி 

பண்டிட்ராவ் – தலைமை அர்ச்சகர்




சாம்பாஜி


சிவாஜியைத் தொடர்ந்து, அனாஜி தத்தோவுடனான சச்சரவிற்குப் பின்னர், சாம்பாஜி ஆட்சிப் பொறுப்பேற்றார். ஆகவே, குடும்பச் சண்டைகள் மராத்திய அரசில் சிராய்ப்புகளை ஏற்படுத்தின. மார்வார் ராத்தோர் குடும்பத்தைச் சேர்ந்த துர்காதாஸ் ஔரங்கசீப்பிற்கு எதிராகக் கலகம் செய்த அவரது மகன் அக்பர் ஆகியோர் மகாராஷ்ட்டிராவிற்கு வந்தனர். அவர்கள் சாம்பாஜியின் அரசவையில் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டனர். இதை மிகப் பெரிதாக எடுத்துக்கொண்ட ஔரங்கசீப், சாம்பாஜியை ஒழித்துக்கட்ட அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். சாம்பாஜியின் தலைமையிலான மராத்தியர்கள் முகலாயரை எதிர்க்கும் நிலையில் இல்லை. 1861இல் ஔரங்கசீப்தானே தக்காணத்தை வந்தடைந்தார். பீஜப்பூரையும் கோல்கொண்டாவையும் கைப்பற்றி இணைப்பதே ஔரங்கசீப்பின் முக்கிய நோக்கமாக இருந்தது. 1687 அவ்விரு சுல்தானியங்களும் ஔரங்கசீப்பிடம் வீழ்ந்தன. ஒரு வருடத்திற்கும் சற்றே அதிகமான காலப்பகுதியில் சாம்பாஜி கைப்பற்றப்பட்டுச் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

சாம்பாஜி, தம்முடைய குடும்ப அர்ச்சகரான கவிகலாஷ் என்பவரின் ஒழுக்கக்கேடான செல்வாக்கிற்கு ஆட்பட்டிருந்தார். சிவாஜி ஆக்ராவிலிருந்து தப்பியபோது வாரணாசியில் கவிகலாஷ் சாம்பாஜியின் பாதுகாவலராய் இருந்தார். பின்னர், சாம்பாஜியைப் பத்திரமாக ரெய்கார்க்கு அழைத்து வந்தார். அனைத்து விடயங்களுக்கும் சாம்பாஜி அவரின் வழிகாட்டுதலை எதிர்பார்த்ததால் அரச சபையில் அவரின் முழுமையான மேலாதிக்கம் நிலவியது. கவிகலாஷ் புகழ்பெற்ற அறிஞரும் கவிஞருமாவார்; ஆனால், அவர் மாந்திரீகம் செய்பவராகவுமிருந்தார். இதனால் அரசவையில் இருந்த வைதீக இந்துக்கள் அவர்மீது ஆழமான வெறுப்பைக் கொண்டிருந்தனர். முகலாயப் படைகள் சாம்பாஜியைக் கைது செய்தபோது கவிகலேஷும் உடனிருந்தார். ஆகவே, இருவரும் ஔரங்கசீப்பின் கட்டளையின்படி அனைத்து வகைப்பட்ட சித்திரவதைகளுக்கும் உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.


ஷாகு மகாராஜா


சிவாஜிக்குப் பின்னர், அவருடைய பேரன் ஷாகு 1708 முதல் 1749 வரை ஆட்சி புரிந்தார். ஷாகு என்றால் நேர்மையானவர் என்று பொருள். சிவாஜியிடமிருந்து இவரின் குணநலன்களை வேறுபடுத்திக் காட்டுவதற்காக இப்பெயர் ஔரங்கசீப்பால் வைக்கப்பட்டது. பதினெட்டாம் நூற்றாண்டின் முதல் பாதிப் பகுதியில் அரசு அதிகாரம் ஒருங்கிணைக்கப்பட்டது. ஷாகுவிடம் பணிசெய்தோர்க்கு அதிகாரபூர்வமான உரிமைகள் வழங்கப்பட்டதன் மூலம் இவ்வதிகார ஒருங்கிணைப்பு செய்யப்பட்டது.

ஷாகு மகாராஜாவின் நாற்பதாண்டுக்கால ஆட்சியின்போது மராத்தியரின் கட்டுப்பாட்டின் கீழிருந்த பகுதிகள் அதிகரித்தன. அவற்றிலிருந்து முறையாகக் கப்பம் வசூலிக்கப்பட்டது. மிகவும் மையப்படுத்தப்பட்ட, வலுவான அரசுக் கட்டமைப்பு உருப்பெறத் தொடங்கியது. நிலங்களைச் சொந்தமாகக் கொண்டிருந்த குடும்பங்கள் உட்பட ஒவ்வொரு குடும்பமும் அரசுப் பணியின் மூலம் ஆதாயம் பெற்றது.


Tags : Term 2 Unit 3 | History | 7th Social Science இரண்டாம் பருவம் அலகு -3 | வரலாறு | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
7th Social Science : History : Term 2 Unit 3 : Rise of Marathas and Peshwas : Rise of Marathas Term 2 Unit 3 | History | 7th Social Science in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : இரண்டாம் பருவம் அலகு -3 : மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி : மராத்தியரின் எழுச்சிக்கான காரணங்கள் - இரண்டாம் பருவம் அலகு -3 | வரலாறு | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : இரண்டாம் பருவம் அலகு -3 : மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி