Home | 11 ஆம் வகுப்பு | 11வது வரலாறு | பேஷ்வா ஆட்சி (1713-1818)

மராத்தியர் - பேஷ்வா ஆட்சி (1713-1818) | 11th History : Chapter 15 : The Marathas

   Posted On :  15.03.2022 04:01 pm

11 வது வகுப்பு வரலாறு : அலகு 15 : மராத்தியர்

பேஷ்வா ஆட்சி (1713-1818)

பேஷ்வா அல்லது பிரதம மந்திரி என்பவர் சிவாஜியின் அமைச்சரவையான அஷ்டபிரதான் அமைப்பில் முதன்மையானவர்.

பேஷ்வா ஆட்சி (1713-1818)

பேஷ்வா அல்லது பிரதம மந்திரி என்பவர் சிவாஜியின் அமைச்சரவையான அஷ்டபிரதான் அமைப்பில் முதன்மையானவர். பதினெட்டாம் நூற்றாண்டில் பேஷ்வாக்கள் அதிக அதிகாரங்களைப் பெற்று ஆட்சிபுரிந்தனர். பாலாஜி விஸ்வநாத் என்பவர் ஆற்றல் மிகுந்த முதல் பேஷ்வா ஆவார்.

பேஷ்வா என்ற பாரசீக சொல்லின் பொருள் "முதன்மையான" அல்லது "பிரதம அமைச்சர்" என்பதாகும்.

பாலாஜி விஸ்வநாத் (1713-1720)


உள்நாட்டுப் போரால் சிக்கலிலிருந்த அரசைக் கட்டுப்பாட்டில் கொண்டுவர சாஹூவுக்கு பாலாஜி விஸ்வநாத் உதவினார். மேற்குக் கரையோரத்தில் கனோஜி ஆங்கிரே அதிக அதிகாரம் படைத்த கடற்படைத் தளபதியாகத் திகழ்ந்தார். உள்நாட்டுப்போரின் போது கனோஜி ஆங்கிரே தாராபாய்க்கு ஆதரவு தெரிவித்திருந்தார். ஐரோப்பியரால் ஏற்படும் ஆபத்தைப் பற்றி அவருக்கு எடுத்துரைத்த பேஷ்வா சாஹூவிடம் தனக்குள்ள விசுவாசத்தை உறுதி செய்தார். ஜாகீர்களை வழங்கும் நடைமுறை மீண்டும் வழக்கத்திற்குக் கொண்டுவரப்பட்டது. பேஷ்வாவின் பதவி மரபு சார்ந்ததாக ஆனது.

முதலாம் பாஜி ராவ் (1720-1740)


பாலாஜி விஷ்வநாத்துக்குப் பிறகு அவரது மகன் முதலாம் பாஜிராவ் 1720இல் மன்னர் சாஹூவால் பேஷ்வாவாக நியமிக்கப்பட்டார். ஹைதராபாத் நிஜாம், மால்வாவின் ரஜபுத்திர ஆளுநர், குஜராத் ஆளுநர் ஆகியோரை வீழ்த்தி மராத்திய சாம்ராஜ்யத்தின் அதிகாரத்தை பாஜிராவ் மேம்படுத்தினார். முகலாயரின் கட்டுப்பாட்டிலிருந்து பந்தேல்கண்டை அவர் விடுவித்தார். அதனால் மராத்தியருக்கு அதன் ஆட்சியாளரிடமிருந்து மூன்றில் ஒரு பங்கு பகுதிகள் தாரை வார்க்கப்பட்டது. பேஷ்வாவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய தலைமைத் தளபதி திரிம்பக்ராவ் 1731இல் பரோடா அருகே தபாய் என்ற இடத்தில் நடந்த போரில் தோற்கடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். தலைமைத்தளபதியின் பதவியையும் பேஷ்வா ஏற்றுக்கொண்டார். 1731இல் எட்டப்பட்ட வார்னா ஒப்பந்தத்தின்படி சாஹூவின் இறையாண்மையை ஏற்குமாறு கோல்ஹாபுரின் சாம்பாஜிக்கு நெருக்குதல் அளிக்கப்பட்டது.

தானே, சால்செட், பேசின் ஆகிய பகுதிகள் 1738இல் போர்த்துகீசியரிடமிருந்து கைப்பற்றப்பட்டு அவர்கள் கொங்கணக் கடற்கரைப் பிரதேசத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். அதே நேரத்தில் மராத்தியருடன் ஆங்கிலேயர் நட்புறவை ஏற்படுத்தியதன் மூலம் தக்காணப்பகுதியில் தடையில்லா வணிகம் செய்யும் உரிமையைப் பெற்றார்கள்.

பாலாஜி பாஜி ராவ் (1740 -1761)

முதலாம் பாஜிராவ் மறைவுக்குப் பிறகு பாலாஜி பாஜிராவ் பேஷ்வாவாக பதவியேற்றார். நானா சாகிப் என்று அழைக்கப்பட்ட அவர் நல்ல நிர்வாகியாகவும் நிதி தொடர்பான விஷயங்களில் வல்லுநராகவும் விளங்கினார்.



கர்நாடகத் தாக்குதல்கள்

ஆற்காடு நவாபின் மருமகன் சந்தா சாகிப் திருச்சிராப்பள்ளியைக் கைப்பற்றிய பிறகு தஞ்சாவூரை முற்றுகை இடப்போவதாக அச்சுறுத்தினார். 1739இல் தஞ்சாவூரை ஆண்ட மராத்திய ஆட்சியாளர் சாஹூவிடம் உதவி கோரினார். இந்தக் கோரிக்கையை ஏற்ற பேஷ்வா, தனது மைத்துனர் ரகோஜி போன்ஸ்லேவைத் தஞ்சாவூருக்கு அனுப்பினார். 1740ஆம் ஆண்டு ரகோஜி போன்ஸ்லே ஆற்காடு நவாப் தோஸ்த் அலியை வீழ்த்திக் கொன்றார். திருச்சிராப்பள்ளி கைப்பற்றப்பட்டு சந்தா சாகிப் சிறையில் அடைக்கப்பட்டார். புந்தேல்கண்ட் மற்றும் வங்காளத்தில் நடந்த இராணுவத் தாக்குதல்களில் பேஷ்வா ஈடுபட்டிருந்ததால் அடுத்து வந்த நவாப் முகமது அலி 1743இல் ஆற்காட்டை எளிதாகக் கைப்பற்றியதோடு திருச்சிராப்பள்ளியையும் மீட்டார். இதனால் பேஷ்வா தனது உடன் பிறவா சகோதரரான சதாசிவ ராவை கர்நாடகத்துக்கு அனுப்பினார். மராத்தியரின் அதிகாரம் மீண்டும் நிலை நிறுத்தப்பட்ட போதிலும் அவர்களால் திருச்சிராப்பள்ளியை மீட்க முடியவில்லை.

உத்கிர் போர், 1760

1748இல் நிஜாம் ஆசப்ஜாவின் மறைவுக்குப் பிறகு வாரிசுப் போட்டி வெடித்தது. நிஜாமின் மூத்த மகனுக்குப் பேஷ்வா தனது ஆதரவைத் தெரிவித்தார். சதாசிவ ராவ் தலைமையில் பேஷ்வா அனுப்பிய இராணுவம் 1760இல் நடந்த உத்கிர் போரில் எதிரிகளை வீழ்த்தியது. மராத்தியரின் இராணுவ பலத்துக்குக் கடைசி கட்டமாக இந்த வெற்றி அமைந்தது. பீஜப்பூர், ஒளரங்காபாத், தௌலதாபாத், அகமதுநகர், பர்கான்பூர் ஆகிய பகுதிகளைப் பேஷ்வா கைப்பற்றினார்.

ரஜபுதனத்தை (1741 முதல் 1748 வரை) ஆறு தாக்குதல் முயற்சிகளுக்குப் பிறகு மராத்தியர் தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தார்கள். 1751இல் வங்காள நவாப் ஒரிஸ்ஸாவைக் கைவிட்டு மராத்தியருக்கு கப்பம் கட்ட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. முகலாயரின் ஆட்சியைக் குறிவைத்தே மராத்தியர் செயல்பட்ட காரணத்தால் அவர்கள் 1752இல் தில்லியில் நுழைந்தார்கள். தில்லியை விட்டு ஆப்கனியரையும் ரோகில்லாக்களையும் விரட்டியடித்தார்கள். மராத்தியரின் உதவியோடு வைஸ்ராயாகப் பொறுப்பேற்ற இமாத் உல் முல்க் அவர்களின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு செயல்படும் பொம்மையானார். பஞ்சாபைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பிறகு ஆப்கானிஸ்தானில் துராணி சாம்ராஜ்யத்தை நிறுவிய அகமதுஷா அப்தாலியின் பிரதிநிதியை அங்கிருந்து அகற்றினார்கள். இதனால் அகமது ஷா அப்தலியுடனான பெரிய சண்டையைத் தவிர்க்க இயலவில்லை.

வடமேற்கிலிருந்த அதிகார மையங்களிலும் மராத்தியர் தங்கள் கூட்டாளிகளை உருவாக்க முனைந்தனர். ஆனால் மராத்தியரின் முந்தைய செயல்பாடுகளால் வடமேற்கு அவர்களுக்கு எதிரான மனநிலையைக் கொண்டிருந்தது. சீக்கியர், ஜாட் தலைவர்கள், முஸ்லிம்கள் ஆகியோர் மராத்தியரை நம்பத் தயாராக இல்லை. 1757இல் நடந்த பிளாசி போரில் சிராஜ் உத் தௌலாவுக்கு மராத்தியர் உதவவில்லை. அதனால் வங்காளத்திலிருந்தும் பெரிதாக ஏதும் உதவி கிடைக்கவில்லை. கர்நாடகத்திலும் வங்காளத்திலும் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் பேஷ்வா எடுத்த முயற்சிகளின் விளைவாக அவர்களால் மேலும் முன்னேற முடியாமல் போனது. தில்லி மீதான பேஷ்வாவின் தேவையற்ற ஆர்வம் பல பிரதேச ஆட்சியாளர்களின் எதிர்ப்பைச் சம்பாதித்தது. 1761இல் அகமதுஷா அப்தலி பெரும் இன்னலை பானிப்பட் போர்க்களத்தில் உருவாக்கினார்.

மூன்றாவது பானிப்பட் போர், 1761

இந்திய வரலாற்றில் 1761இல் நடந்த மூன்றாவது பானிப்பட் போர் முக்கிய முடிவைக் கொடுத்ததாகும். இந்தப் போரில் மராத்தியர்க்கும் முகலாயருக்கும் கிடைத்த மிகப் பெரிய தோல்வி இந்தியாவில் ஆங்கிலேய அரசு காலூன்ற வழி வகுத்தது.

சூழ்நிலைகள்

பலவீனமான முகலாய அரசு வடமேற்கு எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிவிட்டது. இதனால் அப்போது ஆப்கானிஸ்தானை ஆண்ட நாதிர் ஷா போர் தொடுக்க நேரிட்டது. மீண்டும் மீண்டும் அளித்த வேண்டுகோள்களுக்குப் பிறகு முகலாய ஆட்சியாளர் முகம்மது ஷா ஆப்கன் நாட்டுக் கிளர்ச்சியாளர்களுக்கு அடைக்கலம் கொடுத்தார். இதனால் 1739 இல் நாதிர் ஷாவின் தாக்குதல்கள் தொடங்கின. தில்லி சூறையாடப்பட்டது. கோகினூர் வைரம், மதிப்புமிகு மயிலாசனம் ஆகியவற்றை அவர் கைப்பற்றிச் சென்றார்.

1747 இல் நாதிர் ஷா கொல்லப்பட்ட பிறகு அவரது இராணுவ தளபதிகளில் ஒருவரான அகமதுஷா அப்தாலி ஆப்கானிஸ்தானின் ஆட்சியாளராக மாறினார். தனது நிலையை உறுதிப்படுத்திய அவர் பின்னர் இராணுவத் தாக்குதல்களைத் தொடங்கினார். முல்தான் மற்றும் பஞ்சாபை அவருக்குத் தாரை வார்த்த முகலாய மாமன்னர் அமைதியை நிலை நிறுத்தினார். பஞ்சாப் ஆளுநராக முகலாய மாமன்னரால் நியமிக்கப்பட்ட மீர்மன்னு, அகமது ஷா அப்தலியின் முகவர் போலவே செயல்பட முடிந்தது. மீர் மன்னுவின் மரணத்துக்குப் பிறகு அவரது மனைவி தில்லி வசீர் இமாத் உல் முல்க்கின் துணையோடு பஞ்சாப் ஆளுநராக மீர் முனிமை அப்தலியின் ஒப்புதலின்றி நியமித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அப்தலி படையெடுத்து வந்து பஞ்சாபைக் கைப்பற்றினார். மீர் முனிம் தில்லிக்குத் தப்பினார். அவரைத் தொடர்ந்து விரட்டிய அப்தலி தில்லியைக் கைப்பற்றினார். 1757ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தில்லி சூறையாடப்பட்டது. மதுராவும் பிருந்தாவனமும் சிதைக்கப்பட்டன.

தில்லியை விட்டு வெளியேறும் முன் அப்தலி தில்லியில் தனது பிரதிநிதியாக மீர் பக்சியை நியமனம் செய்தார். அவரது மகன் தைமூர் ஷா லாகூரின் (வைஸ்ராயாக) அரசபிரதிநிதியாக ஆக்கப்பட்டார். அப்தலி தில்லியிலிருந்து வெளியேறிய பிறகு மல்ஹர் ராவ் ஹோல்கர், ரகுநாத ராவ் ஆகியோரின் தலைமையின் கீழ் ஒரு தாக்குதல் நடந்தது. தில்லியில் அப்தலி நியமித்த பிரதிநிதியை அவர்கள் அகற்றினார்கள். பின்னர் தங்களுக்கு பிடித்த ஒருவரை வசீராக நியமித்தனர். 1758இல் சர்கிந்த் மற்றும் லாகூரை அவர்கள் கைப்பற்றினார்கள். ஆப்கன் படைகள் வீழ்த்தப்பட்டு தைமூர் ஷா ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார்.

1759 அக்டோபர் மாதம் அப்தலி பஞ்சாபை மீட்டார். லாகூர், முல்தான், சர்கிந்த் ஆகிய பகுதிகளிலிருந்து வெளியேற வேண்டிய நிலைமைக்கு மராத்தியர் தள்ளப்பட்டனர். பஞ்சாபின் நிலைமையைச் சீராக்குவதற்காக மகாதாஜி சிந்தியாவின் சகோதரரான தத்தாஜி சிந்தியாவை பேஷ்வா அங்கு அனுப்பினார்.

ஆனால் 1760 இல் நடந்த போரில் அப்தலி அவரை வீழ்த்திக் கொன்றார். சிகந்தராவில் மல்ஹர் ராவ் ஹோல்கரும் தோல்வி கண்டார். அதன் பிறகு சதாசிவ ராவின் தலைமையில் பெரும்படையைப் பேஷ்வா உருவாக்கினார்.

ரோகில்கண்டின் நஜீப் உத் தௌலா மற்றும் அயோத்தியின் ஷூஜா உத் தௌலா ஆகியோருடன் கூட்டணி அமைத்து அப்தலி பதிலடி கொடுத்தார். வடக்கு அதிகார மையங்களில் மராத்தியருக்குக் கூட்டாளிகள் கிடைக்கவில்லை. அயோத்தி நவாப், சீக்கியர், ஜாட் தலைவர்கள் ஆகியோரைப் பகைத்துக்கொண்ட மராத்தியர், ரஜபுத்திரர்களின் நம்பிக்கையையும் இழந்தனர்.

பேஷ்வாவின் இளைய புதல்வர் விஸ்வாஸ் ராவின் ஒட்டுமொத்த தலைமையின் கீழ் மராத்திய இராணுவம் இருந்தது. இந்தப் படைகளுக்கு சதாசிவ ராவ் உண்மையான தளபதியாகத் திகழ்ந்தார். வழியில் ஹோல்கர், சிந்தியா, கெய்க்வாட் ஆகியோரை இணைத்துக் கொண்டனர். இந்த நேரத்தில் முகலாய மன்னர் இரண்டாம் ஆலம்கீர் கொல்லப்பட்டார். அவரது இளைய மகன் இரண்டாம் ஷாஆலம் தானே முடி சூடிக்கொண்டார். இந்தப் படுகொலையைத் திட்டமிட்ட வசீர் மூன்றாம் ஷாஜகானுக்கு பட்டம் சூட்டினார். இதில் தலையிட்ட சதாசிவ ராவ் மூன்றாம் ஷாஜகானை ஆட்சியிலிருந்து அகற்றிவிட்டு இரண்டாம் ஷா ஆலம் என்பவரை மன்னராக அறிவித்தார். அப்தலியின் படைகள் மீது தாக்குதல் நடத்துவதற்குப் பதிலாக சதாசிவ ராவ் உணவுப்பற்றாக்குறை ஏற்படும் வரை நீண்ட காலம் அமைதி காத்தார். தட்டுப்பாடின்றி உணவு கிடைக்கக்கூடிய பசுமையான ஆற்றிடைப் பகுதிகளில் அப்தலி தனது படைகளை நிறுத்தினார்.

பானிப்பட் போரின் விளைவுகள்

1761 ஜனவரி 14 ஆம் தேதி மூன்றாவது பானிப்பட் போர் நடந்தது. மராத்தியரின் இராணுவம் முற்றிலுமாக அழிந்தது. பேஷ்வாவின் மகன் விஸ்வாஸ் ராவ், சதாசிவ ராவ், மற்றும் எண்ணற்ற மராத்திய தளபதிகள் கொல்லப்பட்டனர். ஹோல்கர் தப்பியோடினார். சிந்தியாவின் படைகள் அவரைத் துரத்தின. இந்தத் துயர செய்தி கேட்டு பேஷ்வா அதிர்ச்சி அடைந்தார். இதயம் நலிவடைந்த பேஷ்வா 1761 ஜூனில் மரணமடைந்தார்.

பானிப்பட் போருக்குப் பிறகு அப்தலி இரண்டாம் ஷா ஆலத்தை தில்லியின் மன்னராக அங்கீகரித்தார். ஆண்டொன்றுக்கு நான்கு மில்லியன் கப்பம் கிடைத்தது. முதலில் கடுமையான அதிர்ச்சியைச் சந்தித்த மராத்தியர் பத்து ஆண்டுகளுக்குள் முகலாய மன்னர் ஷா ஆலத்தின் பாதுகாவலராக உருவாகி வடக்கே தங்களுடைய அதிகாரத்தை நிலைநிறுத்த முயன்றனர்.

பேஷ்வா முதலாம் மாதவ் ராவ் (1761-1772) மற்றும் அவரது வழித்தோன்றல்கள்

1761ஆம் ஆண்டு பாலாஜி பாஜி ராவின் மகன் மாதவ் ராவ், பேஷ்வாவின் இளைய சகோதரர் ரகோபாவின் ஆட்சியில் பேஷ்வா ஆகப் பதவியேற்றார். பானிப்பட் போரில் இழந்த மராத்திய அதிகாரத்தை மீட்க மாதவ் ராவ் முயன்றார். 1763ஆம் ஆண்டு ஹைதராபாத் நிஜாமுடன் கடும் சண்டை நடந்தது. மைசூரை ஆண்ட ஹைதர் அலிக்கு எதிராக 1765 - 1767 க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் அவர் நடத்திய தாக்குதல்கள் வெற்றி பெற்றன. எனினும் தான் இழந்த அனைத்துப் பகுதிகளையும் ஹைதர் அலி விரைவாக மீட்டார். ஆனால் மாதவ் ராவ் 1772ஆம் ஆண்டு மீண்டும் அவற்றை மீட்டார். அதன் காரணமாக தர்மசங்கடமான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடும் நிர்பந்தம் ஹைதர் அலிக்கு ஏற்பட்டது.

ரோகில்லாக்களை (பதான்கள்) வீழ்த்தி ரஜபுத்திர அரசுகளையும் ஜாட் தலைவர்களையும் அடிமைப்படுத்தி வட இந்தியா மீதான தனது கட்டுப்பாட்டை அவர் உறுதி செய்தார். தப்பியோடிய மன்னரான இரண்டாம் ஷா ஆலம் அலகாபாத்தில் ஆங்கிலேயரின் பாதுகாப்பிலிருந்தார். 1771இல் அவரை மராத்தியர் மீண்டும் தில்லிக்கு அழைத்து வந்தனர். கோரா, அலகாபாத் ஆகிய இடங்களை மன்னர் ஷா ஆலம் மராத்தியருக்குத் தாரை வார்த்தார். ஆனால் 1772ஆம் ஆண்டு பேஷ்வாவின் திடீர் மரணம் அவரது சிறப்புமிக்க ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

முதலாம் மாதவ் ராவுக்கு வாரிசு இல்லாத காரணத்தால் அவரது இளைய சகோதரர் நாராயண ராவ் 1772இல் பேஷ்வா ஆகப் பொறுப்பேற்றார். ஆனால் அடுத்த ஆண்டே அவர் படுகொலை செய்யப்பட்டார். அவரது மகன் சவாய் மாதவ் ராவ் (இரண்டாம் மாதவ் ராவ்) பிறந்து 40 நாட்களே ஆன நிலையில் பேஷ்வா ஆக முடிசூடப்பட்டார். இரண்டாம் மாதவ் ராவின் மரணத்துக்குப் பிறகு ரகுநாத் ராவின் மகன் இரண்டாம் பாஜி ராவ் பதவியை ஏற்றார். அவரே கடைசி பேஷ்வா ஆவார்.

Tags : The Marathas மராத்தியர்.
11th History : Chapter 15 : The Marathas : Rule of the Peshwas (1713-1818) The Marathas in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வகுப்பு வரலாறு : அலகு 15 : மராத்தியர் : பேஷ்வா ஆட்சி (1713-1818) - மராத்தியர் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வகுப்பு வரலாறு : அலகு 15 : மராத்தியர்