Home | 12 ஆம் வகுப்பு | 12வது வரலாறு | ரஷ்யப் புரட்சியும் அதன் பாதிப்புகளும்

ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் - வரலாறு - ரஷ்யப் புரட்சியும் அதன் பாதிப்புகளும் | 12th History : Chapter 13 : Imperialism and its Onslaught

   Posted On :  12.07.2022 04:41 pm

12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 13 : ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும்

ரஷ்யப் புரட்சியும் அதன் பாதிப்புகளும்

முதல் உலகப்போரின் மிக முக்கிய விளைவு ரஷ்யப் புரட்சியாகும்.

ரஷ்யப் புரட்சியும் அதன் பாதிப்புகளும்


அறிமுகம்

முதல் உலகப்போரின் மிக முக்கிய விளைவு ரஷ்யப் புரட்சியாகும். ரஷ்ய சார் மன்னரின் அரசு முதல் உலகப்போர் ஏற்படுத்திய அழுத்தங்களை தாக்குப்பிடிக்க முடியாமல் திண்டாடியது. மக்கள் உணவின்றி தவித்தனர். நகரங்களும், சிற்றூர்களும் தொழிலாளர்களால் நிறைந்து வழிந்தபோது அவர்களுக்கு இருக்க இடமோ, உண்ண உணவோ வழங்க யாருமில்லாத நிலை உருவானது. முதல் புரட்சி (பிப்ரவரி புரட்சி) 1917ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் பெட்ரோகிரேட் நகரில் வேலை நிறுத்தங்களோடும், ஆர்ப்பாட்டங்களோடும் நடைபெற்றது. ஆனால் முதல் புரட்சி ரஷ்யாவின் எந்த ஒரு பிரச்சனையையும் தீர்க்கவில்லை. ரஷ்ய முடியாட்சி தூக்கியெறியப்பட்டாலும் இடைக்கால அரசு போரைத் தொடர்ந்து நடத்தவே செய்தது. இதனால் நவம்பர் மாதத்தில் இரண்டாவது பெரும் புரட்சி (அக்டோபர் புரட்சி) நடந்தேறி லெனின் தலைமையிலான போல்ஷ்விக் அமைப்பு அதிகாரத்தைக் கைப்பற்றி ரஷ்யாவில் பொதுவுடைமை அரசை நிறுவியது.


 

அ) புரட்சியின் காரணிகள் சார்களின் சர்வாதிகார ஆட்சி

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ரஷ்யா தொடர்ச்சியாக சில சர்வாதிகார சார் மன்னர்களின் ஆட்சிக்குட்பட்டு பின்தங்கிய நிலையிலேயே இருந்தது. ரஷ்யப் பொருளாதாரமும், சமூகமும் இவர்களின் ஆட்சியின் கீழ் தேங்கி வளர்ச்சியடையாமலிருந்தன. அடிமை வர்க்கத்தினர் ஒடுக்கப்பட்டு வருந்தத்தக்க வாழ்க்கை முறையைக் கொண்டிருந்தனர். யூத - ஒடுக்குமுறை உச்சத்திற்கு சென்று யூத மக்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். தங்களின் கசப்புணர்வை பதிவுசெய்ய ஜனநாயக வெளிகள் இல்லாத நிலையிருந்தது. அறிஞர் பெருமக்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், மாணவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் எழுத்தாளர்கள் போன்றோர் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்தியதற்காக சிறையிலடைக்கப்படவும் நாடுகடத்தப்படவும் இன்னபிற வகையிலும் இன்னல்களுக்கு ஆட்படுத்தப்பட்டார்கள். சார் அரசாட்சியின் வீழ்ச்சியை அனைத்து தரப்பினரும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

விளாடிமிர் இலிச் லெனின் (1870 - 1924)

லெனின் மத்திய வோல்கா பகுதியில் பிறந்தார். அவரது மூத்த சகோதரர் 1887ஆம் ஆண்டு சார் மன்னரைக் கொல்ல முயன்ற குற்றத்திற்காகத் தூக்கிலிடப்பட்டார். கார்ல் மார்க்சின் சிந்தனைகளால் உந்தப்பட்ட லெனின் வெகுஜன நடவடிக்கையின் மூலமாகவே விடுதலை அடையமுடியும் என்று நம்பினார். அவர் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் ஆலை ஊழியர்களின் வாசகவட்டத்திற்கு மார்க்சியம் குறித்து வகுப்புகள் எடுத்து காலத்தை செலவழித்துக் கொண்டிருந்தார். அவர் 1895இல் கைதுசெய்யப்பட்டு சைபீரியாவில் சிறைவைக்கப்பட்டார். பின்னர் 1900இல் விடுவிக்கப்பட்ட அவர் ஐரோப்பாவின் பெரு நகரங்களில் ஒரு விடுதியிலிருந்து மறுவிடுதிக்கென்று புலம்பெயர்ந்து கொண்டேயிருந்தார். - இடதுசாரிகளில் இருந்து காங்கிரசிற்கு தேர்வு செய்யப்பட்ட 43 உறுப்பினர்களைக் கொண்ட முக்கிய கட்சியான சமூக ஜனநாயக கட்சி 1903இல் லண்டனுக்கு புலம்பெயர்ந்தது. அங்கு அமைப்பு, உத்தி போன்ற பிரச்சனைகளை முன்னிறுத்தி காங்கிரஸ் பிளவுபட்டது. போல்ஷ்விக் என்னும் ஒரு சிறு பெரும்பான்மையினை (போல்ஷின்ஸ்ட்வோ ) லெனின் ஆதரிக்க அதுவே பின்னர் போல்ஷ்விக் கட்சியாக உருவெடுத்தது. சிறுபான்மையாக இருந்த அவரது எதிரணியினர் மென்ஷ்விக்குகள் என்றழைக்கப்பட்டார்கள்.


 
வேளாண்குடிகளின் நிலை

ரஷ்ய சமூகம் விவசாயத்தைப் பின்புலமாக கொண்டதாகும். ஏறக்குறைய மக்கள் தொகையின் சரிபாதி நிலத்தோடு பிணைக்கப்பட்ட அடிமைகளாகவே விளங்கினார்கள் ரஷ்ய விவசாயிகள் வாரத்தில் ஒருசில நாட்களாவது அங்கிருந்த நிலக்கிழார்களின் நிலத்தில் கூலியின்றி வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டும், அவர்களின் அனுமதியைப் பெற்ற பின்பே திருமண உறவை ஏற்படுத்திக் கொள்ளவும் நிர்பந்திக்கப்பட்டனர். சிறு குற்றங்களுக்காக அடிமைகள் கடுந்தண்டனைகளைப் பெற்றார்கள். மன்னர் முதலாம் நிக்கோலஸின் ஆட்சிக்காலத்தில் ரஷ்யாவின் பல்வேறு பகுதிகளில் ஐநூறுக்கும் மேற்பட்ட கலவரங்கள் அடிமைகளால் நடத்தப்பட்டாலும் அவர்கள் கொடூரமான முறையில் நசுக்கப்பட்டார்கள். மன்னர் இரண்டாம் அலெக்ஸாண்டர் 1861இல் விடுதலை ஆணை ஒன்றைப் பிறப்பித்து அவர்கள் யாவரையும் அடிமைநிலையிலிருந்து விடுவித்தார். ஆனால் அவர்கள் மேற்கொண்டு வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல ஆதாரமாக இருக்கக்கூடிய நிலம் அவர்களுக்கு வழங்கப்படவில்லை .இதனால் புரட்சிக்கான எரிபொருளாக விவசாயிகள் விளங்கினார்கள்.

 

தொழில்வளர்ச்சி தேக்கமும், பின்தங்கிய சூழலில் தொழிலாளர் வாழ்க்கையும்

ரஷ்யா காலதாமதமாகவே தொழிற்துறையை உருவாக்கியது. இதனால் பிற ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும் அது பின்தங்கியேயிருந்தது. ரஷ்ய ஊழியர்கள் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்கள். தொழிற்சங்கங்களும், வேலைநிறுத்தங்களும் முற்றிலுமாக தடை செய்யப்பட்டிருந்தன. ரஷ்யாவின் தொழிலாளர் வர்க்கம் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைக்காதா எனக் காத்திருந்தனர்.

 

நிகிலிசவாதிகளின் பங்கு

ரஷ்ய நாட்டை எதிர்த்து இரக்கத்திற்கு சிறிதும் இடங்கொடுக்காமல் போரைத்துவக்கிய இளையோரையும் தீவிரவாத செயல்பாட்டு முறையை ஆதரிப்போரையும் உயர்குடிப்பிறப்பை சாராதோர்களையும் அவர்களின் எதிரிகள் நிகிலிசவாதிகள் என்று அழைத்தார்கள். மன்னர் இரண்டாம் அலெக்ஸாண்டரை கொலை செய்ய எடுக்கப்பட்ட முதல் முயற்சி தோற்கவும், அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட எண்ணிலா விசாரணைகளில் சந்தேகத்துக்குரிய இருபால் அறிவார்ந்த மக்களையும் நிகிலிசவாதிகள் என்று புனைந்து அவர்களை சைபீரிய சிறைக்கு அனுப்பியபோதும் புரட்சி நடவடிக்கைகள் ரஷ்யாவில் குறையாமல் தொடர்ந்துகொண்டே இருந்தது. பாதிக்கப்பட்ட சிறுபான்மையினரான யூதர்களும் போலந்து நாட்டு பூர்வகுடியினரும் வந்துசேர துவங்கியதும் புரட்சிப்படையின் எண்ணிக்கை வேகமாகப் பெருகியது.

பல்லாண்டுகால கட்டியெழுப்புதலின் வடிவமான சமூக அமைப்பை எதிர்க்கும் உணர்வின் பிரதிநிதித்துவமே நிகிலிசமாகும். நிகிலிசம் நாட்டின் அரசு, கிறித்தவ ஆலயம், குடும்பம் போன்ற நிறுவனங்கள் கொண்டிருந்த அதிகாரத்தை மறுத்தது. அதன் நம்பிக்கைகள் விஞ்ஞான அடிப்படையிலான உண்மையைச் சுற்றியே அமைந்திருந்தன.

 

மார்க்சியமும் அதன் தாக்கமும்

சோஷலிசப் புரட்சிக்கு , உழைக்கும் மக்கள் (Proletariat) எவ்வாறு அவசியமோ அது போலவே நடுத்தர மக்களின் (Bourgeoisie) இருப்பும் கட்டாய முன் தேவை என மார்க்சும், ஏங்கல்சும் கருதினர். பின்தங்கிய ரஷ்யாவில் ஒரு வெற்றிகரமான சோஷலிசப் புரட்சி ஏற்பட வாய்ப்பிருப்பதாக அவர்கள் கருதவில்லை . எனினும், அரசின்மைவாதம் போன்ற பிற தீவிரவாதப்போக்கு கொண்ட சோஷலிச் சிந்தனைகளைவிட ஒடுக்கப்பட்ட வாழ்க்கைச்சூழல் அமையப் பெற்றிருந்தவிடத்தில் மார்க்சியமே செழித்து வளர்ந்தது. அதனால் மார்க்சிய கூட்டமே வலுப்பெற்று முன்னேற பெரும் நிறுவன ஆற்றல் கொண்டிருந்த லெனின் அதன் கவர்ந்திழுக்கும் திறன் பெற்ற தலைவரானார்.

 

சார் மன்னர் இரண்டாம் நிக்கோலசின் சர்வாதிகாரம்

ரோமனோவ் வம்சத்தை சேர்ந்த சார் மன்னர் இரண்டாம் நிக்கோலஸ் அரசாட்சி அனுபவம் சிறிதும் இல்லாதிருந்தார். அவரது மனைவியான அலெக்ஸாண்ட்ரா ஆதிக்க மனோபாவம் கொண்டவர் என்பதோடு நிக்கோலஸ் அவரின் ஆழ்ந்த தாக்கத்தின் கீழிருந்தார். காலனிய விரிவாக்கப் போட்டியில் விடுபட்டுவிடக்கூடாது என்று கருதிய நிக்கோலஸ் அதற்காக மஞ்சூரியாவிற்குள் நுழையும்பொருட்டு 1904இல் தூண்டியமையே ஜப்பானை எதிர்த்த போராக சென்று முடிந்தது. ரஷ்யாவின் தோல்வி அந்நாட்டினுள் வேலை நிறுத்தங்களையும் கலவரங்களையும் உருவாக்கியது. சார் மன்னர் மீதான எதிர்ப்பு வலுத்தது.


அருட்தந்தை கேப்பன் 1905 ஜனவரி 23 அன்று பெண்கள், குழந்தைகள் மற்றும் பிற மக்கள் கலந்துகொண்ட ஒரு பேரணியை நடத்தினார். பிரதிநிதித்துவ அடிப்படையிலான தேசிய சட்டமன்றத்தையும், வேளாண் மற்றும் தொழிற்துறை கொள்கைகளில் மாற்றத்தையும் கோரி ஆயுதம் ஏந்தாமல் அமைதியாக ஊர்வலம் நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால் காவல்துறையினரும், இராணுவ வீரர்களும் அவர்களை நோக்கி சுட்டனர். தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் செத்துமடிந்தனர்; ஆயிரக்கணக்கானோர் குண்டடிபட்டனர். இச்சம்பவம் (இரத்த ஞாயிறு (Bloody Sunday) என்று பொதுவில் அடையாளப்படுத்தப்பட்ட சம்பவம்) கலவரத்திற்கும் வேலை நிறுத்தங்களுக்கும் கட்டுப்பாடற்ற வன்முறை நிகழ்வுகளுக்கும் வழிவகுத்து மாஸ்கோவின் கவர்னர் ஜெனரல் குண்டுவீசி கொல்லப்படும் வரை நீண்டது.

நிக்கோலஸ் ஒரு அரசியல் சாசனத்தை வழங்கவும் மா என்ற பாராளுமன்றத்தை உருவாக்கவும் நிர்ப்பந்திக்கப்பட்டார். இவற்றால் திருப்தியடையாத இடதுசாரி கட்சியினர் செயின்ட் பீட்டர்ஸ்ப ர்க் நகரில் சோவியத் (council) என்னும் தொழிலாளர் பிரதிநிதி அவையை உருவாக்கினர். இது போன்ற சோவியத்துக்கள் பிற நகரங்களிலும் உருவாக்கப்பட்டன. ஆமா நடுத்தர மக்களுக்காக அரசில் குரல் கொடுத்தது. இதனால் மிதவாதிகள் அரசுக்கு ஆதரவு நல்கினாலும் இடதுசாரிகள் எதிர்ப்பைத் தொடர்ந்தார்கள். ஆனால் ரூமா எப்போதெல்லாம் சார் மன்னரின் முடிவுகளை எதிர்த்ததோ அப்போதெல்லாம் அது கலைக்கப்பட்டு மறுதேர்தல் நடத்தப்பட்டது. அரசின் கொள்கைகளில் மாற்றம் காணாமலே நான்காவது ரூமா 1917ஆம் ஆண்டின் புரட்சியோடு கலைக்கப்பட்டது.

 

சார் மன்னர் எதிர்ப்பும், ஆமா கலைப்பும்

பிரான்சோடும் பிரிட்டனோடும் இணைந்து ரஷ்யா செயலாற்றிக் கொண்டிருந்ததால் முதல் உலகப்போரின் துவக்கத்தில் மன்னராட்சி தற்காலிகமாய் பலம் பெற்றிருந்தது. தனது அரண்மனைக்குள் புரட்சி மேற்கொள்ளப்பட்டு மாற்றங்கள் நிகழப்போவதாக கிளம்பிய புரளிகளை நம்பிய மன்னர் நிக்கோலஸ் தானே படைகளின் உச்ச தளபதியாக (Commander-in-chief) பொறுப்பேற்று நிலைமையை மேலும் குழப்பினார். அரண்மனை நிகழ்வுகளிலும் சார் மன்னர் மீதும் சார் அரசியார் மீதும் செல்வாக்குக் கொண்டிருந்த ரஸ்புட்டின் என்பவர் கொல்லப்பட்டதும் (1916) மேலும் குழப்பங்கள் வலுத்தன. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சோவியத்தின் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

 

புகழ்பெற்ற கிளர்ச்சிகள்

சோஷலிஸ்டுகள் 1917 பிப்ரவரி 23 அன்று சர்வதேச உழைக்கும் பெண்கள் தினத்தை அனுசரித்துக் கொண்டிருந்தபோது சார் மன்னர் யாராலும் அசைக்க முடியாவண்ணம் தம் நிலையைத் தக்கவைத்துக் கொண்டிருந்தார். ஆனால் மார்ச் 2 அன்று அவர் அரியணை இறங்கும் நிலை ஏற்பட்டது. வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு யாரும் அழைப்பு விடுக்கவில்லையென்றபோதும் இராணுவத்தில் பணிபுரியும் கணவர்களைக் கொண்ட பெண் ஜவுளி தொழிலாளர்கள், உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டதால் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கவும், ரஷ்யப் பேரரசின் தலைநகரானப் பெட்ரோகிரேட் நகரின் வீதிகளில் பேரணி செல்லவும் சூழ்நிலை அவர்களை உந்தித்தள்ளியது. பணியாளர்களுக்கு உணவு என்ற கோரிக்கையை முன்னிறுத்தி தீவிரவாத மனநிலை கொண்ட ஆயிரக்கணக்கான பெண் ஊழியர்கள் வீதிகளில் போராடிக் கொண்டே தொழிற்சாலைப் பணியாளர்களை நோக்கி "வெளியே வாருங்கள்!" "பணிபுரிவதை நிறுத்துங்கள்!' என்று உரத்த குரலெழுப்பினர். இதன் எதிரொலியாக மறுநாள் (பிப்ரவரி 24) நகரின் 400,000 ஊழியர்கள் போராட்டக்களத்தில் இறங்கினர்.

 

சார் மன்னர் பதவி இறங்குதல்

அரசு இராணுவத்தைக் கொண்டு வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒடுக்க முயன்றது. ஆனால் வேலைநிறுத்தப் போராட்டமும், பேரணிகளும் நான்காம் நாளை எட்டியபோது இராணுவப் பணிமனைகளிலும் கலகம் வெடித்தது. சார் மன்னர் இராணுவ சட்டத்தை நடைமுறைப்படுத்தினார். ஆனால் அவரது ஆணையை ஒலிபரப்ப ஒருவர் கூடப் பணியில் இல்லாத சூழலில் நகரில் இச்செய்தி பரவவில்லை சார் மன்னர் பெட்ரோகிரேட் நகருக்குத் திரும்ப முயன்றார். அவர் வந்த புகைவண்டியை இருப்புப்பாதை ஊழியர்கள் வழியிலேயே தடுத்து நிறுத்தினர். இதனால் அச்சங்கொண்ட பெட்ரோகிரேடின் சில இராணுவ தளபதிகளும் பிற தலைவர்களும் சார் மன்னரை பதவி துறக்க அறிவுறுத்தினர். மக்களின் எழுச்சி நடந்து ஒரு வாரகாலம் சென்ற நிலையில் மார்ச் 15 அன்று மன்னர் இரண்டாம் நிக்கோலஸ் பதவி துறந்தார்.

 

இடைக்கால அரசு

அரசின் செயல்பாடுகளை எடுத்து நடத்த இரு இணை அமைப்புகள் இருந்தன. முதலாவதானது சொத்துடைமையாளர்களைப் (Propertied Class) பிரதிநிதித்துவப்படுத்தி பழைய அரசின் ரூமாவில் அங்கம் வகித்த நடுத்தர வர்க்க அரசியல்வாதிகளைக் கொண்டது. மற்றொன்றானது தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிலாளர் குழு அல்லது சோவியத் அமைப்பின் உறுப்பினர்களைக் கொண்டது. சோவியத் உறுப்பினர்கள் தலைமறைவாயிருந்த இடதுசாரிகளின் செல்வாக்கிற்கு உட்பட்டே செயல்பட்டார்கள். ஆமாவில் இருந்தவர்கள் சோவியத்துக்களின் ஒப்புதலைப்பெற்று இடைக்கால அரசை நிறுவினார்கள். இம்முடிவில் சோவியத்துக்குள் அதிக எண்ணிக்கையிலிருந்த மென்ஷ்விக்குகளால் கொள்ளப்பட்டதேயன்றி சிறுபான்மை போல்ஷ்விக்குகள் முடிவெடுக்காமலிருந்தார்கள். லெனினின் வரவால் அங்கிருந்த நிலைமை முற்றிலுமாக மாறியது.

 

இடைக்கால அரசின் தோல்வி

புரட்சிவெடித்தபோதுலெனின் சுவிட்சர்லாந்தில் இருந்தார். தொடர்ந்து போராடுதலையே லெனின் விரும்பினார். அனைத்து அதிகாரங்களும் சோவியத்துக்களுக்கே என்ற அவரின் தாரக மந்திரம் தொழிலாளர் தலைவர்கள் யாவரையும் அவர் பக்கம் திருப்பியது. போர்க்காலப் பற்றாக்குறைகளால் பாதிக்கப்பட்ட மக்களை ரொட்டி, அமைதி, நிலம் என்ற முழக்கம் ஈர்த்தது.

ஆனால் இடைக்கால அரசு இருபெரும் தவறுகளைப் புரிந்தது. நில மறுவழங்கல் குறித்த கோரிக்கையின் முடிவை அது காலதாமதப்படுத்தியதோடு போரைத் தொடர்ந்து நடத்துவது குறித்த விஷயங்களிலும் இழுத்தடித்தது. ஏமாற்றமடைந்த விவசாய வீரர்கள் தங்களின் பணியை விடுத்து நில ஆக்கிரமிப்பாளர்களோடு சேர்ந்துகொண்டார்கள். இது போல்ஷ்விக்குகள் தலைமையில் பெட்ரோகிரேடில் நடந்து கொண்டிருந்த கிளர்ச்சியைத் தீவிரப்படுத்தியது. அரசு ப்ராவ்தா என்ற செய்தித்தாளை தடை செய்ததோடு பின்லாந்தில் மறைந்திருந்த லெனின் தவிர பிற போல்ஷ்விக்குகளை கைது செய்தது. லியோன் ட்ராட்ஸ்கியும் கைது செய்யப்பட்டார். தாராளவாதிகளும் மிதவாத சோஷலிஸ்டுகளும் ஏற்படுத்திக்கொண்ட கூட்டணியின் பின்புலத்தில் கெரன்ஸ்கி பிரதம அமைச்சரானார். ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி ஒன்றை எதிர்கொண்ட கெரன்ஸ்கி அரசையும், சோவியத்துக்களையும் ஒடுக்கி நீக்க நினைத்தார். ஆனால் அவரது முயற்சிகள் சோவியத்துகளால், அதிலும் குறிப்பாக மக்களிடையே பிரபலமடைந்து கொண்டிருந்த போல்ஷ்விக்குகளால் முறியடிக்கப்பட்டன

ப்ராவ்தா என்ற ரஷ்ய சொல்லுக்கு "மெய்" என்று பொருள். இதுவே சோவியத் ஐக்கியத்தின் பொதுவுடைமை கட்சிக்குரிய அங்கீகரிக்கப்பட்ட செய்தித்தாளாக 1918 முதல் 1991 வரை இருந்தது.

 

லெனின் தலைமையில் போல்ஷ்விக்குகள் பொறுப்பேற்றுக்கொள்ளுதல்

அக்டோபர் மாதத்தில் லெனின் போல்ஷ்விக் மத்திய குழுவிடம் உடனடியாக ஒரு புரட்சியை நடத்துமாறு அறிவுறுத்தினார். ட்ராட்ஸ்கி முழுமையான செயல்திட்டமொன்றைத் தயாரித்தார். குளிர்கால அரண்மனை, பிரதம அமைச்சரின் தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசின் முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்கள் யாவும் நவம்பர் 7 அன்று ஆயுதமேந்திய ஆலை ஊழியர்களாலும், புரட்சிப்படைகளாலும் கைப்பற்றப்பட்டன. புது பொதுவுடைமை அரசு 1917 நவம்பர் 8 அன்று பதவியேற்றது. அதன் தலைவராக லெனின் வீற்றிருந்தார். போல்ஷ்விக் கட்சியின் பெயர் ரஷ்ய கம்யூனிச கட்சி என்று மாற்றப்பட்டது.

 
புரட்சியின் விளைவுகள்

இடைக்கால அரசின் வீழ்ச்சிக்கு மிக முக்கியமான காரணியாக அது உலகப் போரில் இருந்து பின்வாங்காமல் இருந்ததே என லெனின் கருதினார். இதனால் லெனின் உடனடியாக அமைதி ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் இறங்கினார். புது அரசை நிர்மாணிப்பதில் தன் முழுகவனத்தை செலுத்திக்கொண்டிருந்த அவர் மத்திய சக்திகள் விதித்த கடுமையான நெறிமுறைகளை உதாசீனப்படுத்தினார். அதனால், பிரெஸ்ட்-லிடோவ்ஸ்க் உடன்படிக்கை மார்ச் 1918இல் கையொப்பமானது.

 


ரஷ்யப் புரட்சி ஏற்படுத்திய பாதிப்புகள்

புரட்சி உலகம் முழுவதிலும் வாழும் மக்களின் நினைவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பல்வேறு நாடுகளிலும் பொதுவுடைமை கட்சி உருவாக்கப்பட்டது. சோவியத் ஐக்கியம் காலனி ஆட்சிக்குட்பட்ட நாடுகளை தங்களின் விடுதலைக்காகப் போராட அறிவுறுத்தி அந்நாடுகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்தது. நிலவுடைமை சீர்திருத்தம், சமூக நலன், தொழிலாளர் உரிமைகள், பாலின சமத்துவம் போன்ற முக்கியத்துவம் பெற்ற கூறுகள் உலகம் முழுவதும் விவாதப்பொருளானது.

புரட்சிக்குப்பின் வந்த பத்தாண்டுகளில் அந்நாடு காட்டிய அதிவேக வளர்ச்சி வளர்ந்துவரும் நாடுகளுக்கெல்லாம் உத்வேகமளித்ததோடு, முதலாளித்துவத்திற்கு மாற்றான ஒரு முறையையும் அறிமுகப்படுத்தியது. எழுத்தறிவின்மையும், வறுமையும் மிக குறுகிய காலத்தில் ஒழிக்கப்பட்டன. தொழிற்துறையும், வேளாண்மையும் பாராட்டப்படுமளவிற்கு முன்னேற்றம் காட்டியதோடு பொருளாதாரப் பெருமந்தம் உலகின் பிற பகுதிகளைக் கடுமையாக பாதித்த போது ஐக்கிய ரஷ்யாவை அது எந்த வகையிலும் பாதிக்கவில்லை. பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட்டது. தொழிற்துறையும், வங்கிகளும் நாட்டுடைமையாக்கப்பட்டன. நிலம் சமூகவுடைமையாகக் கொள்ளப்பட்டு ஏழ்மை நிலையிலிருந்த விவசாயிகளுக்குப் பிரித்து வழங்கப்பட்டது.

Tags : Imperialism and its Onslaught | History ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் - வரலாறு.
12th History : Chapter 13 : Imperialism and its Onslaught : Russian Revolution and its Impact Imperialism and its Onslaught | History in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 13 : ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் : ரஷ்யப் புரட்சியும் அதன் பாதிப்புகளும் - ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் - வரலாறு : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 13 : ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும்