Home | 11 ஆம் வகுப்பு | 11வது வரலாறு | சமுத்திரகுப்தர்

குப்தர் - வரலாறு - சமுத்திரகுப்தர் | 11th History : Chapter 7 : The Guptas

   Posted On :  18.05.2022 05:32 am

11 வது வகுப்பு வரலாறு : அலகு 7 : குப்தர்

சமுத்திரகுப்தர்

பொ.ஆ. 335இல் முதலாம் சந்திரகுப்தர் தனது புதல்வர் சமுத்திரகுப்தரைத் தனது வாரிசாக நியமித்தார்.

சமுத்திரகுப்தர்

பொ.. 335இல் முதலாம் சந்திரகுப்தர் தனது புதல்வர் சமுத்திரகுப்தரைத் தனது வாரிசாக நியமித்தார். அசோகர் தூண் ஒன்றில் பொறிக்கப்பட்ட இவர் குறித்த நீண்ட புகழுரை அவர் மௌரிய பரம்பரையில் வந்ததாகச் சொல்கிறது. இந்தக் கல்வெட்டு சமுத்திரகுப்தர் நாடு முழுவதும் படையெடுத்துச் சென்றபோது அவருக்கு அடிபணிந்த அரசர்கள், ஆட்சிப் பகுதிகள் ஆகியன குறித்த மிகப் பெரும் பட்டியலைத் தருகிறது.

முக்கியமாக தில்லி மற்றும் மேற்கு உத்தரப்பிரதேசத்தின் நான்கு அரசர்களையும் அவர் வென்றுள்ளார். தெற்கு மற்றும் கிழக்குப் பகுதி அரசர்கள் அடிபணிந்து கப்பம் செலுத்தக் கட்டாயப்படுத்தப்பட்டனர். கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ள இடங்களைப் பார்க்கும் போது, சமுத்திரகுப்தரின் படையெடுப்பு கிழக்குக் கடற்கரையோரம் காஞ்சிபுரம் வரை நீண்டதாகத் தெரிகிறது. கங்கைச் சமவெளியின் மேற்குப் பகுதியில் ஒன்பது அரசர்களைப்படைபலத்தால் வென்றார். காட்டு ராஜாக்களும் (மத்திய இந்தியாமற்றும் தக்காணத்தின் பழங்குடியினத் தலைவர்கள்), அஸ்ஸாம், வங்கம் போன்ற கிழக்குப் பகுதிகளின் அரசர்களும், நேபாளம், பஞ்சாப் போன்ற பகுதிகளின் சிற்றரசர்களும் கப்பம் கட்டக் கட்டாயப்படுத்தப்பட்டனர். மாளவர்கள், யுதேயர்கள் உள்ளிட்ட இராஜஸ்தான் பகுதியின் ஒன்பது குடியரசுகள் குப்தர்களின் ஏகாதிபத்தியத்தை ஏற்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டன. இதோடு, தெய்வபுத்திர சகானுசாகி (ஒரு குஷாண பட்டம்), சாகர் அரசு, இலங்கை அரசு போன்ற வெளிநாட்டு அரசுகளும் கப்பம் கட்டியதாக அக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.

வரலாற்றறிஞர்கள் சமுத்திரகுப்தரை இந்திய நெப்போலியன் என அழைக்கின்றனர். இந்த செய்தி, மறுக்கமுடியாதது. தென்பகுதி அரசர்கள் கப்பம் கட்டியது, வடஇந்திய அரசுகள் குப்தப் பேரரசோடு இணைக்கப்பட்டது ஆகியனவற்றை மறுக்க முடியாது. மேற்கு இந்தியாவில் சாக அரசர்களைத் தோற்கடிக்க முடியவில்லை என்பதால், நேரடி அதிகாரம் கங்கைச் சமவெளி வரையிலும் தான் இருந்துள்ளது. இராஜஸ்தானின் பழங்குடியினர் கப்பம் கட்டினர். ஆனால் பஞ்சாப் சமுத்திரகுப்தரின் அதிகாரத்திற்கு வெளியே இருந்தது. சமுத்திரகுப்தரின் படையெடுப்பு இப்பகுதியின் பழங்குடி குடியரசுகளின் அதிகாரத்தைக் குறைத்ததால், இங்கு ஹுணர்களின் ஊடுருவல் அடிக்கடி நிகழ்ந்தது.



குஷாணர்களுடனான உறவு குறித்து உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் இலங்கையைப் பொருத்தவரை, இலங்கை அரசர் மேகவர்மன் பரிசுகளை அனுப்பி, கயாவில் ஒரு பௌத்த மடம் கட்ட அனுமதி கோரியுள்ளார். சமுத்திரகுப்தரின் ஆட்சிக்காலம் நாற்பதாண்டுகள் நீடித்ததால். இது போன்ற படையெடுப்புகளைத் திட்டமிட்டு நடத்த அவருக்குப் போதுமான கால அவகாசம் இருந்தது. தனது ராணுவ வெற்றிகளைப் பிரகடனம் செய்ய அவர் அசுவமேத யாகம் நடத்தினார்.

சமுத்திரகுப்தர் அறிஞர்களையும், ஹரிசேனர் போன்ற கவிஞர்களையும் ஆதரித்தார். இதன் மூலம் சமஸ்கிருத இலக்கியத்தை வளர்ப்பதில் பங்காற்றினார். வைணவத்தை அவர் தீவிரமாகப் பின்பற்றினார். என்றாலும் வசுபந்து என்ற மாபெரும் பெளத்த அறிஞரையும் ஆதரித்தார். கவிதை, இசைப் பிரியரான இவருக்குக் கவிராஜா என்ற பட்டம் வழங்கப்பட்டது. குப்தர் நாணயங்களில் அவர் வீணை வாசிப்பது போன்ற சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.



Tags : The Guptas | History குப்தர் - வரலாறு.
11th History : Chapter 7 : The Guptas : Samudragupta The Guptas | History in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வகுப்பு வரலாறு : அலகு 7 : குப்தர் : சமுத்திரகுப்தர் - குப்தர் - வரலாறு : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வகுப்பு வரலாறு : அலகு 7 : குப்தர்