Home | 11 ஆம் வகுப்பு | 11வது புவியியல் | நில வரைபடத்தின் அளவை

புவியியல் - நில வரைபடத்தின் அளவை | 11th Geography : Chapter 9 : Maps and Scale

   Posted On :  25.03.2022 07:53 pm

11 வது புவியியல் : அலகு 9 : நிலவரைபடம் மற்றும் அளவை

நில வரைபடத்தின் அளவை

நில வரைபடத்தில் இரு புள்ளிகளுக்கு இடைப்பட்ட தூரத்திற்கும், நிலப்பரப்பில் உள்ள அதே இரு புள்ளிகளுக்கு இடைப்பட்ட தூரத்திற்கும், இடையே உள்ள விகிதத்தை அளவை என்கிறோம்.

நில வரைபடத்தின் அளவை

நில வரைபடத்தில் இரு புள்ளிகளுக்கு இடைப்பட்ட தூரத்திற்கும், நிலப்பரப்பில் உள்ள அதே இரு புள்ளிகளுக்கு இடைப்பட்ட தூரத்திற்கும், இடையே உள்ள விகிதத்தை அளவை என்கிறோம். அனைத்து வகையான நிலவரைபடங்களிலும் அளவையானது இன்றியமையாத ஒன்றாகும். நிலவரைபடத்தின் தூரத்தை நிலத்தின் தூரமாக மாற்றுவதற்கு அளவை உதவுகிறது.

 

நிலவரைபடத்திற்கும் புவிபரப்பிற்கும் இடையே உள்ள தொடர்பை நிலவரைபட அளவை தருகிறது. நிலவரைபடத்தில் இரண்டு புள்ளிகளுக்கு இடையே உள்ள தூரத்திற்கும் நிலப்பரப்பில் உள்ள அதே தூரத்திற்கும் இடையே உள்ள விகிதத்தை தொகுதியாகவும் (numerator) (நிலவரைபட தூரம்), பகுதியாகவும் (denominator) (நிலப்பரப்பில் உள்ள தூரம்) குறிக்கப்படுகிறது.

நிலவரை படங்களில் அளவைகள் மூன்று விதமாக குறித்துக் காட்டப்படுகிறது அவை.

1. சொற்றொடர் அளவை (Statement Scale)

2. பிரதி பின்னம் (Representation of Fraction)

3. நீள் அளவை (Graphical Representation / Bar scale)

 

1. சொற்றொடர் அளவை (Statement Scale)

நிலவரைபடத்தில் அளவைகளை குறிக்க சொற்களை பயன்படுத்துவது சொற்றொடர் அளவை எனப்படும். எ.கா, 1 சென்டி மீட்டர் = 10 கிலோ மீட்டர் என்பது நிலத்தில் தூரத்திற்கு 10 கிலோ மீட்டர் எனவும் நிலவரைபடத்தில் தூரம் 1.செ.மீ என காட்டப்படுகிறது.

மேலும் 1 அங்குலத்திற்கு 16 மைல்கள் என்பதை நிலத்தில் உள்ள தூரம் 16 மைல்கள் எனவும் நிலவரைபடத்தில் உள்ள தூரம் ஒரு அங்குலம் எனவும் குறித்து காட்டப்படுகிறது. இதன் மூலம் சொற்றொடர் அளவை எளிதாகவும், பயன்பாட்டில் உள்ள அலகுகளைக் கொண்டு சொற்றொடர் மூலம் விளக்கப்படுகிறது.

(எ.கா) 1 சென்டிமீட்டர் = 10 கிலோ மீட்டர்

 

2. பிரதி பின்னம் (Representation of Fraction)

நிலவரைபடத்தில் உள்ள தூரத்திற்கும் நிலத்தில் அதே தூரத்திற்கும் இடையே உள்ள தொடர்பை எண்களால் எழுதப்பட்ட அளவையே பிரதி பின்ன அளவை ஆகும். இந்த பிரதி பின்ன அளவை பின்ன முறையில் மேப்புகளில் குறிக்கப்படுகிறது.

எ.கா. பிரதி பின்னம் 1: 40,000

ஒரு அலகு என்பது வரைபடத்திலும், 40,000 அலகுகள் என்பது நிலப்பரப்பிலும் காட்டப்படும் தூரமாகும். அதாவது 1 செ.மீ அல்லது அங்குலம் என்று நிலவரைபடத்தில் குறிக்கப்படுவது உண்மையில் 40,000 செ.மீ அல்லது 40,000 அங்குலங்கள் என நிலத்தின் தூரத்தை குறிப்பதாகும்.

பிரதி பின்னம் கீழ்க்கண்ட பண்புகளைக் கொண்டிருக்கும். 

1. பிரதிபின்னத்தில் தொகுதி சென்டிமீட்டரிலும் அதன் பகுதி கிலோ மீட்டரிலும் கொடுக்கப்பட்டிருக்கும்.

2. பிரதிபின்னத்தில் தொகுதி அங்குலத்தில் இருக்கும்போது பகுதி மைல்களில் இருக்கும்.

பிரதி பின்னம் 1/40,000 அல்லது 1:40,000 எனக் காட்டப்படுகிறது.

 

3. நேர்க்கோட்டு அளவை அல்லது பட்டை அளவை

நிலவரைபடத்தில் இவ்வகை அளவையில் நிலவரைபடத்தில் உள்ள தூரத்தையும் நிலத்தில் உள்ள அதே தூரத்தையும் முதன்மை மற்றும் இரண்டாம் பிரிவாக காண்பிக்கப்படுகிறது. சொற்றொடர் அளவை போல் அல்லாமல் நிலவரைபடத்தில் சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ மாற்றினாலும் இந்த நேர்க்கோட்டு அளவை பொருந்தும். இதுவே இந்த அளவையின் சிறப்பாகும்.

எடுத்துக்காட்டு:


 

தீர்வுகண்ட எடுத்துக்காட்டுகள்

1. சொற்றொடர் அளவையைப் பிரதி பின்ன அளவைக்கு மாற்றுதல்.

1.1 அங்குலம் என்பது 5 மைல்களை குறிக்கும் என்பதை பிரதி பின்ன அளவைக்கு மாற்றவும்.

தீர்வு: சொற்றொடர் அளவையைப் பிரதி பின்னமாக மாற்ற

1 அங்குலம் = 5 மைல்கள் அல்லது

1 அங்குலம் = 5 x 63,360 அங்குலம்

(1 மைல் = 63,360 அங்குலம்) அல்லது

1 அங்குலம் = 3,16,800 அங்குலம்

விடை : பிரதி பின்னம் 1 : 3,16,800 அல்லது 1 / 3,16,800.


2. கொடுக்கப்பட்டுள்ள பிரதிபின்ன அளவையை சொற்றொடர் அளவைக்கு மாற்றுதல்.

1. பிரதி பின்னம் 1 : 2,00,000 என்பதை சொற்றொடர் அளவைக்கு மாற்றவும்.

தீர்வு

1 : 2,00,000 என்பதில் 1 அலகு என்பது நிலவரைபட தூரத்தையும் 2,00,000 என்பது நிலத்தில் உள்ள தூரத்தையும் குறிக்கும்.

1 அலகு என நிலவரைபடத்தில் குறிப்பிடுவது 1,00, 000 அலகுகளாக நிலத்தின் தூரத்தை குறிக்கும் அல்லது 1செ.மீ =

2,00,000 / 1,00,000 (1கி.மீ. = 1,00,000 செ.மீ) அல்லது 1 செ.மீ என்பது 2 கி.மீ என குறிக்கும்

விடை : 1 செ.மீ = 2 கி.மீ குறிக்கும் 

 

3. கொடுக்கப்பட்டுள்ள சொற்றொடர் அளவையை பிரதி பின்னமாக மாற்றவும்.

அ) 5 செ.மீ 10கி.மீட்டரை குறிக்கும்

ஆ) 2 அங்குலம் 4 மைல்களை குறிக்கும்

இ) 1 செ.மீ 100மீட்டரைக் குறிக்கும்

 

(அ) 5 செ.மீ 10கி.மீட்டரைக் குறிக்கும்

தீர்வு :

படி 1 கொடுக்கப்பட்ட அளவையை ஒரே அலகாக மாற்றவும்

1கி.மீ = 1,00,000 செ.மீ

படி 2 10 கி.மீ =10,00,000 செ.மீ

எனவே 5 செ.மீ = 10,00,000 செ.மீ

படி 3 1:10,00,000/5 என்ற விகிதமாக சுருக்கவும்

விடை : பிரதி பின்னம் 1:2,00,000 அல்லது 1 / 2,00,000 

(ஆ) அங்குலம் 4 மைல்களைக் குறிக்கும்

தீர்வு; 

படி 1 கொடுக்கப்பட்டுள்ள அளவையை ஒரே அலகாக மாற்றவும்

(1 மைல் = 63,360 அங்குலம்)

படி 2 4 மைல்கள் = 63,360 × 4 = 253440

அங்குலம் = 2,53,440 அங்குலம்

படி 3 1 : = 2,53,440/2 என்ற விகிதமாக சுருக்கவும்

விடை = பிரதி பின்னம் 1:1,26,720 அல்லது 1 / 1,26,720 

 

(இ) 1 செ.மீ 100 மீட்டரை குறிக்கும்

தீர்வு

படி1: கொடுக்கப்பட்டுள்ள அளவையை ஒரே அலகாக மாற்றவும்

(1e = 100 செ.மீ)

படி 2: 100மீ = 10,000 செ.மீ எனவே

1செ.மீ = 10,000 செ.மீ

விடை பிரதி பின்னம் 1:10,000 அல்லது 1/10,000


நேர்க்கோட்டு அளவைக்கு மாற்றுதல். 

தீர்வுக்கண்ட எடுத்துக்காட்டு : 1:50,000 என்ற அளவையை நேர்க்கோட்டு அளவைக்கு மாற்ற தூரத்தை கி.மீ மற்றும் மீட்டராக எடுத்துக் கொள்ளவும்.

(குறிப்பு: நீள் அளவைக்கு 15 செ.மீ நேர்க்கோட்டை வரைந்து கொள்ளவும்)

தீர்வு

1 : 50,000 என்பதில் 1 அலகு நிலவரைபடத்திலும் 50,000 அலகு நிலதூரத்தையும் அல்லது 1 செ.மீ = 50,000 செ.மீ அல்ல து 0.5 கி.மீ (1 கி.மீ =1,00,000 செ.மீ) 10 செ.மீ = 5 கி.மீ என குறிக்கும்.

 

வரைதல்

நேர்க்கோட்டு அளவை வரையும்போது 10 செ.மீ நீளமான கோட்டை வரைந்து அதை ஐந்து சமமான பகுதியாக பிரித்து 1கி.மீ முதல் 4கி.மீ வலது பக்கத்தில் குறிக்கவும், ஆரம்பத்தில் 0 என குறிக்க வேண்டும். வலது பகுதியில் 1கி.மீ என்ற அளவையை 10 பகுதியாக பிரித்து 0 என ஆரம்பிக்கவேண்டும். எனவே, முதன்மை அளவை 4 பகுதிகளாகவும், 4 கி.மீ ஆகவும் உள்ளது. இடது புறத்தில் உள்ள 1கி.மீ பிரதி பின்னம் 1:50,000 100 மீட்டர் உள்ள 10 பகுதிகளாக பிரிக்க வேண்டும். இதுவே விரிவாக்கப்பட்ட அளவை ஆன 1000 மீட்டர் ஆகும்.

 


 

பயிற்சி


1. சொற்றொடர் அளவையைப் பிரதி பின்னமாக மாற்றவும்

அ) 1 செ.மீ 10 கி.மீட்டரைக் குறிக்கும்

ஆ) 1 செ.மீ 5 கி.மீட்டரைக் குறிக்கும்

இ) 1 செ.மீ 1 கி.மீட்டரைக் குறிக்கும்

ஈ) 1 செ.மீ 50 கி.மீட்டரைக் குறிக்கும்

உ) 1 செ.மீ 100 கி.மீட்டரைக் குறிக்கும்

 

2. பிரதி பின்ன அளவையை சொற்றொடர் அளவையாக மாற்றவும்

அ) 1: 1,00,000

ஆ) 1: 50,000

இ) 1: 250,000

ஈ) 1:5,000,000

உ) 1:30,000

 

3. நேர்க்கோட்டு அளவையில் காட்டவும்.

அ) 1 செ.மீ 10 கி.மீட்டரைக் குறிக்கும்

ஆ) 1 செ.மீ 5 கி.மீட்டரைக் குறிக்கும்

இ) 1 செ.மீ 1 கி.மீட்டரைக் குறிக்கும்

ஈ) 1 செ.மீ 50 கி.மீட்டரைக் குறிக்கும்

உ) 1 செ.மீ 100 கி.மீட்டரைக் குறிக்கும்



 

Tags : Geography புவியியல்.
11th Geography : Chapter 9 : Maps and Scale : Scale Geography in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது புவியியல் : அலகு 9 : நிலவரைபடம் மற்றும் அளவை : நில வரைபடத்தின் அளவை - புவியியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது புவியியல் : அலகு 9 : நிலவரைபடம் மற்றும் அளவை