Home | 12 ஆம் வகுப்பு | 12வது வரலாறு | காலனியப் பரவலும் போரைநோக்கிய பாதையும்

ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் - வரலாறு - காலனியப் பரவலும் போரைநோக்கிய பாதையும் | 12th History : Chapter 13 : Imperialism and its Onslaught

   Posted On :  11.07.2022 06:11 pm

12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 13 : ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும்

காலனியப் பரவலும் போரைநோக்கிய பாதையும்

அ) மூலப்பொருள்கள் மற்றும் உற்பத்தி செய்யப்பட்டப் பொருள்களுக்கான சந்தை, காலனியப் பரவலுக்கு வழி ஏற்படுத்துதல் ஆ) ஏகபோக முதலாளித்துவம் முழுமையான ஏகாதிபத்தியத்திற்கு கொண்டு செல்லப்படல் இ) பாதுகாப்புவாதமும், அது ஏற்படுத்திய அரசியல் பிணக்குகளும் வியன்னாவிலும்

காலனியப் பரவலும் போரைநோக்கிய பாதையும்

 

அ) மூலப்பொருள்கள் மற்றும் உற்பத்தி செய்யப்பட்டப் பொருள்களுக்கான சந்தை, காலனியப் பரவலுக்கு வழி ஏற்படுத்துதல்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் பல நாடுகளும் மிகை உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களால் எழுந்த பிரச்சனையை தீர்ப்பதற்காக வெளிசந்தையை தேடும் கட்டாயத்தில் இருந்தன. இப்பிரச்சனைக்கான நிரந்தரத் தீர்வை இங்கிலாந்தின் அனுபவ வழி பார்க்கும்போது காலனிய நாடுகளைத் தங்களின் கீழ் கொண்டிருப்பதே சரி என்று விளங்கியது. மிகை உற்பத்திக்கான சந்தையாக இருப்பது நீங்கலாக காலனியப் பிரதேசங்கள் மற்றொரு நோக்கத்தையும் நிறைவு செய்யக்கூடும். பெரும் உற்பத்தியில் ஈடுபட அதிக அளவிலான தானியங்கள், பருத்தி, ரப்பர், கச்சா எண்ணெய், தாதுக்கள் போன்ற மூலப்பொருள்களும் தேவைப்பட்டன. தொழிற்சாலை முதலாளிகள் இதற்காக வேறு நாடுகளைச் சார்ந்திருக்க விரும்பவில்லை. அவர்கள் முலப்பொருள்களின் விளைச்சல் ஏற்படும் மூலாதாரத்தையே தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க எண்ணம் கொண்டார்கள். முதலாளிகள் சந்தைகளை உருவாக்கக் கொண்ட விருப்பமும், மூலப்பொருள்கள் விளையும் பகுதிகளைக் கட்டுப்படுத்த காட்டிய முனைப்புமே ஏகாதிபத்தியத்தைக் கட்டியெழுப்ப முக்கியப் பங்காற்றின.

இங்கிலாந்து 1870களுக்குப்பின் பிரான்ஸ், பெல்ஜியம், இத்தாலி, ஜெர்மனி போன்ற மிகை உற்பத்தி செய்த நாடுகளோடு பொருள்களை விற்கும் சந்தைகளைக் கொண்ட காலனிய நாடுகளை கட்டுப்படுத்துவதில் போட்டியில் இறங்கியது. அமெரிக்காவின் முறை 1898இல் அது ஸ்பெயினை தோற்கடித்து பிலிப்பைன்ஸை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தபோது ஏற்பட்டது. இதில் சுவாரஸ்யமான ஒன்று என்னவென்றால், இந்தியா, சீனா, ஆப்பிரிக்கா ஆகிய எந்த நாட்டிலானாலும் ஒருங்கிணைப்பிற்கான முதல் முயற்சியை ஏகாதிபத்திய முகவரோ, சமயப் பணியாளர்களோ, ஏகபோக அந்தஸ்தைக் கொண்ட வியாபார நிறுவனமோதான் மேற்கொண்டுள்ளார்கள். இருபது ஆண்டுகளுக்கும் குறைந்த காலத்தில் மத்திய ஆப்பிரிக்கா முழுவதும் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம், போர்த்துகல், இத்தாலி ஆகிய நாடுகளால் பங்குவைத்துக் கொள்ளப்பட்டது.

ஆப்பிரிக்காவின் 10 சதவீத அளவிலான இடங்களே 1876இல் ஐரோப்பாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் 1900இல் ஏறக்குறைய ஆப்பிரிக்கா முழுமையும் காலனிய ஆதிக்கத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தன. பிரிட்டன், பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய நாடுகள் பெருவாரியான பகுதிகளை எடுத்துக்கொண்டு எஞ்சிய சொற்பப்பகுதிகளை ஜெர்மனியும், இத்தாலியும் எடுத்துக்கொள்ள விட்டுவிட்டன. பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, ஜெர்மனி ஆகிய நாடுகள் சீனாவிற்குள்ளும் தத்தம் செல்வாக்கிற்குட்பட்ட கோளங்களை உருவாக்கி எடுத்துக்கொண்டன. ஜப்பான், கொரியாவையும் தைவானையும் எடுத்துக்கொண்டது. பிரான்ஸ் இந்தோ - சீனாவை கைப்பற்றியது; அமெரிக்க ஐக்கிய நாடு பிலிப்பைன்ஸை ஸ்பெயினிடமிருந்து எடுத்துக்கொண்டது, பிரிட்டனும் ரஷ்யாவும் ஈரானை பங்கு வைத்துக்கொள்ள முடிவுசெய்தன.

பிற இடங்களில் நிகழ்ந்தது போன்றே காலனியப் பகுதிகளை உருவாக்கும் முனைப்பில் ஆப்பிரிக்காவிலும் பெரும் போர்கள் நடத்தப்பட்டு அதன் பூர்வீககுடிகள் தோற்கடிக்கப்பட்டார்கள். புதிய வகை ஆயுதங்களான ப்ரீச்- லோடிங் துப்பாக்கியும், கேட்லிங் எந்திரத் துப்பாக்கியும் (Breech-loading rifles andgatlingmachine guns) போரைத் தங்க ளுக்கு சாதகமாகத் திருப்பும் திறனை ஐரோப்பியப் படையினருக்கு வழங்கின.

ஆப்பிரிக்காவை பிரித்தல் : பெல்ஜிய மன்னரான இரண்டாம் லியோபால்ட் 1876இல் தனது சர்வதேச ஆப்பிரிக்க சங்கத்தின் வாயிலாக ஆய்வுநடத்தி மிகச்சிறந்த ரப்பர் விளையும் பகுதியை அடையாளப்படுத்தி தன் நாட்டோடு இணைத்த பகுதியே தற்காலத்தில் பெல்ஜிய காங்கோ என்றழைக்கப்படுகிறது. அதுபோன்றே பிரெஞ்சுக்காரர்களும் டுனிஸ் பகுதியை தன்னுடன் இணைக்கும் எண்ணம் கொண்டிருந்த இத்தாலியர்களின் அதிருப்தியை சம்பாதிக்கும் விதமாக 1881ஆம் ஆண்டு அப்பகுதியில் ஆய்வுப்பயணம் மேற்கொண்டு தங்கள் வசப்படுத்தினார்கள். இதுபோன்றே 1891இல் ஐவரி கோஸ்ட்டையும், 1892இல் டஹோமேயையும் (Dahomey), 1895இல் மடகாஸ்கரையும் ஆக்கிரமித்துக் கொண்டார்கள். பிரிட்டன் தென் ஆப்பிரிக்காவின் நடாலையும் டிரான்ஸ்வாலையும் இணைத்துக்கொண்டதோடு ஆப்பிரிக்காவின் பிற பகுதிகளையும் இணைத்தது. பிரிட்டன் 1883ஆம் ஆண்டு எகிப்தின் மீது தனது கட்டுப்பாட்டை நிறுவியது. கோல்ட் கோஸ்ட் காலனிகள், உகாண்டா, சான்சிபார், கிழக்கு ஆப்பிரிக்காவின் சில பகுதிகள் ரொடீஷியா போன்றவை அடுத்தடுத்து பிரிட்டிஷ் இராஜ்ஜியத்தின் அங்கங்களாயின. ஜெர்மனி 1884ற்கும் 1890க்கும் இடைப்பட்ட காலத்தில் டோகோலாந்து, கேமரூன், ஜெர்மானிய தென்மேற்கு ஆப்பிரிக்கா, ஜெர்மானிய கிழக்கு ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டது. அந்நூற்றாண்டின் முடிவில் நில ஆக்கிரமிப்பிற்கான போட்டி இருண்ட கண்டம் என்று வர்ணிக்கப்படும் ஆப்பிரிக்கா முழுமையும் பெரும் ஐரோப்பிய சக்திகளுக்கிடையே பிரித்துக் கொள்ளப்பட வழி ஏற்படுத்தியது. லைபீரியா, மொராக்கோ, அபிசீனியா ஆகிய நாடுகளே இணைக்கப்படாமல் எஞ்சி நின்றன.

 

ஆ) ஏகபோக முதலாளித்துவம் முழுமையான ஏகாதிபத்தியத்திற்கு கொண்டு செல்லப்படல்

ஏகபோக தொழில்கள் முதலாளிகளுக்குப் பெரும் லாபத்தைக் குவித்தன. இதன் விளைவாக மிகையாகப் பணம் குவியத்துவங்கியது. தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் முதலீடுகளை ஏற்றுமதி செய்தால் அவை அதிகமான லாபத்தை ஈட்டும் என்று உணர்ந்தார்கள். இம்மிகைப் பணத்தை இருப்புப்பாதைக்கும், மின்சார உற்பத்திக்கும், சாலைகளுக்கும் அதீத தேவை இருந்த காலனிய நாடுகளில் முதலீடு செய்தார்கள். நேரடி முதலீடு நீங்கலாக கடனாகவும் பணத்தை அனுப்ப தாய் நாடு முன்வந்தது. இதனால் இங்கிலாந்து இருப்புப்பாதை தண்டவாளங்கள் போடவும் இரயில் பெட்டிகள், இரயில் எந்திரம், போன்றவற்றை வாங்கவும் கடன் கொடுத்ததால் அப்பணம் மீண்டும் இங்கிலாந்து கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்த உற்பத்தியாளர்களிடம் அவர்களின் லாபத்தை முன்னிறுத்தி தேவைப்படும் பொருள்கள் வாங்கப்பட்டன. இதனால் முதலீடு செய்வோரும், உற்பத்தியாளர்களும் காலனிய அமைப்புமுறை தங்களுக்குச் சாதகமாக இருப்பதை உணர்ந்தார்கள். இதுவே நிதிக்கும் தொழிலுக்கும் உள்ள கூட்டு என்று பொருளாதார அறிஞர்கள் கூறுகிறார்கள். தொழிலுக்கும், நிதிக்குமிடையே ஏற்பட்ட இக்கூட்டு பொருள் சந்தையிலும், முதலீடானது சந்தையிலும் லாபத்தை அடிப்படியாகக் கொண்டு செயல்படுவதே ஏகாதிபத்தியத்தின் முக்கிய குணநலனாகும்.

ஆங்கிலப் பொருளாதார நிபுணரானஜான் A.ஹாப்சன் ஏகாதிபத்தியத்தை இவ்வாறு வரையறுக்கிறார்: ஏகாதிபத்தியம் என்பது தொழிலை கட்டுப்படுத்துவோர் தங்கள் செல்வங்கள் சென்றுசேரும் பாதையை விசாலப்படுத்தி அயல்நாட்டு சந்தைகளையும், அயல்நாட்டு நிதியையும் பயன்படுத்தி தாங்கள் உள்ளூரில் விற்க முடியாத பொருள்களையும், சந்தைப்படுத்த முடியாத மூலதனத்தையும் பயன்பாட்டிற்குக் கொண்டுவர எடுக்கும் முயற்சியே என்கிறார்.


 

இ) பாதுகாப்புவாதமும், அது ஏற்படுத்திய அரசியல் பிணக்குகளும்

வியன்னாவிலும் நியூயார்க்கிலும் 1870இன் மத்தியிலேற்பட்ட நிதி வீழ்ச்சி ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் முழுமையான பொருளாதாரப் பெருமந்தத்தை உருவாக்கின. பெருமந்தம் உற்பத்தியையும் விலைகளையும், கூலியையும் கடுமையாக பாதித்தது. மேற்கு ஐரோப்பிய நாடுகளின் சந்தையில் குறைந்த விலை கொண்ட தானியங்கள் வந்து சேர்ந்து ஏற்கனவே விலைவீழ்ச்சியால் பாதிக்கப்பட்டிருந்த உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு மேலும் இக்கட்டைக் கொடுத்தது. மக்கள் தடையற்ற வணிகத்தின் ஞானத்தை கேள்விக்குட்படுத்தினார்கள். நிலைமையை கட்டுப்படுத்தும் முகமாக ஜெர்மனி பாதுகாப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தியது. தொழிற்சாலை பொருள்களின் இறக்குமதிக்கும், வேளாண் பொருள் இறக்குமதிக்கும் கட்டணம் விதிக்கும் விதமாக 1879இல் கட்டணச் சட்டத்தை ஏகாதிபத்திய ஜெர்மனிக்குள் நடைமுறைப்படுத்தியது. விரைந்து பிறநாடுகளும் இந்நடவடிக்கையை பின்பற்றின. பிரிட்டன் தனது காலனிய வியாபார முன்னுரிமையை மாற்றிக்கொள்ளவழியிருந்ததால் அது பிரான் சோடும், ஜெர்மனியோடும் 1898ஆம் ஆண்டு ஏற்படுத்திய வணிக உடன்படிக்கைகளை ரத்து செய்தது. வெவ்வேறு ஐரோப்பிய சக்திகளும் கட்டண நடவடிக்கையிலும், பதில்கட்டண நடவடிக்கையிலும் இறங்கியதால் பாதுகாப்புவாதம் உச்சமடைந்ததோடு அது அரசியல் முரண்பாடுகளுக்கும் வழியேற்படுத்தியது. இம்முரணால் விளையும் சிக்கல் என்பது படைபலத்தைச் சார்ந்தே அமையும் என்பது பேரரசுகளை நிர்வகித்த தலைமைக்குத் தெளிவாகத் தெரிந்திருக்கவே செய்தது. அதனால் தங்களின் ஆயுத பின்புலத்தை பலப்படுத்த போட்டியிட்டதில் போருக்குரிய சூழ்நிலைகள் இயல்பாகவே தோன்றத்தொடங்கின.

Tags : Imperialism and its Onslaught | History ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் - வரலாறு.
12th History : Chapter 13 : Imperialism and its Onslaught : Scramble for Colonies and Road to War Imperialism and its Onslaught | History in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 13 : ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் : காலனியப் பரவலும் போரைநோக்கிய பாதையும் - ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் - வரலாறு : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 13 : ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும்