Home | 12 ஆம் வகுப்பு | 12வது வரலாறு | இரண்டாம் உலகப்போர்: காரணங்கள்

இரண்டாம் உலகப்போரும் காலனிய நாடுகளில் அதன் தாக்கமும் - வரலாறு - இரண்டாம் உலகப்போர்: காரணங்கள் | 12th History : Chapter 14 : Outbreak of World War II and its Impact in Colonies

   Posted On :  11.07.2022 09:52 pm

12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 14 : இரண்டாம் உலகப்போரும் காலனிய நாடுகளில் அதன் தாக்கமும்

இரண்டாம் உலகப்போர்: காரணங்கள்

போரின் துவக்கத்தில் பிரிட்டனும், பிரான்சும் ஜெர்மனியை எதிர்த்ததும் இத்தாலி துவக்கத்தில் நடுநிலைவகித்து பின் ஜெர்மனியை ஆதரித்ததும் கொடுத்த தோற்றமானது முதல் உலகப்போரின் இரு அணிகளை நினைவூட்டக்கூடியதாக விளங்கியது.

இரண்டாம் உலகப்போர்: காரணங்கள்

போரின் துவக்கத்தில் பிரிட்டனும், பிரான்சும் ஜெர்மனியை எதிர்த்ததும் இத்தாலி துவக்கத்தில் நடுநிலைவகித்து பின் ஜெர்மனியை ஆதரித்ததும் கொடுத்த தோற்றமானது முதல் உலகப்போரின் இரு அணிகளை நினைவூட்டக்கூடியதாக விளங்கியது. குறிப்பிடத்தக்க வேறுபாடு என்னவென்றால், ஜப்பான் மேற்கத்திய சக்திகளுக்குப் பதிலாக ஜெர்மனியுடன் இணைந்தது. போர் தொடங்கி இரண்டு ஆண்டுகள் கடக்கும் வரை ரஷ்யாவும், அமெரிக்கா ஐக்கிய நாடும் எந்த ஒரு பிரச்சனையிலும் தலையிடவில்லை. இரண்டாம் உலகப்போரின் காலத்தில் போர்முறைகள் பெரும் மாற்றத்திற்கு உள்ளாகியிருந்தன. அகழியை அடிப்படை உத்தியாக கொண்ட போர்முறை மறைந்து வான்வெளி குண்டு வீசும் முறை ஆக்கிரமித்தது. போருக்காக ஆயுதம் ஏந்தியோரையும், சாதாரண குடிமக்களையும் இரண்டாம் உலகப்போர் பிரித்துப் பார்க்கத் தவறியது. அதனால் போரினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மிக அதிகமாகவே இருந்தது.

போர் மூள்வதற்கான சூழ்நிலைகளைப் பற்றி நாம் முதலில் அறிவோம்.

 

அ) அமைதி உடன்படிக்கையின் நியாயமற்ற தன்மை

முதல் உலகப்போரின் முடிவில் ஜெர்மனியின் மீது பல கடுமையான விதிமுறைகள் சுமத்தப்பட்டன. அதன் கட்டுப்பாட்டில் இருந்த காலனிய நாடுகள் பிரித்தெடுக்கப்பட்டதால் அதன் படையளவு மோசமாக சுருங்கியது. அல்சேஸ் மற்றும் லொரைன் பகுதிகளை பிரான்சிடம் விட்டுக் கொடுக்கவும், சார் பள்ளத்தாக்கில் அந்நாடு தற்காலிகமாகப் படைகளை நிறுத்திக் கொள்ளவும் ஜெர்மனி ஒப்புதல் வழங்க நிர்ப்பந்திக்கப்பட்டது. தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியான சைலேசியாவை போலந்திடம் ஒப்படைக்கவும் ஜெர்மனி கட்டாயப்படுத்தப்பட்டது. மேலும் செலுத்தவே இயலாத ஒரு தொகையை (6,600 மில்லியன் பவுண்டுகள்) போர் இழப்பீடாகவும் ஜெர்மனியிடம் கோரப்பட்டது. இத்தகைய கூறுகள் தங்களுக்கு அநியாயம் இழைக்கப்பட்டதாக ஜெர்மனிக்குள் எண்ண அலை ஏற்படவும் அதன் பின்தொடர்ச்சியாக நாஜி கட்சியின் அரசியல் வெற்றிக்கும் வழிவகுத்தது. இத்தாலியும் இத்தாலிய மக்கள் தொகையை அதிகமாகக் கொண்ட பகுதியாக கருதப்பட்ட டால்மேஷியாவை அதனிடமிருந்து பிரித்தெடுத்து புதிதாக உருவான யுகோஸ்லோவியாவிடம் ஒப்படைத்ததால் பாதிக்கப்பட்டிருந்தது. சிறு குடியரசாக மாற்றப்பட்ட ஆஸ்திரியா, ஜெர்மனியோடு இணைந்தால் பிரான்சு நாட்டிற்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்பதால் அது ஜெர்மனியிடமிருந்து பிரித்து வைக்கப்பட்டது.

 

(ஆ) பன்னாட்டு சங்கத்தின் (League of Nations) தோல்வி

மற்றொரு போரைத் தவிர்க்கும் நோக்கோடு பன்னாட்டு அமைப்பாக உருவாக்கப்பட்ட பன்னாட்டு சங்கம் காலப்போக்கில் வெற்றி பெற்றவர்களின் கூட்டணியானதோடு அது தோல்வியடைந்தவர்களுக்கு எதிரானதாகவும் தோன்றத் துவங்கியது. வெர்செய்ல்ஸ் ஒப்பந்தம் கையெழுத்தானபோதே அடுத்த போருக்கான விதைகள் தூவப்பட்டன.

1918 முதல் 1933 வரையிலான காலத்தில் போரைத் தவிர்க்கும் எண்ணத்தோடு தொடர் மாநாடுகள் நடத்தப்பட்டது. ஐரோப்பிய சக்திகள் 1925இல் ஸ்விஸ் நாட்டின் நகரான லோக்கர்னோவில் கூடி பேசியபோது ஜெர்மனியும் பிரான்சும் வெர்செய்ல்ஸ் ஒப்பந்தத்தில் உள்ளபடி ரைன் எல்லையை மதித்து நடக்க ஒப்புக்கொண்டன. இதற்கு அடுத்ததாகப் பலவகையிலும் பாராட்டப்பட்டது 1928இல் கையெழுத்திடப்பட்ட கெல்லாக் -பிரையாண்ட் (Kellogg-Briand) ஒப்பந்தம் ஆகும். அக்காலகட்டத்தில் பன்னாட்டு சங்கத்தில் அமெரிக்க ஐக்கிய நாடு உறுப்பினராகவில்லை என்ற போதும் அது கூட்டத்தில் கலந்து கொண்டது. இவ்வுடன்படிக்கையின் விளைவாக உலக நாடுகள் அனைத்தும் போரை கைவிடுவது என்பதை தங்களின் தேசிய கொள்கையாக ஏற்க உறுதிமொழி எடுத்துக்கொண்டன. ஆனால் இவ்வுறுதிமொழியை பின்பற்றாத நாடுகள் மீது நடவடிக்கை எடுக்குமளவிற்கு பன்னாட்டு சங்கம் அதிகாரம் கொண்டிருக்கவில்லை.


ஹிட்லர் பதவியேற்ற 1933ஆம் ஆண்டு ஜெனீவாவில் பன்னாட்டு சங்கம் ஆயுதக்குறைப்பு மாநாடு ஒன்றை நடத்தியது. பிரான்சிற்கு இணையாக ஜெர்மனியும் மறுஆயுதமயமாக்கல் கோரிக்கை விடுத்ததே பிரச்சனையாக எழுந்தது. பிரெஞ்சுக்காரர்கள் இந்த கோரிக்கைக்கு உடன்பட மறுத்துவிட்டனர், அதே நேரத்தில் பிரிட்டன் ஜெர்மனியின் கோரிக்கையை ஏற்கத் தயாராக இருந்தது. பிரான்சின் மறுப்பிற்கு பதிலடியாக ஹிட்லர் அம்மாநாட்டிலிருந்தும், பன்னாட்டு சங்கத்திலிருந்தும் ஜெர்மனியை விலக்கிக் கொண்டார். தனது முடிவை பொது வாக்கெடுப்பிற்கு உட்படுத்திய ஹிட்லருக்கு சாதகமாக ஜெர்மானிய மக்களின் பெரும் ஆதரவு குவிந்தது. இதனால் ஊக்கமடைந்த ஹிட்லர் மார்ச், 1935இல் கட்டாய இராணுவ சேவையை வலியுறுத்தி அதன் வாயிலாக ஐந்து லட்சம் என்ற பெரும் அளவிலான எண்ணிக்கையில் இளைஞர்களைக் கொண்ட இராணுவத்தை உருவாக்கப் போவதாக அறிவித்தார். இந்நிகழ்வே வெர்செய்ல்ஸ் ஒப்பந்தம் மீறப்பட்ட முதல் செயலாக அமைந்தது. பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் பன்னாட்டு சங்கத்தில் கூடி ஜெர்மனியின் போக்கைக் கண்டித்தனவேயன்றி வேறு எதுவும் செய்யமுடியவில்லை. பிரிட்டன் ஜெர்மனியோடு கப்பற்படை ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள முனைப்புக் காட்டியது. அதன்படி, பிரிட்டனின் கப்பற்படை கட்டுமானப் பணிகளில் 35 சதவீதம் வரை ஜெர்மனி பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது.


இத்தாலி எத்தியோப்பியா மீது 1935இல் படையெடுத்தது. பேரரசர் ஹேல் செலாஸி (Haile Selassie) பன்னாட்டு சங்கத்தில் முறையிட்டும் எந்தப் பயனும் இருக்கவில்லை .

 

இ) 1930களில் ஏற்பட்ட பொருளாதாரப் பெருமந்தம்

இரண்டாம் உலகப்போர் துவங்க முக்கியமான பொருளாதார காரணம் பெருமந்தமே ஆகும். பெருமந்தம் பொருளாதார தேசியவுணர்வை அதிகப்படுத்தியது. வேலைவாய்ப்பின்மையாலும், தொழில் தேக்கத்தாலும் பாதிக்கப்பட்ட அரசுகள் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது அதிக வரியைத் திணித்து அதன் வாயிலாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களின் நுகர்வையும் அதை சார்ந்த சந்தையையும் பாதுகாக்க முனைந்தன. இதன் விளைவாக, விரிவாக்க கொள்கைக்கு வழியேற்படுத்தியதோடு பிரச்சனையைத் தீர்க்க அண்டை நாடுகள் மீது படையெடுப்பதே தீர்வு என்ற நிலைக்கு கொண்டுசென்றது. இதன் முதல் நகர்வை ஜப்பானே மேற்கொண்டது. அது 1931இல் உலகப் பொருளாதார சிக்கலை எதிர்கொள்ள சீனாவில் மஞ்சூரியாவின் வடக்குப் பகுதிகளை ஆக்கிரமித்தது. ஜப்பானிய ஏற்றுமதியில் பட்டுத்துணிக்கான மூலப்பொருட்களும் பருத்தி ஆடைகளும் எதிர்கொண்ட சரிவை நிலைப்படுத்த மஞ்சூரியாவை ஆக்கிரமித்தால் அதை சந்தையாக மாற்றிக்கொள்ளலாம் என்று ஜப்பானிய இராணுவவாதிகள் அறிவுறுத்தியதால் அந்நாடு போர் நடவடிக்கையில் இறங்கியது.

 

ஈ)ஜெர்மானிய பெரு வியாபாரிகளின் எதிர்பார்ப்பும், தேசப்பற்றாளர்களின் மனக்குறையும்

பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் சோவியத் நாடு ஆகியவை உலகத்தின் பெரும் நிலப்பரப்புக்களை தங்களின் காலனிகளாகக் கொண்டிருந்தன. ஐரோப்பிய கண்டத்தில் பெரும் தொழிற்தேசமான ஜெர்மனியோ காலனிகள் ஏதும் கொண்டிருக்கவில்லை. இதுவே ஜெர்மனியின் பெருவியாபார அமைப்புகளை வெர்செய்ல்ஸ் ஒப்பந்தத்தின் கூறுகளை உடைக்கத் தூண்டுவதாக அமைந்தது. ஜெர்மனி போலந்திடம் இழந்த பகுதிகளையும் ஜெர்மன் மொழி பேசும் ஆஸ்திரிய நாட்டையும் சூடட்டன்லாந்து என்ற செக் நாட்டு எல்லையில் அமைந்த பகுதிகளும் ஜெர்மனியோடு இணைத்துக்கொள்ள விரும்பியது. நாஜி ஆட்சியில் பெருவியாபார அமைப்புகளும், நாஜி கொள்கைகளும் இணக்கமானப் போக்கைக் கொண்டிருந்தன.

பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் சோவியத் நாடு ஆகியவற்றின் சாம்ராஜ்யம் பூமியின் நிலப்பரப்பில் நான்கில் ஒரு பகுதியை உள்ளடக்கியதாக இருந்தது. ஒப்பீட்டளவில் ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகியவை சிறியனவாகவே தோன்றின. ஜெர்மானிய தேசபக்தி கொண்டோர் ஒரு ஜெர்மானியனின் வாழ்விடமாக சராசரியாக 004 சதுர மைல்களே உள்ளது என்பதையும், அதே வேளையில் சராசரியாக ஒரு பிரிட்டானியனால் ஏகாதிபத்தியத்திற்கு உட்பட்ட மூன்று சதுர மைல்களில் உள்ள வளங்களையும், பொருளாதார வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ள முடிகிறது என்பதனையும் சுட்டிக்காட்டினார்கள்.

 

உ) முசோலினியின் விரிவாக்கக் கொள்கை

சோமாலிலாந்து, எரித்ரியா, லிபியா போன்ற நாடுகளை தன்னகத்தே வளைத்துக் கொண்ட முசோலினியின் இத்தாலி, எத்தியோப்பியாவை இணைக்கவும் அல்பேனியாவை யுகோஸ்லோவியாவிடம் இருந்து பிரித்தெடுக்கவும் சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருந்தது. இராணுவ அரசின் முதலாளித்துவமாக பொருளாதாரத்தை கட்டமைத்த அந்நாடு ஆயுதம் தாங்கிய விரிவாக்கத்தை ஆதரித்தது. ஆயுத தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்களைப் பெறுவதற்கு இருந்த ஒரே வழி பிற நாடுகள் மீது படையெடுப்பதே என்ற நிலை இருந்தது.


முசோலினியின் எத்தியோப்பியப் படையெடுப்பை பிரிட்டனும் பிரான்சும் கண்டித்ததால் ஹிட்லருக்கு இத்தாலியோடு நெருங்கிய நட்பை வளர்த்துக்கொள்ள வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. இதுவே ரோம் - பெர்லின் அச்சின் துவக்கமாக அமைந்தது.

 

ஊ) ஜப்பானின் ஏகாதிபத்திய கொள்கை

ஜெர்மனியின் அணுகுமுறையை கிழக்கு ஆசியாவில் ஜப்பான் பின்பற்றியது. அது ஏற்கனவே தைவானையும், கொரியாவையும் காலனிகளாக உருவாக்கிக் கொண்டதோடு மஞ்சூரியாவையும் கட்டுப்படுத்தியது. இராணுவம் ஆட்சியை கவிழ்த்து அரசை கைப்பற்றிய (1936க்குப் பின்) அதன் பேராசை நிறைந்த பார்வை டச்சு கிழக்கிந்தியப் பகுதிகள் மீதும், பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் கீழிருந்த மலேயா, சிங்கப்பூர் போன்ற பகுதிகள் மீதும், இந்தோ - சீனாவில் அமையப்பெற்ற பிரெஞ்சு காலனிகள் மீதும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் வசமிருந்த பிலிப்பைன்ஸ் பகுதி மீதும் விழுந்தது.

 

எ) போர் உருவாகுதலில் ஹிட்லரின் பொறுப்பு

(I) ஸார் பகுதியை ஜெர்மனியோடு இணைத்தது

வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையின்படி ஜனவரி 1935இல் ஸார் பகுதியில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அப்பகுதி மக்கள் தாங்கள் ஜெர்மனியுடனோ, பிரான்சுடனோ அல்லது பன்னாட்டு சங்கத்தின் கட்டுப்பாட்டிலோ இருக்கப் போவதை அவர்களே முடிவு செய்ய வேண்டும். வாக்களித்தவர்களில் தொன்னூறு சதவீத நபர்கள் ஜெர்மனியோடு இணைவதையே விரும்பினார்கள். அதனால் மார்ச் 1935இல் ஸார் பகுதி ஜெர்மனியோடு இணைக்கப்பட்டது. இது ஹிட்லருக்கு பெரும் மனவலிமையை ஊட்டியது.

(II) ரைன்லாந்து இணைக்கப்படல்

வெர்செய்ல்ஸ் ஒப்பந்தத்தின் கீழ் ஜெர்மனி தனது இராணுவத்தை ரைன்லாந்தில் இருந்து விலக்கிக்கொள்ள ஒப்புக்கொண்டதையும் மீறி 1936இல் ஹிட்லர் மீண்டும் அப்பகுதியில் இராணுவத்தை குவிக்கலானார். பிரெஞ்சுக்காரர்கள் கண்டித்திருந்தால் ஜெர்மானியர்கள் பின்வாங்கி இருக்கக்கூடும். பிரெஞ்சுப் படைபலம் ஜெர்மனியை காட்டிலும் வலுவாக இருந்தாலும் பொருளாதாரப் பெருமந்தம் ஏற்படுத்திய பாதிப்பும், அதனால் அரசியல் நிலையற்றத்தன்மையால் ஏற்பட்ட பாதிப்பால் பிரதம அமைச்சரான எழுவார்ட் டலாடியர் (Edouard Daladier) பதவி விலகுமளவிற்கு சென்றதாலும் பிரான்சினால் வெர்செய்ல்ஸ் ஒப்பந்த முறிவில் ஜெர்மனி ஈடுபட்டதை எதிர்க்க வலிமையற்று இருந்தது.


(III) ஆஸ்திரியாவை ஜெர்மனியோடு வலுக்கட்டாயப்படுத்தி இணைத்தது

ஹிட்லர் ஆஸ்திரியாவில் பிறந்ததால் அது ஜெர்மனியின் ஒருபகுதியாக இருப்பதையே அவர் விரும்பினார். ஹிட்லர் ஆஸ்திரிய பிரதம அமைச்சரான ஸ்கூஸ்னிக்கை (Schuschnigg) பிப்ரவரி 1938இல் பவேரிய ஆல்ப்ஸ் மலையில் இருந்த நகரான பெர்க்டஸ்காடனுக்கு (Berchtesgaden) கலந்துரையாடும் நிமித்தமாக அழைத்தார். அந்நிகழ்வில் ஆஸ்திரிய பிரதம அமைச்சர் நாஜி கட்சியை அவர் நாட்டில் அங்கீகாரமளிக்கவும் அந்நாட்டுப் பொருளாதாரத்தை ஜெர்மனியோடு இணைக்கவும் தவறினால் படையெடுப்பை எதிர்கொள்ள நேரிடும் என்ற ஒற்றை தெரிவு வழங்கப்பட்டு எச்சரிக்கை விடப்பட்டார். ரோம் - பெர்லின் அச்சின் உருவாக்கத்தோடு ஆஸ்திரியா இத்தாலியின் ஆதரவை இழந்திருந்தது. வேறு வழி தெரியாத ஸ்கூஸ்னிக் அந்த முதல் தெரிவை ஏற்றுக்கொள்ள உடன்பட்டார். ஹிட்லரின் நிர்ப்பந்தத்தால் இது குறித்துப் பொதுவாக்கெடுப்பு நடத்தப்போவதாக வெளியிடப்பட்டதனை புறந்தள்ளிய ஆஸ்திரிய பிரதம அமைச்சர், அந்நாட்டில் நாஜி அரசை ஏற்படுத்தினார். அதன்பின் ஜெர்மானிய படைகள் வியன்னாவிற்குள் நுழைந்து அந்நாட்டின் மீது கட்டுப்பாட்டை நிறுவ ஆரம்பித்தன.

(iv) சூடட்டன்லாந்து ஆக்கிரமிப்பு

ஐரோப்பாவின் முக்கிய சக்திகளிடமிருந்து எந்த எதிர்ப்பையும் எதிர்கொள்ளாத ஹிட்லர் தனது பார்வையை செக்கோஸ்லோவாக்கியா மீது திருப்பினார். ஜூன் 1938இல் ஹிட்லர் சூடட்டன்லாந்தை ஆக்கிரமிக்கும் தனது நோக்கை இராணுவத்திற்கு ஆணைகள் வாயிலாக தெரிவித்தார். சூடட்டன்லாந்தில் வாழும் ஜெர்மானியர்கள் மிக மோசமாக ஒடுக்கப்படுகிறார்கள் என்பது போன்றதொருப் பிரச்சாரத்தை தெளிந்த முறைமையுடன் நாஜி கட்சிப் பரப்பியது. பிரான்சையும், செக்கோஸ்லோவாக்கியாவையும் கலந்து பேசிய பிரிட்டிஷ் பிரதம அமைச்சர் நெவில் சாம்பர்லின், பாதிக்கு மேல் ஜெர்மானிய மக்கள் தொகையை உள்ளடக்கிய பகுதிகளை ஜெர்மனியிடம் ஒப்படைக்க இசைந்தார். ஆனால் போரை விரும்பிய ஹிட்லரோ அதை ஏற்க மறுத்தார். இது குறித்த பொதுவாக்கெடுப்பை நடத்துவதையும் அவர் விரும்பவில்லை . அதனால் அத்தகையப் பொதுவாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்னரே அவர் சூடட்டன்லாந்தை தனது இராணுவத்தை கொண்டு ஆக்கிரமித்தார்.

 

மூனிச் ஒப்பந்தம்

லண்டனில் எழுந்தப் பெருவாரியான எண்ணவோட்டம் ஹிட்லருக்கு எதிரான போரை நாடியதாகவே இருந்தது. ஆனால் சாம்பர்லினும், பிரெஞ்சு பிரதம அமைச்சரும் சமரசப்படுத்தல் (appeasement) என்ற கொள்கையை முன்னிறுத்தி எவ்வாறாயினும் அமைதியை நிலைநிறுத்த முயன்றனர். அதைத் தொடர்ந்து நடந்த மூனிச் மாநாட்டில் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் பிரதம அமைச்சர்கள் கூடிப்பேசி ஹிட்லர் அக்டோபர் 1இல் நிர்ப்பந்தித்தது போல சூடட்டன்லாந்தை ஜெர்மானியப் படைகள் ஆக்கிரமித்துக் கொள்ளலாம் என்றும் செக்கோஸ்லோவாக்கியாவின் பகுதிகளை போலந்திற்கும், ஹங்கேரிக்கும் பிரித்துக் கொடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.


(V) செக்கோஸ்லோவாக்கியாவிற்கு எதிரான அத்துமீறிய தாக்குதல்

செக் நாட்டினர் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தார்கள். செக்கோஸ்லோவாக்கியாவின் புதிய எல்லைகள் மூனிச் மாநாட்டில் நான்கு சக்திகளால் உத்தரவாதம் அளிக்கப்பட்டன சாம்பர்லினின் கூற்றுப்படி இந்நகர்வு ஐரோப்பாவில் மிகப் பெரும் போரைத் தவிர்க்க உதவியதாகக் கருதப்பட வேண்டும். ஆனால் ஸ்லோவாக்கினருக்கும், செக் இன மக்களுக்கும் இடையே ஏற்பட்ட முரண் போக்கை காரணம் காட்டி ஹிட்லர் செக்கோஸ்லோவாக்கியாவிற்குள் ஜெர்மானியப் படைகளை அனுப்பினார்.


நாஜி-சோவியத் உடன்படிக்கை

பிரிட்டனும் பிரான்சும் போலந்து நாட்டிற்கு கொடுத்த நம்பிக்கை வாக்குறுதிகள் ரஷ்யாவின் உதவியில்லாமல் வலுவிழந்தவைகளாக கருதப்பட்டன. 1939இன் முன் கோடை காலத்தின் போது பிரிட்டனும் பிரான்சும் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தையைத் துவக்கலாயின. பரஸ்பர நம்பிக்கை இல்லாததாலும், ஜெர்மனியோடு ரஷ்யா போரில் ஈடுபட விரும்பாததாலும், பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை . ரஷ்யர்கள் தங்களது பகுதிகளுக்கு பாதுகாப்பையும் அமைதியையும் விரும்பினர். இவ்விரண்டையும் ஜெர்மனி உறுதிப்படுத்த முன் வந்ததால் ஆகஸ்ட் 1939இல் க்ரெம்ளின் நகரில் நாஜி-சோவியத் (ஆக்கிரமிப்பு தவிர்ப்பு) உடன்படிக்கை கையெழுத்தானது. இவ்வுடன்படிக்கையின் இரகசிய சரத்துகளாவன: கிழக்கு ஐரோப்பாவை ஜெர்மனி - ரஷ்யாவின் செல்வாக்கிற்குட்பட்ட பகுதியாக கருதுவதும், போலந்தை பிரித்துக் கொள்வதும் என்பதாகும்.


(vi) போலந்து மீது படையெடுப்பும், போரின் துவக்கமும்

ஐரோப்பா முழுவதையும் ஆக்கிரமிக்கும் நோக்கம் கொண்டிருந்த ஹிட்லர் முதலில் 1939 செப்டம்பர் 1இல் போலந்து நாடு தனது நட்பு நாடுகளான பிரிட்டன் மற்றும் பிரான்சுடன் இணைந்து தன் நாட்டை சுற்றி வளைத்து தரைமட்டமாக்கத் திட்டம் தீட்டுவதாகவும் போலந்தில் வாழும் ஜெர்மானிய இனத்தை அந்நாடு ஒடுக்குவதாகவும் குற்றம் சுமத்தி அந்நாட்டின் மீது படையெடுத்தார். இரண்டு நாட்களில் பிரிட்டன் விடுத்த இறுதி எச்சரிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது: ஜெர்மானியப் படைகள் போலந்தில் இருந்து வெளியேறாவிட்டால், பிரிட்டனும் ஜெர்மனியும் போர்முனையில் சந்திக்க நேரும் என்பதேயாகும். பிரிட்டன் விடுத்த இறுதி எச்சரிக்கை புறந்தள்ளப்பட்டதால் இரண்டாம் உலகப்போர் மூண்டது.


போரின் பல்வேறு நிலைகள்

ஐரோப்பாவில் போர்

போர் துவங்கிய சில ஆண்டுகளில் ஜெர்மனி தடுத்து நிறுத்த முடியாத சக்தியாக வடிவம் கொண்டிருந்தது. இரண்டே வாரங்களில் போலந்து தோற்கடிக்கப்பட்டது. மாஸ்கோவில் 1939 செப்டம்பரில் செய்துகொள்ளப்பட்ட இரண்டாவது ஒப்பந்தத்தின் வாயிலாக அந்நாட்டை சோவியத்தும் ஜெர்மனியும் பிரித்துக் கொண்டன. 1940 ஏப்ரலில் ஜெர்மனி நார்வே நாட்டை ஆக்கிரமித்தது. இவ்விணைப்பால் தனது நாட்டிற்கு ஸ்வீடனில் இருந்து இரும்புத்தாது வருவதை ஹிட்லர் உறுதி செய்து கொண்டதோடு பிரிட்டனை தாக்க வசதியாக கடற்படை தளத்தையும் விமானப்படை தளத்தையும் பெற்றுக்கொண்டார். தனது பிலிட்ஸ்க்ரீ க் (Blitzkrieg என்னும் மின்னல் வேக வான்வெளி தாக்குதல்) தாக்குதல் முறையில் 1940 மே 10இல் நெதர்லாந்து, லக்ஸம்பர்க், பெல்ஜியம், மற்றும் பிரான்சு ஆகிய நாடுகள் மீது ஜெர்மனி தாக்குதலைத் தொடுத்தது.

ஆறே வாரங்களில் அனைத்து நாடுகளும் தோற்கடிக்கப்பட்டு ஐரோப்பிய கண்ட நிலப்பரப்பில் இருந்து பிரிட்டன் வெளியேற்றப்பட்டது. ஏறக்குறைய 198,000 பிரிட்டிஷ் துருப்புக்களும், 140,000 நேச நாடுகளின் துருப்புகளும் அதிலும் குறிப்பாக பிரெஞ்சு துருப்புகள் (1940 மே-ஜூனில்) டங்கிர்க் (Dunkirk) கடற்கரைக்கு கடும் துப்பாக்கி முழக்கங்களுக்கிடையே விரட்டப்பட்டு அங்கிருந்து படகுகளிலும், சிறு கப்பல்களிலும் புறப்படும்படியான நிலை ஏற்பட்டது. அவ்வாறு டங்கிர்க்கிலிருந்து வெளியேற்றப்பட்ட வீரர்களே நாட்டைவிட்டு அகன்று பாசிசவாதிகளுக்கு எதிராக பிரெஞ்சு அரசை நடத்திக் கொண்டிருந்த இராணுவ ஜெனரல் டி காலின் தலைமையிலான சுதந்திர பிரெஞ்சுப் படையின் கருவாக செயல்பட்டார்கள். டங்கிர்க் வெளியேற்ற சம்பவம் நிகழ்ந்திருக்காவிட்டால் பிரிட்டனால் ஜெர்மனியின் நாசவேலை பாதிப்புகளுக்குட்பட்ட நாடுகளை மீண்டும் ஒன்று திரட்ட முடியாமலே போயிருக்கும்.


ஹிட்லரின் வெற்றியை கண்ட இத்தாலி ஜெர்மனியோடு இணைந்து 1940 ஜூனில் பிரான்ஸ் மீதும், செப்டம்பரில் எகிப்து மீதும் படையெடுத்தது. இச்சமயத்தில் ஜப்பானும் அச்சு நாடுகளோடு கைகோர்த்தது. பிரிட்டன் அமைதி நடவடிக்கையை முன்னெடுக்கும் என்று ஹிட்லர் எதிர்பார்த்திருந்தார். ஆனால் சாம்பர்லினைத் தொடர்ந்து பிரதம அமைச்சர் பதவிக்கு வந்த சர்ச்சில் சமரசம் ஏற்படுத்திக் கொள்ள மறுத்தார். சரணடைவதை வலியுறுத்த முனைந்த நடவடிக்கைகளாக ஜெர்மானிய விமானப்படை முன்தெரிவு செய்யப்பட்ட இலக்குகளான துறைமுகங்கள், விமானத்தளங்கள் மற்றும் தொழிற்பேட்டைகள் போன்றவற்றின் மீது தாக்குதல் தொடுத்தது. 1940 செப்டம்பரில் லண்டன் மீது குண்டு வீசப்பட்டது, இந்நிகழ்வு பிலிட்ஸ் நடவடிக்கை (Operation Blitz) என்று அறியப்படுகிறது. லண்டன் மீதும், பிற தொழில் நகரங்கள் மீதும் 1940 அக்டோபரில் முதல் குண்டு வீச்சு தாக்குதல் என்பது வழக்கமான ஒன்றாக மாறிப்போனது. எனினும் ராடார் கருவியை கண்டுபிடித்தமையால் தூரத்தில் வரும் விமானங்களின் வழித்தடத்தை அறிந்த இராயல் விமானப்படையின் விமானங்கள் (ஸ்பிட்ஃப்யர் மற்றும் ஹரிக்கேன் போன்றவை) ஜெர்மானிய குண்டுவீச்சு விமானங்களைத் தாக்கி அவற்றிற்குப் பேரழிவை ஏற்படுத்தின. பிரிட்டன் போரில் (1940 ஜூலை முதல் அக்டோபர் வரை வான்வெளியில் நிகழ்ந்தவை) ஹிட்லர் தனது முதல் தோல்வியை சந்தித்தார். எனினும் ஜெர்மனியின் U-வகை படகுகள் (ஜெர்மானிய நீர்மூழ்கி கப்பல்களில் ஒரு வகை) அட்லாண்டிக் கடலில் நிகழ்த்தியப் போர் பிரிட்டனின் வணிகத்தைப் பெரிதும் பாதித்தது.


1940 நவம்பரில் ரஷ்யாவை தாக்கலாம் என்று ஜெர்மனி எடுத்த முடிவு பால்கன் (ஏப்ரல்) பகுதியில் யுகோஸ்லோவியாவிற்கும், கிரீஸ் நாட்டிற்கும் எதிராக மேற்கொள்ளப்பட்டப் பிரச்சாரத்தால் ஒத்திவைக்கப்பட்டது. சோவியத் மீதான படையெடுப்பு 1941 ஜூன் 22இல் துவங்கியது. பல தொடர் வெற்றிகளுக்குப் பின்னர் ஜெர்மன் படைகள் லெனின்கிராடையும், மாஸ்கோவையும் நெருங்கின. 1941இல் ஹிட்லரின் பேரரசு ஐரோப்பாவில் உச்சத்தை அடைந்தது.

ஜெர்மனியின் ஆட்சி பரவிய இடங்கள் யாவும் அடக்குமுறைக்கும் மனிதத்தன்மையற்றப் போக்கிற்கும் சுரண்டலுக்கும் உட்படுத்தப்பட்டன பிரான்சு முதல் ரஷ்யா வரை எழுபது லட்சத்திற்கும் அதிகமான ஐரோப்பியர்கள் கொத்தடிமைகளாக்கப்பட்டு ஜெர்மனிக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். ஜெர்மனியின் போர் செலவுகளில் மூன்றில் ஒரு பங்கு ஆக்கிரமிக்கப்பட்ட ஐரோப்பியப் பகுதிகளில் இருந்து வசூலிக்கப்பட்டது. நாஜி பேரினவாத வன்முறை யூதர்கள், பொதுவுடைமைவாதிகள் மற்றும் நாடோடிகள் போன்றோர் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டது. யூதர்கள் குவித்திணி (வதை) முகாம்களில் (Concentration Camps) சிறைவைக்கப்பட்டு அறுபது லட்சம் என்ற அளவிற்கு அரசால் ஆதரவளிக்கப்பட்ட இனப்படுகொலைக்கு தொழில்முறை கொல்லும் உத்தி மூலமாக (Holocaust என்று சொல்லப்படுகிறது) உட்படுத்தப்பட்டார்கள்.

ஆசியாவிலும் பசிபிக்கிலும் நிகழ்ந்த போர்

சோவியத் நாட்டில் ஜெர்மனி அடைந்த வெற்றிகள் ஜப்பானியத் தலைவர்களை தென்கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகள் மீதும் படையெடுக்கத் தூண்டியது. 1941 நவம்பரில் அமெரிக்க ஐக்கிய நாட்டின் மீது போர் தொடுக்கும் முடிவு எடுக்கப்பட்டது. டிசம்பர் 7ஆம் நாள் ஜப்பானிய விமானப்படை ஹவாய் தீவுகளில் அமைந்திருந்த அமெரிக்க கடற்படைத் தளமான போல் துறைமுகம் (Pearl Harbour) மீது குண்டுவீசித் தாக்குதல் நடத்தி பெரும் சேதத்தை விளைவித்தது. அதன்பின் ஜப்பான் ஆங்கிலேய காலனியப் பகுதிகளான பர்மா, மலேயா, சிங்கப்பூர் (மிகவும் வெட்கக்கேடான முறையில் இப்பகுதியின் மக்களை ஜப்பானியரின் கருணையில் விடுத்து ஆங்கிலேயர்கள் தப்பி ஓடினர்) மற்றும் டச்சு கிழக்கிந்தியப் பகுதிகளையும் ஆக்கிரமித்தது.

பேர்ல் துறைமுக சம்பவமும் அதன் தோல்வியும்

ஜப்பான் பேர்ல் துறைமுகம் மீது நிகழ்த்திய தாக்குதல் அமெரிக்க மக்களின் நெஞ்சுரத்தை மங்கச் செய்வதற்கு மாறாக அவர்களை செயலில் இறங்கத் தூண்டியது. அதுவரை பொதுக்கருத்தின்படி போரில் தலையிடாமல் இருந்த அந்நாடு ஜப்பானின் மீது போர்ப் பிரகடனம் செய்து முழுமையான உலகப்போருக்கு வழிவகுத்தது. பிரிட்டனும், சீனாவும் அமெரிக்க ஐக்கிய நாட்டோடு கை கோர்த்தன. இத்தாலியும் ஜப்பானும், ஜெர்மனியோடு இணைந்த சூழலில் அமெரிக்க குடியரசுத் தலைவரான ரூஸ்வெல்ட் கடன் - குத்தகை முறையின் (Lend-Lease System) கீழ் பாசிசத்தை எதிர்க்கும் நாடுகளுக்கு உதவுவதாக உத்திரவாதம் அளித்திருந்தார். அமெரிக்க ஐக்கிய நாட்டின் நேரடி ஈடுபாட்டின் வாயிலாக நேச நாடுகள் அனைத்தும் இணைந்து கொண்டு வந்திருந்ததைவிட அதிகமான வாகனங்களும் கப்பல்களும் விமானங்களும் வந்து சேர்ந்ததால் அவற்றின் பொருள்வள தளம் அகலமானது. 1942 ஆகஸ்டில் மெக் ஆர்தர் தலைமையிலான அமெரிக்கப் படைகள் பசிபிக் பகுதியில் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டன. ஜப்பானிய கப்பற்படை தலைவரான யமமோடா திட்டமிட்ட கடற்போர் பெரும் தோல்வியில் சென்று முடிந்தது.


அமெரிக்க ஐக்கிய நாட்டின் கப்பற்படை மிட்வே கடற்போரில் (1942 ஜூன் 4-7) ஜப்பானிய கடற்படையை தோல்வியுறச் செய்தது, நேச நாடுகளுக்கு அலை தங்களுக்கு சாதகமாக திரும்புகிறது என்ற எண்ணத்தை உருவாக்கியது. சாலமோன் தீவுகளில் நடந்த குவாடல்கனல் போரில் இராணுவமும் கடற்படையும் இணைந்து பல மாதங்கள் (1942 ஆகஸ்ட் 7 முதல் 1943 பிப்ரவரி 9 வரை) தாக்குதலைத் தொடர்ந்தன. இப்போரும் ஜப்பானியர்களுக்கு பெரும் தோல்வியாகவே முடிந்தது. அதன்பின் அமெரிக்க ஐக்கிய நாட்டின் படைகள் பிலிப்பைன்ஸ் பகுதியை மீட்டுக் கொண்டதோடு ஜப்பானியர்கள் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளிலிருந்து படிப்படியாக வெளியேற்றப்பட்டனர். 1944இல் பிரிட்டிஷ் படைகளும் இந்தியப் படைகளும் இணைந்து இந்தியாவின் வட - கிழக்குப் பகுதியின் வழியாக நுழைய ஜப்பானியர்கள் மேற்கொண்ட முயற்சிகளை முறியடித்தன. அதன்பின் அப்படைகள் சீனாவோடு இணைந்து ஜப்பானை பர்மாவிலிருந்து விரட்டியதோடு மலேயாவையும், சிங்கப்பூரையும் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்கள்.

ஸ்டாலின்கிராட் போர், 1942

ஜெர்மனியின் மின்னல் வேக தாக்குதல் உத்தி ஆரம்பகட்டத்தில் சோவியத் ரஷ்யாவிலும் வெற்றியை வழங்கியது. ஆனால் ஜெர்மானியப் படைகளால் மாஸ்கோ வரை சென்று சேர முடியவில்லை . அது உலக வரலாற்றில் கடுமையாக இரத்தம் கொட்டியப் போரை ஸ்டாலின்கிராடில் எதிர்கொண்டது. ஆயுதங்களையும், டிராக்டர் வகை இழுவை எந்திரங்களையும் அதிக அளவில் தயார் செய்துகொண்டிருந்த மிகப் பெரும் தொழில் நகரான ஸ்டாலின்கிராட் வெற்றிக்கனியாக தங்களுக்கு கிடைக்கும் என்று ஹிட்லர் எண்ணியிருந்தார். மேலும் எண்ணெய் வளம் மிக்க காகசஸ் பகுதியின் மீதும் அவரது கண்கள் படர்ந்திருந்தன. அனைத்திற்கும் மேலாக செல்வாக்கு கொண்ட சோவியத் தலைவரான ஜோசப் ஸ்டாலினின் பெயர் கொண்ட நகரை ஆக்கிரமிப்பது தனது பெருமையை உயர்த்தும் என்று ஹிட்லர் கருதினார். ஆனால் ஜெர்மானிய இராணுவத்தால் நீண்ட காலத்திற்கு ஸ்டாலின்கிராடை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியாது என்பது தெளிவாகத் தெரிந்த பிறகும், ஹிட்லர் பின்வாங்க மறுத்தார். உத்திக்காக மேற்கொள்ளும் பின்வாங்கல்கூட நாஜி சிந்தனையின் கௌரவத்திற்கு இழுக்கு ஏற்படுத்திவிடக்கூடும் என்று அவர் அஞ்சினார். அதனால் தேசிய உணர்வால் உத்வேகம் பெற்று ஓய்வில்லாமல் தாக்குதலைத் தொடுத்த ரஷ்ய படைகளின் முன் கடுங்குளிருக்கும் பசிக்கும் மரணத்துக்கும் தனது வீரர்களை ஹிட்லர் கொடுத்தார். சோவியத் நாடு (1942ஆம் ஆண்டு) கோடைகாலத்தில் கொடுத்த பதிலடி நிலைமையை அதன் பக்கம் திருப்பியது. இராணுவ வரலாற்று ஆசிரியர்கள் பலரும் போரின் போக்கை ஸ்டாலின்கிராட் போரே மாற்றி அமைத்தது என்று எழுதுகிறார்கள்.


ரஷ்யாவின் சிகப்புப் படைகள் நடத்திய பெரும் தேசாபிமானப் போரில் அடைந்த வெற்றி அதன் பாதையை பெர்லின் நோக்கித்திருப்பியது. நேச நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்காவோடு இணைந்த சோவியத்நாடு கூட்டாக ஜெர்மனியை தோற்கடித்ததால் ஐரோப்பாவில் இரண்டாம் உலகப்போருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஒரு புள்ளிவிபர கணக்கின்படி போரில் 2 கோடி ரஷ்யர்கள் உயிர் நீத்திருந்தார்கள் (அதில் 1 கோடியே 30 லட்சம் இராணுவ வீரர்களும், 70 லட்சம் சாதாரணக் குடிமக்களும் அடங்குவர்).

முசோலினியின் வீழ்ச்சி

1942இன் இறுதியில் வட ஆப்பிரிக்காவின் எல் அலாமினில் ஜெர்மனி அடைந்த பின்னடைவே நேச நாடுகளுக்கு நம்பிக்கையை கொடுத்த முதல் சம்பவமாகும். எர்வின் ரோமல் தலைமையில் ஜெர்மன் - இத்தாலியக் கூட்டுப் படைகள் பிரிட்டிஷ் படைகளை எதிர்த்து வட ஆப்பிரிக்காவின் பாலைவனத்தில் நடத்திய எல் அலாமெய்ன் போரில் ஜெர்மனி மே 1943இல் சரணடைந்தது. பின்னர் நேசநாடுகளின் படைகள் சிசிலியின் மீது படையெடுத்தன. முசோலினியிடம் 1922இல் அதிகாரத்தை ஒப்படைத்த அதே மன்னரான மூன்றாம் விக்டர் இம்மானுவேல் மீண்டும் பொறுப்பேற்றதோடு அவருடன் ஜெனரல் படோக்லியோவும் பதவியேற்று அமைதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கலாயினர். முசோலினி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். ஜெனரல் படோக்லியோவின் அரசு சிசிலியில் 1943 செப்டம்பர் 3இல் முறையாக சரணடைவதாக கையெழுத்திட்டுக் கொடுத்தது.

1943இல் நேசநாடுகள் இரு உச்சநிலை மாநாடுகளை நடத்தின. ஜனவரி மாதத்தில் சர்ச்சிலும் ரூஸ்வெல்டும் காசாபிளாங்காவில் சந்தித்துப் பேசினர். அங்கே அவர்கள் ஏறக்குறைய நான்கு ஆண்டுகளாக (1940-1944) ஜெர்மனியின் ஒரு மாகாணமாகவே மாறிப் போயிருந்த பிரான்ஸ் மீது படையெடுக்கும் முடிவை ஓராண்டிற்கு ஒத்திப்போட்டார்கள். (பிரான்சை ஆக்கிரமித்திருந்த ஜெர்மானியர்கள் வசம் 60 படைப் பிரிவுகள் இருந்தன) இரண்டாவது மாநாடு பாரசீகத்தில் அமைந்த டெஹ்ரான் நகரில் நடந்தபோது அதில் ஸ்டாலினும் பங்கெடுத்தார். அங்கு திட்டமிடப்பட்ட உத்தியின்படி பிரான்ஸ் மீது ஆங்கிலேய - அமெரிக்க கூட்டுப் படைகள் 1944 ஜூன் 6இல் தாக்குதல் தொடுப்பது என்று முடிவுசெய்யப்பட்டது. நேச நாடுகளின் படைகளுக்கு உச்சதளபதி அமெரிக்க ஜெனரல் ஐசன்ஹோவர் ஆவார்.

ஆங்கிலேய-அமெரிக்க படைகளின் படையெடுப்பும் ட்ரெஸ்டன் மீது குண்டு வீச்சும்

ஐசன்ஹோவரின் தலைமையை ஏற்ற நேச நாடுகளின் படைகள் பிரான்சின் நார்மண்டி மீது படையெடுத்தன. அப்பகுதியை ஆக்கிரமித்திருந்த ஜெர்மானியப் படைகள் அப்புறப்படுத்தப்பட்டு 1944 ஆகஸ்ட் 25இல் பாரிஸ் விடுவிக்கப்பட்டது. செப்டம்பர் மாதத்தின் துவக்கத்தில் நேச நாடுகள் பிரான்சு முழுமையிலும் கட்டுப்பாட்டை நிறுவியதோடு பெல்ஜியத்தையும் ஆக்கிரமித்தன. நேச நாடுகளின் குண்டு வீச்சு (1945 பிப்ரவரி 13-15) ஜெர்மனியின் ட்ரெஸ்டன் நகரை முற்றிலுமாக அழித்தது. இக்காலக்கட்ட தாக்குதல்கள் ஜெர்மனிக்கு எதிரான திகிலூட்டும் குண்டுவீச்சுக்களாகவே (terror bombing) அடையாளப்படுத்தப்பட்டன. இச்சமயத்தில் 6,00,000 ஜெர்மன் குடிமக்கள் கொல்லப்பட்டார்கள். படிப்படியாக ஜெர்மானியப் படைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டன. ஆனாலும் அவர்களின் எதிர்ப்பு தொடர்ந்ததால் மேலும் ஓராண்டுக்குப் போர் நீடித்தது.

1945இல் ஜெர்மனி மீதான இறுதி தாக்குதல் மேற்கு மற்றும் சோவியத் படைகளை மத்திய ஜெர்மனி முழுவதும் நேருக்கு நேர் கொண்டு வந்தது. ஹிட்லர் மத்திய பெர்லினில் மறைந்திருந்த பதுங்கு குழியை 1945 ஏப்ரல் 30இல் சோவியத் படைகள் நெருங்கின. ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார். பெர்லின் மே 2ஆம் நாள் சோவியத் வசமானது. சோவியத் படைகள் அதற்கு முன்பாகவே கிழக்கு ஐரோப்பாவையும், போலந்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தன.

அணுகுண்டுகள் வீச்சும் இரண்டாம் உலகப்போரின் முடிவும்


ஜெர்மனி தோற்கடிக்கப்பட்டாலும், ஜப்பானின் இராணுவ தளபதிகள் சரணடைய மறுத்தார்கள். இறுதியாக அமெரிக்க ஐக்கிய நாடு 1945 ஆகஸ்ட் 6இல் ஹிரோஷிமா நகர் மீது அணுகுண்டு வீசிவிட்டு அதிலிருந்து மூன்று நாட்கள் கழித்து (ஆகஸ்ட் 9) நாகசாகி நகர் மீது மற்றொரு அணுகுண்டை வீசியது. அணுகுண்டு தயாரிக்கும் போட்டியில், அமெரிக்க ஐக்கிய நாடு ஜெர்மனியை முந்தியது. ஜப்பான் உடனடியாக சரணடைந்ததில் இரண்டாம் உலகப்போர் முடிவுற்றது. ஏறக்குறைய 60,000 முதல் 80,000 வரையிலான மக்கள் குண்டு விழுந்த கணத்திலேயே ஹிரோஷிமா நகரில் மாண்டதாகவும், குண்டு ஏற்படுத்திய கதிர்வீச்சின் பாதிப்பில் அந்த ஆண்டு முடிவதற்குள் மேலும் 1,40,000 மக்கள் இறந்ததாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. ஆபத்தான கதிர்வீச்சின் காரணமாக புற்றுநோய் (இரத்தப்புற்று) தாக்கியும், பிற நோய்களாலும் தொடர்ந்து வந்த பதிற்றாண்டுகளில் இறப்பு எண்ணிக்கை 2,00,000 தாண்டியது.

போரின் காரணங்களை விளக்கும் வரலாற்று ஆசிரியர்கள் பல்வேறு காரணங்களை கூறுவதில் வேறுபட்டு நிற்கிறார்கள். முரட்டுத்தனமானதாகவும் பழிவாங்கும் நோக்குள்ளதாகவும் இருந்த வெர்செய்ல்ஸ் ஒப்பந்தத்தை சிலர் சுட்டுகிறார்கள். அத்தகையோர் ஜெர்மனி அவ்வொப்பந்தத்தின் சரத்துக்களை மாற்ற முனைந்ததனைக் கொண்டு அந்நாட்டின் பக்கம் உள்ள நியாயத்தை கோடிட்டுக் காட்டுகிறார்கள். மற்றும் சிலர் பிரான்சும், பிரிட்டனும் கடைப்பிடித்த சமரசப் போக்கைச் சாடுகிறார்கள். வேறு சிலர் பிரிட்டனும் பிரான்சும் சோவியத் நாட்டோடு ஒப்பந்தம் ஏற்படுத்த முடியாமல் போனதைக் குறை கூறுகிறார்கள். இந்நாடுகள் சோவியத் நாட்டை நம்பத் தயங்கியதோடு 1934 முதல் கூட்டுப் பாதுகாப்பை முன்னிறுத்தி அது கொடுத்த முன்மொழிவுகளுக்கு பதிலளிக்காமலும் இழுத்தடித்தன. எனினும் பெரும்பான்மையான வரலாற்று ஆசிரியர்கள் ஜெர்மனியையும் ஹிட்லரையுமே போர் ஏற்படப் பொறுப்பாகக் கருதுகிறார்கள். நாடுபிடிக்கும் ஆசையையும், பேரினவாத (ஆரிய) தூய்மைக் கருத்தியலையும் அடித்தளமாக அமைத்து, நேர்மையும் இரக்கமுமற்ற ஆக்கிரமிப்புக் கொள்கையை கூறுகளாக கொண்ட தேசியவாதம், ஆறு ஆண்டுகளுக்கு உலகப் பேரிழப்பை ஈன்ற போரை நோக்கி வழிநடத்தி சென்றதாகவும் அவர்கள் கருதுகிறார்கள். இரண்டாம் உலகப்போர் ஹிட்லரின் போரே. அவரே திட்டமிட்டார், துவங்கினார், இறுதியாக இழக்கவும் செய்தார்

அமைதியை நிலைநிறுத்தல்

குடியசுத் தலைவர் ரூஸ்வெல்டும், பிரதம அமைச்சர் சர்ச்சிலும் இணைந்து வழங்கிய அறிக்கையான அட்லாண்டிக் பட்டயமே அமைதி நடவடிக்கையை வழிநடத்த அடிப்படையாக அமைந்தது. அதன் முக்கிய கூறுகள் பின்வருமாறு:

1) மக்களின் ஒப்புதல் இல்லாமல் பிரதேச சீரமைப்புகள் ஏற்படுத்தலாகாது.

2) அரசைத் தேர்ந்தெடுக்க முழு உரிமை கொண்டவர்கள் குடிமக்களே.

3) அனைத்து நாடுகளுக்கும் வணிகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும், உலகின் பிற பகுதிகளில் கிடைக்கும் மூலப் பொருட்களைப் பெறுவதிலும் சமத்துவத்தை ஏற்படுத்துதல்.

4) தடையில்லாமல் கடல் கடந்து செல்வதற்கான சுதந்திரத்தை உறுதிப்படுத்துதல்.

5) ஆக்கிரமிப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நாடுகளை ஆயுதக்குறைப்பிற்கு உட்படுத்துதல்.


இது நீங்கலாக வேறு அமைதி மாநாடுகள் ஏதும் நடத்தப்படவில்லை . போட்ஸ்டாம் சந்திப்பில் பிரிட்டன், சோவியத் நாடு, அமெரிக்க ஐக்கிய நாடு ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தி முறையே சர்ச்சில், ஸ்டாலின், ட்ரூமன் ஆகியோர் கலந்து கொண்டு ஐந்து பெரும் சக்திகளின் - ஏற்கனவே குறிப்பிடப்பட்ட மூன்று பெரும் சக்திகளோடு சீனாவும், பிரான்சும் சேர்க்கப்பட்டு - வெளியுறவுத்துறை அமைச்சர்களின் குழுவை ஏற்படுத்தி அமைதியை நிலைநிறுத்தத் தேவையான பணிகளைத் தொடர ஒப்புக்கொள்ளப்பட்டது. இக்குழுவே ஐரோப்பாவில் அமைதி ஏற்படுத்த அங்கீகரிக்கப்பட்ட முக்கிய முகமையாக கருதப்படலானது. இத்தாலி ஹங்கேரி, பெல்ஜியம் மற்றும் ருமேனியா ஆகியவற்றோடு ஏற்படுத்தப்பட இருந்த அமைதி உடன்படிக்கையை இத்தாலியோடும், ஜெர்மனியோடும் தீர்வை எட்டுவதற்கு முன்பே இறுதிப்படுத்த முடிவுசெய்யப்பட்டது. பிரிட்டன், அமெரிக்க ஐக்கிய நாடு, சோவியத் நாடு மற்றும் பிரான்ஸ் ஆகியவை இத்தாலியோடு ஏற்படுத்தவிருந்த ஒப்பந்தத்தின் சரத்துக்களை வரைவது என்றும், அதுபோல பெரும் மூன்று நாடுகள் கூடி மூன்று பால்கன் பகுதிகளுக்கான ஒப்பந்தத்தை வரைவது என்றும், பிரிட்டனும், சோவியத் நாடும் பின்லாந்துக்கான ஒப்பந்தத்தை வரைவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இதன்பின் வரையப்பட்ட ஒப்பந்தங்கள் யாவும் ஒரு பொதுக்குழுவின் முன்வைப்பது என்றும் ஆனது.

அமைதி மாநாடு, 1946

பாரிஸ் நகரில் அமைந்த லக்ஸம்பர்க் அரண்மனையில் 1946 ஜூலை 26 முதல் அக்டோபர் 15 வரை 21 நாடுகளைச் சேர்ந்த 1500 பிரதிநிதிகள் கலந்து கொண்ட அமைதி மாநாடு நடைபெற்றது. ஆழ்ந்த கலந்தாலோசனைகளுக்குப் பிறகு கொண்டு வரப்பட்ட பரிந்துரைகள் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் மறுஆய்விற்குப் பின் சில மாறுதல்களுக்கு உட்படுத்தப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இத்தாலிய அமைதி உடன்படிக்கை: ட்ரிஸ்டியை குறித்த சர்ச்சை பல ஆண்டுகளுக்கு இழுபறியை ஏற்படுத்தியது. இத்தாலி ட்ரிஸ்டியை கோரியது. சோவியத் யூனியன் அதை யுகோஸ்லோவிய நாட்டிற்கு வழங்குவதாக வாக்களித்திருந்தது. இறுதியாக 1954இல் ட்ரிஸ்டியை A மண்டலம் என்றும் B மண்டலம் என்றும் பிரித்தனர். அதனடிப்படையில் A மண்டலம் இத்தாலிக்கும் B மண்டலம் யுகோஸ்லோவியாவிற்கும் பிரித்து வழங்கப்பட்டது. இத்தாலி கொடுக்க வேண்டிய நஷ்ட ஈடாக $ 260,000,000 நிர்ணயிக்கப்பட்டது (இதில் பெரும் பகுதி தொகை கிரீசையும், யுகோஸ்லாவியாவையும் சென்றடைந்தது).

ரஷ்யா பெற்ற இழப்பீடு : ஹங்கேரி, பெல்ஜியம் மற்றும் ஃபின்லாந்து ஆகிய நாடுகள் ரஷ்யாவிற்கு $100,000,000 கொடுக்க வேண்டும் என்றானது. பல்கேரியா யுகோஸ்லாவியாவிற்கு $25,000,000மும், கிரீசிற்கு $4,000,000 கொடுக்க வரையறுக்கப்பட்டது. ருமேனியா தான் 1919இல் பெற்றுக்கொண்ட பெசரேபியாவையும் பின்னர் இணைத்துக் கொண்ட புகோவினாவையும் ரஷ்யாவிடம் மீண்டும் ஒப்படைக்க ஒப்புக்கொண்டது. பெல்ஜிய உடன்படிக்கைகள் டான்யூப் மீது கட்டணமில்லாப் பயணம் மேற்கொள்ள வழிவகை செய்தது. ஆனால் அதனை ரஷ்யா தடுத்தது. ஒப்பந்தங்கள் 1947 செப்டம்பர் 15 முதல் நடைமுறைக்கு வந்தன. ஆனால் அதன் சரத்துகள் முறியடிக்கப்படுதலுக்கோ , புறக்கணிக்கப்படுதலுக்கோ உள்ளாயின.

ஆஸ்திரியா: ஆஸ்திரியாவின் தென் கரிந்தியப் பிராந்தியத்தில் ஒரு பகுதியின் மீது யுகோஸ்லோவியா உரிமை கோரியதால் சர்ச்சைகள் கிளம்பின. இழப்பீடாக யுகோஸ்லோவியா $150,000,000யும் கோரியது. ஜெர்மனியின் சொத்துக்களின் மதிப்பீடு குறித்த சர்ச்சை அதனை கணிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஆணையத்தால் 85 முறை கூடியும் அப்பணியை செய்து முடிக்க முடியவில்லை என்ற நிலையில் தொடர்ந்தது. ரஷ்யாவிற்குத் தரப்பட வேண்டிய இழப்பீட்டிற்காக ஆஸ்திரியாவின் எண்ணெய் வளங்களையும், கப்பல் போக்குவரத்து வசதியையும் பயன்படுத்திக்கொள்ள வழிவகை செய்து கொடுத்ததோடு, இழப்பீடாக நிர்ணயிக்கப்பட்ட $150,000,000 தொகையை ஆறு வருடங்களில் படிப்படியாக கொடுத்து முடிக்கும் வரை அதற்கு ஈடான ஜெர்மனியின் சொத்துக்களை அந்நாடு பயன்படுத்திக்கொள்ளவும் உரிமை வழங்கப்பட்டது. ஆஸ்திரியா ஒரு சுதந்திர, இறையாண்மை கொண்ட, மக்களாட்சியைப் பின்பற்றும் நாடாக்கப்பட்டு 1938இல் ஜெர்மனியோடு வலுக்கட்டாயமாக இணைக்கப்படுவதற்கு முன்பிருந்த அதே எல்லைகளோடு மறுநிர்ணயம் செய்யப்பட்டது. தன்பங்கிற்கு ஆஸ்திரியா ஜெர்மனியோடு அரசியல் ரீதியாகவோ, பொருளாதார அடிப்படையிலோ எந்த தொடர்பும் கொள்ளக்கூடாது என்பதற்கு உடன்பட்டது.

ஜெர்மனி: பெர்லினுக்கு அருகாமையில் அமைந்திருந்த போட்ஸ்டாமில் நடைபெற்ற மாநாட்டில் வழங்கப்பட்ட அறிவிப்பின்படி அறியப்படுவதாவது: 1.கிழக்குப் பிரஷ்யாவை இரண்டு பிரிவுகளாகப் பிரித்தல் : வடபகுதி சோவியத்தையும், தென்பகுதி போலந்தையும் சேருவது. 2. முன்பு சுதந்திரப் பகுதியாக இருந்த டான்சிக் நகரை போலந்து பெற்றது. ஜெர்மனியின் இராணுவ சக்தி முழுமையாக ஒழிக்கப்பட்டு அதனை நான்கு தொழில் மண்டலங்களாகப் பிரித்து ஒவ்வொன்றும் சோவியத் யூனியன், பிரிட்டன், அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் பிரான்ஸ் ஆகியவற்றின் கட்டுப்பாடுகளுக்குள் விட முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு போருக்கு முன்பாக இருந்த ஜெர்மனியின் பெரும் பகுதிகள் ரஷ்யாவிற்கும் போலந்திற்கும் பிரித்து வழங்கப்பட்டன. ரஷ்ய மண்டலத்தின் இதயமாக பெர்லின் விளங்கினாலும் நாட்டின் பிற பகுதிகள் நான்கு ஆக்கிரமிப்பு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டன. ஜெர்மன் ஜனநாயக குடியரசு (German democratic Republic) 1949 ஏப்ரலில் சோவியத் மண்டலத்தைச் சேருவதாக அறிவிக்கப்பட்டது. நேட்டோ (NATO) ஜெர்மானிய கூட்டாட்சி குடியரசை (Federal Republic of Germany) அங்கீகரிக்க முன்வந்தது. செப்டம்பர் மாதத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றம் ஜெர்மானிய கூட்டாட்சி குடியரசில் செயல்பாட்டுக்கு வந்தது.

போலந்து

போலந்து மேற்குப்புறமாக 200 மைல்களுக்கு உள்வாங்கி கிட்டத்தட்ட 69,000 சதுர மைல்கள் வரை சோவியத்திடம் இழந்து மேற்கு திசையில் இழந்ததை காட்டிலும் சற்று குறைவான பகுதிகளை ஜெர்மனியிடம் இருந்து பெற்றது. போலந்து தனது கிழக்கு மாகாணங்களை ரஷ்யாவிடம் ஒப்படைப்பதோடு, சோவியத் பாதுகாப்புக்குட்பட்ட போலந்து அரசாங்கம், துருவங்களிலிருந்து ஜனநாயக தலைவர்களை இணைப்பதன் மூலம் மறுசீரமைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

ஜப்பான்

குடியரசுத்தலைவர் ரூஸ்வெல்ட், பிரதம அமைச்சர் சர்ச்சில் மற்றும் தேசியவாத சீனாவின் ஜெனரல் இஸிமோ சியாங் கே - ஷேக் ஆகியோர் நவம்பர் 1943இல் கெய்ரோவில் கூடி ஜப்பானியப் பேரரசின் எதிர்காலத்தைப் பற்றிய முடிவையெட்ட முயன்றனர். கொரியா நீங்கலாக ஜப்பான் சீனாவிடமிருந்து கவர்ந்த மற்ற பகுதிகளை சீனக்குடியரசுவிடமே ஒப்படைப்பதென்று ஏற்கப்பட்டது. கொரியா விடுதலை பெற்று சுதந்திர நாடாக அறிவிக்கப்படவுமிருந்தது. ஜப்பான் 1931ஆம் ஆண்டு முதல் பிடித்துவைத்திருந்த அனைத்துப் பகுதிகளை மட்டுமல்லாமல் பார்மோசாவையும் (தைவான்), பசிபிக் கடலில் பல பதிற்றாண்டுகளுக்கு முன் பிடித்துவைத்திருந்த தீவுகளையும் ஒப்படைக்க வேண்டும் என்று முடிவு கொள்ளப்பட்டது.


கிரிமியாவில் உள்ள யால்டாவில் நடந்த மாநாட்டிற்குப் (பிப்ரவரி 1945) பின் முப்பெரும் தலைவர்கள் ரூஸ்வெல்ட், சர்ச்சில், மற்றும் ஸ்டாலின் ஜெர்மனியின் நிபந்தனையற்ற சரணடைவிற்கான திட்டத்தை அறிவித்ததோடு,போருக்குப்பின் ஜெர்மனியையும் அதன் நட்பு நாடுகளையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது குறித்த முறைமை பற்றியும், ஐக்கிய நாட்டு சபையை ஏற்படுத்தி அமைதியை காப்பது குறித்தும், பொருளாதார அமைப்பை உருவாக்குவதும், மொத்தமாக பிரெட்டன் வுட்ஸ் அமைப்பு என்று அறியப்பட்டது. உலக வங்கி, பன்னாட்டு நிதியம் (International Monetary Fund), வியாபாரம் மற்றும் கட்டணங்களுக்கானப் பொது 2 LOOTULq66005 (General Agreement on Trade and Tariff) போன்றவற்றை உருவாக்கி அவற்றின் மூலமாக போரில் பொருளாதார அழிவைச் சந்தித்த நாடுகளை மறுசீரமைக்க உதவுதல் பற்றியும் தெளிவுபடுத்தினர். முதல் உலகப்போருக்குப் பின் நேர்ந்தது போன்று அல்லாமல் இம்முறை ரூஸ்வெல்ட் ஐக்கிய நாட்டு சபையை உலக அமைதி அமைப்பில் அங்கம் வகிக்கும் வகையில் நிர்ப்பந்திக்க தீர்மானமாக இருந்தார்.

 

இரண்டாம் உலகப்போரின் முடிவுகள்

இரண்டாம் உலகப்போர் எதிர்பார்த்திருக்காதப் பல சிரமங்களைக் கொடுத்தது. ஏறக்குறைய 6 கோடி நபர்கள் இறந்ததோடு பெரும் நகரங்களான வார்சா , கீவ், டோக்கியோ மற்றும் பெர்லின் போன்றவை தரைமட்டமாக்கப்பட்டிருந்தன. ஐரோப்பாவின் பெரும்பான்மையான முக்கிய துறைமுகங்கள் பலவும் அழித்தொழிக்கப்பட்டது போன்று ஆசியாவிலும் பல துறைமுகங்கள் அழிவை சந்திக்கவும், பாலங்கள் உடைக்கப்படவும், இருப்புப்பாதை இயந்திரங்களும், பெட்டிகளும் உருத்தெரியாமல் அழிவைச் சந்தித்தன. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்தார்கள். பெரும் சக்தி என்ற நிலையில் இருந்து ஜெர்மனி வீழ்ந்தது. ஐரோப்பா தனது அந்தஸ்தையும், கௌரவத்தையும் இழந்தது. பொருளாதாரம் சரிந்து நொறுங்கியது. உலகின் இரு ஆதிக்க சக்திகளாக அமெரிக்க ஐக்கிய நாடும் சோவியத் ரஷ்யாவும் உருவாகியிருப்பது தெளிவுப்பட்டது. இரு சக்திகளுக்குமிடையே நிலவிய சித்தாந்தப் பிளவானது போருக்குப் பின் தேவைப்பட்ட ஒத்துழைப்பை எவ்வாறு பாதித்தது என்பதை அடுத்த பாடத்தில் காண்போம்.

பிரிட்டனின் கௌரவம் உயர்ந்தது போன்று தெரிந்தாலும் அதன் வளங்கள் குறைந்து, பேரரசின் எல்லைகள் சுருங்கியதில் உலக சக்தி என்ற நிலையை அது இழந்தது. ஐரோப்பாவில் பல நாடுகளில் தொடர்ந்துகொண்டிருந்த மன்னராட்சிக்கு அது முடிவுகட்டியது. ருமேனியா, யுகோஸ்லோவியா, பல்கேரியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் முடியாட்சி ஒழிக்கப்பட்டது. பிரிட்டன் நீங்கலாக முடியாட்சி டென்மார்க், நார்வே, ஸ்வீடன், ஹாலந்து மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளில் அது தொடர்ந்தாலும் அதன் தன்மை அரசியல்சாசனத்திற்கு கட்டுப்பட்டதாகவே மாறிப்போயிருந்தது.

உலக அமைதிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய பாசிச சிந்தனையை வீழ்த்த உலக நாடுகள் யாவும் ஒன்று கூடின. நேச நாடுகளின் வெற்றிக்குப்பின் சாமானிய மக்கள் போர் நடவடிக்கைகளுக்கு நல்கிய ஆதரவும் தலைதூக்கி நின்றது. பாசிசத்திற்கு எதிரான போர் அடித்தள மக்களை அதிகாரத்தில் பங்குபெறச் செய்தது. போர்க்காலத்தில் பலரும் கூடி எதிர்கொண்ட துயரங்களும் புரிந்த தியாகங்களும் மக்களாட்சி மீது நம்பிக்கையை வலுப்படுத்தியதோடு, அனைத்து குடிமக்களுக்கும் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டியப் பொறுப்பை அரசுகளுக்கு உணர்த்தியது. உதாரணமாக 1945இன் கோடைக்காலத்தில் பிரிட்டனில் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலாளர் கட்சி ஒரு பொதுநல அடிப்படை கொண்ட நாட்டை (Welfare State) உருவாக்குவதில் தீவிரம் காட்டியது. விபத்து, நோய், வயது முதிர்ச்சி, வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்வோருக்கு துணைபுரிவதே பிரிட்டன் அரசின் பொறுப்பாக கருதப்படலானது. பெண்கள் போரின் போது எதிர்கொண்ட துயரங்களையும் அவர்களின் பங்களிப்பையும் கௌரவிக்கும் விதமாக அவர்களின் உரிமைக்கான தளம் விரிவுபடுத்தப்பட்டது. பிரான்சிலும் இத்தாலியிலும் பெண்களுக்கு நீண்டகால காத்திருப்பிற்குப்பின் இறுதியாக வாக்குரிமை வழங்கப்பட்டது.

போரின் முக்கியத்துவம் வாய்ந்த விளைவு காலனிய நாடுகளில் நிகழ்ந்த மாற்றமேயாகும். உலகெங்கும் நடந்த மக்களாட்சியை முன்வைத்த போராட்டங்கள் தேசியவாத சக்திகளை சுதந்திரப் போராட்டத்தை தீவிரப்படுத்த தூண்டியது. போரின் ஆரம்பகட்டத்தில் ஜப்பான் மேற்கத்திய நாடுகளை தென்கிழக்கு ஆசியாவில் தோற்கடித்தமையும், அது போலவே பிரிட்டனும், பிரான்சும் ஜெர்மனியால் தோற்கடிக்கப்பட்டமையும் வெள்ளையர்களும் அவர்தம் நாடும் தோற்கடிக்கப்படகூடியவையே என்ற தெளிவான சமிக்ஞையை ஏற்படுத்தியது. பழைய பேரரசுகளும் அவைகளுக்கான காலம் முடிவை எட்டிவிட்டதை உணர்ந்து கொண்டன. உதாரணமாக இந்தோனேஷியத் தீவுக் கூட்டத்தில் ஒரு பெரும் படையை நிர்வகிப்பதில் உள்ள சிரமங்களை டச்சு நாட்டினர் உணர்ந்து கொண்டனர். இந்தோ - சீனாவில் பிரான்சு முதலில் பிரிட்டனின் ஆதரவோடும், பின்னர் அமெரிக்க ஐக்கிய நாட்டின் துணையோடும், விடுதலை வழங்கப்பட்ட பகுதியை மீண்டும் கட்டுக்குள் கொண்டுவர கடுமையாக முயன்றது. ஆனால் பிரெஞ்சுப் படைகள் தோற்கடிக்கப்பட்டு 1954இல் அவர்கள் வெளியேற்றப்படவும் ஆளானார்கள். தங்களின் உலக ஏகாதிபத்திய சக்தியை மீண்டும் நிலைநிறுத்த 1956இல் பிரான்சும், பிரிட்டனும் சூயஸ் கால்வாய் பிரச்சனையின் வாயிலாக முயன்றபோது அதுவும் தோற்றது. பின்னர் வியட்நாமை எதிர்த்த அமெரிக்க ஐக்கிய நாட்டின் போர் அதற்கு வெட்கித் தலைகுனியும் நிலையையே ஏற்படுத்தியது.

Tags : Outbreak of World War II and its Impact in Colonies | History இரண்டாம் உலகப்போரும் காலனிய நாடுகளில் அதன் தாக்கமும் - வரலாறு.
12th History : Chapter 14 : Outbreak of World War II and its Impact in Colonies : Second World War: Causes Outbreak of World War II and its Impact in Colonies | History in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 14 : இரண்டாம் உலகப்போரும் காலனிய நாடுகளில் அதன் தாக்கமும் : இரண்டாம் உலகப்போர்: காரணங்கள் - இரண்டாம் உலகப்போரும் காலனிய நாடுகளில் அதன் தாக்கமும் - வரலாறு : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 14 : இரண்டாம் உலகப்போரும் காலனிய நாடுகளில் அதன் தாக்கமும்