Home | 11 ஆம் வகுப்பு | 11வது வரலாறு | ஷெர்ஷாவும் சூர் வம்சமும்

முகலாயப் பேரரசு - ஷெர்ஷாவும் சூர் வம்சமும் | 11th History : Chapter 14 : The Mughal Empire

   Posted On :  18.05.2022 05:48 am

11 வது வகுப்பு வரலாறு : அலகு 14 : முகலாயப் பேரரசு

ஷெர்ஷாவும் சூர் வம்சமும்

ஹூமாயூன் கன்னோசி போரில் தோல்வியடைந்து தனது அரியணையை இழந்த பின்னர் மீண்டும் 1555இல் தில்லியைக் கைப்பற்றித் தனது அதிகாரத்தை மீட்பதற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் சூர் வம்சத்தைச் சேர்ந்த ஷெர்ஷாவால் தில்லி ஆளப்பட்டது.

ஷெர்ஷாவும் சூர் வம்சமும்


ஹூமாயூன் கன்னோசி போரில் தோல்வியடைந்து தனது அரியணையை இழந்த பின்னர் மீண்டும் 1555இல் தில்லியைக் கைப்பற்றித் தனது அதிகாரத்தை மீட்பதற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் சூர் வம்சத்தைச் சேர்ந்த ஷெர்ஷாவால் தில்லி ஆளப்பட்டது. ஒரு ஜாகீர்தாரின் குடும்பத்தில் பிறந்து பரித் என்றழைக்கப்பட்ட இவர் ஒரு புலியைக் (ஹிந்தியில் ஷெர்) கொன்றதனால் ஷெர்கான் என்னும் பெயரைப் பெற்றார். அரியணை ஏறிய பின் ஷெர்ஷா என்றழைக்கப்பட்டார். தன் திறமையினாலும் ஆற்றலினாலும் இந்தியாவிலிருந்த ஆப்கானியரின் தலைவரானார். அவருடைய இராணுவ மதிநுட்பமும் அரசியல் செயல்திறனும் ஹூமாயூனுக்கு எதிராகவும் ஏனைய ரஜபுத்திர அரசுகளுக்கு எதிராகவும் அவருக்கு வெற்றிகளை ஈந்தன. மாளவம் போரிடாமலேயே அவரிடம் வீழ்ந்தது. மேவாரின் உதய்சிங் எதிர்ப்பேதும் தெரிவிக்காமல் சரணடைந்தார். கலிஞ்சாரைக் கைப்பற்ற வேண்டும் என்ற தனது அடுத்த முயற்சியில் அவர் தோல்விகண்டார்.

வெடிகுண்டு விபத்தின் காரணமாக 1545இல் அவர் உயிரிழந்தார். அவருக்குப்பின் பதவியேற்ற அவருடைய இரண்டாவது மகன் இஸ்லாம்ஷா 1553 வரை ஆட்சி புரிந்தார். சிறு வயதிலேயே அவர் மரணமடைந்ததைத் தொடர்ந்து வாரிசுரிமை பற்றிய குழப்பம் நிலவியது. இச்சூழ்நிலையை ஹூமாயூன் பயன்படுத்தி தில்லியையும் ஆக்ராவையும் சூர்வம்ச அரசர்களிடமிருந்து மீட்டார்.

ஷெர்ஷாவின் சீர்திருத்தங்கள்

ஹூமாயூனைப் பின்தொடர்ந்த ஷெர்ஷா அதற்கு முன்னர் கிசிர்கான் என்பவரை வங்காளத்தின் ஆளுநராக நியமித்திருந்தார் கிசிர்கான் வங்காளத்தின் முன்னாள் ஆட்சியரான சுல்தான் மகமுதுவின் மகளை மணந்தவர். அவர் சுதந்திர அரசரைப்போல் செயல்படத் துவங்கினார். ஊர் திரும்பியவுடன் அவரைக் கைது செய்ய ஷெர்ஷா உத்தரவிட்டார். பிராந்திய அரசுகளின் கீழ்ப்படியாமையைக் குறித்து நன்கு அறிந்திருந்த ஷெர்ஷா, ஒரு வலிமையான நிர்வாக அமைப்பை உருவாக்குவதே பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வாகும் எனக் கருதினார். எனவே அவர் தனது அரசை மிகவும் மையப்படுத்தப்பட்ட அரசாக மாற்றினார் தில்லி சுல்தானியத்தின் உள்ளாட்சித் துறை நிர்வாகக் கட்டமைப்பு ஒரு சில மாற்றங்களோடு பின்பற்றப்பட்டது. தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள கிராமங்களில் களவு போகும் பொருட்களுக்கு கிராமத்தலைவரே பொறுப்பு என்றானவுடன் கிராமத் தலைவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படத் தொடங்கினர். ‘விவசாயி சீர்குலைந்தால் அரசன் சீர்குலைவான்" என ஷெர்ஷா நம்பினார். படைகள் ஓரிடம் விட்டு வேறிடங்களுக்குச் செல்கையில் பயிர்களுக்குச் சேதம் ஏற்படக் கூடாது என்பதில் ஷெர்ஷா தனிக்கவனம் செலுத்தினார். நெகிழ்வுத் தன்மை கொண்ட வருவாய் முறையைப் பின்பற்றினார். நிலங்கள் முறையாக அளவை செய்யப்பட்டு நிலங்களின் வளத்திற்கு ஏற்றவாறு வரி நிர்ணயம் செய்யப்பட்டது. சில பகுதிகளில் ஜாகீர்தாரி முறையும் ஜமீன்தாரி முறையும் தொடர்ந்து செயல்படுவதற்கு அனுமதிக்கப்பட்டன. வேறுபல இடங்களில் மொத்த வேளாண் விளைச்சலில் ஒரு குறிப்பிட்ட பங்கு மட்டும் வரியாக வசூலிக்கப்பட்டது.

ஷெர்ஷா விவசாயிகளிடம் கொண்டிருந்த அதே அக்கறையை வர்த்தகர்களிடமும் கொண்டிருந்தார். வணிகத்தை ஊக்குவிப்பதற்காக வணிக வரிகளை எளிமைப்படுத்தினார். நுழைவு வரி, விற்பனை வரி ஆகியவை மட்டுமே வசூலிக்கப்பட்டன. தங்க, வெள்ளி, செப்புக் காசுகளில் இடம் பெறும் உலோகங்களின் தர அளவு வரையறை செய்யப்பட்டது வணிகத்திற்கு வசதி செய்து கொடுத்தது. அவருடைய நாணயமுறையானது முகலாயர் காலம் முழுவதும் அப்படியே பின்பற்றப்பட்டு ஆங்கிலேயர் காலத்து நாணய முறைக்கும் அடித்தளமானது.

வணிகத்தையும் வர்த்தகத்தையும் மேம்படுத்தும் பொருட்டு உறுதியான சாலை வசதி முறையை ஷெர்ஷா பராமரித்தார். பழைய சாலைகள் புதுப்பிக்கப்பட்டதோடு புதிய சாலைகளும் அமைக்கப்பட்டன. மேற்கில் சிந்துப் பகுதியிலிருந்து வங்காளத்தில் சோனார்கான் வரையிலான முக்கியப் பெருவழியைச் செப்பனிட்டதோடு குஜராத் கடற்கரைத் துறைமுகங்களை ஆக்ராவோடும் ஜோத்பூரோடும் இணைக்கும் புதிய சாலைகளையும் அமைத்தார். லாகூர் முல்தான் ஆகிய நகரங்களை இணைக்கும் புதிய சாலை அமைக்கப்பட்டது. அனைத்துச் சாலைகளிலும்சராய்எனப்படும் சத்திரங்கள் அமைக்கப்பட்டு வணிகர்கள் தங்கவும் உணவருந்தவும் வசதிகள் செய்துதரப்பட்டன. இவ்வேற்பாடுகள் விறுவிறுப்பான வணிகத்திற்கு உத்ரவாதம் அளித்தன. ஷெர்ஷாவால் உருவாக்கப்பட்ட ஒரு சில சராய்கள் இன்றளவும் உள்ளன. இத்தகைய சராய்கள் தங்களுக்கு அருகே நகரங்கள் உருவாவதையும் உறுதி செய்தன.

ஷெர்ஷா பெருமளவில் நற்தொண்டுகளைச் செய்தார். ஆதரவற்றோர்க்குக் கருவூலத்திலிருந்து உதவித்தொகை வழங்கினார். ஷெர்ஷா ஒரு வைதீக சன்னி முஸ்லீம் ஆவார். பாரபட்சமில்லாமல் நீதி வழங்கினார். தவறு செய்தவர்கள் பிரபுக்களாயிருந்தாலும் தனது உறவினர்களாக இருந்தாலும் அவர்களைத் தண்டிக்கத் தவறவில்லை. கலக மனப்பாங்கு கொண்ட ஜமீன்தார்கள், பிரபுக்கள், கொள்ளையர், திருடர்கள் ஆகியோரை கடுமையான தண்டனைகள் மூலம் ஒடுக்கி பேரரசில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்தினார். மிகவும் புகழப்படும் அக்பர், தோடர்மால் ஆகியோரின் நிதி நிர்வாக முறை பெருமளவில் ஷெர்ஷாவின் நிதி நிர்வாக முறையினை அடித்தளமாகக் கொண்டதாகும். ஷெர்ஷாவுக்குப் புதிய நகரங்களை நிர்மாணிக்கவோ கட்டடங்களைக் கட்டவோ போதிய கால அவகாசம் கிடைக்கவில்லை . தில்லியில் கோட்டைச் சுவர்களுடன் கூடிய ஒரு புதிய நகரத்தை நிர்மாணிக்கத் தொடங்கினார். பின்னர் அது புராண கிலா (Old Fort) என அழைக்கப்பட்டது. தன்னுடைய கல்லறை மாடத்தை சசாரம் என்னுமிடத்தில் கட்டினார்.

 

ஜாகீர்தாரிமுறை: இது ஒரு நில உடைமை முறையாகும். தில்லி சுல்தானியர் காலத்தில் இம்முறை வளர்ச்சி பெற்றது. இம்முறையின் கீழ் ஒரு குறிப்பிட்டப் பகுதியில் வரிவசூல் செய்கின்ற அதிகாரமும் அப்பகுதியை நிர்வகிக்கிற அதிகாரமும் அரசாங்கத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும்.

ஜமீன்தாரி : இச்சொல் மற்றொரு நில உடைமை முறையைக் குறிப்பதாகும். பாரசீக மொழியில் ஜமீன்தார் என்ற சொல்லுக்கு நிலத்தின் உடைமையாளார் என்று பொருள். முகலாயர் காலத்தில் பிரபுக்கள் வர்க்கத்தைச் சேர்ந்தோரே ஜமீன்தார்களாக இருந்தனர். அக்பர் பிரபுக்களுக்கும் முந்தைய அரச குடும்பங்களின் வழித்தோன்றல்களுக்கும் நிலங்களை வழங்கி அவற்றை பரம்பரையாக அனுபவிக்கும் உரிமையையும் வழங்கினார். ஜமீன்தார்கள் குத்தகைதாரர்களிடமிருந்தும் விவசாயிகளிடமிருந்தும் வரி வசூல் செய்து ஒரு குறிப்பிட்ட தொகையை அரசுக்குச் செலுத்தினர்.

Tags : The Mughal Empire முகலாயப் பேரரசு.
11th History : Chapter 14 : The Mughal Empire : Sher Shah and Sur Dynasty The Mughal Empire in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வகுப்பு வரலாறு : அலகு 14 : முகலாயப் பேரரசு : ஷெர்ஷாவும் சூர் வம்சமும் - முகலாயப் பேரரசு : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வகுப்பு வரலாறு : அலகு 14 : முகலாயப் பேரரசு