Home | 12 ஆம் வகுப்பு | 12வது புவியியல் | தலம் மற்றும் சூழலமைவு

மனிதக் குடியிருப்புகள் - புவியியல் - தலம் மற்றும் சூழலமைவு | 12th Geography : Chapter 2 : Human Settlements

   Posted On :  27.07.2022 07:38 pm

12 வது புவியியல் : அலகு 2 : மனிதக் குடியிருப்புகள்

தலம் மற்றும் சூழலமைவு

ஒரு குடியிருப்பின் தலம் அது அமைந்துள்ள இடத்தின் இயற்கையமைப்பை விவரிக்கிறது.

தலம் மற்றும் சூழலமைவு    


தலம்

ஒரு குடியிருப்பின் தலம் அது அமைந்துள்ள இடத்தின் இயற்கையமைப்பை விவரிக்கிறது. நீர் அளிப்பு, கட்டுமானப் பொருட்கள், மண்ணின் தரம், காலநிலை, இருப்பிடம் மற்றும் பாதுகாப்பு போன்ற காரணங்களைக் கருத்தில் கொண்டே குடியிருப்புகள் முதலில் உருவாகின. எடுத்துக்காட்டாக, ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னி நகரத்தின் தலம் அங்குள்ள இயற்கைத் துறைமுகம் மற்றும் சுற்றியுள்ள வளமான விவசாய நிலத்தைச் சாதகமாக பயன்படுத்தியுள்ளது. 



தோற்றம் மற்றும் தங்குமிடம்

குடியிருப்பின் அமைவிடத்தைத் தீர்மானிக்கும் இரண்டு முக்கியக் காரணிகள் தோற்றம் (Aspect) மற்றும் தங்குமிடம் (Shelter). தோற்றம் என்பது நிலம் அமைந்திருக்கும் திசையோடு தொடர்புடையது. வட அரைக்கோளத்தில் தெற்கு நோக்கிய சரிவுகள் தான் குடியிருப்புகள் அமைய சிறந்தது. இங்கு அதிக சூரிய ஒளி கிடைப்பதால் விவசாயத்திற்கு ஏற்றதாகும். தெற்கு நோக்கித் சரிவு கொண்டுள்ள குடியிருப்புகளை ஆல்ப்ஸ் பள்ளத்தாக்கில் தெளிவாக காணலாம்.

தங்குமிடமும் மிகவும் முக்கியமானது. குறிப்பாக ஐக்கிய நாடுகளில் (UK) வீசும் குளிர்ந்த வடக்குக் காற்றுகள் மற்றும் தென்மேற்குக் காற்றுகள் ஆகியவற்றிலிருந்து காத்துக்கொள்ளப் பாதுகாப்பான தங்குமிடம் அவசியம். இயற்கைச் சூழல்களினாலேயே பாதுகாக்கப்படும் குடியிருப்புகளுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு வட மற்றும் தெற்கு டவுன்ஸ் (Downs) பகுதியிலுள்ள சுண்ணாம்புப் பாறையின் வன்சரிவுகளை அடிப்படையாகக் கொண்ட ஸ்ப்ரிங் லைன் (Spring Line) குடியிருப்புகளாகும். இக்குடியிருப்புகள் சிறந்த நீர் ஆதாரத்தினாலும் அருகிலுள்ள வளமான வேளாண் நிலத்தினாலும் பயனடைந்திருக்கின்றன.

1. நீர் அளிப்பு (Water Supply)

ஒரு குடியிருப்பு அமைய வேண்டும் என்று தீர்மானிப்பதில் நீர் அளிப்பு மிக முக்கியமான காரணியாகும். ஆறுகள் தூய குடிநீர் அளிப்பதோடு மட்டுமல்லாமல் மீன் பிடித்தல் மூலம் உணவு ஆதாரமாகவும் மற்றும் போக்குவரத்து வழியாகவும் உள்ளன. உலகின் மிகப்பெரிய நகரங்களில் பெரும்பாலானவை ஆறுகளின் கரையோரங்களில் அமைந்துள்ளன. நகரங்கள், குறிப்பாக, ஆறுகள் கடலோடு கலக்குமிடங்களில் அமைந்துள்ளன. இங்குதான் கண்டுபிடிப்பாளர்கள் முதன் முதலாகக் காலடி எடுத்து வைத்தனர்.

2. வறண்ட இடங்க ள் (Dry point sttes)

வறண்ட இடம் என்பது சுற்றியுள்ள நிலத்தைக் காட்டிலும் சற்று உயரத்தில் அமைந்துள்ள இடமாகும். வெள்ளத்தினால் குறைந்த அளவே பாதிப்புக்குள்ளாகும் பகுதி எனப்பொருள் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, இங்கிலாந்திலுள்ள கேம்பிரிட்ஜ்ஷ யரில் காணப்படும் ஏலி (Ely) என்ற இடமாகும்.



3. நீர் நிலையை ஒட்டிய இடங்கள் (Wet point sites)

எளிதில் நீரை அடையக்கூடிய தலம் நீர் நிலையை ஒட்டிய இடம் எனப்படும். வழக்கமாக இது நதிக் கரையையொட்டி இருக்கும். நகரங்கள் அவற்றின் கரையோரமாக அமையலாம் அல்லது ஆறு கடலில் கலக்குமிடத்தில் தொகுப்பாக அமையலாம். எடுத்துக்காட்டாக, வெல்ஷ் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள நகர மற்றும் கிராமியத் தலங்களைக் கூறலாம். இவை பள்ளத்தாக்கின் வன்சரிவுகளில் அமையாமல் சமதளப் பகுதியில் அமைந்திருக்கும். இங்கிலாந்திலுள்ள வடக்கு மற்றும் தெற்கு டவுன்ஸ் (Downs)இல் உள்ள ஸ்ப்ரிங் லைன் குடியிருப்புக்கள் நீர் நிலையை ஒட்டிய இடங்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.


4. பாதுகாப்பு

இடைக்காலத்தில் பாதுகாப்பு என்பது குடியிருப்பின் தலத்தை நிர்ணயிக்கும் காரணிகளில் மிக முக்கியமான ஒன்றாக இருந்தது. ஓரிடத்தின் நிலத்தோற்றமே மிகச் சிறந்த பாதுகாப்பு அம்சமாக இருந்தது என நிரூபிக்கப்பட்டுள்ளது. எடின்பர்க் கோட்டை ஒரு பனிப் பகுதியின் உச்சியிலமைந்துள்ளது. இது எதிரிகளுக்கு சிறிதும் இடம் கொடுக்கா வண்ணம், தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் மிகச் சரியான நிலையில் அமைந்துள்ளது. இத்தாலியில் ஏராளமான குன்றின் மேல் சுற்றுச்சுவர் எழுப்பப் பட்ட கிராமங்கள் உள்ளன. நியூசிலாந்தில் உள்ள மாவோரிஸ் (Maoris) மக்கள் தங்கள் குடியிருப்புகளை (பா (pa's) என்றழைக்கப்படுவது தாக்குதலுக்கு ஆளாகாதவாறு செங்குத்தான குன்றுகளின் மேல் அமைத்துள்ளனர். இந்தியாவில் மேற்கு வங்காளத்திலுள்ள பார்க்பூரியில் உள்ள இச்சாபூர் (Ichhapur) பாதுகாப்புப் பேட்டையானது கணக்கெடுக்கும் நகரமாகும். மற்றொரு பொதுவான, இயற்கையான பாதுகாப்பு அம்சம் நீராகும். குறிப்பாக, ஷ்ரூஸ்பரி மற்றும் டர்ஹாம் ஆகிய நகரங்கள் ஆற்று வளைவினால் (Meander) உருவாக்கப்பட்ட நிலப்பரப்பில் அமைந்து, மூன்று புறமும் நீரால் சூழப்பட்டுள்ளது. இது அவர்கள் பாதுகாக்க வேண்டிய ஒரு மெல்லிய கழுத்துப்பகுதி போன்ற நிலமே ஆதலால் இரு நகரங்களுக்கும் மிகச் சிறந்த பாதுகாப்பை அளிக்கிறது.



5. வளங்கள்

வளங்கள் எனப்படும் கருத்து ஏராளமான வற்றை உள்ளடக்கியது. ஆரம்பகாலத்தில் குடியிருந்தவர்களுக்கு மிக முக்கியமான வளங்களாக இருந்தவை எரிபொருள், கட்டுமானப் பொருட்கள் மற்றும் உணவு. மரங்கள் எங்கு அதிகம் கிடைத்தனவோ அங்கு குடியிருப்புகள் வளர்ச்சியடைந்தன. அதேபோல் கற்கள் கிடைத்த இடங்களிலும், விவசாயத்திற்கேற்ற நல்ல மண்வளம் கிடைத்த பகுதிகளிலும் குடியிருப்புகள் வளர்ச்சியடைந்தன.

குடியிருப்பின் ஆரம்ப காலங்களிலிருந்தே நகர்ப்புறங்கள் வளர்ச்சியடைய பலவிதமான வளங்கள் மையப்புள்ளிகளாக இருந்துள்ளன.

6. சுரங்கத்தொழில்

தெற்குவேல்ஸ் பகுதியின் நிலக்கரிச்சுரங்கங்கள், கார்ன்வால் பகுதியின் தகரச் சுரங்கங்கள், வடக்கு பிரேசிலிலுள்ள காரஜாஸ் (Carajas) பகுதியின் பெரிய சுரங்கத் திட்டங்கள் குடியிருப்புகளின் விரைவான வளர்ச்சியை ஊக்குவித்ததோடு தொழிலாளர்களைக் குடியமர்த்துதல் மற்றும் அவர்களின் தேவைகள் அனைத்தையும் வழங்குதல் போன்றவற்றைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தன.

7. விலைமதிப்பற்ற உலோகங்கள்

தென்னாப்பிரிக்காவில் விலைமதிப்பற்ற தங்கம் போன்ற உலோகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு குடியிருப்புகள் வளர்ச்சியடைந்தன. கி.பி.1849ல் கலிபோர்னியாவில் ஏற்பட்ட தங்கத்திற்கான ஓட்டத்திற்கு (Gold rush) பிறகு தங்கத்தின் கண்டுபிடிப்பினால் வளர்ச்சியடைந்த மிகவும் பிரசித்தி பெற்ற குடியிருப்பு சான் பிரான்ஸிஸ்கோ ஆகும்.

8. பாதை மையங்க ள் (Route centres)

பாதை மையங்கள், சந்திக்கும் புள்ளிகள் எனவும் அழைக்கப்படுகின்றன. இவை இரண்டு பள்ளத்தாக்குகள் சந்திப்பதால் ஏற்படுகின்றன. ஆனால் தற்பொழுது இரண்டு முக்கிய சாலைகள் சந்திக்குமிடங்களில் குடியிருப்புகள் வளர்ச்சியடைகின்றன. ஐக்கிய நாடுகளில் யார்க் பாதை மையத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். பர்மிங்ஹாம் பல சாலைகள் சந்திக்கும் மிகச் சிறந்த இடத்தில் அமைந்துள்ளது. இதுவே அதன் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாகும். இது ஐக்கிய நாடுகளின் மிகப் பெரிய நகரங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.



9. இணைப்புப் மையங்கள் (Bridging Points)

குடிப்பதற்கும், மீன்பிடிப்பதற்கும், நீர்ப்பாசனத்திற்கும் மற்றும் நீர்போக்குவரத்திற்கும் நீர் எவ்வாறு அவசியமோ அதுபோல ஆற்றைக் கடந்து செல்லும் திறனும் அவசியமானது. எங்கு பெரிய ஆறுகளை மிக எளிதாகக் கடக்க முடிந்ததோ அம்மையங்களில் பல நகரங்களும் மாநகரங்களும் வளர்ச்சியடைந்துள்ளன. எடுத்துக்காட்டாக, எக்ஸெட்டர். இது இங்கிலாந்தில் எக்ஸே ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது.


இருப்பினும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்று பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரமாகும். சீன் ஆற்றின் மத்தியிலுள்ள ஐல்டெலாசைட் என்னும் சிறிய தீவில் தான் முதல் நகரம் அமைக்கப்பட்டது. ஆற்றின் குறுக்கே நீண்ட பெரிய பாலம் ஒன்று கட்டுவதற்கு பதிலாக இரண்டு சிறிய பாலங்கள் கட்ட இந்தத் தீவு உதவியது. தற்பொழுது பாரிஸ் நகரம் தனது அபரிமிதமான வளர்ச்சியினால் அத்தீவு முழுவதையும் ஆக்கிரமித்து விட்டாலும் தற்பொழுதும் பல பாலங்கள் அத்தீவை நோக்கிச் செல்கின்றன. இங்குதான் நோட்ரேடேன் கதீட்ரல் (Notre Damc cathedral) தேவாலயம் கட்டப்பட்டுள்ளது.


10. ஆறுகளின் சங்கமம்

இரண்டு பள்ளத்தாக்குகள் அல்லது சாலைகள் எவ்வாறு குடியிருப்பின் வளர்ச்சிக்கு சந்திப்புப் புள்ளிகளாக இருக்கின்றனவோ அதுபோல இரண்டு ஆறுகள் இணையும் இடங்களும் அமைகின்றன. சூடான் நாட்டில் நீல மற்றும் வெள்ளை நைல் நதிகள் சந்திக்குமிடத்தில் அமைந்துள்ள கார்ட்டூம் (Khartoum) ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இந்தியாவில் கங்கையும், யமுனையும் கூடுமிடத்தில் அலகாபாத் அமைந்துள்ளது. பவானி நகரம் (தமிழ்நாடு) காவேரியும், பவானியும் சந்திக்குமிடத்தில் அமைந்துள்ளது.

 

சூழலமைவு

ஒரு குடியிருப்பு மற்ற குடியிருப்புகளோடும், இயற்கை நிலத்தோற்றங்களோடும் கொண்டுள்ள தொடர்பை விளக்குவதே குடியிருப்பின் சூழலமைவு எனப்படும். ஒரு குடியிருப்பு பெரிய நகரமாக மாறுகிறதா அல்லது சிறிய நகரம் அல்லது கிராமமாகவே இருக்கிறதா என்பதை முடிவு செய்யும் காரணிகளில் மிக முக்கியமானது குடியிருப்பின் சூழலமைவாகும்.

ஐக்கிய நாடுகளில் பர்மிங்ஹாம் மிகச்சிறந்த சூழலமைவு கொண்ட நகரத்திற்கு எடுத்துக்காட்டாகும். இது நாட்டின் மத்தியில் அமைந்துள்ளதோடு அருமையான சாலை வழிகளால் வடக்கு மற்றும் தெற்கு இலண்டன் மாநகரத்தோடு இணைக்கப்பட்டுள்ளது.


நகரங்கள் பல்வேறு செயல்பாடுகளை நிறைவேற்றத் தொடங்கும்போது அதன் முக்கியத்துவம் கூடவோ குறையவோ செய்யும். அதன் செயல்பாடுகளில் எவை நடைபெறும் என்று தீர்மானிப்பதில் சூழலமைவு முக்கியப் பங்கு வகிக்கிறது.

இது உண்மையான குடியிருப்பின் இடத்தைக் குறிக்கிறது. ஒரு குடியிருப்புக்கானதலத்தை முதலில் தேர்ந்தெடுப்பது என்பது அதன் அன்றாடத் தேவைகளான நீர் அளிப்பு, வேளாண் திறன் மிக்க நிலம், கட்டுமானப் பொருட்கள் மற்றும் எரிபொருட்கள் ஆகியவற்றைச் சார்ந்தது.

குடியிருப்புகளை இரு வகைகளாகப் பிரிக்கலாம். அவையாவன, கிராமிய மற்றும் நகரக்குடியிருப்புகள் ஆகும். பொதுவாக கிராம மற்றும் நகர்ப்புறத்திற்கான வேறுபாடுகளை அறிவோம்.

i) கிராமத்திற்கும், நகரத்திற்குமிடையேயுள்ள மிகப் பெரிய வேறுபாடு அதன் செயல்பாடாகும். கிராமப்புறத்தில் முதன்மைத் தொழிலான விவசாயம் முக்கியமாக உள்ளது. நகர்ப்புறத்தில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைத் தொழில்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளும் சேவை செய்யும் துறைகளும் காணப்படுகின்றன.

ii) பொதுவாக நகர்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில் மக்களடர்த்தி குறைவாக உள்ளது.

iii) நகர்ப்புறக் குடியிருப்புகளை வரையறை செய்பவை மேம்பட்ட குடியிருப்பு வசதிகள், கல்விக்கான வாய்ப்புகள், போக்குவரத்து வசதிகள், வர்த்தக மற்றும் சமூகத் தொடர்புகள் மற்றும் ஒட்டு மொத்த தரமான வாழ்க்கைத் தரம் போன்றவை ஆகும். இந்த வசதிகள் அனைத்தும் கிராமப் பகுதிகளில் குறைவாகவே காணப்படுகின்றன.

iv) நகர்ப்புறங்களைப் பாதிக்கக்கூடிய மாசடைதல் அல்லது போக்குவரத்துப் பிரச்சனைகள் கிராமப்புறங்களில் இல்லை.

v) கிராமப்புற சமூகங்களில் வேலை வாய்ப்பு சார்ந்த இடம் பெயர்வுக்கு மிகக் குறைந்த வாய்ப்பே உள்ளது. நகர்ப்புறத்தில் ஏராளமான பணிகள் உள்ளதால் பணி நிமித்தமான இடப்பெயர்வு அதிகமாக உள்ளது.

vi) கிராமப்புற மக்கள் குறைந்த அளவே இடம்பெயர்ந்து செல்வதால் அவர்களுக்கிடையிலான சமூக உறவு நெருக்கமாக இருக்கும். நகர்ப்புறங்களில் வாழ்க்கை முறை சிக்கலாகவும், துரிதமாகவும் இருப்பதால் சமூக உறவுகள் சம்பிரதாயமாக (Formal) இருக்கும். 

Tags : Human Settlements | Geography மனிதக் குடியிருப்புகள் - புவியியல்.
12th Geography : Chapter 2 : Human Settlements : Site and Situation Human Settlements | Geography in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது புவியியல் : அலகு 2 : மனிதக் குடியிருப்புகள் : தலம் மற்றும் சூழலமைவு - மனிதக் குடியிருப்புகள் - புவியியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது புவியியல் : அலகு 2 : மனிதக் குடியிருப்புகள்