Home | 11 ஆம் வகுப்பு | 11வது வரலாறு | பக்தி இயக்கம் வடஇந்தியாவில் பரவுதல்

இந்தியாவில் பக்தி இயக்கம் - பக்தி இயக்கம் வடஇந்தியாவில் பரவுதல் | 11th History : Chapter 13 : Cultural Syncretism: Bhakti Movement in India

   Posted On :  18.05.2022 05:47 am

11 வது வகுப்பு வரலாறு : அலகு 13 : பண்பாட்டு ஒருமைப்பாடு : இந்தியாவில் பக்தி இயக்கம்

பக்தி இயக்கம் வடஇந்தியாவில் பரவுதல்

தென்னிந்தியாவில் பக்தி இயக்கம் அதன் புகழின் உச்சத்தை எட்டியபோது பக்திக் கோட்பாடானது வைணவப் புலவர்களாலும் அடியார்களாலும் தத்துவத் தளத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு விளக்கப்பட்டது.

பக்தி இயக்கம்

 

வடஇந்தியாவில் பரவுதல்

தென்னிந்தியாவில் பக்தி இயக்கம் அதன் புகழின் உச்சத்தை எட்டியபோது பக்திக் கோட்பாடானது வைணவப் புலவர்களாலும் அடியார்களாலும் தத்துவத் தளத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு விளக்கப்பட்டது. இராமானுஜர் விசிஷ்டாத்வைதம் என்னும் தத்துவத்தை உருவாக்கினார். அவருடைய போதனைகள் பரமாத்மாவும் ஜீவாத்மாவும் இரண்டல்ல ஒன்றே என்ற ஆதி சங்கரரின் கருத்தை மறுத்தன.

தமிழகத்தில் பக்தி இயக்கம் ஏழாம் நூற்றாண்டிலேயே செழித்தோங்கி இருந்த நிலையில் வடஇந்தியாவில் பதினைந்தாம் நூற்றாண்டில்தான் அது முழு வேகத்தைப் பெற்றது. இக்காலத்தில் பெரும் எண்ணிக்கையில் பக்திப் பாடல்கள் எழுதப்பட்டன. சாதியை அடிப்படையாகக் கொண்ட பிரிவினைகள், ஒதுக்கி வைத்தல், பல கடவுள்களை வணங்கும்முறை, உருவ வழிபாடு போன்றவற்றால் ஏற்பட்டிருந்த சமூகப் பின்னடைவுகளுக்கு எதிராக வட இந்தியாவில் பக்தி இயக்கம் குரல் கொடுத்தது. மதச் சான்றோர்கள் மூடநம்பிக்கைகளையும் தேவையற்ற சடங்குகளையும் விமர்சித்தனர். வைணவ பக்தி இயக்கத் தோடு இணைந்து ஒரு கடவுள் கோட்பாட்டை முன்வைத்தவர்கள் அன்றைய அளவில் முக்கிய மதங்களாகத் திகழ்ந்த வைதீகம், இஸ்லாம் ஆகியவற்றிலிருந்து விலகி சுதந்திரப் பாதையைப் பின்பற்றினர். இவ்விரு மதங்களிலிருந்த மூடநம்பிக்கைகளையும் பழமைவாதத்தையும் விமர்சித்தனர்.

துருக்கியப் படையெடுப்போடு கூடிய இஸ்லாமின் வருகை வேத மதங்களுக்கும் குருமார்களுக்கும் பெரும் சவாலாகத் திகழ்ந்தது. பதினான்காம் நூற்றாண்டின் இறுதியில் இஸ்லாம் இந்தியாவின் பல பகுதிகளில் பரவியது. அதிகமான இந்தியர்கள் முஸ்லீம்களாயினர். இஸ்லாம் அரசு அதிகாரத்தோடு சமத்துவத்தை முன்வைத்தது இந்தியச் சமூகத்தில் கீழ்நிலையில் இருந்தோரைக் கவர்ந்தது.

புதிய அரசியல் சமூகச் சூழல் பிரதான மதங்களின் சட்டதிட்டங்களை ஏற்றுக் கொள்ளாதவர்களை ஓர் இயக்கமாக்கியது. இவ்வியக்கம் சாதி முறைக்கு எதிரானதாகவும், வேதங்களுக்கும் புராணங்களுக்கும் எதிரானதாகவும் உருவானது. பண்பாட்டுத் தளத்திலும் இவ்வியக்கம் பிராந்திய மொழிகளின் வளர்ச்சி இந்துஸ்தானி இசையின் வளர்ச்சி போன்ற தாக்கங்களை ஏற்படுத்தியது.

முஸ்லீம்களின் அரசியல் அதிகாரத்திற்கு எதிரான இந்துக்களின் எதிர்வினை பன்முகத் தன்மை கொண்டதாய் இருந்தது. ஒருபுறம் புதிய மதத்திற்கு எதிராக வெறுப்பினைக் கொண்டிருந்தபோதும், புதிய சவால்களை எதிர்கொள்ளும் அளவுக்கு வலிமையை பெருக்க வேண்டுமெனின் இந்து மதத்திற்குள் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற உணர்வும் தோன்றியது. இதன் முக்கிய விளைவாக கபீர், குருநானக் மற்றும் ரவிதாஸ் ஆகியோரின் இயக்கங்கள் சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தின.

Tags : Bhakti Movement in India இந்தியாவில் பக்தி இயக்கம்.
11th History : Chapter 13 : Cultural Syncretism: Bhakti Movement in India : Spread of Bhakti Movement to the North Bhakti Movement in India in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வகுப்பு வரலாறு : அலகு 13 : பண்பாட்டு ஒருமைப்பாடு : இந்தியாவில் பக்தி இயக்கம் : பக்தி இயக்கம் வடஇந்தியாவில் பரவுதல் - இந்தியாவில் பக்தி இயக்கம் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வகுப்பு வரலாறு : அலகு 13 : பண்பாட்டு ஒருமைப்பாடு : இந்தியாவில் பக்தி இயக்கம்