Home | 7 ஆம் வகுப்பு | 7வது தமிழ் | துணைப்பாடம்: ஆழ்கடலின் அடியில்

பருவம் 2 இயல் 1 | 7 ஆம் வகுப்பு தமிழ் - துணைப்பாடம்: ஆழ்கடலின் அடியில் | 7th Tamil : Term 2 Chapter 1 : Ariviyal aakam

   Posted On :  11.07.2022 07:45 pm

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 1 : அறிவியல் ஆக்கம்

துணைப்பாடம்: ஆழ்கடலின் அடியில்

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 1 : அறிவியல் ஆக்கம் : துணைப்பாடம்: ஆழ்கடலின் அடியில் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் ஒன்று 

விரிவானம் 

ஆழ்கடலின் அடியில்




நுழையும்முன்

கடல் பல்வேறு விந்தைகளைத் தன்னுள் கொண்டது. கடலுக்கடியில் பலவகையான தாவரங்கள், மீன்கள், விலங்குகள், பவளப்பாறைகள், எரிமலைகள் எனப் புதுமைகள் பலவும் நிறைந்து கிடக்கின்றன. மேலும் கடலுக்கடியில் பல நகரங்களும் கப்பல்களும் மூழ்கிக்கிடக்கின்றன. ஒரு கற்பனையான நீர்மூழ்கிக் கப்பலில் சென்று அவற்றை எல்லாம் காண்போம்.

என் பெயர் பியரி. நான் ஒரு விலங்கியல் பேராசிரியர். கடலின் அடியில் உள்ள விலங்குகளைப்பற்றி ஆராய்வதில் எனக்கு விருப்பம் மிகுதி. 1886 ஆம் ஆண்டு கப்பல் மாலுமிகளிடையே ஓர் அதிர்ச்சியான தகவல் பரவியது. கடலில் செல்லும் பெரிய கப்பல்களை உலோகத்தால் ஆன உடலைக் கொண்ட ஒரு விந்தையான விலங்கு தாக்குகிறது என்பதுதான் அந்தச் செய்தி.


அந்த விந்தை விலங்கைக் கண்டுபிடித்து அழிப்பதற்காக அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து ஒரு போர்க்கப்பல் புறப்பட்டது. கடல் பயணத்தில் திறமை வாய்ந்த ஃபராகட் என்பவர் அக்கப்பலின் தலைவராக இருந்தார். ஈட்டி எறிந்து திமிங்கிலங்களை வேட்டையாடுவதில் வல்லவரான நெட் என்ற வீரரும் அக்கப்பலில் இருந்தார். நானும் எனது உதவியாளர் கான்சீலும் அக்கப்பலில் சென்றோம்.

மூன்று மாதங்கள் அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் இடையே உள்ள பெருங்கடல் பரப்பில் ஓர் இடம் விடாமல் தேடினோம். அந்த விலங்கு எங்கள் கண்ணில் படவே இல்லை. எனவே, கப்பல் எங்கள் நகரத்தை நோக்கிப் பயணத்தைத் தொடங்கியது.

அப்பொழுது பளபளப்பான உடலைக் கொண்ட அந்த விலங்கு மிக வேகமாக எங்கள் கப்பலை நோக்கி வந்தது. "அந்த விலங்கைச் சுட்டுத் தள்ளுங்கள்” என்று கப்பல் தலைவர் ஃபராகட் கட்டளையிட்டார். வீரர்கள் சுடத் தொடங்கினர். பீரங்கிக் குண்டுகள் அனைத்தும் அந்த விலங்கின் உடலைத் துளைக்க முடியாமல் தெறித்து விழுந்தன. நெட் வலிமை வாய்ந்த ஈட்டிகளை எய்தார். அவற்றாலும் அவ்விலங்கை எதுவும் செய்யமுடியவில்லை.

அந்த விலங்கு நீரைப் பீய்ச்சியடித்தபடி எங்கள் கப்பலின் மீது வேகமாக மோதியது. நாங்கள் கப்பலிலிருந்து கடலில் தூக்கி வீசப்பட்டோம். நான் அப்படியே மயக்கமடைந்து போனேன்.

நான் கண்விழித்தபோது உலோகத்தினாலான அந்தக் கொடிய விலங்கின் மீது படுத்திருந்தேன். எனக்கு முன்னால் எனது உதவியாளர் கான்சீலும் நெட்டும் அமர்ந்திருந்தனர். "நாம் தேடிவந்த விலங்கு இதுதான். உண்மையில் இஃது ஒரு நீர்மூழ்கிக் கப்பல்" என்றார் நெட்.

நாங்கள் அந்த நீர்மூழ்கிக் கப்பலின் மீது வேகமாகத் தட்டி உள்ளே இருப்பவர்களை உதவிக்கு அழைத்தோம். நீண்ட நேரத்திற்குப் பிறகு மேல்பக்கத்தில் இருந்த மூடி திறக்கப்பட்டது. உள்ளே இருந்து வந்தவர்கள் எங்கள் மூவரையும் சிறைப்பிடித்து ஓர் அறைக்குள் வைத்துப் பூட்டினர்.

மறுநாள் காலை கப்பல் தலைவர் எங்கள் அறைக்குள் வந்தார். தமது பெயர் நெமோ என்று அவர் தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டார். "நாட்டிலஸ் என்னும் இந்த நீர்மூழ்கிக் கப்பலை ஒரு விந்தையான விலங்கு என்று நான் எல்லோரையும் நம்பவைத்திருக்கிறேன். இந்த உண்மையைத் தெரிந்து கொண்ட நீங்கள் எக்காலத்திலும் இங்கிருந்து விடுதலையாக முடியாது. எனக்கான ஒரு தனி உலகத்தை இந்த நீர்மூழ்கிக் கப்பலிலேயே நான் உருவாக்கி வைத்துள்ளேன். எனது நம்பிக்கைக்குரிய வேலையாள்கள் இங்கே இருக்கிறார்கள். எங்களுக்குத் தேவையான அனைத்து உணவுகளையும் கடல்வாழ் உயிரிகளிடமிருந்தே உருவாக்கிக் கொள்கிறோம். இனி நான் கரைக்குத் திரும்பவேமாட்டேன். உங்களையும் திரும்ப விடமாட்டேன்" என்றார் நெமோ.

நாங்கள் அதிர்ச்சியில் உறைந்து போனோம். அவரது மனத்தை மாற்ற முடியாது என்பது எங்களுக்குப் புரிந்துபோயிற்று. எப்படியாவது இந்தக் கப்பலில் இருந்து தப்பி விட வேண்டும் என்று நாங்கள் மனத்துக்குள் திட்டமிட்டுக்கொண்டோம்.

ஆழ்கடலுக்கு அடியில் நீர்மூழ்கிக் கப்பலில் எங்களது பயணம் தொடர்ந்தது.

அந்த நீர்மூழ்கிக் கப்பலினுள் எல்லா இடங்களுக்கும் செல்ல எனக்கு நெமோ இசைவு அளித்திருந்தார். கப்பலில் மிகச்சிறந்த நூலகம் ஒன்றும் மிகப்பெரிய அருங்காட்சியகம் ஒன்றும் இருந்தன. இந்த அரிய அறிவுக்கருவூலங்கள் யாருக்கும் பயன்படாமல் ஆழ்கடலில் மூழ்கி கிடக்கின்றவே என்று நான் வருந்தினேன். இந்தக் கப்பல் எந்தக் கடலில் எந்தப் பகுதியில் இருக்கிறது, கடலுக்கு அடியில் எவ்வளவு ஆழத்தில் இருக்கிறது ஆகியவற்றைத் துல்லியமாக காட்டும் பெரிய திரை ஒன்றும் அங்கே இருந்தது.

"இந்தக் கப்பல் செல்வதற்கான ஆற்றல் எதிலிருந்து கிடைக்கிறது?" என்று நான் நெமோவிடம் கேட்டேன்.

"இந்தக் கப்பல் செல்வதற்கும் இங்குள்ள விளக்குகள் எரிவதற்கும் தேவையான மின்சாரத்தைத் தயாரிக்கும் கருவிகள் இங்கேயே உள்ளன" என்றார் அவர்.

"கப்பலை ஆழத்துக்கும் கடல் மேல் மட்டத்துக்கும் எப்படிக் கொண்டு செல்கிறீர்கள்?" என்று கேட்டேன்.

"இந்தக் கப்பலில் மிகப்பெரிய நீர்த்தொட்டிகள் உள்ளன. அவற்றில் தண்ணீரை நிரப்பும்போது கப்பல் கடலுக்கு அடியில் செல்லும். அந்தத் தண்ணீரை எந்திரங்கள் மூலம் வெளியேற்றும் பொழுது கப்பலின் எடை குறைவதால் கப்பல் கடல் மட்டத்திற்குச் செல்லும்" என்று விளக்கினார் நெமோ

"எல்லாம் சரி, நாம் அனைவரும் மூச்சு விடுவதற்கான காற்று எப்படிக் கிடைக்கிறது?"

"சில நாட்களுக்கு ஒருமுறை கப்பல் கடல் மட்டத்திற்கு மேலே வரும்பொழுது அதன் மேல்மூடியைத் திறந்து காற்றைப் புதுப்பித்துக் கொள்வோம். அதுமட்டுமல்லாமல் இங்குக் காற்றைச் சேகரித்து வைத்துக்கொள்ளும் பைகள் இருக்கின்றன. அவற்றை முதுகில் கட்டிக்கொண்டு அதன் முகமூடியை முகத்தில் வைத்துக் கொண்டால் ஒன்பது மணி நேரம் வரை கடலுக்குள் நீந்த முடியும்" என்றார் அவர்.

இப்படியாக எங்களது பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. அந்த நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து தப்பிவிட வேண்டும் என்ற எங்களது முயற்சி பலமுறை தோல்வியிலேயே முடிந்தது.

ஒருநாள் திடீரென்று கப்பல் கடல் மட்டத்தில் நின்றுவிட்டது. "என்ன ஆயிற்று?" என்று நான் நெமோவிடம் கேட்டேன். "கடலுக்குள் இருக்கும் கடல்புற்று எனப்படும் மணல் திட்டில் கப்பல் சிக்கிக் கொண்டுவிட்டது. இன்னும் ஒரு வாரத்தில் முழுநிலவு நாளன்று கடலின் நீர்மட்டம் உயரும். அப்போது நமது நீர்மூழ்கிக் கப்பல் தானாகவே நீர்மட்டத்தில் மிதக்கத் தொடங்கும். அதுவரை பொறுத்திருக்க வேண்டும்" என்றார் நெமோ.

நாட்டிலஸின் மேல்தளத்தில் நின்று பார்த்தபொழுது சற்றுத் தொலைவில் ஒரு தீவு தெரிந்தது. நெமோவிடம் இசைவு பெற்று நானும் நெட்டும் கான்சீலும் ஒரு படகை எடுத்துக்கொண்டு அந்தத் தீவிற்குச் சென்றோம். அங்கிருந்து ஏராளமான காய்கறிகளைச் சேகரித்துக் கொண்டு படகில் ஏறினோம். திடீரென்று அந்தத்தீவைச் சேர்ந்த, மனிதர்களைக் கொன்று தின்னும் வழக்கமுடையவர்கள் எங்களைத் துரத்திக்கொண்டு வந்தார்கள். நாங்கள் மிகுந்த அச்சத்தோடு விரைவாகப் படகைச் செலுத்திக்கொண்டு கப்பலுக்கு வந்து சேர்ந்தோம்.


ஏராளமான படகுகளில் அந்த மனிதர்கள் எங்கள் நாட்டிலஸைச் சூழ்ந்தார்கள். நாங்கள் மேல்மூடியை இறுக மூடிக்கொண்டு உள்ளே இருந்தோம். இந்த முற்றுகை ஆறு நாள்கள் தொடர்ந்தது. ஏழாம் நாள் முழுநிலவு நாளன்று கடல்மட்டம் உயர்ந்தது. "இப்பொழுது நாம் மூடியைத் திறந்து காற்றைப் புதுப்பித்துக்கொண்டு நமது பயணத்தைத் தொடங்கலாம்" என்றார் நெமோ.

மேல் மூடியைத் திறந்தால் அந்த மனிதர்கள் உள்ளே வந்து விடுவார்களே என்று நான் அஞ்சினேன். நெமோ சிரித்தபடியே மேல் மூடியைத் திறந்தார். உள்ளே இறங்குவதற்கு ஏணியில் கால் வைத்தவர்கள் அலறிக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். அந்த ஏணியில் மின்சாரம் பாய்ச்சி இருந்தார் நெமோ. அதன்பிறகு நாங்கள் காற்றைப் புதுப்பித்துக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தோம்.

பல நாட்கள் பயணத்திற்குப் பிறகு இந்தியாவுக்கும் இலங்கைக்கும் அருகில் நாட்டிலஸ் சென்று கொண்டிருந்தது. "இது முத்துக்குளிக்கும் தொழில் சிறப்பாக நடைபெறும் இடம் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த ஆண்டுக்கான முத்துக்குளிக்கும் பருவம் இன்னும் தொடங்கவில்லை. என்றாலும் நாம் காற்றுப்பைகளைக் கட்டிக்கொண்டு சென்று கொஞ்சம் முத்துச்சிப்பிகள் சேகரித்து வருவோமா?" என்று கேட்டார் நெமோ.

நானும் நெமோவும் கடலுக்கடியில் சென்றோம். அங்கே தன்னந்தனியாக ஓர் இந்தியர் முத்துக்குளிப்பதற்காகக் கடலுக்குள் இறங்கினார். அவர் காற்றுப்பைகள் இல்லாமல் மூச்சை அடக்கிக்கொண்டு முத்துச்சிப்பிகளைச் சேகரிக்கத் தொடங்கினார். அப்போது அந்த மனிதரை நோக்கி ஒரு சுறாமீன் வேகமாகப் பாய்ந்து வந்தது. நெமோ தம் கையிலிருந்த நீளமான வாளினால் அந்தச் சுறாமீனைக் குத்திக்கிழித்து அந்த மனிதரைக் காப்பாற்றினார். ஓர் இந்தியரைக் காப்பாற்றிய மனநிறைவோடு நாங்கள் மீண்டும் நாட்டிலஸ்க்குத் திரும்பினோம். மீண்டும் எங்கள் பயணம் தொடர்ந்தது.

வழியில் நாங்கள் பலவகையான விந்தைகளைக் கண்டோம். இங்கிலாந்துக்கும் ஸ்பெயினுக்கும் இடையே நடைபெற்ற போரின்போது கடலில் மூழ்கடிக்கப்பட்ட கப்பல்களைப் பார்த்தோம். அந்தக் கப்பல்களின் சிதைவுகளில் இருந்து தங்கம், வெள்ளி, வைரம் போன்றவற்றை அள்ளிக்கொண்டோம்.

இன்னோர் இடத்தில் கடலுக்குள் தீப்பிழம்பைக் கக்கிக்கொண்டிருக்கும் எரிமலையைக் கண்டு வியந்தோம். அதன் அடியில் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரே நாளில் பூகம்பத்தால் கடலுக்குள் மூழ்கிப்போன 'அட்லாண்டிஸ்' என்னும் நகரத்தின் இடிபாடுகளைக் கண்டோம். பிறகு பூமியின் தென்துருவத்திற்குச் சென்றோம். அங்கே பென்குவின், கடல்சிங்கம் போன்ற அரிய பறவைகளையும் விலங்குகளையும் கண்டோம். அங்கிருந்து திரும்பும் வழியில் மிகப்பெரிய ஆக்டோபஸ் ஒன்றுடன் போரிட்டு அதனைக் கொன்றோம்.

இப்படியே எங்கள் பயணம் தொடர்ந்தது. நாள்கள் கடந்தன. மீண்டும் நிலப்பரப்பை அடைய முடியும் என்ற நம்பிக்கையை நாங்கள் இழந்துவிட்டோம்.

ஒருநாள் தொலைவில் கரை ஒன்று தெரிந்தது. இன்று எப்படியாவது தப்பிவிட வேண்டும் என்று நாங்கள் மூவரும் எண்ணினோம். அதன்படி கப்பலுடன் இணைந்திருந்த சிறிய படகு ஒன்றில் ஏறினோம். அப்போது நாட்டிலஸ் ஒரு பெரும் கடல்சுழலுக்குள் சிக்கிக்கொண்டது. கப்பலுடன் இணைந்திருந்த எங்கள் படகும் சுழலில் சிக்கிக் கொண்டது. அதன் மேல் தளத்தில் நின்றுகொண்டிருந்த நாங்கள் மூவரும் கடலுக்குள் தூக்கி வீசப்பட்டோம்.

நாங்கள் கண்விழித்தபோது நார்வே நாட்டின் கடற்கரையில் மீனவர் ஒருவரின் குடிசையில் இருந்தோம். அதன்பிறகு நாட்டிலஸ்க்கு என்ன நேர்ந்தது என்பது பற்றியோ, நெமோ என்ன ஆனார் என்பது பற்றியோ யாருக்கும் எந்தச் செய்தியும் கிடைக்கவில்லை.


நூல் வெளி 


அறிவியல் புனைகதைகளின் தலைமகன் என்று புகழப்படுபவர் ஜூல்ஸ் வெர்ன். இவர் பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர். அறிவியல் கண்டுபிடிப்புகள் பல கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே அவற்றைப் பற்றித் தமது புதினங்களில் எழுதியவர். எண்பது நாளில் உலகத்தைச் சுற்றி, பூமியின் மையத்தை நோக்கி ஒரு பயணம் உள்ளிட்ட பல புதினங்களைப் படைத்துள்ளார். அவர் எழுதிய ஆழ்கடலின் அடியில் என்னும் புதினம் குறிப்பிடத்தக்க ஒன்று. அதன் மொழிபெயர்ப்பின் சுருக்கம் நமக்குப் பாடமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.


Tags : Term 2 Chapter 1 | 7th Tamil பருவம் 2 இயல் 1 | 7 ஆம் வகுப்பு தமிழ்.
7th Tamil : Term 2 Chapter 1 : Ariviyal aakam : Supplementary: Allkadalin Adiyil Term 2 Chapter 1 | 7th Tamil in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 1 : அறிவியல் ஆக்கம் : துணைப்பாடம்: ஆழ்கடலின் அடியில் - பருவம் 2 இயல் 1 | 7 ஆம் வகுப்பு தமிழ் : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 1 : அறிவியல் ஆக்கம்