Home | 12 ஆம் வகுப்பு | 12வது தமிழ் | துணைப்பாடம்: கோடை மழை

சாந்தா தத் | இயல் 8 | 12 ஆம் வகுப்பு தமிழ் - துணைப்பாடம்: கோடை மழை | 12th Tamil : Chapter 8 : Ella uyirum thollum

   Posted On :  03.08.2022 04:16 am

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : எல்லா உயிரும் தொழும்

துணைப்பாடம்: கோடை மழை

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : எல்லா உயிரும் தொழும் : துணைப்பாடம்: கோடை மழை - சாந்தா தத் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

விரிவானம்

ஆளுமை – அ

கோடை மழை

சாந்தா தத்



நுழையும்முன்

குழந்தைகள் பெற்றோரால் கொண்டாடப்படுகிறார்கள். பெற்றோர் என்ற சொல்லே பேறுபெற்றோர்' என்ற பொருள் கொண்டதுதான் எனலாம். தாய் தந்தை இல்லாத ஏதிலிக் குழந்தைகளின் நிலை மிகக் கொடியதாகும். அக்குழந்தைகளை ஏற்று வளர்க்கும் மனிதப் பண்பு வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. பிள்ளைகள் இல்லாத முதியோர்களும் இத்தகைய ஏதிலி நிலையில் தவிப்பவர்கள்தான். அவர்களையும் ஏற்று அரவணைப்பவர்கள் மனிதத்தை மேம்படுத்துபவர்களே.


விழிகளை அகல விரித்து எவ்வித இலக்குமின்றி இப்படியும் அப்படியுமாய்ப் பார்வையைச் சுழற்றிக் கொண்டிருந்த குழந்தை மீண்டும் சிணுங்க ஆரம்பித்தது. இப்படித்தான் விட்டு விட்டு அழுது கொண்டிருக்கிறது அரைமணிக்கும் மேலாய். பசியா..... காய்ச்சல் அசதியா...... தெரியவில்லை . அவஸ்தைப்படும் குழந்தையை நினைத்து அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தார் ஆறுமுகம்.

குழந்தைக்கு ரெண்டு விழுங்கு டீத்தண்ணி புகட்டித் தானும் குடித்தால் வறண்ட தொண்டைக்கு இதமாக இருக்கும். டீ விற்கும் பையனை உள்ளே விடமாட்டார்கள். வெளியே சென்று குடித்து விட்டு வரவும் துணிவில்லாமலிருந்தது. இடம் பறிபோய்விடும் எனும் பயம். போட்டுச் செல்லும் மேல் துண்டைத் தள்ளிவிட்டு அடாவடித்தனமாய் ஆக்கிரமித்துக் கொள்ளும் பொறுமை பறிபோயிருந்த ஜனம். விடிந்தும் விடியாதது மாய் பரபரத்து ஓடி வந்தும் பயனில்லை. கூட்டம் சேருவதற்கு முன் வந்து விட வேண்டு மெனும் தவிப்பு அடுத்தவர்களுக்கும் இருக்காதா என்ன என்று எண்ணியபடி குழந்தையைத் தோளில் சாய்த்துச் சமாதானப்படுத்த முயன்றார்.

வரிசையின் அசைவு ஆமை வேகத்தில். அலுப்பு கூடியது. போய்விடலாமா என்ற எரிச்சல் கூட. கை மருந்துக்குக் கட்டுப்படாத இரண்டு நாள் காய்ச்சல். தனியார் மருத்துவமனை செல்ல வக்கில்லாதபோது ... கை மட்டுமன்றி மனுச ஆதரவும் வறண்டு போய்விட்டபோது... இல்லாதவற்றுக்கெல்லாம் ஈடுகட்டுவது போல் பொறுமையையாவது நிறைய வரவுவைக்க வேண்டியதுதான். காசா பணமா...

மூன்று மணி நேரத்திற்கும் மேலாய் குழந்தையை ஏந்தியிருந்ததால் கையில் கடுப்பு தெரிய ஆரம்பித்தது. சீட்டு வாங்கிக்கொண்டு உட்கார்ந்ததுதான். இடுப்பும் வலி தெரிவித்தது. கிழ உடம்பு. எவ்வளவுதான் தாங்கும். மனசா என்ன அதட்டி மிரட்டி மூலையில் முடக்க...

நத்தை அசைவும் நின்று போய் ஆணி அடித்தாற்போல் முடங்கிவிட்டது நோயாளிகள் வரிசை.

பினாயில் டெட்டால் டிங்ச்சர் வகையறாக்களின் வாசம் காலி வயிற்றைப் புரட்டியடித்தது. கைவலி வேறு. கொஞ்ச நேரம் குழந்தையை யாராவது வாங்கிவைத்துக் கொண்டால் ஆசுவாசமாக இருக்கும். சீக்காளிக் குழந்தையை எவன் சீந்துவான்? மூடிய கதவு . முன்வரிசையின் துவக்க முனையைப் பரிதவிப்புடன் எட்டிப்பார்த்தார்.

திடீரென அழுகைக் குரல் கேட்க... என்ன ஏது என்று அனைவரும் கவனமாய்ச் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்தபோதே ஒற்றைக் குரல் அழுகை பல்குரல் ஓலமாகியது. சற்றே தொலைவில் கும்பல். வரிசையிலிருந்தவர் பலரும் இட பயத்தை அடியோடு மறந்து போய் அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடி.... ஓடிய வேகத்தில் திரும்பி வந்து இருக்கை பறிபோகாதிருந்த ஆசுவாசத்துடன் பழையபடி உட்காந்து கொண்டனர். 

ரெண்டு நாளா இழுத்துட்டிருந்ததாம். 

போய்ச் சேரட்டும் எனும்படியாகவா இருக்கிறது தன் நிலை? இதோ ஒண்ணு இருக்கே, தன்னையே நம்பி .... தானே சகலமுமாய். இது எப்போது வளர்ந்து தன்னைத் தானே கவனித்துக் கொள்ளுமளவு ஆளாகி... அதுவரை இந்த உயிர் நிற்குமா...? கலவரம் மேலிடக் குழந்தையை நெஞ்சோடு சேர்த்து அழுத்தியதில் சற்றே அடங்கியிருந்த அது மீண்டும் ஈனஸ்வரத்தில் முனகத் தொடங்கியது.

மரத்தடி அழுகை இப்போது இன்னும் வலுத்திருந்தது. சே....... ஆஸ்பத்திரி என்றாலே அழுகையும் ஓலமும் என்றாகிவிட்டது. இப்படித்தான் .... இதே ஆஸ்பத்திரியில், விருட்சமாய் வாழ வேண்டியவன் அல்பாயுசுல கட்டியாகிக் கிடந்து...... முழுசாய் ஆறு மாசம் கூட ஆகவில்லை .

“பாவம் முப்பது வயசு கூட இருக்காது. இன்னும் எவ்வளவு இருக்கு. அதுக்குள்ள பாழாய்ப் போன எமனுக்கு அவசரம் பார்"..... 

"நீ வேற..... இது தானா தேடிட்ட சாவாம்"... 

'அடப்பாவமே ஆண்டவன் கொடுத்த உசுரு. இவனுக்கு என்ன அதிகாரம் இருக்கு? இவனுங்களை எல்லாம் பிழைக்க வைத்துக் கழுவில் ஏற்றிச் சாகடிக்கணும். சரியான கோழைப் பசங்க. போறவன் பொக்குனு போயிடறான். இருக்கிறவன் ஆயுசுக்கும் இல்ல அல்லாடணும்.... அல்லாடிக் கொண்டுதான் இருக்கிறார் ஆறுமுகம். ஆறுமாத அல்லாட்டம். பச்சை மண்ணுடனான அவதி. உனக்கு நான், எனக்கு நீ என்றாகிவிட்ட நாதியற்ற அவஸ்தை. தகப்பனையும் பிள்ளையையும் பாதுகாக்கவேண்டிய இடை வாரிசு , இருவரையும் நட்டாத்துல விட்டுத் தன் வழியே சென்றுவிட்டான். வியாதி இல்லை... வெக்கை இல்லை. விஷத்தை விழுங்கி அரைநாள் மட்டுமே அவஸ்த்தைப் பட்டுப் போய்ச் சேர்ந்துவிட்டான். நாலு நாள் காய்ச்சலில் கட்டியவள் கண் மூடிய பின் வாழப் பிடிக்கவில்லையாம். பெத்தவங்க இல்லாத குழந்தையாகிவிட்டதே என்னும் ஓயாத புலம்பல் தவிர, பிள்ளையைப் பிரிந்த துயரம் துளியும் இல்லை . அவரிடம் அந்த அளவுக்கு நெஞ்செங்கும் வெறுப்பு மண்டியிருந்தது. நெஞ்சுக் கூட்டில் நெருப்பு வைக்க வேண்டியவன், இப்படித் தவிக்கவிட்டுப் போய்விட்டானே என்னும் ஆறாக்கோபம் பாசத்தைப் பாசிபோல் மூடிவிட்டிருந்தது. 'அதோ இதோ என நுனி மூச்சைப் பிடித்து வைத்திருக்கும் அப்பனை நினைக்காவிடினும் - பிஞ்சுப் பிள்ளை கூட மனதில் வராமல் அப்படி என்ன அதிசய அன்பு பொண்டாட்டி மீது? வானம் பொய்ப்பது தொடர்கதையாகி விட , ஊர் உறவு உடைமைகளைத் துறந்து பஞ்சம் பிழைக்க பட்டணம் வந்து பிழைப்புக்கு ஏதோ ஒரு வழி தேடிக்கொண்டு திடமாய் .... வைராக்கியமாய் தான் வாழவில்லையா இத்தனை காலமாய் ....! வந்த இடத்தில், நாற்பதாண்டுக்கும் மேலாய் நிழலாய் இருந்தவள் பூமியில் தன் கணக்கை முடித்துக் கொண்டபின் அவர் சிதையில் விழவில்லை. மகனுக்காக வாழ்ந்தார். ஒற்றை ஆளாய் - வளர்த்து ஆளாக்கி -- ஒரு கடினமான வேலையில் அமர்த்தி... குடும்பஸ்தனாக்கி...'

அட ..... நகரு பெருசு... வைகுண்ட வாசல் திறக்கிறாப்பல ஒரு வழியாகக் கதவு திறந்துட்டது. நீ என்னடான்னா எந்தக் கோட்டையைப் பிடிக்கலாம்கறாப்புல.....உம்..... நட நட......

முக்கி முனகிக் குழந்தை தூங்கிவிட்டிருந்தது. அவ்வளவு நேரம் காத்திருக்கும் தள்ளாமையும் மன உளைச்சலுமாய் அவருக்கு உடம்பு வேர்த்துச் சில்லிட்டு இருந்தது.

உள்ளிருந்து வெளியே வந்தாள் ஒரு பெண். தாயின் தோளில் கோழிக்குஞ்சாய் ஒரு பிஞ்சு ஒடுங்கி இருக்க அவள் கை அதைச் சுற்றிப் படர்ந்து இருந்தது பார்க்கவும் நினைக்கவும் மிகவும் பாந்தமாக இருந்தது. நெடுமூச்சு தவிர வேறு ஏதும் இல்லாத குழந்தை மீதான தன் கையை அழுத்தி இருத்திக் கொண்டார். இந்த அரவணைப்பு இதற்கு இன்னும் எத்தனை நாட்களுக்கு......? தனக்குப் பிறகு...?


பிள்ளையைப் பரிசோதித்த டாக்டர் நெஞ்சில் சளி கட்டி இருப்பதால் காய்ச்சல்..... பயப்படத் தேவையில்லை, பக்குவமாய்ப் பார்த்துக்கொண்டால் இரு தினங்களில் தணிந்து விடும் என மருந்து எழுதிக் கொடுத்தார்.

"உங்க கை இப்படி நடுங்குது பெரியவரே..... வீட்ல வேற யாரும் இல்லையா?" ஊசி போட்ட வலியால் வீறிட்ட குழந்தையை லாவகமாய் அணைத்துச் சமாதானப்படுத்தி அவ்வாறு கேட்ட வெள்ளையுடை தேவதைக்கு நன்றிச் சிரிப்பை மட்டுமே பதிலாக விட்டு வெளியே வந்தார். தவித்த தொண்டையைத் தேநீரால் ஆசுவாசப்படுத்திக்கொண்டு வழக்கமாய் வாங்கும் மருந்துக் கடை நோக்கிப் பயணப்பட்டார்.

"வாங்கய்யா உட்காருங்க. புள்ளைக்கு உடம்பு சரியில்லையா? இப்படிக் கொடுங்க...." கைச்சுமை மட்டும் இடம் மாறியது.

"மூணு நாளா சிரமப்படுது பாவம். டாக்டர் ஊசி போட்டு மருந்து எழுதிக் குடுத்திருக்கார். சரியாயிடும். இப்போ உன்கிட்ட மருந்து வாங்க மட்டும் வரல பாபு"..... சீட்டை நீட்டியபடி அமைதியாய்ச் சொன்னவரை யோசனையுடன் பார்த்தான் பாபு.

"ரொம்ப நாளாவே சொல்லிக்கிட்டு இருக்கே. இப்ப எனக்கும் சரியாய்த்தான் படறது. இதுக்காக இன்னும் நிறைய நாள் உசிரோட இருக்கணும்னு எனக்கும் ஆசைதான். நெஞ்சில் உரம் இருந்தாலும் உடம்பு கேட்கணுமே? சாவோடா மல்லுக்கு நிக்கிற வயசா? அப்ப இதனோட கதி? சரி..... நாளைக்கு அவங்களைக் கூட்டிட்டு வந்துடறயா பாபு." 

"ஐயா.... "

ஆமாம்பா நெசமாத்தான் சொல்றேன். அம்மா என்கிற பாசமே தெரியாமல் இருக்க இது மட்டும் என்ன பாவம் செய்தது? பெண்ணோட பரிவும் பாசமும் ஒரு குழந்தைக்கு எவ்வளவு முக்கியம்னு இப்பதான் நல்லாப் புரிஞ்சது பாபு. இதைப் பிரிஞ்சிருக்க முடியாதே என்கிற என்னோட சுயநலத்துக்காக இதை அனாதையா விட்டுட்டுப் போறது எவ்வளவு பெரிய பாதகம்.....? அதான். அதுவும் இல்லாம அவங்க உனக்கு நல்லாத் தெரிஞ்சவங்க அதனால பத்திரமான இடத்துக்குத்தான் போய்ச் சேருறது புள்ளைன்னு நிம்மதி. அவங்கள உடனே வரச் சொல்லிடு. ஆகவேண்டியதைப் பார்க்கலாம்."

வினாடி தாமதித்தாலும் மனம் மாறிவிடுமோ என்பது போல் மருந்தும் குழந்தையுமாக விடுவிடுவென நடந்தார்.

இரவெல்லாம் உறக்கமின்றிப் புரண்டு..... எல்லாம் இதோட நல்லதுக்குதானே எனத் திரும்பத் திரும்ப நினைத்துச் சமாதானப்படுத்திக் கொண்டார்.

பாபுவுடன் வந்த அவர்களைப் பார்த்த போது.... பிள்ளைப் பாக்கியம், ஏக்கம்.... தவிப்பு.. எதிர்பார்ப்பு அத்தனையும் அம்முகங்களில் உணர்ந்தபோது பிள்ளையின் பாதுகாப்புக் குறித்த நம்பிக்கை வலுத்தது. நெடுநாள் தயக்கத்துக்குப் பின்னான தன் முடிவு குறித்து இனி இரண்டாவது கருத்துக்கு இடமில்லை என்ற அளவில் உறுதி கூடியது. அந்நேரத்திற்கு நெருடல் எல்லாம் பிள்ளையைப் பிரிந்து இருக்க வேண்டுமே எனும் உதிரத்தை உறைய வைக்கும் உறுத்தல் மட்டுமே. விழி நீரைப் பிடிவாதமாய் வந்த வழி அனுப்பி வைத்தார்.

"உங்களுக்குக் கவலையே வேணாம் ஐயா. இப்படிச் சொல்றது கூட சரியில்லைதான். நல்லாப் பார்த்துக்கிறோம்னு பெத்தவங்க யாராவது உறுதிமொழி அளிக்கிறார்களா என்ன.....' 'அப்பா' என அழைக்கப்பட இருப்பவன் ஓரிருகணம் போல் தயங்கிப் பிறகு தொடர்ந்தான்.

"ஐயா, ரொம்ப பெரிய மனசோட எங்க வாழ்க்கைக்கு ஒரு நம்பிக்கை கொடுத்து இருக்கிறீங்க. நன்றி சொல்றதுக்குப் பதிலா உங்களிடமே இன்னுமொரு உதவி கேட்கின்றோம். குழந்தையைப் பிரிந்து சிரமப்படாமல் நீங்களும் எங்களோடு வந்துடுங்கய்யா. எங்க மூணு பேருக்குமே ஒரு பெரிய துணையா பலமா இருக்கும். நீங்க எதுக்கும் தயங்காதீங்க. நாம ஒருத்தருக்கு ஒருத்தர் முடிந்த அளவில் உதவியாய் இருப்போம். சரின்னு சொல்லுங்க ஐயா."

இறைஞ்சும் தன்மையில் கேட்கப்பட.... அதிர்ந்து போனார் ஆறுமுகம். யாருக்கு யார் உதவி? எவ்வளவு பெரிய விஷயம்? இவ்வளவு எளிமையாய்...... தனக்கு எந்தச் சங்கடமும் கூடாதென மிகவும் பக்குவமாய் இவன் .... மலைபோன்ற அத்தனை பிரச்சனைகளும் எப்படி இப்படி ஒரே நாளில் தீர்வு கண்டு குழந்தையுடன்...... தன்னையும் சுவீகரித்து.....

"பாபு...... இப்போதைக்கு எனக்குச் சாவு வராதுனு தோணுதுப்பா....... கண்ணீரை இப்போது சுதந்திரமாய் வெளியனுப்பியபடி கைகூப்பினார் முதியவர்.


நூல்வெளி

சாந்தா தத் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பெண்படைப்பாளர். அமுதசுரபியில் வெளியான 'கோடை மழை' என்னும் இச்சிறுகதை 'இலக்கியச் சிந்தனை' அமைப்பின் சிறந்த சிறுகதைக்கான விருதைப் பெற்றது. இவர் தற்போது ஹைதராபாத்தில் வசிக்கிறார். சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என இலக்கியத் துறைக்குத் தன் பங்களிப்பைச் செய்து வருகிறார். பல விருதுகளைப் பெற்றுள்ள இவர் ஹைதராபாத்தில் வெளியாகும் 'நிறை' மாத இதழின் ஆசிரியராக உள்ளார், 'திசை எட்டும்' என்ற மொழிபெயர்ப்பு இதழின் ஆசிரியர் குழுவில் உள்ளார். இவருடைய மொழிபெயர்ப்புகளைச் சாகித்திய அகாதெமி வெளியிட்டுள்ளது. மனித நேயம் இவர் கதைகளில் வெளிப்படும் அடிப்படைப் பண்பாகும்.


Tags : by Santha tath | Chapter 8 | 12th Tamil சாந்தா தத் | இயல் 8 | 12 ஆம் வகுப்பு தமிழ்.
12th Tamil : Chapter 8 : Ella uyirum thollum : Supplementary: Kodaimalai by Santha tath | Chapter 8 | 12th Tamil in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : எல்லா உயிரும் தொழும் : துணைப்பாடம்: கோடை மழை - சாந்தா தத் | இயல் 8 | 12 ஆம் வகுப்பு தமிழ் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : எல்லா உயிரும் தொழும்