Home | 10 ஆம் வகுப்பு | 10வது தமிழ் | துணைப்பாடம்: பாய்ச்சல்

சா. கந்தசாமி | இயல் 6 | 10 ஆம் வகுப்பு தமிழ் - துணைப்பாடம்: பாய்ச்சல் | 10th Tamil : Chapter 6 : Nila muttram

   Posted On :  22.07.2022 02:15 am

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : நிலா முற்றம்

துணைப்பாடம்: பாய்ச்சல்

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : நிலா முற்றம் : துணைப்பாடம்: பாய்ச்சல் - சா. கந்தசாமி | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

கலை

விரிவானம்

பாய்ச்சல்

- சா. கந்தசாமி



நுழையும்முன்

உண்மைக் கலைஞன் தன் கலையில் முழு ஈடுபாட்டைக் காட்டுவான். கலைநிகழ்வின் ஊடாக அவன் பெருமிதம், வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும். தன்னொத்த கலைஞர்களிடமிருந்து வேறுபட்டுத் தனக்கெனத் தனித் தன்மைகளையும் காட்டுவான்; இவற்றின் மூலம் மற்றவரையும் ஈர்ப்பான். கலை ஈடுபாட்டில் அவனுக்கு வயதோ உடற்சோர்வோ பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. தன் கலையைப் பின்பற்ற, தகுந்த வாரிசு உருவாகிறபோது அவன் கொள்கிற மகிழ்ச்சி அளப்பரியது.

தெருமுனையில் ஏதோ சப்தம். ஆளோடித் தூணைப் பிடித்துச் சுற்றிக் கொண்டிருந்த அழகு, தலையை நீட்டிப் பார்த்தான். இவனையொத்த சிறுவர்கள் புழுதி பறக்க ஓடிக் கொண்டிருந்தார்கள். என்னவோ நடக்கிறது என்று நினைத்துச் சாலைக்கு வந்தான். தெருவின் முனையில் பெரிய கூட்டம். மேளம் கடகடவென்று இரைந்து கொண்டிருந்தது. ஊருக்கு இவன் புதிதாகையால் என்ன நடக்கிறது என்பதைத் தீர்மானிக்க முடியவில்லை.

நாதசுரமும் மேளமும் ஒன்றாக இழைந்து ஒலித்தன. இவன் குனிந்து பார்த்தான். இரண்டு கால்கள் மின்னல் வெட்டி மறைவது போலத் துள்ளிப் பாய்ந்து சென்றன. அந்தக் கால்கள் மனிதக் கால்களிலிருந்து மாறுபட்டு, பச்சையா நீலமா என்று தீர்மானிக்க முடியாத நிறத்திலிருப்பதை இவன் கண்டான்.

ஆள் உயரக் குரங்கு ஒன்று மரத்தின் மேலிருந்து கீழே இறங்குவது தெரிந்தது. தான் கண்டதை இவனால் நம்ப முடியவில்லை. கண்ணுக்குத் தெரிந்தது நிஜமா என்கிற தவிப்பு.

இப்போது தான் கண்டது குரங்கல்ல, இது --

அனுமார் நினைவு இவனுக்கு வந்தது. இது அனுமார்தான். மனத்தில் அனுமாரைக் காணும் ஆவல் பெருக முண்டியடித்துக் கொண்டு கூட்டத்திற்குள் நுழைந்தான்.

அனுமார் வலது காலையும் இடது காலையும் மாறி மாறித் தரையில் உதைத்து வேகமாகக் கைகளை வீசி நடக்க ஆரம்பித்தார்.

இவனும் கூட்டத்தோடு பின்னால் நடந்தான்.

கொஞ்சதூரம் சென்றதும் அனுமார் ஒரு கடையில் தொங்கிய வாழைத்தாரிலிருந்து பழங்களைப்பறித்து எட்டியவர்களுக்கெல்லாம் கொடுத்தார். இவனுக்கும் அதிலொன்று கிடைத்தது. பழத்தைப் பையில் வைத்துக்கொள்வதா என்பதை இவனால் தீர்மானிக்க முடியவில்லை. யோசித்துக் கொண்டிருக்கையில் கூட்டம் வட்டமாக மாறியது. இவன் பின்னால் கொஞ்சம் நகர்ந்து மேளக்காரன் பக்கத்தில் நின்றான்.

சதங்கையும் மேளமும் நாதசுரமும் ஒன்றாக இழைந்தன. அனுமார்தாவிக் குதித்துக் குறுக்கும் நெடுக்குமாகப் பாய்ந்து சென்றார், நீண்ட வால் மேலே சுழன்று சரேலென்று தரையில் படர்ந்து புழுதியைக் கிளப்பியது.

சப்தத்தையும் ஆட்டத்தையும் தாங்கிக்கொண்டு இவனால் நிற்க இயலவில்லை. உடம்பே தன் வசமிழந்து போவது போலிருந்தது. கைகளை மார்போடு இறுக அணைத்துக்கொண்டான். தானே அனுமாராக மாறுவது போல இவனுக்குத் தோன்றியது. கால்களைத் தரையில் அழுத்தி ஊன்றி அனுமாரைப் பார்த்தான்.

அனுமார் ‘கீச் கீச்' என்று கத்திக் கொண்டே பந்தல் காலைப் பற்றி மேலே சென்றார். அனுமார் சப்தம் ஏதுமில்லாமல் மரத்தின் மேலே ஏறிப் பந்தலில் மறைந்தார். சிறிது நேரம் அனுமார் தென்படவில்லை.

திடீரென்று மேளமும் நாதசுரமும் துரித கதியில் ஒலிக்கத் தொடங்கின. எதற்கென்று தெரியாமல் கூட்டம் திகைத்துப் பந்தலை நோக்குகையில் பெருங்குரல் எழுப்பியபடி அனுமார் பந்தல் கால் வழியாகக் கீழே குதித்தார். அனுமார் வாலில் பெரிய தீப்பந்தம். ஜ்வாலை புகைவிட்டுக் கொண்டு எரிந்தது. கூட்டம் தானாகவே பின்னால் நகர்ந்தது.

அனுமார் கால்களைத் தரையில் பதித்து உடம்பை ஒரு குலுக்குக் குலுக்கினார். தீயின் ஜ்வாலை மடிந்து அலை பாய்ந்தது. கைகளைத் தரையில் ஊன்றி அனுமார் கரணமடித்தார். சுருண்ட வால் இவன் பக்கமாக வந்து விழுந்தது. கூட்டம் அச்சத்தோடு கத்தியபடி அலைக்கழிந்தது. அனுமார் பெரிதாகச் சிரித்துக்கொண்டு நின்றார். அனுமார் நின்றதும் கூட்டம் கொஞ்சம் அமைதியுற்றது; முன்நோக்கி நகர்ந்து வந்தது. அனுமார் நேசப்பான்மையோடு சிரித்து வாலை மேலே தூக்கிச் சுற்றினார். தீ வட்டமாகச் சுழன்றது. வேகம் கூடக்கூட, கூட்டம் இன்னும் முன்னால் நகரந்து வந்தது. இவன் நெருங்கி அனுமார் பக்கம் சென்றான்.

தீயின் ஜ்வாலை மெல்ல மெல்லத் தணிந்தது. கீழே புரண்ட வாலை இவனை ஒத்த இரண்டு பேர் தூக்கி வந்தார்கள்.

அழகு அவர்கள் அருகில் சென்றான். வெகு நேரமாக வால் சுமந்து வருவது ஒருவனுக்குக் கஷ்டமாக இருந்தது போலும். அருகில் அழகு சென்றதும் வாலைக் கொடுத்துவிட்டுக் கைகளை நன்றாக உதறியவாறு, 'ஒம் பேரு' என்றான்.

'அழகு'

‘கூட வரேல்ல'

இவன் தலையசைத்தான்.

'செத்த வச்சுக்க; வந்துடறேன்'

இவன் கைகள் மொசு மொசுப்பான வாலைத் தடவிவிட்டன.

அனுமார் நடையில் வேகம் கூடிற்று. அவருக்கு இணையாக வாலைத் தூக்கிக் கொண்டு இவனால் நடக்க முடியவில்லை. அனுமார் கூடவே ஓடினான்.

வயிறு வலிக்க இனி ஓட முடியாது என்று இவன் நினைக்கையில் அனுமார் நின்றார். இவன் தோளிலிருந்து வாலை இறக்கிப் போட்டுவிட்டு வெட்கத்தோடு கையை உதறிக் கொண்டான்.

கார் ஒன்று ஹாரன் அடித்துக்கொண்டு வந்தது. ஒருவன் கைகளை நீட்டிக் காரை வழி மறித்தான். அனுமார் எரிச்சலுற்றவர் போல வாலைச் சுருட்டி மேலே வீசி அவனைப் பின்னுக்கு இழுத்தார். கூடியிருந்தவர்களெல்லாம் விசில் அடித்துக் கை தட்டினார்கள். அழகு தரையிலிருந்து எம்பி எம்பிக் குதித்தான். அனுமார் செயல்களிலேயே அது ரொம்பவும் சுவாரசியமாகவும் களிப்பூட்டுவதாகவும் இவனுக்கு இருந்தது.

கார் வேகம் குறைய மெல்ல ஊர்ந்து முன்னே வந்தது. அனுமார் பின்னுக்கு நகர்ந்து சென்றார். காரிலிருந்தவன், பணத்தை எடுத்து அனுமார் பக்கமாக நீட்டினான். அனுமார் மேளக்காரனைப் பார்த்தார். அவன் அவசர அவசரமாக முன்னே வந்து பணத்தை வாங்கி மடியில் கட்டிக் கொண்டான். கார் செல்லக் கூட்டம் சிதற அனுமார் தெற்காக நடக்க ஆரம்பித்தார். இவன் ஓடிப்போய் வாலைத் தூக்கித் தோளில் வைத்துக்கொண்டான்.

ஆட்டமில்லாமல் அனுமார் நடக்கநடக்கத் தொடர்ந்து வந்த கூட்டமும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது. வாலைத் தோளுக்கு ஏற்றி அனுமாரையே பார்த்துக் கொண்டிருந்தான். இருந்தாற்போல இருந்து அனுமார் துள்ளிப் பாய்ந்தார். இவன் தோளிலிருந்து வால் நழுவித் தரையில் விழுந்தது. அதைப் பிடிக்க இவன் குனிந்தான்.

அனுமார் இன்னொரு பாய்ச்சல் பாய்ந்து வேகமாக ஆட ஆரம்பித்தார். வர வர ஆட்டம் துரிதகதிக்குச் சென்றது. பதுங்கியும் பாய்ந்தும் ஆடினார். ஆட ஆட, புழுதி புகை போல எழுந்தது. கழுத்துமணி அறுந்து கீழே விழுந்தது. ஒன்றையும் பொருட்படுத்தாமல் ஆட்டத்தில் தன்னை இழந்தவராக ஆடினார். மேளமும் நாதசுரமும் அவர் ஆட்டத்தோடு இணைந்து செல்லமுடியவில்லை. தடுமாறிவிட்டது. மேல் மூச்சு வாங்க அனுமார் ஆட்டத்தை நிறுத்தினார். மேளமும் நாதசுரமும் நின்றன.

அயர்ச்சியோடு மேளக்காரன் தோளிலிருந்து தவுலை இறக்கிக் கீழே வைத்தான். ஆட்டம் முடிந்தது. தீர்மானமாகியது போல எஞ்சி இருந்த கூட்டமும் அவசர அவசரமாகக் கலைய ஆரம்பித்தது.

அனுமார் வாயால் மூச்சு விட்டுக்கொண்டு ஆலமரத்தில் சாய்ந்துகொண்டார். மேளக்காரன் ஆட்டத்தில் சேர்ந்த பணத்தைக் கணக்குப் பார்த்துப்பிரித்தான். அனுமாரிடம் அவர்பங்கை நீட்டினான். அவர் ராமுவிடம் கொடுக்கும்படி சைகை காட்டினார். மேளக்காரன் ஒருமுறைக்கு இரண்டு முறையாக எண்ணி ராமுவிடம் பணத்தைக் கொடுத்தான்.

மரத்தில் சாய்ந்து நின்றிருந்த அனுமார் நடக்க ஆரம்பித்தார். ராமு புழுதியில் புரண்ட வாலை அவசரம் இல்லாமல் வந்து மெல்லத் தூக்கினான். சுமைதாங்கிக் கல் மீது உட்கார்ந்திருந்த அழகு, அனுமார் போவதைப் பார்த்து வேகமாகக் கீழே குதித்து வந்து வாலை எடுத்துத் தோளில் வைத்துக் கொண்டான்.

ஆற்றங்கரையையொட்டிச் சின்னக் கோயில்; என்ன கோயில் என்று இவனுக்குத் தெரியவில்லை. கோயில் தூணில் சாய்ந்துகொண்டு அனுமார் உட்கார்ந்தார். இவன் ராமுவோடு வாலைக் கீழே போட்டுவிட்டு, கையை மாறி மாறி உதறிக்கொண்டான். அனுமார் கால்களை நீட்டி நன்றாகத் தூணில் சாய்ந்து பெரிதாகக் கொட்டாவி விட்டார்.

அனுமார் நிமிர்ந்து உட்கார்ந்து வாலைப் பிடுங்கிப்போட்டார். அப்புறம் வாய், இடுப்பு வேட்டி, மார்புக்கச்சை, ராமர் படம், கால் சதங்கை, கைச் சதங்கை - ஒவ்வொன்றையும் எரிச்சலோடு வீசியெறிவதுபோல இவனுக்குத் தோன்றியது.

அனுமாருக்கு என்ன ஆகிவிட்டது என்று தன்னையே கேட்டுக்கொண்டான். இருமல் வந்தது. விட்டு விட்டு இருமி இருமிக் காறி உமிழ்ந்தார். இவனுக்கு அழுகை வருவது போல இருந்தது. இவனைப் பார்த்தார். இவன் அனுமாரைப் பார்த்துச் சிரித்தான். கிட்ட வரச் சொல்லிச் சைகை காட்டினார். மெதுவாக அருகே சென்றான். கையைப் பற்றிக் கொண்டு, 'ஆட்டமெல்லாம் பாத்தியா?' என்றார்.

'பாத்தேங்க; ரொம்ப ஜோருங்க'

'வால்ல நெருப்பு வச்சுக்கிட்டப்ப ஊரே எரியப்போவுதுன்னு நெனச்சேன்’

அனுமார் கையைத் தரையில் அடித்துப் பெரிதாகச் சிரித்தார். சிரிப்பு இருமலாக மாறியது. இரும இருமக் கண்களில் நீர் முட்டியது.

'எனக்குக்கூட ஒங்கள மாதிரி ஆடணுமுன்னு ரொம்ப ஆசைங்க'

'உம், அப்படியா... எங்க, ஒரு சின்ன ஆட்டம் ஆடிக்காட்டு. ஒனக்கு வருமான்னு பாக்கறேன்’

எழுந்து தரையில் கிடந்த வாலை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு சதங்கையை எடுத்தான். அனுமார் எழுந்து நின்று பெரிதாக இவனுக்குப் பயம் உண்டாகும் வரையில் சிரித்தார். கையிலிருந்த சதங்கை கீழே நழுவ அச்சத்தோடு அனுமாரைப் பார்த்தான்.

அனுமார் தூணில் சாய்ந்து, 'பரவாயில்ல, கட்டிக்கிட்டே ஆடு' என்றார்.

காலில் சதங்கையைச் சுற்றிக்கொண்டு அனுமார் மூஞ்சியை எடுத்து மாட்டிக் கொண்டு - தான் கண்டதையெல்லாம் மறுபடியும் மனத்தில் இருத்தி ஆட்டத்தை ஆட ஆரம்பித்தான். முதலில் மரத்திலிருந்து கீழே குதிக்கும் ஆட்டத்தை ஆடினான். இவன் ஆட்டம் தாளகதிக்கு ரொம்பவும் இணங்கி வருவது அனுமாருக்கு மகிழ்ச்சியளித்தது. உம்-உம் என்று தலையசைத்தார். ஆனால் நேரம் ஆக ஆக அடி தப்பியது. தன் போக்கில் ஆடினான். அனுமார் முகத்தைச் சுளித்தார். இவன் ஆட்டம் பொறுக்க முடியாததாகப் பட்டது.

'இங்க பாரு'. அனுமார் தாவிக் குதித்து முன்னே வந்து மெல்ல அடிபோட்டு ஆடத் தொடங்கினார். லேசாக ஆரம்பமான ஆட்டம் சில நொடிகளிலேயே துரிதகதியில் இறங்கியது. இவன் கண்ணிமைக்காமல் ஆட்டத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

துள்ளியும் பாய்ந்தும் பெருங்குரலில் ஊர் நடுங்கக் கூச்சலிட்டும் ஆடிய அனுமார் வெற்று வெளியில் ஒரு சின்னப் பையன் முன்னே ஆடுவதைத் திடீரென்று உணர்ந்து வெட்கமுற்றவர் போல ஆட்டத்தை நிறுத்திவிட்டு 'என்ன, பார்த்துக்கிட்டீயா?' என்று கேட்டார்.

பேச்சின் தொனி மாறியிருப்பதைக் கண்ட அழகு தலையசைத்தான்.

'எங்க, இப்ப ஆடு பாக்கலாம்'

அழகு ரொம்ப நிதானமாக ஆடினான்.

அனுமார் தன்னை மீறிய சந்தோஷத்தோடு 'பேஷ், பேஷ் - உடனே பிடுச்சுக்கிட்டீயே' என்றார்.

அவர் உற்சாகம் இவனைக் களிப்புற வைத்தது. துள்ளி முன்னே வந்தான்.

'வால்ல பந்தம் கட்டி ஆடுற ஆட்டம் ஆடு'

அழகு சாய வேட்டியை வாலின் நுனியில் சுற்றி நெருப்பு வைத்தான். சாய வேட்டி கருகி அணைந்தது. வாயால் ஊதி நெருப்பைக் கனிய வைத்துப் பெரிதாகக் கத்திக்கொண்டு அனுமாரை நோக்கிப் பாய்ந்தான்.

கண்களை மூடி வாயால் மூச்சுவிட்டுக்கொண்டிருந்த அனுமார் திடுக்கிட்டதுபோலக் கண் விழித்தார். அழகு கைகளை முன்னே நீட்டிச் சிரித்தான். இவன் சிரிப்பு அவருக்கு எரிச்சல் ஊட்டியது.

'உம். ஆடுலே'

மாறாத புன்னகையோடு துள்ளித் துள்ளி, கையும் காலும் குழைந்து நெளிய ஆடினான். அனுமார் அவனை உற்றுப் பார்த்தார். மனம் தன்னிலை இழந்தது. கையைத் தரையில் ஓங்கியடித்தார். அழகு முன்னே வந்து பாய்ந்து பின்னால் காற்றில் மிதப்பது போலச் சென்றான்.


அனுமாரால் உட்கார்ந்திருக்க முடியவில்லை. எழுந்து அம்பு போல முன்னால் பாய்ந்தார். இவன் ஒரு கணம் நிதானித்து, விரிந்த அனுமார் கை இடுக்கில் புகுந்து வெளியே சென்றான். பாய்ந்த வேகத்தில் கீழே விழப்போன அனுமார் தரையில் கையூன்றிச் சமாளித்து நின்று வெறுமை நிறைந்த மனத்தோடு இவனைத் திரும்பிப் பார்த்தார்.

அழகு பற்களெல்லாம் வெளியே தெரியச் சப்தமாகச் சிரித்துக் கைகளை ஆட்டி எம்பி எம்பிக் காற்றில் மிதப்பது போல முன்னே வந்தான்.

அனுமார் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார். அருகில் வந்த அவன் தலையை ஒயிலாக ஒரு வெட்டு வெட்டிப் பின்னுக்குச் சென்றான்.

‘என்னாடாலே, எனக்கா பாச்சக் காட்டுற’. அனுமார் கத்திக்கொண்டே அவனைப் பிடிக்கப் பாய்ந்தார். அவன் குனிந்து பிடியில் சிக்காமல் நழுவ அனுமார் கால்கள் பின்னிக்கொள்ளத் தரையில் விழுந்தார்.

அழகு அனுமார் விழுந்ததைக் கவனிக்காமல், தன் ஆட்டத்தில் மூழ்கியவனாகக் களிப்பும் உற்சாகமும் பொங்க வேகமாக ஆடிக் கொண்டிருந்தான்.

 

நூல் வெளி

'தக்கையின் மீது நான்கு கண்கள்' என்ற சிறுகதை தொகுப்பில் பாய்ச்சல் என்னும் கதை இடம்பெற்றுள்ளது. இதன் ஆசிரியர் சா.கந்தசாமி. இவர் மயிலாடுதுறை நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் எழுதிய சாயாவனம் புதினத்தால் எழுத்துலகில் புகழ்பெற்றார். விசாரணைக் கமிஷன் என்னும் புதினத்திற்கு சாகித்திய அகாதெமி விருதைப் பெற்றுள்ளார். சுடுமண் சிலைகள் என்ற குறும்படத்திற்கு அனைத்துலக விருதையும் பெற்றுள்ளார். நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் பதினொன்றுக்கும் மேற்பட்ட புதினங்களையும் எழுதியுள்ளார். தொலைந்து போனவர்கள், சூர்யவம்சம், சாந்தகுமாரி முதலியவை இவர் எழுதிய புதினங்களுள் சில.

 

முன்தோன்றிய மூத்தகுடி


"ஓங்கு இரும் பரப்பின்

வங்க ஈட்டத்து தொண்டியோர்"

சிலப்பதிகாரம், ஊர்காண்காதை, 107-108


 

கற்பவை கற்றபின்....

1. உங்கள் தெருக்களில் கண்டு மகிழ்ந்த பகல் வேடக் கலைஞர்களைப் போல வேடமிட்டு ஆடல் நிகழ்த்திக் காட்டுக.

2. மேடைக் கலைஞர்களும் பகல் வேடக் கலைஞர்களும் எதிர்கொள்ளும் இடர்ப்பாடுகள் குறித்து வகுப்பறையில் விவாதிக்க.

 

Tags : by saa. kandasamy | Chapter 6 | 10th Tamil சா. கந்தசாமி | இயல் 6 | 10 ஆம் வகுப்பு தமிழ்.
10th Tamil : Chapter 6 : Nila muttram : Supplementary: Paiychal by saa. kandasamy | Chapter 6 | 10th Tamil in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : நிலா முற்றம் : துணைப்பாடம்: பாய்ச்சல் - சா. கந்தசாமி | இயல் 6 | 10 ஆம் வகுப்பு தமிழ் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : நிலா முற்றம்