Home | 7 ஆம் வகுப்பு | 7வது தமிழ் | துணைப்பாடம்: பயணம்

பருவம் 3 இயல் 3 | 7 ஆம் வகுப்பு தமிழ் - துணைப்பாடம்: பயணம் | 7th Tamil : Term 3 Chapter 3 : Maanudam vellum

   Posted On :  12.07.2022 07:21 pm

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 3 : மானுடம் வெல்லும்

துணைப்பாடம்: பயணம்

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 3 : மானுடம் வெல்லும் : துணைப்பாடம்: பயணம் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் மூன்று

விரிவானம் 

பயணம்



நுழையும்முன்

தான் மட்டுமே மகிழ்ச்சியாக வாழ நினைப்பது மனிதப்பண்பு அன்று. பிறருக்கு உதவி செய்வதும் பிறரது சிறு சிறு ஆசைகளை நிறைவேற்றி அவர்களது மகிழ்ச்சியைக் கண்டு இன்பம் அடைவதும் சிறந்த மனிதப்பண்பு ஆகும். இதனையே ஈத்துவக்கும் இன்பம் என்று நம் முன்னோர் குறிப்பிட்டனர். பிறருக்கு உதவிசெய்து மகிழ்ந்த ஒருவரின் கதையை அறிவோம்.


இருபது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி இது. புறநகரில் ஓர் அஞ்சலகத்தில் வேலை செய்துகொண்டிருந்த காலம்.

எனது மூன்றாவது சம்பளத்தில் நான் ஒரு மிதிவண்டி வாங்கினேன். நூற்றி எண்பது ரூபாய். மிதிவண்டியில் ஏறிப் புறப்படுவதுதான் என் பொழுதுபோக்கு. காற்றுத் தழுவ ஓட்டத் தொடங்கியதுமே அப்படியே ஓட்டிக்கொண்டே இருக்க வேண்டும் போலத் தோன்றும். தெரிந்த ஊர்கள், தெரியாத ஊர்கள் எல்லா இடங்களுக்கும் மிதிவண்டியிலேயே செல்வதுதான் என் பெரிய மகிழ்ச்சி. இரண்டு கூட்டாளிகளைச் சேர்த்துக் கொண்டு கிருஷ்ணராஜ சாகர் அணைக்கட்டு வரைக்கும் செல்வது ஐந்து ஆறு மாதத்திற்கு ஒருமுறையாவது நடக்கும். ஒருமுறை மகாபலிபுரம் சென்று வந்தோம்.

ஹாசன் வழியாக மங்களூரு செல்ல வேண்டும் என்பது என் நீண்ட கால ஆசை. வழிநெடுக காடு, மலை ஆகியவற்றின் தோள்களில் என் மிதிவண்டியை உருட்டிச் செல்ல ஆர்வம் கொண்டிருந்தேன்.

அதிகாலையிலேயே கிளம்பினேன். எல்லாவற்றையும் விட்டு விடுதலையாகி வந்திருப்பதில் மனம் உற்சாகமுற்றிருந்தது. இரண்டு நாட்களில் ஹாசன் சேர்ந்துவிட்டேன்.

பகல் வெப்பத்தை ஈடு கட்டுவது போல் இரவில் கடும் மழை. விடியும் போது குளிரத் தொடங்கிவிட்டது. ஒரே இரவில் சொல்லிவைத்த மாதிரி பருவம் மாறிப் போனது. மழை நின்றபிறகு மறுநாள் பயணத்தைத் தொடங்கினேன். சக்லேஷ்பூர் வரைக்கும் சிறு சிறு தூறல். முகத்தில் பன்னீர் தெளித்த மாதிரி இருந்த தூறலில் நனைவது கூட மகிழ்ச்சியாக இருந்தது. நிற்காமல் சென்று கொண்டிருந்தேன். பெரிய இறக்கத்தில் இறங்கும்போது மிதிவண்டிச் சக்கரத்தில் காற்று இறங்கிவிட்டது. இதை நான் எதிர்பார்க்கவில்லை. ஒட்டுகிற கருவிகளும் காற்றடிக்கும் கருவியும் எப்போதும் கைவசம் இருப்பது தான் வழக்கம். இந்த முறை தன் வேலைக்காகக் கடன் வாங்கி எடுத்துச் சென்ற உறவுக்காரப் பையன் திருப்பித்தரவில்லை. தேடிப் போனபோது வீடு பூட்டிக் கிடந்தது. சரி, பார்த்துக் கொள்ளலாம் என்கிற துணிவில் கிளம்பிவிட்டேன்.

மிதிவண்டியைத் தள்ளிக்கொண்டு நடந்தேன். சுற்றிலும் மரங்கள். எட்டுகிற உயரத்தில் பெரிய பெரிய பலாப்பழங்களின் தொங்கலாட்டம். அதற்குப்பின் தேக்கு மரங்கள். தாவும் குரங்குகள். ஆள் சந்தடி எதுவும் கண்களில் படவில்லை . எவ்வளவு தூரம் நடந்திருப்பேனோ, எனக்குத் தெரியாது. மழையின் வேகத்தையும் மீறி எழுந்த குரல் என்னைத் தடுத்து நிறுத்தியபோது பாதையோரம் ஒரு குடிசை தெரிந்தது. அதன் கதவுக்கு அருகில் இருந்துதான் அந்தச் சிறுவன் குரல் கொடுத்தான். நான் குடிசையை நெருங்கினேன்.

'ரொம்ப நேரமா நனைஞ்சிட்டீங்க போல. எங்கனா நின்றிருக்கலாம்."

அவன் என்னைப் பார்த்துச் சிரித்தான். உள்ளே போய் ஒரு துண்டை எடுத்து வந்து தந்தான். மிதிவண்டியில் இருந்த என் தோள் பையை எடுத்தான். அதன் மீது இருந்த நீரை அவனே வழித்து உதறி ஓரமாக வைத்தான். இதற்குள் உள்ளே இருந்து ஒரு நடுவயதுப் பெண்மணி கதவருகே வந்து நின்றார். "அம்மா, பாவம்மா இவரு" என்று என்னைக் காட்டி அவரிடம் சொன்னான் அச்சிறுவன்.

பேசக் காத்திருந்த மாதிரி அச்சிறுவன் உற்சாகமாகக் கேள்விகளைத் தொடுக்க ஆரம்பித்தான்.

"எந்த ஊர்லேர்ந்து வரீங்க"?

"பெங்களூரு".

"மிதிவண்டியிலேவா..?"

“ம்”

அவனால் நம்ப முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. மீண்டும் மீண்டும் கேட்டான். அவன் கண்களில் புதுவித வெளிச்சம். மழையில் நனைந்து கொண்டிருந்த மிதிவண்டியை எட்டித் தொட்டான்.

"எவ்வளோ தூரம் இருக்கும் பெங்களூரு"?

"இருநூறு மையிலு"

"இருநூறு மையிலுமா மெதிச்சிகிட்டு வர்ரீங்க"

அவன் புருவம் உயர்ந்தது. ஏதோ ஓர் அதிசயத்தைக் கண்டது போல அவன் மனமும் குரலும் குழையத் தொடங்கின.

அவனது அம்மா மீண்டும் வந்து உள்ளே வரச்சொல்லிக் கூப்பிட்டார். நானும் அவனும் உள்ளே சென்றோம். அவசரமாய் அவர் பழம்பாய் ஒன்றை விரித்தார்.

"மிதிவண்டியில அவ்ளோ தூரம் போகலாமா?"

"போவலாமே! அதுல என்ன தப்பு? நான் கன்னியாகுமரிக்கே மிதிவண்டியில போயிருக்கேன்".

அவன் வியப்புத் ததும்ப என்னைப் பார்த்தான்.

"உண்மையாவா"?

“ம்”

"டில்லிக்குப் போக முடியுமா?"

“ம்”

"இமயமலைக்கு"?

"ம்"

"முடியுமா?"

ஏன் முடியாது? மனுஷனால முடியாதது எது இருக்குது? மனசு வச்சா எங்க வேணும்னாலும் போய் வரலாம்."

வாய் பிளந்து நின்றவன் முகம் திடுமெனச் சுண்டியது. கரகரத்த குரலில் சொல்லத் தொடங்கினான்.

"எனக்கு மிதிவண்டின்னா ரொம்ப ஆசை. ஆனா அம்மா வாங்கித் தரமாட்றாங்க" என்றான் அம்மாவின் பக்கம் கையைக் காட்டியபடி.

"ஏம்பா, வாய வச்சுக்கிட்டு சும்மா இருக்க முடியலையா?" என்றார் அவர். சிறுவன் குனிந்து கொண்டான். எனக்கு நொடியில் நிலைமை புரிந்தது. "இல்லப்பா, நீ ரொம்ப சின்னப் பையன் இல்லையா? ஓட்டறது கடினமாக இருக்கும். நீ பெரியவனாய்ட்டா அம்மா வாங்கித் தருவாங்க. எங்க அம்மாகூட பெரியவனாய்ட்ட பிறகுதான் வாங்கித் தந்தாங்க" என்றேன். அந்தப் பதில் அவனுக்கு மன நிறைவாக இருந்தது. "அப்படியாம்மா?" என்று தன் அம்மாவைப் பார்த்தான் அச்சிறுவன். அவர் "ம்" என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார். " 

“உனக்கு ஓட்டத் தெரியுமா?"

"குரங்கு பெடல் போட்டுத்தான் ஓட்டுவேன்"

"மழை நிக்கட்டும் நான் கத்துக் கொடுக்கறேன்."

அவன் மகிழ்ச்சியுடன் தலையை அசைத்துக் கொண்டான். உடனே அவன் தனக்குத் தெரிந்த மிதிவண்டிப் பயிற்சியைப் பற்றிச் சொல்லத் தொடங்கினான்.

"அரிசிக்கெரெல மாமா வீடு இருக்குது. அங்குதான் மிதிவண்டி ஓட்டக் கத்துக்கிட்டேன். ஆனா மாமா ரொம்பக் கண்டிப்பு. அவர் இல்லாத நேரத்தில் தான் மிதிவண்டியைத் தொடமுடியும்."

அச்சிறுவன் என்னோடு சுவர் ஓரம் படுத்துக்கொண்டான். என்னிடம் கதை கேட்கத் தொடங்கினான். நான் சுற்றிய ஊர்களைப் பற்றியும் பார்த்த மனிதர்களைப் பற்றியும் கேட்டான். நான் என் சிறுவயசுக் காலத்தை எண்ணியபடி எல்லாவற்றையும் சொன்னேன். என் சின்ன வயதின் பிம்பமாக அவன் இருப்பது எனக்கு ஆனந்தமாக இருந்தது.

பொழுது விடிந்தபோது மழை விட்டிருந்தது. சிறுவன் எனக்கு முன்னால் எழுந்து மிதிவண்டி அருகில் நின்றிருந்தான். காற்று இறங்கிப் போன சக்கரத்தைக் கையால் சுற்றிக் கொண்டிருந்தான். என்னைப் பார்த்ததும் சிரித்தான். சக்கரக் கம்பியில் சிவப்பு நிறத் துண்டுத் துணி ஒன்றைக் கட்டிவிட்டு அது மேலும் கீழும் மாறி வருவதை ஓட்டிக் காட்டினான். நான் சிரித்தேன்.

"மொதல்ல சக்கரத்தைச் சரி செய்யணும்" என்றேன்.

"பக்கத்தூர்ல சந்திரேகௌடா மிதிவண்டிக் கடை வைச்சிருக்காரு. அவர் கிட்ட போவலாம்."

மிதிவண்டியைத் தள்ளிவர அவனே முன் வந்தான். அவன் கைகள் பழகிய ஒரு நாய்க்குட்டியின் கால்களைப் பற்றுவது போல மிதிவண்டியின் கைப்பிடிகளைப் பற்றின. சைக்கிள் பழுதற்றிருந்தால் ஏறிப் பறந்து விடுவான் போலத் தோன்றியது. மணியை அழுத்தி சத்தமெழுப்பிக் கொண்டே வந்தான்.

என்னைப் பற்றி விசாரித்தபடியே சந்திரேகௌடா சக்கரத்தைச் சரி செய்து, காற்றடைத்துத் தந்தார். நான் கொடுத்த பணத்தை நன்றியுடன் வாங்கிக் கொண்டார்.

வரும் போது அவனை மிதிவண்டியில் ஏறி ஓட்டி வரும்படி சொன்னேன். அவன் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. குரங்கு பெடலில் தெத்தித் தெத்தி ஓட்டினான். அவனைப் பிடித்து நிறுத்தி இருக்கையில் உட்கார வைத்து முதுகை வளைக்காமல் இருக்கும்படி சொன்னேன். கால்கள் ஓரளவு எட்டியும் எட்டாமலும் இருந்தன. தடுமாறினான். கால் எட்டாமல் போகும் போது இடுப்பை அதிகமாக வளைத்து விழுந்தான்.

ஏறத்தாழ இரண்டு மணி நேரம் ஓட்டிக்கொண்டிருந்து விட்டுத் திரும்பினோம். அவனது அம்மா சூடாக அவல் வறுத்துத் தந்தார். சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே மழை பிடித்துவிட்டது.

மழை நின்றதும் நான் கிளம்பிட நினைத்தேன். ஆனால் சிறுவன் "எனக்கு நல்லா ஓட்ட கத்துத்தரன்னுதானே சொன்னீங்க. எல்லாம் பொய் தானா?" என்று மடக்கினான்.

மழை நின்ற பிறகு அவனை அழைத்துக் கொண்டு வெளியே போனேன். மிதிவண்டியை ஓட்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்று அவன் ஆசைப்பட்டான். கால் எட்டுகிறதா இல்லையா என்று அடிக்கடி தலை குனிந்து பார்த்தான். அதுதான் ஒரே குறை. மற்றபடி இடுப்பு படிந்துவிட்டது.

"மிதிவண்டி ஓட்ற மாதிரியே இல்ல. ஏதோ றெக்க கட்டி பறக்கிற மாதிரி இருக்குது" என்றான். அவன் கண்களைப் பார்க்க எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

நண்பகலில் மீண்டும் மழை தொடங்கியது. சாயங்காலம்தான் நின்றது. நான் "கிளம்பட்டுமா?" என்றேன். அச்சிறுவன் முகம் போன போக்கு சரியில்லை. "வழியில மறுபடியும் பேஞ்சா என்ன செய்வீங்க?" என்றான். "எல்லாம் சமாளிச்சிடுவேன்" என்றேன். அவனும் அவன் அம்மாவும் தடுத்தார்கள். இரவு முழுக்கச் சிறுவனிடம் மிதிவண்டிப் பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டேன்.

"விடிஞ்சதும் நானும் உங்களோடு வரட்டுமா"?

"ம்" என்று உற்சாகமூட்டினேன்.

"அரிசிக்கெரெல என்ன விட்டுடுங்க. மாமா வீட்ல ரெண்டு நாள் இருந்துட்டு திரும்பிடுவேன்".

விடிந்தபோது மழை விட்டிருந்தது. அவர்களுக்குக் கொஞ்சம் பணம் தரலாம் என்று தோன்றிய எண்ணத்தை உடனடியாய் விலக்கினேன். எதுவும் தராமல் இருப்பதும் வருத்தமாக இருந்தது. விடைபெற்றுக் கொள்ளும் போது மனசில் ஊமைவலி எழுந்தது. சிறுவன் மிகவும் வாதாடி என்னுடன் வருவதற்கு அனுமதி பெற்று விட்டான். அவனது அம்மா மீண்டும் "பத்தரம் பத்தரம்" என்று திரும்பத் திரும்பச் சொன்னார். அவரது அக்கறையையும் கவலையையும் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

நாங்கள் புறப்பட்டோம். அவன் பின்னால் உட்கார்ந்து கொண்டான். அந்தச் சூழல் மிகவும் மகிழ்ச்சியூட்டுவதாக இருந்தது. பெரிய பெரிய மரங்கள். குன்றுகள். சிறுவன் பேசியபடி வந்தான். மிகவும் தயங்கி "நான் கொஞ்சம் ஓட்டட்டுமா"? என்றான். நான் இறங்கிச் சிறிது நேரம் அவனிடம் தந்தேன். கொஞ்சதூரம் போய்விட்டு மீண்டும் வருமாறு சொல்லிவிட்டு ஒரு மரத்தடியில் உட்கார்ந்தேன்.

அவன் திரும்பி வந்ததும் எங்கள் பயணம் தொடர்ந்தது. பத்துப் பதினைந்து மைலுக்கு அப்புறம் மீண்டும் அவன் ஓட்டினான். வழியில் உணவகம் ஒன்றில் சாப்பிட்டோம்.

அரிசிக்கெரே நெருங்கியதும் வீடுகள் தென்பட்டன. வாகனங்களும் மனித நடமாட்டமும் தெரிந்தன. மூன்று நாட்களுக்கப்புறம் மனித நடமாட்டத்தைப் பார்த்தபோது மனம் கிளர்ச்சியுற்றது .

"இன்னும் கொஞ்ச தூரம்தான் எங்க மாமா வீடு. அது வரைக்கும் நானே மிதிவண்டியில போய் வரட்டா? கொஞ்ச நேரம் அவங்க மிதிவண்டியைத் தொட்டுட்டா என்னா கத்து கத்துவாங்க தெரியுமா? இப்ப அவங்க முன்னால நான் போய் எறங்கினதுமே அதிசயப்படுவாங்க. அதுவரைக்கும் போய் வரட்டா?"

அவன் உற்சாகத்தைக் குலைக்க விருப்பமில்லை. "சரி" என்றேன். "பார்த்து பார்த்து" என்று எச்சரிப்பதற்குள் அவன் பாய்ந்துவிட்டான். நான் தேநீர் குடிக்கச் சென்றேன். குடித்து விட்டு வெளியே வந்து அவனுக்காகக் காத்திருந்தேன்.

சாலை மிகவும் பரபரப்பாக இருந்தது. வேகவேகமாகச் செல்லும் வாகனங்கள்.. மஞ்சள் துணி போர்த்திய ஆட்டோக்கள். லாரிகள். நான் சட்டென அச்சிறுவனைப் பற்றி யோசித்தேன். அவன் குடும்பம், அவன் ஆசை, அவன் வேகம் எல்லாமே மனசில் அலைமோதின. சட்டென ஒரு முடிவு எடுத்தேன். அவசரமாய்த் தெருமூலை வரைக்கும் பார்த்தேன். அவன் முகம் தெரிவது போல் இருந்தது. என்னைப் பார்த்துப் பெருமிதமாய் அவன் சிரிப்பது போலவும் இருந்தது. எதிர்பாராதவிதமாக முன்னால் வந்து நின்ற ஹாசன் பேருந்தில் சட்டென்று ஏறி உட்கார்ந்துவிட்டேன். வண்டியும் உடனே கிளம்பி விட்டது.

நூல் வெளி 

பாவண்ணன் சிறுகதை, கவிதை, கட்டுரை எனப் பல்வேறு வகையான இலக்கிய வடிவங்களிலும் எழுதி வருகிறார். கன்னட மொழியிலிருந்து பல நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். வேர்கள் தொலைவில் இருக்கின்றன, நேற்று வாழ்ந்தவர்கள், கடலோர வீடு, பாய்மரக்கப்பல், மீசைக்கார பூனை, பிரயாணம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.

பிரயாணம் என்னும் நூலில் உள்ள பயணம் என்னும் சிறுகதை இங்குத் தரப்பட்டுள்ளது.


Tags : Term 3 Chapter 3 | 7th Tamil பருவம் 3 இயல் 3 | 7 ஆம் வகுப்பு தமிழ்.
7th Tamil : Term 3 Chapter 3 : Maanudam vellum : Supplementary: Payanam Term 3 Chapter 3 | 7th Tamil in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 3 : மானுடம் வெல்லும் : துணைப்பாடம்: பயணம் - பருவம் 3 இயல் 3 | 7 ஆம் வகுப்பு தமிழ் : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 3 : மானுடம் வெல்லும்