Home | 12 ஆம் வகுப்பு | 12வது தமிழ் | துணைப்பாடம்: தலைக்குளம்

தோப்பில் முகமது மீரான் | இயல் 5 | 12 ஆம் வகுப்பு தமிழ் - துணைப்பாடம்: தலைக்குளம் | 12th Tamil : Chapter 5 : Nadunpa natin thalai

   Posted On :  02.08.2022 12:44 am

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : நாடென்ப நாட்டின் தலை

துணைப்பாடம்: தலைக்குளம்

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : நாடென்ப நாட்டின் தலை : துணைப்பாடம்: தலைக்குளம் - தோப்பில் முகமது மீரான் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

விரிவானம்

நாகரிகம் – ரு

தலைக்குளம்

- தோப்பில் முகமது மீரான்



நுழையும்முன்

மக்கட்தொகைப் பெருக்கம், நாகரிக வளர்ச்சி, நகரமயமாதல், புலம்பெயர்வு, இளைய தலைமுறையினரின் மனப்பான்மை ஆகியவற்றின் விளைவாகக் கிராமங்கள், தங்கள் முகவரியை இழந்துவருகின்றன. கிராமங்கள் மக்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதற்கு ஏற்ற இடமாக இருந்து பின்னர், நகரமாக மாறியதைப் பற்றி இச்சிறுகதை பேசுகின்றது.

தலைக்குளத்தில் ஒரு முங்கு முங்கினாலே உடம்பெல்லாம் குளிர்ச்சியால் சிலிர்த்துப் போகும். நாடிநரம்புகள் கலந்து தெறித்துவிடும்போல் இருக்கும். அவ்வளவு குளிச்சி!. சிவந்திருக்கும் கண்ணைக் கண்டாலே உம்மா கேட்பாள்.

" நீராடி தகர்த்திட்டா வாற?"

"இல்லெ," உம்மா நம்பாத ஒரு பொய்யைச் சொல்வது வழக்கம்.

"தலைக்குளத்தைக் கலக்கிட்டு வாறது உன் கண்ணிலே தெரியுதே."

தலையில் ஈரம் இல்லாவிட்டாலும், உம்மா தருகிற துண்டை வாங்கித் தலையைத் துடைக்காவிட்டால் ஏச்சு வேற.

தலைக்குளத்தின் தென்கரையில் பெண்கள் குளிப்பதற்கான கடவும் துணி துவைச்சு அடிக்கப் பரந்த கற்களும் இருக்கும். எந்நேரமும் துணிதுவைத்துக் கல்லில் அடிக்கும் சத்தமும் எழுந்து கொண்டிருக்கும்.

ஆம்பல் படர்ந்து கிடக்கும் தலைக்குளத்திற்கு அந்தப் பக்கம் கன்னியார் கோணம் ஏலா வயல்.

நாலு எருமை மாடுகளை ஒரே கயிற்றில் கட்டிச் சுற்றி விட்டு மிதித்துச் சூடு அடிப்பார்கள். எருமை மாடுகள் சுற்றி வருவது பார்க்க ரசனையாக இருக்கும்.

சூடு அடித்து முடிந்த ஈர வைக்கோலைக் கயிற்றில் கட்டி இழுத்துவந்து பாவாத்து மணலில் காயப்போடுவதற்காகத் தூற்றும்போது, களத்தில் பச்சைநெல், மணம் கமழும்.

தலைக்குளத்திலிருந்தும் கன்னியார் கோணம் ஏலாவிலிருந்தும் ஈரம் நக்கி எடுத்துவரும் காற்று சுகமாகவே இருக்கும். அந்தக் காற்றுக்காகத்தான் இப்போது இந்த கான்கிரீட் சுள்ளைக்குள்ளிலிருந்து ஏங்குவது. ஃபேன் இருந்தென்ன, ஏ.சி. இருந்தென்ன! ஊரை விட்டு வயிற்றுப்பிழைப்பிற்காக இந்த நகரத்தில் வந்து கூடு கட்டி வருடங்கள் முப்பது கடந்தன.

தலைக்குளத்திலிருந்து வீடு சற்றுத் தொலைவில். வேனில் காலங்களில் வீட்டுக் கிணற்றில் தண்ணீர் வற்றுவதே இல்லை. இறைக்க இறைக்கப் பொங்கும். முக்காலே மூண்டானி கிணற்றிலும் தண்ணீர் அடி பற்றி இருக்கும். சில கிணறுகள் வறண்டு போய் இருக்கும். அவர்களுக்கெல்லாம் எங்கள் வீட்டுக் கிணற்றைப் பார்த்துப் பொறாமை. உங்க வீட்டுக் கிணற்றுக்குத் தலைக்குளத்து ஊற்று என்பார்கள். இது கேட்கும் போது அந்தக் குசும்புக்காரிகள் மீது உம்மாவுக்கு வேசாடையாக இருக்கும். தலைக்குளத்து ஊற்று என்பதில் உண்மை இல்லாமல் இல்லை. மழைக்காலங்களில் தலைக்குளத்துத் தண்ணீர், கலங்கலாக இருக்கும் போது எங்க வீட்டுக் கிணற்றுத் தண்ணீரும் கலங்கலாகத்தான் இருக்கும். ஆனால், ருசி குறைவாக இருக்காது. இன்று மினரல் வாட்டர் கேன் வாங்கித் தாங்கல.

"ஊரில் பழைய ஒரு ஓட்டு வீடும், சுத்தத் தண்ணீர் கிடைக்கும் கிணறும் சும்மா கிடக்குடா, அங்கு போய்த் தங்குவோம்" என்று பிள்ளைகளிடத்தில் சொன்னால் சீறுவார்கள்.

"ஆமாம். அங்க ஆரு இருக்கியா? எங்களுக்கு அங்கு ஆரெத் தெரியும். இந்த மினரல் வாட்டரைவிட மேலா உங்க கிணற்றுத் தண்ணீர்?"

தெரிந்து தெளிவோம்

உம்மா - அம்மா

வாப்பா - அப்பா

ஏச்சு - திட்டுதல் 

கடவு - படித்துறை 

கன்னியார், கோணம் - ஒரு வயற்காட்டின் பெயர் 

உப்பா - தாத்தா 

பாவாத்து - துணி நெய்ய வேண்டிய நூலுக்குப் பசை கொடுப்பது 

சுள்ளைக்கு உள்ளிருந்து - (செங்கல்) நெருப்புச்  சுள்ளைக்கு உள்ளிருந்து

அடிபற்றி இருக்கும் - அடித்தரை தெரியும்படி இருக்கும்

வேசாடையாக - சற்றுக் கோபமாக 

அமானிதம் - பாதுகாக்கப்பட வேண்டிய விசயம் 

ஏலாவிலிருந்து - பெரிய வயலில் இருந்து 

முக்கால், மூண்டானி - ஒரு அளவு 

புன்ன மூட்டடி - புன்னை மரத்தின் நிழல்

"நான் பிறந்த மண்ணுடா, என் அப்பன் வச்ச வீடு சும்மா கிடக்குடா, அந்தத் தண்ணீ குடிச்சுதான் வளர்ந்தேன்."

"அத வித்துத் தள்ளுங்க வாப்பா. இந்த நாகரிக காலத்திலே ஓடு போட்ட மரவூட்டுல ஆருதங்குவா?"

மக்களும் கட்டினவளும் விலா எலும்புகளை நெருக்கி நொறுக்கின வலி தாங்காமல்தான், நகரத்தில் இப்போது குடியிருக்கிற வீடு எழுந்தது.

தலைக்குளத்தின் கதைகள், கன்னியார்கோண ஏலாவைப் பற்றிய கதைகள், ஞானியார் நீரோடை, புன்னமூட்டடி, இதைப் பற்றியெல்லாம் தெரிய, அவர்களுக்கு ஆர்வம் இல்லை. டீ.வி. கார்ட்டூன் அல்லது கம்ப்யூட்டர் கேம்ஸில்.

தலைக்குளத்தில் தலைப்பாகை கட்டிய ஒரு மனிதத்தலை வெள்ளி இரவுகளில் குளத்தங்கரை வழியாகச் செல்வோருக்குச் சலாம் சொல்லும் அற்புதக்கதை அவர்களுக்கு வேண்டாம்.

உப்பா சொல்லித் தந்த இந்த அமானிதத்தைப் பேரப்பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கலாமென்றால், என்கிட்ட வரமாட்டார்கள். வந்தாலும் சொல்ல முடியாதபடி மொழி, பெரும் எதிரியாகிவிட்டது. மொழி இப்போது தலைமுறைகளை வெட்டி விலக்குகின்ற வாளாக மாறிப் போனதுதான் விந்தை.

தார் உருகும் சூட்டில் மொட்டைமாடி வெக்கை இறங்கிக் கண்கள் எரியும்போது, அன்றைய அந்த வயல் காற்றின் சலசலப்பையெல்லாம் நினைக்காமல் இருக்க முடியவில்லை. கிராமத்து இயற்கையை ரசிக்கத் தெரியாத தலைமுறை!

ஊரில் போய் நின்று தரகர்களைப் பார்த்து வீட்டை விற்க ஏற்பாடு செய்ய நேரம் வாய்க்காத கால நெருக்கடி. உறவுகள் அற்றுப்போன தற்காலத்தில் உதவுவதற்கு யாருமே இல்லை. அதனால்தான் பத்திரிகையில் எல்லோர் பார்வையிலும் படும்படி விளம்பரம் கொடுக்க யோசனை சொன்னது மூத்த மகன்.

ஓடு வேய்ந்த நாலு கட்டு வீடு, ஈட்டி மரம், எந்த வறட்சியிலும் வற்றாத கிணறு, ருசிமிகுந்த தண்ணீர், பக்கத்தில் எப்பவும் தண்ணீர் ஓடும் வாய்க்கால், மூத்த மகன் எழுதிய வாசகம் அப்படியே வெளி வந்தது பத்திரிகையில்.

இரண்டாவது நாள் வீடு தேடி வந்தவர் நாகரிகமானவராகக் காணப்பட்டார். "விளம்பரம் பார்த்தேன்"

"சார் என்ன தொழில்?"

"ரிட்டையர்டு ஜட்ஜ். நகர வாழ்க்கை அலுத்துப் போச்சு. ஏதாவது கிராமப்புறங்களில் தங்கலாமென நினைக்கிறேன்."

"எனக்குந்தான். பிள்ளைகளுக்கு நகர் வாழ்க்கைதான் பிடிக்கும். அதனால்தான் வீட்டை விற்க முடிவு பன்னினேன்."

"வீட்டைப் பார்க்கலாமா?"

"பார்க்கலாம். பழைய நாலு கட்டு வீடு. கொல்லம் ஓடு, கிணறு உண்டு. எந்த வறட்சியிலும் வற்றாத கிணறு.

"அதுதான் வேணும்." "நூறு கிலோமீட்டர் போகனும் சார்."

பயணத்தின்போதே தலைக்குளத்தைப் பற்றி, புன்னமூட்டடி குளிர்ச்சியைப் பற்றி, காற்றில் புன்னப்பூ மணம் வந்து கொண்டிருப்பதைப் பற்றி, அரச குளத்தங்கரையில் வளர்ந்து நிற்கும் தாழை படர்ப்பில் தாழம்பூ மலர்ந்து தொங்கிக் கிடப்பதைப் பற்றி, அந்தப் பகுதியில் தாழம்பூ வாசம் வீசுவதைப் பற்றி, எல்லாம் கேட்கக் கேட்க அவருக்குப் போதை ஏறிக்கொண்டே இருந்தது. இராக்காலங்களில் பறவைகளின் சலம்பல், இரா நிசப்தத்தில் இனிய பாடலாக ஒலிக்கும் என்று சொன்னபோது

"அப்படியா?"

என் தோளை மகிழ்ச்சிப் பெருக்கால் பிடித்துக் குலுக்கினார்.

ஊர் நெருங்கிவிட்டது. வீட்டிற்குச் செல்லும் வழியிலிருந்து இடது பக்கமாகச் செல்லும் ஊடுவழி முடியும் இடத்தில்தான் தலைக்குளம், புன்னமூட்டடி, கன்னியார் கோணம் ஏலா, அரசகுளம்!

ஏலாவிலிருந்து சற்றுத் தொலைவிலுள்ள கொல்ல மாந்தோப்பு, ஒருவேளை நகரமாக மாறியிருக்கலாம். பூட்டப்பட்டுக் கிடந்த வீட்டைத் திறந்து காட்டினேன். வெகுகாலமாகப் பூட்டப்பட்டுக் கிடந்ததால் குடியேறியிருந்த வௌவால்கள் எங்கள் தலைக்கு மேல் பறந்து வெளியேறின. பழைமை வாடை முகத்தைத் துளைத்தது. சற்று அருவருப்பாக இருந்தது, எனக்கும் சாருக்கும். கர்ச்சிப்பை எடுத்து சார் மூக்கைப் பொத்திக் கொண்டார்.

நாலு கட்டு அமைப்பு சாருக்கு ரொம்பவும் பிடிச்சுப் போச்சு.

"கிணறு"... 

"பின்னாடி."

பின்வாசலைத் திறந்த போது தொலைவில் மலை முகடு தெரிந்தது.

"எந்த மலை?" சார் கேட்டார். 

"மேற்குத் தொடர்ச்சி மலை".

சார், மலைமுகட்டை முட்டிச் செல்லும் வெண்மேகங்களை ரசித்தார்.

சார், இயற்கை நேசன் போல் தெரிகிறது.

முன்பு மலை தெரியும். இரவு நேரங்களில் மலையில் தீப்பிடிச்சு எரிவதும் தெரியும். இப்போது சில மாடிவீடுகள் வந்து மலையை மறைத்துக் கொண்டது."

"பரவாயில்லை . மலை முகடாவது தெரியுதே,"

சாருக்கு வீடு கொடுத்தது மாதிரிதான். நாலு கட்டு நடுமுற்றம் அவரை ரொம்பவும் கவர்ந்தது. வீட்டுக்குள் உள்ள வானவெளியைப் பார்த்து சார் ஆச்சரியப்பட்டார். "ஆஹா எவ்வளவு அழகு."

மொத்தத்தில் சாருக்கு எல்லாம் பிடித்துவிட்டிருந்தது. நல்ல விலை கிடைக்கலாம். குதூகலிப்புடன் பின்வாசல் வழியாகக் கிணற்றடிக்குக் கூட்டிச்சென்றேன். என்னை முந்திக்கொண்டு ஆர்வத்தோடு கிணற்றை சாரே எட்டிப் பார்த்தார். ஆசை எரிந்து சாம்பலாகிப் போன அவருடைய முகத்திலிருந்து வழியை எடுத்து, கிணற்றுக்குள் கண்ணைவிட்டேன். தட்டையான கிணறு ஆனதால், வறண்ட கிணற்றுக்குள் தரை வெடிப்புகள் பகல் வெளிச்சத்தில் கண்களுக்குத் தெளிவாயின. கிணற்றுக்கல் இடுக்குகளில் காட்டுச் செடிகள் முளைத்திருந்தன.


"நீங்க ஊருக்கு வாரீகளா?" முகக்களிப்பு இழந்தவாறு காரில் உட்காந்துகொண்டு சார் கூப்பிட்டார்.

"நான் பஸ்ஸில் வரேன்" சொல்லி முடிக்கும்முன் கார் புறப்பட்டது.

ஆசைகெட்டு, மனம் இடித்துபோய் நின்ற என் சிரத்தில் அக்கினி ஆறு ஓடிக்கொண்டிருந்தது. சூட்டைத் தணிக்கத் தலைக்குளத்தில் நீந்திக் குளிக்க உள்ளூர ஆசை.

நடந்தேன்.

குளம் கிடந்திருந்த இடத்தை நெருங்கினதும் கண்ணில் பளிச்சிட்டது. "சப்ராஸ்!"

தலைக்குளத்தின் நினைவாக அதன் மேல் எழுப்பப்பட்டிருந்த இருமாடிக் கட்டிடம், ஏலா, புன்னமூட்டடி, கன்னியார்கோணம் அரசகுளம் எல்லாம் இப்போது அழகழகான குடியிருப்புகள். தெருவோரங்களில் நீர் வராத குழாய்கள் அங்குள்ள தண்ணீரின் நினைவாக! தாகம் வந்தபோது நகர் மூலையில் கண்ட பெட்டிக் கடையிலிருந்து ஒரு பாட்டில் பிஸ்லேரி வாட்டர் வாங்கினேன்.

வட்டார வழக்கு

தமிழ்மொழி வட்டாரங்களுக்கென்று சிறப்பான ஒன்றேயாயினும் தனி மொழிவழக்குகள் இருக்கின்றன. சென்னைத்தமிழ், கோவைத்தமிழ், நெல்லைத்தமிழ், மதுரைத்தமிழ், குமரித்தமிழ் என்றெல்லாம் வேறுபட்டுத் தமிழ் வழங்குகின்றது. அந்தந்தப் பகுதிகளுக்கென்று தனித் தொனிகளும் வாஞ்சைகளும், விளிப்புகளும் இருக்கின்றன. அவ்வவ் வட்டாரங்களின் பழக்கவழக்கங்கள், தொழில்கள், பழமொழிகள், சடங்குகள் சார்ந்தும் சொல் மாறுபாடுகள் இருக்கின்றன. இவை பேச்சு வழக்கில் இருப்பது வட்டார அடையாளமாகவும் இருக்கிறது. இவ்வட்டார வழக்குகள் படைப்பிலக்கியங்களில் இடம்பெறுகிறபோது, தமிழின் அழகு கூடுகிறது. தமிழ்ச் சிறுகதைகளிலும் புதினங்களிலும் வட்டார மொழி இடம்பெற்று வட்டாரச் சிறுகதை, வட்டாரப் புதினம் என்று பகுத்துப் பேசக்கூடிய நிலை ஏற்பட்டது. வட்டார இலக்கியம் என்ற பகுப்பும் உருவாயிற்று. புதுமைப்பித்தன் நெல்லைத் தமிழிலும், சண்முகசுந்தரம் கோவைத்தமிழிலும், ஜெயகாந்தன் சென்னை வட்டாரத் தமிழிலும், தி ஜானகிராமன் தஞ்சைத் தமிழிலும், தோப்பில் முகமது மீரான் குமரித் தமிழிலும் எழுதிப் புகழ்பெற்றனர்.கி.ராஜநாராயணன் கோவில்பட்டி வட்டாரத் தமிழைப் பயன்படுத்திப் படைத்தார். தம்முடைய வட்டார எழுத்திற்கு அவர் "கரிசல் இலக்கியம்" என்று பெயரிட்டார். இவர்களைத் தொடர்ந்து பலர் இவ்வகையில் வட்டார இலக்கியங்களைப் படைத்து வருகிறார்கள். சிறுகதைகள் வட்டாரம் சார்ந்து தொகுக்கப்பட்டுத் தஞ்சைக் கதைகள் என்பது போன்று வெளியீடு பெறுகின்றன.


நூல்வெளி

தோப்பில் முகமது மீரான் எழுதிய 'ஒரு குட்டித் தீவின் வரைபடம்' என்ற சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்ற சிறுகதை இது. தோப்பில் முகமது மீரான் கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டணம் எனும் சிற்றூரில் 1944இல் பிறந்தார். இவர் தமிழிலும், மலையாளத்திலும் படைப்பவர். புதினம், சிறுகதை போன்ற பல்வேறு இலக்கியத் தளங்களில் இயங்கி வருபவர். இவர் எழுதிய சாய்வு நாற்காலி எனும் புதினம் 1997இல் சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ளது. துறைமுகம், கூனன் தோப்பு ஆகிய படைப்புகள் தமிழக அரசின் விருது பெற்றுள்ளன.



Tags : by Toppil mugamathu meeran | Chapter 5 | 12th Tamil தோப்பில் முகமது மீரான் | இயல் 5 | 12 ஆம் வகுப்பு தமிழ்.
12th Tamil : Chapter 5 : Nadunpa natin thalai : Supplementary: Thalaikulam by Toppil mugamathu meeran | Chapter 5 | 12th Tamil in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : நாடென்ப நாட்டின் தலை : துணைப்பாடம்: தலைக்குளம் - தோப்பில் முகமது மீரான் | இயல் 5 | 12 ஆம் வகுப்பு தமிழ் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : நாடென்ப நாட்டின் தலை