Home | 12 ஆம் வகுப்பு | 12வது அரசியல் அறிவியல் | இந்திய உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்பும் அதிகாரங்களும், அமைப்பு, - இந்திய உச்ச நீதிமன்றம் | 12th Political Science : Chapter 4 : Indian Judiciary

   Posted On :  02.04.2022 06:52 pm

12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 4 : இந்திய நீதித்துறை

இந்திய உச்ச நீதிமன்றம்

இந்திய அரசமைப்பு மூன்று அடுக்கு நீதித்துறை அமைப்பினை வழங்குகிறது. அவை வருமாறு; 1) இந்திய உச்ச நீதிமன்றம் 2) அரசமைப்புப்படி உருவாக்கப்பட்ட மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்கள். 3) ஒவ்வொரு மாநிலத்திலும் நீதி மாவட்டங்களில் வாரியாக மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றங்கள்.

இந்திய உச்ச நீதிமன்றம்

இந்திய அரசமைப்பு மூன்று அடுக்கு நீதித்துறை அமைப்பினை வழங்குகிறது. அவை வருமாறு;

1) இந்திய உச்ச நீதிமன்றம் 

2) அரசமைப்புப்படி உருவாக்கப்பட்ட மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்கள்.

3) ஒவ்வொரு மாநிலத்திலும் நீதி மாவட்டங்களில் வாரியாக மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றங்கள்


 செயல்பாடு 

செய்தித்தாள் பின்தொடர்

செய்தித்தாளை ஒரு மாதம் தொடர்ந்து வாசித்து மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியனவற்றின் குடிமையியல் வழக்குகள் தொடர்பான செய்திகளைச் சேகரிக்கவும். அவற்றின் தலைப்புச் செய்திகளை அட்டவணை விளக்கப் படமாகத் தயாரித்து எழுதவும். பள்ளி அல்லது வகுப்பறை அறிவிப்பு பலகையில் காட்சிப்படுத்தவும் அல்லது வகுப்பறையில் உங்கள் தொகுப்புகளை முன்வைக்கவும்.

இந்திய அரசமைப்பு நீதித்துறைக்கு சுதந்திரம் வழங்கியுள்ளது. அதாவது, ஆட்சித்துறை சட்டமன்றங்களின் தலையீடுகளில் இருந்து நீதித்துறைக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா போன்ற கூட்டாட்சி மக்களாட்சியில், உச்ச நீதிமன்றமே அரசமைப்பின் காவலன் ஆகும். மத்திய, மாநில அரசுகளுக்கு இடையில் எழும் சிக்கலுக்கு, தீர்வு காண்பது, மாநிலங்களுக்கு இடையே எழும் சிக்கல்களுக்கு தீர்வு காண்பது, குற்றவியல், குடிமையியல் வழக்குகளில் உயர்ந்த பட்ச மேல்முறையீடு நீதிமன்றம் ஆகிய மிகப் பெரிய பொறுப்புகளை நிறைவேற்றுகிறது. அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்தல் அடிப்படை உரிமைகள் அமலாக்கம் மற்றும் அனைத்து இந்தியக் குடிமக்களின் சுதந்திரம் ஆகிய பெரும் பொறுப்புகளை உச்ச நீதிமன்றம் சுமக்கிறது எனினும் அமெரிக்க, ஐக்கிய நாடுகளின் கூட்டாட்சி அமைப்பு போன்று (ஒன்று கூட்டாட்சிக்காக மற்றொன்று மாநிலங்களுக்காக) என இரண்டு தொகுப்பு நீதித்துறை அமைப்பினை இந்திய அரசமைப்பு வழங்கவில்லை. இந்தியா ஒரு ஒருங்கிணைந்த நீதித்துறை முறையினை மட்டுமே கொண்டிருக்கிறது. இதன்படி, உச்ச நீதிமன்றம் தலைமை நீதிமன்றமாக (Apex) இந்தியாவில் உள்ள அனைத்து நீதிமன்றங்கள் மீதும் அதிகாரம் செலுத்துகிறது.

சட்ட மூலவளங்கள்: இந்தியாவில் சட்ட ஆட்சியின் மூல ஊற்றாக அரசமைப்பு அமைந்திருக்கிறது. அரசமைப்பின் அடிப்படைகளுக்கு ஏற்ப நாடாளுமன்றம் மற்றும்மாநிலங்கள், ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட பகுதிகளின் சட்டமன்றங்கள் சட்டங்கள் இயற்றிக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது. தவிர, உறுப்புகள், ஒழுங்குமுறைகள், நிர்வாக அமைப்புச் சட்டங்கள் என துணைச் சட்டங்கள் இயற்றவும் அனுமதிக்கப்படுகிறது. அதே சமயம், இவை மூன்றாவது சட்ட மூலங்கள் எனக் கருதப்படும்.

ஒருங்கிணைந்த நீதித்துறை

இந்தியக் கூட்டாட்சி, இரட்டை ஆட்சி அமைப்புமுறை கொண்டிருந்தாலும் இரட்டை நீதித்துறை அமைப்பைக் கொண்டிருக்கவில்லை. உயர் நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றமும், அரசமைப்பின் கீழ் ஒரு ஒருங்கிணைந்த நீதித்துறையாகச் செயல்பட்டு அனைத்து குடிமையியல் அல்லது குற்றவியல் வழக்குகளுக்கு தீர்வு காண்கிறது. தீர்வு வழங்கும் முறையில் வேறுபாடுகளைக் களைவதற்காக இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது.

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்

உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்பும் அதிகாரங்களும்: உச்ச நீதிமன்றமே அசல், மேல்முறையீட்டு மற்றும் ஆலோசனை வழங்குதல் என மூன்று அதிகார வரம்புகளைக் கொண்டுள்ளது. அசல் நீதி அதிகாரவரம்பு என்பது உச்ச நீதிமன்றங்களில் அனைத்து வழக்குகளுக்கும் மூலாதாரமாகிவிடுகிறது என்பதாகும்.இவை மத்திய அரசாங்கங்களுக்கும் அல்லது இதர மாநில அரசுகளுக்கும் இடையே எழும் கருத்து வேறுபாடுகள் அல்லது மாநிலங்களுக்கு இடையே எழுகின்ற சிக்கல்களையும் உள்ளடக்கியது ஆகும். அடிப்படை உரிமைகள் தொடர்புடைய வழக்குகளில் உச்ச நீதிமன்றமானது அசல் நீதித்துறை, மேல்முறையீட்டு அதிகார வரம்பு என இரண்டு அதிகாரங்களையும் கொண்டிருக்கிறது. மேலும் நீதிப்பேராணைகள் முறையே, ஆட்கொணர்வு, நெறியுறுத்தும் நீதிப்பேராணை, தகுதிமுறை வினவுதல், தடை, கீழமை நீதிமன்றங்களுக்கு ஆணையிடுதல், விளக்கம் கோரி ஆணையிடுதல் போன்ற ஆணைகளை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கிறது.

உச்ச நீதிமன்றம்தான் இந்தியாவில் உள்ள உச்சபட்ச மேல் முறையீட்டு நீதிமன்றமாகும். உயர் நீதிமன்றங்களுக்கு எதிரான மேல்முறையீடுகளை இங்கு தான் செய்ய முடியும் (குடிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகள் இரண்டிற்கும்). குறிப்பிட்ட விவகாரங்களில் வழிகாட்டுதல் வழங்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு உள்ளது.

விவாதம்

தலைப்பு: தாமதமாகும் நீதி, மறுக்கப்படும் நீதியே

கீழமை நீதிமன்றங்களில் 2.91 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளது; நீதி பரிபாலனம் தாமதம்.

10 ஆண்டுகளுக்கும் அதிகமாக வழக்குகள் அதிகம் தேக்கம் அடைந்துள்ள மாநிலங்களில் மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களில் மட்டும் 8 கோடி - வழக்குகளை நிலுவையாகக் கொண்டு உத்திரப்பிரதேச மாநிலம் முதலிடம் வகிக்கிறது.

தேசிய நீதித்துறை தகவல் அமைப்பின்படி, நாடு முழுவதும் மாவட்ட மற்றும் துணை நிலை நீதிமன்றங்களில் 2.91 கோடி வழக்குகள் தேக்கமடைந்துள்ளன. இவற்றில் 21.9 லட்சம் வழக்குகள் 10 ஆண்டுகளுக்கும் அதிகமாக நிலுவையில் உள்ளன.

தேசிய நீதித்துறை தகவல் அமைப்பின்படி, நாடு முழுவதும் மாவட்ட மற்றும் துணை நிலை நீதிமன்றங்களில் 2.91 கோடி வழக்குகள் தேக்கமடைந்துள்ளன. இவற்றில் 21.9 லட்சம் வழக்குகள் 10 ஆண்டுகளுக்கும் அதிகமாக நிலுவையில் உள்ளன.

வழக்குகள் அதிகமாக தேக்கமடைந்த மாநிலங்களில் உத்திரப்பிரதேச மாநிலத்திற்கு அடுத்தப்படியாக பீகார் மாநிலத்தில் மூன்று லட்சம் வழக்குகளும் மஹாராட்டிர மாநிலத்தில் இரண்டு லட்சம் வழக்குகளும் நிலுவையில் உள்ளன. சிக்கிம் மாநிலத்தில் இரண்டு வழக்குகள் மட்டுமே நிலுவையில் உள்ளது. அந்தமான் நிக்கோபார் மாநிலத்தில் ஒரு வழக்கும் நிலுவையில் இல்லை

தாமதமாகும் நீதி மறுக்கப்படும் நீதி என்ற தலைப்பில் மாணவர்களை இருப்பிரிவுகளாகப் பிரித்து உரையாடுவதற்கு ஆசிரியர் ஏற்பாடு செய்யலாம். ஒருக் குழுவினர் தலைப்பிற்கு ஆதரவாகவும் மற்றக் குழுவினர் தலைப்பிற்கு எதிராகவும் வாதிடும்படி கூறலாம்.

குடியரசுத்தலைவர் உச்ச நீதிமன்றத்திடம் எந்த ஒரு சட்ட விவகாரம் குறித்தும் ஆலோசனை கேட்டு அணுக முடியும். ஆனால் உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனைகளை குடியரசுத்தலைவர் ஏற்க வேண்டிய கட்டாயம் இல்லை.

உச்ச நீதிமன்றம் இந்திய அரசமைப்பின் பாதுகாவலனாக இயங்குகிறது அரசமைப்புக்கு விளக்கம் அளிப்பதில் உச்ச நீதிமன்றமே இறுதி அதிகாரம் கொண்டுள்ளது. நிர்வாக நடவடிக்கையோ, கீழமை நீதிமன்றங்களின் தீர்ப்புகளோ அரசமைப்பின் அடிப்படை நோக்கங்களுக்கு எதிராக உள்ளது என உச்ச நீதிமன்றம் கருதுமானால் அதனை ரத்து செய்யும் அதிகாரம் கொண்டுள்ளது.


உச்ச நீதிமன்றம் அமைப்பு

உச்ச நீதிமன்றமானது இந்திய அரசமைப்புப் பகுதி 5 அத்தியாயம் 4 மூலம் நிறுவப்பட்டுள்ளது. அரசமைப்பு உறுப்புகள் 124 முதல் 147 வரை இந்திய உச்ச நீதி மன்றத்தின் வடிவம் மற்றும் அதிகார வரம்புகள் குறித்து கூறுகின்றன. அரசமைப்பு ஆரம்பத்தில் ஒரு நீதிபதி, ஏழு கீழ்நிலை நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்றத்தினை அனுமதித்தது. இந்த எண்ணிக்கையை அதிகரிக்கவும் நாடாளுமன்றத்திற்கு அரசமைப்பு அதிகாரம் கொடுத்திருந்தது. 2008-ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 30ஆக அதிகரித்தது (2019ன்படி 34 நீதிபதிகள், தலைமை நீதிபதி உள்பட).

உச்ச நீதிமன்ற நீதிபதியை நியமனம் செய்வதற்கு, தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்றத்தின் இதர நான்கு மூத்த நீதிபதிகள் கொண்ட குழு"-வுடன் (Collegium) கலந்தாலோசிக்க வேண்டும். புதிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குறித்து குழு ஒருமித்த கருத்து அடிப்படையில் பரிந்துரைக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் ஒவ்வொரு நீதிபதியும் அமைச்சரவை மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுடன் கலந்தாலோசனை செய்த பின்னர் குடியரசுத்தலைவரால் நியமனம் செய்யப்படுகிறார். அவ்வாறு நியமனம் செய்யும் உச்ச நீதிமன்ற நீதிபதி 65 வயது அடையும் வரை பதவியில் இருக்கலாம். எந்த ஒரு நீதிபதியாவது பதவி விலக நினைத்தால், தன்னால் கைப்பட எழுதிய பதவி விலகல் கடிதத்தில் கையொப்பமிட்டு குடியரசுத்தலைவருக்கு சமர்ப்பிக்க வேண்டும். ஒரு நீதிபதியை நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றுவதன் மூலம் பதவி நீக்கம் செய்ய முடியும்.

ஒருவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட அவர் இந்தியக் குடியுரிமை பெற்றிருத்தல், உயர் நீதிமன்ற நீதிபதியாக ஐந்து ஆண்டுகள், பணியாற்றிய அனுபவம் அல்லது குறைந்தது 10 ஆண்டுகள், தொடர்ந்து ஒன்று அல்லது இரண்டுக்கு மேற்பட்ட உயர் நீதிமன்றங்களில் வழக்குரைஞராகப் பணியாற்றிய அனுபவம் இவற்றுடன் நாடாளுமன்றம் விதித்துள்ள தகுதிகளையும் கொண்டிருக்க வேண்டும் அல்லது அத்தகைய ஒரு நபர் கட்டாயம் குடியரசுத்தலைவரின் கருத்தில் தலைசிறந்த சட்ட நிபுணராக இருக்க வேண்டும்


நியமனங்கள் அனைத்தும் பொதுவாக பணிமூப்பு அடிப்படையில் செய்யப்படுகிறது.


பட்டியலினத்தவர் சமுதாயத்தில் இருந்து ஒருவர் முதல் முறையாக 2000-இல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். அவர் நீதிபதி  கே.ஜி. பாலகிருஷ்ணன் ஆவார். இவர்  2007-இல் பட்டியலினத்தைச் சார்ந்த முதல் தலைமை நீதிபதியாக உயர்ந்தார்.

தற்போதுள்ள அரசமைப்பின் கீழ் இந்திய உச்ச நீதிமன்றம் ஜனவரி 28, 1950-ஆம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கியது. தொடக்கத்தில் நாடாளுமன்றத்தின் இளவரசர்கள் மாடத்தில் செயல்பட்டது. 1958-ஆம் ஆண்டு தற்போது உள்ள வளாகத்துக்கு மாற்றப்பட்டது.


நீதிபதி ஹரிலால் ஜெ.கனியா, உச்ச நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி ஆவார். அவருடன் நீதிபதிகளாக பதிவியேற்றவர்கள் முறையே, நீதிபதி சையத் பாசல் அலி, பதஞ்சலி சாஸ்திரி, நீதிபதி மெகர்சந் மகாஜன், நீதிபதி பிஜன் குமார், நீதிபதி முகர்ஜி மற்றும் நீதிபதி எஸ். ஆர். தாஸ் ஆகியோர்கள் ஆவர்.


உயர் நீதிமன்றங்கள்

உயர் நீதிமன்றங்கள் மாநிலங்களின் தலைமை நீதித்துறை நிர்வாக அமைப்பு ஆகும். அரசமைப்புப்படி ஒவ்வொரு மாநிலமும் ஒரு உயர் நீதிமன்றத்தை பெற்றிருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தபோதும், தற்போது நான்கு மாநிலங்கள் ஒன்றுக்கு அதிகமான மாநிலங்களுடன் இணைந்த உயர் நீதிமன்றத்தினைக் கொண்டுள்ளன. ஆறு ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட பகுதிகள் அருகே அமைந்த மாநிலத்தின் உயர் நீதிமன்றத்தின் நீதி அதிகார வரம்பின் கீழ் வருகின்றன. ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் டில்லி மட்டுமே தனக்கான உயர் நீதிமன்றத்தினைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு உயர் நீதிமன்றமும் ஒரு தலைமை நீதிபதியையும் இதர நீதிபதிகளையும் கொண்டிருக்கிறது.


குறிப்பிட்ட இடைவெளிகளில் குடியரசுத்தலைவர் உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்கின்றார். உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியினை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, மாநிலத்தின் ஆளுநர் ஆகியோரை கலந்தாலோசித்து குடியரசுத்தலைவர் நியமனம் செய்கிறார், பிற நீதிபதிகள் நியமனத்தில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் பரிந்துரைகளும் ஆலோசனை கேட்கப்படும். உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் 62 வயது நிரம்பும் வரை பதவியில் இருப்பார். பதவி நீக்கத்தை பொருத்தவரை உச்ச நீதிமன்ற நீதிபதியின் பதவி நீக்க நடைமுறை போலவே இருக்கும். உயர் நீதிமன்ற நீதிபதி நியமனத்திற்கு ஒருவர், இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும் 10 ஆண்டுகள் நீதித் துறையில் பணிபுரிந்திருக்க வேண்டும் அல்லது 10 ஆண்டுகள் உயர் நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி இருக்க வேண்டும்.

உயர் நீதிமன்றத்தின் வழக்குகள் மாநில ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் அசல் நீதித்துறை மற்றும் மேல்முறையீட்டு அதிகார வரம்பு ஆகியனவற்றை உள்ளடக்கியது. ஒவ்வொரு உயர் நீதிமன்றமும் தனது கீழ் உள்ள கீழமை நீதிமன்றங்களின் மீது மேலாதிக்க அதிகாரம் கொண்டிருக்கிறது. உயர் நீதிமன்றங்கள் தனித்த, ஒருங்கிணைந்த நீதித்துறை அதிகார அமைப்பாக இருந்தாலும் அவை இன்னும் முழுமையான சுதந்திரமான நீதித்துறை நிறுவனங்கள் எனக் கூறமுடியாது.

உச்ச நீதிமன்றம் அவைகளின் மீது நேரடியான நிர்வாக கட்டுப்பாடு எதுவும் கொண்டிருக்கவில்லை, அவை எந்த விதத்திலும் சட்டமன்றத்தாலோ அல்லது மாநில ஆட்சித்துறையாலோ கட்டுப்படுத்தப்படுவதில்லை. ஆனால் அவற்றின் நீதிபதிகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உடனான ஆலோசனைக்கு பிறகு குடியரசுத்தலைவரால் ஒரு உயர் நீதிமன்றத்தில் இருந்து மற்றொரு உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட முடியும். உயர் நீதிமன்றங்களும் கூட அடிப்படை உரிமைகள் தொடர்புடைய வழக்குகளில் நீதிப் பேராணைகள் வழங்கும் அதிகாரங்கள் கொண்டவைகளாகும்.


அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்கான சட்ட வழித்தீர்வுகள்

உரிமைகள் மீறப்பட்ட நபர்களுக்கு விரைந்து நீதி வழங்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் பார்வையில் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்கள் இரண்டும் நீதிப் பேராணைகள் இடைக்கால உத்தரவு வழங்கும் அதிகாரங்கள் கொண்டிருக்கின்றன. அவைகள் ஐந்து வகைப்படும்.

1) ஆட்கொணர்வு நீதிப்பேராணை

இதன் பொருள் ஒரு நபரை உயிருடன் கொண்டு வந்து நிறுத்தும்படி கூறுவதாகும். இந்த நீதிப்பேராணை ஒரு நபர் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு வழக்கிற்கு பொருந்தக் கூடியதாகும். இந்த நீதிப்பேராணையானது ஒவ்வொரு தனிநபரின், தனிநபர் சுதந்திரத்தைப் பாதுகாக்கிறது.

2) நெறியுறுத்தும் நீதிப்பேராணை

இந்த பேராணையானது, சட்டப்படி இயங்கும் படியும், சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளைத் தடுப்பதற்கும் இடப்படும் ஆணையாகும். இதன் பொருள் எந்த ஒரு அதிகாரம் கொண்டோரையும் அவரின் சட்டபூர்வமான கடமையை செய்ய உத்தரவிடுவதை குறிக்கும். இந்த நெறிமுறையுறுத்தும் நீதிப்பேராணயானது, சட்டபூர்வ கடமையை வலியுறுத்துவதுடன், பொது மக்கள் நலன் காக்கும் கடமையை செய்ய மறுக்கும் அதிகாரி, அலுவலர்கள், அரசு என நீதிமன்ற அமைப்புகளுக்கு எதிராகக் கூட ஆணையிடக் கூடியதாகும்.

3) தடை நீதிப்பேராணை

இந்த நீதிப் பேராணையானது உயர்மட்ட நீதிமன்றம், கீழ்நிலை நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயங்கள் தங்களின் அதிகார வரம்பை மீறி நடப்பதைத் தடுக்கும் விதமாக வழங்கப்படுவதாகும். இந்த தடை ஆணை நீதித்துறை சார்ந்த அமைப்புகள் அல்லது பகுதி அளவு மட்டுமே நீதித்துறை அமைப்புகளுக்கு எதிராக மட்டும் வழங்கப்படும் தடை ஆணைகள் ஆகும்.

4) தகுதி முறை வினவும் நீதிப் பேராணை

இதன் பொருள், எந்த அதிகாரத்தின் அடிப்படையில் அல்லது பணி சான்றிதழ் ஆணை அடிப்படையில் எனவினா எழுப்புவதை குறிப்பிடுவதாகும். இதன் பொருள் ஒரு நபர், ஒரு அரசு அலுவலக பதவியில், எந்தத் தகுதியின் அடிப்படையில் அமர்ந்திருக்கிறார் என வினா எழுப்பும் படியான விவகாரத்தில் வழங்கப்படும் நீதிப்பேராணையாகும்.

5) விளக்கம் கோரும் ஆணை

ஒரு பொது அலுவலில் சட்டபூர்வ நிலையை ஒருவர் எதன் அடிப்படையில் அல்லது எந்த அதிகார அமைப்பின் அடிப்படையில் அதில் அமர்த்தப்பட்டார் என்று கேள்விக்கேட்பது ஆகும்.மேற்கண்ட நீதிப் பேராணைகளோடு, உயர் நீதிமன்றமானது சட்ட உறுப்பு 266-ன் கீழ் பொது மக்கள் நலன்கருதி வழிகாட்டுதல்கள், உத்தரவுகள் பிறப்பதாகும்.


Tags : Uniqueness, Sources of Law, Jurisdiction and Powers, Organization, Appointments, High Courts, Legal Remedies | Indian Judiciary | Political Science உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்பும் அதிகாரங்களும், அமைப்பு,.
12th Political Science : Chapter 4 : Indian Judiciary : Supreme Court of India Uniqueness, Sources of Law, Jurisdiction and Powers, Organization, Appointments, High Courts, Legal Remedies | Indian Judiciary | Political Science in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 4 : இந்திய நீதித்துறை : இந்திய உச்ச நீதிமன்றம் - உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்பும் அதிகாரங்களும், அமைப்பு, : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 4 : இந்திய நீதித்துறை