Home | 12 ஆம் வகுப்பு | 12வது வரலாறு | தமிழ்நாட்டில் சுதேசி இயக்கம்

தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும் - வரலாறு - தமிழ்நாட்டில் சுதேசி இயக்கம் | 12th History : Chapter 2 : Rise of Extremism and Swadeshi Movement

   Posted On :  08.07.2022 08:13 pm

12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 2 : தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும்

தமிழ்நாட்டில் சுதேசி இயக்கம்

தமிழ்நாட்டில் அதிலும் குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற சுதேசி இயக்கம் பெரும் கவனத்தையும் ஆதரவையும் பெற்றது.

தமிழ்நாட்டில் சுதேசி இயக்கம்

தமிழ்நாட்டில் அதிலும் குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற சுதேசி இயக்கம் பெரும் கவனத்தையும் ஆதரவையும் பெற்றது. ஆங்கில தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும் ஆட்சிக்கு எதிராக ஒன்று திரண்ட கோபத்தைப் பொதுச் சரடாகக் கொண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற சுதேசி இயக்கம் அனைத்திந்திய பண்புகளைப் பெற்றிருந்தது. அதே சமயம் அது தமிழ் உணர்வாலும் பெருமையாலும் ஆதரிக்கப்பட்டது. தமிழ்நாட்டுக் காங்கிரசில் மிதவாத தேசியவாதிகளுக்கும் தீவிர தேசியவாதிகளுக்கும் இடையே ஆழமானப் பிரிவு இருந்தது .

 

(அ) வட்டாரமொழி சொற்பொழிவுக் கலையின் வளர்ச்சி

தொடக்கத்தில் இவ்வியக்கம் பெருமளவில் வங்கப்பிரிவினைக்கு எதிரான எதிர் வினையாகவே இருந்தது. வங்கப்பிரிவினைக்கு எதிராகக் கூட்டங்கள் வழக்கமாக நடைபெற்றன. இவ்வாறான கூட்டங்களில் தலைவர்கள், மாணவர்கள், வழக்கறிஞர்கள், தொழிலாளர்கள் என அச்சமயம் கூடியிருப்போரிடம் வட்டார மொழியில் சொற்பொழிவாற்றினர். ஆங்கிலத்தில் சொற்பொழிவாற்றுவதென்பதிலிருந்து வட்டார மொழியில் சொற்பொழிவு நிகழ்த்துவது என ஏற்பட்ட மாற்றம் இக்காலத்தில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும். இது தமிழ்நாட்டின் வெகுஜன அரசியலின் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

மெரினாக் கடற்கரையில் சுதேசி கூட்டங்கள் நடைபெறுவது வழக்கமாகக் காணக்கூடிய காட்சியாயிற்று. இவ்வாறான கூட்டங்கள் நடைபெறும் மற்றொரு இடம் மூர்மார்க்கெட் வளாகமாகும். 1905-1907 காலப் பகுதியைச் சேர்ந்த காவல்துறை அறிக்கைகள் மாணவர்களை ஆபத்தானவர்கள், அவர்களின் நடவடிக்கைகள் ஆட்சிக்கு எதிரானவை எனவும் குறிப்பிட்டன. பொது இடங்களில் ஐரோப்பியர்கள் மாணவர்களால் "வந்தே மாதரம்" எனும் முழக்கத்துடன் வாழ்த்தப்பட்டனர். 1907இல் சென்னைக்கு வருகை தந்த பிபின் சந்திர பால் சென்னைக் கடற்கரையில் ஆற்றிய உரைகள் பார்வையாளர்களிடையே உத்வேகத்தை ஏற்படுத்தின. அவருடைய வருகை தமிழகம் முழுவதிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. தமிழில் ஆற்றப்பட்ட பொதுச் சொற்பொழிவுகள் தமிழ்நாட்டின் அரசியல் செயல்பாடுகள் கருக்கொள்ளத் தொடங்கிய காலத்தில் காணப்படாதப் புதிய பார்வையாளர்களை உருவாக்கியது.

 

(ஆ) வ.உ.சி. யும் சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனியும் (SSNC)

1906இல் வ.உ. சிதம்பரம் ஆங்கிலேயரின் கடற்பயண முற்றுரிமைக்கு எதிராகச் சுதேசி கப்பல் கம்பெனி ஒன்றை ஏற்படுத்தும் கருத்தை வெளிப்படுத்தியபோது தமிழ்நாட்டின் சுதேசி இயக்கம் தேசத்தின் கவனத்தைப் பெற்றது.


1906இல் வ.உ.சி. சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனி (Swadeshi Steam Navigation Company - SSNC) எனும் கூட்டுப் பங்கு நிறுவனத்தைப் பதிவு செய்தார். மொத்த முதலீடான 10 லட்சம் 40, 000 பங்குகளாகப் பிரிக்கப்பட்டு ஒரு பங்கு 25 வீதம் இந்தியர்கள், இலங்கையைச் சேர்ந்தவர்கள், ஆசிய நாடுகளைச் சேர்ந்தோருக்கு மட்டும் விற்பனை செய்யப்பட்டது. வ.உ.சி. S.S.கலியா, S.S.லாவோ என்னும் இரண்டு நீராவிக் கப்பல்களை வாங்கினார். நாட்டின் ஏனையப் பகுதிகளில் சுதேசிச் செயல்பாடுகள் என்பது மெழுகுவர்த்தி செய்வது, வளையல்கள் செய்வது போன்ற குறிப்புணர்த்தும் அடையாள நடவடிக்கைகளாக இருந்தபோது, சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனியை உருவாக்குவது என்ற எண்ணம் உண்மையில் கண்ணையும் கருத்தையும் கவர்வதாக அமைந்தது. வ.உ.சி. அப்பகுதியின் வளமான வரலாற்றையும் இந்தியாவின் பண்டைய காலக் கடற்பயணப் பெருமைகளையும் துணையாகக் கொண்டார். சுதேச இயக்கத்திற்கு ஆதரவாக மக்களின் கருத்தைத் தூண்டுவதற்கு மீண்டும் மீண்டும் அவற்றைக் குறிப்பிட்டார்.

வ.உ.சி.யின் சுதேசி இயக்க முன்னெடுப்பு தேசியத் தலைவர்களால் பாராட்டப் பெற்றது. சுதேசி கப்பல் நிறுவனத்தின் வெற்றி குறித்து லோகமான்ய திலகர் தன்னுடைய கேசரி, மராட்டா பத்திரிகைகளில் எழுதினார். அரவிந்த கோஷம் சுதேசி முயற்சிகளைப் பாராட்டி கம்பெனியின் பங்குகள் விற்பனையாவதற்கு உதவினார். பாண்டித்துரையும், ஹாஜி பக்கீர் முகமதுவும் பெரிய பங்குதாரர்களில் இருவராவர்.


தொடக்கத்தில் ஆங்கில நிர்வாகம் சுதேசிக் கப்பல் கம்பெனியைக் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தியது. நாளடைவில் சுதேசிக் கப்பல் கம்பெனிக்கான ஆதரவு பெருகியபோது ஐரோப்பிய அதிகாரிகள் ஒருதலைபட்சமாகவும் இன வேற்றுமை உணர்வுடனும் நடந்து கொண்டனர்.

 

(இ) கோரல் நூற்பாலை வேலை நிறுத்தம்

சூரத் மாநாட்டில் பங்கேற்ற பின்னர் ஊர் திரும்பிய வ.உ.சி. ஓர் அரசியல் அமைப்பைத் தொடங்குவதற்கானப் பணிகளைச் செய்யத் திட்டமிட்டார். ஒரு நல்ல பேச்சாளரை அவர் தேடிக் கொண்டிருந்த தருணத்தில் சுதேசி இயக்கத்தைப் போதித்து வந்த சுப்ரமணிய சிவாவைச் சந்தித்தார். 1907இல் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இருவரும் தூத்துக்குடிக் கடற்கரையில் தினந்தோறும் பொதுக் கூட்டங்களில் பேசினர். மக்களுக்குச் சுதேசி குறித்தும் புறக்கணித்தல் பற்றியும் கற்றுக் கொடுத்தனர். ஆயிரக்கணக்கில் மக்கள் இக்கூட்டங்களில் கலந்து கொண்டனர். இப்பொதுக்கூட்டங்களை அரசு உன்னிப்பாகக் கண்காணித்தது.

1908இல் கோரல்மில் தொழிலாளர்களின் படுமோசமான வேலை, வாழ்க்கைச் சூழல்கள் வ.உ.சி., சிவா ஆகியோரின் கவனத்தைக் கவர்ந்தது. தொடர்ந்து வந்த சில நாட்களில் தலைவர்கள் இருவரும் தொழிலாளர்களிடம் உரையாற்றினர். அவ்வுரைகளால் தூண்டப்பெற்று கோரல் பருத்தி நூற்பாலைத் தொழிலாளர்கள் மார்ச் 1908இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்தியாவில் திட்டமிட்டு நடத்தப்பட்ட தொடக்ககால வேலை நிறுத்தங்களில் இதுவும் ஒன்றாகும்.

தேசிய செய்திப் பத்திரிகைகள் நூற்பாலைத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை முழுமையாக ஆதரித்தன. இருந்தபோதிலும் ஆலை உரிமையாளர்கள் அசைந்து கொடுக்கவில்லை. வேலை நிறுத்தத்தை ஒடுக்க நினைத்த அரசு ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாக இருந்தது. தொழிலாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் தலைவர்கள் தூத்துக்குடி நகரினுள் கூட்டங்கள் நடத்தத் தடை விதிக்கப்பட்டது. முடிவில் ஆலை முதலாளிகள் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடிவு செய்தனர்.

தொழிலாளர்களின் வெற்றி வங்காளத்து தீவிர தேசியவாதிகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. வங்காளத்துச் செய்திப் பத்திரிகைகள் இவ்வெற்றியை வாழ்த்தின. இவ்வெற்றி கற்றறிந்த மக்களுக்கும் பொதுமக்களுக்குமிடையே ஒரு இணைப்பை உருவாக்கியுள்ளது. அதுவே சுயராஜ்ஜியத்தை நோக்கி எடுத்து வைக்கப்பட்ட உன்னதமான முதல் அடியாகும். இந்தியத் தொழிலாளியின் ஒவ்வொரு வெற்றியும் நாட்டிற்குக் கிடைத்த வெற்றி..." என அரவிந்த கோஷின் வந்தே மாதரம் புகழாரம் சூட்டியது.

 

(ஈ) சுப்ரமணிய பாரதி: கவிஞர் மற்றும் தேசியவாதி

ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியான செய்திப் பத்திரிக்கைகளின் வளர்ச்சி தமிழகத்தில் சுதேசி இயக்கத்திற்குத் துணை நின்றது. செய்திப் பத்திரிகையை பயன் படுத்தி தேசியவாதச் செய்திகளை விரிந்துபட்ட பார்வையாளர்களிடையே பரப்புரை செய்த தலைவர்களுள் முதன்மையானவர் G. சுப்ரமணியம். அவர் வேறு ஐந்து நபர்களுடன் இணைந்து தி இந்து (The Hindu) மற்றும் சுதேசமித்திரன் (தமிழில் வெளியிடப்பட்ட முதல் தினசரி) எனும் பத்திரிகைகளை நிறுவினார். 1906இல் பர்சால் காங்கிரஸ் மாநாட்டின் போது ஆங்கிலேயர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை விமர்சித்து அவர் ஒரு புத்தகத்தை வெளியிட்டார். சுதேசமித்திரன் தேசியவாதிகளின் செயல்பாடுகள் குறித்து குறிப்பாக வ.உ.சி. தூத்துக்குடியில் ஆற்றிய உரைகள் பற்றி விரிவான செய்திகளை வெளியிட்டது.


இந்திய தேசியவாதம் ஒரு புதிய வழிகாட்டுதலை எதிர்பார்த்துக் கொண்டிருந்த காலப்பகுதியில் (1904) சுப்ரமணிய பாரதி சுதேசமித்திரன் பத்திரிகையின் துணையாசிரியராகப் பணியமர்த்தப்பட்டார். பாரதி சக்ரவர்த்தினி எனும் மாத இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். அது பெண்களின் மேம்பாட்டிற்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட பத்திரிகையாகும்.

இரு நிகழ்வுகள் சுப்ரமணிய பாரதியின் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தினை ஏற்படுத்தின. அயர்லாந்து நாட்டுப் பெண்மணியும் விவேகானந்தரின் சீடருமான சகோதரி நிவேதிதாவை அவர் 1905இல் சந்தித்தது முதலாவதாகும். குருமணி (ஆசிரியர்) என அவரால் குறிப்பிடப்பட்ட அப்பெண்மணி அவரின் தேசியவாதச் சிந்தனைகளுக்கு ஊக்கமளித்தார்.

ஆங்கிலேய ஆட்சியை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து காங்கிரசுக்குள் நிலவிய கருத்துக் குழப்பம் மற்றொன்றாகும். இப்பாடத்தில் முன்னர் விவாதிக்கப்பட்டது போல் சட்டத்திற்கு உட்பட்ட முறைகளைப் பின்பற்ற விரும்பிய மிதவாத தேசியவாதிகளை 'யாசிப்பவர்கள்' என தீவிர தேசியவாதிகள் ஏளனம் செய்தனர். ஆங்கில ஆட்சி புதிய அணுகுமுறையில் எதிர்கொள்ளப்பட வேண்டும் என நினைத்த பாரதியாருக்கு தீவிர தேசியவாதிகளின் வழிமுறைகள் அதிகம் ஏற்புடையனவாய் இருந்தன. எடுத்துக்காட்டாக காங்கிரசின் சூரத் மாநாட்டிற்குப் (1907) பின்னர் திலகர் மீது அவர் கொண்டிருந்த ஆர்வமும் பற்றும் மேலும் பெருகியது. திலகரின் Tenets of New party எனும் நூலை பாரதி தமிழில் மொழியாக்கம் செய்தார். மேலும் 1907இல் சூரத் சென்று வந்த பயணம் சென்னை மாகாணத் தீவிர தேசியவாதிகள் குறித்து' எனும் சிறு புத்தகமொன்றை வெளியிட்டார். பாரதி ஆசிரியராகப் பணியாற்றிய இந்தியா என்ற வார இதழ் தீவிர தேசியவாதிகளின் குரலாக மாறியது.

 

(உ) வ.உ.சி., சுப்ரமணிய சிவா கைதும் சிறை வாசமும்

ஆறுமாத காலச் சிறை தண்டனைக்கு பின்னர் பிபின் சந்திர பால் 1907 மார்ச் 9இல் வி டு தலை செய்யப்பட்டார். அந்நாளை தமிழ்நாட்டுச் சுதேசி இயக்கத் தலைவர்கள் சுதேசி தினமாக திருநெல்வேலியில் கொண்டாட முடிவு செய்தனர். அரசு நிர்வாகம் அனுமதி மறுத்ததையும் மீறி வ.உ.சி., சுப்ரமணிய சிவா, பத்மநாபர் ஆகியோர் செயல்பட்டனர். அவர்கள் 1908 மார்ச் 12இல் தேச துரோகக் குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டனர்.

முக்கியமான சுதேசி இயக்கத் தலைவர்கள் கைது செய்யப்பட்டதால் சினம் கொண்ட உள்ளூர் மக்கள் எதிர்வினையாக வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் கடையடைப்பு நடத்தப்பெற்றது. திருநெல்வேலியில் நகரசபைக் கட்டடமும் காவல் நிலையமும் தீ வைக்கப்பட்டன. மிக முக்கியமாக சுதேசித் தலைவர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து நூற்பாலைத் தொழிலாளர்கள் பெருவாரியான எண்ணிக்கையில் ஆலையை விட்டு வெளியே வந்தனர். எதிர்ப்புத் தெரிவித்தக் கூட்டத்தாரோடு ஏற்பட்ட சில மோதல்களுக்குப் பின்னர் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் நால்வர் கொல்லப்பட்டனர்.


1908 ஜுலை 7இல் வ.உ.சி. யும், சுப்ரமணிய சிவாவும் குற்றம் செய்தனர் என அறிவிக்கப்பட்டு தேச துரோகக் குற்றத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டனர். அரசுக்கு எதிராகப் பேசிய குற்றத்திற்காகச் சிவாவுக்கு 10 ஆண்டுகள் நாடு கடத்துதல் தண்டனையும் அவருக்கு உடந்தையாக இருந்ததற்காக வ.உ.சி. க்கு ஆயுள் தண்டனையும் (20 ஆண்டுகள் ) விதிக்கப் பெற்றது. வ. உ.சி அரசை எதிர்த்துப் பேசிய குற்றத்திற்காக மேலும் ஒரு ஆயுள் தண்டனை விதிக்கப்பெற்றார். திருநெல்வேலியில் போராட்டங்களை எந்த அளவிற்கு அரசு தீவிரத்துடன் நோக்கியது என்பதை இக்கொடூரமான தண்டனைகள் உணர்த்துகின்றன.

இந்நிகழ்ச்சியின் பின்விளைவாக ஆங்கிலேய அரசின் அடக்குமுறையானது ஒரு சில தலைவர்களைக் கைது செய்ததோடு நின்றுவிடவில்லை. உண்மையில் செயலூக்கத்துடன் எதிர்ப்பியக்கத்தில் கலந்து கொண்ட மக்களும் தண்டிக்கப்பட்டனர். திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதிகளைச் சேர்ந்த மக்களிடம் காவல்துறை தண்டனையால் வரியும் வசூலிக்கப்பட்டது.

பேரரசருக்கு எதிரான வ.உ.சி., சுப்ரமண்ய சிவா வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் சில பகுதிகள் (நவம்பர் 4, 1908)

ஆட்சிக்கு எதிராக மக்களைத் தூண்டுவது அது எப்போதானாலும் சரி மிக மோசமான குற்றமென்றே எனக்குத் தோன்றுகிறது. இம்மாகாணத்தில் இவ்வகைப்பட்ட வழக்குகளில் இதுவே முதல் வழக்கு என்பது உண்மை . ஆனால் இக்குற்றம் கால் ஊன்றுவதற்கு எந்த மாகாணங்களிலெல்லாம் இடத்தைப் பெற்றுவிட்டதோ, அவைகளில் நிலவும் இப்போதைய நிலைமைகள், மிதமான தண்டனைகளான சில மாதங்கள் சிறை தண்டனை அல்லது ஒன்று அல்லது இரண்டாண்டுகள் சிறை தண்டனைகளானது தகுதியற்றோர்க்கு வழங்கப்பெற்ற சலுகைகள் எனச் சுட்டிக்காட்டுவதாய்த் தோன்றுகிறது. தண்டனையின் குறிக்கோளானது குற்றவாளிக்கு மட்டுமல்ல, அவருடைய முன்னுதாரணத்தை பின்பற்ற விழையும் மற்றவர்க்கும் அச்சமூட்டுவதாய் அமைய வேண்டும். ஏறத்தாழ ஒரு புரட்சியாக முடிந்து விட்ட ஒரு அரசு எதிர்ப்பியக்கத்தைக் கையாள வேண்டியுள்ளது. கலகங்களை அடக்கும் போது இழக்கப்பட்ட உயிர்களுக்கு தார்மீக அடிப்படையில் இவர்களே பொறுப்பாவர் என்பது அவர்களைக் கைது செய்தலில் உறுதியாகிவிட்டது.

 

(ஊ) ஆஷ் படுகொலை

தூத்துக்குடியில் சுதேசி முயற்சிகள் அடக்கப்பட்டது அதனைத்தொடர்ந்து சுதேசி இயக்கத் தலைவர்கள் கைது செய்யப்பட்டு அவமானப்படுத்தப்பட்டது ஆகியவை இளைஞர்களிடையே பெரும் கோபத்தை உருவாக்கின. திருநெல்வேலி நிகழ்வுக்குப் பழி வாங்குவதற்காக ஒரு சதித்திட்டம் தீட்டப்பட்டது. ஆங்கிலேயரின் அடக்குமுறை குறித்து பத்திரிகைகள் தொடர்ந்து பரப்புரை செய்தது. நிர்வாகத்திற்கு எதிராக மக்களிடையே கோபத்தை உண்டாக்குவதில் தீர்மானகரமானப் பங்கை வகித்தது.


திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ராபர்ட் ஆஷ், ஜுன் 1911இல் மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனால் சுட்டுக் கொல்லப்பட்டார். 1880இல் திருவாங்கூர் அரசின் பகுதியில் பிறந்த வாஞ்சிநாதன் அவ்வரசின் ஆட்சியிலிருந்த புனலூரில் வனத்துறையில் காவலராகப் பணியாற்றினார். 'பாரத் மாதா' என்ற புரட்சிகர தேசியவாதக் குழுவில் அவரும் ஒரு உறுப்பினராவார்.ஐரோப்பிய அதிகாரிகளைக் கொல்வதன் மூலம் இந்தியர்களைப் புரட்சிக்குத் தூண்டுவதே இவ்வமைப்பின் குறிக்கோளாகும். இச்செயல்பாடுகள் சுயராஜ்ஜியத்திற்கு இட்டுச்செல்லும் என அவர்கள் நம்பினர். திட்டத்தின் ஒரு பகுதியாக வாஞ்சிநாதனுக்கு கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தும் பயிற்சியை வ.வே. சுப்ரமணியம் பாண்டிச்சேரியில் வழங்கினார்.


மணியாச்சி ரயில் நிலையத்தில் ஆஷை சுட்ட பின்னர் வாஞ்சிநாதன் அதே துப்பாக்கியால் தன்னைச் சுட்டுக் கொண்டார். அவர் பையில் இருந்த கடிதம் வாஞ்சிநாதன் போன்ற தேசபக்த புரட்சியாளர்களுடைய ஆவேசத்தின் இழைகளைப் புரிந்து கொள்ள நமக்கு உதவுகின்றது.

 

படுகொலையின் பின்விளைவுகள்

விசாரணையின் போது ஆஷ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் பாண்டிச்சேரியில் தலைமறைவாய் இருக்கும் வ.வே. சுப்ரமணியரும் ஏனையோரும் நெருக்கமாக இருந்து இணைந்து செயல்பட்டுள்ளனர் என்பதை ஆங்கில அரசு மெய்ப்பித்தது. பாண்டிச்சேரி குழுவினர் குறித்தும் அவர்களது நடவடிக்கைகள் பற்றியும் காலனிய அரசு பெரும் சந்தேகம் கொண்டது. இத்தகையதோர் சூழ்நிலை தேசியவாதக் கருத்துகளைப் பரப்புரை செய்யவும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இயலாத நிலையை ஏற்படுத்தியது. கொலையின் பின்விளைவாக காலனியரசு மேற்கொண்ட அடக்குமுறை நடவடிக்கைகளின் விளைவாகத் தமிழ்நாட்டில் தேசிய இயக்கம் செயல்வேகம் குறைந்த, மந்த கதியிலான ஒரு காலகட்டத்தை எதிர்கொண்டது. 1916இல் தன்னாட்சி இயக்கத்தையொட்டி அது ஒருவகையான புத்துயிர்ப்பைப் பெற்றது.

Tags : Rise of Extremism and Swadeshi Movement | History தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும் - வரலாறு.
12th History : Chapter 2 : Rise of Extremism and Swadeshi Movement : Swadeshi Campaign in Tamil Nadu Rise of Extremism and Swadeshi Movement | History in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 2 : தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும் : தமிழ்நாட்டில் சுதேசி இயக்கம் - தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும் - வரலாறு : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 2 : தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும்