தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் - சுதேசி இயக்கம் | 10th Social Science : History : Chapter 9 : Freedom Struggle in Tamil Nadu

   Posted On :  27.07.2022 05:06 am

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 9 : தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

சுதேசி இயக்கம்

வங்கப் பிரிவினை (1905) சுதேசி இயக்கத்திற்கு இட்டுச் சென்று விடுதலைப் போராட்டத்தின் போக்கை மாற்றியமைத்தது. இந்தியாவின் பல பகுதிகளில் குறிப்பாக வங்காளம், பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய பகுதிகளில் புகழ்பெற்ற தலைவர்கள் தோன்றினர்.

சுதேசி இயக்கம்

வங்கப் பிரிவினை (1905) சுதேசி இயக்கத்திற்கு இட்டுச் சென்று விடுதலைப் போராட்டத்தின் போக்கை மாற்றியமைத்தது. இந்தியாவின் பல பகுதிகளில் குறிப்பாக வங்காளம், பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய பகுதிகளில் புகழ்பெற்ற தலைவர்கள் தோன்றினர். கொல்கத்தா காங்கிரசில் மேற்கொள்ளப்பட்ட திட்டத்தின்படி சுதேசி நிறுவனங்களை ஊக்குவித்தல், அந்நியப் பண்டங்களைப் புறக்கணித்தல், தேசியக் கல்வியை முன்னெடுத்தல் ஆகியவற்றை அவர்கள் நடைமுறைப்படுத்தினர்.


(அ) தமிழ்நாட்டின் எதிர்வினை

வ. உ. சிதம்பரனார், V. சர்க்கரையார், சுப்பிரமணிய பாரதி, சுரேந்திரநாத் ஆரியா ஆகியோர் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறந்த தலைவர்களாவர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கலந்து கொண்ட பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. மக்களைத் திரட்டுவதற்கு முதன் முதலாக தமிழ் பயன்படுத்தப்பட்டது. மக்களின் நாட்டுப்பற்று உணர்வுகளைத் தட்டி எழுப்பியதில் சுப்பிரமணிய பாரதியின் தேசபக்திப் பாடல்கள் மிக முக்கியமானவையாகும். சுதேசி கருத்துகளைப் பரப்புரை செய்ய பல இதழ்கள் தோன்றின. சுதேசமித்திரன், இந்தியா ஆகிய இரண்டும் முக்கிய இதழ்களாகும். தீவிர தேசியவாதத் தலைவரான பிபின் சந்திரபால் சென்னையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது ஆற்றிய சொற்பொழிவுகள் இளைஞர்களைக் கவர்ந்தன. சுதேசி இயக்கத்தில் மாணவர்களும் இளைஞர்களும் பெருமளவில் பங்கேற்றனர்.


சுதேசி நீராவி கப்பல் நிறுவனம்

சுதேசியைச் செயல்படுத்துவதில் மேற்கொள்ளப்பட்ட துணிகரமான நடவடிக்கைகளில் ஒன்று யாதெனில் தூத்துக்குடியில் வ. உ. சிதம்பரனாரால் தொடங்கப்பட்ட சுதேசி நீராவி கப்பல் நிறுவனம் ஆகும். இவர் காலியா மற்றும் லாவோ எனும் இரு கப்பல்களை விலைக்கு வாங்கி அவற்றை தூத்துக்குடிக்கும் கொழும்புக்குமிடையே ஓட்டினார்.

திருநெல்வேலி எழுச்சி

திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும் நூற்பாலைத் தொழிலாளர்களை அணி திரட்டுவதில் வ.உசி., சுப்பிரமணிய சிவாவின் தோளோடு தோள் நின்றார். இவர் 1908இல் ஐரோப்பியருக்குச் சொந்தமான கோரல் நூற்பாலையில் நடைபெற்ற வேலை நிறுத்தத்திற்குத் தலைமையேற்றார். இந்நிகழ்வு நடைபெற்ற அதே சமயத்தில் பிபின் சந்திரபால் விடுதலை செய்யப்பட்டார். பிபின் விடுதலை செய்யப்பட்டதைக் கொண்டாடுவதற்காகப் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்ததற்காக வ.உ.சியும் சிவாவும் கைது செய்யப்பட்டனர். தலைவர்கள் இருவரும் அரச துரோகக் குற்றம் சாட்டப்பட்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டனர். தொடக்கத்தில் வ.உ.சிக்கு கொடுமையான வகையில் இரண்டு ஆயுள் தண்டனைகள் வழங்கப்பட்டன. மக்கள் செல்வாக்கு பெற்ற இவ்விரு தலைவர்களும் கைது செய்யப்பட்ட செய்தி பரவியதில் திருநெல்வேலியில் கலகம் வெடித்தது. காவல்நிலைய , நீதிமன்ற, நகராட்சி அலுவலகக் கட்டடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. காவலர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நான்கு நபர்கள் கொல்லப்பட்டனர். சிறையில் வ.உ.சி கடுமையாக நடத்தப்பட்டதோடு செக்கிழுக்க வைக்கப்பட்டார். சிறைத்தண்டனையைத் தவிர்ப்பதற்காக சுப்பிரமணிய பாரதி பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்திலிருந்த பாண்டிச்சேரிக்கு இடம்பெயர்ந்தார். பாரதியின் முன்னுதாரணத்தை அரவிந்தகோஷ், V.V. சுப்பிரமணியனார் போன்ற தேசியவாதிகளும் பின்பற்றினர்.



(ஆ) தமிழ்நாட்டில் புரட்சிகர தேசியவாதிகளின் செயல்பாடுகள்

புரட்சிகர தேசியவாதிகளுக்குப் பாண்டிச்சேரி பாதுகாப்பான புகலிடமாயிற்று. தமிழ்நாட்டைச் சேர்ந்த இப்புரட்சிகர தேசியவாதிகள் பலருக்குப் புரட்சிகர நடவடிக்கைகள் குறித்த அறிமுகமும் பயிற்சியும் லண்டனிலிருந்த இந்தியா ஹவுஸ் (India House) என்ற இடத்திலும் பாரிசிலும் வழங்கப்பெற்றது. அவர்களில் முக்கியமானவர்கள் M.P.T. ஆச்சாரியா, V.V. சுப்ரமணியனார் மற்றும் T.S.S. ராஜன் ஆகியோராவர். அவர்கள் புரட்சிகர நூல்களை பாண்டிச்சேரியின் வழியாக சென்னையில் விநியோகம் செய்தனர். புரட்சிவாதச் செய்தித்தாள்களான இந்தியா, விஜயா, சூர்யோதயம் ஆகியன பாண்டிச்சேரியிலிருந்து வெளிவந்தன.



ஆஷ் கொலை

1904இல் நீலகண்ட பிரம்மச்சாரியும் வேறு சிலரும் பாரத மாதா சங்கம் எனும் ரகசிய அமைப்பை உருவாக்கினர்.ஆங்கில அதிகாரிகளைக் கொல்வதன் மூலம் மக்களிடையே நாட்டுப்பற்று உணர்வைத் தூண்டுவதே இவ்வமைப்பின் நோக்கமாகும். செங்கோட்டையைச் சேர்ந்த வாஞ்சிநாதன் இவ்வமைப்பால் உள்ளுணர்வு தூண்டப்பட்டார். அவர் 1911 ஜூன் 17இல் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரான ராபர்ட் W.D.E. ஆஷ் என்பவரை மணியாச்சி ரயில் சந்திப்பில் சுட்டுக் கொன்றார். அதன் பின்னர் தன்னைத்தானே சுட்டு கொண்டார்.

 

(இ) அன்னிபெசன்ட் அம்மையாரும் தன்னாட்சி இயக்கமும்

தீவிர தேசியவாதிகளும் புரட்சிகர தேசியவாதிகளும் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்பட்ட நிலையில் மிதவாத தேசியவாதிகள் சில அரசமைப்பு சீர்திருத்தங்கள் செய்யப்படலாம் என நம்பினர். இருந்தபோதிலும் மிண்டோ - மார்லி சீர்திருத்தங்கள் பொறுப்பாட்சியை வழங்கவில்லை என்பதால் அவர்கள் மனச்சோர்வடைந்தனர்.

இவ்வாறு தேசிய இயக்கம் தளர்வுற்று இருந்த நிலையில் பிரம்மஞான சபையின் தலைவரும், அயர்லாந்துப் பெண்மணியுமான அன்னிபெசன்ட் அயர்லாந்தின் தன்னாட்சி அமைப்புகளை அடியொற்றி தன்னாட்சி இயக்கத்தை முன்மொழிந்தார். 1916இல் தன்னாட்சி இயக்கத்தை (Home Rule League) தொடங்கிய அவர் அகில இந்திய அளவில் தன்னாட்சி வழங்கப்பட வேண்டும் எனும் கோரிக்கையை முன்னெடுத்துச் சென்றார். இச்செயல் திட்டத்தில் G.S. அருண்டேல், B.P. வாடியா மற்றும் C.P. ராமசாமி ஆகியோர் அவருக்குத் துணை நின்றனர். இவர்கள் கோரிய தன்னாட்சி ஆங்கில அரசிடம் ஓரளவிற்கான விசுவாசத்தையே கொண்டிருந்ததாக அமைந்தது. தன்னுடைய திட்டத்தை மக்களிடையே கொண்டு செல்வதற்காக அன்னிபெசன்ட் நியூ இந்தியா (New India), காமன் வீல் (Commonweal) எனும் இரண்டு செய்தித்தாள்களைத் தொடங்கினார். அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதைவிட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டியே சிறந்தது என கூறினார். 1910ஆம் ஆண்டு பத்திரிக்கைச் சட்டத்தின்படி அன்னிபெசன்ட் பிணைத் தொகையாக பெருமளவு பணத்தைச் செலுத்தும்படி அறிவுறுத்தப்பட்டார். அன்னி பெசன்ட் விடுதலை பெற இந்தியா எப்படித் துயருற்றது ( How India wrought for Freedom'), இந்தியா: ஒரு தேசம் (India: A Nation) எனும் இரண்டு புத்தகங்களையும் சுயாட்சி குறித்த துண்டுப்பிரசுரத்தையும் எழுதினார்.

 

 

Tags : Freedom Struggle in Tamil Nadu தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்.
10th Social Science : History : Chapter 9 : Freedom Struggle in Tamil Nadu : Swadeshi Movement Freedom Struggle in Tamil Nadu in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 9 : தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் : சுதேசி இயக்கம் - தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 9 : தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்