பன்னாட்டுப் பொருளியல் - வாணிப வீதம் | 12th Economics : Chapter 7 : International Economics

   Posted On :  16.03.2022 06:25 pm

12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 7 : பன்னாட்டுப் பொருளியல்

வாணிப வீதம்

பன்னாட்டு வாணிக முறையின் இலாபம் என்பது வாணிப வீதத்தை பொறுத்தும், ஏற்றுமதி, இறக்குமதி விலை வீதத்தை பொறுத்தும் அமையும்.

வாணிப வீதம்

பன்னாட்டு வாணிக முறையின் இலாபம் என்பது வாணிப வீதத்தை பொறுத்தும், ஏற்றுமதி, இறக்குமதி விலை வீதத்தை பொறுத்தும் அமையும்.




1. வாணிப வீதம் - பொருள்

பன்னாட்டு வாணிகத்தினால் கிடைக்கும் நன்மைகள் வாணிப வீதத்தை சார்ந்திருக்கும். ஏற்றுமதி பொருளின் விலைக்கும் இறக்குமதி பொருளின் விலைக்குமிடையான விகிதமே வாணிப வீதம் எனலாம். ஏற்றுமதியாகும் பொருட்களின் சராசரி விலை இறக்குமதியாகும் பொருட்களின் சராசரி விலையைவிட அதிகமாகும் பொழுது நாடுகளின் வாணிப வீதம் மேம்பாடடையும்.



2. வாணிப வீதத்தின் வகைகள்

ஜெரால்ட் எம். மெய்யர் வாணிப வீதத்தை மூன்றாக வகைப்படுத்துகிறார்:

பொருட்கள் பரிவர்த்தனை விகித அடிப்படையிலான வாணிப வீத வகைகள் மூன்றினை கீழே காணலாம்.



1. நிகர பண்டமாற்று வாணிப வீதம்

நிகர பண்டமாற்று வீதத்தை எப்.டபில்யூ தாசிக் 1927 ல் வடிவமைத்தார். ஏற்றுமதி விலைகளுக்கும் இறக்குமதி விலைகளுக்குடையிலான விகிதமே நிகர பண்டமாற்று வாணிப வீதம் என்கிறார். ஜேக்கப்வைனர் இதை பொருள் வாணிபவீதம் என்றழைக்கிறார். இதனை கீழ்கண்டவாறு குறிப்பிடலாம்.

Tn= (Px / Pm) x 100

இங்கு Tn = நிகர பண்டமாற்று வாணிப வீதம்

Px = ஏற்றுமதி விலைக் குறியீட்டெண்

Pm = இறக்குமதி விலைக் குறியீட்டெண்

பன்னாட்டு வாணிகத்தின் நன்மைகளை அளவிட இந்த வீதம் பயன்படுகிறது. நிகர பண்டமாற்று வாணிப வீத (Tn) மதிப்பு ஒரு நாட்டிற்கு கணக்கிடும் பொழுது 100விட அதிகமிருந்தால் அந்நாட்டின் வாணிப வீதம் சாதகமாக உள்ளதாகக் கருதலாம். இதில் ஒவ்வொரு ரூபாய் ஏற்றுமதிக்கும் ஒரு ரூபாயிக்கும் அதிமான மதிப்புள்ள பொருட்களை அந்த நாடு இறக்குமதி செய்ய முடியும் என புரிந்து கொள்ளலாம்.

2. மொத்த பண்டமாற்று வாணிப வீதம்

இந்த வீதத்தையும் தாசிக் என்பவரே 1927ல் அறிமுகப்படுத்தினார். நிகர பண்டமாற்று வீதத்தை மேம்படுத்தி இதை வடிவமைத்தார். மொத்த ஏற்றுமதி பொருட்களின் குறியீட்டெண்ணிற்கும் மொத்த இறக்குமதி பொருட்களின் குறியீட்டெண்ணிற்குமிடையிலான விகிதத்தை 100 ஆல் பெருக்கக் கிடைக்கும் தொகையாக மொத்த பண்டமாற்று வாணிப வீதத்தை புரிந்து கொள்ளலாம்.

இதனை சூத்திர வடிவில் கீழ்கண்டவாறு எழுதலாம்.

Tg = (Qx / Qm) x 100 

இங்கு Tg = மொத்த பண்டமாற்று வாணிப வீதம் 

Qm = இறக்குமதி அளவு குறியீட்டெண் 

Qx = ஏற்றுமதி அளவு குறியீட்டெண்

ஒரு குறிப்பிட்ட அளவு ஏற்றுமதி செய்யும் நாடு எந்த அளவு பொருட்களை இறக்குமதி செய்து கொள்ளலாம் என மொத்த பண்டமாற்று வாணிப வீதம் சுட்டிக் காட்டுகிறது

3. வருவாய் வாணிப வீதம்

வருவாய் வாணிப வீத கருத்தை ஜி. எஸ்.டோரான்ஸ் என்பவர் 1948ல் உருவாக்கினார். ஏற்றுமதி விலை குறியீட்டெண்ணை இறக்குமதி விலை குறியீட்டென்னால் வகுத்து வரும் ஈவுத் தொகையை ஏற்றுமதி அளவு குறியீட்டெண்னால் பெருக்க கிடைக்கும் தொகையே வருவாய் வாணிப வீதமாகும். நிகர பண்டமாற்று வாணிப வீதத்தை ஏற்றுமதி அளவுக் குறியீட்டெண்னால் பெருக்கியும் வருவாய் வாணிப வீதம் கணக்கிட முடியும் என்பது கவனிக்கத்தக்கது.

Ty = (Px / Pm ) Qx

இங்கு, Ty = வருவாய் வாணிப வீதம்

Px = ஏற்றுமதி விலை அளவு குறியீட்டெண்

Pm = இறக்குமதி விலை அளவு குறியீட்டெண் 

Qx = ஏற்றுமதி அளவு குறியீட்டெண்



3. உற்பத்தி காரணிகள் பரிமாற்றம் அடிப்படையிலான வாணிப வீத வகைகள்

உற்பத்திக் காரணிகள் பரிமாற்றத்தின் அடிப்படையில் இரண்டு வகையான வாணிப வீதங்கள் உள்ளன. அவை இரண்டும் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

1. ஒற்றைக் காரணி வாணிப வீதம்

ஜேக்கப் வைனர் ஒற்றைக்காரணி வாணிப வீதத்தை வடிவமைத்தார். பண்ட பரிமாற்ற வாணிப வீதத்தை விரிவுபடுத்தி இந்த வாணிப வீத சூத்திரத்தை உருவாக்கினார். ஏற்றுமதி விலை குறியீட்டெண்ணிற்கும் இறக்குமதி விலைக் குறியீட்டெண்ணுக்குமிடையேயான விகிதத்தில் ஏற்றுமதிக்கான உற்பத்தி தொழில் துறையின் உற்பத்தி திறன் குறியீட்டெண்ணின் மதிப்பினால் மாற்றம் செய்யப்பட்ட வீதமே ஒற்றைக்காரணி வாணிப வீதமாகும். இதனை சூத்திர வடிவில் கீழ்கண்டவாறு குறிப்பிடலாம்.

Tf = (Px / Pm) Fx

இங்கு Tf = ஒற்றைக் காரணி வாணிப வீதம்

Px = ஏற்றுமதி விலை குறியீட்டெண் 

Pm = இறக்குமதி விலை குறியீட்டெண்

Fx = ஏற்றுமதிக்கு பொருள் உற்பத்தி செய்யும் தொழில் துறையின் உற்பத்தி திறன் குறியீட்டெண் ஏற்றுமதிக்காக உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் மொத்த எண்ணிக்கையை இந்தகாரணிகளுக்கு செய்த மொத்த செலவால் வகுத்துப் பெறுவதே உற்பத்தித் திறன் குறியீடு.

2. இரட்டைக் காரணி வாணிப வீதம்

இந்த வீதத்தையும் வைனரே வடிவமைத்தார். இதன் சூத்திர வடிவம் கீழ்வருமாறு

Tff = (Px / Pm) (Fx / Fm)

இங்கு Tff = இரட்டைக் காரணி வாணிப வீதம்

Px = ஏற்றுமதி விலை குறியீட்டெண் 

Pm = இறக்குமதி விலை குறியீட்டெண் 

Fx = ஏற்றுமதி பொருள் உற்பத்தி தொழில் உற்பத்தி திறன் குறியீட்டெண்

Fm = இறக்குமதி பொருள் உற்பத்தி செய்யும் நாட்டில் அத்துறையின் உற்பத்தி திறன் குறியீட்டெண்.

Tags : International Economics பன்னாட்டுப் பொருளியல்.
12th Economics : Chapter 7 : International Economics : Terms of Trade International Economics in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 7 : பன்னாட்டுப் பொருளியல் : வாணிப வீதம் - பன்னாட்டுப் பொருளியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 7 : பன்னாட்டுப் பொருளியல்