Home | 12 ஆம் வகுப்பு | 12வது வரலாறு | அமெரிக்க விடுதலைப் போர்

புரட்சிகளின் காலம் - வரலாறு - அமெரிக்க விடுதலைப் போர் | 12th History : Chapter 11 : The Age of Revolutions

   Posted On :  12.07.2022 06:05 pm

12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 11 : புரட்சிகளின் காலம்

அமெரிக்க விடுதலைப் போர்

கண்டுபிடிப்புக்களின் காலம் என்றறியப்படும் காலப்பகுதியில், துணிச்சல் மிக்க கடலோடிகள் புதிய உலகம் என்று சொல்லப்பட்ட நிலப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டதோடு, அரசர்களின் உதவியுடன் புதிய வணிகப்பாதைகளையும் கண்டுபிடித்தனர். இது மேம்பட்ட தொடர்புகளையும் லாபத்தையும் உறுதிப்படுத்தியது.

அமெரிக்க விடுதலைப் போர்

கண்டுபிடிப்புக்களின் காலம் என்றறியப்படும் காலப்பகுதியில், துணிச்சல் மிக்க கடலோடிகள் புதிய உலகம் என்று சொல்லப்பட்ட நிலப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டதோடு, அரசர்களின் உதவியுடன் புதிய வணிகப்பாதைகளையும் கண்டுபிடித்தனர். இது மேம்பட்ட தொடர்புகளையும் லாபத்தையும் உறுதிப்படுத்தியது. புதிய இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளுதல், வணிகமையங்களை உருவாக்குதல், பின்னர் காலனிகளை ஏற்படுத்துதல் ஆகியவற்றில் தொடக்கத்தில் ஸ்பெயின், போர்த்துகல் ஆகிய நாடுகள் முன்னணி வகித்தாலும் இங்கிலாந்துதான் உலகம் முழுவதிலும் காலனிகளை ஏற்படுத்தி அவற்றை நீண்டகாலம் வெற்றிகரமாகவும் கட்டுப்படுத்தியது.வடஅமெரிக்காவில் ஆங்கிலேயர்களே முதன் முதலாக குடியேறினார்கள் என்றாலும், காலப்போக்கில் ஜெர்மானியர், ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தோர், பிரெஞ்சுக்காரர்கள், இத்தாலியர்கள், டச்சுக்காரர்கள் ஆகியோரும் அமெரிக்கா சென்று குடியமர்ந்தனர். மிக விரைவாகப் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில், ஐரோப்பிய மக்கட்தொகைப் பெருக்கத்தை புதிய உலகில் உருவாக்கப்பட்ட காலனிகள், தங்கள் பக்கம் ஈர்த்துக் கொண்டன.

அரசர் முதலாம் ஜேம்ஸ் வெர்ஜினியாவிற்கு ஒரு குழுவை அனுப்பி வைத்தார். அவர்களால் 1607இல் அங்கு ஒரு காலனி நிறுவப்பட்டு ஜேம்ஸ்டவுன் என பெயரிடப்பட்டது. பின்னர் யாத்ரீகர்கள் இங்கிலாந்திலிருந்து மேபிளவர் எனும் கப்பலில் பயணித்து மாசாசூசெட்ஸில் உள்ள பிளைமவுத் எனும் இடத்தில் காலனியை உருவாக்கினர். படிப்படியாக ஏனைய குடியேற்றங்களும் நிறுவப்பட்டன. 1624இல் டச்சுக்காரர்கள் ஹட்சன் ஆற்றின் முகத்துவாரமருகே ஒரு குடியேற்றத்தை நிறுவி அதற்கு நியூ ஆம்ஸ்ட ர்டாம் எனப் பெயரிட்டனர். பின்னர் இது ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டு நியூயார்க் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1700களில் குடியேற்ற நாடுகளின் மக்கள் தொகையில் அடிமைப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்கர்களின் விழுக்காடு அதிகரித்தது.1770 காலப்பகுதியில் இங்கிலாந்திற்குச் சொந்தமான 13 வடஅமெரிக்கக் குடியேற்றங்களில் 2 மில்லியனுக்கும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் வாழ்ந்து, பல வேலைகளையும் மேற்கொண்டனர்.

1587இல் சர் வால்டர் ராலே என்பார் வடகரோலினாவிற்கு அருகே இருந்த ரோவனோக் தீவில் ஒரு குடியேற்றத்தை ஏற்படுத்தி, கன்னிமை அரசியான ராணியார் முதலாம் எலிசபெத்தின் நினைவாக வெர்ஜினியா எனப் பெயரிட்டார். ஆனால் பூர்வகுடி இந்தியர்களின் வலுவான எதிர்ப்பால் தொடக்கத்தில் குடியேறிய பலர் இங்கிலாந்து திரும்பினர். சில ஆண்டுகள் கழித்து ஆங்கிலேய மாலுமிகள் அங்கு சென்றபோது குடியேற்றம் இருந்தற்கான எந்தச் சுவடும் அங்கில்லை. ரோவனோக் தீவு இழக்கப்பட்ட குடியேற்றமானது.

 


பதிமூன்று குடியேற்றங்களில் வாழ்க்கை

குடியேற்றங்கள் பெறப்பட்ட விதங்களிலும் அவற்றின் குணாதிசயங்களிலும் பெரும் வேறுபாடுகள் இருந்தன. அவை வடக்கு, தெற்கு

அட்லாண்டிக் கடலைக் கடந்த அடிமை வணிகம் மனிதகுல வரலாற்றில் படிந்த கறையாகும். பதினேழாம் நூற்றாண்டு பிறந்த போது போர்த்துகீசியர்கள் ஆப்பிரிக்க அடிமை வர்த்தகத்தைத் தொடங்கினர். ஏனைய கிறித்துவ ஐரோப்பிய நாடுகளும் உடனடியாக பின் தொடர்ந்தன. அமெரிக்காவுக்குக் கொண்டுவரப்பட்ட முதல் அடிமைகள் 1619இல் ஒரு டச்சுக் கப்பலில் வந்தனர். சந்தேக குணமில்லாத நீக்ரோக்களை ஆப்பிரிக்காவில் கைப்பற்றி புதிய உலகிலுள்ள (அமெரிக்கா) பெருந்தோட்டங்களில் வேலை செய்ய அவர்களை விற்பதன் மூலம் பெரும் பணம் சம்பாதிக்க இயலும் என உணர்ந்த முதல் ஆங்கிலேயர் ஜான் ஹாக்கின்ஸ் ஆவார். அவருடைய செழிப்பான வெற்றி, பெரும் லாபம் ஆகிய காரணங்களால் முதலாம் எலிசபெத் அரசியால் நைட் பட்டம் சூட்டப்பட்டார். 11 மில்லியன்களுக்கும் மிகையான ஆப்பிரிக்கர்கள் அடிமைகளாக அமெரிக்காவைச் சென்றடைந்தனர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

 

குடியேற்றங்கள் எனப் பிரிக்கப்பட்டன. வளமிக்க நிலங்களை இயற்கையின் கொடையாகப் பெற்றிருந்த தென்பகுதியில் வேளாண்மையே வாழ்வின் அடிப்படை ஆதாரமாகத் திகழ்ந்தது. ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட அடிமைகளே அப்பெருந்தோட்ட நிலங்களில் பணிசெய்தனர். அந்நிலங்களில் பருத்தி, கோதுமை, புகையிலை ஆகியன முக்கியமாக விளைவிக்கப்பட்டன. மற்றொருபுறத்தில் வடபகுதிகள் வளமான விளைநிலங்களைக் கொண்டிருக்கவில்லை. அவை மர அறுவை ஆலைகளையும், கப்பல் கட்டும் நிலையங்களையும் தானிய அரவை ஆலைகளையும் உருவாக்கிக் கொண்டன. இரும்பும் துணியும் உற்பத்தி செய்யப்பட்டன. துறைமுகங்கள் கடல் சார் வணிகத்தை மேம்படுத்தின.

நிலையற்ற ஐரோப்பிய வாழ்க்கைச் சூழலினால் சலிப்புகொண்ட மக்கள் ஒரு சுதந்திரமான வாழ்க்கை வாழவேண்டும் என்பதற்காகவே குடியேற்றங்களுக்கு வந்தனர். அவர்கள் மத சுதந்திரத்தை அனுபவிக்க விரும்பினர். மேலும் தாங்கள் விரும்பிய மதத்தைப் பின்பற்ற விரும்பினர். (எ.கா. தூய்மைவாதிகள் - Puritans) குடியேற்ற நாடுகள் ஆங்கிலேய அரசால் பணியமர்த்தப்பட்ட ஆளுநர்கள் எனும் ஆங்கிலேயப் பிரதிநிதிகளால் ஆளப்பட்டன. ஆளுநர்கள் பாராளுமன்றத்திற்கு இணையான ஒரு சபையையும் (Assembly) பெற்றிருந்தனர். பெண்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டிருந்தது.

ஆண்களிலும்கூட, சொந்தமாக நிலம் வைத்திருப்போர், வரி கட்டுவோர் ஆகியோர் மட்டுமே வாக்களிக்க முடிந்தது. தொடக்கத்தில் அவர்கள் அமெரிக்க இந்தியர்கள் என்றழைக்கப்பட்ட அமெரிக்காவின் பூர்வகுடி மக்களோடு இணக்கமான உறவைக் கொண்டிருந்தனர். (அப்போது அவர்கள் செவ்விந்தியர்கள் என ஏளனமாகக் குறிப்பிடப்பட்டனர்) ஆனால் காலப்போக்கில் பூர்வகுடிகள் நிலங்களை இழந்தோர்களாக ஆக்கப்பட்டனர் அல்லது அழித்தொழிக்கப்பட்டனர்.


1492இல் கிறிஸ்டோபர் கொலம்பஸ் கரீபியனை அடைந்த தருவாயில் அமெரிக்க பகுதிகளில் 10 மில்லியன் பூர்வகுடிகள் வாழ்ந்து வந்தனர். ஆனால் 1900இல் அவர்களின் எண்ணிக்கை 3,00,000 கீழாகக் குறைக்கப்பட்டது. பூர்வகுடிகளை அழித்தொழிக்க ஐரோப்பியர்கள் பின்பற்றிய தந்திரங்களில் ஒன்று நோய்களைப் பரப்புவதாகும். 1763இல் ஏற்பட்ட பெரும் எழுச்சி பென்சில்வேனியாவிலிருந்த ஆங்கிலப் படைகளை அச்சுறுத்தியது. தேவைப்படும் பொருட்கள் குறைவாக இருந்ததால் கவலையும் சில பூர்வகுடி அமெரிக்கர்களின் வன்முறைச் செயல்களால் சினமும் கொண்டிருந்த வட அமெரிக்காவிலிருந்த ஆங்கிலப் படைகளின் தளபதி சர்ஜெப்ரி ஆம்ஹர்ஸ்ட்பென்சில்வேனியாவில், பிட் கோட்டையிலிருந்த கர்னல் ஹென்றி போகே என்பாருக்கு போர்வைகளின் மூலமாக செவ்விந்தியர்களிடையே நோய்களைப் (அம்மை) பரப்பும் முயற்சியை நீங்கள் நன்றாகச் செய்யலாம். மேலும் ஒதுக்கத்தக்க இவ்வினத்தை வேரோடு பிடுங்கி எறிய வேறு முறைகள் அனைத்தையும் முயற்சி செய்யவும்" என எழுதினார். இதன் விளைவாக ஏற்கனவே அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சொந்தமான அவர்கள் பயன்படுத்திய போர்வைகள் செவ்விந்திய பூர்வகுடிகளிடையே விநியோகம் செய்யப்பட்டன. காலனியவாதிகள் தங்கம் தேடும் முயற்சியில் (1848) பழங்குடி மக்களின் கிராமங்களில் பதுங்கியிருந்து கொடூரமாகத் தாக்கினர். குடியேற்றவாதிகளுக்கும் அமெரிக்க பூர்வ குடிகளுக்குமிடையே பல போர்கள் வெடித்து பெருமளவிளலான உயிர்ச்சேதத்திற்கும், சொத்துப்பறிப்புக்கும், அடக்குமுறைக்கும் அப்பட்டமான இனவாதத்திற்கும் இட்டுச் சென்றது.

 

அமெரிக்க விடுதலைப் போர்: காரணங்கள்

காலனிய ஆட்சி : நாவாய் சட்டங்கள் 

காலனிகளைத் தனது நாட்டின் பகுதிகளாகவே கருதிய இங்கிலாந்து, காலனி மக்களின் நலன்களைப் புறக்கணித்துத் தனது நலன்களுக்காகவே ஆட்சி செய்தது. நாவாய்  சட்டங்கள் எனும் சட்டங்களை இயற்றியதன் மூலமாக இங்கிலாந்து தனது காலனி நாடுகளின் அனைத்துப் பொருட்களும் ஆங்கிலக் கப்பல்களின் மூலமாகவே ஏற்றுமதி செய்யப்பட வேண்டுமென கட்டாயப்படுத்தியது. காலனி நாடுகள் ஜவுளி போன்ற ஒரு சில பொருட்களை உற்பத்தி செய்வதைக் கட்டுப்படுத்தியும் தடுத்தும் சட்டங்கள் இயற்றப்பட்டன.

ஏழாண்டுப் போர் (1756-63)

ஏழாண்டுப் போரில் இங்கிலாந்து தலையிட்டது இங்கிலாந்திற்கு எதிரான காலனிநாடுகளின் கிளர்ச்சிகளின் நேரடி விளைவாகும். போரின்போது காலனி நாடுகளின் சட்டமன்றங்கள் தாய்நாடு எதிர்பார்த்த மாதிரியான ஒத்துழைப்பை நல்கவில்லை. குறைந்த அளவிலான பொருட்களின் விநியோகத்தை மட்டும் ஏற்றுக்கொண்டு வாக்களித்த அவைகள் அமெரிக்கர்கள் பயன்படுத்தும் சில பண்டங்களின் மீது இங்கிலாந்து வரிவிதிக்க மேற்கொண்ட முயற்சிகளை எதிர்த்தன. இதனிடையே கனடாவை இங்கிலாந்து கைப்பற்றியதும்பிரெஞ்சுக்காரர்கள் குறித்த அச்சம் நீங்கியதும் இங்கிலாந்தைப் பாதுகாப்பாக இருப்பதாக உணர வைத்தது. மாறாக இந்நிகழ்வுகள் காலனி நாடுகளை அச்சங்கொள்ளச் செய்ததோடு, எப்போதுமில்லாத வகையில் இங்கிலாந்தின் கட்டளைகளுக்கு அவை அடிபணிய மறுத்தன.

 

காலனி நாடுகளின் மீதான வரிவிதிப்பு

சர்க்கரை, சர்க்கரைப்பாகு ஆகியவற்றின் மீது வரிவிதிப்பு

ஏனைய ஐரோப்பிய நாடுகளோடு மேற்கொள்ளப்பட்ட நிரந்தர போர்களால் ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக இங்கிலாந்து தனது காலனி நாடுகளின் மீது புதிய வரிகளைச் சுமத்தியது. முதல் வரியானது 1764இல் சர்க்கரையின் மீதும் சர்க்கரையின் துணைப் பொருளான சர்க்கரைப்பாகின் மீதும் விதிக்கப்பட்டது. வடஅமெரிக்காவிலிருந்த அனைத்து காலனிகளும் இவ்வரியைச் செலுத்த கட்டாயப்படுத்தப்பட்டன. குடியேற்ற நாடுகள் "பிரதிநிதித்துவம் இல்லையேல் வரியுமில்லை " எனும் முழக்கத்தை எழுப்பி இதை எதிர்த்தன.

முத்திரைச் சட்டம்

1765இல் முத்திரைகள் மீதான புதிய வரிச்சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் குடியேற்ற நாடுகளின் மக்கள் சட்டத் தொடர்புடைய அனைத்து ஆவணங்களிலும் வருவாய் முத்திரைகளை ஒட்டவும் முத்திரைகளை பயன்படுத்த வரிசெலுத்தவும் கட்டாயப்படுத்தப்பட்டனர். குடியேற்ற நாடுகளின் மக்கள் அவற்றை வாங்குவதற்கு மறுக்கவே ஆங்கில வணிகர்கள் குடியேற்ற நாட்டு அரசுகளை அச்சட்டத்தை விலக்கிக்கொள்ள வற்புறுத்தின.

டவுன்ஷெண்ட் சட்டம்

1766இல் முத்திரைச் சட்டம் ஒழிக்கப்பட்டாலும் அடுத்த ஆண்டிலேயே ஒரு சட்டம் அறிமுகமானது. இதன்படி இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில பண்டங்களின் மீது வரிகள் விதிக்கப்பட்டது. இங்கிலாந்தின் நிதியமைச்சரான டவுன்ஷெண்ட் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தியதால் அவர் பெயரிலேயே இச்சட்டம் டவுன்ஷெண்ட் சட்டமென அறியப்படலாயிற்று.

பாஸ்டன் படுகொலை

1770இல் இங்கிலாந்தின் புதிய பிரதமரான நார்த் பிரபு தேயிலையின் மீதான வரியைத் தவிர ஏனைய பொருட்களின் மீதான வரிகளை நீக்கினார். இங்கிலாந்துப் பாராளுமன்றத்திற்கு குடியேற்ற நாடுகளின் மீது, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வரிவிதிக்கும் உரிமை உண்டு என்பதை உறுதிப்படுத்தவே தேயிலையின் மீதான வரிநீக்கப்படாமல் தொடர்ந்தது. பாஸ்டன் நகர வீதிகளில் ஆங்கிலப் படைகள் அணிவகுத்துச் சென்றபோது அமெரிக்கர்கள் ஆங்கிலேயரை விமர்சனம் செய்தனர். சினம் கொண்ட ஆங்கிலப்படைகள் அமெரிக்க மக்களுக்கு எதிராகச் துப்பாக்கிச்சூடு நடத்தின. இந்த பாஸ்டன் படுகொலை ஆங்கில அரசின் ஏகாதிபத்திய மற்றும் வலுச்சண்டை செய்யும் இயல்புகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.

பாஸ்டன் தேநீர் விருந்து (1773)

பாஸ்டன் படுகொலையைத் தொடர்ந்து பூர்வகுடி அமெரிக்கர்களைப் போல வேடம் தரித்த 100 கிளர்ச்சியாளர்கள் பாஸ்டன் துறைமுகத்தில் தேயிலையைக் கொண்டு வந்திருந்த மூன்று கப்பல்களில் ஏறி 342 பெட்டிகளைக் கடலுக்குள் வீசி எறிந்தனர். இந்நிகழ்வு பாஸ்டன் தேநீர் விருந்து என அழைக்கப்பட்டது.

இங்கிலாந்துப் பாராளுமன்றம் கடுமையான எதிர் நடவடிக்கைகளை மேற்கொண்டது. கேஜ் எனும் தளபதி மாசாசூசெட்ஸின் ஆளுநராகப் பணியமர்த்தப்பட்டார். காலனிகளை அடக்கி ஒடுக்கும்படி ஆணை பிறப்பிக்கப்பட்டு படைகளும் அனுப்பி வைக்கப்பட்டன.



பொறுத்துக்கொள்ள முடியாத சட்டங்கள் (1774)

பாஸ்டன் தேநீர் விருந்து நிகழ்வால் சினம் கொண்ட இங்கிலாந்துப் பாராளுமன்றம் பாஸ்டன் துறைமுக மசோதாவை நிறைவேற்றியது. அதன்படி கடலில் வீசப்பட்ட தேயிலைக்கான ஈட்டுத்தொகை காலனி மக்களால் வழங்கப்படும் வரை பாஸ்டன் துறைமுகம் மூடப்படுமென அறிவிக்கப்பட்டது. இரண்டாவதாக மாசாசூசெட்ஸ் அரசுச் சட்டத்தை இங்கிலாந்துப் பாராளுமன்றம் நிறைவேற்றியது. அதன்படி மாசாசூசெட்ஸின் தேர்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் கலைக்கப்படவும், ராணுவ ஆளுநர் கேஜ் என்பவரின் அதிகாரம் அதிகரிக்கப்படவும் வழிவகை செய்யப்பட்டது. மூன்றாவதாக நீதி நிர்வாகச் சட்டம் இயற்றப்பட்டு கடுமையான குற்றங்களைச் செய்தவர்கள் எனக் குற்றம் சாட்டப்பட்ட ஆங்கில அதிகாரிகளை வேறு காலனிகளிலோ அல்லது இங்கிலாந்திலோ வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியது. நான்காவதாக இயற்றப்பட்ட பொறுத்துக்கொள்ள முடியாத சட்டம் ஏற்கனவே நடைமுறையில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்ட படைவீரர்கள் தங்குமிடச் சட்டம் என்பதன் மறுபதிப்பாகும். இச்சட்டம் காலியாகவுள்ள கட்டடங்களில் ஆங்கிலப்படைகள் தங்கிக்கொள்ள அனுமதி வழங்கியது. அடக்குமுறைச் சட்டங்கள் என்றும் அறியப்பட்ட இப்பொறுக்க முடியாத சட்டங்கள் (1774) காலனிகளிடையே பெரும் வன்முறை அலைகளை ஏற்படுத்தியது.

கியூபெக் சட்டம்

1774இல் இங்கிலாந்துப் பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட கியூபெக் சட்டத்தின்படி, ஓஹியோ மற்றும் மிசிசிபி ஆகிய இரு நதிகளுக்கு இடைப்பட்ட நிலப்பகுதி கியூபெக்கிற்கு வழங்கப்பட்டது. இதனால் நியூயார்க், பென்சில்வேனியா, வெர்ஜினியா ஆகிய அரசுகள் கோபம் கொண்டன. ஏனெனில் இதே நிலப்பகுதி இக்காலனியரசுகளுக்கு அரச பட்டயத்தின் மூலம் முன்னரே வழங்கப்பட்ட பகுதிகளாகும். மேலும் இப்புதிய பகுதியில் பிரெஞ்சுக் குடிமைச் சட்டங்களும், ரோமன் கத்தோலிக்க மதமும் செயல்பட இங்கிலாந்து அனுமதித்ததன் மூலம் பிராட்டஸ்டன்ட் காலனிகளையும் கோபம் கொள்ளச் செய்தது.

1774இல் இயற்றப்பட்ட பொறுத்துக்கொள்ள முடியாத சட்டங்களின் விளைவாக குடியேற்ற நாடுகள், பிலடெல்பியாவில் முதன்முதலில் பொது மாநாட்டைக்கூட்டின. ஜார்ஜியாநீங்கலாக மாநாட்டில் கலந்துகொண்ட ஏனைய குடியேற்றங்களின் பிரதிநிதிகள் பொறுத்துக்கொள்ள முடியாத சட்டங்கள் நீக்கப்பட வேண்டுமென கோரிக்கை வைத்தனர். அதுவரையிலும் ஆங்கிலேயப் பொருட்களைப் புறக்கணிப்பது என்றும் காங்கிரஸ் (மாநாடு) முடிவு செய்தது. அவர்கள் இங்கிலாந்து அரசர் மூன்றாம் ஜார்ஜுக்கு கோரிக்கை மனுவொன்றை ஒரு ஆலிவ் கிளையோடு (அமைதி நடவடிக்கைகள் ) அனுப்பி வைத்தனர். இதுவே ஆலிவ் கிளை விண்ணப்பமென அழைக்கப்பட்டது. ஆனால் அரசர் அமைதியை ஏற்படுத்த மறுத்துவிட்டார்.

 

போர் வெடித்தல்

இதே சமயத்தில் 1775இல் மாசாசூசெட்ஸில் உள்ள லெக்சிங்டன் என்ற இடத்தில் விவசாயிகள் ஆங்கிலேயரோடு போரிட்டு பின்னர் பங்கர் குன்றிலிருந்த ஆங்கிலப்ப டைகளை முற்றுகையிடுவதற்காகப் பாஸ்டனை நோக்கி விரைந்தனர். 1776 ஜுலை 4இல் 13 குடியேற்ற நாடுகளும் இங்கிலாந்திடமிருந்து விடுதலை பெறுவதாக அறிவித்தன. சுதந்திரப் பிரகடனத்தை வடித்ததில் முக்கியப் பங்காற்றியவர் தாமஸ் ஜெபர்சன் ஆவார். அது அமெரிக்க ஐக்கிய நாடுகள் எனும் பெயரில் ஒரு சுதந்திர நாட்டின் வரலாறு தொடங்கியதை சுட்டிக் காட்டியது.


சுதந்திரப் பிரகடனம் (1776)

குடியேற்ற நாடுகள் சுதந்திர நாடுகளாக இருத்தல் வேண்டும் எனும் கருத்தை முன் மொழிந்தவர் ரிச்சர்டு லீ ஆவார். பிரகடனத்தை எழுதுவதற்கு வரைவுக்குழுவொன்று அமைக்கப்பட்டது. அக்குழு தாமஸ் ஜெபர்சன், பெஞ்சமின் பிராங்கிளின் மற்றும் ஜான் ஆடம்ஸ் ஆகியோரையும் உள்ளடக்கிய உறுப்பினர்களைக் கொண்டிருந்தது.

ஆங்கிலேயப் படைகளுக்கு வில்லியம் ஹோவ் தலைமைதாங்க அமெரிக்கப்படைகளுக்கு ஜார்ஜ் வாஷிங்டன் தலைமையேற்றார். போரின் தொடக்கக் கட்டங்களில் ஹோவ் வாஷிங்டனை புரூக்ளின், நியூயார்க், நியூ ஜெர்சி ஆகிய இடங்களில் தோற்கடித்து வெற்றிகளை ஈட்டினார். பின்னர் வாஷிங்டன் தனது திட்டமிடப்பட்ட போர்த் தந்திரங்களின் வாயிலாக ஆங்கிலப் படைகளைத் தோற்கடித்தார். 1777இல் சரடோகா போர் முனையில் ஆங்கிலேயப் படைத்தளபதி ஜெனரல் புர்கோய்ன் சரணடைய நிர்ப்பந்திக்கப்பட்டார். இறுதியில் 1781இல் யார்க்டவுன் என்ற இடத்தில் இங்கிலாந்துப் படைகள் அமெரிக்க படைகளிடம் சரணடைந்தன. இவ்வெற்றியோடு வடக்கேயிருந்த குடியேற்றங்கள் சுதந்திரம் பெற்றன. ஆனால் போர் முடிகின்ற தருணம் வரையிலும் ஹோவ் நியூயார்க்கை தன்வசமே வைத்திருந்தார்.


குடியேற்ற நாடுகளுடன் ஐரோப்பிய சக்திகளின் ஒருமைப்பாடு

அமெரிக்க சுதந்திரப்போரின் இங்கிலாந்துடன் நட்புறவு கொண்டிராத ஐரோப்பிய நாடுகள் அமெரிக்கக் குடியேற்ற நாடுகளை ஆதரிப்பதென முடிவு செய்தன. பிரஷ்யா, ஸ்வீடன், டென்மார்க் உள்ளிட்ட வட ஐரோப்பிய நாடுகள் இங்கிலாந்திற்கு எதிராக ஆயுதமேந்திய நடுநிலைமையை உருவாக்கின. ஒருபுறம் தனது எதிரி நாடுகளின் பகைமையையும் மறுபுறத்தில் நடுநிலை நாடுகளின் எதிர்ப்பையும் எதிர்கொள்ள நேர்ந்ததால் இங்கிலாந்து பெருங்குழப்பத்தில் ஆழ்ந்தது.

பிரெஞ்சுக்காரர்களும் அவர்களைத் தொடர்ந்து ஸ்பானியரும் டச்சுக்காரர்களும் இவ்விடுதலைப் போரில் அமெரிக்கக் குடியேற்ற நாடுகளுக்கு உதவினர். கனடாவை இழந்ததற்குப் பழிவாங்குவதாகவே பிரான்ஸ் அமெரிக்கர்களுக்கு உதவியது. குடியேற்ற நாடுகளுக்கு உதவி செய்வதற்காக அட்லாண்டிக் பெருங்கடலை கடந்து சென்ற பிரான்ஸ் நாட்டின் தன்னார்வத் தொண்டர்கள் தனிமனித சுதந்திரம் குறித்த கருத்துக்களோடு நாடு திரும்பினர். அக்கருத்துக்கள் அவர்களை போர்பன் மன்னர்களின் கட்டுப்பாடுகளைச் சகித்துக்கொள்ள முடியாதவர்களாக மாற்றின.

தாமஸ் (டாம்) பெயின், பொது அறிவு (Common Sense)

ஆங்கிலேயரான தாமஸ் பெயின் 'பொது அறிவு' (1776) எனத் தலைப்பிடப்பட்ட துண்டு பிரசுரமொன்றை எழுதினார். அதில் பெயின் குடியேற்ற நாடுகளின் கோரிக்கைகளை நியாயப்படுத்தி விவாதங்களை எழுதியிருந்தார். சுதந்திரம் குறித்து ஹாப்ஸ், லாக், வால்டேர், ரூசோ ஆகியோர் கூறிய கருத்துக்களைத் தேர்ந்தெடுத்த அவர் அவற்றை சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் விதத்தில் எழுதியிருந்தார். 1,50,000 பிரதிகள் விற்பனையான இத்துண்டு பிரசுரம், மக்களின் மீது கிளர்ச்சியூட்டும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

பணம் படைத்த வணிகர்களும், பெரும் நிலவுடைமையாளர்களும் ஆங்கில அரியணைக்கு விசுவாசிகளாக இருந்தனர். பெரும் எண்ணிக்கையிலான, குறிப்பாக நியூயார்க், பென்சில்வேனியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களின் மீதும் செல்வாக்கு பெற்றிருந்தனர். குடியேற்ற நாடுகளைச் சேர்ந்த மக்கள் இரு பிரிவினராகப் பிரிந்தனர். நாட்டுப்பற்றாளர்கள் என்ற பிரிவினர் விடுதலை வேண்டினர். விசுவாசிகள்' என்ற பிரிவினர் இங்கிலாந்து அரியணைக்கு விசுவாசமாக இருக்க விரும்பினர். டோரிகள் (Tories) என்றழைக்கப்பட்ட விசுவாசிகள் ஆங்கிலிகன் திருச்சபையை சேர்ந்தவர்களாய் இருந்ததால் ஆங்கில ஆட்சியையே விரும்பினர். எனவே விடுதலைப் போருக்கு இடையில் ஒரு உள்நாட்டுப் போரும் தவிர்க்க இயலாமலாயிற்று.

பாரிஸ் உடன்படிக்கை

போரைத் தொடர்வதால் பயனேதுமில்லை என இங்கிலாந்துப் பாராளுமன்றம் 1783இல் முடிவு செய்தது. பிரதமர் நார்த் பிரபு தனது பதவியை ராஜினாமா செய்தார். அரசர் ஜார்ஜ் , மக்கள் சபை மீதான தனது கட்டுப்பாட்டை இழந்தார். புதிய பிரதமர் ராக்கிங்ஹாம் பிரபு அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்கினார். 1783இல் இங்கிலாந்துக்கும் அமெரிக்காவுக்குமிடையே பாரிசில் அமைதி உடன் படிக்கை கையெழுத்தானது. 



ஜார்ஜ் வாஷிங்டன் (1732-1799) அமெரிக்காவின் முதல் குடியரசுத்தலைவரானார். அமெரிக்காவை உருவாக்கியவர்களில் ஒருவரான அவர் முதலில்  ஒரு சிறந்த இராணுவத் தளபதியாகவும், பின்னர் மதிநுட்பம் நிறைந்த அரசியல்வாதியாகவும் அமெரிக்க புரட்சியில் முக்கியப் பங்கு வகித்தார்.

உடன்படிக்கையின் முக்கிய சரத்துக்கள்

• 13 குடியேற்ற நாடுகளின் சுதந்திரத்தையும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் எனும் பெயரில் ஒரு புதிய நாடு உருவானதையும், இங்கிலாந்து அங்கீகரித்தது.

• மேற்கே மிசிசிபி ஆற்றை எல்லையாகவும், தெற்கே 31வது இணைகோட்டை எல்லையாகவும் கொண்ட பகுதிகள் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குச் சொந்தமாயின.

• மேற்கிந்திய தீவுகள், இந்தியா, ஆப்பிரிக்கா ஆகியவற்றில் இங்கிலாந்திற்குச் சொந்தமாயிருந்த சில பகுதிகளை பிரான்ஸ் பெற்றது.

• ஸ்பெயின் இங்கிலாந்திடமிருந்து புளோரிடாவைப் பெற்றது.

• ஹாலந்தும் இங்கிலாந்தும் போருக்கு முன்பு நிலவிய நிலையை அப்படியே பேணின.

 

அமெரிக்க புரட்சியின் முக்கியத்துவம்   

• அமெரிக்க புரட்சி உலக வரலாற்றில் பல அணுகுமுறைகளை (Avenues) ஏற்படுத்தியது.

• மக்களாட்சி, குடியரசு போன்ற கோட்பாடுகள் மேலும் விரிவாகப் பரவலாயின.

• அரசியல், சமூக மாற்றங்கள் ஜனநாயகத்தையும் சமத்துவத்தையும் அடிப்படையாக கொண்டிருந்தன.

• குடியேறியவர்கள் அனைவருக்கும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் சுதந்திரத்தையும் வாய்ப்புகளையும் வழங்கும் நாடானது.

• கல்வியின் முக்கியத்துவம் சிறப்பிடத்தைப் பெற்றது.

• கூட்டாட்சிக் கோட்பாடு பரவலானது.

• அமெரிக்க புரட்சி காலனியாதிக்கத்திற்கு ஒரு பின்னடைவாகும். தங்கள் காலனிய எஜமானர்களுக்கு எதிராக குடியேற்ற நாடுகளின் விடுதலைக்கான கோரிக்கை உலகின் பல்வேறு பகுதிகளில் பரவியது.

• ஒவ்வொரு தனி மனிதருக்கும் பேச்சு சுதந்திரம், மத சுதந்திரம் மற்றும் சமவாய்ப்பு ஆகியன வழங்கப்பட்ட சுதந்திர சமுதாயம் உருவாவதற்கு இப்புரட்சி வழிகோலியது.

Tags : The Age of Revolutions | History புரட்சிகளின் காலம் - வரலாறு.
12th History : Chapter 11 : The Age of Revolutions : The American War of Independence The Age of Revolutions | History in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 11 : புரட்சிகளின் காலம் : அமெரிக்க விடுதலைப் போர் - புரட்சிகளின் காலம் - வரலாறு : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 11 : புரட்சிகளின் காலம்