Home | 11 ஆம் வகுப்பு | 11வது வரலாறு | கர்நாடகப் போர்கள்

ஐரோப்பியர் வருகையும் அதற்குப் பின்பும் - கர்நாடகப் போர்கள் | 11th History : Chapter 16 : The Coming of the Europeans

   Posted On :  14.05.2022 04:49 am

11 வது வகுப்பு வரலாறு : அலகு 16 : ஐரோப்பியரின் வருகை

கர்நாடகப் போர்கள்

ஆங்கிலேயர் தங்கள் மேலாதிக்கத்தை நிறுவுவதற்கு 1746-1763 காலப்பகுதியில் பிரெஞ்சுக்காரர்களுக்கு எதிராக மூன்று போர்களை நடத்தினர். வரலாற்று அறிஞர்கள் இப்போர்களை கர்நாடகப் போர்கள் எனக் குறிப்பிடுகின்றனர்.

கர்நாடகப் போர்கள்

ஆங்கிலேயர் தங்கள் மேலாதிக்கத்தை நிறுவுவதற்கு 1746-1763 காலப்பகுதியில் பிரெஞ்சுக்காரர்களுக்கு எதிராக மூன்று போர்களை நடத்தினர். வரலாற்று அறிஞர்கள் இப்போர்களை கர்நாடகப் போர்கள் எனக் குறிப்பிடுகின்றனர்.

முதல் கர்நாடகப் போர்: 1746 - 1748

ஐரோப்பாவில் நடைபெற்ற ஆஸ்திரிய வாரிசுரிமைப் போர் இந்தியாவிலும் எதிரொலித்தது. ஆஸ்திரிய அரசர் ஆறாம் சார்லஸ் 1740இல் காலமானார். அவரைத் தொடர்ந்து அவருடைய மகள் மரிய தெரேசா அரசபதவியை ஏற்றார். மரிய தெரேசாவின் உரிமையை ஏற்க மறுத்த பிரான்ஸ், ஜெர்மானிய மொழி பேசப்படும் பகுதிகளான பவேரியா, சாக்ஸனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளோடு மரிய தெரேசாவுக்கு எதிராகக் கைகோத்தது. பிரஷ்ய அரசர் இரண்டாம் பிரடெரிக் (பிரஷ்யாவின் மகாபிரடெரிக் என அறியப்பட்டவர்) இப்புதிய அரசியல் சூழலைத் தனக்கு சாதகமாக்கி பிரான்சின் உதவியுடன் ஆஸ்திரிய நாட்டின் ஒரு பகுதியான சைலீசியாவைக் கைப்பற்றினார். இப்பிரச்சனையில் இங்கிலாந்து பிரான்சிற்கு எதிராகவும் ஆஸ்திரியாவிற்கு ஆதரவாகவும் களம் கண்டது. ஐரோப்பாவில் இங்கிலாந்திற்கும் பிரான்சிற்கும் இடையே ஏற்பட்ட போர்களால் வட அமெரிக்காவிலும் இந்தியாவிலும் இருந்த இருநாட்டுக் குடியேற்றங்களிலும் போர்கள் ஏற்பட்டன. போர் வெடித்தபோது புதுச்சேரியின் புதிய ஆளுநர் துய்ப்ளே, சென்னையின் ஆங்கிலேய ஆளுநர் மோர்சிடம் ஐரோப்பாவில் இருவரிடையே போர் மூண்டாலும் இங்கே நடுநிலைமை காக்கும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் பார்னெட் என்பாரின் தலைமையிலான ஆங்கிலக் கப்பற்படை இந்தியப் பொருட்களை ஏற்றிச் சென்ற சில பிரெஞ்சுக் கப்பல்களைக் கைப்பற்றியது. இந்நிகழ்வால் அதிர்ச்சிக்குள்ளான துய்ப்ளே கர்நாடக நவாப் அன்வாரு தீனின் உதவியை நாடி ஆங்கிலேயரோடு போர் ஏற்படுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டார். இதனால் சில காலம் அமைதி நிலவியது.

இதனிடையே துய்ப்ளே, பிரான்சின் தீவின் (Isle of France) ஆளுநராக இருந்த லா போர்டோனாய் என்பவரைத் தொடர்பு கொண்டார். அவர் தனது எட்டு போர்க் கப்பல்களுடன் இந்தியப் பெருங்கடலுக்குள் நுழைந்தார். ஆங்கிலக் கப்பற்படைக்குத் தலைமையேற்ற பைடன் தனது நான்கு கப்பல்களோடு பிரெஞ்சுக் கப்பல்களை இடைமறித்தார். 1746 ஜுலை 6 ஆம் நாள் நடை பெற்ற இப்போரில் தோல்வியடைந்த பைடன் இங்கிலாந்திலிருந்து வரவேண்டிய கப்பல்களை எதிர்பார்த்து கல்கத்தாவிலுள்ள ஹுக்ளிக்குப் பின்வாங்கினார்.



சென்னையின் வீழ்ச்சி

வெற்றிபெற்ற பிரெஞ்சுக் கப்பற்படை பாதுகாப்பற்றிருந்த சென்னையை 1746 செப்டம்பர் 15ஆம் நாள் கைப்பற்றியது. சென்னை ஆளுநர் மோர்ஸ் சரணடையுமாறு அறிவுறுத்தப்பட்டார். ஆனால் அவர் ஆற்காடு நவாப் அன்வாரு தீனின் உதவியை நாடினார். அரசியல் விவேகத்துடன் செயல்பட்ட துய்ப்ளே சென்னையைக் கைப்பற்றி நவாப்பிடமே ஒப்படைக்கப்போவதாகக் கூறி அவரை சமாதானம் செய்தார். 1746 செப்டம்பர் 21இல் ஆங்கிலேயர் சென்னையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இதனால் ஏற்கனவே வாக்குறுதியளித்தபடி சென்னையைத் தன்வசம் ஒப்படைக்கும்படி அன்வாருதீன் கேட்டபோது துய்ப்ளே தட்டிக்கழித்தார். உடனடியாக நவாப் 10,000 வீரர்களைக் கொண்ட ஒரு படையை தனது மகன் மாபுஸ்கானின் தலைமையில் அனுப்பி வைத்தார்.

ஆனந்தரங்க பிள்ளை நாட்குறிப்புகள்

ஆனந்தரங்க பிள்ளை (1709-1761) அக்காலத்தில் தலைசிறந்த வணிகராக விளங்கிய திருவேங்கடம் பிள்ளைக்கு மகனாகப் பிறந்தார். தனது தந்தையின் மறைவுக்குப் பின்னர் பிரெஞ்சு ஆளுநர்களான டூமாஸ், துய்ப்ளே ஆகியோர் கொடுத்த ஆதரவால் புதுச்சேரியில் மாபெரும் வணிகரானார். துய்ப்ளே இவரை தலைமை துபாஷியாகவும் (துபாஷி - இரு மொழிகள் அறிந்தவர்) தலைமை வணிக முகவராகவும் (1746) அமர்த்தினார். இது அவரை புதுச்சேரியில் பெரும் அரசியல் செல்வாக்குள்ள நபராக மாற்றியது. ஆனால் அவருடைய உண்மையான புகழ், தமிழில் எழுதப்பட்ட ஏராளமான செய்திகளை உள்ளடக்கிய அவருடைய நாட்குறிப்புகளைச் சார்ந்துள்ளது. அவரின் நாட்குறிப்பு 1736முதல் 1760 வரையிலான காலத்திற்கு ,முக்கியமாக துய்ப்ளே ஆளுநராக இருந்த காலப்பகுதியின் வரலாற்றுக்கு மிகவும் மதிப்புமிக்க சான்றாதாரமாகும். மேலும் அது சமகால நிகழ்வுகள் குறித்த அவருடைய பார்வை மற்றும் கருத்துக்களின் பதிவுமாகும்.

சாந்தோம், அடையாறு போர்கள்

நவாப்பின் படைகள் புனித ஜார்ஜ் கோட்டையைச் சுற்றி வளைத்தன. ஆனால் பிரெஞ்சுப் படைகள் அவற்றை சாந்தோம் வரை பின்னுக்குத் தள்ளின. இதனிடையே பிரெஞ்சுப் படைகளுக்கு கூடுதல் படைகள் வந்து சேர்ந்தன. பிரெஞ்சுப்படைகளின் முன்னேற்றத்தை அடையாறு ஆற்றங்கரையில் தடுத்து நிறுத்த மாபுஸ்கான் முயற்சி மேற்கொண்டார். ஆனால் பிரெஞ்சுப்படைகள் சிரமப்பட்டு நீரைக் கடந்து நவாப்பின் படைகளைத் தீவிரமாகத் தாக்கின. நவாப்பின் படைகள் பெரும் நஷ்டத்திற்கு உள்ளானது.

இதன் பின்னர் துய்ப்ளே கடலூரிலிருந்த ஆங்கிலேயருக்குச் சொந்தமான புனித டேவிட் கோட்டையின் மீது கண் வைத்தார். ஆங்கிலேயர் நவாப்பின் உதவியோடு பிரெஞ்சுக்காரரிடம் தாங்கள் இழந்த பகுதிகளை மீட்கும் முயற்சியில் இறங்கினர். துய்ப்ளே மீண்டும் ஒரு அரசியல் விவேக விளையாட்டை விளையாடினார். அவர் நவாப்பிடம் ஒருவார காலத்திற்குப் புனித ஜார்ஜ் கோட்டையில் நவாப்பின் கொடியை பறக்கவிட்ட பின்னர் கோட்டையை ஆங்கிலேயர் வசம் ஒப்படைத்துவிடுவதாக உறுதி மொழி அளித்தார். மேலும் பிரெஞ்சுக்காரர் நவாபுக்கு ரூ.40,000 மதிப்புள்ள பரிசுகளை வழங்கி ஆங்கிலேயருக்கு வழங்க இருந்த உதவிகளை திரும்பப் பெறச் செய்தனர். இதனிடையே ஆங்கிலப்படைகள் கடற்படைத் தலைவர் பாஸ்கோவென் தலைமையில் புதுச்சேரியைக் கைப்பற்ற மேற்கொண்ட இரு முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. இந்நிலையில் 1748இல் ஐரோப்பாவில் இங்கிலாந்தும் பிரான்சும் ஐ லா சபேல் (Aix La Chapelle) உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. இவ்வுடன்படிக்கையின்படி இந்தியாவில் ஆங்கிலேயரும் பிரெஞ்சுக்காரரும் தங்கள் மோதல்களை முடித்துக்கொண்டனர். பிரெஞ்சுக்காரர் சென்னையை ஆங்கிலேயருக்குத் திருப்பித் தருவதென்றும் அதற்கு மாறாக வட அமெரிக்காவில் லூயிஸ்பர்க் என்ற இடத்தை பிரெஞ்சுக்காரருக்குக் கொடுப்பதென்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

இரண்டாம் கர்நாடகப் போர்: 1749 - 1754

ஐரோப்பாவில் பிரான்சுக்கும் இங்கிலாந்திற்கும் இடையே அமைதி நிலவியது. ஆனால் இந்தியாவில் இவ்விரு காலனி நாடுகளாலும் அமைதியாக இருக்க முடியவில்லை. சுதேச அரசர்களை ஒருவருக்கு எதிராக மற்றொருவரைத் தூண்டிவிட்டனர். ஆற்காடு, ஹைதராபாத் அரசுகளில் ஏற்பட்ட வாரிசுரிமை போர்களில் பங்கெடுப்பதன் மூலம் துய்ப்ளே பிரான்சின் செல்வாக்கை மேம்படுத்த விரும்பினர்.

ஹைதரபாத்தின் நிஜாம் ஆசப்ஜா 1748இல் மரணமடைந்தார். அவருடைய பேரன் முசாபர் ஜங் அடுத்த நிஜாமாக ஆவதற்கு உரிமை கொண்டாடியதை துய்ப்ளே ஆதரித்தார். ஆற்காட்டில் முகமது அலிக்கு எதிராக சந்தா சாகிப்பை ஆதரித்தார். பிரெஞ்சுக்காரர், நிஜாம், கர்நாடக நவாப் ஆகியோரிடையே ஒரு முக்கூட்டு உடன்படிக்கை ஏற்பட்டது.

பெரும் மதிப்பு வாய்ந்த சென்னையை இழந்த ஆங்கிலேயருக்குப் புனித டேவிட் கோட்டை மட்டுமே இருந்தது. பிரெஞ்சுக்காரரின் செல்வாக்கை குறைப்பதற்காக ஆங்கிலேயர் ஹைதராபாத் அரியணைக்கு எதிர் போட்டியாளரான நாசிர் ஜங்கையும், கர்நாடகத்தில் 1749இல் நடைபெற்ற ஆம்பூர் போரில் நவாப் அன்வாருதீன் கொல்லப்பட்ட பின்னர் அவ்வரியணைக்கு முகமது அலியையும் ஆதரித்தனர்.



ஆம்பூர் போர் (1749)

ஹைதராபாத் நிஜாமிற்கு உரிமை கோரிய முசாபர் ஜங், கர்நாடக அரியணைக்கு உரிமைகோரிய சந்தா சாகிப் ஆகிய இருவரும் நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட பிரெஞ்சுக் காலாட்படைகளின் உதவியோடு அன்வாருதீன் படைகளைத் தாக்கி பெருமளவு சேதத்தை ஏற்படுத்தினர். போரில் அன்வாருதீன் கொல்லப்பட்டார். சந்தா சாகிப் நவாபாக ஆற்காட்டினுள் நுழைந்தார். இதே சமயத்தில் அன்வாருதீனின் மகனான முகமது அலி திருச்சிக்குத் தப்பிச் சென்றார்.

ஆம்பூர் போரைத் தொடர்ந்து வெற்றி பெற்ற படைகள் தக்காணத்தில் நுழைந்தன. பிரெஞ்சுப்படைகளால் நாசிர் ஜங் கொல்லப்பட்டார். முசாபர் ஜங் 1750 டிசம்பரில் ஹைதராபாத்தின் நிஜாமாக ஆக்கப்பட்டார். பேரரசை நிறுவ வேண்டுமென்ற துய்ப்ளேயின் கனவு நனவாகலாம் என்ற நிலை சில காலமிருந்தது. நிஜாமிடமிருந்தும் ஆற்காடு நவாப்பிடமிருந்தும் துய்ப்ளே பெருமளவு பணத்தையும் நிலங்களையும் பெற்றார். முசாபர் ஜங் பிரெஞ்சுக்காரரின் பாதுகாப்பைக் கோரியபோது துய்ப்ளே பிரெஞ்சுத் தளபதி புஸ்ஸி அவருடன் அதிக எண்ணிக்கையில் பிரெஞ்சு வீரர்களையும் அனுப்பி வைத்தார். ஆனால் முசாபர் ஜங் நீண்ட நாட்கள் உயிரோடில்லை. நாசிர் ஜங்கை யார் கொன்றார்களோ அவர்களே முசாபர் ஜங்கையும் கொன்றனர். உடனடியாக புஸ்ஸி நாசிர் ஜங்கின் சகோதரனான சலபத் ஜங் என்பாரை அரியணை ஏற்றினார். சந்தா சாகிப் ஆங்கிலேயரின் செல்வாக்கை குறைக்க வேண்டும் என்பதற்காகவும் முகமது அலியைக் கைது செய்யவும் (அன்வாருதீன் கொல்லப்பட்ட பின்னர் திருச்சிக்கு தப்பியோடியவர்) நிஜாம் மற்றும் பிரெஞ்சுக்காரர் உதவியுடன் திருச்சியைக் கைப்பற்ற முடிவு செய்தார்.

கிளைவும் இரண்டாவது கர்நாடகப் போரும்

சந்தா சாகிப்பின் உதவியோடு திருச்சியைக் கைப்பற்ற வேண்டுமென துய்ப்ளேயும் உறுதி பூண்டிருந்தார். சந்தா சாகிப்பின் படையோடு பிரெஞ்சுப் படையினர் 900 பேர் சேர்ந்தனர். முகமது அலி 5000 படைவீரர்களையும் தனக்கு உதவியாக 600க்கும் மிகாத ஆங்கில வீரர்களை மட்டும் கொண்டிருந்தார். ராபர்ட் கிளைவின் எண்ணம் வரலாற்றின் போக்கை மாற்றியமைத்தது. பிரெஞ்சுக்காரரும் நவாப்பும் திருச்சி முற்றுகையில் தீவிரமாக இருக்கையில் ஆற்காட்டின் மீது திடீர் தாக்குதலைத் கொடுக்க வேண்டும் என்ற கருத்தை ராபர்ட் கிளைவ் முன்வைத்தார்.

கிளைவ் 1752 ஆகஸ்ட் 26இல் புனித டேவிட் கோட்டையிலிருந்து 200 ஆங்கிலயே, 300 இந்திய வீரர்களுடன் புறப்பட்டார். எதிர்பார்த்தபடி சிறிய பகுதிகளைச் சேர்ந்த பல அரசர்களிடமிருந்து உதவிகளைப் பெற்றனர். மைசூர் மற்றும் தஞ்சாவூர் அரசர்கள் முகமது அலியை ஆதரித்தனர். சந்தா சாகிப் உடனடியாக 3000 வீரர்களைத் தனது மகன் ராஜா சாகிப்பின் தலைமையில் ஆற்காட்டுக்கு அனுப்பி வைத்தார். 1752 ஆகஸ்ட் 31இல் ஆற்காட்டைக் கைப்பற்றிய கிளைவ் ராஜாசாகிப்பின் 53 நாள் கோட்டை முற்றுகையையும் தாக்குப்பிடித்தார். ராஜாசாகிப்பிற்குப் புதுச்சேரியிலிருந்த பிரெஞ்சுக்காரர் உதவினர். ஆரணி போரில் ஆங்கிலேயரும் மராத்திய அரசர் முராரிராவும் தங்களைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையிலான பிரெஞ்சு மற்றும் ஆற்காட்டுப் படைகளை எதிர் கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற பல போர்களில், குறிப்பாக காவேரிப்பாக்கத்தில் நடைபெற்ற போரில் சந்தா சாகிப் பிடிபட்டு கொல்லப்பட்டார். முகமது அலி எதிர்ப்பேதுமில்லாமல் கர்நாடகத்தின் அரசரானார்.



ராபர்ட் கிளைவ் 1725 செப்டம்பர் 29இல் பிறந்தார். அவருக்குக் கல்வியில் ஆர்வமில்லை. படிப்பில் ஆர்வமின்மை, ஒழுக்கமின்மையால் மூன்று பள்ளிகளிலிருந்து வெளியேற்றப்பட்டார். மேலும் சண்டைக்காரன் என்ற அவப்பெயரையும் பெற்றார். அவருடைய நடத்தையால் வெறுப்புக் கொண்ட அவரின் தந்தை அவரை ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியில் எழுத்தர் பணியில் அமர்த்தி இந்தியாவிற்கு அனுப்பி வைத்தார். கிளைவ் சென்னை மாகாண ஆளுநராக உருவானார். முதல்முறை ஆளுநராக இருந்தபோது (1755-60) பிளாசிப் போரில் வெற்றிபெற்று அதன்மூலம் இந்தியாவில் ஆங்கிலேயப் பேரரசிற்கு அடித்தளமிட்டார். இரண்டாவது முறை 1764-1767 ஆளுநராக இருந்தபோது பக்சார் போரில் வெற்றி பெற்று வங்காளத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை வலிமைகொள்ளச் செய்தார். அவர் இந்தியாவை விட்டுச் செல்லும் போது மிகப் பெரிய செல்வந்தராக வெளியேறினார். அவரின் தனிப்பட்ட சொத்தாக 2,34,000 பவுண்டுகள் இருந்தது. அது தவிர வங்காளத்திலுள்ள அவரது ஜாகிர் மூலம் 27,000 பவுண்டுகள் வருடாந்திர வாடகை வருவாயைப் பெற்றார். அவர் இங்கிலாந்து திரும்பியபோது தன் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்துப் பாராளுமன்ற விசாரணையை எதிர் கொண்டார். கிளைவ் தன் மீதான குற்றசாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டபோதிலும் தற்கொலை செய்து கொண்டார்.

ஐரோப்பாவில் இங்கிலாந்தும் பிரான்சும் எப்போரிலும் ஈடுபடாத நிலையில் இந்தியாவில் தங்கள் காலனிகள் போரில் ஈடுபடுவதைக் கண்டனம் செய்தனர். பிரெஞ்சு அரசாங்கம் துய்ப்ளேயை திரும்ப அழைத்துக் கொண்டது. 1755இல் ஆங்கிலேயருடன் புதுச்சேரி உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. இந்திய சுதேச அரசுகளிடையே ஏற்படும் பிரச்சனைகளில் தலையிடுவதில்லை என இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன. இவ்வுடன்படிக்கை, இந்தியாவில் இவ்விருவரும் சொந்தமாகக் கொண்டிருந்த பகுதிகளைத் தெளிவாக வரையறுத்தது. இந்நிலை சுமார் இருநூறு ஆண்டு காலம் இந்தியா விடுதலை பெறும் வரை நடைமுறையிலிருந்தது.

மூன்றாம் கர்நாடகப் போர்: 1756 - 1763

ஐரோப்பாவில் 1756இல் தொடங்கிய ஏழாண்டுப் போரின் (1756-1763) விளைவே மூன்றாம் கர்நாடகப் போராகும். உலகளாவிய இம்மோதலில் முக்கிய எதிரிகளான இங்கிலாந்தும் பிரான்சும் போரிட்டன. இப்போர் வட அமெரிக்காவிலும் (அமெரிக்க விடுதலைப் போராக முடிந்தது) மேற்கு ஆப்பிரிக்காவிலும் (பின்னர் பிரெஞ்சு மேற்கு ஆப்பிரிக்கா என்றானது) நடைபெற்றது. இந்தியாவில் இது மூன்றாவது கர்நாடகப் போராக வெளிப்பட்டது.

நம்முடைய கவனத்தை மூன்றாவது கர்நாடகப் போரில் திருப்பும் முன்னர், இதே நேரத்தில் வங்காளத்தில் என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

பிளாசிப் போர் (1757)

வங்காளத்தில் உள்நாட்டு வணிகத்தில் பங்கேற்பதற்காக வங்காள நவாப்புக்கு செலுத்த வேண்டிய வரிகளைச் செலுத்தாமல், ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் வணிகக் குழு, முகலாய அரசு வழங்கிய வணிக உரிமைகளைத் தவறாகப் பயன்படுத்தியது. இதைத் தவிர வங்காள நவாப் சிராஜ் உத் தௌலாவுடன் பகை கொண்டிருந்த அவருடைய சகோதரியின் மகனுக்கு வணிகக்குழு அடைக்கலம் வழங்கியது. அவரைத் தன்னிடம் ஒப்படைக்குமாறு நவாப் கேட்டபோது வணிகக்குழு மறுத்துவிட்டது. இதனால் நவாப் வில்லியம் கோட்டையைக் கைப்பற்றி ஆங்கிலேயரைச் சிறையில் அடைத்தார். வில்லியம் கோட்டையைச் சேர்ந்த ஆங்கில அதிகாரிகளின் இடர்பாடுகளைக் களைவதற்காக வணிகக்குழு புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்து ஒரு வலுவான படைப்பிரிவை ராபர்ட் கிளைவ், வாட்சன் ஆகியோர் தலைமையில் அனுப்பி வைத்தது. இதனைத் தொடர்ந்து நடைபெற்றப் போரே வரலாற்று அறிஞர்களால் பிளாசிப் போர் என அழைக்கப்படுகிறது.

 


வங்காள - நவாப்பால் கைது செய்யப்பட்ட 146 ஐரோப்பியர் 18க்கு 15 அடி அளவுள்ள ஓர் அறையில் அடைக்கப்பட்டதாகவும் அவர்களில் 23 பேர் மட்டுமே உயிர்பிழைக்க மற்றவர்கள் மூச்சுத்திணறி இறந்து போனதாகவும் பழி சொல்லப்பட்டது. இருட்டறைத் துயரம் (Black Hole Tragedy) என ஆங்கிலேய ஆவணங்களில் சுட்டும் இந்நிகழ்வின் உண்மைத் தன்மை குறித்து வரலாற்று அறிஞர்களிடையே விவாதம் நடைபெறுகிறது.

பிளாசிப் போர் வணிக நிறுவனமாக இருந்த ஆங்கிலேயக் கிழக்கிந்திய வணிகக்குழுவை, வங்காளத்தின் மீது இறையாண்மை கொண்ட அரசியல் சக்தியாக மாற்றியது. ஆங்கிலேயர் பெற்றிருந்த வணிக உரிமைகளை இது உறுதி செய்தது. சிராஜ் உத்தௌலாவிற்குப் பதிலாக அவருக்குத் துரோகமிழைத்த மீர் ஜாபர் வங்காள நவாப் ஆக்கப்பட்டார். கல்கத்தாவின் மீதான வணிகக்குழுவின் இறையாண்மை அங்கீகரிக்கப்பட்டது. தன்னுடைய படைகளைப் பராமரிப்பதற்காக வணிகக்குழுவிற்கு நிலம் வழங்கப்பட்டது. வணிகக்குழுவின் அதிகாரி (Resident) ஒருவரை தன்னுடைய அவையில் அமர்த்திக்கொள்ளவும் மீர்ஜாபர் ஒத்துக்கொண்டார். பின்னர் மீர்ஜாபருக்குப் பதிலாக மீர்காசிம் நவாப் ஆக்கப்பட்டார். இவர் தன் சுதந்திரத்தை நிலைநிறுத்த மேற்கொண்ட முயற்சியை வணிகக்குழுவின் அதிகாரிகள் விரும்பவில்லை.

பக்சார் போர் (1764)

வங்காளத்திலிருந்து தப்பியோடிய மீர்காசிம் முகலாய அரசர் இரண்டாம் ஷா ஆலம், அவத்தின் நவாபான சூஜா உத்தெளலா ஆகியவர்களோடு கூட்டு சேர்ந்தார். தங்கள் உள் விவகாரங்களில் வணிகக்குழு தலையிடுவதால் அவர்களும் மனக்குறையோடு இருந்தனர். இம்மூவரும் வணிகக்குழுவுக்கு எதிராகப் போர் அறிவிப்புச் செய்தனர். 1764இல் பக்சார் என்னுமிடத்தில் நடைபெற்ற போரில் இம்மூவரும் வீரத்துடன் போரிட்டனர். வணிகக்குழுவின் படைகள் சிறப்பு வாய்ந்ததாக இருந்தமையால் அவர்கள் போரில் வெற்றி பெற்றனர். பக்சார் போரில் ஆங்கிலேயர் பெற்ற வெற்றி 1765இல் அலகாபாத் உடன்படிக்கைக்கு இட்டுச்சென்றது. ராபர்ட் கிளைவும் இரண்டாம் ஷாஆலமும் உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர். இவ்வுடன்படிக்கையின் மூலம் வணிகக்குழு வங்காளம், பீகார், ஒரிசா ஆகிய பகுதிகளின் திவானி (நிலவரி வசூலிக்கும் உரிமை) உரிமையைப் பெற்றது. மேலும் வங்காளத்திலிருந்த பர்த்தவான், மிட்னாபூர், சிட்டகாங் ஆகிய மூன்று மாவட்டங்களையும், கல்கத்தாவின் மீதான இறையாண்மையையும் பெற்றது. ஆங்கிலேயர் வங்காளத்தின் ஆட்சியாளராக மாறினர். 



மூன்றாம் கர்நாடகப் போர் (1756 - 63)

ஐரோப்பாவில் ஏழாண்டுப் போர் வெடித்தவுடன், வங்காளத்தில் பிரெஞ்சுக்காரர்களுக்குச் சொந்தமான சந்தன் நகரைக் கிளைவ் கைப்பற்றினார். இத்துடன் வங்காளத்தில் பிரெஞ்சுக்காரரின் செல்வாக்கு முடிவுக்கு வந்தது. பிரெஞ்சு அரசு கவுண்ட்-டி-லாலி என்பவரை இந்தியாவிலுள்ள பிரெஞ்சுப் படைகளுக்குத் தலைமைத் தளபதியாக அனுப்பி வைத்தது. ஆங்கிலேயர் வங்காளத்தில் தங்கள் கவனத்தைக் குவித்திருந்ததால் லாலி சிலநாள் முற்றுகைக்குப் பின்னர் உடனடியாக டேவிட் கோட்டையை கைப்பற்றினார். அடுத்து தஞ்சாவூர் முற்றுகையிடப்பட்டது. பிரெஞ்சுக்காரர் தஞ்சாவூர் அரசரிடமிருந்து பணம் எதிர்பார்த்தனர். ஆனால் அவரால் தர இயலவில்லை . புதுச்சேரியை ஆங்கிலப்படைகள் தாக்கும் ஆபத்து இருந்ததால் ஒரு பைசா லாபமில்லாமல் தஞ்சாவூர் முற்றுகை கைவிடப்பட்டது. ஒரு வேளை புதுச்சேரி தாக்கப்பட்டால் தனக்கு உதவியாக இருப்பதற்காக லாலி ஹைதராபாத்திலிருந்த புஸ்ஸியை அழைத்தார். இடையில் தக்காண அரசியலில் மாற்றங்கள் வேகமாக நடைபெற்றன. இராஜமுந்திரியை 1758இலும் மசூலிப்பட்டினத்தை 1759இலும் பிரெஞ்சுக்காரர் இழந்தனர். ஹைதராபாத் நிஜாம் சலபத்ஜங் போரே செய்யாமல் ஆங்கிலேயரோடு ஒப்பந்தம் செய்து கொண்டார். பிரெஞ்சுக்காரருக்குத் தான் ஏற்கனவே வழங்கியிருந்த மசூலிப்பட்டினத்தையும் வடசர்க்கார் பகுதிகளையும் அவர் ஆங்கிலேயருக்கு மாற்றி வழங்கினார்.

புஸ்ஸி, லாலி ஆகியோரின் கூட்டுப்படை காஞ்சிபுரத்தைக் கைப்பற்றி, சென்னையைக் கைப்பற்ற விரைந்தது. ஆங்கிலேயர் வங்காளத்தில் தீவிரமாகச் செயல்பட்டுக்கொண்டிருந்ததால் சென்னையில் 800 ஆங்கில வீரர்களையும் 2500 இந்திய வீரர்களையும் மட்டுமே கொண்டிருந்தனர்.


1758 டிசம்பர் 12ஆம் நாள் சென்னையை முற்றுகையிடத் தொடங்கிய பிரெஞ்சுக்காரரால் 1759 பிப்ரவரி வரை சிறிதும் கூட முன்னேற முடியவில்லை . இரண்டு பக்கங்களிலும் பலத்த சேதம் ஏற்பட்டது. இருந்தபோதிலும் படைகளுக்குத் தேவையான பொருட்களின் வரத்து சுருங்கியதால் பிரெஞ்சுக்காரரால் முற்றுகையை நீட்டிக்க இயலவில்லை. இதே சமயத்தில் சென்னையை விடுவிப்பதற்காக ஆங்கிலேய ஜெனரல் பொகாக் ஒரு கப்பற்படையோடு இந்தியா வந்தார். லாலி முற்றுகையைக் கைவிட்டுக் காஞ்சிபுரம் செல்லும் கட்டாயத்திற்கு உள்ளானார்.

வந்தவாசிப் போரும் புதுச்சேரியின் வீழ்ச்சியும்


பிரெஞ்சுப் படைகளை ஆற்காட்டில் விட்டுவிட்டு லாலி புதுச்சேரி திரும்பினார். வந்தவாசியை நோக்கிச் சென்ற ஆங்கிலப்படைகள் திடீரென காஞ்சிபுரத்தைத் தாக்கிக் கைப்பற்றின. சர் அயர்கூட் என்பவரின் தலைமையில் புதிய ஆங்கிலபடைப்பிரிவும் வந்து சேர்ந்தது. இறுதியில் 1760 ஜனவரி மாதம் இறுதிப்போர் அயர் கூட், லாலி ஆகியோரிடையே வந்தவாசியில் நடைபெற்றது. புஸ்ஸி தோற்கடிக்கப்பட்டு சிறைபிடிக்கப்பட்டார். லாலி புதுச்சேரிக்குப் பின் வாங்கினார். ஆனால் புதுச்சேரி உடனடியாக முற்றுகையிடப்பட்டது. இதே சமயத்தில் செஞ்சியைக் கைப்பற்றிய ஆங்கிலப்படைகள், புதுச்சேரியை முற்றுகையிட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை மாற்றி அமைத்த லாலி தீரத்துடன் போராடினார். பல மாதங்கள் நீடித்த புதுச்சேரி முற்றுகை 1761 பிப்ரவரி மாதம் 4 ஆம் நாள் முடிவுக்கு வந்து புதுச்சேரி வீழ்ந்தது. லாலி கைது செய்யப்பட்டு பிரெஞ்சு அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டார். தன்னுடைய நாட்டில் லாலி விசாரணை செய்யப்பட்டு மரணதண்டனை வழங்கப்பட்டது. அதே ஆண்டில் பிரெஞ்சு வணிகக்குழுவிற்குச் சொந்தமான மாகியையும் ஆங்கிலேயர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். பிரெஞ்சுக்காரர்கள் அனைத்து இடங்களையும் இழந்தனர். ஏழாண்டுப் போரின் இறுதியில், 1763இல் பாரிஸ் உடன்படிக்கை கையெழுத்தானபோது அனைத்துப் போர்களும் முடிவுக்கு வந்தன. பாரிஸ் உடன்படிக்கையின்படி புதுச்சேரியும் சந்தன் நகரும் மீண்டும் பிரெஞ்சுக்காரருக்கு வழங்கப்பட்டது. எனவே பிரெஞ்சுக்காரர் புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் (யூனியன் பிரதேசமான புதுச்சேரியின் பகுதிகள்), மாகி (கேரளாவிலுள்ள கண்ணூர் மாவட்டம்), சந்தன் நகர் (வங்காளம்) ஆகிய பகுதிகளை மட்டுமே தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டிருந்தனர். வணிக நிறுவனமாக இருந்த இங்கிலாந்து பெரும் நிலப்பரப்பை ஆளுகின்ற சக்தியாக மாறி அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட காலனியாதிக்க நாடாக எழுச்சி பெற்றது.

Tags : Arrival of Europeans and the Aftermath ஐரோப்பியர் வருகையும் அதற்குப் பின்பும்.
11th History : Chapter 16 : The Coming of the Europeans : The Carnatic Wars Arrival of Europeans and the Aftermath in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வகுப்பு வரலாறு : அலகு 16 : ஐரோப்பியரின் வருகை : கர்நாடகப் போர்கள் - ஐரோப்பியர் வருகையும் அதற்குப் பின்பும் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வகுப்பு வரலாறு : அலகு 16 : ஐரோப்பியரின் வருகை