ஐரோப்பியர் வருகையும் அதற்குப் பின்பும் - டேனியர் | 11th History : Chapter 16 : The Coming of the Europeans

   Posted On :  14.05.2022 08:37 am

11 வது வகுப்பு வரலாறு : அலகு 16 : ஐரோப்பியரின் வருகை

டேனியர்

டென்மார்க் மற்றும் நார்வே (1813 வரை இரண்டும் இணைந்திருந்தது) இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் குடியேற்றங்களைக் கொண்டிருந்தது.

டேனியர்

டென்மார்க் மற்றும் நார்வே (1813 வரை இரண்டும் இணைந்திருந்தது) இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் குடியேற்றங்களைக் கொண்டிருந்தது. தமிழ்நாட்டில் தரங்கம்பாடி, மேற்கு வங்காளத்தில் செராம்பூர், நிக்கோபர் தீவுகள் ஆகியன டேனியர் வசம் இருந்த பகுதிகளாகும். 1616 மார்ச் 17ஆம் நாள் டென்மார்க் அரசர் நான்காம் கிறிஸ்டியன் ஒரு பட்டயத்தை வெளியிட்டதன் மூலம் டேனியக் கிழக்கிந்தியக் கம்பெனியை உருவாக்கினார். டேனிய வணிகரிடையே இந்நிறுவனத்திற்கு பெரும் ஆதரவு ஏதுமில்லை. 1618இல் கடற்படைத் தலைவர் ஒவி ஜெடி இலங்கைக்கு முதல் கடற்பயணத்தை மேற்கொண்டார். டேனியரால் இலங்கையோடு வணிக ஒப்பந்தம் எதையும் மேற்கொள்ள இயலவில்லை. ஏமாற்றத்தோடு திரும்புகிற வழியில் காரைக்காலுக்கு அருகே அவர்களின் முக்கியக் கப்பல் போர்த்துகீசியரால் மூழ்கடிக்கப்பட்டது. சிக்கிக்கொண்ட பதிமூன்று மாலுமிகளும் அவர்களின் வணிக இயக்குநரான ராபர்ட் கிராப்பி என்பவரும் தஞ்சாவூர் நாயக்க அரசரிடம் அழைத்துச் செல்லப்பட்டனர். ராபர்ட் கிராப்பி தஞ்சாவூர் அரசரோடு பேச்சுவார்த்தை நடத்தி ஓர் ஒப்பந்தத்தையும் செய்துகொண்டார். 1620 நவம்பர் 20 ஆம் நாள் கையெழுத்தான அவ்வொப்பந்தத்தின்படி டேனியர்கள் தரங்கம்பாடியையும் அதில் கோட்டை கட்டிக்கொள்ளும் உரிமையையும் பெற்றனர்.


தரங்கம்பாடியிலுள்ள டேனியர் கோட்டை அடிக்கடி சாலைகளையும் வீடுகளையும் சேதப்படுத்தியபேரலைகளின் முன் பாதுகாப்பற்றதாக இருந்தது. முப்பதாண்டுப் போரில் பங்கேற்று பெருமளவில் பண இழப்பு அடைந்த போதிலும் அவர்களால் மசூலிப்பட்டினத்தில் ஒரு கிடங்கை (factory) அமைக்க முடிந்தது. பாலசோரிலும், பிப்ளி (ஹூக்ளி ஆற்றின் அருகே) என்ற இடத்திலும் வணிக முகாம்கள் அமைக்கப்பட்டன. இந்நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த டென்மார்க் முதலீட்டாளர்கள் இந்நிறுவனத்தை கலைக்க வேண்டுமென்றனர். ஆனால் அரசர் நான்காம் கிறிஸ்டியன் அதை எதிர்த்தார். 1648இல் அவரின் மரணத்திற்குப் பின்னர் அவருடைய மகன் பிரடெரிக் இந்நிறுவனத்தைக் கலைத்தார்.

இரண்டாவது டேனிய கிழக்கிந்தியக் கம்பெனி 1696இல் தொடங்கப்பட்டது. டென்மார்க்கிற்கும் தரங்கம்பாடிக்கும் இடையிலான வணிகம் மீண்டும் நடைபெறத் துவங்கியது. பல புதிய வணிக முகாம்கள் அமைக்கப்பட்டன. தஞ்சாவூர் நாயக்க அரசர் தரங்கம்பாடியைச் சுற்றியிருந்த மேலும் மூன்று கிராமங்களைப் பரிசாக அளித்தார். 1706 ஜுன் 9 ஆம் நாள் டென்மார்க்கிலிருந்து முதன் முதலாக இரண்டு லுத்தரன் சமயப்பரப்பாளர்கள் வந்தனர். டேனியர்கள் 1755இல் அந்தமானிலும் நிக்கோபாரிலும் குடியேறினர். ஆனால் மலேரியா காய்ச்சல் ஏற்படுத்திய அச்சத்தால் அவற்றை 1848இல் கைவிட்டனர். நெப்போலினியப் போர்களின் போது டேனியரின் பகுதிகளை ஆங்கிலேயர் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கினர். 1839இல் செராம்பூர் ஆங்கிலேயருக்கு விற்கப்பட்டது. தரங்கம்பாடி உள்ளிட்ட ஏனைய குடியேற்றங்கள் 1845 இல் விற்கப்பட்டன.

டேனியரும் தமிழகமும்


தரங்கம்பாடியில் டேனியர் கட்டிய கோட்டை இன்றும் சீர் கெடாமல் உள்ளது. டென்மார்க்கிலிருந்து இந்தியா வந்த முதலிரண்டு லுத்தரன் மதப் பரப்பாளர்களான பார்த்தலோமியஸ் சீகன்பால்கு, ஹென்ரிச் புலுட்சா ஆகிய இருவரும் 1706 செப்டம்பரில் தரங்கம்பாடி வந்தனர். அவர்கள் சமயப் பிரச்சாரம் செய்யத் தொடங்கினர். பத்து மாதங்களுக்குள் தங்களால் மதமாற்றம் செய்யப்பட்டோருக்குத் திருமுழுக்கு சடங்கு நடத்தி வைத்தனர். அவர்களின் பணிகளை உள்ளூர் டேனிய அதிகாரிகளும் இந்துக்களும் எதிர்த்தனர். உள்ளூர் மக்களை மதமாற்றம் செய்வதன் மூலம் சீகன்பால்கு கலகத்தைத் தூண்டுகிறார் எனக் குற்றம் சாட்டப்பட்டு நான்கு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். கோபன்ஹேகனைச் சேர்ந்த ஒரு மதப்பரப்பாளர் சங்கம் உள்ளூர் கிறித்தவத் திருச்சபையை ஊக்கப்படுத்த நினைத்தது . அதன்படி தனது மதப்பரப்பாளர்களை மதபோதனை மட்டும் செய்யுமாறும் ஏனையவற்றைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் எனவும் அறிவுறுத்தியது. இருந்தபோதிலும் சீகன்பால்கு மற்றவர்கள் நலனில் அக்கறைகொள்வது என்பது மதபோதனையின் உட்பொருளாக உள்ளது என வாதிட்டார்.

சீகன்பால்கு ஓர் அச்சுக்கூடத்தை நிறுவினார். தமிழ்மொழி, இந்திய மதங்கள், பண்பாடு குறித்த நூல்களை வெளியிட்டார். 1715இல் அவர் விவிலியத்தின் புதிய ஏற்பாட்டை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். அவரும் அவருடைய சகாக்களும் 1718இல் கட்டிய தேவாலயக் கட்டடமும் இன்றும் பயன்பாட்டில் உள்ளது. உள்ளூர் மத குருமார்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக ஒரு இறையியல் பயிற்சிப் பள்ளியையும் நிறுவினார்.

1719 பிப்ரவரி 23 ஆம் நாள் அவர் இயற்கை எய்திய போது தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட, பழைய & புதிய ஏற்பாடு, தமிழில் சுருக்கமாக எழுதப்பட்ட பல ஏடுகள், இரண்டு தேவாலயங்கள், இறையியல் பயிற்சிப் பள்ளி ஆகியவற்றையும் புனித நீராட்டல் சடங்கை முடித்திருந்த 250 கிறித்தவர்களையும் விட்டுச் சென்றார்.

 

Tags : Arrival of Europeans and the Aftermath ஐரோப்பியர் வருகையும் அதற்குப் பின்பும்.
11th History : Chapter 16 : The Coming of the Europeans : The Danes Arrival of Europeans and the Aftermath in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வகுப்பு வரலாறு : அலகு 16 : ஐரோப்பியரின் வருகை : டேனியர் - ஐரோப்பியர் வருகையும் அதற்குப் பின்பும் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வகுப்பு வரலாறு : அலகு 16 : ஐரோப்பியரின் வருகை