Home | 7 ஆம் வகுப்பு | 7வது சமூக அறிவியல் | டெல்லி சுல்தானியம்

முதல் பருவம் அலகு 4 | வரலாறு | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - டெல்லி சுல்தானியம் | 7th Social Science : History : Term 1 Unit 4 : The Delhi Sultanate

   Posted On :  18.04.2022 03:24 am

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : முதல் பருவம் அலகு 4 : டெல்லி சுல்தானியம்

டெல்லி சுல்தானியம்

கற்றலின் நோக்கங்கள் • டெல்லியைத் தலைநகராகக் கொண்டு இந்தியாவை ஆட்சிசெய்த பல்வேறு வம்சாவளிகளைச் சேர்ந்த துருக்கியச் சுல்தான்கள் • அவர்களின் ராணுவப் படையெடுப்புகள் மற்றும் இறையாண்மை விரிவாக்கம் பற்றி தெரிந்து கொள்ளுதல் • டெல்லி சுல்தானியத்தின் நிர்வாகம் பற்றி அறிதல் • அக்காலப் பகுதியின் கலை மற்றும் கட்டடக்கலை பற்றி தெரிந்து கொள்ளுதல்

அலகு - IV

டெல்லி சுல்தானியம்



கற்றலின்  நோக்கங்கள்

டெல்லியைத் தலைநகராகக் கொண்டு இந்தியாவை ஆட்சிசெய்த பல்வேறு வம்சாவளிகளைச் சேர்ந்த துருக்கியச் சுல்தான்கள் 

அவர்களின் ராணுவப் படையெடுப்புகள் மற்றும் இறையாண்மை விரிவாக்கம் பற்றி தெரிந்து கொள்ளுதல்

டெல்லி சுல்தானியத்தின் நிர்வாகம் பற்றி அறிதல் 

அக்காலப் பகுதியின் கலை மற்றும் கட்டடக்கலை பற்றி தெரிந்து கொள்ளுதல்


அறிமுகம்

பதினொன்றாம் நூற்றாண்டில் வடஇந்தியாவைக் கொள்ளையடித்த துருக்கியக் குதிரைப்படை வீரர்கள் அடுத்த நூற்றாண்டில் கங்கைச் சமவெளியைத் தங்கள் அரசியல் ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டுவருவதில் வெற்றி பெற்றனர். அவர்களின் துணிச்சலும் மூர்க்கக்குணமுமே வெற்றிக்குக் காரணங்களாகச் சொல்லப்பட்டாலும், தங்களையும் தங்கள் நாட்டையும் காத்துக்கொள்ளத் தவறிய இந்திய அரசர்களின் இயலாமையே அவர்களின் வெற்றிக்கான உண்மைக் காரணங்களாகும். இந்தியர்கள் தங்களிடையே ஒருவர்மேலொருவர் அவநம்பிக்கை கொண்டிருந்தனர். இஸ்லாமின் தொடக்கக் கால வெற்றிகளையும் அது பரவி வருவதையும் கவனத்தில் கொள்ளத் தவறினர். முஸ்லீம் வீரர்களின் மேம்பட்ட போர் செய்யும் ஆற்றல் அவர்களின் வெற்றிக்கு மற்றொரு காரணமாகும். இப்பாடத்தில் துருக்கியப் போர்வீரர்கள் எவ்வாறு இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவினர், பாபரின் வருகை வரை அவ்வாட்சியை எவ்வாறு நிலைகொள்ளச் செய்தனர் என்பன குறித்து நாம் விவாதிப்போம்.


அடிமை வம்சம் (1206-1290)

இந்தியாவில் முஸ்லீம்களின் ஆட்சி முகமது கோரியால் கி.பி. (பொ.ஆ) 12 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. அவருக்கு மகன்கள் இல்லாத காரணத்தால் பன்டகன் (இராணுவப் பணிக்காக விலைக்கு வாங்கப்பட்ட அடிமைகளைக் குறிக்கும் பாரசீகச் சொல்) எனும் தனிவகை அடிமைகளைப் பேணினார். அவர்கள் மாகாண அளவில் ஆளுநர்களாகப் பதவியில் அமர்த்தப்பட்டுப் பின்னர் சுல்தான் எனும் நிலைக்கு உயர்த்தப்பட்டனர். 1206இல் கோரியின் இறப்பிற்குப் பின்னர், அவரின் அடிமையான குத்புதீன் ஐபக் இந்தியாவிலிருந்த துருக்கியப் பகுதிகளுக்கு அரசராக தன்னை அறிவித்துக்கொண்டார். அடிமை வம்சத்தின் ஆட்சிக்கான அடிக்கல்லை அவர் நாட்டினார். இவ்வரச மரபு "மம்லுக்" அரச மரபென்றும் அழைக்கப்பட்டது. மம்லுக் எனும் அராபிய வார்த்தைக்கு 'அடிமை' என்று பொருள். குத்புதீன் ஐபக், சம்சுதீன் இல்துமிஷ், கியாசுதீன் பால்பன் ஆகிய மூவரும் இவ்வம்சத்தைச் சேர்ந்த மூன்று மாபெரும் சுல்தான்கள் ஆவர். அடிமை வம்சத்தினர் இத்துணைக்கண்டத்தை எண்பத்து நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தனர்.


குத்புதீன் ஐபக் (1206-1210) 

குத்புதீன் லாகூரைத் தலைநகராகக் கொண்டு தனது ஆட்சியைத் தொடங்கினார். பின்னர் தனது தலைநகரை டெல்லிக்கு மாற்றினார். டெல்லியில் ஆட்சிபுரிந்தவரை செயல்திறன் மிக்கவராகச் செயல்பட்டுப் பல புதிய பகுதிகளைக் கைப்பற்றினார். கலகங்களை ஒடுக்கினார். மத்திய மற்றும் மேற்கு சிந்து - கங்கைச் சமவெளிப் பகுதிகளுக்குத் (வடஇந்தியா) தானே தலைமையேற்றுப் படை நடத்திச்சென்று பலபகுதிகளைக் கைப்பற்றினார். கீழை கங்கைச் சமவெளியைக் (பீகார், வங்காளம்) கைப்பற்றும் பொறுப்பைப் பக்தியார் கல்ஜி என்பாரிடம் ஒப்படைத்தார். ஐபக் டெல்லியில் குவ்வத்-உல்- இஸ்லாம் மஸ்ஜித் எனும் மசூதியைக் கட்டினார். அதுவே இந்தியாவிலுள்ள மிகப் பழமையான மசூதி எனக் கருதப்படுகிறது. குதுப்மினாருக்கு அவரே அடிக்கல் நாட்டினார். ஆனால் அவரால் அப்பணிகளை முடிக்க இயலாமல் போயிற்று. அவருடைய மருமகனும் அவருக்குப் பின் ஆட்சிப் பொறுப்பேற்றவருமான இல்துமிஷ் குதுப்மினாரைக்கட்டி முடித்தார். போலோ விளையாட்டின்போது குதிரையிலிருந்து தவறி விழுந்ததில் படுகாயமடைந்த ஐபக் 1210இல் இயற்கை எய்தினார்.



இல்துமிஷ் (1210 -1236) 

ஐபக்கின் மகன் ஆரம் ஷா திறமையற்றவராக இருந்தார். எனவே துருக்கியப் பிரபுக்கள் ஐபக்கின் படைத்தளபதியும் மருமகனுமான இல்துமிஷைச் சுல்தானாகத் தேர்வு செய்தனர். இல்துமிஷ் கலகக்காரர்களை ஒடுக்கி ஆட்சிப்பகுதிகளின் மீதான தனது கட்டுப்பாட்டை உறுதியாக நிறுவினார். இவருடைய ஆட்சியின்போதுதான் மங்கோலியர்கள் செங்கிஸ்கானின் தலைமையில் இந்தியாவின் எல்லைப்பகுதிகளை அச்சுறுத்தினர். ஏற்கெனவே செங்கிஸ்கானால் தோற்கடிக்கப்பட்டு விரட்டப்பட்டிருந்த குவாரிஜம் ஷா ஜலாலுதீன் என்பார் இல்துமிஷிடம் அடைக்கலமும் பாதுகாப்பும் கேட்டிருந்தார். அவருடைய வேண்டுகோளை ஏற்க மறுத்ததன் மூலம் இல்துமிஷ் மங்கோலிய ஆபத்தைத் தவிர்த்தார். மங்கோலியர்கள் தாக்குதல் மேற்கொண்டால் அதை எதிர்கொள்வதற்காகத் துருக்கியப் பிரபுக்கள் நாற்பதுபேரைக் கொண்ட ஒரு குழுவை உருவாக்கினார். அக்குழு "சகல்கானி" அல்லது நாற்பதின்மர் என அறியப்பட்டது.

இல்துமிஷ் தனது படைகளில் பணியாற்றியோர்க்கு 'இக்தாக்களை' (நிலங்கள்) வழங்கினார். "இக்தா" என்பது ராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்திற்காகக் கொடுக்கப்பட்ட நிலமாகும். நிலத்தைப் பெற்றவர் இக்தாதார் அல்லது முக்தி என்றழைக்கப்பட்டார். இவர் போர்க்காலங்களில் சுல்தானுக்கு ராணுவ உதவிகள் செய்ய வேண்டும். தனது படைகளையும் குதிரைகளையும் பராமரிப்பதற்காக இக்தாதார் தனக்கு வழங்கப்பட்ட நிலங்களிலிருந்து வரிவசூல் செய்துகொள்வார்.


ஐபக்கால் தொடங்கப்பட்ட குதுப்மினாரின் கட்டுமானப் பணிகளை இல்துமிஷ் நிறைவுசெய்தார். இருபத்தாறு ஆண்டுகள் ஆட்சிபுரிந்த இல்துமிஷ் 1236 ஏப்ரல் மாதம் இயற்கை எய்தினார்.


ரஸ்ஸியா (1236-1240)

இல்துமிஷ்ஷின் திறமை வாய்ந்த மகன் ருக்குதீன் பிரோஷ் மரணமுற்றதால், இல்துமிஷ் தனது மகளான ரஸ்ஸியா சுல்தானாவைத் தனக்குப் பின்னர் டெல்லியின் அரியணைக்கான வாரிசாக அறிவித்தார். ரஸ்ஸியா திறமையுள்ளவரும் மனவலிமை கொண்ட வீராங்கனையுமாவார். அவர் துருக்கிய இனத்தைச் சாராத பிரபுக்களுக்கு ஆதரவாக இருந்ததால் துருக்கியப் பிரபுக்களின் வெறுப்பைச் சம்பாதித்தார். அதே நேரத்தில் பஞ்சாபின் மீதான மூர்க்கம் நிறைந்த மங்கோலியரின் தாக்குதலையும் அவர் எதிர்கொள்ள நேர்ந்தது.

ரஸ்ஸியா, ஜலாலுதீன் யாகுத் எனும் எத்தியோப்பிய அடிமையைத் தனது தனி உதவியாளராக நியமித்து அவரைப் பெரிதும் நம்பத் தொடங்கினார். அப்போக்கு துருக்கிய பிரபுக்கள் கலகம் செய்யக் காரணமாயிற்று. அவருக்கு எதிராகத் துருக்கிய பிரபுக்கள் செய்த சதியால் 1240இல் ரஸ்ஸியா கொலையுண்டார்.


கியாசுதீன் பால்பன் (1266 -1287)

ரஸ்ஸியாவிற்குப் பின்னர் வலிமை குன்றிய மூன்று சுல்தான்கள் ஆட்சிபுரிந்தனர். அவர்களுக்குப் பின்னர் கியாசுதீன் பால்பன் அரசாளும் பொறுப்பேற்றார். "நாற்பதின்மர்" என்றறியப்பட்ட துருக்கியப் பிரபுக்கள் குழு அவரோடு பகைமை பாராட்டியதால் அவ்வமைப்பைப் பால்பன் ஒழித்தார். தனது ஆட்சிக்கு எதிராகச் சதி செய்வோரையும், இடையூறாய் இருப்போரையும் கண்டறிய ஒற்றர் துறையொன்றை நிறுவினார். அரசு அதிகாரத்திற்குக் கீழ்ப்படியாமை, எதிர்த்தல் போன்றவற்றைக் கடுமையாகக் கையாண்டார். பால்பனுக்கு எதிராகக் கலகம் செய்ததால் வங்காள மாகாண ஆளுநராக இருந்த துக்ரில்கான் கைது செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார். தனது எதிரிகளான மீவாட்டைச் சேர்ந்த மியோக்கள் (வடமேற்கு இந்தியாவைச் சேர்ந்த ராஜபுத்திர முஸ்லீம் இனத்தினர்) போன்றோரிடம் கருணையில்லாமல் நடந்துகொண்டார். இருந்தபோதிலும் மங்கோலியர்களுடன் இணக்கமான உறவைப் பராமரிப்பதில் கவனத்துடன் செயல்பட்டார். செங்கிஸ்கானின் பேரனும், ஈரானின் மங்கோலிய வைஸ்ராயுமான குலகுகான் என்பாரிடமிருந்து "மங்கோலியர்கள் சட்லஜ் நதியைக் கடந்து படையெடுத்து வரமாட்டார்கள்" எனும் உறுதிமொழியைப் பால்பன் பெற்றார்.


மங்கோலியரின் தாக்குதல்களிலிருந்து நாட்டைப் பாதுகாப்பதற்காகப் பால்பன் பல கோட்டைகளைக் கட்டினார். பாரசீகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற கவிஞரான அமிர்குஸ்ரு என்பாரைப் பால்பன் ஆதரித்தார். பால்பன் 1287இல் மரணமுற்றார். பால்பனின் மகனான கைகுபாத் திறமையற்றவராக இருந்தார். 1290இல் படைத்தளபதியாய்ப் பணியாற்றிய மாலிக் ஜலாலுதீன் கில்ஜி அரசப்பிரதிநிதியாகப் (நாயிப்) பொறுப்பேற்றார். சுல்தான் கைகுபாத்தின் பெயரால் அவர் நாட்டையாண்டார். பின்னர் ஒரு நாளில் ஜலாலுதீனால் அனுப்பப்பட்ட அதிகாரி ஒருவரால் கைகுபாத் கொல்லப்பட்டார். அதன் பின்னர் ஜலாலுதீன் முறையாக அரியணை ஏறினார். அவரிலிருந்து கில்ஜி வம்சத்தின் ஆட்சி தொடங்கிற்று.


கில்ஜி அரச வம்சம் (1290-1320)

ஜலாலுதீன் கில்ஜி (1296 – 1316)

ஜலாலுதீனின் ஆட்சியின்போது பல படையெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் பெரும்பாலான படையெடுப்புகளைத் திட்டமிட்டுத் தலைமையேற்று நடத்தியது காராவின் ஆளுநரான அலாவுதீன் கில்ஜி ஆவார். அவர் ஜலாலுதீனின் உடன் பிறந்தோரின் மகனாவார். அவரின் முக்கியப் படையெடுப்பு தக்காண அரசான தேவகிரிக்கு எதிராக மேற்கொண்டதாகும். அலாவுதீன் தேவகிரி யாதவ அரசர் ராமச்சந்திரனைத் தோற்கடித்த பின்னர் அந்நகரைக் கொள்ளையடித்துப் பெருஞ்செல்வத்தோடு திரும்பினார். அச்செல்வத்தை முக்கியமான பிரபுக்களுக்கும் படைத்தளபதிகளுக்கும் கையூட்டாகக் கொடுத்து அவர்களைத் தன்பக்கம் ஈர்த்தார். பின்னர் ஜலாலுதீனை வஞ்சகமாகக் கொன்றார். அதனைத் தொடர்ந்து 1296இல் தன்னை டெல்லியின் சுல்தானாக அறிவித்துக்கொண்டார்.


அலாவுதீன் கில்ஜி (1296-1316)

அலாவுதீன் டெல்லி சுல்தானியத்தை ஒருங்கிணைத்து உறுதிப்படுத்தினார். பஞ்சாபில் மங்கோலியர்களுக்கு எதிராக, ராஜஸ்தானத்திற்கும் குஜராத்திற்கும் எதிராக என அவருடைய படையெடுப்புகள் பாராட்டுக்குரியனவாகும். தனது வட எல்லைகளின் பாதுகாப்பை உறுதிசெய்துகொண்ட பின்னர் தனது தலைமைத் தளபதி மாலிக் கபூரை 1310 இல் தென்புலத்தின் வெகுதொலைவிலுள்ள மதுரை வரை படையெடுக்கப் பணித்தார். தக்காண அரசுகளான தேவகிரி யாதவர்கள், துவாரசமுத்திரத்தின் ஹொய்சாளர்கள், வாராங்கல்  காகதியர்கள், மதுரைப் பாண்டியர்கள் ஆகிய அனைவரும் அலாவுதீனின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டனர்.

சித்தூர் சூறையாடல் (1303)

சித்தூரில் ராஜபுத்திரப் படைகளை அலாவுதீனின் படைகள் திணறடித்த நிலையில் தோல்வியடைந்துவிடுவோம் என்ற சூழலில் கோட்டைக்குள் இருந்த ஆடவரும் பெண்டிரும் தங்களது பண்டைய மரபின்படி "ஜவ்ஹர்" எனப்படும் சடங்கை நடத்தினர், இதன்படி ஆடவர் கோட்டையை விட்டு வெளியேறிப் போர்க்களத்தில் மாள்வர். பெண்கள் தீப்புகுந்து தங்களை மாய்த்துக் கொள்வர்.


அலாவுதீனின் படையெடுப்புகளைப் போலவே அவருடைய அரசியல் நிர்வாகச் சீர்திருத்தங்களும் பாராட்டுக்குரியனவாகும். டெல்லியைச் சுற்றியுள்ள வேளாண் நிலங்களை அளவாய்வு செய்த அவர் ஒரு குறிப்பிட்ட அளவிலான நிரந்தர வரியை விதித்தார். வரிகளை வசூல் செய்யும் பணியை ராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். இந்த நிர்வாக மாற்றத்தால் உள்ளூர் தலைவர்களும் குறுநில மன்னர்களும் காலகாலமாகத் தாங்கள் அனுபவித்துவந்த உரிமையை இழந்தனர். டெல்லியிலும் ஏனைய இடங்களிலும் முகாமிட்டிருந்த தனது படைப் பிரிவுகளுக்காகக் கட்டாய உணவு தானியக் கொள்முதல் முறையை அறிமுகம் செய்தார். கொள்முதல் விலை சுல்தானால் நிர்ணயம் செய்யப்பட்டது. வரியாக வசூலிக்கப்பட்ட தானியம் அரசாங்கப் பண்டகசாலைகளில் சேகரித்துவைக்கப்பட்டது. தனது புதிய சட்டதிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்துகொள்ள ஒற்றர்களை நியமித்தார். அவ்வொற்றர்கள் நேரடியாக சுல்தானிடம் நிலைமைகளைத் தெரியப்படுத்தினர்.

அலாவுதீன் 1316இல் இயற்கை எய்தினார். அவருடைய வழித்தோன்றல்கள் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதில் தோல்வியுற்றதால் கியாசுதீன் துக்ளக் என்பவர் அதிகாரத்தைக் கைப்பற்றி துக்ளக் அரசவம்ச ஆட்சிக்கு அடிக்கல் நாட்டினார்.


துக்ளக் அரசவம்சம் (1320 – 1414)

கியாசுதீன் துக்ளக் (1320 - 1324)

அலாவுதீன் கில்ஜியின் இறப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் குழப்பத்தின் காரணமாக டெல்லி சுல்தானியம் பல பகுதிகளை இழக்க நேரிட்டது. அவற்றை மீட்பதே கியாசுதீனுக்குப் பெரும்பணியாக அமைந்தது. கியாசுதீன் துக்ளக் தனது மகன் ஜானாகானை வாராங்கல்லுக்கு எதிராகப் போரிட அனுப்பிவைத்தார். ஜானாகான் வாராங்கல் அரசர் பிரதாப ருத்ரனை வெற்றி கொண்டு கொள்ளையடித்த பெருஞ்செல்வத்தோடு ஊர் திரும்பினார். இச்செல்வத்தைக் கொண்டே கியாசுதீன் துக்ளக் டெல்லிக்கு அருகே துக்ளகாபாத் எனும் புதிய நகரை நிர்மாணம் செய்ய அடிக்கல் நாட்டினார். இருந்தபோதிலும் அலாவுதீன் தனது மாமனாரை வஞ்சமாகக் கொன்றது போலவே ஜானாகானும் தனது தந்தையைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றியதாகச் சொல்லப்படுகிறது. ஜானாகான் முகமது பின் துக்ளக் எனும் பெயரோடு 1325இல் அரியணை ஏறினார்.


முகமது பின் துக்ளக் (1325-1351)

முகமது பின் துக்ளக் மிகவும் கற்றறிந்த மனிதர். ஆனாலும் அவர் குரூரம் நிறைந்தவராவார். அலாவுதீன் நாடுகளைக் கைப்பற்றினார், கொள்ளையடித்தார். அவ்வரச குடும்பங்கள் தன்னைச் சார்ந்திருக்குமாறு செய்தார். அதற்கு நேர்மாறாக முகமது பின் துக்ளக் இத்துணைக்கண்டம் முழுவதையும் தனது நாடாக மாற்றக் கனவு கண்டார். தனது இறையாண்மையை விரிவு செய்வதற்கு வசதியாக தனது தலைநகரை டெல்லியிலிருந்து நாட்டின் மையப்பகுதியிலிருந்த தேவகிரிக்கு மாற்றினார். தேவகிரியின் பெயரையும் தௌலதாபாத் என மாற்றினார். தனது திட்டம் தவறானது என முகமது பின் துக்ளக் உணர்ந்ததால் மீண்டும் டெல்லிக்கே திரும்புமாறு அனைவருக்கும் ஆணையிட்டார். சுல்தானுடன் டெல்லி திரும்பிய மொராக்கோ நாட்டுப் பயணியான இபன் பதூதா டெல்லியை அடைந்தபோது அது, "காலியாக, கைவிடப்பட்டதாக ஆனால் குறைந்தளவு மக்களுடன் இருந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.

டெல்லியிலிருந்து தௌலதாபாத் செல்ல நாற்பது நாட்கள் நடந்தே செல்ல வேண்டும். பெரும்பாலான மக்கள் தௌலதாபாத் புறப்பட்டுச் சென்றனர். சிலர் ஒளிந்து கொண்டனர். அவர்கள் கண்டுபிடிக்கப்படுகையில் அவர்களில் ஒருவர் பார்வையற்றவராக இருந்தபோதும் மற்றொருவர் பக்கவாத நோயாளியாக இருந்தபோதும் கொடூரமான தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர். எட்டு அல்லது பத்து மைல் அளவு பரவியிருந்த அந்நகரைப் பற்றி ஒரு வரலாற்றறிஞர் "அனைத்தும் அழிக்கப்பட்டன. நகரத்தின் அரண்மனைகளில், கட்டடங்களில், புறநகர் பகுதிகளில் என எங்கும் ஒரு நாயோ, பூனையோ கூட விட்டுவைக்கப்படவில்லை எனும் அளவுக்கு முழுமையாகப் பாழானது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

அலாவுதீன் நிலவரியைத் தானியமாக வசூல் செய்யும் முறையைப் பின்பற்றினார். துக்ளக் நிலவரியை உயர்த்தியதோடு அதுமுதல் நிலவரி பணமாக வசூலிக்கப்பட வேண்டுமென ஆணை பிறப்பித்தார். அது பஞ்சகாலங்களில் பெரும் இடர்ப்பாடுகளை ஏற்படுத்தியது. போதுமான அளவுக்கு நாணயங்களோ, புதிய நாணயங்களை வெளியிடும் அளவுக்கு வெள்ளியோ கைவசம் இல்லை என்பதை அறிந்துகொண்ட துக்ளக் செப்பு நாணயங்களை அடையாளப் பணமாக வெளியிட்டார். வெகுவிரைவில் கள்ள நாணயங்கள் பெருகுவது அன்றாட நிகழ்ச்சியானது. இதன் விளைவாக ஒட்டு மொத்த வருவாய் நிர்வாகமுறை சீர்குலைந்தது.

வெளிநாட்டு வணிகர்கள் வியாபாரத்தை நிறுத்தியதால் வணிகம் பாதிப்புக்குள்ளானது. சுல்தான் அடையாளப் பணத்தை திரும்பப் பெற்றுக்கொண்டு அதற்கு மாற்றாகத் தங்க, வெள்ளி நாணயங்களை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் அரசு திவாலானது. தோஆப் பகுதியில், முகமது, நிலவரியை உயர்த்தியதன் விளைவாக விவசாயிகளின் கிளர்ச்சிகள் வெடித்தன. அவை கொடூரமான முறைகளில் அடக்கப்பட்டதால் விவசாயிகள் வேளாண்மையைக் கைவிட்டனர். அதன் விளைவாக அடிக்கடிப் பஞ்சங்கள் ஏற்பட்டன.

முகமது பின் துக்ளக் சுல்தானாக இருபத்தைந்து ஆண்டுகள் ஆட்சிபுரிந்தார். இந்த நீண்ட ஆட்சிக்காலத்தில் பல மாகாண ஆளுநர்களின் கிளர்ச்சிகளை அவர் எதிர்கொள்ள நேர்ந்தது. அவுத், முல்தான், சிந்து ஆகிய மாகாணங்களின் ஆளுநர்கள் சுல்தானுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து தங்களைச் சுதந்திர அரசர்களாகப் பிரகடனம் செய்து கொண்டனர். 


தென் இந்தியாவில் பல புதிய அரசுகள் எழுச்சி பெற்றன. துக்ளக்கிடம் முன்னர் படைவீரராகப் பணியாற்றிய பாமினி என்பார் தௌலதாபாத்தையும் அதைச் சுற்றிக் கைப்பற்றப்பட்ட பகுதிகளையும் சுதந்திர அரசாக அறிவித்தார். அவரது பெயரிலேயே அது பாமினி சுல்தானியம் என அழைக்கப்பட்டது. கி.பி.1334இல் மதுரை தனி சுல்தானியமாக உருவானது. 1346இல் வங்காளம் சுதந்திர அரசானது. துக்ளக் 1351 மார்ச் 23இல் மரணமடைந்தார்.


பிரோஷ் ஷா துக்ளக் (1351-1388)


முகமது பின் துக்ளக்கைத் தொடர்ந்து கியாசுதீனின் இளைய சகோதரரின் மகனான பிரோஷ் அரியணை ஏறினார். அவரால் கிளர்ச்சிகளை அடக்கவும் இயலவில்லை ; பிரிந்துசென்ற மாகாணங்களை மீட்கவும் முடியவில்லை. தென்பகுதி மாகாணங்களை மீண்டும் கைப்பற்றுவதிலும் அவர் ஆர்வம் காட்டவில்லை. தக்காணப் பிரச்சனைகளில் தலையிட வேண்டும் எனக் கேட்டுப் பாமினி இளவரசர் விடுத்த அழைப்பையும் (ஏறத்தாழ 1365) அவர் ஏற்க மறுத்துவிட்டார். சூபி ஞானிகளுக்கும் ஏனைய மதத் தலைவர்களுக்கும் பிரோஷ் தாராளமனதுடன் பரிசுகள் வழங்கி கௌரவித்து அவர்களின் அறிவுரைகளுக்குச் செவிமடுத்தார். ஏழை முஸ்லீம்களுக்கு உதவுவதற்கான அறக்கட்ளைகளை நிறுவினார். கல்லூரிகள், மருத்துவமனைகள், மசூதிகள் ஆகியவற்றைக் கட்டினார். பல மனிதாபிமான நடவடிக்கைகளையும் அவர் மேற்கொண்டார். மனிதாபிமானமற்ற, கொடூரமான தண்டனைகளை ஒழித்தார். இஸ்லாமியச் சட்டங்களால் அங்கீகரிக்கப்படாத வரிகளை ரத்து செய்தார்.

விவசாயிகளின் கடன்களை ரத்து செய்தும் பல நீர்ப்பாசனக் கால்வாய்களை வெட்டியும் வேளாண்மையை மேம்படுத்தினார். 1200 புதிய தோட்டங்களை உருவாக்கிய அவர் அலாவுதீன் கில்ஜியின் காலத்தைச் சேர்ந்த 30 பழைய தோட்டங்களைப் புனரமைத்தார். பிரோஷாபாத், ஜான்பூர், ஹிசார், பிரோஷ்பூர் ஆகிய புதிய நகரங்களையும் அவர் நிர்மாணித்தார்.

சுல்தானியத்தைக் கட்டிக்காக்க அமைதியான முறையில் பல முயற்சிகளை அவர் மேற்கொண்டார். இருந்தபோதிலும் பிரோஷா துக்ளக்கின் இறுதி நாட்கள் மகிழ்ச்சி நிறைந்தவையாக இல்லை. அவருடைய மகன் முகமதுகான் தந்தைக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தார். 1388இல் தனது 83 ஆவது வயதில் பிரோஷ் ஷா துக்ளக் இயற்கை எய்தினார்.




தைமூரின் படையெடுப்பு (1398) 

பிரோஷ் ஷா துக்ளக் மரணமுற்று பத்தாண்டுகள் கழிந்த நிலையில் "தாமர்லைன்" என்றழைக்கப்பட்ட தைமூர் டெல்லியைத் தாக்கிச் சூறையாடி மாபெரும் மனிதப் படுகொலையை அரங்கேற்றினார். மத்திய ஆசியாவில் சாமர்கண்ட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆட்சி செய்த தைமூர் வட இந்தியாவிற்கு மேற்கில் சில இடங்களைக் கைப்பற்றினார். இந்தியாவின் வலிமையின்மையைச் சாதகமாக்கிக்கொண்டு இந்தியாவிற்குள் படையெடுத்து நுழைந்து 1398 டிசம்பர் மாதத்தில் டெல்லியைக் கொள்ளையடித்தார் தைமூரின் படையெடுப்பால் டெல்லிக்கு அடுத்ததாக அதிகம் பாதிப்புக்கு உள்ளான பகுதி பஞ்சாப் ஆகும். தங்கம், வெள்ளி, நகைகள் எனப் பெரும் செல்வத்தைக் கொள்ளையடித்து எடுத்துச்சென்றார். மேலும் தைமூர் செல்லும்போது சாமர்கண்டில் நினைவுச்சின்னங்களைக் கட்டுவதற்காகத் தச்சுவேலை செய்வோர், கட்டடக் கலைஞர்கள் போன்ற இந்தியக் கைவினைஞர்களையும் உடன் அழைத்துச் சென்றார்.


சையது அரச வம்சம் (1414-1451)

டெல்லி சுல்தானியம் பல சுதந்திர அரசுகளாகச் சிதறுண்டுபோனாலும் முகலாயர் படையெடுப்புவரை 114 ஆண்டுகள் தாக்குப்பிடித்து நின்றது. டெல்லியை விட்டுச் செல்வதற்கு முன்பாகத் தைமூர் தான் கைப்பற்றிய பகுதிகளுக்கு (டெல்லி, மீரட், பஞ்சாப்) கிசிர்கான் என்ற தனது பிரதிநிதியை ஆளுநராக நியமித்துச்சென்றார். அவர் 1414இல் சையது அரச வம்சத்தைத் தோன்றுவித்தார். அவ்வரச வம்சம் 1451 வரை நீடித்தது. அவ்வம்சத்தின் கடைசி சுல்தான் அலாவுதீன் ஆலம் ஷா 1451இல் அரச பதவியைத் துறந்தார். இது சிர்ஹிந்த் (பஞ்சாப்) பகுதியின் ஆளுநராக இருந்த பகலூல் லோடிக்கு டெல்லியின் சுல்தானாகும் வாய்ப்பினை வழங்கியது. அவரே லோடி வம்ச ஆட்சியைத் தோற்றுவித்தார்.


லோடி அரச வம்சம் (1451-1526)

1489இல் பகலூல் லோடியைத் தொடர்ந்து அவரது மகன் சிக்கந்தர் லோடி சுல்தானாகப் பொறுப்பேற்றார். அவர் கலைகளையும் கல்வியையும் ஆதரித்தார். ஆக்ரா நகரை நிர்மாணித்த அவர் அந்நகரைத் தலைநகர் ஆக்கினார். அவர் 1517இல் மரணமுற்றதைத் தொடர்ந்து அவருடைய மகன் இப்ராகிம் லோடி அரசப் பதவியேற்றார். இப்ராகிம் லோடி பாபரால் 1526இல் பானிபட் போர்க்களத்தில் தோற்கடிக்கப்பட்டார். இவ்வாறு லோடி அரச வம்சத்திற்கும் டெல்லி சுல்தானியத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்த பாபர் முகலாயப் பேரரசை நிறுவினார்.

இஸ்லாமியக் கலை, கட்டடக்கலை

உயர்வகுப்பைச் சேர்ந்த முஸ்லீம் பிரபுக்கள், அதிகாரிகள், வீரர்கள் ஆகியோர் தங்கள் குடியிருப்புக் கட்டடங்களை முதலில் நகரங்களிலும் புறநகர்ப் பகுதிகளிலும் கட்டிக் கொண்டனர். அவற்றைச் சுற்றிப் பேரரசு பாணியிலான அழகு மிக்க மசூதிகளை டெல்லி முஸ்லீம் ஆட்சியாளர்கள் கட்டினர். மசூதிகளும் மதரசாக்களும் (கல்வி நிலையங்கள்) கட்டட வடிவத்தில் வேறுபட்டிருந்தன. குரானிலுள்ள வரிகளைச் செதுக்கி நேர்த்தியாகவும் நளினமாகவும் அலங்கரிக்கப்பட்ட கதவுகளும், சுவர்களும் அக்கட்டங்களுக்குத் தனித்தன்மையான தோற்றத்தை வழங்கின. அக்கட்டடங்களின் வடிவங்கள் பாரசீகப் பாணியிலும் அலங்கார வேலைப்பாடுகள் இந்தியப் பாணியிலும் அமைந்திருந்தன. எனவே - அப்பாணி இந்தோ - சாராசானிக் கலைவடிவம் என அழைக்கப்பட்டது. குதுப்மினார். அலெய் தர்வாசா, குவ்வத் - உல் - இஸ்லாம் மசூதி, மோத்தி மசூதி, இல்துமிஷ், பால்பன் ஆகியோரின் கல்லறைகள், தௌலதாபாத், பிரோஷ் ஷா பாத் ஆகிய இடங்களிலுள்ள கோட்டைகள் என அனைத்தும் அப்பாணியில் அமைக்கப்பட்டனவாகும்.




சுருக்கம்

இந்தியாவில் முஸ்லீம் ஆட்சி முகமது கோரியால் நிறுவப்பட்டது . 

குத்புதீன் ஐபக் அடிமை வம்ச ஆட்சியை நிறுவினார். அவருடைய மருமகன் இல்துமிஷ் அதனை ஒருங்கிணைத்து வலிமைப்படுத்தினார். 

இல்துமிஷின் மகளான ரஸ்ஸியா தைரியமிக்க போராளியும் மிகச்சிறந்த நிர்வாகியும் ஆவார். 

பால்பனின் ஒற்றறியும் முறையும், நாற்பதின்மர் அமைப்பை அவர் அழித்ததும் துருக்கியப் பிரபுக்களின் அதிகாரத்தை மட்டுப்படுத்தியது. 

கில்ஜி அரச வம்சத்தை நிறுவிய அலாவுதீன் கில்ஜி, - அவரது படையெடுப்புகள் மற்றும் நிர்வாகச் சீர்திருத்த நடவடிக்கைகள்.

பிரோஷ் ஷா துக்ளக், மக்களின் நல்வாழ்க்கையில் அக்கறை கொண்ட இரக்கமுள்ள அரசர். 

தைமூரால் டெல்லி கொள்ளையடிக்கப்படுதல் 

சையது அரசவம்சத்தைக் கிசிர்கான் தோற்றுவித்தல். சர்கிந்தின் ஆளுநரான பகலூல்லோடி டெல்லியில் லோடி வம்சத்தை நிறுவியது. 

முதலாம் பானிபட் போர் கி.பி. (பொ.ஆ) 1526இல் பாபர் முகலாய அரசை நிறுவுவதற்கு வழிவகுத்தது


சொற்களஞ்சியம்

1. எக்கணமும் நடைபெற இருக்கிற / அச்சுறுத்தும் நிலையில் இருக்கிற – impending - about to happen

2. மூர்க்கமான/ அச்சம் தருகிற வகையில் – ferocious - cruel, violent

3. சதிகாரர்கள் – conspirator - someone who conspires secretly with other people to do something unlawful or harmful 

4. புரவலர் – patron - supporter, promoter

5. கொள்ளையடி – plunder - to steal goods forcibly from a place especially during a war 

6. கொள்முதல் – procurement - the process of getting supplies

7. பேரழிவு – disastrous - causing great damage

8. துண்டு துண்டாக - fragment - break into pieces

9. போலியான - counterfeit  - fake

10. விலக்கு அளி – waiving - exempting 


மூலாதார நூல்கள்

1. Abraham Eraly, The Age of Wrath, New Delhi:Penguin, 2014. 

2. R.C Majumdar, H.C. Ray Chaudhuri and Kalikinkar Datta, An Advanced History of India, New Delhi:Trinity, 2018. 

3. Burton Stein, A History of India, New Delhi: Oxford University Press, 2004 (Reprint). 

4. S.K. Singh, History of Medieval India, New Delhi: Axis Books, 2013.


இணையச்செயல்பாடு

டெல்லி சுல்தானியர்கள் (கி.பி. (பொ.ஆ) 1206-1526)

இச்செயல்பாட்டின் மூலம் இடைக்கால டெல்லியின் வரலாற்றுக் கால வரிசையினை அறியலாம்.






படிநிலைகள்:

படி 1: கீழ்காணும் உரலி / விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி இச்செயல்பாட்டிற்கான இணைய பக்கத்திற்குச் செல்லவும்.

படி 2: சுட்டியைப் பயன்படுத்தி " TIMELINE" செல்க

படி 3: குறிப்பிட்ட வருடத்தை சொடுக்கி அது தொடர்பான விளக்கத்தினை அறியலாம்.


டெல்லி சுல்தானியர்கள் (கி.பி. (பொ.ஆ) 1206-1526) உரலி:

https://delhi-timeline.in/

** படங்கள் அடையாளத்திற்கு மட்டுமே. 

* தேவையெனில் 'Adobe Flash' ஐ அனுமதிக்கவும்.



Tags : Term 1 Unit 4 | History | 7th Social Science முதல் பருவம் அலகு 4 | வரலாறு | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
7th Social Science : History : Term 1 Unit 4 : The Delhi Sultanate : The Delhi Sultanate Term 1 Unit 4 | History | 7th Social Science in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : முதல் பருவம் அலகு 4 : டெல்லி சுல்தானியம் : டெல்லி சுல்தானியம் - முதல் பருவம் அலகு 4 | வரலாறு | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : முதல் பருவம் அலகு 4 : டெல்லி சுல்தானியம்