Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | இந்திய தேசிய காங்கிரஸ் நிறுவப்படுதல் (1870-1885)

காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் - இந்திய தேசிய காங்கிரஸ் நிறுவப்படுதல் (1870-1885) | 10th Social Science : History : Chapter 7 : Anti-Colonial Movements and the Birth of Nationalism

   Posted On :  27.07.2022 05:02 am

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 7 : காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்

இந்திய தேசிய காங்கிரஸ் நிறுவப்படுதல் (1870-1885)

(அ) தேசியத்தின் எழுச்சி (ஆ) காலனி ஆட்சி பற்றிய பொருளாதார விமர்சனம் (இ) குறிக்கோள்கள் மற்றும் வழிமுறைகள் (ஈ) தீவிர தேசியவாதம்

இந்திய தேசிய காங்கிரஸ் நிறுவப்படுதல் (1870-1885)

 

(அ) தேசியத்தின் எழுச்சி

19ஆம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில் ஆங்கிலக் கல்வி பெற்ற இந்தியர்களின் புதிய சமூக வகுப்பினர் மத்தியில் தேசிய அரசியல் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டது. பல்வேறு பிரச்சாரங்கள் மூலமாக தேசம், தேசியம் மற்றும் பல்வேறு மக்களாட்சியின் உயர்ந்த இலட்சியங்கள் பற்றிய கருத்துக்களை அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முக்கிய பணியை இந்திய அறிவாளர்கள் மேற்கொண்டனர். வட்டார மொழி மற்றும் ஆங்கில அச்சு ஊடகங்களின் வளர்ச்சி இது போன்ற கருத்துகளைப் பரப்புவதில் முக்கியப் பங்காற்றியது.

எண்ணிக்கையில் அவர்கள் குறைவாக இருந்தாலும் தேசிய அளவிலான வீச்சைக் கொண்டு அகில இந்தியா முழுதும் தொடர்புகளை உருவாக்கும் திறன் பெற்றிருந்தனர். அவர்கள் வழக்கறிஞர்கள், பத்திரிக்கையாளர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அல்லது மருத்துவர்களாக பணியாற்றினார்கள். சென்னைவாசிகள் சங்கம் (1852), கிழக்கிந்திய அமைப்பு (1866), சென்னை மகாஜன சபை (1884), பூனா சர்வஜனிக் சபை (1870), பம்பாய் மாகாண சங்கம் (1885) மற்றும் பல அரசியல் அமைப்புகளைத் தொடங்குவதில் அவர்கள் முனைப்பு காட்டினார்கள்.

 

(ஆ) காலனி ஆட்சி பற்றிய பொருளாதார விமர்சனம்

காலனி ஆட்சி பற்றிய பொருளாதார விமர்சனத்தை உருவாக்குவதே தொடக்ககால இந்திய தேசியவாதிகளின் பங்களிப்புகளில் முக்கியமான ஒன்றாக இருந்தது.

தாதாபாய் நௌரோஜி, நீதிபதி ரானடே மற்றும் ரொமேஷ் சந்திர தத் ஆகியோர் காலனி ஆட்சியின் பொருளாதாரம் பற்றிய இந்த விமர்சனத்தைச் செய்வதில் முக்கியப் பங்காற்றினார்கள். இந்தியாவை அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக அடக்கி ஆள்வது தான் பிரிட்டிஷாரின் வளத்துக்கு அடிப்படையானது என்பதை அவர்கள் தெளிவாக உணர்ந்தனர். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு காலனி ஆதிக்கமே முக்கியத் தடையாக உள்ளதென்று அவர்கள் முடிவு செய்தனர்.


(இ) குறிக்கோள்கள் மற்றும் வழிமுறைகள்

ஒரு அகில இந்திய அமைப்பை உருவாக்க முனைந்ததன் விளைவாக 1885ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரஸ் உருவானது. பம்பாய், மதராஸ், கல்கத்தா ஆகிய மூன்று மாகாணங்களிலும் அரசியல் ரீதியாக தீவிரம் காட்டிய கல்வி அறிவு பெற்ற இந்தியர்களின் குழுக்கள் மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாக இந்திய தேசிய காங்கிரஸ் அமைப்பை உருவாக்க A.O. ஹியூம் தமது சேவைகளை வழங்கினார். இந்திய தேசிய காங்கிரசின் முதல் (1885) தலைவராக உமேஷ் சந்திர பானர்ஜி இருந்தார்.


1885 டிசம்பர் 28இல் இந்திய தேசிய காங்கிரசின் முதல் அமர்வு (கூட்டம்) நடைபெற்றது. தேசிய ஒற்றுமை குறித்த உணர்வுகளை ஒருங்கிணைப்பதே காங்கிரஸின் ஆரம்பகால முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாக இருந்தாலும் பிரிட்டனுக்கு விசுவாசமாக நடந்துகொள்ளவும் உறுதி மேற்கொண்டது. பிரிட்டனிடம் மேல்முறையீடுகள் செய்வது, மனுக்களைக் கொடுப்பது, அதிகாரப் பகிர்வு, ஆகியவற்றை ஆங்கிலேய அரசு உருவாக்கிய அரசியல் சாசன கட்டமைப்பிற்குள் செய்வது உள்ளிட்ட வழிமுறைகளை காங்கிரஸ் பின்பற்றியது. கீழ்க்கண்டவை சில முக்கிய கோரிக்கைகள் ஆகும்:

 மாகாண மற்றும் மத்திய அளவில் சட்டமேலவைகளை உருவாக்குவது.

 சட்டமேலவைகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது.

 நிர்வாகத்துறையிலிருந்து நீதித்துறையைப் பிரிப்பது.

 இராணுவச் செலவுகளைக் குறைப்பது.

 உள்நாட்டு வரிகளைக் குறைப்பது.

 நீதிபதி மூலமாக விசாரணையை விரிவுசெய்வது.

 ஒரே நேரத்தில் இந்தியாவிலும் இங்கிலாந்திலும் ஆட்சிப்பணித் தேர்வுகளை நடத்துவது.

 காவல்துறை சீர்திருத்தங்கள்.

 வனச்சட்டத்தை மறுபரிசீலனை செய்தல்.

 இந்தியத் தொழிற்சாலைகளின் மேம்பாடு மற்றும் முறையற்ற கட்டணங்கள் மற்றும் கலால் வரிகளை முடிவுக்குக் கொண்டுவருவது.

 

(ஈ) தீவிர தேசியவாதம்

தொடக்ககால இந்திய தேசியவாதிகளின் மிதவாத கோரிக்கைகள் தொடர்பான ஆங்கிலேயர்களின் அணுகுமுறை குறிப்பிடத்தக்க அளவில் மாறவில்லை என்பதால் மித தேசியவாத தலைவர்களின் திட்டங்கள் தோல்விகண்டன. தீவிர தேசியவாதிகள் என்று அழைக்கப்பட்ட தலைவர்களின் குழுவால் இவர்கள் விமர்சிக்கப்பட்டனர். மனுக்கள் மற்றும் கோரிக்கைகள் கொடுப்பதை விட, சுய உதவியில் அதிக கவனம் செலுத்தினர்.

 


Tags : Anti-Colonial Movements and the Birth of Nationalism | India காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்.
10th Social Science : History : Chapter 7 : Anti-Colonial Movements and the Birth of Nationalism : The Foundation of Indian National Congress (1870 – 1885) Anti-Colonial Movements and the Birth of Nationalism | India in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 7 : காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் : இந்திய தேசிய காங்கிரஸ் நிறுவப்படுதல் (1870-1885) - காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 7 : காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்