Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | 1857ஆம் ஆண்டின் பெருங்கலகம்

காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் - 1857ஆம் ஆண்டின் பெருங்கலகம் | 10th Social Science : History : Chapter 7 : Anti-Colonial Movements and the Birth of Nationalism

   Posted On :  27.07.2022 05:01 am

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 7 : காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்

1857ஆம் ஆண்டின் பெருங்கலகம்

(அ) காரணங்கள் (ஆ) கலகம் (இ) கிளர்ச்சி அடக்கப்படுதல் (ஈ) தோல்விக்கான காரணங்கள் (உ) இந்தியா ஆங்கிலேய அரசுக் காலனியாக மாறுதல்

1857ஆம் ஆண்டின் பெருங்கலகம்

1857ஆம் ஆண்டில் ஆங்கிலேய ஆட்சிக்கு பெரும் சவால் ஏற்பட்டது. தொடக்கத்தில் வங்காள மாகாணத்தில் சிப்பாய் கலகமாக உருவெடுத்த இந்த கலகம் பின்னர் குறிப்பாக விவசாயிகள் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பங்கேற்றதை அடுத்து நாட்டின் இதர பகுதிகளுக்கும் பரவியது. 1857-58ஆம் ஆண்டுகளில் நடந்த நிகழ்வுகள் கீழ்க்கண்ட காரணங்களால் முக்கியத்துவம் பெற்றன:

1. இராணுவ வீரர்களுடன் ஆயுதமேந்திய படைகளும் இணைந்து நடந்த முதல் மாபெரும் புரட்சி இதுவேயாகும்.

2. இருதரப்புகளிலும் தூண்டப்பட்டதால் முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு கிளர்ச்சியில் வன்முறை வெடித்தது.

3. கிழக்கிந்திய கம்பெனியின் பணியினை புரட்சி முடிவுக்குக் கொண்டு வந்ததுடன் இந்திய துணைக் கண்டத்தை நிர்வகிக்கும் பொறுப்பு ஆங்கில மகாராணியின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது.

 

(அ) காரணங்கள்

1. ஆங்கிலேய இந்தியாவின் இணைப்புக் கொள்கை

1840 மற்றும் 1850 களில் இரண்டு முக்கியக் கொள்கைகளின் மூலம் அதிக நிலப்பகுதிகள் இணைத்துக் கொள்ளப்பட்டன.

மேலாதிக்கக் கொள்கை: ஆங்கிலேயர் தங்களை வானளாவிய அதிகாரங்கள் கொண்ட உயர் அதிகார அமைப்பாக கருதினார்கள். உள்நாட்டு ஆட்சியாளர்கள் திறனற்றவர்கள் என்ற அடிப்படையில் புதிய நிலப்பகுதிகள் இணைக்கப்பட்டன.

வாரிசு இழப்புக்கொள்கை: அரசுக்கட்டிலில் அரியணை ஏற நேரடி ஆண்வாரிசு இல்லையெனில் அந்த ஆட்சியாளரது இறப்புக்குப்பின் அந்தப்பகுதி ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்படும். சதாரா, சம்பல்பூர், பஞ்சாபின் சில பகுதிகள், ஜான்சி மற்றும் நாக்பூர் ஆகியன இந்த வாரிசு இழப்புக் கொள்கையின் அடிப்படையில் ஆங்கிலேய ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டன.

2. இந்திய கலாச்சார உணர்வுகள் பற்றிய தீவிரத்தன்மை இல்லாதது:

1806ஆம் ஆண்டில் வேலூரில் சிப்பாய்கள் சமயக்குறியீடுகளை நெற்றியில் அணிவதற்கும், தாடி வைத்துக் கொள்வதற்கும், தடைவிதிக்கப்பட்டதோடு தலைப்பாகைகளுக்கு பதிலான வட்ட வடிவிலான தொப்பிகளை அணியுமாறும் பணிக்கப்பட்டனர். அதனை எதிர்த்து அவர்கள் கிளர்ச்சி செய்தனர். இத்தகைய ஆடைக் கட்டுப்பாடுகள் சிப்பாய்களை கிறித்தவ மதத்துக்கு மாறச் செய்வதற்கான ஒரு முயற்சியாக அவர்கள் அஞ்சினார்கள்.

அதேபோன்று 1824ஆம் ஆண்டு கல்கத்தா அருகே பாரக்பூரில் சிப்பாய்கள் கடல் வழியாக பர்மா செல்ல மறுத்தனர். கடல் கடந்து சென்றால் தங்களது சாதியை இழக்க நேரிடும் என்று அவர்கள் நம்பினார்கள்.

ஊதியம் மற்றும் பதவி உயர்வில் பாரபட்சம் காட்டப்படுவது குறித்தும் சிப்பாய்கள் கவலை அடைந்தனர். ஐரோப்பிய சிப்பாய்களுடன் ஒப்பிடுகையில் இந்திய சிப்பாய்களுக்கு மிகக்குறைந்த அளவில் ஊதியம் வழங்கப்பட்டது. அவர்கள் தரக்குறைவாக நடத்தப்பட்டதோடு மூத்த படையினரால் இனக் குறியிடப்பட்டு அவமதிக்கப்பட்டார்கள்.


(ஆ) கலகம்

புதிய என்ஃபீல்டு துப்பாக்கிக்கு வழங்கப்பட்ட தோட்டாக்கள் பற்றிய வதந்திகள் புரட்சிக்கு வித்திட்டது. பசு மற்றும் பன்றிக் கொழுப்பில் இருந்து தயாரிக்கப்பட்ட பசை (கிரீஸ்) இத்தகைய புதிய குண்டு பொதியுறையில் (காட்ரிட்ஜ்களில்) பயன்படுத்தப்பட்டதாக சிப்பாய்கள் பெரிதும் சந்தேகம் கொண்டனர். அவற்றை நிரப்பும் முன் அதை வாயால் கடிக்க வேண்டி இருந்தது (இந்துக்களில் பெரும்பான்மையானவர்களுக்கு பசு புனிதம் வாய்ந்ததாகவும், முஸ்லிம்களுக்கு பன்றி இறைச்சி தடை செய்யப்பட்ட உணவாகவும் இருந்தது).

மார்ச் 29ஆம் தேதி மங்கள் பாண்டே என்ற பெயர் கொண்ட சிப்பாய் தனது ஐரோப்பிய அதிகாரியைத் தாக்கினார். கைது செய்ய உத்தரவிட்டும் அவரது சக சிப்பாய்கள் மங்கள் பாண்டேவை கைது செய்ய மறுத்துவிட்டனர். மங்கள் பாண்டேயும் வேறு பலரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தூக்கிலிடப்பட்டனர். இதனால் ஆத்திரம் அதிகரித்து அதனையடுத்து வந்த நாட்களில் கீழ்ப்படிய மறுத்தல் போன்ற பல நிகழ்வுகள் அதிகரித்தன. கலவரம், பொருட்களை தீயிட்டுக் கொளுத்துவது ஆகியன அம்பாலா, லக்னோ, மீரட் ஆகிய இராணுவக் குடியிருப்புப் பகுதிகளில் நிகழ்ந்ததாக தகவல்கள் வெளியாயின.

இந்துஸ்தானத்தின் மாமன்னராக பகதூர் ஷா அறிவிக்கப்படுதல்


1857 மே மாதம் 11இல் மீரட்டில் இருந்து தில்லி செங்கோட்டை நோக்கி ஒரு குழுவாக சிப்பாய்கள் அணிவகுத்துச் சென்றனர். சிப்பாய்கள் போன்று அதே அளவு ஆர்வமிக்க கூட்டமும் முகலாய மாமன்னர் இரண்டாம் பகதூர் ஷா தங்கள் தலைவராக வேண்டும் என்று கோருவதற்காக அங்கு குழுமியது. பெரும் தயக்கங்களுக்குப் பிறகு இரண்டாம் பகதூர் ஷா இந்துஸ்தானத்தின் (ஷாஹின்ஷா இ-ஹிந்துஸ்தான்) மாமன்னராக பதவியேற்றார். அதனை அடுத்து விரைவாக வடமேற்கு மாகாணம் மற்றும் அயோத்தி பகுதிகளைக் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினார்கள். தில்லி வீழ்ச்சி அடைந்தது பற்றிய செய்தி கங்கை நதிப்பள்ளத்தாக்கை எட்டியவுடன், ஜூன் மாதத் தொடக்கம் வரை ஒவ்வொரு இராணுவக் குடியிருப்பு பகுதியிலும் கிளர்ச்சிகள் நடந்தன. வட இந்தியாவில் குறிப்பாக பஞ்சாப் மற்றும் வங்காளத்தைத் தவிர ஆங்கிலேய ஆட்சி காணாமல் போனது.

உள்நாட்டு கிளர்ச்சி

வட இந்தியாவின் பாதிக்கப்பட்ட கிராம சமூகத்தில் வாழ்ந்த மக்களும் இந்தக் கிளர்ச்சிக்கு சரிசமமாக ஆதரவு தெரிவித்தனர். ஆங்கிலேய இராணுவத்தில் வேலை பார்த்த சிப்பாய்கள் உண்மையில் சீருடையில் இருந்த விவசாயிகள் ஆவர். வருவாய் நிர்வாகம் மறுசீரமைப்பு செய்யப்பட்டதில் அவர்களும் சமமான பாதிப்புகளை அடைந்தனர். சிப்பாய் கலகமும் அதனை அடுத்து இந்தியாவின் பல பகுதிகளில் நடந்த உள்நாட்டு கிளர்ச்சியும் ஊரகப் பகுதிகளுடன் இணைப்பைக் கொண்டவையாகும். வடமேற்கு மாகாணங்கள் மற்றும் அயோத்தியின் பகுதிகளில் இந்த முதலாவது உள்நாட்டு கிளர்ச்சி வெடித்தது. இந்த இரண்டு பகுதிகளில் இருந்துதான் சிப்பாய்கள் முக்கியமாகப் பணியில் சேர்க்கப்பட்டனர். பெரும் எண்ணிக்கையிலான ஜமீன்தாரர்களும் தாலுக்தார்களும் ஆங்கிலேய அரசின் கீழ் பல சலுகைகளை இழந்த காரணத்தால் கிளர்ச்சி கூட்டணி என்பது தாங்கள் இழந்ததை மீட்கும் ஒரு பொது முயற்சியாகக் கருதப்பட்டது. அதேபோன்று, பல இந்திய மாநிலங்களில் ஆட்சியாளர்கள் பட்டத்தைத் துறக்க நேரிட்டதால் அவர்களால் ஆதரிக்கப்பட்ட கைவினைக்கலைஞர்களும் சரிசமமாக அவதியுற்றனர். ஆங்கிலேயப் பொருட்களால் இந்திய கைவினைப் பொருட்கள் பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் வேலை இழந்தனர். ஆங்கிலேயர்களுக்கு எதிரான ஒட்டுமொத்த ஆத்திரம் கிளர்ச்சியாக வெடித்தது.



பிரிட்டிஷாருக்கு எதிராகப் போராடிய முக்கியப் போராட்ட வீரர்கள்

பாதிக்கப்பட்ட அரசர்கள், நவாபுகள், அரசிகள், ஜமீன்தாரர்கள், ஆகியோர் ஆங்கிலேயர்களுக்கு எதிரான தங்கள் ஆத்திரத்தைப் பயன்படுத்திக்கொள்ள இந்தக் கிளர்ச்சி ஒரு மேடையை அமைத்துக் கொடுத்தது. கடைசி பேஷ்வா மன்னரான இரண்டாவது பாஜிராவின் தத்துப்பிள்ளையான நானா சாகிப், கான்பூர் பகுதியில் இந்த கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கினார். அவருக்கு ஓய்வூதியம் தர கம்பெனி மறுத்துவிட்டது. அதேபோன்று, லக்னோவில் பேகம் ஹஸ்ரத் மகால், பரெய்லியில் கான் பகதூர் ஆகியோர் தத்தமது பகுதிகளில் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். ஒருகாலத்தில் இந்தப் பகுதிகள் அவர்களாலோ அல்லது அவர்களுடைய மூதாதையர்களாலோ ஆளப்பட்டவையாகும்.

இந்தக் கிளர்ச்சியின் மற்றொரு முக்கிய தலைவராக ஜான்சியின் ராணி லட்சுமிபாய் திகழ்ந்தார். அவரது விஷயத்தில், வங்காளத்தின் தலைமை ஆளுநரான டல்ஹௌசி பிரபு, லட்சுமிபாயின் கணவர் மறைந்த பிறகு அவரது வாரிசாக ஒரு ஆண்பிள்ளையை தத்து எடுத்துக்கொள்ள அனுமதி தர மறுத்துவிட்டதால் வாரிசு இழப்புக் கொள்கையின் அடிப்படையில் அவரது அரசு ஆங்கிலேய அரசுடன் இணைக்கப்பட்டது. சக்தி வாய்ந்த ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரைத் துவக்கிய ராணி லட்சுமிபாய் தாம் வீழும் வரை ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடினார்.

பகதூர் ஷா ஜாபர், கன்வர் சிங், கான் பகதூர், ராணி லட்சுமிபாய் மற்றும் பலரும், ஆங்கிலேய ஆட்சியை ஏற்கமறுத்த சிப்பாய்களின் வீரதீரத்தால் நிர்ப்பந்திக்கப்பட்ட பலரும் இவர்களில் அடங்குவர்.

 

(இ) கிளர்ச்சி அடக்கப்படுதல்

1857ஆம் ஆண்டு ஜூன் மாத தொடக்கத்தில் தில்லி, மீரட், ரோகில்கண்ட், ஆக்ரா, அலகாபாத் மற்றும் பனாரஸ் ஆகிய மண்டலங்களின் படைகள் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு கடுமையான இராணுவச் சட்டம் அமல்படுத்தப்பட்டது.

 

(ஈ) தோல்விக்கான காரணங்கள்

1857ஆம் ஆண்டு நடந்த கிளர்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டது மற்றும் திட்டமிடப்பட்டது என்பதை நிரூபிக்க எந்தவித ஆதாரமும் இல்லை . அது தானாக நடந்தது. ஆனால் தில்லி முற்றுகை இடப்பட்ட பிறகு அண்டை மாநிலங்களின் ஆதரவைப்பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மேலும் ஒருசில இந்திய மாநிலங்களைத் தவிர, இந்தக் கிளர்ச்சியில் பங்கேற்க இந்திய இளவரசர்களிடம் பொதுவாக ஆர்வம் குறைந்து காணப்பட்டது. காலனி அரசுக்கு விசுவாசமாக அல்லது ஆங்கிலேய அதிகாரத்தை அறிந்து அச்சப்பட்டு இந்திய அரசர்களும் ஜமீன்தாரர்களும் ஒதுங்கியிருந்தனர். கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களும் குறைந்த அளவே ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கிடைத்தோ அல்லது கிடைக்காமலோ இருந்தனர். ஆங்கில அறிவு பெற்ற நடுத்தர வகுப்பும் கிளர்ச்சிக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.


மத்திய தலைமை இல்லாததும் கிளர்ச்சி தோல்வியடைய முக்கிய காரணமாக அமைந்தது. தனிநபர்கள், இந்திய அரசர்கள் மற்றும் ஆங்கிலேய அரசுக்கு எதிராக சண்டையிட்ட பல்வேறு சக்திகளை ஒன்றிணைக்கப் பொதுவான செயல்திட்டம் ஏதுமில்லாமல் போனது.

இறுதியில் ஆங்கிலேய ராணுவம் கிளர்ச்சியை கடுமையாக ஒடுக்கியது. ஆயுதங்கள் கிடைக்கப்பெறாமை, அமைப்பாற்றல் இன்மை, ஒழுக்கமின்மை, உதவியாளர்களால் காட்டிக்கொடுக்கப்பட்டது ஆகிய காரணங்களால் கிளர்ச்சித் தலைவர்கள் தோல்வி அடைந்தனர். 1857ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தில்லி ஆங்கிலேய துருப்புகளால் கைப்பற்றப்பட்டது. சிறைபிடிக்கப்பட்ட பகதூர் ஷா பர்மாவுக்கு கொண்டு செல்லப்பட்டார்.



(உ) இந்தியா ஆங்கிலேய அரசுக் காலனியாக மாறுதல்

1858ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய அரசு சட்டம் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, நாடாளுமன்றத்தால் நேரடியாக ஆட்சி அதிகாரம் செலுத்தப்படும் ஆங்கிலேய அரசின் காலனிகளில் ஒன்றாக இந்தியா அறிவிக்கப்பட்டது. அமைச்சரவை உறுப்பினர் ஒருவரிடம் பொறுப்பு வழங்கப்பட்டது, அவர் இந்தியாவுக்கான அரசுச் செயலராக பதவி வகிப்பார்.

நிர்வாகத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள்

1857ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரிட்டிஷ் ஆட்சியும் அதன் கொள்கைகளும் பெரிய அளவில் மாற்றங்களைச் சந்தித்தன. சமூக சீர்திருத்தம் தொடர்பான விஷயத்தில் பிரிட்டிஷ் அரசு எச்சரிக்கை மிகுந்த அணுகுமுறையைக் கையாண்டது. இந்திய மக்களுக்கு விக்டோரியா அரசியார் செய்த அறிவிப்பில், பாரம்பரிய நிறுவனங்கள் மற்றும் மதம் தொடர்பான விஷயங்களில் ஆங்கிலேய அரசு தலையிடாது என்று தெரிவித்தார். அரசுப்பணிகளில் இந்தியர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்றும் உறுதிமொழி கூறப்பட்டது. இந்திய இராணுவத்தின் கட்டமைப்பில் இரண்டு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்தியர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைக்கப்பட்டது. முக்கியமான பதவிகள் மற்றும் பொறுப்புக்கள் வகிப்பதிலிருந்து இந்தியர்கள் விலக்கி வைக்கப்பட்டனர். காலாட்படையின் கட்டுப்பாட்டை எடுத்துக்கொண்ட ஆங்கிலேயர், அவற்றுக்கு ஆளெடுக்கும் முயற்சியை இதர பகுதிகளுக்கும் 1857ஆம் ஆண்டின் கிளர்ச்சியின் போது ஆங்கிலேயருக்கு விசுவாசமாக இருந்த சமூகங்களுக்கும் மாற்றினார்கள். உதாரணமாக ராஜபுத்திரர்கள், பிராமணர்கள், வட இந்திய முஸ்லிம்கள் ஆகியோரை விலக்கி வைத்த ஆங்கிலேயர் கூர்க்காக்கள், சீக்கியர்கள், பதான்கள் போன்ற இந்து அல்லாத குழுக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். இவற்றுடன், இந்திய சமூகத்தின் சாதி, மதம், மொழி மற்றும் மண்டலம் ஆகியன சார்ந்த வேறுபாடுகளை ஆங்கிலேயர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டதையடுத்து அது பிரித்தாளும் கொள்கை என்று அறியப்பட்டது.



Tags : Anti-Colonial Movements and the Birth of Nationalism | India காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்.
10th Social Science : History : Chapter 7 : Anti-Colonial Movements and the Birth of Nationalism : The Great Rebellion of 1857 Anti-Colonial Movements and the Birth of Nationalism | India in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 7 : காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் : 1857ஆம் ஆண்டின் பெருங்கலகம் - காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 7 : காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்