Home | 12 ஆம் வகுப்பு | 12வது வரலாறு | பிராமணரல்லாதார் இயக்கம்

காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் - வரலாறு - பிராமணரல்லாதார் இயக்கம் | 12th History : Chapter 4 : Advent of Gandhi and Mass Mobilisation

   Posted On :  09.07.2022 03:35 am

12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 4 : காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல்

பிராமணரல்லாதார் இயக்கம்

பல்வேறு அடுக்குகள் கொண்ட இந்திய சமூகமும் அதனுள் இருந்த முரண்பாடுகளும் உயர் வகுப்பு ஆளுமையைக் கேள்வி கேட்கும் சாதி அமைப்புகள் மற்றும் இயக்கங்கள் தொடங்கப்பட ஏதுவாக அமைந்தன.

பிராமணரல்லாதார் இயக்கம்

பல்வேறு அடுக்குகள் கொண்ட இந்திய சமூகமும் அதனுள் இருந்த முரண்பாடுகளும் உயர் வகுப்பு ஆளுமையைக் கேள்வி கேட்கும் சாதி அமைப்புகள் மற்றும் இயக்கங்கள் தொடங்கப்பட ஏதுவாக அமைந்தன. உற்பத்தியின் காரணிகளை மேல் வர்க்கத்தினர் கட்டுப்படுத்திய நிலையில் வாழ்வாதாரத்தை நடுத்தர மற்றும் ஒடுக்கப்பட்டோர் சார்ந்திருந்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் சமூக மற்றும் சமய சீர்திருத்த இயக்கங்களை ஆளுமைப்படுத்திய மற்றும் இணைந்து செயல்பட்ட தாராளமயமாக்கலும், மனிதாபிமானமும் சமூகத்தைப் பாதித்ததோடு அதனைச் சற்றுத் திருப்பிப்போட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசி இருபத்தைந்தாண்டுகளில் இந்த விழிப்புணர்வுக்கான அறிகுறிகள் ஏற்கனவே தென்பட ஆரம்பித்துவிட்டன. வங்காளத்திலும் இந்தியாவின் கிழக்குப்பகுதிகளிலும் தொடங்கப்பட்ட நாம சூத்ரா இயக்கம், இந்தியாவின் வடமேற்கு பகுதியில் தொடங்கப்பட்ட ஆதிதர்மா இயக்கம், மேற்கு இந்தியாவில் சத்யசோதக் இயக்கம் மற்றும் தென்னிந்தியாவின் திராவிட இயக்கங்கள் இந்த நூற்றாண்டின் திருப்பத்தில் தங்கள் குரல்களை எழுப்பின. பிராமணர் அல்லாத தலைவர்களால் நடத்தப்பட்ட இந்த இயக்கங்கள் பிராமணர்கள் மற்றும் இதர உயர் வகுப்பினரின் மேன்மை குறித்துக் கேள்வி எழுப்பின.

1872ஆம் ஆண்டு ஜோதி ராவ் பூலேவின் புத்தகம் குலாம்கிரி என்ற தலைப்பில் முதலில் வெளிவந்தது. அவரது அமைப்பு, சத்யசோதக் சமாஜ், பிராமணியத்தின் கொடுங்கோல் மற்றும் சாண்டல் ஆகியவற்றிலிருந்து ஒடுக்கப்பட்ட சாதியினரை விடுவிப்பதற்கான அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டியது. காலனித்துவ நிர்வாகிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகியவை மறைமுகமாக இப்போக்கை ஊக்குவித்தன. காலனித்துவ காலத்தில் இந்நாட்டு மக்களுக்கென அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து புதிய வாய்ப்புகளிலும் பிராமணிய ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கிய போது காலனிய அரசாங்கம் பத்தாண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கைகளை வெளியிடத் தொடங்கியது. இந்த அறிக்கைகளில் சாதிகள் வகைப்படுத்தப்பட்டன. உள்ளூர் பொதுக் கருத்தினால் அங்கீகரிக்கப்பட்ட சமூக முன்னுரிமையின் அடிப்படையில் சாதிகளை வகைப்படுத்தி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறிப்பிட்ட போது சாதிகளுக்கு இடையே மோதல்கள் எழுந்தன. உரிமைகோரல்களும், அவற்றை எதிர்த்து உரிமையோடு மறுப்பதும் என இந்த அமைப்புகளின் தலைவர்கள் தாங்கள் முக்கியத்துவம் பெறுவதற்காகப் போராடத் துவங்கினர். பலர் புதிய அமைப்புக்களையும் தொடங்கினார்கள். இந்த முயற்சிகளுக்கு அப்போது உருவாகிய அரசியல் சூழ்நிலை மேலும் உதவியாக இருந்தது.


சமூக அடையாளத்தைப் பெறுவதற்குத் தங்கள் சாதிகளைப் போராட்டத்துக்கு ஒருங்கிணைக்க வேண்டும் என்று சாதிகளின் முன்னணித் தலைவர்கள் உணர்ந்தனர். அங்கீகாரத்தை எதிர்த்து அவர்களில் பலர், ஆண்டுகள் செல்லச் செல்ல, அவர்களது சாதி சார்ந்த மாணவர்கள் கல்வி பெறவும், கல்வி பெற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்புகளைப் பெறவும் உதவினர். இதனிடையே, வாக்குரிமை அரசியல் 1880களில் அறிமுகம் செய்யப்பட்டு இது போன்ற அமைப்புகளின் இடத்தை அவை நிரப்பின. சாதி விழிப்புணர்வு, சாதி ஒற்றுமை என்ற பெயரில் சமூகப் பொருளாதார பதற்றங்களின் வெளிப்பாடாக இவற்றின் முடிவுகள் இருந்தன.

பிராமணரல்லாதார் இயக்கங்களில் இருந்து இரண்டு போக்குகள் வெளியாகின. கீழ்நிலை சாதிகளுக்குச் சமஸ்கிருதத்தைச் சொல்லிக் கொடுப்பது, மற்றொன்று அந்தக் காலகட்டத்தில் தீவிரமாக இருந்த ஏழைகளுக்கு ஆதரவாகவோ அல்லது முற்போக்குத் தொழிலாளர் மற்றும் விவசாயிகளுக்கு ஆதரவான இயக்கங்கள் ஆகியன செயல்பட்டன. வடக்கு மற்றும் கிழக்கு சாதி இயக்கங்கள் பெரும்பாலும் சமஸ்கிருதம் சார்ந்தும் மேற்கத்திய மற்றும் தெற்கத்திய இயக்கங்கள் பிளவுபட்டு அப்போது வளர்ந்துவந்த தேசியவாத மற்றும் திராவிட - இடதுசாரி இயக்கங்களைச் சேர்த்துக்கொண்டன. ஆனால், அனைத்து இயக்கங்களுமே பிராமண ஆதிக்கம் என்று குறிப்பிட்டு அதனை எதிர்த்துக் கடுமையாக விமர்சனம் செய்தன. தங்கள் அமைப்புகள் மூலம் நீதி வேண்டி அரசிடம் கோரிக்கை வைத்தன. பம்பாய் மற்றும் மதராஸ் மாகாணங்களில் அரசு சேவைகள் மற்றும் பொதுக் கலாச்சாரம் சார்ந்த துறைகளில் பிராமணர்கள் தெளிவாக ஆதிக்கம் செலுத்தியதன் விளைவு பிராமணர் அல்லாதோரின் அரசியலுக்கு வழிவகுத்தது.

தெற்கில் இந்த இயக்கத்தின் வடிவமைப்பு சற்று வித்தியாசமாக இருந்தது. பிராமணர்கள் ஆதிக்கத்திற்கு அதிகக் காரணம் அவர்கள் வெறும் 3.2 சதவீதம் மட்டுமே மக்கள் தொகையில் இடம்பெற்றிருந்தாலும் அவர்களில் 72 சதவீதம் பட்டாதாரிகளாய் இருந்தனர். பிராமணரல்லாதார் சாதிகளைச் சேர்ந்தக் கல்வி கற்ற மற்றும் வர்த்தக சமூக உறுப்பினர்களின் சவால்களை அவர்கள் சந்திக்க நேர்ந்தது. அவர்கள் தொடக்கத்தில் மேல்குடி மக்களாக இருந்ததோடு அவர்களது சவால் 1916 இறுதியில் பிராமணரல்லாதார் உருவாக்கிய அறிக்கையில் எடுத்துரைக்கப்பட்டது. வரி செலுத்துவோரில் பெரும் பகுதியாகவும், பெரும்பான்மையாக ஜமீன்தாரர்களாகவும், நிலப்பிரபுக்களாகவும், வேளாண் விவசாயிகளாகவும் தாங்கள் இருந்த போதிலும் அரசிடமிருந்து எந்த பலன்களையும் பெறவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

இந்தியாவைப் பிரித்தாளும் சூழ்ச்சியில் பிராமணரல்லாதோரின் உண்மையான குறைகளைப் பயன்படுத்திக் கொள்ள காலனி ஆதிக்க அரசு முயன்றது. பம்பாய் மாகாண பிராமணேதரா பரிஷத், மதராஸ் மாகாண நீதிக்கட்சி ஆகியவைகளுக்கு இது குறைந்த பட்சம் 1930 வரை பொருந்தியது. தீவிரமான தலித் பகுஜன் இயக்கம் அம்பேத்கர் தலைமையிலும் சுயமரியாதை இயக்கம் தந்தை பெரியார் ஈ. வே. ராமசாமி தலைமையிலும் உருவாகி சமூக நீதி சார்ந்து அடிப்படை மாற்றம் கோரும் இயக்கங்கள் இந்த இரண்டு பகுதிகளிலம் செயல்பட்டன.


இந்தியாவின் கீழ்த்தட்டு மக்கள் விழிப்புணர்வு பெற்ற தேசியவாதிகளால் கூறிய தாராளமய ஜனநாயக கருத்துகளை அறிந்துகொள்ள முடியவில்லை . இந்தத் திருப்பங்களைத் தேசியவாதிகளின் ஒரு குழுவினர் முற்றிலுமாக நிராகரித்த நிலையில் அவர்களில் பெரும்பான்மையோர் குறிப்பாக அடிப்படை மாற்றம் விழைவோர் தீவிரத்தன்மையுடன் இந்த இயக்கங்களை எதிர்த்தனர். பிரிட்டிஷார், தேசவிரோத சக்திகள் போன்றவற்றுக்குக் கைத்தடிகள் என்று இந்த இயக்கங்களைச் சிலர் குறிப்பிட்டனர். காலனி அரசுக்கு எதிராகப் பூர்வாங்க தேசியவாதத் தலைவர்கள் எந்த மாதிரியான உத்தியைப் பயன்படுத்தினார்களோ அதே மாதிரியான உத்தியைப் பிராமணர் அல்லாத இயக்கத்தின் பூர்வாங்கத் தலைவர்களும் பின்பற்றத் தொடங்கினர்.

Tags : Advent of Gandhi and Mass Mobilisation | History காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் - வரலாறு.
12th History : Chapter 4 : Advent of Gandhi and Mass Mobilisation : The Non-Brahmin Movement Advent of Gandhi and Mass Mobilisation | History in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 4 : காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் : பிராமணரல்லாதார் இயக்கம் - காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் - வரலாறு : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 4 : காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல்