பிரதமர் நியமனம், பணிகள், பிரதமர் அலுவலகம் | இந்திய அரசியல் - பிரதமர் | 12th Political Science : Chapter 3 : Executive

   Posted On :  02.04.2022 02:23 am

12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 3 : ஆட்சித்துறை

பிரதமர்

நாட்டில் கொள்கைகளை உருவாக்கவும், முக்கிய முடிவுகளை எடுக்கவும், அவற்றை அமல்படுத்தவும் அரசமைப்பு மற்றும் சட்டங்களின் மூலம் ஒரு குழுவிற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மற்றும் அமைச்சர்கள் குழு

பிரதமர் என்பவர் சமமானவர்களில் (அமைச்சர்களில்) முதன்மையானவர். அத்துடன் காபினட் (அமைச்சர்கள் குழு) அமைப்பின் அடிப்படைத் தூணாகவும் உள்ளார். அப்பதவியும் பொறுப்பும், அப்பதவி இருக்கும் வரையிலும் ஒப்பிடமுடியாத ஒன்றாகவும், தனிச்சிறப்புமிக்க அதிகார மையமாகவும் விளங்குகிறது.

- மார்லே பிரபு


பிரதமர்

அறிமுகம்

ஆட்சித்துறை: அரசமைப்பு பிரதமரின் தலைமையிலான அமைச்சரவைக் குழுவிடம் நிர்வாக பொறுப்பைத் தந்துள்ளது.

பொருள்: நாட்டில் கொள்கைகளை உருவாக்கவும், முக்கிய முடிவுகளை எடுக்கவும், அவற்றை அமல்படுத்தவும் அரசமைப்பு மற்றும் சட்டங்களின் மூலம் ஒரு குழுவிற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. 

ஒன்றிய மத்திய அரசில் இரு முக்கியமான உறுப்புகள் உள்ளன.

ஒன்றிய சட்டமன்றம் அல்லது ஒன்றிய நாடாளுமன்றம்

ஒன்றிய ஆட்சித்துறை 

இதற்கு முந்தைய பாடப்பிரிவில் ஒன்றிய சட்டமன்றம் (நாடாளுமன்றம்) பற்றி அறிந்து கொண்டீர்கள். இப்போது ஒன்றிய ஆட்சித்துறையைப் பற்றி பரிசீலிப்போம். இந்திய அரசமைப்பின் IV பகுதியிலுள்ள 52 முதல் 78 வரையிலான உறுப்புகள் ஒன்றிய ஆட்சித்துறையைப் பற்றிக்கூறுகின்றன என்பதை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும்.

பிரிட்டீஷ் நாடாளுமன்ற ஆட்சிமுறையை, அதாவது பிரதமரை அரசின் தலைவராகக் கொண்டுள்ள முறையை இந்திய அரசமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. பிரதமர் அமைச்சரவையில் சமமானவர்களில் முதன்மையானவராக திகழ்கிறார்.



நியமனம்

பிரதமரின் தேர்வு மற்றும் நியமனம் பற்றிய குறிப்புகள் எதுவும் அரசமைப்பில் இல்லை . பிரதமர் பதவிக்கு நேரடித் தேர்தல் எதுவும் இல்லை . அரசமைப்பின் 75-வது உறுப்பு பிரதமரை குடியரசுத்தலைவர் நியமனம் செய்வதாக கூறுகிறது. ஆனால் பிரதமரைத் தன்னிச்சையாக குடியரசுத்தலைவர் தேர்வு செய்ய இயலாது. மக்களவையில் பெரும்பான்மையுள்ள கட்சி அல்லது கட்சிகளின் கூட்டணியின் தலைவரையே பிரதமராகக் குடியரசுத்தலைவர் நியமனம் செய்கிறார். எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பெரும்பான்மை ஆதரவைத் திரட்டக்கூடியவர் எனக் குடியரசுத்தலைவரால் கருதப்படுகின்ற ஒருவரை பிரதமராக நியமனம் செய்வார். பிரதமருக்கென குறிப்பிட்ட பதவிக்காலம் எதுவும் இல்லை. பெரும்பான்மை கொண்ட கட்சி அல்லது கட்சிகளின் தலைவராக இருக்கும் வரையில் அவரே பிரதமராகத் தொடர்வார்.



பணிகள்

பிரதமரின் முதன்மையானதும் முக்கியமானதுமான பொறுப்பு அவரது அமைச்சரவையின் உறுப்பினர்கள் பட்டியலைத் தயாரிப்பதே. அவர் அந்த பட்டியலுடன் குடியரசுத்தலைவரை சந்தித்து, ஒப்புதல் பெற்றவுடன் அமைச்சரவை அமைக்கப்படுகிறது. மிக முக்கியமான அமைச்சர்கள் காபினட் அந்தஸ்து கொண்ட அமைச்சர்களாக அறிவிக்கப்படுகிறார்க்ள். மற்றவர்கள் மாநில அமைச்சர்கள் என்றும் மூன்றாம் நிலையிலுள்ளவர்கள் துணை அமைச்சர்கள் என்றும் அறியப்படுவர். பிரதமர் விரும்பினால் ஓர் அமைச்சரைதுணைப்பிரதமர் என அறிவிக்க முடியும். பிரதமரின் ஆலோசனையின்படி குடியரசுத்தலைவர் அமைச்சர்களுக்குரியதுறைகளை ஒதுக்குவார். பிரதமர் எந்த துறை அல்லது துறைகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும். அவ்வப்போது அமைச்சர்களின் பொறுப்புகளை மாற்றியமைக்க குடியரசுத்தலைவருக்கு பிரதமர் ஆலோசனை வழங்கலாம். அதுபோன்று ஒரு துறையை இரண்டாகவோ மூன்றாகவோ பிரிக்கலாம் அல்லது இரண்டு, மூன்று துறைகளை ஒரே துறையாகவும் இணைக்கலாம்.



பிரதமரின் முதன்மை நிலை கீழே தரப்பட்டுள்ள காரணிகளால் தெளிவாகிறது. 

1. மக்களவையின் பெரும்பான்மை கொண்ட கட்சியின் தலைவராக அவர் உள்ளார். 

2. மற்ற அமைச்சர்களை தேர்வு செய்யக் குடியரசுத்தலைவருக்கு பரிந்துரை செய்யவும், எந்த ஒரு அமைச்சரையும் பதவி நீக்கம் செய்யப் பரிந்துரைக்கவும், பதவி விலகுமாறு கட்டளை இடவும் பிரதமருக்கே அதிகாரமுள்ளது. 

3. அமைச்சர்களுக்குப் பொறுப்புகளை ஒதுக்கீடு செய்வது பிரதமரின் பொறுப்பாகும். அதுபோன்று எந்த அமைச்சரையும் ஒரு துறையிலிருந்து வேறொரு துறைக்கு மாற்றவும் அவருக்கு உரிமை உள்ளது. 

4. அமைச்சரவையின் தலைவர் பிரதமரே. அதன் கூட்டங்களைக் கூட்டவும், தலைமையேற்று நடத்துவதும், பல குழுக்களின் தலைவரும் பிரதமரே ஆவார். 

5. அரசின் கொள்கை முடிவுகளை ஒருங்கிணைத்து அனைத்து துறைகளின் நடவடிக்கைகளையும் மேற்பார்வையிடுகிறார். 

6. ஓர் அமைச்சர் தாமாகவே பதவி விலகிவிட்டால், ஓர் அமைச்சர் பதவி காலியிடமாகிறது. ஆனால் ஒரு பிரதமர் பதவி விலகினாலோ, அல்லது இறந்து விட்டாலோ அவரது அமைச்சரவையே இல்லாமல் போய்விடுகிறது.

7. அமைச்சர்களுக்கும் குடியரசுத் தலைவருக்கும் இடையில் தொடர்புப் பாலமாக இருப்பவர் பிரதமரே. அதே போன்று நாடாளுமன்றத்துக்கும் அமைச்சர்களுக்கும் இடையில் பாலமாக இருப்பவரும் அவரே. அரசின் வெளிநாட்டு விவகாரங்களை வெளியிடும் முக்கிய நபராகவும் அவர் உள்ளார்.



பிரதமரின் அலுவலகம்

பொருள்

நடைமுறையில் அரசின் தலைவராகவும், உண்மையான நிர்வாகத் தலைவராகவும் இருக்கின்றபடியால், நாட்டின் அரசியல் - நிர்வாக அரங்கில் பிரதமர் மிக முக்கியமான பங்கு வகித்து வருகிறார். அவரது பொறுப்புகளை நிறைவேற்றும் பொருட்டு பிரதமருக்கு உதவியாக பிரதமர் அலுவலகம் உள்ளது (PMO - Prime Minister Office) பிரதமர் அலுவலகம், செயலக உதவிகளையும் ஆலோசனைகளையும் பிரதமருக்கு வழங்குகிறது. இந்திய அரசின் உச்சகட்ட முடிவுகளை வடிவமைக்கும் நிலையிலுள்ள பிரதமர் அலுவலகம் அரசமைப்பால் குறிப்பிடப்படாத ஓர் அதிகார மையமாகத் திகழ்கிறது. பிரதமர் அலுவலகத்திற்கு இந்திய அரசின் துறைகளில் ஒன்று என்ற தகுதி உள்ளது. இந்த அலுவலகம் 1947-இல் உருவாக்கப்பட்டது. 1997-வரை இது பிரதமரின் செயலகம் (PMS – Prime Minister's Secretariat) என்றே அழைக்கப்பட்டு வந்தது. அரசியல் ரீதியாக பிரதமரும், நிர்வாக ரீதியாக முதன்மைச் செயலரும் இதன் தலைமையாகச் செயல்படுவர்.


பிரதமர் அலுவலகத்தின் பல்வேறு பணிகள்

1. அரசாங்கத்தின் தலைவர் என்ற நிலையில் உள்ள பிரதமருக்குத் தேவையான உதவிகளைச் செய்வது, மத்திய அமைச்சகங்களுடன் / துறைகளுடன் மற்றும் மாநில அரசுகளுடன் தொடர்புகளைப் பராமரிப்பது. 

2. நிதி ஆயோக் மற்றும் தேசிய வளர்ச்சி குழு போன்றவற்றிற்கு தேவையான உதவிகளைச் செய்வது. 

3. ஊடகங்களுடனும், பொதுமக்களுடனுமான பிரதமரின் தொடர்புகளைப் பராமரிப்பது. 

4. பிரதமரின் அலுவல்களுக்கு விதிகளின் படி நடவடிக்கைகளை மேற்கொள்வது. 

5. குறிப்பிட்ட விதிகளின்படி பிரதமருக்கு அனுப்படும் விவகாரங்களைப் பற்றி ஆராய்ந்தறிவதற்கு பிரதமருக்கு உதவுவது.
6. குடியரசுத்தலைவர், ஆளுநர்கள், அயல்நாட்டுத் தூதர்கள் போன்றவர்களுடன் இணக்கமான உறவுகளுக்காக பிரதமருக்கு உதவுவது. 

7. பிரதமரின் சிந்தனை ஊற்றாகச் செயல்படுவது பிறதுறைகளுக்கும் அமைச்சகங்களுக்கும் ஒதுக்கப்படாத அனைத்து விபரங்களையும் கையாள்வது. 

8. அமைச்சரவை தொடர்பான விவகாரங்களில் பிரதமர் அலுவலகம் ஈடுபடுவதில்லை . அமைச்சரவை தொடர்பான விபரங்களை அமைச்சரவை செயலகம் நேரடியாகக் கையாள்கிறது. ஆனால் அந்த அமைச்சரவை செயலகமும் பிரதமரின் வழிகாட்டுதலின்படியே செயல்படுகிறது.


Tags : Appointment, Functions and Position, Prime Minister’s Office | India Political பிரதமர் நியமனம், பணிகள், பிரதமர் அலுவலகம் | இந்திய அரசியல்.
12th Political Science : Chapter 3 : Executive : The Prime Minister Appointment, Functions and Position, Prime Minister’s Office | India Political in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 3 : ஆட்சித்துறை : பிரதமர் - பிரதமர் நியமனம், பணிகள், பிரதமர் அலுவலகம் | இந்திய அரசியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 3 : ஆட்சித்துறை