Home | 12 ஆம் வகுப்பு | 12வது வரலாறு | வட்ட மேசை மாநாடுகள்

காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் - வரலாறு - வட்ட மேசை மாநாடுகள் | 12th History : Chapter 4 : Advent of Gandhi and Mass Mobilisation

   Posted On :  09.07.2022 04:31 am

12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 4 : காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல்

வட்ட மேசை மாநாடுகள்

சைமன் குழு தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. காங்கிரஸ், இந்து மகா சபை, முஸ்லிம் லீக் ஆகியன அதனைப் புறக்கணித்தன.

வட்ட மேசை மாநாடுகள்

சைமன் குழு தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. காங்கிரஸ், இந்து மகா சபை, முஸ்லிம் லீக் ஆகியன அதனைப் புறக்கணித்தன. இந்த அறிக்கையை ஏற்பதற்கு பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் முயன்றனர். ஆனால் இந்தியத் தலைவர்களுடன் ஆலோசனைகள் இல்லாத நிலையில் இது பயனற்றுப் போகும். இந்த அறிக்கையைச் சட்டப்பூர்வமாகவும் நம்பிக்கைக்கு உரியதாகவும் ஆக்கும் நோக்கில் இந்தியக் கருத்தை உருவாக்கும் வல்லமை உடைய பலதரப்பட்ட தலைவர்களுடன் லண்டனில் ஒரு வட்டமேசை மாநாட்டைக் கூட்ட விருப்பதாக அரசு அறிவித்தது. ஆனால் சுதந்திரம் பெற்றே ஆக வேண்டும் என்ற கருத்தில் இந்த வட்ட மேசை மாநாட்டை புறக்கணிக்கப் போவதாகக் காங்கிரஸ் அறிவித்தது. காங்கிரஸ் பங்கேற்காவிட்டால் மாநாட்டை அரசு நடத்துவது பயனற்றுப்போகும் ஒரு நடவடிக்கை என்று அனைவரும் அறிந்திருந்தனர்.

காங்கிரசுடன் பேச்சுகள் தொடங்கின. 1931 மார்ச் 5இல் காந்தி-இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியாவில் சட்டமறுப்பு இயக்கத்தின் முடிவைக் குறிப்பதாக அது அமைந்தது. உலகம் தழுவிய விளம்பரத்தை இந்த இயக்கம் தந்தது. அரசப்பிரதிநிதி (வைசிராய்) இர்வின் இதனை முடித்து வைக்க வழி காண விரும்பினார். ஜனவரி 1931இல் காந்தியடிகள் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். காந்தியடிகளும் இர்வின் பிரபுவும் ஒப்பந்தத்தின் அம்சங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். சத்தியாகிரக பிரச்சாரத்தைக் கைவிட காந்தியடிகள் உறுதி ஏற்றார். இந்த இயக்கத்தின் போது சிறையில் அடைக்கப்பட்ட பத்தாயிரக்கணக்கான இந்தியர்களை விடுதலை செய்ய இர்வின் ஒப்புக்கொண்டார்.


காங்கிரஸின் ஒரேயொருப் பிரதிநிதியாக லண்டனில் அந்த ஆண்டு நடந்த இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் காந்தியடிகள் கலந்துகொண்டார். உப்பைச் சுய பயன்பாட்டுக்குப் பயன்படுத்த மக்களை அனுமதிப்பது, வன்முறையில் ஈடுபடாத அரசியல் கைதிகளை விடுதலை செய்வது, சாராயம் மற்றும் அந்நியத் துணிகளை விற்கும் கடைகளின் முன் ஆர்ப்பாட்டங்களை நடத்த அனுமதிப்பது ஆகியவற்றுக்கு அரசு இணக்கம் தெரிவித்தது. காந்தி-இர்வின் ஒப்பந்தத்தைக் கராச்சியில் நடந்த காங்கிரஸ் மாநாடு ஏற்றுக்கொண்டது. பகத் சிங் மற்றும் அவரது தோழர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையைக் குறைக்க அரசப்பிரதிநிதி (வைசிராய்) மறுத்துவிட்டார்.

காந்தியடிகள் இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்ட போதும் அரசு அவரது கோரிக்கைகளை ஏற்க முன்வராமல் பிடிவாதம் செய்தது. வெறும் கையோடு அவர் திரும்பியதை அடுத்து சட்டமறுப்பு இயக்கத்தை மீண்டும் கையில் எடுப்பது என்று காங்கிரஸ் தீர்மானித்தது. பொருளாதார வீழ்ச்சி காரணமாக குறிப்பாக விவசாயிகள் உட்பட பொதுவாகவே நாட்டு மக்களின் பொருளாதார நிலைமை மோசமடைந்தது. நாடு முழுவதும் விவசாயிகளின் போராட்டங்கள் நடைபெற்றன. தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் போராட்டங்களை இடதுசாரிகள் முன்னின்று நடத்தினார்கள். இந்த இயக்கத்தை முடக்க அரசு நினைத்தது. நேரு, கான் அப்துல் கபார் கான், இறுதியில் காந்தியடிகள் என அனைத்து முக்கியத்தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். சுமார் ஒரு லட்சம் ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு தேசியவாதம் தொடர்பான பிரசுரங்கள் அனைத்தும் சட்டத்துக்குப் புறம்பானவை என அறிவிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற நிராயுதபாணிகளான மக்கள் மீது தீவிர வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்ட காலகட்டமாகும். இந்த இயக்கம் மெதுவாக மந்த நிலை அடைந்து மே 1933இல் அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்பட்டு பின்னர் மே 1934இல் முற்றிலும் முடிவுக்கு வந்தது.

Tags : Advent of Gandhi and Mass Mobilisation | History காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் - வரலாறு.
12th History : Chapter 4 : Advent of Gandhi and Mass Mobilisation : The Round Table Conferences Advent of Gandhi and Mass Mobilisation | History in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 4 : காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் : வட்ட மேசை மாநாடுகள் - காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் - வரலாறு : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 4 : காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல்