மாநில அரசு - மாநில சட்டமன்றம் | 10th Social Science : Civics : Chapter 3 : State Government of India

   Posted On :  27.07.2022 05:31 am

10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு - 3 : மாநில அரசு

மாநில சட்டமன்றம்

1. சட்டமன்றப் பேரவை (கீழவை) 2. சட்டமன்ற மேலவை (சட்ட மேலவை)

மாநில சட்டமன்றம்

இந்திய அரசியலமைப்பு ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு சட்டமன்றம் ஏற்பட வழி வகை செய்கிறது. பெரும்பாலான மாநிலங்கள் ஓரவையைக் கொண்ட சட்டமன்றங்களை மட்டும் பெற்றுள்ளன. சில மாநிலங்கள் ஈரவை சட்டமன்றங்களைக் கொண்டுள்ளன. (எடுத்துக்காட்டு: பீகார், கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா). கீழவையானது மாநில மக்களின் பிரதிநிதிகளைக் கொண்டது. மேலவையானது ஆசிரியர்கள், பட்டதாரிகள், மற்றும் உள்ளாட்சி உறுப்பினர்கள் ஆகியோர்களைப் பிரதிநிதிகளாகக் கொண்டது.


       தமிழக சட்டமன்றம்

தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையின் படி (234 உறுப்பினர்கள்) அமைச்சர்களின் எண்ணிக்கை 36 வரை இருக்கலாம். அதாவது 234இல் 15 விழுக்காடு.

 

சட்டமன்றப் பேரவை (கீழவை)

மாநில சட்டமன்றம் பிரபலமான ஓர் அவை ஆகும். இதுவே மாநில அதிகாரத்தின் உண்மையான அதிகார மையமாகும். இது வயது வந்தோர் வாக்குரிமையின் அடிப்படையில் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டது. சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை, மக்கள் தொகையைப் பொறுத்து மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. இருப்பினும், சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகபட்சம் 500க்கு மிகாமலும் குறைந்த பட்சம் 60க்கு குறையாமலும் இருக்க வேண்டும்.

சட்டமன்றத்தின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். இருப்பினும் 5 ஆண்டுகள் முடியும் முன்னரே சட்டமன்றம் கலைக்கப்படலாம்.

சட்ட மேலவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அம்மாநில சட்டமன்ற கீழவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 3இல் ஒரு பங்குக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆனால் மேலவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 40க்கு குறையாமல் இருக்க வேண்டும்

சட்டமன்றத்தின் அமைப்பு

தமிழக சட்டமன்றம் 235 உறுப்பினர்களைக் கொண்டது. இவர்களில் 234 உறுப்பினர்கள் வயது வந்தோர் வாக்குரிமையின் அடிப்படையில் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஆங்கிலோ இந்தியன் வகுப்பினரில் ஒருவர் ஆளுநரால் நியமனம் செய்யப்படுகிறார்.

அமைச்சரவை மற்றும் அமைச்சரவைக் குழுக்கள்

அமைச்சரவை (Cabinet) என்ற சிறிய அமைப்பானது அமைச்சரவையின் உட்கரு ஆகும். இது காபினெட் அமைச்சர்களை மட்டும் உள்ளடக்கியது. இதுவே மாநில அரசின் உண்மையான அதிகார மையமாக விளங்குகிறது.

அமைச்சரவை குழுக்கள் எனப்படும் வெவ்வேறு குழுக்கள் மூலம் காபினெட் செயலாற்றுகிறது. அவற்றில் இரண்டு வகைகள் உள்ளன. அவை. ஒன்று நிரந்தரமானது மற்றொன்று தற்காலிகமானது ஆகும்.

சபாநாயகர்

சட்டமன்ற உறுப்பினர்களிடையே சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். சட்டமன்றம் ஒரு தீர்மானத்தின் மூலம் 14 நாட்கள் அறிவிப்பு கொடுத்த பிறகு சபாநாயகரைப் பதவி நீக்கம் செய்யலாம். அதற்கு முன் சபாநாயகரைப் பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடக்கும் நேரத்தில் அவைக்கு வந்த பெரும்பாலான உறுப்பினர்கள் வாக்களித்து தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். சட்டமன்றம் கலைக்கப்படும் பொழுது சபாநாயகர் தமது பதவியை இழக்க மாட்டார். மேலும், புதிய சட்ட மன்றத்தின் முதல் கூட்டம் வரை தனது பதவியைத் தொடர்கிறார். சபாநாயகர் இல்லாதபோது அவரது பணியைத் துணை சபாநாயகர் மேற்கொள்கிறார்.


சட்டமன்ற மேலவை (சட்ட மேலவை)

சட்டமேலவை (விதான் பரிஷத்) இந்திய மாநில சட்டமன்றங்களில் ஓர் அங்கமாக செயல்படுகிறது. இந்தியாவின் 28 மாநிலங்களில் 6 மாநிலங்களில் சட்டமேலவை உள்ளது. ஈரவை சட்டமன்றத்தில் மறைமுகத் தேர்தலால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் சட்ட மேலவையில் செயலாற்றுகின்றனர். சட்ட மேலவை ஒரு நிரந்தர அவையாகும். ஏனென்றால், இதனை கலைக்க முடியாது. சட்ட மேலவை உறுப்பினர்களின் பதவி காலம் 6 ஆண்டுகள் ஆகும். அதன் ஒவ்வொரு இரண்டாண்டிற்கும் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் ஓய்வு பெறுவர். ஒருவர் சட்ட மேலவை உறுப்பினராவதற்கு அவர் இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும். 30 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும். தெளிவான மனநிலை உடையவராக இருத்தல் வேண்டும். எந்த மாநிலத்தில் போட்டியிடுகிறாரோ அம்மாநில வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இடம் பெற்றிருத்தல் வேண்டும்.

உங்களுக்குத் தெரியுமா?

1986இல் இயற்றப்பட்ட தமிழ்நாடு சட்ட மேலவை (நீக்கம்) மசோதா மூலம் தமிழ்நாட்டில் சட்ட மேலவை நீக்கப்பட்டது. இச்சட்டம் 1986 நவம்பர் முதல் நாளன்று நடைமுறைக்கு வந்தது.

சட்ட மேலவைக்கான தேர்தல்

மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் உள்ளாட்சி அமைப்புகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

பன்னிரெண்டில் ஒரு பங்கு (1/12) உறுப்பினர்கள் பட்டதாரிகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

பன்னிரென்டில் ஒரு பங்கு (1/12) உறுப்பினர்கள் பட்டதாரி ஆசிரியர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

மூன்றில் ஒரு பங்கு (1/3) உறுப்பினர்கள் சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

ஆறில் ஒரு பங்கு உறுப்பினர்கள் (1/6) கலை, இலக்கியம், அறிவியல், சமூக சேவை, மற்றும் கூட்டுறவு இயக்கம் இவற்றில் சிறந்து விளங்குபவர்களை ஆளுநர் நேரடியாக நியமனம் செய்கிறார்.

தலைவர்

மேலவைத் தலைவர் (Chair person) மேலவை கூட்டத்தைத் தலைமையேற்று நடத்துகிறார். மேலவை உறுப்பினர்களிடையே தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தலைவர் இல்லாதபோது துணைத்தலைவர் கூட்டத்தைத் தலைமையேற்று நடத்துகிறார்.

சட்டமேலவை உருவாக்கம் அல்லது நீக்கம்

சட்ட மேலவை உருவாக்கம் அல்லது நீக்கம் பற்றி சட்டப்பிரிவு 169 விவரிக்கிறது. இப்பிரிவின் படி, சட்டமன்றத்தின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் 2 பங்கு (2/3) உறுப்பினர்கள் வாக்களித்து தீர்மானத்தை நிறைவேற்றி சட்டமேலவையை உருவாக்கவோ அல்லது நீக்கவோ நாடாளுமன்றத்தைக் கேட்டுக் கொண்டால் நாடாளுமன்றம் ஒரு சட்டத்தின் மூலம் மேலவையை உருவாக்கும் அல்லது நீக்கும்.


Tags : State Government of India மாநில அரசு.
10th Social Science : Civics : Chapter 3 : State Government of India : The State Legislature State Government of India in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு - 3 : மாநில அரசு : மாநில சட்டமன்றம் - மாநில அரசு : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு - 3 : மாநில அரசு