சர்வதேச அமைப்புகள் - ஐக்கிய நாடுகள் சபை | 12th Political Science : Chapter 11 : International Organisations

   Posted On :  04.04.2022 04:18 am

12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 11 : சர்வதேச அமைப்புகள்

ஐக்கிய நாடுகள் சபை

சர்வதேச சங்கமானது தனது நோக்கத்தில் வெற்றி பெறாததை அடுத்து, உலக அமைதியை பாதுகாக்கும் சர்வதேச அமைப்பின் பணியானது ஒரு கனவாக நிறைவேறாமலேயே இருந்தது.

ஐக்கிய நாடுகள் சபை

சர்வதேச சங்கமானது தனது நோக்கத்தில் வெற்றி பெறாததை அடுத்து, உலக அமைதியை பாதுகாக்கும் சர்வதேச அமைப்பின் பணியானது ஒரு கனவாக நிறைவேறாமலேயே இருந்தது.


இரண்டாம் உலகப்போர் ஏழு கோடி பேருக்கு மேற்பட்டோரை பலிகொண்டிருந்தது, ஐக்கிய நாடுகள் சபையை தோற்றுவிப்பதற்கான கருத்தானது உலகத் தலைவர்களை ஒருங்கிணைத்துப் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததுடன் அமைதியைப் பாதுகாத்து எதிர்காலத்தில் போர் ஏற்படாமல் இருப்பதற்கான வலுவான ஓர் கட்டமைப்பை ஏற்படுத்தவும் செய்தது. மேலும் பிரிந்திருந்த நாடுகளை ஒருங்கிணைத்து ஓர் உலகம் தழுவிய அமைப்பை ஏற்படுத்துவதற்கான பணியினை மேற்க்கொள்ளக் செய்தது.

அமெரிக்கக் குடியரசுத்தலைவர் பிராங்களின் டி ரூஸ்வெல்ட் ஆல் உருவாக்கப்பட்ட "ஐக்கிய நாடுகள் சபை" என்ற பெயரானது முதன் முதலாக 1942இல் இருபத்தி ஆறு நாடுகளின் பிரதிநிதிகள் கையெழுத்திட்டு ஏற்றுக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபைக்கான ஒப்பந்தத்தில் பயன்படுத்தப்பட்டது. மேலும், இந்த அணி அச்சு நாடுகளின் அதிகாரத்திற்கு எதிராக அமைதியை நிலைநாட்ட தொடர்ந்து போராடி வந்தது. சர்வதேச சங்கத்தை போல் அல்லாமல் இது அனைத்து நாடுகளின் கூட்டணியுடன் தொடங்கியது. ஜப்பானின் பேர்ல் துறைமுக தாக்குதலுக்குப் பிறகு போரில் இறங்கிய அமெரிக்கா, முதல் உலகப்போருக்கு பின் அமெரிக்காவுடன் போர் பிரகடனம் செய்த ஜெர்மனியும் இணைந்தது. 1944இல் ஆகஸ்டில் சீனா, சோவியத் யூனியன், இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகளின் பிரதிநிதிகள் டம்பார்டன் ஓக்ஸில் சந்தித்து புதிய சர்வதேச அமைப்பிற்கான அடிப்படை வரைவை உருவாக்கினர். இது அக்டோபர் மாதத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனமாக மாறியது

.நா-வின் நான்கு முக்கிய நோக்கங்கள் 

1. இராணுவ பாதுகாப்பு 

2. பொருளாதார மற்றும் சமூக மேம்பாடு 

3. மனித உரிமைகளை பாதுகாப்பது 

4. சர்வதேச நீதி

1945ஆம் ஆண்டு ஜெர்மனி சரண் அடைந்ததை அடுத்து, 50 நாடுகளின் பிரதிநிதிகள் சான் பிரான்ஸிஸ்கோ நகரில் ஜுன் 26, 1945-ல் கூடி சாசனத்தில் கையெழுத்திட்டனர். 1945இல் அக்டோபர் 24இல் பசிபிக் போர் முடிவுக்கு வந்ததை அடுத்து அமெரிக்காவானது அதிகார பூர்வமாக இதில் இணைந்து கொண்டது. இதற்கிடையே சாசனத்தை வரைவதில் எந்த பிரச்சனையை சர்வதேச சங்கம் எதிர் கொண்டதோ அதே பிரச்சனை எந்த மாற்றமும் இல்லாமல் ஐ.நா அமைப்பும் எதிர் கொண்டது.

செயல்பாடு - குழு விவாதம்

ஐக்கிய நாடுகள் சபைக்கான புதிய திசைவழிகள்


இது அனைவருக்குமே சோதனையான காலம் உலகெங்கும் உள்ள அனைத்து மக்களும் அதிக பதட்டம் மற்றும் அச்சத்தில் வாழ்கின்றனர். அமைப்புகள் மற்றும் தலைவர்கள் மீது உலக மக்கள் நம்பிக்கையை இழந்துள்ளனர்.

இந்த நிச்சயமற்ற சூழ்நிலையில், நம்முடைய எதிர்காலம் .நா-வை சார்ந்துள்ளது. ஏனெனில் .நா சபை மட்டுமே பல்வேறு நாடுகளையும் ஒன்றிணைக்கிறது. அங்கே வெறுமனே உரையாடவும், விவாதிக்கவும் மட்டுமல்லாமல் செயல்படவும் ஏதுவாகிறது. குடிமை சமூகங்களை, வர்த்தகர்களை, கொடையாளர்களை, சாதாரண மக்களை உலக அரசுகளுக்கு உதவுவதற்காகவும், தற்கால பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவும் ஒன்று திரட்டுகிறது. மேலும், அமைதியை நிலைநாட்டுகிறது. வளர்ச்சி, மனித உரிமைகள் மற்றும் அனைவருக்குமான நன்மை போன்றவற்றில் ஒவ்வொரு நாடும் உலக மக்கள் அனைவருக்கும் ஒரே நம்பிகையாக .நா திகழ்கிறது

நன்றி: .நா-விற்கான புதிய திசைவழிகள் - கட்டுரையை எழுதிய .நா-வின் முன்னாள் பொது செயலாளர் அவர்களுக்கு

குழு விவாதத்திற்கான தலைப்பு: ஐக்கிய நாடுகள் சபை எவ்வளவு வெற்றிகரமாக உள்ளது?

இந்த அடிப்படை குழப்பம் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே தொடர்ந்தது. ஒரு நாட்டின் இறையாண்மைக்கும், சர்வதேச கருத்துகளுக்குமிடையே எவ்வாறு சமநிலை காண்பது, நாடுகள் ஒன்றுக்கொன்று சமமில்லாத நிலையில், எவ்வாறு அனைவருக்கும் சமமான, பொருந்துகிற சாசனத்தை வரைவது, ஐ.நா-வின் முடிவுகளில் விருப்பமில்லாதபோது, ஒரு நாடு ஐ.நா அமைப்பை விட்டு எளிதாக வெளியேறாமல் தடுப்பது (1930-களின் முற்பகுதியில் ஜப்பான் அவ்வாறு செய்தது). இவற்றிக்கெல்லாம் ஒரு தீர்வாக ரத்து அதிகாரத்தை சாசன வரைவாளர்கள் கொண்டு வந்தனர். ரத்து அதிகாரமானது ஐ.நா-வின் ஐந்து ஆரம்பகால உறுப்பினர்களான சீனா, பிரான்சு, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் நிரந்தர ஐந்து (P-5) உறுப்பினர்களாகக் கருதப்படுகின்றனர். அது மட்டுமல்லாமல் ஐ.நா-வை துவக்கியவர்கள் மிகவும் நன்றாக சர்வதேச சங்கத்தின் தோல்விக்கான காரணங்களை அறிந்து இருந்ததால் அந்த அனுபவங்களைக் கொண்டு ஐ.நா-விற்கான சாசனத்தின் முக்கிய கூறுகளை வடிவமைத்தனர். முக்கிய எடுத்துக்காட்டாக, ஐ.நா-வின் சாசனமானது சர்வதேச சங்கத்தின் தீர்மானத்தை போலவே சர்வதேச பாதுகாப்பை மேம்படுத்துவது மற்றும் அமைதியான வழியில் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டிருக்கிறது. சாசனமானது மேலும் இரண்டு முக்கிய கூறுகளை முதன்மையாக கொண்டிருக்கிறது.

ஏற்கனவே இதனை பிரதிபலிக்கும் வகையில் ஐ.நா சாசனத்தின் உறுப்பு 23-வது சர்வதேச சங்கத்தின் தீர்மானத்தைப் போலவே சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டை அடிப்படை நோக்கமாகக் கொண்டுள்ளது. சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டை வெறும் வார்த்தை அளவில் இல்லாமல் போர்களுக்கு இடைப்பட்ட ஆண்டுகளின் அனுபவத்தை வேராக கொண்டிருக்கிறது. பலரும் குறிப்பிடுவதுபோல 1920 மற்றும் 1930களில் ஏற்பட்ட உலகப் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அரசியல் எழுச்சிகள் பெரும் தேசியவாதத்தை ஏற்படுத்தியது அவற்றின் விளைவான ஆக்கிரமிப்புகளுமே இரண்டாம் உலகப்போருக்கான காரணமாக அமைந்தன. இதுவே, ஐ.நா-வானது தோற்றுவிக்கப்பட்டு உலக பிரச்சனைகளில் முனைப்புடன் ஈடுபட செய்தது.



ஐ.நா-வின் அமைப்பு


1945 இல் ஐ.நா ஆறு முக்கிய அமைப்புகளை கொண்டதாக இருந்தது. அவை: 

(1) பொதுச்சபை (2) பாதுகாப்பு குழு (3) பொருளாதார மற்றும் சமூக குழு (4) அறங்காவலர் குழு (5) சர்வதேச நீதிமன்றம் மற்றும் (6) செயலகம் ஆகும். இதில் அறங்காவலர் குழுவானது காலனிய ஒழிப்பிற்கான நடைமுறைத் தேவைகளை கொண்டிருந்தது. காலனிய ஒழிப்பிற்கு பிறகு இதன் பணி தேவையற்றதாக ஆகிவிட்டது. இருந்தபோதும் இது ஐ.நா-வின் முக்கிய அடிப்படை அமைப்புகளில் ஒன்றாக திகழ்கிறது. ஐ.நா-வின் அனைத்து அமைப்புகளும் முறையே கூடி முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கின்றனர், உறுப்பினர்களின் ஓட்டெடுப்பின் அடிப்படையில் முடிவுகளும், அறிக்கைகளும் வெளியிடப்படுகின்றன. இருந்தபோதும் இதன் ஒவ்வொரு அமைப்பின் நடைமுறைகளும் ஒன்றுக்கு ஒன்று வேறுபடுகின்றன. குறிப்பாக பொதுச்சபையானது ஐ.நா-விற்கான நாடாளுமன்றமாகவும், பாதுகாப்புக் குழு நிர்வாகக் குழுவாகவும், செயலகம் நடைமுறைபடுத்துவதற்கான அமைப்பாக (அல்லது) ஐ.நா-வின் நிர்வாக பிரிவாக செயல்படுகின்றது. 


பொதுச்சபை

ஐ.நா-வின் பொதுச்சபையானது கூடி விவாதிக்க கூடிய ஓர் முக்கிய அமைப்பாக உள்ளது. உறுப்பு நாடுகள் பரப்பளவில் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், செல்வாக்கு மிக்கதாக இருந்தாலும் அவை அனைத்திற்கும் சமமாக ஒரு ஓட்டு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இங்கு ஐ.நா-வின் சாசனத்தின் கீழ் எழும் பிரச்சனைகள் குறித்த விவாதமானது நடைபெறுகிறது. குறிப்பாக சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு, புதிய உறுப்பினர்களை இணைத்து கொள்வது, ஐ.நா-விற்கான நிதிநிலை அறிக்கை போன்றவை மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஒரு நாட்டிற்கு ஒரு ஓட்டு என்ற விதியின் அடிப்படையில் நிறைவேற்றப்படுகின்றன. உறுப்பு நாடுகளால் முன்மொழியப்படும் பிரச்சனைகள் மீது பொதுச்சபையில் தீர்மானங்கள் கொண்டுவரப்படுகின்றன. பொதுச்சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் உலக மக்களில் பெரும்பான்மையோரின் கருத்தைப் பிரநிதித்துவப்படுத்தும் விதத்தில் இருப்பதால், அந்த பரிந்துரைகள், மதிப்பு மிகுந்ததாக உள்ளது. இதன் அடிப்படையில் சர்வதேச உடன்படிக்கைகள், ஒப்பந்தங்கள் மற்றும் சாசனங்களில் பல்வேறு நாடுகள் இணைந்து அவற்றின் அம்சங்களை நடைமுறைப்படுத்துகின்றன. பொதுச்சபையின் கூட்டமானது ஒவ்வொரு செப்டம்பர் மாதமும் நடைபெறுகிறது. பெரும்பான்மையான தீர்மானங்கள் செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களிடையே நிறைவேற்றப்படுகின்றன. சிறப்பு கூட்டத்திற்கான கோரிக்கையானது பாதுகாப்புக் குழுவினாலோ அல்லது பெரும்பான்மை உறுப்பினர்களாலோ முன்மொழியப்பட வேண்டும். பொதுச்சபையின் வழக்கமான கூட்டத் தொடரின் முதல் இரண்டு வாரங்கள் உறுப்பு நாடுகளின் கருத்தை அறியும் வண்ணம் பொது விவாதமாக நடத்தப்படுகிறது. இது மிகவும் பரந்த அளவிலான பிரச்சனைகள் தீவிரவாதம், போர், வறுமை, பசி மற்றும் நோய்கள் குறித்ததாக அமைகிறது. பொதுச்சபையின் பணிகள் ஆறு குழுக்களின் வழியே மேற்கொள்ளப்படுகிறது.) 

பொதுச்சபையின் ஆறு முக்கிய குழுக்கள் 

ஆயுத குறைப்பு மற்றும் சர்வதேச பாதுகாப்பு 

பொருளாதாரம் மற்றும் நிதி 

சமூகம், மனிதநேயம் மற்றும் பண்பாடு 

சிறப்பு அரசியல் மற்றும் காலனிய ஒழிப்பு 

நிர்வாகம் மற்றும் நிதிநிலை அறிக்கை 

சட்டம்



பாதுகாப்புச் சபை


ஐ.நா-வின் சாசனப்படி பாதுகாப்புச் சபையானது சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான பொறுப்பு மிக்க அமைப்பாகும். இது பொதுச்சபையைப் போல் வழக்கமாக கூடுவதில்லை மாறாக சர்வதேச அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது எந்த நேரத்திலும் இதன் கூட்டமானது நடைபெறும். உறுப்பு நாடுகள் பாதுகாப்புச் சபையின் முடிவுகளை ஏற்று நடப்பது என்பது சட்ட ரீதியாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அமைதிக்கான அச்சுறுத்தல் ஏற்படும்பொழுது சபையானது பிரச்சனைக்குரிய நாடுகளை அழைத்துபேசி அமைதியான வழியில் ஒப்பந்தங்களை மேற்கொள்ளவும், மோதல்களை தவிர்க்கவும் செய்கிறது. மேலும் பாதுகாப்புச் சபையானது பேச்சு வார்த்தையின் மூலம் போர் நிறுத்தத்தை அறிவிக்கவும், பொருளாதார தடை விதிக்கவும் அல்லது ஐ.நா-வின் உறுப்பினர்களின் ஒப்புதலின் பெயரில் அதிகாரபூர்வ அமைப்பாக படைபலத்தினை பயன்படுத்தவும் செய்கிறது.

ஐ.நா-வின் பாதுகாப்புச் சபையில் நிரந்திர உறுப்பினராகும் இந்தியாவின் விருப்பம்

பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பினராக இடம் பெறும் இந்தியாவின் விருப்பமானது அது பாதுகாப்புச் சபையுடன் வரலாற்று பூர்வமாக கொண்டிருக்கும் உறவை வெளிப்படுத்துவதாக உள்ளது. விடுதலை அடைந்த ஆரம்ப ஆண்டுகளில் காஷ்மீர் தொடர்பான பாகிஸ்தானின் ஆயுத மோதல்களை இந்தியா தனது கருத்தியல் கொள்கையின் அடிப்படையில், ஐ.நா-வின் பார்வைக்கு எடுத்துச்சென்றது. பனிப்போர் உச்சத்தில் இருந்த அதிகார சமநிலையில்லாத அந்த காலகட்டத்தில் இந்தியா தனது கருத்தியல் கொள்கையின் அடிப்படையிலான நடவடிக்கைகளுக்கு பெரும் விலை கொடுக்கவேண்டியிருந்தது. காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா தலையிட அதுவே வழி வகுத்தது. இது மீண்டும் வெளிவர முடியாத எதிர் விளைவையே ஏற்படுத்தியது. இந்தியா பாதுகாப்புச் சபையில் கலந்து கொண்டு தனது விருப்பத்தை நிறைவேற்ற விடாமல் பெரும் அதிகார அரசியலாக மாற்றியது. மிகவும் குறிப்பாக நிரந்தர உறுப்பினரான சீனா, பாகிஸ்தான் பக்கம் நின்று கொண்டு எந்தவித சாத்தியமான விளைவுகளும் இந்தியாவிற்கு ஏற்படாத வண்ணம் குறுக்கீடு செய்தது.

இந்தியாவின் விருப்பமானது பாதுகாப்புச் சபையில் நீண்ட பல இந்திய வெளியுறவுக் கொள்கை குறித்த விவாதங்களை ஏற்படுத்தியது. தாராளவாத தன்மையுடன் சர்வதேச அமைப்பிற்கான பொறுப்புமிக்க ஒரு நாடாக இருக்குமா அல்லது சர்வதேச நிகழ்வுகளின் மரபுகளை மாற்றியமைப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் அரசாக இருக்குமா என்ற விவாதங்கள் நடைபெற்றன. தற்பொழுது நடைமுறையில் இருக்கும் சர்வதேச முறையினை தூக்கி எறியாமல் இந்தியா ஒரு மிதமான சீர்திருத்தவாதியாக உலகளாவிய பார்வையுடன் சர்வதேச மரபுகளில் நெகிழ்வையும் மற்றும் வடிவமைப்பையும் ஏற்படுத்துவதாக பல அரசியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

இந்தியா எப்போதுமே மூன்றாம் உலக நாடுகளை வழிநடத்தும் ஒரு அரசாக இருந்து வருகிறது. ஐ.நா-வின் பொதுச்செயலராக இருந்த கோபி அன்னான் புதுதில்லியில் ஒரு கூட்டத்தில் உரையாற்றும்போது மற்ற எந்நாட்டினரைக் காட்டிலும் இந்தியர்களின் சுதந்திரம் பற்றிய புரிதல் அதிகம் எனவும், வளர்ச்சி, பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் யாவும் சுதந்திரத்தினால் விளைந்தவை எனவும் அவை ஒன்றுக்கொன்று மாற்று அல்ல என்பதையும் இந்தியர்கள் அறிந்துள்ளனர் என்று குறிப்பிடுகிறார். இந்தியர்கள் தங்களது பன்மைத்துவ மக்களாட்சி மூலம் பரந்த சுதந்திரம் நோக்கி செல்வதாக மேலும் குறிப்பிடுகிறார்.

பாதுகாப்புச் சபையில் ரத்து அதிகாரம் குறித்த விமர்சனங்கள்

ரத்து அதிகாரமானது அதன் மக்களாட்சி பண்புகளற்ற தன்மைக்காக விமர்சிக்கப்படுகிறது. இது பாதுகாப்புச் சபையின் பெரும்பான்மையினரின் முடிவை ஒரு தனிப்பட்ட நாடு தடுப்பதாகும். உதரணமாக அமெரிக்காவானது தொடர்ச்சியாக இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானங்கள் மீது தனது ரத்து அதிகாரத்தை பயன்படுத்தி வருகிறது. மேலும் நிரந்தர உறுப்பினர்கள் தங்களுக்கு எதிரான விமர்சன தீர்மானங்களின் மீது ரத்து அதிகாரத்தை பயன்படுத்துவதும் வழக்கமானது ஆகும். 2014 ஆம் ஆண்டு ரஷ்யாவானது, கிரிமியாவை இணைத்துக் கொண்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது தனது ரத்து அதிகாரத்தை பயன்படுத்தியது. சர்வதேச பொது மன்னிப்புச் சபை ஐந்து நிரந்தர உறுப்பினர்களும் தங்கள் ரத்து அதிகாரத்தை மக்களின் விருப்பங்களை பாதுகாப்பதற்கு மாறாக தங்களின் சுய அரசியல் விருப்பங்களுக்கும் அல்லது புவிசார் அரசியல் விருப்பங்களுக்கும் பயன்படுத்துவதாக சர்வதேச பொது மன்னிப்புச் சபை குற்றம் சாட்டுகிறது.

சில விமர்சகர்கள் பாதுகாப்புச் சபையின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களுகே உரித்தான ரத்து அதிகாரமானது நியாயமற்றது என்று விமர்ச்சிக்கின்றனர். 21ஆம் நூற்றாண்டில் ரத்து அதிகாரமானது சர்வதேச அளவில் பார்க்கப்படும் பொழுது சமச்சீரற்ற அதிகாரமாக மேலும் சர்வதேச பிரச்சினைகள் மீதான நடவடிக்கைகளுக்கு தடையாக அமைந்துள்ளது. ரத்து அதிகாரத்தின் அளவற்ற ஆற்றலானது ஐ.நா-வை இன அழிப்பு, கலவரங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களின்போது அதைத் தடுப்பது மற்றும் பொறுப்பேற்பதில் ஆற்றலற்றதாக ஆக்குகிறது. இந்த ஐந்து நிரந்தர உறுப்பினர் தவிர மற்ற பல நாடுகள் குறிப்பாக அணிசேரா இயக்கத்தினர் மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியம் ரத்து அதிகாரத்தை குறைக்க கோருகின்றன.

"அமைதிக்கான ஒற்றுமை" என்ற தீர்மானத்தை நிறைவேற்றும்போதும் நடைபெற்ற விவாதத்தில் வழக்கமான ஐ.நா சட்டங்களின்படி பொதுச்சபையின் அதிகாரமானது பாதுகாப்புச் சபையின் "ரத்து அதிகார" பிரச்சனையுடன் தொடர்புடையதாகும். 1950 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி ஐ.நா-வின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பு நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட A/ RES/377 தீர்மானமானது குறிப்பிடுவது யாதெனில் ஐ.நா-வின் சாசனப்படி ஒருவேளை பாதுகாப்புச் சபையானது தனது முதன்மை நோக்கமான அமைதியை பாதுகாப்பதில் இருந்து தவறினால் அப்போது சர்வதேச அமைதிக்காக பொதுச்சபை எடுக்கும் மற்றும் பாதுகாப்பை நிலைநிறுத்தும் நடவடிக்கைகளை பாதுகாப்புச் சபை தடுக்கமுடியாது தடுக்கக் கூடாது. இந்த விளக்கமானது சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகளில் பொதுச்சபையானது இரண்டாவதாக பொறுப்புடையது என்பதை விட இறுதி பொறுப்புடையதாக அங்கீகரிக்கப்படுகிறது. ஐ.நா-வின் பல்வேறு அதிகாரப்பூர்வ மற்றும் அதிகாரப்பூர்வமற்ற அறிக்கைகளில் குறிப்பிடுவது "அமைதிக்கான ஒற்றுமை" தீர்மானமானது ஐ.நா-வின் பொதுச்சபையின் நடவடிக்கைகளை மீறி பாதுகாப்புச் சபையின் ரத்து அதிகாரமானது செயல்பட முடியாது என்பதாகும்.

பாதுகாப்புச் சபை அமைதியை நிலைநிறுத்துவதற்கான பாதுகாப்பு நடவடிக்கையையும் மேற்கொள்கிறது. இது ஐந்து நிரந்தர உறுப்பினர்கள் உட்பட பதினைந்து உறுப்பினர்களை கொண்டுள்ளது. பிற பத்து உறுப்பினர்கள் பொதுச்சபையினால் இரண்டு ஆண்டுகள் காலத்திற்கு சுழற்சி முறையில் தேர்வு செய்யப்படுகின்றனர். பாதுகாப்புச் சபையில் ஓர் தீர்மானமானது நிறைவேற்றப்பட பதினைந்தில் ஒன்பது உறுப்பினர்களின் ஓட்டு தேவைப்படுகிறது. இருந்தபோதும் ஐந்து நிரந்தர உறுப்பினர்களில் யார் ஒருவரும் தீர்மானத்திற்கு எதிராக ஓட்டு அளிப்பதை ரத்து அதிகாரமாக குறிப்பிடப்படுகிறது. மேலும் அத்தீர்மானமானது நிறைவேற்றப்படுவதில்லை. குழுவில் மேலும் அதிக நிரந்தர உறுப்பினர்களை இணைப்பதற்கான கோரிக்கைகள் எழுந்தால் அந்த கோரிக்கையானது ஐ.நா-வின் உறுப்பு நாடுகளால் தீர்மானிக்கப்படும். 


பொருளாதார மற்றும் சமூக குழு


ஐ.நா-வின் பொருளாதார மற்றும் சமூக குழுவிற்கான ஐம்பத்து நான்கு உறுப்பினர்கள் அனைத்து கண்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மூன்று ஆண்டு காலத்திற்கு தேர்வு செய்யப்படுகின்றனர். இது ஐ.நா-விற்கான மைய அமைப்பாக ஐ.நா-வின் பொருளாதார மற்றும் சமூக பணிகளை ஒருங்கிணைத்து மேற்கொள்கிறது. ஐ.நா-வின் எழுபது சதவிகித திட்டங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது, வறுமையை ஒழிக்கும் வகையில் முழு வேலை வாய்ப்பு, பொருளாதார மற்றும் சமூக மேம்பாடு மற்றும் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. இது வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்துவது, மனித உரிமைகளை பாதுகாப்பது, வறுமையை ஒழிப்பதற்கான உலகம் தழுவிய ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது போன்ற பணிகளை மேற்கொள்கிறது. இப்பணிகளை மேற்கொள்வதற்கான சிறப்பு அமைப்புகளையும் தனக்கு கீழ் இக்குழுவானது கொண்டிருக்கிறது. அவை, உணவு மற்றும் விவசாய கழகம் (FAO), உலக சுகாதார கழகம் (IVHO), ஐ.நா-வின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாடு கழகம் (UNESCO), ஐ.நா-வின் வளர்ச்சி திட்டங்கள் (UNDP), ஐ.நா-வின் குழந்தைகளுக்கான நிதி (UNICEF) மற்றும் ஐ.நா-வின் அகதிகளுக்கான உயர் ஆணையர் (UNHCR).


5. அறங்காவலர் குழு


ஐ.நா-வின் சாசனப்படி அறங்காவலர் குழுவானது பதினொரு முன்னால் காலனிய நில பகுதிகளின் நிர்வாகத்தை கண்காணித்து வருகிறது. இரண்டாம் உலகப்போரின் முடிவில், தற்சார்பற்ற இந்நிலபகுதியை சார்ந்த மக்களின் வளர்ச்சிக்காக சுயாட்சி அரசுகள் ஏற்படவும் அல்லது விடுதலையை அடைவதற்கான ஓர் நவீன முறையாகவும் இது உருவாக்கப்பட்டது.

இந்த பதினொரு பகுதிகளும் மற்றும் ஏழுபதுக்கும் மேற்பட்ட காலனிகளும் விடுதலை அடைவதற்கு ஐக்கிய நாடுகள் சபை உதவியாக இருந்தது. 1994இல் கடைசி பகுதியான பலாவ் விடுதலை அடைந்ததை அடுத்து அறங்காவலர் குழுவானது தனது பணியினை நிறுத்தி கொள்ளவும், தேவைப்படும்போது மட்டும் இக்குழு கூடுவதாகவும் முடிவு செய்தது. சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து, ரஷ்யா கூட்டமைப்பு மற்றும் அமெரிக்காவை இதன் நிரந்தர உறுப்பினர்களாக கொண்டு ஐ.நா அறங்காவலர் குழுவை அமைத்திருந்தது. அனைத்து உறுப்பினர்களுக்கும், ஒருவருக்கு ஒரு ஓட்டு விகிதம் குறைந்தபட்ச பெரும்பான்மையுடன் இதன் முடிவுகள் இயற்றப்படுகின்றன. காலனிய ஒழிப்புப் பணிகள் முடிவற்ற இக்கால சூழலில் அறங்காவலர் குழு முக்கியத்துவமற்றதாக காணப்படுகிறது.


சர்வதேச நீதிமன்றம்


ஐ.நா-வின் முக்கிய அமைப்பாக சர்வதேச நீதிமன்றம் செயல்படுகிறது. இது நெதர்லாந்தில் உள்ள தி ஹேக் நகரத்தில் அமைந்துள்ளது. சர்வதேச நீதிமன்றம் அல்லது உலக நீதிமன்றமானது 1945இல் ஏற்படுத்தப்பட்டு 1946 முதல் செயல்பட்டு வருகிறது. இது ஒரு நிரந்தர நடுவர் நீதிமன்றமாகச் செயல்படுகிறது. இந்நீதிமன்றமானது சர்வதேச சட்டங்களின்படி நாடுகளுக்கு இடையில் ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கிறது. மாறாக, இது தனிநபர்களின் வழக்குகளை விசாரிப்பது இல்லை. எந்த நாடும் இதன் விசாரணை தேவை இல்லை என கருதினால் தானாகவே விலகி கொள்ளலாம். இதற்கென்று எந்த சிறப்பு ஒப்பந்த விதிமுறைகளும் இல்லை. எந்த நாடு இந்நீதிமன்றத்தின் விசாரணையை ஏற்றுக்கொள்கிறதோ அது கண்டிப்பாக இதன் தீர்ப்புகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.

1946இல் இருந்து சர்வதேச நீதிமன்றமானது 150க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. குறிப்பாக, பொருளாதார உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, போக்குவரத்துவழிக்கான உரிமைகள், படையை பயன்படுத்தாமல் இருக்கவும், நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடாமல் இருக்கவும், தூதரக உறவுகள், பணயக்கைதிகளை விடுவிப்பது, அடைக்கல உரிமை மற்றும் தேசிய இன பிரச்சனைகள் போன்றவற்றிக்கும் தீர்வுகண்டிருக்கிறது. இந்நீதிமன்றத்தின் பதினைந்து நீதிபதிகளும் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களாக ஒன்பது ஆண்டு காலத்திற்கு தேர்வு செய்யப்படுகின்றனர். நீதிபதிகளை பொதுச்சபையும், பாதுகாப்புச் சபையும் சேர்ந்து தேர்வு செய்கின்றனர். இந்நீதிமன்றமும் அதன் அலுவலகமும் அமைதிக்கான அரண்மனையாக" திகழ்கின்றன. இதன் கட்டடமானது கார்னேஜ் அறக்கட்டளை என்ற லாபநோக்கம் இல்லாத அமைப்பால் சர்வதேச நீதிக்கான நிரந்தர நீதிமன்றத்தின் தலைமையிடமாக சர்வதேச சங்கத்திற்கு வழங்கப்பட்டது. ஐ.நா-வானது இக்கட்டடத்தை பயன்படுத்துவதற்கான ஆண்டு நிதியை இந்த அறக்கட்டளைக்கு வழங்குகிறது. பாதுகாப்புச் சபை இந்நீதிமன்றத்திற்கு வழக்குகளை பரிந்துரைசெய்கிறது. 

செயல்பாடு

சர்வதேச நீதிமன்றத்தின் மிக முக்கிய வழக்குகள் குறித்து மாணக்கர்கள் கேட்டு அறியவும். 


செயலகம்

ஐ.நா-வின் செயலக அதிகாரிகள் ஐ.நா-வின் பிற முக்கிய அமைப்புகளுக்கான திட்டங்களையும் மற்றும் கொள்கைகளையும் வடிவமைக்கின்றனர். இச்செயலகத்திற்கான தலைமை செயலாளரை பொதுச்சபையானது பாதுகாப்புச் சபையின் பரிந்துரையின் பெயரிலேயே நியமிக்கிறது. தலைமை செயலாளர் ஐந்து ஆண்டு காலத்திற்கு நியமிக்கப்படுகின்றார். அவர் மீண்டும் நியமிக்கப்படலாம். தலைமைச் செயலாளர் ஐ.நா-விற்கான தலைமை நிர்வாக அதிகாரியாக பிற அமைப்புகளையும் அதன் அலுவலர்களையும் இயக்கலாம். இவர்கள் சர்வதேச குடிமைப் பணியாளர்களாக அறியப்படுகின்றனர்.

 பொது செயலாளர்கள் வரிசை

1. டிரைகிவு லீ (நார்வே ) 1946 – 1952 

2. டேக் ஹமர்ஸ்கீ ஜிஓல்டு (சுவிடன்)1953 - 1961 

3. யூ தாண்ட் (பர்மா தற்பொழுது மியான்மர்) 1961 - 1971 – 

4. குர்ட் வல்தீம் (ஆஸ்திரியா) 1972 - 1981 

5. சேவியர் பெரஸ் டி குல்லர் (பெரு) 1982- 1991 

6. பூட்ரோஸ் பூட்ரோஸ் காலி (எகிப்து) 1992 - 1996 

7. கோபி அன்னான் (கானா) 1997 - 2006 

8. பான்-கீ-மூன் (கொரிய குடியரசு) 2007 - 2016 

9. ஆண்டனியோ குட்ரஸ் (போர்சுகல்) 2017 முதல்

ஒரு குறிப்பிட்ட நாட்டின் பிரதிநிதியாக செயல்படும் தூதர் போல் இல்லாமல் 193 உறுப்பு நாடுகளிலும் சர்வதேச குடிமைப் பணியாளர்களாக இவர்கள் பணியாற்றுகின்றனர். இதற்கான ஆணையை தலைமைச் செயலாளரிடம் இருந்து பெறுகின்றனர். மாறாக அவர்கள் பணியாற்றும் நாட்டின் அரசிடமிருந்து பெறுவதில்லை . செயலகத்திற்கான தலைமை அலுவலகம் நியூயார்க் நகரில் அமைந்துள்ளது. பிற அலுவலகங்கள் ஜெனிவா, வியன்னா, நைரோபி, அடிஸ்அபாபா, பெய்ரூட், சாண்டியாகோ மற்றும் பாங்காக் நகரங்களில் அமைந்துள்ளன. உறுப்பு நாடுகளில் இருந்து பெற்ற 16,000 ஊழியர்களை கொண்டு செயலக அதிகாரிகள் அமைப்பின் தினசரி பணிகளை மேற்கொள்கின்றனர்.

இதன் பணிகள் மிகவும் பரந்த அளவில் காணப்படுகிறது. அமைதியை நிலைநாட்டுவதற்கான பணிமுதல், சர்வதேச பிரச்சனைகளுக்கான நடுநிலையாளராக, சமூக மற்றும் பொருளாதார நிலை குறித்த தகவல்களைத் திரட்டுதல், சர்வதேச ஒப்பந்தங்களுக்கான அடிப்படைப் பணிகளை மேற்கொள்ளுதல் மற்றும் சர்வதேச மாநாடுகளை நடத்துவது ஆகும். செயலகத்தின் பணியானது பன்முகத் தன்மையுடன் தன் கீழுள்ள தேசிய அரசுக்களின் அழுத்தங்களையும் மீறி தனது சர்வதேச குறிக்கோள்களை அடைவதாகும்.

தலைமைச் செயலாளர் பாதுகாப்புச் சபையின் விவகாரங்களில் கவனம் செலுத்தி சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு இடையூறான சிக்கல்களில் தனது கருத்தினை தெரிவிக்கலாம். குறிப்பாக பிரச்சனைகளைத் தடுப்பதற்கும் அல்லது பிரச்சனைக்குரிய நாடுகள் அமைதியான வழியில் தீர்வு காண்பதற்கும் இவர் தனது அலுவலகத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் தலைமை செயலாளர் மனிதநேய பிரச்சனைகள் அல்லது சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளுக்கான நடவடிக்கையினை மேற்கொள்ள முடியும்.

ஐ.நா-வின் குடும்பம் மிக பெரியது பதினைந்து முகவாண்மைகள், பல திட்டங்கள் மற்றும் நிறுவனங்களைக் கொண்டது. இதில் சில நிறுவனங்கள் சர்வதேச சங்கத்தின் காலத்திலேயே துவக்கப்பட்டுவிட்டன. குறிப்பாக சர்வதேச தொழிலாளர் கழகம் மேலும் சில அமைப்புகள் 1945இல் தோற்றுவிக்கப்பட்டு குறிப்பிடத்தக்க பிரச்சனைகள் மற்றும் நிகழ்வுகளைத் தீர்ப்பதற்கான அமைப்பாக ஐ.நா துவக்கப்பட்டதிலிருந்து செயல்படுகின்றன. இதன் காரணமாக ஐ.நா-வானது பன்முகத்தன்மை வாய்ந்ததாக காட்சி அளிக்கிறது. இந்நிறுவனங்கள் துவக்கப்பட்டதிலிருந்து பின்பு வந்த பல பத்தாண்டுகளில் இவற்றின் பணியானது மிகப் பரந்த அளவில் கொண்டுசெல்லப்பட்டு ஐ.நாவும் இதனை ஏற்று வழிநடத்த செய்கிறது. இதன் விளைவு, பல புதிய அமைப்புகள் கூடுதலாக தோற்றுவிக்கப்பட்டு நிரந்தரமாகவும், சில தற்காலிக அமைப்பாகவும் செயல்படுகின்றன. குறிப்பாக, ஐ.நா-வின் அகதிகளுக்கான உயர் ஆணையர் (UNHCR) போன்றவை. இவை நிரந்தர அமைப்பாக செயல்படபோவது இல்லை . ஐ.நா-வின் வரலாற்றைப் பார்த்தால், பல்வேறு காலகட்டங்களில் பல துணை அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றி இருப்பதை காணலாம். ஐ.நா தற்போது மூவாயிரத்திற்கும் மேற்பட்ட அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுகிறது.

தொலைநோக்கு பார்வையுடன் 1945இல் கொண்டுவரப்பட்ட ஐ.நா சாசன உறுப்பு 77-வது அரசு-சாரா அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவதற்கு ஏதுவாக தேவையான ஏற்பாடுகளை ஐ.நா செய்து கொள்ளலாம் என்று தெளிவாக கூறுகிறது. இதன் காரணமாக ஐ.நா நூற்றுக்கும் மேற்பட்ட அரசு-சாரா நிறுவனங்களைக் கொண்டு பிரச்சனைக்குரிய பகுதிகளில் மனிதநேயப் பணிகளை மேற்கொள்ள முடிகிறது. உதாரணமாக ஐ.நாவின் தூதுக்குழுவானது போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினோவிற்கிடையே 1995-2002 ஆம் ஆண்டுகளில் செயல்பட்டதைக் கூறலாம். 32 அரசு-சாரா அமைப்புகள், ஐ.நா பொதுச்செயலருக்கு ஒரு திறந்த மடல் ஒன்றை 2007 ஆம் ஆண்டு எழுதினர். அதில் ஐ.நா-வின் அமைதிக்காக்கும் படையை போர்பதற்றம் சூழ்ந்த தார்பர் பகுதிக்குள் அனுப்ப அனுமதி மறுக்கும் சூடானைப் பணிய வைக்க கோரியிருந்தனர்.

பொருளாதார மற்றும் சமூகக் குழுவானது (ECOSOC) ஐ.நா-வின் குடும்ப அமைப்பாக ஐ.நா-வின் பொருளாதார மற்றும் சமூகப் பணிகளை ஒருங்கிணைக்கிறது. இதன் முக்கியப் பணி, வளர்ச்சிக்கான சர்வதேச ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதாகும். எவ்வாறு பாதுகாப்புச் சபையானது ராணுவ பாதுகாப்பை வழங்குகிறதோ அதேபோல பொருளாதார மற்றும் சமூக குழுவானது (ECOSOC) பொருளாதாரப் பாதுகாப்பை வழங்குகிறது. இருந்தபோதும் 1930-ல் உலகப் பொருளாதார மந்தநிலையின் காரணமாக இரண்டாம் உலகப்போர் ஏற்பட்டதை எளிதாக எடுத்துக் கொள்ளஐ.நா-வின்சாசனத்தைவரைந்தவர்கள் கருதவில்லை . பொருளாதாரம் மற்றும் சமூக குழுவானது ஐ.நா-வின் அமைப்பு, ஐ.நா-வின் எண்ணிடலங்கா வெளியுறவுப் பணிகள் மற்றும் மண்டலக் குழுக்களுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைந்த அதிகாரங்களைக் கொண்ட அமைப்பாகும். மனித உரிமைக்கான குழுவானது உலக அளவில் மனித உரிமைகளை பாதுகாப்பது மற்றும் கண்காணிப்பது போன்ற பணிகளை செய்கிறது. பிற அமைப்புகள் சமூக வளர்ச்சியை மையப்படுத்தும் விதமாக பெண்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, குற்றத்தடுப்பு மற்றும் போதை மருந்து ஒழிப்பு போன்ற பணிகளை மேற்கொள்கின்றன. இருந்தபோதும் பொருளாதார மற்றும் சமூக குழுவின் நோக்கம் கானல் நீராகவே இருக்கிறது. உண்மையில் உலகப் பொருளாதார அதிகாரமானது மூன்று சகோதரிகள் அமைப்புகள் என்ற அமைப்புகளால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அவை;

அ) உலக வங்கி 

ஆ) சர்வதேச நிதி நிறுவனம் 

இ) உலக வர்த்தக கழகம்


Tags : International Organisations சர்வதேச அமைப்புகள்.
12th Political Science : Chapter 11 : International Organisations : The United Nations International Organisations in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 11 : சர்வதேச அமைப்புகள் : ஐக்கிய நாடுகள் சபை - சர்வதேச அமைப்புகள் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 11 : சர்வதேச அமைப்புகள்