Home | 11 ஆம் வகுப்பு | 11வது வரலாறு | தமிழகத்துக்கும் ரோமுக்கும் இடையிலான வணிகம்

மௌரியருக்குப் பிந்தைய காலம் - வரலாறு - தமிழகத்துக்கும் ரோமுக்கும் இடையிலான வணிகம் | 11th History : Chapter 6 : Polity and Society in Post-Mauryan Period

   Posted On :  18.05.2022 05:30 am

11 வது வகுப்பு வரலாறு : அலகு 6 : மௌரியருக்குப் பிந்தைய அரசியல் அமைப்பும் சமூகமும்

தமிழகத்துக்கும் ரோமுக்கும் இடையிலான வணிகம்

ரோம் ஒரு குடியரசாக இருந்தபோதே ரோமுக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையிலான வணிகம் செழித்திருந்தது.

தமிழகத்துக்கும் ரோமுக்கும் இடையிலான வணிகம்

ரோம் ஒரு குடியரசாக இருந்தபோதே ரோமுக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையிலான வணிகம் செழித்திருந்தது. அக்காலத்தைச் சேர்ந்த ரோமானிய நாணயங்களும் கலைப் பொருள்களும், “இந்தோ - ரோமானிய வணிக நிலையம்என்று கூறப்பட்டு வந்த, புதுச்சேரிக்கு அருகேயுள்ள அரிக்கமேட்டில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. பொது ஆண்டு முதல் நூற்றாண்டுக்கு முன்னர் ரோமானியக் கப்பல்கள், இந்தியாவின் மேற்குக் கரையைத் தாண்டிக் குமரி முனையைச் சுற்றிக்கொண்டு பயணப்பட முயலவில்லை. எனவே, மேற்குக் கரையிலிருந்த துறைமுகங்களே இவ்வணிகத்தில் ஈடுபட்ட முக்கியமான துறைமுகங்களாக இருந்தன. மேற்குக் கரையிலிருந்து , ரோமானிய வணிகர்கள் நிலவழியே பாலக்காடு கணவாயைக் கடந்து கிழக்கேயுள்ள உற்பத்தி மையங்களுக்கு வந்தனர். கொடுமணல் (ஈரோடு), படியூர் (திருப்பூர்), வாணியம்பாடி (வேலூர்) ஆகிய இடங்களில் ரோம் நாட்டில் அதிக தேவையில் இருந்த ஒரு நவரத்தினக் கல்லான கோமேதகம் கிடைக்கிற சுரங்கங்களிருந்தன. மேலும், ஈரோடு அருகேயுள்ள சென்னிமலையில், உற்பத்தி செய்யப்பட்ட இரும்பும் எஃகும் ரோமாபுரிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. (உருக்காலை மற்றும் உருக்கு எச்சங்கள் இங்கே அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.) இதனால்தான் முற்பட்ட காலத்திய ரோமானிய நாணயங்கள், கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கரூர் மாவட்டங்களில் அதிக அளவில் கிடைப்பதைக் காண்கிறோம்.

பொ.. முதல் நூற்றாண்டின் முடிவில், ரோமானியக் கப்பல்கள் தமிழகத்தின் கோரமண்டல் [சோழ மண்டலம் என்பதன் திரிபு] எனப்படும் கிழக்குக் கடற்கரையிலுள்ள துறைமுகங்களுக்குப் பயணிக்கத் தொடங்கின. மேலும் இந்தத் துறைமுகங்களில் பலவும் பெரிப்பிளஸ் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. மேற்குக் கடற்கரையில் அமைந்திருந்த முக்கியத் துறைமுகங்கள் நவுரா (கண்ணனூர்), தொண்டி (பொன்னானி) ஆகியனவாகும். இவை சேர மன்னர்களால் ஆளப்பட்ட தமிழ் நிலப்பரப்பின் வடக்கு எல்லையில் அமைந்திருந்ததாகச் சொல்லப்பட்டது. முசிறி அல்லது முசிரிஸ் என்பது மேலும் தெற்கே அமைந்திருந்த ஒரு முக்கியத் துறைமுகமாகும். இது, பாரம்பரியமாகக் கொடுங்களூர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அண்மையில் முசிறியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வு, இத்துறைமுகம், ஒரு சில கிலோமீட்டர்கள் தூரத்தில் உள்ள பட்டணம் என்னும் ஊரில் இருந்திருக்க வேண்டும் என்று கூறுகிறது. அநேகமாக மேற்குக் கடற்கரையில் இருந்த துறைமுகங்களில் மிகவும் பரபரப்பான வணிக மையம் முசிறியாகும். முசிறியைச் சேர்ந்த ஒரு வணிகருக்கும் அலெக்சாண்ட்ரியாவைச் சேர்ந்த ஒரு வணிகருக்கும் இடையிலான வணிக ஒப்பந்தம் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. கோரைப்புல் தாளில் எழுதப்பட்ட அந்த ஒப்பந்தம், தனி வணிகர்களாலும்கூடப் பெருமளவிலான சரக்குகள் கப்பலில் கொண்டு செல்லப்பட்டதைச் சுட்டிக்காட்டுகிறது. சங்கப் பாடல்களின்படி முசிறி நகரம் இரண்டு வணிகச் சுற்றுகளின் மையமாக இருந்துள்ளது. நாட்டின் உள்பகுதிகளிலிருந்து அரிசியை ஏற்றி வந்த படகுகள், திரும்பிச் செல்கையில் மீன்களை ஏற்றிச் சென்றன; இது, அடிப்படையான நுகர்வுப் பொருள்களின் வணிகத்தில் பண்டமாற்று முறை பின்பற்றப்பட்டதைச் சுட்டுகிறது. அதே நேரத்தில், சந்தைக்குக் கொண்டுவரப்பட்ட கருமிளகு மூட்டைகள், கப்பலில் வந்த தங்கத்திற்குப் பண்டமாற்று செய்துகொள்ளப்பட்டு, பின் அத்தங்கம் படகுகளில் கடற்கரைக்குக் கொண்டு செல்லப்பட்டன.


இந்தியாவிலிருந்து ரோமுக்குச் சென்ற கப்பல்கள், மிளகு, அதிக அளவில் முத்துக்கள், தந்தம், பட்டுத் துணி, செல்வமிக்க ரோமானியர்களிடையே தனிப் பயன்பாட்டுக்கென மிகுதியாக தேவைப்பட்ட ஒருவகை நறுமணத் தைலமான கங்கைப் பகுதியிலிருந்து தருவிக்கப்பட்ட விளாமிச்சை வேர்த் தைலம், இலவங்கப் பட்டை மர இலையான தாளிசபத்திரி எனும் நறுமணப் பொருள், நீலக்கல், கோமேதகம், வைரம், ஆமை ஓடு ஆகியவற்றைச் சுமந்து சென்றன. ரோமானியக் கப்பல்கள் சோழமண்டலக் கடற்கரையுடன் வணிகத்தைத் தொடங்கியதும், இந்தப் பகுதியின் நேர்த்தியான பருத்தித் துணிகளும்கூட முக்கியமான ஏற்றுமதிப் பண்டமாயின.ரோமிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முக்கியமான பொருள்கள்: நாணயங்கள், புஷ்பராகக் கல், அஞ்சனம், பவழம், கச்சா கண்ணாடி, தாமிரம், தகரம், ஈயம், மது வகைகள் ஆகியனவாகும். தமிழ்ப் பகுதியிலிருந்து ஏற்றுமதியான பொருள்களின் மதிப்பு, ரோமிலிருந்து இறக்குமதியான பொருள்களின் மதிப்பைக் காட்டிலும் மிக அதிகம் என்பதோடு, பொ.. முதல் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில், பேரரசர் டைபீரியஸ் ஆட்சியின் போது வணிகத்தின் அளவு உச்சத்தை எட்டியது. அதிகரித்துவந்த வணிகச் சமமின்மையை நாணயங்களையும் வெள்ளியையும் ஏற்றுமதி செய்வதன் மூலம் சமப்படுத்துவது கவலைக்குரிய ஒரு விசயமாயிற்று. ஒவ்வோராண்டும் இந்தியாவுடனான வணிகத்தால் ரோமாபுரிக்கு 55 மில்லியன் செஸ்டர் செஸ் (பண்டைய ரோமானியப் பணம்) இழப்பு ஏற்பட்டது என்றொரு புகார் எழுந்தது. இறுதியாக, பேரரசர் வெஸ்பேசியன் ரோம் நாட்டுச் செல்வ வகுப்பினரின் ஆடம்பரப் பொருள் நுகர்வைத் தடை செய்து சட்டமியற்றினார்; அதையடுத்து இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை ஒப்பீட்டளவில் குறைந்த மதிப்புடைய பண்டங்களாக பருத்தித் துணிகள், மிளகு ஆகியவை மட்டுமே என்றாயிற்று.

பாரம்பரியத் தரை வழிப்பாதையான பட்டுப் பாதை வழி வணிகம் மேற்கொள்வது ஆபத்தானதாக ஆகிவிட்டதால் வணிகப் பாணியில் மேலும் ஒரு மாறுதல் தோன்றியது. சீனாவிலிருந்து பட்டுத் துணியும் நூலும் கடல் வழியே சோழமண்டல துறைமுகங்களுக்குக் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து அவை மீண்டும் கப்பல்களில் ஏற்றப்பட்டு ரோமுக்கு அனுப்பப்பட்டன. தென் கிழக்கு ஆசிய நாடுகள், தூர கிழக்கு ஆசிய நாடுகளோடான தமிழ்ப் பகுதியின் வணிக உறவுகள் குறித்து கிடைக்கும் தகவல்கள் மிகச் சொற்பமே. இருப்பினும் ஆமை ஓடுகள் (ரோமுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட முக்கியமான பொருள்), இந்தியப் பெருங்கடலில் மலேயாவுக்கு அருகிலுள்ள தீவுகளிலிருந்து பெறப்பட்டது. அதே நேரத்தில், சீனத்திலிருந்து பட்டு இறக்குமதியானது. ஏறக்குறைய தமிழ் நாட்டின் நீட்சியாகத் தமிழ் இலக்கியங்களில் சித்தரிக்கப்படும் ஜாவா மற்றும் இலங்கையுடன் நிரந்தரத் தொடர்பும் இருந்தது. அநேகமாக பௌத்த மதம் இணைப்புச் சங்கிலியாக இருந்து, இந்த நாடுகளை இணைத்திருக்க வேண்டும்.

அயல்நாட்டு வணிகர்கள் (யவனர்)

கடல் கடந்த வணிகம், கப்பல் போக்குவரத்து ஆகியவற்றின் விரிவாக்கம் அயல்நாடுகளின் வணிகர்களையும் கடலோடிகளையும் தமிழ்ப் பகுதிக்கு அழைத்து வந்தது. பருவக் காற்றுகளின் காலமுறை இயல்பு, மற்றும் நடப்பிலிருந்த தொழில் நுட்பங்களின் இயல்புகள், நீண்ட கடற்பயணங்கள், ஆகியவை வணிகம் செய்யச் சென்ற நாடுகளில் நெடுநாள்கள் தங்கியிருப்பதை அவசியப்படுத்தின. இந்த அயல்நாட்டு வணிகர்களின் இருப்பைத் தமிழ்ச் சமூகம் எதிர்கொண்ட விதத்தில் சுவாரஸ்யமான செய்திகளைக் காண்கிறோம். சோழமண்டலக் கடற்கரையில் இருந்த மிக முக்கியமான துறைமுகம் புகார் (பூம்புகார்) ஆகும். இங்கே யவன வணிகர்கள், துறைமுகப் பகுதியில் குறிப்பாக அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த குடியிருப்புப் பகுதிகளில் வாழ்ந்தனர். அவர்கள், சுதந்திரமாக வணிகம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். தமிழக மக்களால் இவர்கள் வெளியாட்களாகவும், காட்டுமிராண்டிகளாகவும், கடினமாக ஒலிக்கின்ற ஒருமொழியைப் பேசுபவர்களாகவும் கருதப்பட்டனர். இதனால் அவர்களுடன் தமிழ்ப்பகுதி மக்கள் தயக்கத்துடன் பழகினர்.

வணிகர்களுடன் பிற யவனர்களும் வந்தனர். மதுரையிலிருந்த கோட்டை, பெரிய வாள்கள் தாங்கிய யவனர்களால் பாதுகாக்கப்பட்டது. யவன உலோகப் பணியாளர்களையும் மரவேலை செய்பவர்களையும் பற்றிய குறிப்புகளும் உள்ளன; அநேகமாக, அவர்களது கண்கள் சாம்பல் அல்லது நீல நிறத்தில் இருந்ததால் வன்கண் யவனர் எனச் சுட்டப்பட்டுள்ளனர். இச்சொல், கிழக்கத்திய மத்திய தரைக் கடல் பகுதிகளிலிருந்து வருகை தந்த அனைவரையும் குறிக்கிற ஒரு பொதுப் பெயராகிப்போனது. யவனர் என்ற சொல்லுக்கு கிரேக்கர்கள் என்ற பொருள் இருப்பதினால் மட்டுமே இவர்கள் அனைவரும் கிரேக்கர்கள் என முடிவு செய்ய இயலாது.

வணிகமும் பொருளாதாரமும்: விரிவான விவரங்கள்

இக்காலகட்டத்தில் வணிகம் மிகப் பெருமளவில் விரிவடைந்தது என்பது உண்மை . இத்தகைய சாதனையானது, பொருளாதார உற்பத்தியின் அடித்தளத்தில் ஏற்பட்ட முக்கிய மாற்றங்களின் காரணமாகவே எட்டப்பட்டிருக்க வேண்டும். கோமேதகம் போன்ற வெட்டியெடுக்கப்பட்ட நவரத்தினக் கற்கள் போன்ற முதல்நிலை உற்பத்திப் பொருள்கள் விஷயத்தில் கூட, அதிகரித்த தேவை சுரங்கத்தில் அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்கள் வேலை செய்வதையும், அதிக கருவிகளையும் அதிக மூலதனத்தையும் ஈடுபடுத்தியிருக்க வேண்டும். துணிகளைப் பொறுத்தமட்டில், நெசவுச் செயல்பாட்டிலும் நெசவுக்கான நூலைத் தயாரிக்கிற நூற்பு போன்ற துணைச் செயல்பாடுகளிலும், மேலும் ஒருக்கால் கச்சாப்பொருளின் விநியோகத்தை அதிகரிப்பதற்காக அதிக பருத்தியை விளைவிப்பதிலும் ஒரு கணிசமான பெருக்கம் இருந்திருக்கவேண்டும். வளர்ந்து வருகிற வணிகம் இவ்வாறாக ஒரு கணிசமான அளவில் பொருளாதார விரிவாக்கத்துக்கு இட்டுச்சென்றிருக்கும்.

வணிகம் வளர்ந்த நிலையில் வணிகர்கள் எண்ணிக்கையில் பெருகி முக்கியமானோராயும் ஆயினர். பெரு நகரங்களின் அங்காடிகளில் உணவு தானியங்கள், துணி, தங்கம், நகைகள் போன்றவற்றில் குறிப்பான ஒரு பொருளை மட்டுமே வணிகம் செய்வோர் இருந்தனர். வணிகர்கள் கடல் கடந்த வணிகத்தில் ஈடுபட்டனர். அதைப் போலவே வெளிநாடுகளோடு தரைவழியாகவும் வணிகம் செய்தனர். நிறுவனமயப்பட்ட ஏற்பாடுகளால் வணிகச் சுற்றுகள் மேலும் சிறப்புத்தன்மை கொண்டவை ஆயின. இவ்வளர்ச்சி விரிவடைந்துவரும் வணிக நடவடிக்கைகளுக்கு உதவியது.

வணிகத்தில் பணம் எந்த அளவுக்குப் பயன்படுத்தப்பட்டது என்ற மிக முக்கியமான ஒரு வினா எழுகிறது. இதற்கு விடையளிப்பது கடினம். நவீனத்துக்கு முந்தைய அனைத்துப் பொருளாதாரங்களிலும் பரிமாற்றத்துக்கு ஒரு முக்கியமான ஊடகமாகப் பண்டமாற்றுமுறை விளங்கியிருக்கிறது. எடுத்துக்காட்டாக, தமிழ்ப் பகுதியைச் சேர்ந்த உப்பு வணிகர்கள், கிழக்கு உட்புறக் கடற்கரைப் பகுதிகளிலிருந்துத் தங்களின் வண்டிகளில் உப்பை ஏற்றிக்கொண்டு, குழுக்களாகச் சேர்ந்து சென்றனர். அவர்கள் தங்களின் உப்பைப் பணத்துக்கு விற்காமல் ஏனைய பண்டங்களுக்காகவும் இதரத் தேவைகளுக்காகவும் பண்டமாற்று செய்து கொண்டிருக்கவே வாய்ப்பு அதிகம். இருப்பினும், தரை வழி, கடல் வழி வணிகம் ஆகியவற்றின் அளவும், கூடவே நகர அங்காடிகள் குறித்து இலக்கியத்திலுள்ள சித்தரிப்புகளில் பணம்தான் பரிமாற்றத்துக்கான முக்கிய ஊடகமாக இருந்தது என்பதை உணர்த்துகின்றன.

இந்த அனுமானத்தைப் பல்வேறு மையங்களிலும் கண்டெடுக்கப்பட்டிருக்கிற ரோமானிய நாணயங்கள் மெய்ப்பிக்கின்றன. சுழற்சியில் உள்ள பணஅளவை அதிகரிப்பதற்காக உள் நாட்டிலேயே போலி ரோமானிய நாணயங்களும் கூட அச்சடிக்கப்பட்டன. அமராவதி ஆற்றுப் படுகையில் பெரிய அளவுகளில் சேர நாணயங்களும் கூடக் கண்டெடுக்கப்பட்டுள்ளன. வட இந்தியாவில் மிகப் பெரிய அளவுகளில் இந்தோ - கிரேக்க , குஷாண நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளமை, பணமயமாக்கத்தின் அளவு குறித்து அதே போன்ற ஒரு முடிவுக்கே இட்டுச்செல்லும். இவையனைத்தும், பண்டைய காலத்தில் பரிமாற்ற ஊடகமாகப் பணம், கணிசமான அளவுக்குப் பயன்பட்டது என்ற ஊகத்துக்கே இட்டுச்செல்லும்.




முடிவு

இவ்வியலில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நூற்றாண்டுகள் அரசியல் உறுதித்தன்மை நிலவிய காலகட்டமல்ல. கனிஷ்கர் தவிர, வடக்கே படையெடுத்து வந்தவர்கள் கைப்பற்றிய பகுதிகளை ஒருங்கிணைத்து வலுவான பேரரசுகளை நிறுவவில்லை. கனிஷ்கரும்கூட ஒப்பீட்டளவில் ஒரு குறுகிய காலம் மட்டுமே ஆட்சிபுரிந்தார். மேலும் அவரது மரணத்துக்குப் பிறகு அவரது பேரரசு மெதுவாக வீழ்ச்சியுற்றது. தமிழ்ப் பகுதி, ஒரு பேரரசு உருவாவதற்குத் தேவைப்படும் ஒன்றுபடுத்துகிற சக்தியைக் கொண்டிருக்கவில்லை என்பதோடு ஒப்பீட்டளவில் சிறிய அரசாட்சிகளாகவும் மேலும் சிறிய சிற்றரசுகளாகவும்கூடத் துண்டுபட்டிருந்தது. வடக்கு, தெற்கு ஆகிய இரு பகுதிகளுக்கும் இக்காலத்திய மிக முக்கியமான வளர்ச்சி என்பது மாபெரும் வணிக விரிவாக்கமாகும். வடக்கிலிருந்து வணிக உறவுகள், கிழக்கே சீனா வரையிலும், மேற்கே மத்திய தரைக்கடல் உலகம் வரைக்கும் விரிந்திருந்தது. தெற்குப் பகுதியைப் பொறுத்த வரை, உள்நாட்டு வணிகம் மற்றும் பண்டமாற்று சுழற்சிகளுடன் அயல்நாடுகளுடனான வணிகம் மேற்கு ஆசிய நாடுகள் வரையிலும், கிழக்கில் சீனா வரையிலும் பெருமளவிற்கு வளர்ந்திருந்தது. இதன்விளைவினைக் கணிசமான அளவுக்குப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட வளர்ச்சியிலும் அதிகரித்த செழிப்பிலும் காணலாம். தொல்லியல் அகழ்வாய்வுகளும் சங்க இலக்கியங்களில் நகரங்கள் குறித்த வர்ணணைகளும் இதை உறுதிப்படுத்துகின்றன.

Tags : Post-Mauryan Period | History மௌரியருக்குப் பிந்தைய காலம் - வரலாறு.
11th History : Chapter 6 : Polity and Society in Post-Mauryan Period : Trade Between Tamizhagam and Rome Post-Mauryan Period | History in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வகுப்பு வரலாறு : அலகு 6 : மௌரியருக்குப் பிந்தைய அரசியல் அமைப்பும் சமூகமும் : தமிழகத்துக்கும் ரோமுக்கும் இடையிலான வணிகம் - மௌரியருக்குப் பிந்தைய காலம் - வரலாறு : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வகுப்பு வரலாறு : அலகு 6 : மௌரியருக்குப் பிந்தைய அரசியல் அமைப்பும் சமூகமும்