பணவியல் பொருளியல் - வணிகச் சுழற்சி | 12th Economics : Chapter 5 : Monetary Economics

   Posted On :  15.03.2022 07:18 pm

12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 5 : பணவியல் பொருளியல்

வணிகச் சுழற்சி

1. வணிகச் சுழற்ச்சியின் பொருள் 2. வாணிபச் சுழற்ச்சியின் கட்டங்கள்

வணிகச் சுழற்சி (Business Cycle)

ஒரு முதலாளித்துவ அமைப்பு முறையில் பொருளாதார நடவடிக்கைகள் ஏற்ற இறக்கங்களுடனேயே இருக்கும். சீரான கால இடைவெளியில் அமையும் இவ்வகை ஏற்ற இறக்கங்கள் வணிகச் சுழற்ச்சி அல்லது வியாபாரச் சுழற்சி (Trade Cycle) அல்லது தொழில் ஏற்ற இறக்கங்கள் (Industrial Fluctuations) என்றழைக்கப்படுகிறது



1. வணிகச் சுழற்ச்சியின் பொருள்

வேலைவாய்ப்பு, உற்பத்தி, வருமானம் போன்றவற்றை உள்ளடக்கிய ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கைளில் (Aggregate economic activities) ஏற்படும் அலைவுகளே வணிகச் சுழற்ச்சி என குறிப்பிடப்படுகிறது. ஒரு நாட்டின் பொருளாதார நடவடிக்கைளுக்கு ஊக்கமளிக்கும் கூறுகளில் ஏற்படும் உள்ளார்ந்த சுருக்கம் மற்றும் விரிவாக்கத்தினால் வணிகச் சுழற்ச்சி ஏற்படுகிறது. இச்சுழற்ச்சிகளின் பண்புகளாவன: குறிப்பிட்ட கால இடைவெளியில் வருபவை, மாறுபட்ட தீவிரத் தன்மை கொண்டவை, மற்றும் அதன் செயலாக்க எல்லைகள் மாறுபட்டவை.

இலக்கணம்

"உயர்கின்ற விலைகளையும், குறைந்த வேலையற்றோர் சதவிகிதத்தையும் கொண்ட நல்ல வாணிபக் காலங்களையும்; குறைகின்ற விலைகளையும், மிகுகின்ற வேலையில்லாத் திண்டாட்ட சதவிகிதத்தையும் கொண்ட கெட்ட வாணிபக் காலங்களையும் உள்ளடக்கியது வாணிபச் சூழல் ஆகும்"

- J.M. கீன்ஸ்



2. வாணிபச் சுழற்ச்சியின் கட்டங்கள்


வணிகச் சுழற்ச்சியினை உற்று நோக்கும்பொழுது அதனுடைய நான்கு கட்டங்கள் வெளிப்படும். அவைகள் முறையே j) பூரிப்பு , ii) பின்னிறக்கம், ii) மந்தம், மற்றும் iv) மீட்சி எனப்படுகின்றன. வணிகச் சுழற்ச்சியின் பல்வேறு கட்டங்களை வரைபடம் 5.3 தெளிவாகக் காட்டுகின்றது.

i) பூரிப்பு கட்டம் (Boom)

நீண்டகால இயல்பான வளர்ச்சி நிலைக்கு மேல் பொருளாதார நடடிவக்கைகள் உயர்ந்து முழு வேலைவாய்ப்பு நிலையை தாண்டுவது வணிகச் சுழலின் வளர்ச்சிக் கட்டம் எனப்படுகிறது. இக்காலகட்டத்தில பொருள் உற்பத்தி, பணக்கூலி, லாபம், மற்றும் வட்டி விகிதங்கள் உயரும். வங்கிக் கடன் தேவைகள் உயரும். பொதுவாக அனைத்து தரப்பினரிடமும் நம்பிக்கைகள் உயரும். வளர்ச்சிக் கட்டத்தின் உச்சத்தில் பூரிப்புநிலை (Boom) தோன்றும். பூரிப்பு நிலையில் அனைத்து பொருளாதார நடவடிக்கைகளும் உச்சநிலையில் இருக்கும்.

ii) பின்னிறக்கம் (Recession)

வளர்ச்சியின் உச்சத்தில் பூரிப்பை எய்திய பொருளியல் நடவடிக்கைகள் அடுத்ததாக கீழ்நோக்கி திரும்புகின்றன. பூரிப்பில் வெடிப்பு நிலை ஏற்பட்டு நட்டிவக்கைகள் பின்னோக்கி திரும்புவதை பின்னிறக்கம் என்கிறோம். இக்கட்டத்தில் உற்பத்தி, பணக் கூலி, லாபம் மற்றும் வட்டி விகிதம் ஆகியன குறையத் துவங்கும். நிறுவனங்கள் தோல்வியடைய துவங்கும். வணிகர்கள் தாங்கள் அகலக்கால் வைத்து வணிகத்தை விரிவாக்கிவிட்டதை உணர்வார்கள். நம்பிக்கைகள் இருந்த இடத்தில் அவநம்பிக்கைள் தோன்ற ஆரம்பிக்கும். இதன் காரணமாக முதலீட்டை பெருமளவுக்கு குறைக்க ஆரம்பிப்பார்கள். தொடர்ந்து உற்பத்தி, வருமானம் ஆகியன குறைந்து வரும். பங்குச் சந்தையில் விலை வீழ்ச்சியின் காரணமாக பெரும் அச்சம் உருவாகும். வணிக நட்டிவக்கைகள் சுணக்கமடையும். மக்களின் நீர்மைவிருப்பம் அதிகரித்து பணத்தை ரொக்கமாக கையில் வைத்துக்கொள்ள விரும்புவதால் பணச்சந்தை நடவடிக்கைகள் சுருங்க ஆரம்பிக்கும்.

iii) மந்தம் (Depression)

வணிகசுழற்ச்சியின் மூன்றாவது கட்டமான மந்தகாலத்தில் பொருளாதார நடவடிக்கைகள் இயல்புநிலைக்கு கீழ் மிகத்தீவிரமாக குறைந்துவரும். நிறுவனங்கள் நட்டமடைவதும், மூடப்படுவதும் பொது இயல்புகளாக இருப்பதுடன் வேலைவாய்ப்பின்மையையும் ஏற்படுத்தும். வட்டி, இலாபம் மற்றும் கூலி ஆகியன மிகக் குறைந்த அளவில் இருக்கும். விவசாயிகளும், கூலிவேலை செய்வோரும் அதிக பாதிப்புக்குள்ளாவார்கள். வணிகர்களுக்கு கடன் வழங்குவதில் வங்கிகள் தயக்கம் காட்டும். வணிகச் சுழற்ச்சியின் மிகமோசமான கட்டம் மந்தம் ஆகும். ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் வாங்கும் சக்தி இல்லாததால் கிடங்குகளில் தேக்கமடைய செய்யும். மந்தத்தின் கீழ் நிலை "தொட்டி" (Trough) என்றழைக்கப்படுகிறது. எவ்வாறு ஒருவர் மிக ஆழமான தொட்டிக்குள் தவறி விழுந்துவிட்டால் பிறர் உதவியின்றி எளிதில் அவரால் மீள முடியாதோ, அதுபோல பொருளாதார நடடிவக்கைள் மந்த நிலையின் ஆழத்தில் விழுந்துவிட்டால், வெளியார் உதவியின்றி தானே மீள இயலாத நிலையை குறிக்க "தொட்டி" என்ற கருத்து பயன்படுத்தப்படுகிறது.

iv) மீட்சி (Recovery or Revival)

மந்த நிலைக்குப்பின் மீட்சி இடம்பெறுகிறது. இது, மந்தத்திலிருந்து பொருளாதார நடடிவக்கைள் மேல்நோக்கி திரும்பும் நிகழ்வாகும். முதலில், மூலதனபொருட்களுக்கான தேவை மீட்சி பெறுவதில் துவங்குகிறது. அரசால் செய்யப்படும் தன்னிச்சை முதலீடுகள் (Autonomous Investments) பொருளாதார நடவடிக்கைகளை மேல்நோக்கி திரும்ப ஊக்கமளிக்கின்றன. அம்முதலீடுகள் மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்புகளினால் ஏற்படும் வருமானம் பொருட்களுக்கான தேவையை மெதுவாக உயர்த்துகிறது. கிடங்குகளில் தேக்கமடைந்த பொருட்கள் காலியாக துவங்குகிறது. இதனால், தனியார் முதலீடுகள் மெதுவாக அதிகரித்து, பொருளாதார நடடிவக்கைகளான வேலைவாய்ப்பு, உற்பத்தி, வருவாய், கூலி, லாபம் ஆகியன மீட்சி பெறுகின்றன.




தொகுப்புரை

பணம் மத்திய வங்கியாலும் நாணயங்கள் மத்திய அரசாலும் வெளியிடப்படுகின்றது. வங்கி வைப்புகள் வணிக, கூட்டுறவு வங்கிகளால் ஏற்படுத்தப்படுகின்றது. பணத்தின் தேவையானது பல்வேறு காரணிகளாகிய வருமானம், விலை மட்டம், வட்டி வீதம் போன்றவைகளால் தீர்மானிக்கப்படுகின்றது. பணத்தின் தேவையானது பல்வேறு காரணிகளாகிய வருமானம். விலை மட்டம். வட்டிவீதம் போன்றவைகளால் தீர்மானிக்கப்படுகிறது.




அருஞ்சொற்பொருள்



* பண்டமாற்று முறை: பணம் இல்லாமல் ஒரு பொருள் அல்லது பணியை கொடுத்து மற்றொரு பொருள் அல்லது பணியை பெற்றுக்கொள்ளும் பரிவர்த்தனையில் ஈடுபடுவது

* பணம்: பரிவர்த்தனைகளில் பொது ஏற்புத்தன்மை கொண்ட ஒரு இடையீட்டுக் கருவி

* பணஅளிப்பு: ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் பொருளாதாரத்தில் இருக்கும் பண அளவு(M).

* பணவீக்கம்: தொடர்ச்சியான விலைமட்ட உயர்வு

* பண வாட்டம்: சராசரி விலைமட்டம் குறைந்து வேலைவாய்ப்பின்மை நிலவும் நிலை; பணவீக்கத்திற்கு எதிரானது

* மீள்பணவீக்கம்: வேலைவாய்ப்பினை பாதிக்காத வகையில் கடன்களை கட்டுப்படுத்துவதன் மூலம் பணவீக்கத்தை குறைப்பதாகும்

* தேக்கவீக்கம்: பொருளாதார வளர்ச்சியில் தேக்க நிலையும், வேலை வாய்ப்பின்மையும், அதிக அளவிலான பணவீக்கமும் ஒன்றிணைந்த சூழ்நிலை

* வணிகச் சூழல் (அல்லது) வியாபாரச் சூழல்: குறிப்பிட்ட காலகட்டத்திற்கு ஒருமுறை நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள்

* மீட்சி: மந்த நிலையிலிருந்த பொருளாதார நட்டிவக்கைகள் மேல்நோக்கி திரும்பும் நிகழ்வு

* குறுகிய பணம்: M1 மற்றும் M2 ஆகிய இரண்டும் சேர்ந்தது.

Tags : Monetary Economics பணவியல் பொருளியல்.
12th Economics : Chapter 5 : Monetary Economics : Trade Cycle Monetary Economics in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 5 : பணவியல் பொருளியல் : வணிகச் சுழற்சி - பணவியல் பொருளியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 5 : பணவியல் பொருளியல்