பொருளியல் - வரிகளின் வகைகள் | 10th Social Science : Economics : Chapter 4 : Government and Taxes

   Posted On :  27.07.2022 05:39 am

10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு - 4 : அரசாங்கமும் வரிகளும்

வரிகளின் வகைகள்

1. நேர்முக வரிகள், வருமான வரி, நிறுவனவரி, சொத்து வரி (அ) செல்வ வரி 2. மறைமுக வரிகள், பொழுதுபோக்கு வரி, சுங்கத் தீர்வை (அல்லது) கலால் வரி, பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (GST - Goods and Service Tax)

வரிகளின் வகைகள்

 

நேர்முக வரிகள்

நேர்முக வரி என்பது ஒரு தனிநபர் அல்லது நிறுவனத்தின் மீது நேரடியாக விதிக்கப்படுவதாகும். இவ்வரியை மற்றவர் மீது மாற்ற முடியாது. பேராசிரியர் ஜே.எஸ். மில்லின் கருத்துப்படி, நேர்முக வரி என்பது யார் மீது வரி விதிக்கப்பட்டதோ அவரே அவ்வரியை செலுத்துவதாகும். வரி செலுத்துபவரே வரிச்சுமையை ஏற்க வேண்டும்". சில நேர்முக வரிகள் : வருமான வரி, சொத்து வரி மற்றும் நிறுவன வரி ஆகியனவாகும்.

உங்களுக்குத் தெரியுமா?

இந்தியாவில் முதன்முதலாக வருமானவரி 1860ஆம் ஆண்டு சர் ஜேம்ஸ் வில்சன் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. 1857ஆம் ஆண்டு கலகத்தின் மூலம் ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்ட அரசாங்கத்தின் மூலம் போடப்பட்ட ஆணையே வரி விதிப்பாகும். 

 

வருமான வரி

வருமான வரி இந்தியாவில் விதிக்கப்படுகின்ற நேர்முக வரி முறையில் மிக முக்கியமான வரியாகும். இவ்வரி தனிநபர் பெறுகின்ற வருமானத்தின் அடிப்படையில் விதிக்கப்படுகின்றது. இவ்வரி வசூலிக்கப்படும் விகிதம் வருமான அளவைப் பொறுத்து மாறுபடக்கூடியதாகும்.

வருமான வரி வலைத்தளத்தின் மூலம் நடப்பு ஆண்டிற்கான வருமான வரி அறிக்கையினை மாணவர்களை அறிந்து கொள்ளக் கூறுதல்.

 

நிறுவனவரி

இந்த வரி தங்கள் பங்குதாரர்களிடமிருந்து தனி நிறுவனங்களாக இருக்கும் நிறுவனங்களுக்கு விதிக்கப்படுகிறது. இது இந்தியாவில் அமைந்துள்ள சிறப்பு உரிமைகளில், மூலதன சொத்துக்களின் விற்பனையிலிருந்து வரும் வட்டி இலாபங்கள், தொழில் நுட்ப சேவைகள் மற்றும் ஈவுத் தொகைகளுக்கான கட்டணம் போன்றவற்றிலிருந்து வசூலிக்கப்படுகிறது. இந்த வரி வெளிநாட்டு நிறுவனங்கள் பெரும் வருமானத்தின் மீது விதிக்கப்படுகிறது.

 



சொத்து வரி (அ) செல்வ வரி

சொத்து வரி (அ) செல்வ வரி என்பது தனது சொத்திலிருந்து பெறப்பட்ட நன்மைகளுக்காக சொத்தின் உரிமையாளருக்கு விதிக்கப்படுகின்ற வரியாகும். ஒவ்வொரு ஆண்டும் சொத்தின் நடப்பு சந்தை மதிப்பின் அடிப்படையில் விதிக்கப்படுகிறது. இவ்வரி தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் மீது விதிக்கப்படும் வரியாகும்.

இந்தியாவில் அரசாங்கத்தினால் மூன்று அடுக்குகள் வரி வசூலிக்கப்படுகிறது. நடுவண் அரசால் எளிதில்வசூலிக்கக்கூடியவரிகள் உள்ளன. இந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து நேரடி வரிகளும் நடுவண் அரசால் வசூலிக்கப்படுகின்றன. பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான வரி நடுவண் மற்றும் மாநில அரசாங்கங்களால் வசூலிக்கப்படுகிறது. சொத்துக்களுக்கான வரி உள்ளூர் அரசாங்கங்களால் வசூலிக்கப்படுகிறது.

இந்தியாவில் நேரடி வரிகளை விட மறைமுக வரி மூலம் அதிக வரி வருவாய் வசூலிக் கப்படுகின்றது. இந்தியாவின் முக்கிய மறைமுக வரிசுங்க வரிமற்றும் பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (GST) ஆகும்.

 

மறைமுக வரிகள்

ஒருவர் மீது விதிக்கப்பட்ட வரிச்சுமை மற்றொருவருக்கு மாற்றப்பட்டால் அது "மறைமுகவரி" எனப்படும். வரி விதிக்கப்பட்டவர் ஒருவர், வரி சுமையை சுமப்பவர் வேறு ஒருவராவார். ஆகையால், மறைமுகவரியில் வரியைச் செலுத்துபவர் வரி சுமையை சுமப்பவர் அல்லர்.

சில மறைமுக வரிகளாவன: முத்திரைத் தாள் வரி , பொழுதுபோக்கு வரி, சுங்கத் தீர்வை மற்றும் பண்டங்கள் மற்றும் பணிகள் (GST) மீதான வரிகளாகும்.

முத்திரைத்தாள் வரி

முத்திரைத்தாள் வரி என்பது அரசாங்க ஆவணங்களான திருமண பதிவு அல்லது சொத்து தொடர்பான ஆவணங்கள் மற்றும் சில ஒப்பந்தப் பத்திரங்கள் போன்றவைகள் மீது விதிக்கப்படுவதாகும்.

பொழுதுபோக்கு வரி

எந்தவொரு பொழுதுபோக்கு மூலங்களாக இருந்தாலும், அதன் மீது அரசாங்கத்தால் விதிக்கப்படுகின்ற வரி பொழுதுபோக்கு வரியாகும். உதாரணமாக திரைப்படங்கள் பார்ப்பதற்காக விதிக்கப்படுகின்ற கட்டணம், பொழுது போக்கு பூங்காக்கள், கண்காட்சிகள், விளையாட்டு அரங்கம், விளையாட்டு நிகழ்ச்சிகள் ஆகியவற்றைப் பார்ப்பதற்காக விதிக்கப்படுகின்ற வரி போன்றவையாகும்.

சுங்கத் தீர்வை (அல்லது) கலால் வரி

சுங்கத் தீர்வை என்பது விற்பனையை விட, உற்பத்தியின் இயக்கத்தில் உள்ள எந்தவொரு உற்பத்திப் பொருட்களின் மீதும் விதிக்கப்படும் வரியாகும். இவ்வரி பொதுவாக விற்பனை வரி போன்ற மறைமுக வரிகளுக்கு கூடுதலாக விதிக்கப்படுகிறது.

 

பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (GST - Goods and Service Tax)

பண்டங்கள் மற்றும் பணிகள் வரி என்பது மறைமுக வரிகளில் ஒன்றாகும். இவ்வரி இந்தியப் பாராளுமன்றத்தில் மார்ச் 29, 2017ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. மேலும் ஜூலை 1, 2017 முதல் அமுல்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதன் குறிக்கோள் "ஒரு நாடு - ஒரு அங்காடி- ஒரு வரி" என்பதாகும். இது மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) போன்று பல முனை வரி இல்லாமல் இது 'ஒரு முனை வரி' ஆகும்.

பண்டங்கள் மற்றும் பணிகள் வரியின் அமைப்பு (GST)

மாநில பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (SGST): (மாநிலத்திற்குள்)

மதிப்புக் கூட்டு வரி (VAT) / விற்பனை வரி, கொள்முதல் வரி, பொழுதுபோக்கு வரி, ஆடம்பர வரி, பரிசுச்சீட்டு வரி, மற்றும் மாநில கூடுதல் கட்டணம் மற்றும் வரிகள்.

 

மத்திய பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (CGST): (மாநிலத்திற்குள்)

மத்திய சுங்கத்தீர்வை, சேவை வரி, ஈடுசெய்வரி, கூடுதல் ஆயத்தீர்வை, கூடுதல் கட்டணம், கல்வி கட்டணம் (இடைநிலைக் கல்வி மற்றும் மேல்நிலைக் கல்வி வரி).

 

ஒருங்கிணைந்த பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (IGST): (மாநிலங்களுக்கு இடையே)

நான்கு முக்கிய GST விகிதங்கள் உள்ளன. (5%, 12%, 18% மற்றும் 28%) காய்கறிகள் மற்றும் உணவு தானியங்கள் போன்ற வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசிய தேவைகளுக்கான அனைத்து பண்டங்களுக்கும் இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன.

 

உங்களுக்குத் தெரியுமா?

1954ஆம் ஆண்டு முதன்முதலில் பண்டங்கள் மற்றும் பணிகள் வரியை அமல்படுத்திய நாடு பிரான்ஸ் ஆகும்.

 



Tags : Economics பொருளியல்.
10th Social Science : Economics : Chapter 4 : Government and Taxes : Types of Taxes Economics in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு - 4 : அரசாங்கமும் வரிகளும் : வரிகளின் வகைகள் - பொருளியல் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு - 4 : அரசாங்கமும் வரிகளும்