Home | 12 ஆம் வகுப்பு | 12வது பொருளாதாரம் | திட்டமிடலின் வகைகள்

பொருளாதாரம் - திட்டமிடலின் வகைகள் | 12th Economics : Chapter 11 : Economics of Development and Planning

   Posted On :  17.03.2022 03:42 am

12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 11 : பொருளாதார மேம்பாடு மற்றும் திட்டமிடல்

திட்டமிடலின் வகைகள்

பொருளாதார முன்னேற்ற இலக்குகளை ஒரு குறிப்பிட்டக்கால வரம்புக்குள் அடைய மேற்கொள்ளப்படும் முயற்சிகளைக் குறிக்கும் செயல்பாடே பொருளாதாரத் திட்டமிடலாகும்.

திட்டமிடலின் வகைகள்


பொருளாதார முன்னேற்ற இலக்குகளை ஒரு குறிப்பிட்டக்கால வரம்புக்குள் அடைய மேற்கொள்ளப்படும் முயற்சிகளைக் குறிக்கும் செயல்பாடே பொருளாதாரத் திட்டமிடலாகும். திட்டமிடல். கோட்பாடு மற்றும் செயல்படுத்தப்படும் விதங்களின் அடிப்படையில் பலவகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

1. மக்களாட்சி மற்றும் சர்வாதிகாரத் திட்டமிடல் (Democratic vs Totalitarian Planning)

திட்டங்களைத் தயாரித்தல் மற்றும் செயல்படுத்துதலில் உள்ள அனைத்து பொருளாதார மேம்பாடு மற்றும் திட்டமிடல் நிலைகளிலும் மக்கள் பங்கெடுத்துக்கொள்ளும் திட்டமிடலே மக்களாட்சித் திட்டமிடல். அரசு, தனியார் மற்றும் பொது மக்களை உள்ளடக்கிய மிகப்பரவலான ஆலோசனைகளை பெற்றுத் தயாரிக்கப்பட்டு, அவர்களாலேயே செயல்படுத்தப்படும் திட்டமிடல் முறையாகும். திட்டக்குழுவினால் தயாரிக்கப்பட்ட திட்ட வழிமுறைகளை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. இதனை அந்நாட்டின் பாரளுமன்றம் ஏற்பகோ அல்லது மறுக்கவோ அல்லது மாற்றியக்கவோ செய்யும்.


சர்வாதிகாரத் திட்டமிடலில் பொருளாதார நடவடிக்கைகள் மத்திய கட்டுப்பாடு மற்றும் வழிகாட்டுதலின் படி ஒரே ஒரு திட்டமாக இருக்கும். நுகர்வு, பரிவர்த்தனை மற்றும் விநியோகம் ஆகிய அனைத்துமே அரசு கட்டுபாட்டிலிருக்கும். திட்டக் குழுவே அதிகாரமிக்க அங்கமாகும். இலக்குகள், செயல் முறைகள், ஒதுக்கீடுகள் மற்றும் செயல்படுத்துதல் ஆகியவை திட்டக் குழுவால் முடிவு செய்யப்படும்.

2. மையப்படுத்தப்பட்ட திட்டமிடல் மற்றும் பரவலாக்கப்பட்ட திட்டமிடல் (Centralized Vs Decentralized Planning)


மையப்படுத்தப்பட்ட திட்டமிடலில், அனைத்து நிலைகளிலும் திட்டம் தொடர்புடைய நடவடிக்கைகள் மையத் திட்டக்குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கும். திட்டக்குழுவே திட்டம் தீட்டுதல், நோக்கங்களை நிர்ணயித்தல், இலக்குகளைக் கண்டறிதல் மற்றும் தீர்மானித்தல் ஆகியவற்றை செய்கிறது. 'மேலிருந்து திட்டமிடல்' என்றும் இதைக் கூறலாம்.

பரவலாக்கப்பட்ட திட்டமிடுதலில் மைய அமைப்புகளின் கட்டுபாடுகளின்றி, உள்ளூர் அமைப்புகள் மற்றும் உள்ளூர் நிறுவனங்கள், திட்டங்களைத் தீட்டுதல், செயல்படுத்துதல் மற்றும் கண்காணித்தல் ஆகியவற்றை செய்யும். எனவே இதை 'கீழிருந்து திட்டமிடல்' எனவும் அழைக்கலாம்.

3. வழிகாட்டும் திட்டமிடல் மற்றும் தூண்டும் திட்டமிடல்

திட்டக்குழு வழிகாட்டுதல் வழங்கி, திட்டம் தயாரித்து மேலும் திட்டத்தை ஆணையிடுதல் மூலம் செயல்படுத்தினால் அது வழிகாட்டுதல் திட்டமிடல் ஆகும். முன்பே முடிவு செய்யப்பட்ட இலக்குகள் மற்றும் முன்னுரிமைகள் அடிப்படையில் திட்டம் செயல்படுத்தப்படும்.

திட்டக்குழு நிர்ணயம் செய்த இலக்குகளை பல்வேறு நிதியியல் மற்றும் பணவியல் வழிமுறைகள் மூலம் ஊக்கங்கள் அளித்து, அதன் நடவடிக்கைகளை மக்களால் மேற்கொள்ளப்படுவதே தூண்டும் திட்டமிடல் என்கிறோம். மானியம் போன்ற சலுகைகள் கொடுத்து ஒரு பொருளை உற்பத்தி செய்ய வைக்க முடியும். தூண்டும் திட்டமிடுதலில் தனிமனித விடுதலையைக் குறைக்காமல் அதே பலனை பெற வைக்கும் தன்மைக் கொண்டது.

4. சுட்டிக்காட்டும் திட்டமிடலும் கட்டாயமானத் திட்ட மிடலும் (Indicative vs Imperative Planning)

கலப்பினப் பொருளாதார நாடுகளுக்கு பொருத்தமான திட்டமிடல் முறையாக "மோனட் திட்டம்" என்ற பெயரில் பிரான்ஸ் நாடானது 1947 லிருந்து 1950 வரை செயல்படுத்தியது. திட்டக்குழு இலக்குகளை அடையும் வழிமுறைகளை குறிப்புரைகளாக தயாரித்தது, தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் தொழிற்சங்கத் தலைவர்கள், நுகர்வோர் குழுக்கள் நிதி நிறுவனங்கள் மற்றும் பிற துறை நிபுணர்களிடம் கலந்து ஆலோசித்து செயல்படுத்தும் திட்டமிடலே சுட்டிக்காட்டும் திட்டமிடல் ஆகும். அரசு பொருளாதார நடவடிக்கைகளை செயல்படுத்த, இலக்குகளை நிர்ணயம் செய்து, அவற்றை தனியார் நிறுவனங்கள் அடைவதற்கு தேவையான வசதிகளை அமைத்துக்கொடுத்து, ஒருங்கிணைக்கும் பணியை மட்டும் மேற்கொள்ளும் வகையில் திட்டமிடல் அமைந்திருக்கும்.

கண்டிப்பானத் திட்டமிடல் முறையில், திட்டம் தயாரித்தல் மற்றும் செயல்படுத்துகளில் அரசு அதிகாரமிக்கது. திட்டம் தயாரித்து முடித்துவிட்டால் எவ்வித தடைகளுமின்றி திட்டங்கள் செயல்படுத்தப்படும். ரஷ்யாவின் அப்போதைய குடியரசுத் தலைவர் ஸ்டாலின் "நமது திட்டம் நமக்கான அறிவுரைகளாகும்" என்பதை பயன்படுத்தினார். அனைத்து வளங்களும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும். இங்கு நுகர்வோர் இறையான்மை இருக்காது. அரசின் கொள்கைகளும் வழிமுறைகளும் மாறாது நிலையாக இருக்கும். சீனாவும், ரஷ்யாவும் இந்த திட்டமுறைகளை கடைப்பிடிக்கும் நாடுகளாகும்.

5. குறுகிய கால, நடுத்தரக் கால மற்றும் நீண்டகாலத் திட்டமிடல்

ஓராண்டில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறுகியகாலத் திட்டங்களாகும். "கட்டுப்படுத்தும் திட்டம்", "ஆண்டுத் திட்டம்" எனவும் அறியப்படுகிறது.

மூன்றிலிருந்து ஏழு ஆண்டு காலத்தில் முடிவடையும் திட்டங்கள் நடுத்தரக் காலத்திட்டங்கள் ஆகும். பொதுவாக ஐந்தாண்டுத் திட்டங்களாகவே செயல்படுத்தப்படுகின்றன. நிதி மட்டுமல்லாமல் கட்டமைப்பு வளங்களும் இத்திட்டமிடல் முறையில் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. பத்திலிருந்து முப்பது ஆண்டுகளுக்கு தீட்டப்படும் திட்டங்கள் நீண்டகாலத் திட்டமிடல். இவை 'முன்னோக்குத் திட்டங்கள்' எனவும் அழைக்கப்படுகிறது. பொருளாதாரக் கட்டமைப்பு மாற்றங்களை கொண்டுவருவதே நீண்டகால திட்டத்தின் அடிப்படையாகும்.

6. நிதித்திட்டமிடல் மற்றும் உருவப் பொருள் திட்டமிடல் (Finacial Vs physical planning)

திட்டத்தை செயல்படுத்தத் தேவையான நிதியை பண மதிப்பில் ஒதுக்கீடு செய்யும் திட்டமிடலே நிதித்திட்டமிடலாகும். உருவப்பொருள் திட்டமிடல் என்பது மனித வளம், இயற்கை வளம் மற்றும் இயந்திரங்கள் போன்ற பருமப் பொருட்களை ஒதுக்கீடு செய்யும் திட்டமிடல் முறையாகும்.

7. பணிகள் திட்டமிடல் மற்றும் கட்டமைப்புத் திட்டமிடல் (Functional vs Structural Planning)

ஒரு நாடு பெற்றுள்ள பொருளாதார மற்றும் சமூக அமைப்பு முறையை மாற்றாமல் பொருளாதார சீர்கேடுகளை நீக்குவதற்கு வழிகாட்டுதல்கள் மட்டுமே செய்யும் திட்டமிடல், பணிகள் திட்டமிடலாகும்.

பொருளாதார அமைப்புமுறையில் பொருத்தமான மாற்றங்களை செய்து இலக்குகளை அடையும் திட்டமிடலே கட்டமைப்புத் திட்டமிடலாகும். இவ்வகையான திட்டமிடல் பெரும்பாலும் பின்தங்கிய நாடுகளில் இது காணப்படுகிறது.

8. விரிவான மற்றும் பகுதித் திட்டமிடல்

நாட்டின் அனைத்துப் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்பதற்கான திட்டமிடல் விரிவான திட்டமிடலாகும். ஒரு சில துறைகளுக்கு மட்டுமே இலக்கு நிர்ணயம் செய்து அதை அடைய தீட்டப்படும் திட்டம் பகுதித் திட்டமாகும்.



Tags : Economics பொருளாதாரம்.
12th Economics : Chapter 11 : Economics of Development and Planning : Types of planning Economics in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 11 : பொருளாதார மேம்பாடு மற்றும் திட்டமிடல் : திட்டமிடலின் வகைகள் - பொருளாதாரம் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 11 : பொருளாதார மேம்பாடு மற்றும் திட்டமிடல்