Home | 12 ஆம் வகுப்பு | 12வது அரசியல் அறிவியல் | ஒன்றியச் சட்டமன்றம்: நாடாளுமன்றம்

அரசியல் அறிவியல் - ஒன்றியச் சட்டமன்றம்: நாடாளுமன்றம் | 12th Political Science : Chapter 2 : Legislature

   Posted On :  31.03.2022 10:47 pm

12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 2 : சட்டமன்றம்

ஒன்றியச் சட்டமன்றம்: நாடாளுமன்றம்

நாடாளுமன்றம், ஒன்றியச் சட்டமன்றம் அல்லது தேசிய சட்டமன்றம் என்று அறியப்படுகிறது. அதுவே முடிவுகளை எடுக்கக்கூடிய உச்ச அமைப்பு மற்றும் மக்களாட்சியின் அடையாளம்.

ஒன்றியச் சட்டமன்றம்: நாடாளுமன்றம்

நாடாளுமன்றம், ஒன்றியச் சட்டமன்றம் அல்லது தேசிய சட்டமன்றம் என்று அறியப்படுகிறது. அதுவே முடிவுகளை எடுக்கக்கூடிய உச்ச அமைப்பு மற்றும் மக்களாட்சியின் அடையாளம். நாட்டு மக்களின் நலன் சார்ந்த பிரச்சனைகள் மீதான விவாதத்திற்கும், அரசியல் அமைப்பில் சட்டங்களை இயற்றுவதற்கும், திருத்துவதற்கும், பதிலளிக்க கடமைப்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த தளமாக நாடாளுமன்றமே உள்ளது.

சட்ட முன் வரைவுகளுக்கான ஒப்புதல் அளித்தல், பல்வேறு தீர்மானங்கள் மற்றும் நிகழ்வுகள் குறித்து விவாதம் நடத்துதல், போன்றவற்றிக்காக திட்டமிடப்பட்ட ஒரு கால வரையறையில் நாடாளுமன்றம் கூடுவதைத்தான் ஒரு கூட்டத்தொடர் என்று அழைக்கிறோம். ஒரு வருடத்தில் நாடாளுமன்றம் மூன்று கூட்டத் தொடர்களை நடத்துகிறது:

1. நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடர் (பிப்ரவரி-மே)

2. மழைக்காலக் கூட்டத்தொடர் (ஜூலை-ஆகஸ்ட்) 

3. குளிர்காலக் கூட்டத்தொடர் (நவம்பர்-டிசம்பர்)

நாடாளுமன்றத்திற்கு இரு முக்கியமான அதிகாரங்கள் மற்றும் பணிகள் உள்ளன. அவை சட்ட அதிகாரம் மற்றும் நிதி அதிகாரம் ஆகியவைகளாகும். சட்ட அதிகாரங்கள் சட்டம் இயற்றுவதற்கானவை. நிதி அதிகாரங்கள் நிதி சம்பந்தப்பட்ட நிதிநிலை அறிக்கை கணக்குகளை தயார் செய்வதற்கானது. மேலும் இந்திய குடியரசுத்தலைவர் மற்றும் குடியரசுத் துணைத்தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் நடத்துவதற்கான தேர்வுச் செய்யும் பணிகளும் நாடாளுமன்றத்துக்கு இருக்கின்றன.

செயல்பாடு - கருத்து சுதந்திரத்தின் பொருள் விளக்கம்

மாநிலங்களவையின் பெண் உறுப்பினர்கள், பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்ட முன்வரைவை மக்களவையில் நிறைவேற்ற வலியுறுத்தினர். பெண்களுக்கு, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் 33% இட ஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் இந்த சட்ட முன்வரைவு, 2010-ம் ஆண்டு மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இன்று வரை அது மக்களவையில் நிறைவேற்றப்படாமலே உள்ளது. 

இந்திய அரசமைப்புச் (108-வது திருத்தச்சட்டம்) சட்ட முன்வரைவு, பொதுவாக பெண்கள் இட ஒதுக்கீட்டு முன்வரைவு என்றழைக்கப்படும் இந்த சட்ட முன்வரைவு, மக்களவையில் நிறைவேற்றினால் மட்டுமே சட்டமாகும்.


குடியரசுத்தலைவர், குடியரசுத் துணைத்தலைவர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோர் மீதான பதவி நீக்க தீர்மானத்தை விவாதிக்கவும், நிறைவேற்றி நீக்கம் செய்யவும் நாடாளுமன்றத்துக்கு உள்ளது. அவ்வாறு பதவி நீக்கம் செய்யப்படும் நடைமுறை "பழிச்சாட்டுதல்" நடைமுறை என்று அழைக்கப்படும். நாடாளுமன்றத்தை கூட்டுமாறு அழைப்பது குடியரசுத்தலைவரின் கடமை, அது வருடத்திற்கு இரண்டு கூட்டத்தொடர்களுக்கு குறையாமல் கூட வேண்டும். ஒவ்வொரு வருடமும், நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் குடியரசுத்தலைவர் அவரது சிறப்புரையை நிகழ்த்துவார். அதில் எதிர்காலத்தில் அரசு எடுக்கப்போகிற புதிய கொள்கைகள், திட்டங்கள் மற்றும் புது முயற்சிகளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆகியவை இருக்கும். இந்திய நாடாளுமன்றத்துக்கு சட்டங்கள் இயற்றுவது, அதன் நிர்வாகத்தை மேற்பார்வையிடுவது, நிதிநிலை அறிக்கைத் திட்டத்தை நிறைவேற்றுவது, பொதுமக்களின் மனக்குறைகளை அவர்களின் பிரதிநிதிகள் வழியே வெளிப்படுத்துவது, தேசியக் கொள்கைகள் மற்றும் நாட்டின் பிரச்சனைகள் குறித்து விவாதிப்பது போன்ற பணிகளும் உள்ளது. அமைச்சர்கள், தனித்தனியாகவும் கூட்டாகவும் மற்றும் மக்களவையால் நீக்க கூடிய பொறுப்புடையவர்கள்.


மக்களவையின் செயல்பாடுகள்

நாடாளுமன்றம் ஈரவைகளைக் கொண்டது. ஈரவைகளும் ஒரே மாதிரியான மதிப்பீடுகளையும் பொறுப்புகளையும் தன்னகத்தே கொண்டவை. இருப்பினும், நிதிச் செலவு ஒப்புதல் பெறுவது போன்ற சில விதிவிலக்குகள் உள்ளன. இவற்றில் முதலாவது மக்களவை, தங்களை வாக்காளர்களாக பதிவு செய்து கொண்ட, நாடெங்கிலுமுள்ள 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதினர்களால், நாட்டின் 543 நாடாளுமன்றத் தொகுதிகளிலிருந்து, நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 543 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டது மக்களவை ஆகும். மக்களவையில் ஆங்கிலோ-இந்திய சமூகத்திலிருந்து நியமிக்கப்பட்ட இரண்டு உறுப்பினர்கள் நியமன உறுப்பினர்களாக இருப்பார்கள்.

உறுப்பினர்களின் குறைந்தபட்ச எண்ணிக்கை:

மக்களவை/மாநிலங்களவை கூட்டத்தொடர்களை நடத்துவதற்கு மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் குறைந்தபட்சம் பத்தில் ஒரு பங்கு எண்ணிக்கை இருக்க வேண்டும்.

மக்களவை மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 545 நாடாளுமன்றத்தில் அரசின் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் தீர்மானத்தில் நியமன உறுப்பினர்கள் முடிவெடுக்க முடியாது. மக்களின் பொதுப் பிரச்சினைகள் தொடர்பான விவாதங்கள், மக்களின் சமூக பொருளாதார தேவைகள், மற்றும் கொள்கை முடிவுகள் பற்றி கலந்துரையாட, விவாதிக்க, அமைந்த ஒரு மிக உயரிய மன்றம் தான் மக்களவை. 

இரு அவைகளை சார்ந்த உறுப்பினர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர் என்றே மக்கள் பொதுவாக அழைப்பர். மாநிலத்தின் ஆறு சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலிருந்தும் மக்களால் தேர்தல்கள் மூலம் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்களவையில் இருப்பர். மக்களவையின் ஆயுட்காலம் ஐந்து வருடங்களாகும்.


சபாநாயகரின் பங்கு மற்றும் பொறுப்புகள்

மக்களவையை தலைமை தாங்கி நடத்துபவர் சபாநாயகர் ஆவார். அவர் மக்களவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவராவார். சபையை வழிநடத்துவது, கலந்துரையாடல் மற்றும் விவாதங்களை நடத்த உதவுவது, சபை உறுப்பினர்களின் நடத்தை குறித்த கேள்விகளுக்கு பதில்களை பெறுவது மற்றும் அவர்களின் சலுகைகள் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பது ஆகியவை சபாநாயகரின் கடமை ஆகும். நாடாளுமன்ற தலைமைச்செயலகத்தின் நிர்வாகத் தலைவர் மக்களவை சபாநாயகர் ஆவார்.


உறுப்பினர்கள் பொருத்தமான நடைமுறைகளைக் கடைப்பிடிக்கிறார்களா என்பதை உறுதி செய்வது, உறுப்பினர்களை கேள்விகள் எழுப்புவதற்கு அனுமதிப்பது, அவர்கள் பேசுவதற்கு நேரம் ஒதுக்குவது, மற்றும் ஆட்சேபனைக்குரிய குறிப்புக்களை பதிவேட்டிலிருந்து நீக்குவது மற்றும் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை முன்மொழிவது ஆகியவை சபாநாயகரின் கடமையாகும். அவையின் விதிமுறைகள் மற்றும் விதிகளை உதாசீனப்படுத்தும் அல்லது மீறும் உறுப்பினர்களை அவையிலிருந்து வெளியேற்றும் அதிகாரம் சபாநாயகருக்கு உண்டு .

ஒரு திருத்தச்சட்டம் முன்மொழிவதற்கு சபாநாயகரின் அனுமதி பெறப்பட வேண்டும். அந்த திருத்தச்சட்ட முன்வரைவை அனுமதிப்பதா இல்லையா என்பதை சபாநாயகர்தான் தீர்மானிப்பார். மன்றத்தின் உரிமைகள், சிறப்புரிமைகள் மற்றும் கலந்தாய்வுக்குழு, சிறப்புக்குழு, ஆலோசனைக் குழு போன்ற பல்வேறு குழுக்கள் மற்றும் அவற்றின் உறுப்பினர்கள் ஆகியோரின் உரிமைகளின் பாதுகாவலராக சபாநாயகர் செயல்படுவார். சிறப்புரிமை குறித்த எந்த விளக்கமும் வேண்டி ஆய்வு செய்யவும், விசாரணை நடத்தவும் மற்றும் அறிக்கை அளிக்கவும் உரிமைக்குழுவுக்கு பரிந்துரைப்பது சபாநாயகரின் மற்றொரு முக்கியமான அதிகாரமாகும். உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகள், அளிக்கும் பதில்கள், விளக்கங்கள், மற்றும் அறிக்கைகள் அனைத்தும் சபாநாயகரை நோக்கியே இருக்க வேண்டும்.

அவை ஒழுங்குப் பிரச்சினை குறித்த கேள்விக்கு சபாநாயகரே இறுதி முடிவெடுப்பார். அரசமைப்பின்படி சபாநாயகர் சிறப்பு அந்தஸ்தை பெற்றுள்ளார். அதன் மூலம் நிதி முன்வரைவு என்று சான்றளிக்கும் அதிகாரம் பெற்றவர். சிறப்பு நிகழ்வுகள், அல்லது சில சட்ட நடவடிக்கைகளில் ஈரவைகளுக்கும் இடையே கருத்து வேற்றுமை ஏற்படும் சமயங்களில் நாடாளுமன்றத்தின் கூட்டு கூட்டுத்தொடருக்கு மக்களவையின் சபாநாயகர் தலைமை தாங்குவார். மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவருக்கு அங்கீகாரம் அளிப்பது குறித்து சபாநாயகரே முடிவு செய்வார். அரசமைப்பு 52-வது திருத்தச் சட்டத்தின் படி ஒரு உறுப்பினரை கட்சித்தாவலின் அடிப்படையில் தகுதியிழப்பு செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அவருக்கு உள்ளது. சபாநாயகர் நாடாளுமன்றத்தின் ஒரு உறுப்பினராக இருந்தாலும் கூட நடுநிலை வகித்து மன்றத்தில் வாக்கு செலுத்தமாட்டார். இருப்பினும், விதிவிலக்காக எந்த முடிவையும் எட்டாது இருபுறமும் சரிசமமாக இருக்கும் சில அரிய சந்தர்ப்பங்களில் தனது வாக்கை செலுத்துவார். இது முடிவு செய்யும் வாக்கு (casting vote) எனப்படும்

இந்தியாவின் தலைமைச் சிற்பிகளில் ஒருவரும் அதன் மக்களாட்சி அரசமைப்புத் தத்துவத்தின் உந்து சக்தியாக திகழ்ந்தவர் ஜவஹர்லால் நேரு ஜவஹர்லால் நேரு, இந்திய சபாநாயகரின் அலுவலகத்தை குறித்து ஒரு பொருத்தமான சூழ்நிலையில் இவ்வாறு கூறுகிறார், "சபாநாயகர் மன்றத்தின் பிரதிநிதியாக திகழ்கிறார். அவர் அவள் இந்த மன்றத்தின் மாண்பு மற்றும் அதன் சுதந்திரத்தின் பிரதிநிதியாக விளங்குகிறார். இந்த மன்றம், நாட்டின் சின்னமாக விளங்குவதால் ஒரு குறிப்பிட்ட வகையில் சபாநாயகர் இந்த நாட்டின் சுதந்திரம் மற்றும் விடுதலையின் சின்னமாக திகழ்கிறார். ஆகவே, அது ஒரு மேன்மைதாங்கிய சுதந்திரமான பதவியாக இருக்க வேண்டும். அந்தப்பதவி எப்போதும் மிகத்திறமை வாய்ந்த மற்றும் பாரபட்சமற்ற ஒருவரால் வகிக்கப்படவேண்டும்.

 


மாநிலங்களவை 

மாநிலங்களவை என்று அழைக்கப்படுவது, அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட பகுதிகளிலிருந்து வரும் 238 உறுப்பினர்களையும் மற்றும் குடியரசுத்தலைவரால் நியமிக்கப்பட்ட 12 நியமன உறுப்பினர்களையும் சேர்த்து மொத்தம் 250 உறுப்பினர்களைக் கொண்டது. மாநிலங்களவை அல்லது மேலவை இந்திய நாடாளுமன்றத்தின் இரண்டாவது ஆட்சி மன்றம் என்று அழைக்கப்படுகிறது.

அமெரிக்காவிலுள்ள ஆட்சிமன்றக் குழுவைப்போல மாநிலங்களின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்கும் ஒரு அமைப்பு மாநிலங்களவை ஆகும். இது 1952 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி உருவாக்கப்பட்டது. மாநிலங்களவை உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் தவிர, இலக்கியம், அறிவியல், கலை மற்றும் சமூக சேவை போன்ற துறைகளிலிருந்து புகழ் பெற்ற 12 உறுப்பினர்களை இந்தியக் குடியரசுத்தலைவர் நியமிக்கிறார். மக்களவையைப் போல் மாநிலங்களவை கலைக்க இயலாது. ஆனால் ஒவ்வொரு இரண்டு வருடத்திற்கும் அதன் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் தங்களது பதவிக்காலத்தை நிறைவு செய்வார்கள். ஒரு உறுப்பினரின் பதவி காலம் ஆறு ஆண்டுகள் ஆகும். மாநிலங்களவை உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்களால், மாற்றத்தக்க ஒற்றை வாக்கு மூலம் விகிதாச்சார பிரதிநிதித்துவப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


மாநிலங்களவையின் செயல்பாடுகள்

குடியரசுத் துணைத்தலைவர் மாநிலங்களவையின் அலுவல் வழி அவைத்தலைவராக இருப்பார். அவைத்தலைவர் மாநிலங்களவையின் நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கி முறைப்படுத்துவார். பணம் / நிதி சம்பந்தமான முன்வரைவுகளைத் தவிர்த்து, ஏனைய முன்வரைவுகள் அனைத்தும் மாநிலங்களவையில் விவாதிக்கவும், கேள்விகள் கேட்கவும், முன்வரைவுகள் மற்றும் தீர்மானங்களை நிறைவேற்றவும் நடைமுறைகள் விதிகளின் அடிப்படையில் நடைபெறும். மக்களவையைப் போலவே சட்டம் இயற்றுதல்தான் மாநிலங்களவையின் மிக முக்கியமான பணிகளில் ஒன்று. இதில் மக்களவைக்கு இணையான அதிகாரத்தை மாநிலங்களவை கொண்டுள்ளது.


ஐக்கிய அமெரிக்க நாட்டில் மாநிலக் குழுவின் உறுப்பினர்கள் செனட்டர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அங்கு மாநிலத்தின் பரப்பளவு மற்றும் மக்கள்தொகை ஆகியவற்றை பொருட்படுத்தாது ஒவ்வொரு மாநிலத்திற்கும் சமமான அளவில் பிரதிநிதித்துவம் அளிக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் மாநிலங்களவையில் பிரதிநிதித்துவம் அந்தந்த மாநிலங்களின் மக்கள்தொகை அடிப்படையில் அமைந்துள்ளது.


யார் மாநிலங்களைவை உறுப்பினராகலாம்? 

இந்திய நாட்டின் குடிமகனாக இருக்கவேண்டும்.

30 வயதுக்குட்பட்டவராக இருக்கக்கூடாது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-இன் கீழ் மாநிலங்களவைவுக்கு தேர்ந்தெடுக்கப்பட விரும்பும் ஒரு நபர் அந்த மாநிலத்தின் நாடாளுமன்ற தொகுதியில் ஒரு வாக்காளராக இருக்கவேண்டும்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் மூன்றாவது பிரிவினை மக்கள் பிரதிநிதித்துவ (திருத்த சட்டம், 2003 திருத்தியது. 

இதன் மூலம் மாநிலங்களவைக்கு போட்டியிடும் ஒருவர் எந்த மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றாரோ, அந்த மாநிலத்தில் வசிப்பவராக இருக்கவேண்டும் என்ற நிபந்தனை விலக்கிக்கொள்ளப்பட்டது. 

நன்றி : https://rajyasabha.nic.in/ rsnew/ practiceprocedure/book1.asp

உதாரணமாக, மிக அதிக மக்கள் தொகையைக் கொண்ட உத்திரப்பிரதேச மாநிலம் மாநிலங்களவைக்கு 31 உறுப்பினர்களை தேர்வு செய்கிறது. அதே சமயம், மிகக்குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட சிக்கிம் மாநிலம் மாநிலங்களவைக்கு ஒரு உறுப்பினரைத்தான் தேர்ந்தெடுக்கிறது. மாநிலங்களவைக்கு தமிழ்நாடு 18 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை அரசமைப்பின் நான்காவது பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது. மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள். அதன் பின்னர் அவர்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படலாம். நாடாளுமன்றத்தின் நிரந்தர அவை என்று மாநிலங்களவை அழைக்கப்படுகிறது. அது எப்போதும் முழுமையாக கலைக்கப்படுவதில்லை. மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சில முக்கியமான சிறப்புரிமைகள் மற்றும் சட்ட விலக்களிப்புகள் பின்வருமாறு:


நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அதிகாரங்களும் சிறப்புரிமைகளும் 

1. நாடாளுமன்றத்தில் பேச்சுரிமை மற்றும் நாடாளுமன்றத்தில் அல்லது எந்த ஒரு குழுவிலும் அவர் தெரிவித்த கருத்துக்கள் அல்லது அளித்த வாக்குகள் குறித்து எந்த நீதிமன்றத்திலும் சட்ட நடவடிக்கைகள் தொடருவதற்கு எதிரான பாதுகாப்பு. 

2. ஈரவைகளிலுமிருந்து அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் எந்த ஒரு அறிக்கை, கட்டுரை, வாக்குகள் அல்லது நடவடிக்கைகளை பிரசுரிப்பதற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எந்த நீதிமன்றத்திலும் தொடருவதற்கு எதிரான பாதுகாப்பு. 

3. நாடாளுமன்ற நடவடிக்கைகள் பற்றி விசாரணை நடத்துவதற்கு நீதி மன்றத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

4. ஈரவைகளில் எந்த ஒரு அவை நடவடிக்கைகளின் உண்மையான எந்த ஒரு அறிக்கையையும் செய்தித்தாள்களில் பிரசுரிக்கும் உரிமைக்கு எதிரான சட்ட விலக்களிப்பு, பிரசுரம் தவறான நோக்கோடு பிரசுரிக்கப்பட்டதாக இருந்தாலொழிய, அதற்கெதிரான நீதிமன்ற சட்ட நடவடிக்கைகளுக்கு எதிரான பாதுகாப்பு. 

5. நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதும், கூட்டத்தொடர் தொடங்குவதற்கு நாற்பது நாட்களுக்கு முன்பும், மற்றும் கூட்டத்தொடர் முடிந்து நாற்பது நாட்கள் வரையிலும் உரிமையியல் வழக்குகளின் கீழ் ஒரு உறுப்பினரை கைது செய்யப்படாமல் இருக்கும் சுதந்திரம். 

6. நாடாளுமன்ற வளாகத்தினுள் ஒரு உறுப்பினர்மீது சட்ட நடவடிக்கை அறிக்கை அளிப்பது அல்லது கைது ஆகியவற்றிலிருந்து விதிவிலக்கு. 

ஆதாரம்: https://www.india.gov.in/sites/upload_files/npi/files/coi_part_full.pdf

செயல்பாடு

சிந்திக்கவும் - இணைக்கவும் -பகிரவும் 

தலைப்பு: எந்த அவை அதிகாரமிக்க அவையாக உள்ளது, மக்களவையா அல்லது மாநிலங்களவையா? 

பணி : மாணவர்கள் சற்று நேரம் தனியாக சிந்திக்கவும். பின்பு, தங்கள் இணையுடன் விவாதித்து, இருவரது கருத்தையும் ஒப்பிடவும் அதன் பின் வகுப்பில் விவாதிக்கவும். முழு வகுப்புமே சிறப்பான முறையில் முழுமையான விவாதத்தில் பங்கேற்கும் வகையில் மாணவர்களை தயார்படுத்தவும்.


Tags : Political Science அரசியல் அறிவியல்.
12th Political Science : Chapter 2 : Legislature : Union Legislature: The Parliament Political Science in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 2 : சட்டமன்றம் : ஒன்றியச் சட்டமன்றம்: நாடாளுமன்றம் - அரசியல் அறிவியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 2 : சட்டமன்றம்