Home | 12 ஆம் வகுப்பு | 12வது தமிழ் | வாழ்வியல்: திருக்குறள்

இயல் 6 | 12 ஆம் வகுப்பு தமிழ் - வாழ்வியல்: திருக்குறள் | 12th Tamil : Chapter 6 : Sirugai alaviya cool

   Posted On :  02.08.2022 02:19 am

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : சிறுகை அளாவிய கூழ்

வாழ்வியல்: திருக்குறள்

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : சிறுகை அளாவிய கூழ் : வாழ்வியல்: திருக்குறள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

வாழ்வியல்

கலை – சு 

திருக்குறள்



43. அறிவு உடைமை


1. அறிவற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் 

  உள்அழிக்கல் ஆகா அரண்.*

அறிவு, அழிவு வராமல் காக்கும் கருவியாகும்; அன்றியும் பகைவரால் அழிக்க முடியாத பாதுகாப்பு அரணும் அதுவே ஆகும்.

2. சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ 

  நன்றின்பால் உய்ப்பது அறிவு.

மனத்தை அது போகும் போக்கில் செல்லவிடாமல், தீமையிலிருந்து விலக்கி நல்ல வழியில் செலுத்துவதே அறிவாகும்.

3. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் 

   மெய்ப்பொருள் காண்பது அறிவு.*

எப்பொருளை யார் யார் சொல்லக் கேட்டாலும் அப்பொருளின் மெய்யான பொருளைக் காண்பதே அறிவாகும். (சொற்பொருள் பின்வரும் நிலையணி)

4. எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு 

   அவ்வது உறைவது அறிவு.

உலகம் எத்தகைய உயர்ந்த நெறியில் செல்கிறதோ, அந்நெறியில் தானும் உலகத்தோடு இணைந்து செல்வதே அறிவாகும்.

5. எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை 

     அதிர வருவதோர் நோய்.*

பின்பு வரப்போவதை முன்பே அறிந்து காத்துக்கொள்ளும் வல்லமை கொண்ட அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும்படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை .


46. சிற்றினம் சேராமை


6. மனத்தான்ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி; இனத்தான்ஆம்

  இன்னான் எனப்படும் சொல்.

மக்களுக்கு இயற்கையறிவு மனத்தால் ஏற்படும்; இப்படிப்பட்டவர் என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல், சேர்ந்த இனத்தால் ஏற்படும்.

7. நல்லினத்தின் ஊங்கும் துணையில்லை; தீயினத்தின் 

    அல்லல் படுப்பதூஉம் இல்.*

நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை; தீய இனத்தைவிடத் துன்பத்தை தரும் பகையும் இல்லை.


67. வினைத்திட்பம்


8. வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் 

  மற்றைய எல்லாம் பிற.*

நல்ல செயல்பாட்டிற்கு மன உறுதியே வேண்டும்; மற்றவை எல்லாம் பயன்படா.

9. சொல்லுதல் யார்க்கும் எளிய; அரியவாம் 

   சொல்லிய வண்ணம் செயல்.*

இச்செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் என்று சொல்லுதல் எவர்க்கும் எளியது. சொல்லியபடி செய்து முடித்தல் அரியது.

10. எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் 

    திண்ணியர் ஆகப் பெறின்.

எண்ணியவர் மனவுறுதியுடையவராக இருந்தால், அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர். (சொற்பொருள் பின்வரும் நிலையணி)

11. உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு 

    அச்சாணி அன்னார் உடைத்து.*

ஒருவரின் தோற்றத்தைக் கண்டு இகழக்கூடாது. பெரிய தேர்க்குச் சிறு அச்சாணிதான் இன்றியமையாதது.


69. தூது


12. கடன் அறிந்து காலம் கருதி இடன் அறிந்து 

   எண்ணி உரைப்பான் தலை.*

தன்கடமை இன்னது என்று தெளிவாக அறிந்து, அதைச் செய்வதற்கு ஏற்ற காலத்தையும் தக்க இடத்தையும் ஆராய்ந்து சொல்கின்றவரே சிறந்த தூதுவர்.


70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்


13. அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க 

    இகல்வேந்தர்ச் சேர்ந்துஒழுகு வார்.

தீக்காய்வார் அகலாது அணுகாது இருப்பதுபோல் அரசர்களைச் சார்ந்திருப்பவர் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும். (தொழில் உவமை அணி)

14. பழையம் எனக்கருதிப் பண்புஅல்ல செய்யும் 

   கெழுதகைமை கேடு தரும்.

யாம் அரசர்க்குப் பழைமையான நட்புடையவராய் உள்ளோம் எனக் கருதித் தகுதி அல்லாதவற்றைச் செய்தால் அந்த உரிமை கேட்டினைத் தரும்.


89. உட்பகை


15. வாள்போல் பகைவரை அஞ்சற்க; அஞ்சுக 

   கேள்போல் பகைவர் தொடர்பு.*

வாளைப்போல் வெளிப்படையாகத் துன்பம் செய்யும் பகைவருக்கு அஞ்ச வேண்டியதில்லை; ஆனால் உறவுடையவர் போல் நடித்து உட்பகை கொண்டவரின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும்.

16. உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்

    பாம்போடு உடன்உறைந் தற்று.

அகத்தில் உடன்பாடு இல்லாதவருடன் கூடி வாழும் வாழ்க்கை , ஒரு குடிசையில் பாம்புடன் வாழ்வது போன்றது. (உவமை அணி)


93. கள் உண்ணாமை


17. துஞ்சினார் செத்தாரின் வேறுஅல்லர் எஞ்ஞான்றும் 

    நஞ்சுஉண்பார் கள்உண் பவர்.

உறங்கியவர், இறந்தவரைவிட வேறுபட்டவர் அல்லர்; அவ்வாறே கள்ளுண்பவரும் நஞ்சு உண்பவரே ஆவர்.

18. களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க் 

   குளித்தானைத் தீத்துரீஇ யற்று.

கள்ளுண்டு மயங்கியவனிடம் நல்லன சொல்லித் திருத்த முயல்வது, நீரில் மூழ்கிய ஒருவரைத் தீப்பந்தம் கொண்டு தேடுவது போன்றது.


94. சூது


19. சிறுமை பலசெய்து சீர்அழிக்கும் சூதின் 

    வறுமை தருவதுஒன்று இல்.

ஒருவருக்குத் துன்பம் பலவற்றையும் உண்டாக்கி அவருடைய புகழையும் கெடுக்கின்ற சூதைப்போல் வறுமை தருவது வேறொன்றும் இல்லை.

20. பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் 

    கழகத்துக் காலை புகின்.*

சூதாடுமிடத்தில் ஒருவருடைய காலம் கழியுமானால், அது அவருடைய பரம்பரைச் செல்வத்தையும் இயல்பான நற்பண்பையும் கெடுக்கும்.


Tags : Chapter 6 | 12th Tamil இயல் 6 | 12 ஆம் வகுப்பு தமிழ்.
12th Tamil : Chapter 6 : Sirugai alaviya cool : Valviyal: Thirukkural Chapter 6 | 12th Tamil in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : சிறுகை அளாவிய கூழ் : வாழ்வியல்: திருக்குறள் - இயல் 6 | 12 ஆம் வகுப்பு தமிழ் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : சிறுகை அளாவிய கூழ்