இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் - வியட்நாம் போர் | 10th Social Science : History : Chapter 4 : The World after World War II

   Posted On :  27.07.2022 08:36 am

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 4 : இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

வியட்நாம் போர்

இரண்டாம் உலகப்போரின் முடிவில் வியட்மின் என்ற அமைப்பு வியட்நாமின் வடக்குப் பாதியைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. வியட்மின் ஹோ சி மின் தலைமையில் ஹனோய் நகரில் ஒரு அரசை உருவாக்கியது. இவ்வியட்மின் அரசு தென்பாதி வியட்நாமை வேகமாக ஆக்கிரமித்தது.

வியட்நாம் போர்

இரண்டாம் உலகப்போரின் முடிவில் வியட்மின் என்ற அமைப்பு வியட்நாமின் வடக்குப் பாதியைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. வியட்மின் ஹோ சி மின் தலைமையில் ஹனோய் நகரில் ஒரு அரசை உருவாக்கியது. இவ்வியட்மின் அரசு தென்பாதி வியட்நாமை வேகமாக ஆக்கிரமித்தது. எனினும் போட்ஸ்டாம் நகரில் கூடிய நேசநாடுகள் ஜப்பானிடமிருந்து மீட்கப்பட்ட இந்தோசீனப்பகுதியின் தெற்குப்பகுதியை பிரிட்டிஷாரும் வடக்குப்பகுதியை சீனாவுமாக பிரித்துக் கொள்வது என முடிவு செய்தன. ஹோ சி மின்னின் கட்டுப்பாடு உறுதியாக இருந்ததால் வியட் மின்னையும் பிரெஞ்சுப்படைகளையும் மோதிக்கொள்ளும்படி செய்துவிட்டு சீனப்படைகளும் பிரிட்டிஷ் படைகளும் 1946இன் தொடக்கத்தில் பின்வாங்கின. இரு அரசுகளும் (பிரெஞ்சு மற்றும் வியட்மின்) ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கையின் அடிப்படையில் வடக்கு வியட்நாம் ஒரு விடுதலை பெற்ற நாடாக இந்தோ-சீனக் கூட்டாட்சியில் பங்கெடுப்பது என்று முடிவானது.

1949இல் மக்களின் ஆதரவைப்பெற எண்ணிய பிரெஞ்சு அரசு வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகளை ஒரு பிரெஞ்சு கூட்டாட்சியினுள் கொண்டு வந்து அவற்றை சுதந்திரநாடாக அறிவித்து அந்நாடுகளின் வெளியுறவுத்துறையையும் இராணுவத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளப் போவதாய் கூறியது.

அமெரிக்காவிடமிருந்து உதவித்தொகையை பிரெஞ்சு பெற்றபோது வியட்மின்னுக்கு சீனப் பொதுவுடைமை அரசு உதவி செய்தது. இறுதியில் பிரெஞ்சுப்படைகள் போரில் தோற்கடிக்கப்பட்டது. பின் கொரியாவில் 1954இல் கூடிய ஜெனீவா மாநாட்டில் வியட்நாம் ஒரு சுதந்திர நாடாகக் கொள்ளப்பட்டாலும் தற்காலிகமாக வியட்மின் வடக்கு வியட்நாமையும் பாவோடாய் தலைமையிலான அரசு தெற்கு வியட்நாமையும் ஆட்சி செய்வது என்று முடிவுசெய்யப்பட்டது. கம்போடியாவும் லாவோஸும் சுதந்திரம் பெற்ற நாடுகளானது.

ஹோ சி மின்னை குடியரசுத் தலைவராக ஏற்று 16 மில்லியன் என்ற அளவில் மக்கள்தொகை கொண்ட வடக்கு வியட்நாம் ஒரு பொதுவுடைமைவாத நாடாக மாறியது. ஏறக்குறைய அதேபோன்ற பரப்பளவும் மக்கள்தொகையும் கொண்ட தெற்கு வியட்நாமிற்கு தீவிர ரோமன் கத்தோலிக்கரான நிகோ டின் டியம் அதிபரானார்.

தென்வியட்நாமில் அரசின் நிலைமை அமெரிக்க நாட்டின் பொருளாதார மற்றும் பிற உதவிகளைச் சார்ந்தே அமைந்தது. அதன் டணாங் கப்பல் தளத்தில் 1965 இல் வந்திறங்கத் துவங்கிய மாலுமிகளைச் சேர்த்து ஒரே மாதத்தில் 33,500 துருப்புகள் என்ற அளவில் உயர்ந்தது. அவ்வாண்டின் கடைசியில் இவ்வெண்ணிக்கை உயர்ந்து 2,10,000 என்றானது. விடுதலை இயக்கங்களை அழித்தொழிக்கும் நோக்கோடு இரவு பகலாக அமெரிக்கா இரு வியட்நாம்கள் மீதும் குண்டுவீசியது. கொரில்லா போர் முறையில் பயிற்றுவிக்கப்பட்ட வடவியட்நாமின் அமெரிக்கப் படைகள் நோய்தொற்று விளைவிக்கும் ஆயுதங்களைப் பயன்படுத்தினார்கள். நப்பாம் ஏஜண்ட் ஆரெஞ்ச் (காடுகளை அழிக்கக்கூடிய) போன்ற தீமூட்டும் ஆயுதங்களைப் பயன்படுத்தியது. பெரும் பரப்பில் நிலம் அழிக்கப்பட்டதோடு ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அமெரிக்கப்படைகளும் சேதங்களைச் சந்தித்தது.


போர் 1975இன் துவக்கத்தில் முக்கிய கட்டத்தை எட்டியது. வடக்கு வியட்நாமின் இராணுவமும் தெற்கு வியட்நாமின் தேசிய விடுதலை முன்னணியும் எல்லைகள் கடந்து அமெரிக்க ஆதரவு பெற்றத் தென் வியட்நாமின் படைகளை நாசம் செய்தனர். மொத்த அமெரிக்கப் படைகளும் 30 ஏப்ரல் 1975 இல் வெளியேறியதால் தென் வியட்நாமின் சைகோன் நகரம் விடுதலை பெற்றது. வடக்கு வியட்நாமும் தெற்கு வியட்நாமும் 1976இல் ஒரேதேசமாக ஒன்றிணைக்கப்பட்டது. மிகப் பெருந்தலைவராக மக்களின் முன் உருவெடுத்த ஹோ சி மின்னின் நினைவாக சைகோன் நகரம் ஹோ சி மின் நகரம் என்று பெயர் மாற்றப்பட்டது.


ஒரு ஒருங்கிணைந்த சுதந்திர தேசமாக வியட்நாம் உருவானது ஒரு அரிய வரலாற்று நிகழ்வாகும். ஒரு சிறு நாடு தனது விடுதலையையும் ஒருங்கிணைவையும் உலகின் மிகப்பெரிய சக்தியின் ஆயுதந்தாங்கிய எதிர்ப்பையும் மீறி அடைந்திருந்தது. சோஷலிஸ நாடுகளின் உதவியும் அரசியல் பூர்வமாக பல ஆசிய - ஆப்பிரிக்க நாடுகள் கொடுத்த ஆதரவும் உலகெங்கிலும் பரவிக்கிடந்த பல்வேறு இனமக்கள் தார்மீக உணர்வோடு பக்கபலமாக நின்றதுமே இந்த வெற்றியை அடையக் காரணமாக அமைந்தது.


Tags : The World after World War II இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்.
10th Social Science : History : Chapter 4 : The World after World War II : Vietnam War The World after World War II in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 4 : இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் : வியட்நாம் போர் - இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 4 : இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்